30. இருள் சூழ்ந்தது உணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். 'தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்' என்றே அவள் உள்ளூற எண்ணி அவனை வாழ்த்தினாள். பிரக்ஞை தவறிக்கொண்டிருந்த நிலையில் அரண்மனைக் காவலன் ஒருவன் வந்து அறையின் வெளிப்பக்கமாக நின்றபடியே அவளைக் கவனித்தான். அவளிருந்த நிலை கண்டு அவன் மனம் இளகிப் பாகாய் உருகியது. "தான தர்மங்களைத் தாராளமாகச் செய்து சத்திரம் சாவடிகளைத் திறந்து சாலைகள் அமைத்து, குளங்கள் வெட்டி அறம் செய்த மகாராணி மங்கம்மாள் தலையில் கடைசிக் காலத்தில் இப்படியா எழுதியிருக்க வேண்டும்? பாவம்!" என்று அந்தக் காவலன் அனுதாப உணர்வோடு தனக்குத் தானே முணுமுணுத்தது அவள் செவிகளில் விழுந்ததா இல்லையா எனத் தெரியவில்லை. ராணி மங்கம்மாளைச் சொந்தப் பேரன் அரண்மனையிலேயே சிறை வைத்துவிட்டான் என்ற செய்தி மெல்ல மெல்ல வெளி உலகில் மக்களிடையே பரவி விட்டது. அப்படிப் பரவுவதைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை. 'இத்தனை தான தர்மங்களைச் செய்த புண்ணியவதிக்கா இந்தக் கதி நேர்ந்தது?' என்று தனியாகவும் இரகசியமாகவும் தங்களுக்குள் அநுதாபமாகப் பேசிக் கொண்ட மக்கள் கூடத் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ள அஞ்சித் தயங்கினார்கள். பாட்டியின் மேல் தீராப் பகையும் குரோதமும் கொண்டுவிட்ட பேரன் தங்களை என்னென்ன தண்டனைக்கு உள்ளாக்குவானோ என்று யாவரும் பயந்தார்கள். அநுதாபத்தைப் பயமும் தயக்கமும் வென்றுவிட்டன. ராஜ விசுவாசத்துக்குப் பங்கமில்லாதது போன்ற ஒரு வகை அடக்கமும் அமைதியும் நாடு முழுவதும் தென்பட்டாலும் உள்ளூற இந்த அக்கிரமத்தைக் கேட்டு மக்கள் மனம் குமுறிக் கொண்டிருந்தார்கள். வெளிப்படையாகத் தெரியாத ஒருவகை உள்ளடக்கிய வெறுப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. நீறுபூத்த் நெருப்பாயிருந்த இந்த வெறுப்புணர்வை விஜயரங்கனோ, அவனுக்குத் துணையாயிருந்த அவனை ஆட்சியில் அமர்த்திய கலகக்காரர்களோ புரிந்து கொள்ளவில்லை. எதையும் தங்களால் அடக்கிவிட முடியும் என்ற திமிரோடு இருந்தார்கள். ஆட்சி கையிலிருந்ததுதான் அதற்குக் காரணம். ஆனால் அரண்மனை முழுவதும் இது அடாத செயல் என்ற எண்ணமே பரவியிருந்தது. விஜயரங்கனை எதிர்த்தும் முரண்பட்டும் கலகம் செய்ய அவர்களால் முடியவில்லையேயன்றி, 'ராணியை இப்படிச் செய்தது அக்கிரமம்' என்று அரண்மனை ஊழியர்கள் அனைவரும் உணர்ந்திருந்தார்கள். பிரக்ஞை தவறுகிற நிலையில் ராணி மங்கம்மாளைச் சிறையில் பார்த்த காவலன் பதறி நிலைகுலைந்து ஓடிப் போய் அதை விஜயரங்கனிடம் தெரிவித்தான். பாட்டியார் ஏறக்குறைய மரணப்படுக்கையில் இருப்பதாகப் புரிந்து கொண்ட விஜயரங்கன் உடனே தன் சகாக்களைக் கலந்தாலோசித்தான். "இறக்கும் தறுவாயிலிருக்கிற ராணி மங்கம்மாளை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. பாட்டி சாகும்போதுகூட உங்களுடைய முகத்தில் விழிக்க விரும்பாமல் செத்தாள் என்ற கெட்ட பெயர் உங்களுக்கு வரக்கூடாது" என்றார்கள் அவனுடைய சகாக்களில் சிலர். விஜயனும் பாட்டியின் அந்திக் காலத்தில் ஒரு நாடகமாடித் தீர்த்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டான். சிறையிலிருந்து தேடிவந்து செய்தி சொன்ன காவலனையே திரும்பவும் சிறைக்கு அனுப்பி, "முகத்தில் நீர் தெளித்துப் பருகத் தண்ணீர் கொடுத்து பாட்டிக்குத் தெளிவு வரச் செய்!" என்று அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தான் விஜயரங்க சொக்கநாதன். அந்தக் காவலனும் உடனே ஓடோடிச் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த ராணி மங்கம்மாளின் அறைக் கதவைத் திறந்து அவள் முகத்தில் நீர் தெளித்தான். மெல்ல மெல்லப் பிரக்ஞை வந்தது. சற்றே தெளிவும் பிறந்தது. "மகாராணீ! உங்களை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் நன்றாயிருக்க மாட்டார்கள்" என்று காவலன் ஆத்திர்மாகச் சொன்னபோது கூட, "அவர்களை அப்படிச் சபிக்காதே! எனக்குக் கெடுதல் செய்தவர்களுக்குக்கூட நான் கேடு நினைக்க மாட்டேன்" என்று ஈனஸ்வரத்தில் கருணையோடும் பரிவோடும் பதில் கூறினாள் மங்கம்மாள். அவளுடைய குரல் கிணற்றிற்குள்ளிருந்து வருவது போலிருந்தது. அவளுக்குப் பருக நீர் அளித்தான் அவன். ஆனால் அந்த நிலையிலும் அவள் அதைப் பருக மறுத்துவிட்டாள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |