உதயண குமார காவியம்

... தொடர்ச்சி - 4 ...

நரவாகனன் வித்தியாதர உலகம் செல்லல்

தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற்
றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி
வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும்
இந்திரன்றானூ ரியல்பினேகினான். 301

செல்வநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டு
செல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்து
செல்வவிந் திரனனுப்பத் திருமணித் தேரினேறிச்
செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தானன்றே. 302

6. துறவுக் காண்டம்

உதயணனின் தவ எண்ணம்

வளங்கெழு வத்தவற்கு மன்னிய காதன் மிக்க
உளங்கெழு கற்பினார்களோதிமம் போலு நீரார்
இளங்கிளி மொழியினார்க ளினிமையினால்வரோடும்
துளங்கலி றிருமின் போர்மின் தூயசொன் மடந்தை தாமும். 303

மண்ணியன் மடந்தை யோடு மருவினார் மிக்க மன்னன்
புண்ணிய முன்னாட் செய்த போதந்தே யுதவி செய்ய
எண்ணிய கரும மெல்லா மியைபுடனாகப் பின்னும்
புண்ணிய நோன்பு நோற்கப் பொருந்திய மனத்தனானான். 304

உதயணன் தவத்தின் பெருமையை எண்ணுதல்

ஆசை யென்றனக் கருளும் தோழனா
ஓசை வண்புகழ் யூகி யானதும்
வாச வதத்தை மனைவி யானதும்
பேச ரும்மகப் பெற்றெடுத்ததும். 305

நரவாகனன்மக னாம மானதும்
வரைமிசைத் தானவர் வாழு நாட்டையங்
கரண நேமியா லடிப்ப டுத்ததும்
பொருவில் வேந்தர்கள் புகழ்ந்த டைந்ததும் 306

மிக்க விந்திரன் மேவி விட்டதும்
தக்க புத்திரன் றரத்திற் சென்றதும்
தொக்க வானவர் தொல்சி றப்புடன்
அக்கணம்விட வண்ணல் போந்ததும். 307

போந்து புண்ணியன் பொருவில் போகத்துச்
சேந்தி ருந்ததுஞ் செய்த வத்தெனா
வேந்தனெண்ணியை வெறுத்து மாதரைக்
காந்தி வாமனைக் கண்டடி தொழும் 308

உதயணனை மகளிர் மயக்குதல்

எண்ணம் வந்துநல் லெழிற்பெ ரும்மகன்
புண்ணி யநோன்பு போந்த வேளைவேற்
கண்ணின் மாதர்கள் காவ லன்மனம்
உண்ணக் காமத்தை யுருவு காட்டினார். 309

உதயணன் மீண்டும் காமத்தில் திளைத்தல்

மன்னு மன்பினீண் மாதர் மோகத்திற்
றுன்னு மால் கடற் றோன்றனீந்துநாட்
சொன்ன மும்மதந் தோன்ற வேழமும்
உன்னிக் காற்றளை யுதறி விட்டதே. 310

மதவெறி கொண்ட யானை

காய்ந்து வெம்மையிற் காலன் போலவே
பாய்ந்து பாகரைப் பலசனங்களைத்
தேய்த்துக் காலினேர் தீயுமிழ்வபோல்
ஆய்ந்த கண்களு மருவ ரையென. 311

வெடிப டும்முழக் கிடியெனவிடும்
கொடியு டைமதில் கிடுகி டென்றிடும்
விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப்
படப டென்னவே பயண மானதே. 312

நகர மாந்தர் செயல்

அடிய டிய்யென வாயு தர்செலப்
படுவ டுவ்வெனப் பறைகள் கொட்டிடத்
திடுதி டென்றொலி தெறித்த பேரிகை
நடுந டுங்கினார் நகர மாந்தரே. 313

களிற்றின் வெறிச்செயல்

பிடிசில் பாகரைப் பிளந்தெ றிந்திடக்
குடரின் மாலைகள் கோட்ட ணிந்துடன்
கடவுள் யானையைக் காலிற் றேய்த்திட
இடர்ப டுங்களி றெய்தி யோடுமே. 314

நகரமாந்தர் அரசனுக்கு செய்தி தெரிவித்தல்

நகர மாந்தர்க ணடுங்கிச் சென்றுநற்
சிகரம் போன்முடிச் சீர ரசற்குப்
பகர வாரணம் பலரைக் கொன்றதென்
சிகர மாடநீர் சேர்த்தி ருக்கென்றான். 315

