13 . கண்கலங்கி நின்றாள் மருமகளான சின்ன முத்தம்மாளின் உற்சாகமற்ற போக்கு ராணி மங்கம்மாளுக்குக் கவலையளித்தது. அவள் மனம் குழம்பித் திகைப்பு அடைந்தாள். கணவனை இழந்த துயரத்தை மகன் பிறந்த மகிழ்ச்சியில் மறந்து விடுவாள் என்று எதிர்பார்த்து வீணாயிற்று. சின்ன முத்தம்மாளை எப்படி மனம் மாறச் செய்வது என்று ஓயாமல் சிந்தித்தாள் ராணி மங்கம்மாள். அவளது எந்த முயற்சியாலும் மருமகளை மாற்ற முடியவில்லை. மருமகள் தைரியமாகவும் உற்சாகமாகவும் இராவிடில் பிறந்த குழந்தையை வளர்த்துக் காப்பாற்றுவது சிரமமாயிற்றே என்று தனக்குள் சிந்தித்து ஒரு முடிவும் புலப்படாமல் தவித்தாள் ராணி மங்கம்மாள். எதிர்பாராமல் நேர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்ட ரங்ககிருஷ்ணனின் மரணத்தால் மூத்தவர்களின் விசும்பல்களும் கண்ணீரும் அழுகுரல்களுமே நிரம்பிவிட்ட அரண்மனையில் அதன்பின் தொடர்ந்து நீடித்து துயர மௌனத்தின் கனத்தையும் இறுக்கத்தையும் கரைப்பது போல் இப்போது தான் ஓர் இளம் குழந்தையின் இனிய அழுகுரல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் எல்லாருடைய சோகத்தையும் போக்கிய அந்த மங்கலமான இளம் அழுகுரல் அந்தக் குரலுக்குரியவனைப் பெற்றெடுத்தவளின் சோகத்தை மட்டும் போக்கவில்லை. சின்ன முத்தம்மாள் மகன் பிறந்த பின்பும் சித்தப்பிரமை பிடித்தவள் போல் அர்த்தமின்றிப் பார்த்த திசையிலேயே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். அவளது கவனத்தைத் திருப்புவதற்காகப் பணிப்பெண்கள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. சிரிப்பதற்கும், முகம் மலர்வதற்கும் முடியாதவளாகி விட்டாளோ என நினைக்கும் அளவுக்குப் பரிதாபமாயிருந்தது அவள் நிலைமை. சின்ன முத்தம்மாளின் இந்தத் துயரத்தைப் போக்க முடியாமலும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துக் கலங்கினாள் ராணி மங்கம்மாள். சிரிப்பூட்டுவதிலும் நகைச்சுவையாகப் பேசி மகிழ்விப்பதிலும் கெட்டிக்காரிகளான இளம் பெண்களைச் சதா காலமும் சின்ன முத்தம்மாளின் அருகே சூழ்ந்திருக்கச் செய்து பார்த்தாள். அவளுக்குப் பிறந்திருக்கும் ஆண் குழந்தையைப் பற்றி அவளிடமே நிறையப் பேசச் செய்து கலகலப்பூட்ட முயன்றாள். எதுவுமே எதிர்பார்த்த நல்ல விளைவுகளை உண்டாக்கவில்லை. நாயக்க வம்சத்தை ஆள்வதற்குப் பேரன் பிறந்த மகிழ்ச்சியும் கோலாகலமும் குறையாமல் வந்தவர்களுக்கெல்லாம் பரிசில்களும் தான தர்மங்களும் வழங்கப்பட்டன. அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் ராணி மங்கம்மாளுக்குப் பேரன் பிறந்ததைக் கொண்டாடினார்கள். சித்த பிரமை பிடித்தாற் போலிருந்த சின்ன முத்தம்மாளுக்கு எல்லா ஏற்பாடுகளும் கண்ணும் கருத்துமாகச் செய்யப்பட்டிருந்தன. பணிப்பெண்கள் தாய்மைப் பேற்றுக்குப் பின்வரும் முதல் நீராடலுக்காக அண்டா நிறையப் பன்னீரை நிரப்பி வைத்திருந்தார்கள். பெரு முயற்சிக்குப் பின் ராணி மங்கம்மாளே ஒருநாள் பிற்பகலில் தனியாகச் சின்ன முத்தம்மாளைச் சந்தித்தாள். அவளிடம் மனம் விட்டுப் பேசினாள். "நீ இப்படி இருப்பது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. சின்ன முத்தம்மா! உன் கவலைகளை