உதயண குமார காவியம்

... தொடர்ச்சி - 2 ...

பிரச்சோதனன் உதயணனைத் தழுவுதல்

சால்கவென்று இறைவன் செப்பத் தன்னுடைக் கையினோச்சி
கால்களின் விரலினெற்றி கனக்கநன் கூன்றி நின்று
மால்கரி கால் கொடுப்ப மன்னனு மகிழ்ந்து போந்து
வேல்கவின் வேந்தன் காண வியந்துடன் தழுவிக் கொண்டான். 101

பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன் கூறி உறவு கொள்ளல்

மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி
வருமுறை நயந்து கொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து
திருமகள் கனவு கூறிச் செல்வநீ கற்பியென்னப்
பெருவலியுரைப்பக் கேட்டுப் பெருமகன் உணர்த்தலானான். 102

உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்

வேந்தன் தன் மக்கட்கெல்லாம் வேன்முதல் பயிற்றுவித்தும்
பூந்துகில் செறிமருங்குற் பொருகயற்கண்ணி வேய்த்தோள்
வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணைதன்னைச்
சேர்ந்த வணிகரிலின்பிற் செல்வனும் மகிழ்வுற்றானே. 103

மன்னன் மைந்தர் அரங்கேறுதல்

உரையினிலரியனாய உதயண குமரன் ஓர் நாள்
அரசிளங்குமரர் வித்தை யண்ணனீ காண்கவென்ன
வரைநிகர் யானையூர்ந்து மாவுடன் தேரிலேறி
வரிசையிற்காட்டி வாள்வில் வகையுடன் விளக்கக் கண்டான். 104

வாசவதத்தை யாழ் அரங்கேற்றம்

வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல்யாழ்
பேசவை தளரக் கேட்டுப் பெருமகன் இனியனாகி
ஆசிலா வித்தையெல்லாம் ஆயிழை கொண்டாள் என்றே
ஏசவன் சிறைசெய்குற்ற மெண்ணுறேல் பெருக்க வென்றான். 105

வாசவதத்தை யாழ் இசையின் மாண்பு

விசும்புயல் குமரர்தாமும் வியந்துடனிருப்பப் புள்ளும்
பசும் பொனினிலத்தில் வீழப்பாவையர் மயக்கமுற்றார்
வசம்படக் குறுக்கி நீட்டி வரிசையிற் பாடலோடும்
அசும்பறாக் கடாத்து வேழத்தரசனு மகிழ்ந்தானன்றே. 106

பிரச்சோதனன் உதயணனை வத்தவநாட்டிற்கு அனுப்பத் துணிதல்

வத்தவன் கையைப் பற்றி மன்னவன் இனிது கூறி
வத்தவன் ஓலை தன்னுள் வளமையிற் புள்ளியிட்டும்
வத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன
வத்தவ நாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார். 107

பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்

ஓரிரண்டாயிரங்க ளோடை தாழ் மத்த யானை
ஈரிரண்டாயிரங்களெழின் மணிப் பொன்னின்றேரும்
போரியல் புரவி மானம் பொருவிலை யாயிரம்மும்
வீரர்கள் இலக்கம் பேரும் வீறுநற்குமரற்கீந்தான். 108

யூகி குறத்தி வேடம் புனைந்து குறிசொல்லல்

யூகியும் வஞ்சந்தன்னையுற்றுச் சூழ்வழாமை நோக்கி
வாகுடன் குறத்திவேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம்
நகரத்தினகரழிந்த நடுக்கங்கள் தீர வெண்ணிப்
போக நன்னீரிலாடப் புரத்தினில் இனிதுரைத்தான். 109

பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்கு தீயிடுதல்

மன்னவன்றன்னோ டெண்ணி மாநகர் திரண்டுசென்று
துன்னிய நீர்க்கயத்திற்றொல் புரப் புறத்திலாட
நன்னெறி வத்தவன்றானன் பிடியேறி நிற்ப
உன்னிய யூகிமிக்க ஊரில் தீயிடுவித்தானே. 110

உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்

பயந்து தீக்கண்டுசேனை பார்த்திபன் தன்னோடுஏக
வயந்தகன் வந்துரைப்ப வத்தவகுமரன் தானும்
நயந்துகோன் மகளைமிக்க நன்பிடியேற்றத் தோழி
கயந்தனை விட்டுவந்த காஞ்சனை ஏறினாளே. 111