யானை, சோலை முதலிய அனைத்தையும் அழித்தல்

நீல நற்கிரி நெடிய யானையும்
மாலை நற்போது மாய்ந்து பின்னுறக்
காலை நற்போதாற் கனன்று தோன்றின
சோலை நல்வய றுகைத்த ழித்ததே. 316

வழிவ ருவாரை மார்கி ழித்திடும்
எழில்வனம்பொய்கையீட ழித்திடும்
இழிவு றுந்தொழி லீண்டிச் செய்யுநாட்
பொழிலுண் மாதவர் பொருந்தினார்களே. 317

சாரணர் சார்ந்திருந்த பொழில்

வேத நான்கையும் விரித்த ருளுவர்
மாத வர்வினை மாயச் செய்குவார்
ஏதில யாத்திரைக் கெழுந்து வந்தந்தப்
போத விழ்பொழில் புகுந்தி ருந்தனர். 318

சாரணரின் பெருமை

இனமலர் மிசை யேகு வார்களும்
புனல லைமிசைப் போகு வார்களும்
கனிகள் காய்மிசை காணுஞ் சாரணர்
இனிய நூன்மிசை யிசைந்து செல்வரும் 319

மலைத்த லைமிசை வானிற் செல்வரும்
நிலத்தினால்விரனீங்கிச் செல்வரும்
தலத்தினன்முழந் தரத்திற் செல்வரும்
பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும் 320

மலைமு ழஞ்சுண் மன்னினான்முடி
உலகெ லாமவ ரொருங்கி டம்விடும்
அலம தீரவே வறம ழைபெய்யும்
மலமறுந்தர மாமுனிவரும். 321

பக்க நோன்புடைப் பரம மாமுனி
மிக்க பாணிமீ தடிசின் மேதினி
புக்கு முண்டிடப் போது வார்பகல்
தக்க வர்குணஞ் சாற்றரி தென்றே 322

தருமவீரர் அறம் கூறுதல்

தரும வீரரென்றவருட் டலைவன்பால்
வெருவ ருந்துன்ப விலங்கும் வாழ்க்கையை
மருவி யோதவே வந்த யாவரும்
திருமொழியினைத் திறத்திற் கேட்டனர் 323

யானையின் செயல்

வருந்த சைநசை வானிற் புள்ளுகள்
இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப்
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும்
விருந்த வையுண விட்ட தியானையே. 324

யானை சாரணர் மூலம் பழம் பிறப்புணர்தல்

கூற்றெழுங்கரி கொதித்தெ ழுந்ததால்
ஆற்றலம்முனியறவு ரையுற
ஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடை
மாற்ற ரும்பவ மறிந்து ணர்ந்ததே. 325

யானையின் வருத்தம்

குருதியாறிடக் கொன்ற தீவினை
வெருவு துக்கமும் விளங்கினுய்த்திடும்
அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும்
பெருந்து யரெனப் பேது றுக்குமே. 326

யானை மெய்யுணர்வு பெற்று அமைதியுறல்

நெஞ்சு நொந்தெழு நெடுங்க ணீருகும்
அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக்
குஞ்ச ரம்மினிக் கோன கருன்னி
இஞ்சி வாய்தலினெய்தி நின்றதே. 327

களிற்றினைக் காண உதயணன் வருதல்

கடையுடைக் காவலாளர் கதவினைத் திறக்கப் போந்தே
நடுநகர் வீதி சென்று நரபதி மனையைச் சேர்ந்து
நெடுவரை போல நின்ற நீர்மையை வாயி லாளர்
முடிமனற் குரைப்ப முன்னிப் பெருமகனெழுந்து வந்தான். 328

உதயணன் களிற்றின் மீது ஏறல்

திருமுடி மன்னனின்ற திருநிறை யானை கண்டு
மருவிய வமைச்சர் தம்மை மன்னவனினிதினோக்கப்
பெருவிறல் யூகி சொல்வான் பெருந்தவர் பால றத்தை
மருவியே கேட்ட தாகு மன்னநீ யேற வென்றான். 329

யானை உதயணனை முனிவரிடம் கொண்டு செல்லல்

வேந்தனுங் கேட்டு வந்து வெண்கோட்டினடிவைத் தேறிச்
சேந்தனனெருத்தின் மீதிற் றிரும்பிக்கொண்டேகி வேழம்
பூந்தளிர் நிறைந்தி லங்கும் பொழில் வலஞ் சுற்ற வந்து
காந்துநன் மணிப்பூண் மார்பன் கைம்மாவிட் டிழிந்தானன்றே. 330

உதயணன் துறவியிடம் அறங்கேட்டல்

விரைகமழ் பூவு நீரும் வேண்டிய பலமு மேந்திப்
பரிசனஞ் சூழச் சென்று பார்த்திபனினியனாகி
மருமலர் கொண்டு வாழ்த்தி மாதவ ரடியி றைஞ்ச
இருவென விருக்கை காட்ட விருந்துநல் லறத்தைக் கேட்டான். 331

முனிவர் கூறிய அறவுரைகள்

அறத்திற முனிவன் சொல்ல வரசனுங் கேட்க லுற்றான்
பெறற்கரு மருங்க லங்கள் பேணுதற் கரிய வாகும்
திறத்தறி பொருள்க ளாறுந் தேர்ந்துபஞ் சத்தி காயம்
மறித்தறி தத்து வங்கள் வரிசையினேழ தாமே. 332

சீரிய நவப தங்கள் செப்பிய காய மாறும்
வீரியப் பொறிக ளாறும் வேண்டிய வடக்க மாகும்
ஓரிய லறம்பத் தோடு மொருங்குபன்னிரண்டு சிந்தை
ஆரிய ரறிந்து நம்பி யதன்வழி றொமுக்க மாகும். 333

தலைமகார் சிறப்புச் செய்து தன்மைநல் வாய்மை யான
கலையினற் கரைறைக் கண்டு காதனூல் வழியைச் சென்று
மலைவில்சீர் மா தவர்க்கு வண்மையிற் றானஞ் செய்தார்
தொலைவிலாய் பிறவி நீங்கித் தொல்சுகக் கடலுளாழ்வார். 334

தரும வீரர் தரும முறைத்திடப்
பெருமை மன்னனும் பேர்ந்து வனங்கினன்
மருவு வல்வினை மாசினுதிர்த்திடத்
தெரிசனவ்விளக் கஞ்சிறப் பானதே. 335

முனிவர் களிற்றின் வரலாறு கூறல்

காது வேன்மன்னன் களிறு கதமெழற்
கேது வென்னென யெதிவ ரன்சொலும்
தாது பூம்பொழிற் சாலிநன்னாட்டிடை
வேதியர் குழு வாய்விளங் கும்புரம். 336

கடக மென்பதூர் காதற் பிராமணன்
விடப கன்னென்னும் பேரினன் மற்றவன்
இடைமின் றேவியுஞ் சானகி யென்பவள்
கடையில் காமங் கலந்துடன் செல்லுநாள். 337

அமரி யென்னு மணிமுலை வேசிதன்
அமையுங் காமத் தழுங்கி விழுந்தவன்
சமைய வேள்வியுஞ் சார்ந்த வொழுக்கமும்
அமைவி லன்பவ மஞ்சினனில்லையே. 338

காமங் கள்ளுண்டு கைவிட லின்றியே
தாம நற்குழ லாடுணை யாகவும்
யாம மும்பக லும்மறி யாதவன்
ஆமர ணத்தன்பினானைய தாயினன். 339

மன்னனின் செயல்

அந்நிலை யுணர்ந் தடங்கிய தென்றனர்
மன்னன் கேட்டுடன் வந்துநற் பாகர்க்குச்
சொன்ன யானையைத் தூயநீ ராட்டெனும்
அன்னம் பானெய்யினன்புடனூட்டெனும். 340

கவள நாடொறு மூட்டெனுங் காவலன்
பவள மாமெனும் பண்ணவர் தம்மடி
திவளு மாமுடி சேர்த்து வணங்கியே
உவள கத்துன்னி மற்றொன்று கேட்டனன். 341

உதயணன் முனிவரை வினவுதல்

மதக்க ளிற்றின்மேன் மன்னிய வன்பெனக்
குதவக் காரண மென்னெனக் கூறலும்
சிதைவில் காட்சிநற் சீரொழுக் கத்தவர்
மதமின் மாட்சியர் மன்னநீ கேளென்றார். 342

முனிவர் கூற்று

உள்ள நற்றவ ருற்றுரை செய்கின்றார்
கள்ள விழ்பொழிற் கார்முகில் சூடியே
வெள்ளி யம்மலை மேல்வட சேடியில்
வள்ளலார் பொய்கை மத்திம நாட்டினுள். 343

சுகந்தி யூர்க்கிறை சொற்புகழ் மாதவன்
அகந்தெ ளிந்த வயந்தன் மனைவியாம்
செகந் தனிப்புகழ் சீரார்கு லாங்கனை
உகந்து பெற்றன ளோர் புகழ்க் கோமுகன். 344

காமனென்னுமக் காளைகைத் தாய்பெயர்
சோமசுந்தரி யென்னுஞ் சுரிகுழல்
நாம வேன்மகனன்மை விசையனும்
சேம மித்திர ராகச் சிறந்தனர். 345

ஒழியாக் காதலுடன்விளை யாடியே
வழுவில் போகம் வரம்பின்றித் துய்த்தலும்
நழுவில் காட்சியனாமவேற் கோமுகன்
ஒழிய நல்லுயி ரோங்கிநீ யாயினை. 346

விசையின் றன்னுயிர் விட்டந் தணனாய்
வசையில் காம மயங்கிய மோகத்தின்
இசையினாலுயிர் நீங்கியே யிங்குவந்
தசையு ணாக்களி றாயின தாகுமே. 347

மித்திரன்முன்பு வீறுநற் காதலால்
அத்தி மேலுனக் கன்புமுன் டானதால்
வெற்றி வெண்குடை வேந்தேயிவ் வேழத்தின்
ஒத்த வாயுவு மோரெழு நாளென்றார். 348

உதயணன் வருந்திக் கூறுதல்

திருந்து ஞானத்திற்றோர்ந்த முனியுரை
பொருந்தக் கேட்ட புரவலன் றுக்கமாய்
வருந்திச் சென்றந்த வாரணந் தன்னிடைச்
சரிந்த காதலிற் றானுரை செய்கின்றான். 349

உதயணன் செயல்

வஞ்ச கத்தின் வரிந்துங் கயிற்றினால்
வெஞ்செம் முள்ளினை வீரிட வூன்றியும்
மிஞ்சிக் கால்விலங் கிற்சிறை செய்தனன்
குஞ்ச ரம்பொறை கொள்ளுதி யென்னவே. 350

காதல் யானையைக் கையின்மெய் தீண்டியே
போத வெங்கும் புரவலன் றைவரப்
போத கம்மிகப் பொற்பினிறைஞ்சலிற்
காத லிற்றிண் களிற்றியல் கூறெனா. 351

உதயணன் அரண்மனை புகுதல்

யானை யாளர்க் குரைத்தெழின் மன்னவன்
தேனெய் தோய்ந்த திருமொழி மாதவர்
ஆன வர்பத மன்பிற் றொழுதுபோய்ச்
சேனை சூழத் திருமனை சேர்ந்தனன். 352

உதயணனின் வழிபாடு

சீலமும் வளங்களுஞ் செறிந்தவேழத் தன்மையை
காலையவ்வு ழையர் வந்து கண்டுரைப்ப மன்னனும்
ஆலையம் வலமதா யருகனைவ ணங்கிப்பின்
பாலடிசினெய்யருந்திப் பாரரசன் செலுநாள். 353

உதயணனின் செயல்

சல்லகீணை கொண்டுடன் சமாதிவந்தே யெய்தலும்
நல்லவானிற் றேவனாய் நாகமுறை செய்யக்கேட்டுச்
சொல்லரிய வேந்தனுஞ் சூழ்ந்தவனி போகவும்
நல்லலவென் றுணர்ந்தனனேமியனைவா வென்றனன். 354

நரவாகனனிடம் உதயணன் கூறுதல்

அவனும் வந்து தந்தையை யடியிணைவ ணங்கினான்
அவனியுன தாகவா ளென்ன மன்னன் செப்பினன்
தவவனிதை யாளநான் றாங்குதற்குப் போவனே
உவமமிலா ராச்சிய முற்றதெதற் கென்றனன். 355