நீ மறக்க வேண்டும். உன்னைத் தேற்றிக் கொண்டு உன் மகனைச் சீராட்டி வளர்க்க வேண்டும்." இதற்கு எதுவும் மறுமொழி கூறாமல் கண்ணீர் சிந்தியபடியே மோட்டு வளைவை வெறித்து நோக்கியபடி இருந்தாள் சின்ன முத்தம்மாள். அவளிடம் எந்த விளைவும் ஏற்படவில்லை. ராணி மங்கம்மாள் நீண்ட நேரம் மன்றாடிய பின்னர் சின்ன முத்தம்மாள் மறுமொழி கூறினாள். "நாயக்க வம்சம் தழைக்க ஒரு வாரிசு தேவை என்றீர்கள்! இதோ வாரிசு கிடைத்து விட்டது. எடுத்துக் கொள்ளுங்கள்! குலை போட்டு ஈன்றபின் தாய் வாழைக்கு அப்புறம் இங்கு என்ன வேலை?" - என்று கூறிய படியே தன் அருகில் கிடந்த குழந்தையை இருகைகளாலும் எடுத்து ராணி மங்கம்மாளிடம் நீட்டினாள். ராணி மங்கம்மாள் குழந்தையை மருமகள் கைகளிலிருந்து வாங்கத் தயங்கவில்லை. ஆனால் அதே சமயம் மருமகளின் பேச்சைக் கடிந்து கொண்டாள். "உனக்கு என்ன வந்துவிட்டது இப்போது? ஏன் இப்படிப் பேசுகிறாய்? வாரிசு தேவை என்றால் அதை வளர்த்துப் பெரிதாக்கத் தாயும் தேவை என்பது நான் சொல்லித்தானா உனக்குத் தெரியவேண்டும்?" "நான் வாழவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் எனக்கு அந்த ஆசையில்லை! அவர் இல்லாத உலகம் எனக்கும் வேண்டியதில்லை. என்னைத் தீயில் தள்ளிக் கொன்று விடுங்கள்! அல்லது கொன்று கொள்ள உதவுங்கள்." "என்னைப் போன்றவர்கள் வாழ்வதற்கு உதவுவது தான் வழக்கம் முத்தம்மா! சாவதற்கு உதவு செய்து எனக்குப் பழக்கமில்லை." "எது உபகாரம் எது உபகாரமில்லை என்பதை அதைப் பெறுகிறவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் மகாராணி! இந்த நிலைமையில் என்னை வாழவிடுவது எனக்கு உதவியா, சாகவிடுவது உதவியா என்பதை உங்களைவிட அதிகமாக நான் தான் உணரமுடியும். வாழ்ந்து கொண்டே அணு அணுவாகச் சாவதைவிட, ஒரேயடியாகச் செத்துவிடுவது எவ்வள்வோ மேல்." "நீ சித்தபிரமை பிடித்து ஏதேதோ அர்த்தமில்லாமல் உளறுகிறாய் முத்தம்மா! இந்த மனப் போக்கை வளர விடாதே! இது உனக்கும் உன் குழந்தைக்கும் நல்லதில்லை..." என்று கூறி அவளைச் சமாதானப் படுத்திவிட்டு பணிப் பெண்களைத் தனியே அழைத்து ஒரு விநாடி கூடத் தாயையும் குழந்தையையும் தனியே விட்டுவிடாமல் அருகேயே இருந்து கண்காணித்துக் கொள்ளுமாறு அவர்களுக்கு மீண்டும் கடுமையான உத்தரவு போட்டாள் ராணி மங்கம்மாள். அன்று பிற்பகலில் ஏதோ கைத் தவறுதலாகச் சின்ன முத்தம்மாள் தன் அறையில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பன்னீரை ஒரு குவளையில் எடுத்துக் குடிக்க முயன்றபோது அருகே இருந்த தாதிப்பெண், "அம்மா! அம்மா! அது பன்னீர். பிரசவித்த வயிற்றோடு பன்னீரைக் குடித்தால் உடனே ஜன்னி கண்டு விடும்!" என்று எச்சரித்து விட்டு உடனே பன்னீரை வாங்கி அதைத் திரும்ப ஊற்றினாள். பணிப்பெண் இதைச் செய்த போது சின்ன முத்தம்மாள் அடம் பிடிக்கவில்லை. தன்னைத் தடுத்த பணிப்பெண்ணின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். பின்னர் ஏதோ யோசனையிலாழ்ந்து பேசாமல் இருந்தாள். சிறிது நேரம் கழித்து சின்ன முத்தம்மாளே அந்தப் பணிப்பெண்ணிடம் மீண்டும் தானே பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். பணிப் பெண்ணுக்கு இப்படிச் சின்ன