வயந்தகன் வீணைகொண்டு வன்பிடியேறிப் பின்னைச்
செயந்தரக் கரிணிகாதிற்செல்வன் மந்திரத்தைச் செப்ப
வியந்து பஞ்சவனந் தாண்ட வேயொடு பற்ற வீணை
வயந்தகன் கூற மன்னன் மாப்பிடி நிற்க வென்றான். 112

நலமிகு புகழார் மன்னநாலிரு நூற்றுவில்லு
நிலமிகக் கடந்ததென்ன நீர்மையிற் றந்த தெய்வம்
நலமிகத் தருமின்றென்ன பண்ணுகை நம்மாலென்னக்
குலமிகு குமரன் செல்லக் குஞ்சரம் அசைந்ததன்றே. 113

பிடி வீழ்தல்

அசைந்த நற்பிடியைக் கண்டே யசலித மனத்தராகி
இசைந்த வரிழிந்தபின்னை இருநில மீதில்வீழத்
தசைந்த கையுதிரம் பாயச்சால மந்திரமங்காதில்
இசைந்தவர் சொல்லக் கேட்டே இன்புறத் தேவாயிற்றே. 114

உதயணன் முதலியோர் ஊர் நோக்கி செல்லல்

உவளகத்திறங்கிச் சென்றேயூர் நிலத்தருகு செல்லப்
பவளக் கொப்புளங்கள் பாவை பஞ்சிமெல்லடி யிற்றோன்றத்
தவளைக்கிண் கிணிகண்மிக்க தரத்தினாற் பேசலின்றித்
துவளிடையருகின் மேவுந்தோழி தோள்பற்றிச் செல்வாள். 115

வயந்தகன் அவர்களை விட்டுப் புட்பகம் போதல்

பாவைதன் வருத்தங்கண்டு பார்த்திபன் பாங்கினோங்கும்
பூவை வண்டரற்றுங் காவுட்பூம்பொய்கை கண்டிருப்ப
வாவு நாற்படையுங்கொண்டு வயந்தகன் வருவேனென்றான்
போவதே பொருளூர்க்கென்று புரவலனுரைப்பப் போந்தான். 116

வேடர்களை உதயணன் வளைத்துக் கொள்ளுதல்

சூரியன் குடற்பாற்சென்று குடவரை சொருகக்கண்டு
நாரியைத் தோழிகூட நன்மையிற் றுயில்கவென்று
வீரியனிரவு தன்னில் விழித்து உடன் இருந்தபோழ்து
சூரியன் உதயம்செய்யத் தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார். 117

உதயணனுடன் வேடர் போர் செய்தல்

வந்த வரம்புமாரி வள்ளன்மேற் றூவத்தானும்
தந்தனு மேவிச்சாராத் தரத்தினால் விலக்கிப்பின்னும்
வெந்திறல் வேடர்வின்னாண் வெந்நுனைப் பகழிவீழ
நந்திய சிலைவளைத்து நன்பிறையம்பின் எய்தான். 118

வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும் வயந்தகன் வரவும்

செய்வகையின்றி வேடர் தீவனங்கொளுத்த மன்னன்
உய்வகையுங்களுக்கின்றுறு பொருளீவன் என்ன
ஐவகை அடிசில் கொண்டே யான நாற்படையுஞ் சூழ
மெய்வகை வயந்தகன் தான் வீறமைந்தினிதின் வந்தான். 119

உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்

அன்புறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கிருந்தார்
இன்புறு மற்றை நாளினெழிற் களிற்றரசனேற
நன்புறச் சிவிகையேற நங்கை நாற்படையுஞ் சூழப்
பண்புறு சயந்திபுக்குப் பார்த்திபன் இனிது இருந்தான். 120

2. இலாவாண காண்டம்

உஞ்சை நகர்விட்டகன்று உதயண குமாரனும்
தஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின்
என் செய்தனன் என்றிடினியம்புதும் அறியவே
கொஞ்ச பைங்கிளி மொழிதன்கூடலை விரும்பினான். 121

உதயணன் வாசவதத்தை திருமணம்

இலங்கிழை நன்மாதரை யினிமை வேள்வித்தன்மையால்
நலங்கொளப் புணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல்
புலங்களின் மிகுந்தபோகம் பொற்புடன் நுகர்ந்தனன்
அலங்கலணி வேலினான் அன்புமிகக் கூரினான். 122

கைம்மிகு காமம்கரை காண்கிலன் அழுந்தலில்
ஐம்மிகுங் கணைமதன் அம்புமீக் குளிப்பவும்
பைம்மிகும் பொனல்குலாள் படாமுலை புணையென
மைம்மிகும் களிற்றரசன் மாரன்கடல் நீந்துவான். 123

உதயணன் கழிபெருங்காமத்து அழுந்தி கடமையை புறக்கணித்தல்

இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைப்பிலன்
கழிந்த அறமுமெய்ம்மறந்து கங்குலும் பகல்விடான்
அழிந்தி அன்பிற்புல்லியே அரிவையுடைய நன்னலம்
விழுந்தவண் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான். 124

ஒழுகுங்காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன்
எழில் பெருகும்சூழ்ச்சிக் கணினியதன் வரவதாற்
பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன்
எழின் மங்கை இளம்பிடி யேற்றிஏகக் கண்டனன். 125

மிஞ்சி நெஞ்சிலன்புடன் மீண்டு வர எண்ணினன்
உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டுள்ளகத் தழுங்கினன்
விஞ்சுபடை மேலெழாமை விரகுடனறிந்தந்த
உஞ்சை எல்லை விட்டுவந்து யூகிபுட்பகஞ் சென்றான். 126

யூகி இடபகனிடம் உதயணனைப் பற்றி வினாதலும் அவனின் விடையும்

இடபகற்குத் தன்னுரை இனிது வைத்துரைத்துப் பொன்
முடியுடைய நம் அரசன் முயற்சியது என் என
பிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்த பின்
அடியிடவிடம் பொறாமையானை மண்ணிற் சாய்ந்ததே. 127

சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும்
உவமையில் வயந்தகன்றனூர் வந்து உடன்போந்ததும்
தவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும்
குவிமுலை நற்கோதை அன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும். 128

இழந்தபூமி எண்ணிலன் இனிய போகத்தழுந்தலும்
குழைந்தவன் உரைப்ப யூகி கூரெயிறிலங்கறக்கு
விழைந்தவேந்தன் தேவியை விரகினாற் பிரித்திடின்
இழந்தமிக்கரசியல் கைகூடு மென எண்ணினான். 129

யூகியின் செயல்

சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன்
ஆங்கவனறியக் கூறியான யூகி தன்னுயிர்
நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும்
பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன். 130

படத்துருவி லொன்றினைப் பரந்தமேற் கண்ணாகவைத்து
இடக்கண் நீக்கியிட்டு மிக்கியல்புடன் கொடுத்துடன்
முடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள்
இடிக்குரனற் சீயமாம் இறைவனையே கண்டனள். 131

சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்

வேந்தனுங்கண்டே விரும்பி வினயஞ்செய் திருக்கென
பாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லியபின்
சேந்ததன் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன்
போந்துபின் வராததென்ன புரவலநீ கூறென்றாள். 132

உதயணன் செயல்

அவனுரையறிந்திலன் அறிந்த நீ யுரைக்கெனத்
தவிசிடை யிருந்தவடான் படத்தைக் காட்டினள்
புவியரசன் கண்டுடன் புலம்பி மிகவாடிப்பின்
தவமலி முனிவனைத் தான் வணங்கிக் கேட்டனன். 133

உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்

முடிமுதல ரசினோடு முனிவறநின்று ணைவனை
வடிவுடன் பெறுவையென்ன வன்மையினிற்றேறிமீக்
கடிகமழ்ச்சாரலிற் கண்ட மாதவன் மகள்
துடியிடை விரிசிகையைத் தோன்றன் மாலைசூட்டினான். 134

உதயணனன் தழைகொண்டுவரப் போதல்

கலந்தனனிருந்து பின் கானகத் தழைதர
நலந்திகழ் மாதர்செப்ப நரபதியும் போயினன்
கலந்திகழும் யூகியும் காவலன் தன் தேவியை
சிலதினம் பிரிவிக்கச் சிந்தை கூரித் தோன்றினான். 135

யூகியின் செயல்

மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாதரைத்
துன்னுநன் திருவரைத் தொக்குடன் இருக்கவென்று
மன்னன் மனைதன் மனைக்கு மாநிலச் சுருங்கை செய்
தன்னவண் மனை முழுதுமறைந்தவர் தீயிட்டனர். 136

சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்

நிலந்திகழ் சுருங்கையினீதி மன்னன் றேவியை
இலங்கு சாங்கியம் மகளெழில் பெறக் கொண்டுவந்
தலங்கலணி வேலினானமைச்சன் மனை சேர்ந்தனன்
துலங்கி வந்தடி பரவிச் சொல்லினிது கூறுவான். 137

