http://www.chennailibrary.com





20. அபவாதமும் ஆக்கிரமிப்பும்

     கணவனை இழந்து பல நாட்கள் வரை தன்மேல் படராமலிருந்த ஓர் அபவாதம் இப்போது படரத் தொடங்கிவிட்டதை எண்ணி ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். ஊர் வாயை மூட முடியாது. மூடுவதற்குச் சரியான உலை மூடியும் இல்லை என்பதை அவள் இப்போது தான் நன்றாகப் புரிந்து கொண்டாள்.

     மிகவும் அழகாகவும் ஆஜானுபாகுவாகவும் கம்பீரமாகவும் இருந்தது இராயசம் அச்சையாவின் தவறு இல்லை. அவள் கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்ணாக இருந்தாள். பரந்த மார்பும் திரண்ட தோள்களும் அழகிய முகமண்டலமும் உடைய சுந்தர புருஷனாக இருந்தார் அவர்.

     மதுரையில் போய்த் தங்கியிருந்த நாட்களில் தவிர்க்க முடியாத அரசியல் யோசனைகளுக்காக அவர் உடனிருக்க நேரிடும் என்று கருதி அவரையும் அழைத்துச் சென்றிருந்தாள் அவள்.

     மதுரையிலிருந்து திரிசிரபுரம் திரும்பிய பின்பும் திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன் செய்த நம்பிக்கைத் துரோகத்தை முறியடிப்பதற்காக அவள் இரண்டொரு நள்ளிரவுகளில் இராயசத்தை அரண்மனைக்கு வரவழைக்க நேரிட்டது. அதில் ஒரு நள்ளிரவில் பல்லக்கில்கூடத் திரும்பிச் செல்ல முடியாத அளவு புயலும் அடைமழையும் பிடித்துக் கொண்டுவிட்ட காரணத்தால் இராயசம் அரண்மனையிலேயே தங்கி விடியற்காலையில் சென்றார்.

     ரங்ககிருஷ்ணனும், சின்ன முத்தம்மாளும் உயிரோடிருந்த காலத்தில் கூட இப்படிச் சில தவிர்க்க முடியாத இரவுகளில் இராயசம் அரண்மனையில் தங்க நேரிட்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் இப்படி ஓர் அபவாதமும் வம்பும் கிளம்பியதில்லை.

     இப்போது ராணி மங்கம்மாள் அரண்மனையில் தனியாயிருந்தாள். மகனும் இல்லை. மருமகளும் இல்லை. அபவாதம் உண்டாக வசதியாகப் போயிற்று. நரசப்பய்யாவும் படைகளும் தெற்கே திருவாங்கூரை நோக்கிப் புறப்பட்டுப் போன மறுநாள் காலை ராணி மங்கம்மாள் அரண்மனை நந்தவனத்தில் தன் செவிகளாலேயே அதைக் கேட்டாள். வைகறையில் எழுந்து நீராடி நந்தவனத்தில் திருத்துழாயும் பூக்களும் கொய்யச் சென்ற ராணி மங்கம்மாள் தான் அங்கு வரப்போவது தெரியாமல் தனக்காகப் பூக்கொய்ய வந்திருந்த பணிப்பெண்கள் அங்கு ஏதோ பேசிக்கொண்டு நிற்கவே செடி மறைவில் நின்று அதைக் கேட்கத் தொடங்கினாள். பேச்சு தன்னைப் பற்றியதாகத் தோன்றவே அவள் ஆவல் மேலும் அதிகமாயிற்று.

     "இவ்வளவு அவசரமாகப் பூக்கொய்ய வந்திருக்க வேண்டாமேடீ! இராயசம் இப்போது தான் அரண்மனையை விட்டுப் போகிறார்...."

     கூறி முடித்து விட்டு சிரித்தாள் முதல்பெண்.

     "இந்த இராயசம் அடிக்கொருதரம் எதற்கு இப்படி வந்து வந்து போகிறார்? இங்கேயே தங்கிவிட வேண்டியது தானே. அலர்மேலம்மாள் ராணிக்குக் கட்டுப்பட்டவள். அவளால் எந்த இடையூரும் வரப்போவதில்லை."

     மறைந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளுக்குத் தீயை மிதித்தது போலாகிவிட்டது. தான் இவ்வளவு அதிகாலையில் எழுந்து நீராடி நந்தவனத்துக்கு வரக்கூடும் என்று ஒரு சிறிதும் எதிர்பாராதபடி அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் போக்கில் பேசிக் கொண்டிருப்பதாகப்பட்டது அவளுக்கு. அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டு அவள் மனம் பதறியது.

     பெரும்பாலான மனிதர்கள் சரியான அல்லது தவறான அனுமானங்களிலேயே வாழ்கிறார்கள் என்பது புரிந்தது. பலர் திரும்பத் திரும்பப் பேசி வதந்தியைப் பரப்புவதாலேயே சில தவறான அனுமானங்கள் கூட மெய்போலப் பரவ முடிகிறது. யாரும் பரப்பாத காரணத்தால் சரியான அனுமானங்கள் பரவாமலே போய்விட முடிகிறது.

     அப்போது தன் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் தனக்குத் தானே அந்தப் பணிப்பெண்கள் பேசியதைப் பற்றி நினைத்துப் பார்த்தாள் ராணி மங்கம்மாள். இராயசம் அச்சையாவின் ஆஜானுபாகுவான நெடிதுயர்ந்த பொன்னிறத் திருமேனியையும், கம்பீரமும் அறிவு ஒளியும் தேஜஸும் நிறைந்த திருமுக மண்டலத்தையும் கண்டு அவள் தன் மனத்திற்குள் அவ்வப்போது மயங்கியதுண்டு. மனத்தளவில் ஈடுபட்டது உண்டு. மனத்தளவில் ஈடுபடுவது என்பது எத்தகைய கட்டுப்பாடுள்ள பெண்ணாலும் தவிர்க்க முடியாதது தான். வெளி உலகில் வீரதீரப் பிரதாபங்கள் மிகுந்த ராஜதந்திரி - சாதுரியக்காரி என்றெல்லாம் பேர் வாங்கி இருந்தாலும் முடிவாக அவள் ஒரு பெண்தான். பெண் மனத்திற்கு இயல்பான சலனங்களும் சபலங்களும் அவளிடமும் இருக்கத்தான் செய்தன. பெண்ணும் தனிமையும் சேருவது என்பது பஞ்சும் நெருப்பும் சேருவதைப் போன்றது. வதந்தி என்ற நெருப்புப் பற்றிக் கொள்வது அப்போது பெரும்பாலும் நேர்ந்துவிடுகிறது.



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm20.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.