முத்தம்மாள் வலுவில் பேச முன் வந்தது வியப்பை அளித்தாலும் அதை அடக்கிக் கொண்டாள். "குடிக்கக் கூடாதென்றால் பின் எதற்காக இந்தப் பன்னீரை இங்கே நிரப்பி வைத்திருக்கிறீர்களாம்?" "தலை நீராடலுக்காக இதை நிரப்பி வைத்திருக்கிறார்கள் அம்மா! உள்ளுக்குப் பருகினால் தான் கெடுதலேயன்றித் தாய்மைப் பேற்றுக்குப் பின் பன்னீரில் நீராடினால் இதமாக இருக்கும்." "உள்ளுக்குப் பருகினால் ஒரு கெடுதலும் இருக்காது. சும்மா நீயாக என்னைப் பயமுறுத்துகிறாய்!" "ஐயையோ! நீங்கள் அப்படி நினைக்காதீர்கள் உள்ளுக்குப் பருகினால் மோசம் போய்விடும்..." "அடி போடி! நீங்களும் உங்கள் வைத்திய முறைகளும் விநோதமாகத்தான் இருக்கின்றன. சாக வேண்டியவர்களை எதையாவது மருந்து கொடுத்து வாழ வைக்கிறீர்கள்! வாழ வேண்டியவர்களை எதையாவது கொடுத்துச் சாகவிட்டு விடுகிறீர்கள். உங்களுக்குச் சாக வைக்கவும் சரியாகத் தெரியாது. வாழ வைக்கவும் துப்பில்லை! வைத்தியமாம் வைத்தியம்!" பணிப்பெண் இதற்கு மறுமொழி கூறாமல் சிரித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டாள். எதற்காகச் சின்ன முத்தம்மாள் இப்படியெல்லாம் பேசுகிறாள் என்பதையும் அந்தப் பணிப் பெண்ணால் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றிரவு முதல் யாமம். சின்ன முத்தம்மாளின் அறை நிசப்தமாயிருந்தது. பணிப் பெண்கள் கூடப் பகலெல்லாம் உழைத்த அலுப்பில் களைத்து உறங்கிப் போயிருந்தார்கள். மங்கலாகவும் தணிவாகவும் எரிந்த குத்து விளக்கை மேலும் தணிவாக்கி இருள் சூழச் செய்த பின் சின்ன முத்தம்மாள் தன்னருகே பிஞ்சுக் கைகால்களை உதைத்துக் கொண்டிருந்த குழந்தையை எடுத்து மார்பில் அணைத்துப் பால் கொடுத்தாள். உச்சி மோந்தாள். மாறி மாறி முத்தமிட்டாள். அவள் கண்களில் ஈரம் பளபளத்தது. ஓசைப் பட்டுவிடாமல் மௌனமாக அழுது கண்ணீர் சிந்தியபடி மங்கலமாக தீப ஒளியில் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பருகி விடுவது போல் பார்த்தாள். மறுபடி வெறி பிடித்தது போல் மாறி மாறி முத்தமிட்டுக் கொஞ்சினாள். பின்பு தன் கட்டிலுக்கு அருகேயிருந்த மற்றொரு சிறு கட்டிலில் பட்டுத் துணியை விரித்துக் குழந்தையைக் கிடத்தினாள். அதன் அழகை இரசித்துவிட்டுத் தன் கைகளாலேயே அதற்குத் திருஷ்டியும் கழித்தாள். திருவரங்கன் இருந்த திசைநோக்கித் தியானித்துக் கைகளைக் கூப்பினாள். "தெய்வமே! இந்தப் பச்சிளம் குருத்து வளர்ந்து வாழத் துணையாக இரு" என்று மனத்தில் நினைத்தாள். அதன்பின் ஏதோ திடமான முடிவுக்கு வந்துவிட்ட முகபாவத்துடன் பன்னீர் அண்டாவின் அருகே சென்றாள். வெறிப்பிடித்தவள் போல் குவளை குவளையாகப் பன்னீரை வாரிப் பருகினாள். எத்தனை குவளைகள் என்று எண்ண முடியாத படி பன்னீர் உள்ளே போயிற்று. விறுவிறுவென்று உடம்பில் குளிர்ச்சி ஏறிற்று. இனி உள்ளே இடமில்லை என்று கூறும் அளவு பன்னீரைப் பருகி முடித்ததும் தள்ளாடித் தள்ளாடி நடந்து குழந்தையின் கட்டிலருகே சென்று மறுபடி அதைப் பார்த்தாள். கடைசி முறையாக அந்த உயிருள்ள பச்சை மண்ணை முத்தமிட்டு உச்சி மோந்தாள். கண்கலங்கி அப்படியே நின்றாள். ராணி மங்கம்மாள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
முடிவுரை
|