யூகி வாசவதத்தையை வரங்கேட்டல்

என்னுடைய நற்றாயே நீ எனக்கொரு வரங்கொடு
நின் அரசன் நின்னைவிட்டு நீங்குஞ் சிலநாளன்றி
நன்னில மடந்தை நமக்காகுவதும் இல்லையே
என்னவுடன் பட்டனள் இயல்புடன் கரந்தனள். 138

உதயணன் மீண்டும்வந்து வருந்துதல்

சவரர் வந்து தீயிட்டுத் தஞ்செயலினாக்கிமிக்
கவகுறிகள் கண்டரசனன் பிற்றேவிக் கேதமென்
றுவளகத் தழுங்கி வந்துற்ற கருமஞ் சொலக்
கவற்சியுட் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன். 139

பூண்டமார் பனன்னிலம் புரண்டு மிக்கெழுந்துபோய்
மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான்
நீண்டதோள் அமைச்சரு நின்றரசற் பற்றியே
வேண்டித் தானுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான். 140

உதயணன் வாசவதத்தையின் அணிகலன் கண்டழுதல்

கரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர் களென்றபின்
எரிப்பொன்னணி காட்டென வெடுத்து முன்புவைத்தனர்
நெப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென
விருப்புடை நற்றேவிக்கு வேந்தன் மிக்கரற்றுவான். 141

மனம்வருந்தி உதயணன் அழுது புலம்பல்

மண்விளக்கமாகி நீ வரத்தினெய்தி வந்தனை
பெண்விளக்கமாகி நீ பெறற்கரியை யென்று தன்
கண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்குவான்
புண் விளக்கிலங்குவேற் பொற்புடைய மன்னவன். 142

மானெனும் மயிலெனும் மரைமிசைத் திருவெனும்
தேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும்
வானில மடந்தையே மாதவத்தின் வந்தனை
நான் இடர்ப்படுவது நன்மையோ நீவீந்ததும். 143

நங்கை நறுங்கொங்கையே நல்லமைக் குழலியெம்
கொங்குலவ கோதைபொன் குழையிலங்கு நன்முகம்
சிங்கார முனதுரையுஞ் செல்வி சீதளம்மதி
பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன். 144

வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவி நீ
நாணின் பாவைதானுநீ நலந்திகழ் மணியுநீ
காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ
தேரணி முகங்காட்டெனச் சொல்லியே புலம்புவான். 145

அமைச்சர் தேற்றுதல்

துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா
அன்புகிக்கு அரற்றுவதை அகல்வது பொருளென
நன்புறும் அமைச்சர்சொல்ல நரபதியும் கேட்டனன்
இன்புறும் மனைவி காதலியல்புடன் அகன்றனன். 146

யூகி உருமண்ணுவாவிடம் உரைத்தல்

அண்ண றன்னிலை அறிந்த யூகியும்
திண்ணி தின்னியல் செய்கை யென்றுரு
மண்ணு வாவினை மன்னன் அண்டையில்
எண்ணுங் காரிய மீண்டுஞ் செய்கென்றான். 147

வயந்தகன் உதயணனுக்குக் கூறுதல்

தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான்
துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன்
மன்னற் குறுதி மறித்தினிக் கூறும்
பொன்னடி வணங்கிப் புரவலன் கேட்ப. 148

வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில்
இற்றவர்க் காட்டும் இயல்பினனூலுரை
கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன்
தத்துவ முனியுளனாமினிச் சார்வோம். 149

உதயணன் மகதநாடு செல்லல்

வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் தன்னைநோக்கி
அத்திசை போவோம் என்றே அகமகிழ்ந்து இனிய கூறி
வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரிமேவ
ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே. 150

3. மகத காண்டம்

வாசவதத்தையை நினைத்து உதயணன் வருந்துதல்

சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவு மகதநாட்டுக்கு
இயைந்துநன் கெழுந்துசென்றே இரவியின் உதய முற்றான்
நயந்தனன் தேவிகாதனன் மனத்தழுங்கிப் பின்னும்
வியந்து நல்லமைச்சர் தேற்றவெங்கடும் கானம் புக்கான். 151

செத்தநற்தேவி தன்னைத் திருப்பவு மீட்கலாமென்று
அத்திசை முன்னிநல்ல வருவழிப்பட்டுச் செல்ல
அத்தியும் பிணையுமேக வாண்மயிலாடக் கண்டு
வந்தவன் கவிழ்ந்துரைக்கு மனனமை மனையையோர்ந்தே. 152

உதயணன் மகதநாடு அடைதல்

கோட்டுப்பூ நிறைந்திலங்குங் கொடிவகைப் பூவுங்கோலம்
காட்டு நந்தேவியென்று கால்விசைநடவா மன்னன்
காட்டினன் குன்றமேறிக் கானகங்கழிந்து போந்து
சேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறைமகதஞ் சேர்ந்தான். 153

அனைவரும் இராசகிரி நகர பூஞ்சோலையில் தங்குதல்

மருவிய திருவினானம் மகதவர்க் கிறைவனாமம்
தருசகனென்னு மன்னன்றானை வேற்றலைவன் மாரன்
இருந்தினி துறையுமிக்க விராசநற்கிரியந் தன்னிற்
பொருந்திச் சென்ன கர்ப்புறத்திற் பொலிவுடனிருந் தானன்றே. 154

காகதுண்ட முனிவனிடம் வயந்தகன் தங்கள் சூழ்ச்சி பற்றிக் கூறுதல்

காமநற்கோட்டஞ் சூழக் கனமதில் இலங்கும் வாயிற்
சோமநற்றாபதர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில்
நாமநல் வயந்த கன்னு நன்றறி காக துண்ட
மாமறையாளற் கண்டு வஞ்சகஞ் செப்பினானே. 155

காகதுண்ட முனிவர் உதயணனிடம் உரைத்தல்

திருநிறை மன்னன் தன்னைச் சீர் மறையாளன் கண்டே
இருமதியெல்லை நீங்கியிப்பதியுருப்ப வென்றும்
தருவநீயிழந்த தேவி தரணியிங்கூட வென்ன
மருவியங்கிருக்குமோர் நாண் மகதவன் தங்கை தானும். 156

பதுமாவதியும் உதயணனும் காமுறுதல்

பருவமிக்கிலங்குங் கோதைப் பதுமை தேரேறிவந்து
பொருவில் காமனையே காணாப் புரவலற் கண்டுகந்து
மருவும் வாசவதத்தை தான் வந்தனளென்றுரைப்பத்
திருநகர் மாதுகண்டு திகைத்துளங் கவன்று நின்றாள். 157

உதயணனும் பதுமாவதியும் களவுமணம் செய்தல்

யாப்பியாயினியாளென்னும் அவளுடைத் தோழி சென்று
நாப்புகழ் மன்னற்கண்டு நலம்பிறவுரைத்துக் கூட்டக்
காப்புடைப் பதுமையோடுங் காவலன் கலந்து பொன்னின்
சீப்பிடக்கண் சிவக்குஞ் சீர் மங்கை நலமுண்டானே. 158

உதயணன் அமைச்சர்களிடம் வினவுதல்

எழில்பெறு காமக்கோட்டத் தியற்கையிற் புணர்ந்துவந்து
வழிபெறும மைச்சரோடு வத்தவனினிய கூறும்
மொழியமிர் தந்நலாளை மோகத்திற் பிரியேனென்னத்
தொழுதவர் பெறுக போகந் தோன்றனீயென்று சொன்னார். 159

பதுமாவதியுடன் உதயணன் கன்னிமாடம் புகல்

மாட்சிநற் சிவிகையேறி மடந்தை தன்னோடும் புக்குத்
தாழ்ச்சியின் மாளிகைக்குட் டக்கவண் மனங்குளிர்ப்பக்
காட்டினன் வீணை தன்னைக்காவலன் கரந்திருப்ப
ஓட்டிய சினத்தனாய வுருமண்ணுவிதனைச் செய்யும். 160

அமைச்சன் உருமண்ணுவாவின் உரை

ஆகியதறிந்து செய்யு மருளுடை மனத்தனான
யூகியங்குஞ்சை தன்னையுற்றருஞ் சிறை விடுக்கப்
போக நற்றேவியோடும் போந்ததுபோல நாமும்
போகுவமன்னன் மாதைப் புதுமணம் புணருவித்தே. 161

அமைச்சன் உருமண்ணுவாவின் செயல்

உருமண்ணுவா வனுப்ப வுற்றமுந்நூறு பேர்கள்
மருவியவிச்சை தன்னான் மன்னவன் கோயிறன்னுள்
மருவினர் மறைந்துசென்றார் மன்னவன்றாதை வைத்த
பெருநிதி காண்கிலாமற் பேர்க்குநர்த் தேடுகின்றான். 162

உதயணன் மகத மன்னன் தருசகனுடன் நட்பு கொள்ளல்

யானரிந் துரைப்பனென்றே யரசனைக்கண்டு மிக்க
மாநிதிகாட்டி நன்மை மகதவனோடுங் கூடி
ஊனமில் விச்சை தன்னாலுருமண்ணுப் பிரிதலின்றிப்
பானலங்கிளவி தன்னாற் பரிவுடனிருக்கு நாளில். 163

சங்க மன்னர்கள் ஏழுவரின் படையெடுப்பு

அடவியாமரசன் மிக்கவயோத்தியர்க் கிறைவன் றானைப்
படையுறு சாலியென்பான் பலமுறு சத்தியென்பான்
முடிவிரிசிகையன் மல்லன் முகட்டெலிச் செவியனென்பான்
உடன்வருமெழுவர் கூடியொளிர் மகதத்து வந்தார். 164

மகதத்தை அழிக்கத் துவங்குதல்

தருசகற் கினிதினாங்கடரு திறையிடுவ தில்லென
நெரியென வெகுண்டு வந்தேயினிய நாடழிக்கலுற்றார்
தருசகராசன் கேட்டுத் தளரவப் புறத்தகற்ற
உருமண்ணுவா மனத்திலு பாயத்திலுடைப்பனென்றான். 165

அமைச்சன் உருமண்ணுவாவின் சூழ்ச்சி

கள்ள நல்லுருவினோடுங் கடியகத்துள்ளே யுற்ற
வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவினோடு
தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப்போந்து
பள்ளிப்பாசறை புகுந்து பலமணி விற்றிருந்தார். 166

மன்னன் வீர மகதத்திற்குக் கேளாத்தம்
இன்னு ரைகளியல்பின் வரவரத்
துன்னு நாற்படை வீடு தோன்றிரவிடை
உன்னினர்கரந் துரைகள் பலவிதம் 167

பகைவர் ஐயுற்று ஓடுதல்

உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின்
முரியும் சேனை முயன்றவ ரோடலிற்
றெருளினர் கூடிச் சேரவந் தத்தினம்
மருவி யையம் மனத்திடை நீங்கினார். 168

பகைவர் கூடி விவாதித்தல்

இரவு பாசறை யிருந்தவர் போனதும்
மருவிக் கூடியே வந்துடன் விட்டதும்
விரவி யொற்றர்கள் வேந்தற் குரைத்தலின்
அரசன் கேட்டுமிக் கார்செயலென்றனன். 169

அமைச்சன் உருமண்ணுவா மன்னன் தருசகனைக் கண்டு உண்மை உரைத்தல்

வார ணிக் கழல் வத்தவன் றன்செயல்
ஓரணி மார்பனுருமண்ணு வாவுமிக்
கேரணிய ரசருக் கியல் கூறலும்
தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தனன். 170

தருசகன் உதயணனை எதிர்கொண்டு வரவேற்றல்

ஆரா வுவகையுள் ளாகி யரசனும்
பேரா மினியயாழ்ப் பெருமகன் தன்னையே
சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன்
நேரா மாற்றரை நீக்குவனானென்றான். 171

படையெடுத்துச் சென்று உதயணன் பகைவரை வெல்லுதல்

உலம்பொருத தோளுடை யுதயண குமரனும்
நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப்
புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன்
நலம்பெறத் திறையுடனரபதியு மீண்டனன். 172

உதயணன் பதுமாவதி மணம்

வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத்
தருசகன் எதிர்கொண்டு தன்மனை புகுந்துபின்
மருவநற் பதுமையாமங்கை தங்கை தன்னையே
திருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே அளித்தனன். 173

தருசகன் உதயணனுக்கு படை அளித்து உதவுதல்

புதுமணக் கோலமிவர் புனைந்தன ரியற்றிப்பின்
பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன்
துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம்
அதிர்மணி யாற்றுந்தோ ராயிரத் திருநூறே. 174

அறுபதினொண் ணாயிர மானபடை வீரரும்
நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும்
பெறுகவென் றமைத்துடன் பேர் வருட நாரியும்
உறுவடிவேற் சததியு முயர் தரும தத்தனும். 175

சத்திய காயனுடன் சாலவு மமைச்சரை
வெற்றிநாற் படைத்துணை வேந்தவன்பிற் செல்கென்று
முற்றிழை யரிவைக்கு முகமலரச் சீதனம்
பற்றியன்பினால் அளித்துப் பாங்குடன் விடுத்தனன். 176

வெல்லுமண்ண லைமிக வேந்தனன்ன யஞ்சில
சொல்லிநண்பினாலுறைத்துத் தோன்றலை மிகப்புல்லிச்
செல்கென விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன்
எல்லைதன்னா டெய்திப்பினினியர் தம்பி வந்தனர். 177

பிங்கலனும் கடகனும் உதயணனை அடைதல்

பிங்கல கடகரெனப் பீடுடைக் குமரரும்
தங்குபன்னீ ராயிரந் தானையுடை வீரரும்
அங்குவந்தவ் வண்ணலை அடிவணங்கிக் கூடினர்
பொங்குபுரங் கௌசாம்பியிற் போர்க்களத்தில் விட்டனர். 178

வருடகாரனிடம் உதயணன் தன் சூழ்ச்சி உரைத்தல்

வருடகாரனை அழைத்து வத்தவனியம்புமிப்
பருமிதநற் சேனையுள்ள பாஞ்சால ராயனிடம்
திருமுடி யரசரைத் திறத்தினா லகற்றெனப்
பொருளினவன் போந்தபின்பு போர்வினை தொடங்கினர். 179

உதயணன் ஆருணி அரசன் போர்

அமைச்சனுஞ்சென் றவ்வண்ண மதிர்கழனல் வேந்தரைச்
சமத்தினி லகற்றினன் சாலவும்பாஞ் சாலனும்
அமைந்த நாற் படையுடனமர்ந்துவந் தெதிர்த்தனன்
அமைத்திருவர் விற்கணைக ளக்கதிர் மறைத்தவே. 180

போர்க் காட்சிகள்

விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுவ வேறவும்
பரிந்து பேய்க்கண மாடவும் பல நரிபறைந் துண்ணவும்
முரிந்த முண்டங்க ளாடவும் முரிந்த மாக்களி றுருளவும்
வரிந்த வெண்சிலை மன்னவன் வத்த வன்கண்கள் சிவந்தவே. 181

உதயணன் ஆருணி மன்னனைக் கொல்லுதல்

மாற்ற வன்படை முறிந்தென மன்ன வன்படையார்த்திடத்
தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன் றூய காளைதன் வாளினால்
மாற்ற லன்றனைக் கூற்றுண வண்மை யில்விருந் தார்கென
ஏற்ற வகையினி லிட்டனனிலங்கு வத்தவ ராசனே. 182

உதயணன் கோசம்பி நகருக்குள் புகுதல்

பகையறவேயெ றிந்துடன் பாங்கிற் போர்வினை தவிர்கென
வகையறவேபடுகளங்கண்டு நண்ணிய மற்றது
தொகையுறுந்தன தொல்படை சூழ வூர்முக நோக்கினன்
நகையு றுந்நல மார்பனு நகர வீதியில் வந்தனன். 183

உதயணன் அரண்மனை புகுதல்

மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக்
கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார்
பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல்
ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன். 184

உதயணன் திருமுடி சூடுதல்

படுகளத்தி னொந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன்
இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின்
தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திட
முடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள். 185

4. வத்தவ காண்டம்

உதயணன் அரசு வீற்றிருத்தல்

மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப்
பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாசனத்தில்
தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையினீழல்
மின்சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின் 186

உதயணனின் கொடை

மாற்றலர் தூதர் வந்து வருதிறை யளந்து நிற்ப
ஆற்றலர் வரவ வர்க்கே யானபொன் றுகில ளித்தே
ஏற்றநற் சனங்கட் கெல்லா மினிப்பொரு ளுவந்து வீசிக்
கோற்றொழினடத்தி மன்னன் குறைவின்றிச் செல்லுகின்றான். 187

உதயணன் பத்திராபதி என்னும் யானைக்கு மாடம் கட்டுதலும் உருவம் செய்தலும்

மதுரவண் டறாத மாலை மகதவன் றங்கை யாய
பதுமைதன் பணைமு லைமேற் பார்த்திபன் புணர்ந்து செல்லத்
துதிக்கைமா வீழ்ந்த கானந் தோன்றலு மாடம் பண்ணிப்
பதியினு மமைத்துப் பாங்கிற் படிமமு மமைத்தானன்றே. 188

உதயணன் கோடபதி யாழை மீண்டும் பெறுதல்

அருமறை யோதி நாம மருஞ்சனனந்த ணன்றான்
திருவுறை யுஞ்சை நின்று திகழ்கொடிக் கௌசாம் பிக்கு
வருநெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு
பொருந்தவே கொண்டு வந்து புரலலற் கீந்தானன்றே. 189

பதுமாவதி யாழ் கற்க விரும்புதல்

மதுமலர்க் குழலி விண்மின் மாலைவேல் விழிமென் றோளி
பதுமைவந் தரசற் கண்டு பன்னுரை யினிது கூறும்
மதியின்வா சவதத்தைதன் வண்கையினதனைப் போல
விதியினான் வீணை கற்க வேந்த நீ யருள்க வென்றாள். 190

உதயணன் வாசவதத்தையை நினைத்து வருந்துதல்

பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொருமனத் துருகி மன்னன்
ஒள்ளிதழ்த் தத்தை தன்னை யுள்ளியே துயிலல் செய்ய
வெள்ளையே றிருந்த வெண்டா மரையினைக் கொண்டு வந்து
கள்ளவிழ் மாலைத் தெய்வங் கனவிடைக் கொடுப்பக் கண்டான். 191

உதயணன் முனிவரிடம் கனவு பலன் கேட்டல்

கங்குலை நீங்கி மிக்கோர் கடவுளை வினவச் சொல்வார்
அங்கயற் கண்ணி தானு மாரழல் வீந்தா ளல்லள்
கொங்கைநற் பாவை தன்னைக் கொணர நீ பெறுவை யின்பம்
இங்குல கெங்கு மாளு மெழிற்சுதற் பெறுவ ளென்றார். 192

உதயணன் கனவுப் பயன் கேட்டு மகிழ்தல்

வெள்ளிய மலையின் மீதே விஞ்சைய ருலக மெல்லாம்
தெள்ளிய வாழி கொண்டு திக்கடிப் படுத்து மென்ன
ஒள்ளிய தலத்தின் மிக்கேர ருறுதவ ருரைத்த சொல்வை
வள்ளலு மகிழ்ந்து கேட்டு மாமுடி துளக்கினானே. 193

அமைச்சர் உருமண்ணுவா விடுதலை

என்றவ ருரைப்பக் கேட்டே யிறைஞ்சின் கடிபணிந்து
சென்றுதன் கோயில் புக்குச் சேயிழை பதுமை தன்னோடு
ஒன்றினன் மகிழ்ந்து சென்னா ளுருமண்ணு வாவு முன்பு
வென்றிவேன் மகதன் மாந்த ரால்விடு பட்டிருந்தான். 194

உருமண்ணுவா உதயணனை அடைதல்

மீண்டவன் வந்தூர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக்
காண்டறி வாளனென்றே காவலன் புல்லிக் கொண்டு
மாண்டவன் வந்த தொய்ய வரிசையின் முகமன் கூறி
வேண்டவாந் தனிமை தீர்ந்தே விரசூடனின்புற்றானே. 195

வாசவதத்தையை யூகி கௌசாம்பிக்கு கொணர்தல்

வாரணி கொங்கை வேற்கண் வாசவ தத்தை தானும்
ஊரணி புகழினான யூகியு மற்றுள் ளாகும்
தாரணி கொடியி லங்குஞ் சயந்தியினின்றும் போந்து
பாரணி கோசம் பிப்பாற் பன்மலர்க் காவுள் வந்தார். 196

உதயணன் யூகி, வாசவதத்தை ஆகியோர் இணைதல்

நயந்தநற் கேண்மை யாளர் நன்கமைந் தமைச்சர் தம்முள்
வயந்தகனுரைப்பக் கேட்டு வத்தவன் காவு சேரப்
பயந்தவ ரடியில் வீழப் பண்புடன் தழுவிக் கொண்டு
வியந்தர சியம்பு நீங்கள் வேறுடன் மறைந்த தென்னை. 197

யூகியின் உரை

இருநில முழுதும் வானு மினிமையிற் கூடினாலும்
திருநில மன்னரன்றிச் செய்பொரு ளில்லை யென்று
மருவுநூல் நெறியினன்றி வன்மையாற் சூழ்ச்சி செய்தேன்
அருளுடன் பொறுக்க வென்றான் அரசனு மகிழ்வுற் றானே. 198
உதயணன் வாசவதத்தையுடன் இன்புற்றிருத்தல்

ஆர்வமிக் கூர்ந்து நல்ல வற்புதக் கிளவி செப்பிச்
சீர்மைநற் றேவி யோடுஞ் செல்வனு மனை புகுந்தே
ஏர்பெறும் வாசவெண்ணெ யெழிலுடன் பூசி வாச
நீர்மிக வாடி மன்னனேரிழை மாதர்க் கூட. 199

பதுமாவதியின் வேண்டுகோள்

யூகியு நீரினாடி யுற்றுடனடிசி லுண்டான்
நாகதேர் கால மன்னனன்குடனிருந்த போழ்தின்
பாகநேர் பிறையா நெற்றிப் பதுமையு மிதனைச் சொல்வாள்
ஏகுக செவ்வித் தத்தை யெழின் மனைக் கெழுக வென்றான். 200



உதயண குமார காவியம் : 1 2 3 4