கோமுகனுக்கு முடிசூட்டுதல்

வத்தவன்னிறைவனாக மன்னுகோ முகனுக்கு
வெற்றிநன்ம ணிமுடியை வீறுடனே சூட்டியே
ஒத்துலக மாள்கவென் றுரைபல வுரைத்தபின்
சித்திரநேர் மாதரைச் செல்வனோக்கிக் கூறுவான். 356

உதயணனன் மனைவிகளிடத்து கூறலும் அவர்களின் பதில் உரையும்

தேவியீர் நீர் வேண்டியதென் றிருமனை துறந்துபின்
மேவுவனற் றவமென்ன மின்னிடைய மாதரும்
போவதுபொ ருளெமக்குப் புரவலனே நின்னுடன்
தாவில்சீர் விழுத்தவழுந் தாங்குதுமென் றிட்டனர். 357

உதயணனுடன் தேவியரும் செல்லல்

உருமண்ணு விடபகன் யூகிநல் வயந்தகன்
பொருவினா லமைச்சரும் பொற்பரசன் மாதரும்
மருவுநன் மலர்ப்பொழில் வண்மைவலங் கொண்டுமிக்
கருண்முனிவர் பாதத்தி லன்புடன் பணிந்தனர். 358

உதயணன் முனிவரிடம் வேண்டுதல்

நாத்தழும்ப மன்னனு நயமுறு மினிமையின்
தோத்திரங்கள் கொண்டுமீத் தொடுத்தொலியின் வாழ்த்தியே
ஏத்தற முரைத்திட வினிமை வைத்துக் கேட்டனன்
ஏத்தரிய நற்றவமு மெங்களுக் களிக்கென்றான். 359

உதயணன் முதலியோரின் தவக்கோலம்

காலமிது காட்சிதலை கண்டுணர்த்தக் கைக்கொண்டு
ஞாலநிகழ் ஞானமு நன்குமிகவே யுணர்த்திச்
சீலமாதி யாயொழுக்கஞ் சீருடனளித்துப்பின்
கோலமான குஞ்சிமுதல் வாங்கித்தவங் கொண்டனர். 360

அனைவரின் தவநிலை

அறுவகைய காயங்களை யருண்மிக்குற் றோம்பியும்
பொறிகளை மனத்தடக்கிப் புண்ணியமா நோன்புகள்
அறிகுறி யநசன மாற்றுதற் கரிதென
மறுவறு தியானமு மதியகந் தெளிந்தவே. 361

புறத்தினும் மகத்தினும் போகத் தொடர்ப் பாடுவிட்
டறத்திடை யருளினா லாயிருரை யோம்பியும்
திறத்துடன் சமிதியுஞ் சிந்தையின்னடக்கமும்
திறத்திறத் துணர்ந்துபின் றியானமுற்றினார்களே. 362

ஒருவகை யெழின்மன மிருவகைத் துறவுடன்
மருவுகுத்தி மூன்றுமே மாற்றிநான்கு சன்னையும்
பொருவிலைம் புலம்மடக்கிப் பொருந்தியவா வச்சமூ
விருவகைச் செவிலியு மெழுவரையும் வைத்தனர். 363

சுத்திமீக வெட்டினோடுஞ் சூழ்ந்தயோகு வொன்பதாம்
பத்துவகை யூற்றடைத்துப் பயின்றவங்கம் பத்தொன்றும்
சித்தம்பனி ரெண்டுசீர்க் கிரியைபதின் மூன்றுடன்
ஒத்தபங்க மீரேழு மொருங்குடன் பயின்றனர். 364

உதயணன் கேவல ஞானம் எய்துதல்

உதயண முனிவனு மோங்குமாவரைதனில்
இதயமினி தாகவே யெழில்பெறநல் யோகமாய்
இதமுறு தியானத்தினிருவினை யெரித்துடன்
பதமினிது சித்தியெய்திப் பரமசுகத் திருந்தனன். 365

தேவியரும் அமைச்சரும் நோன்பிருந்து தேவராதல்

அமைச்சரா மநகரு மானவன்ன மாதரும்
சமைத்தநோன்பு நோற்றுயர்ந்து சமாதிறன் மரணத்தின்
இமைத்தலில் லமரரா நிறைந்தசோத மாதியாய்
அமைத்தவச் சுதம்மள வானபாடியின்புற்றார். 366

தேவியரும் அமைச்சரும் தேவலோகத்தில் இன்புற்றிருத்தல்

பொற்புடைநன் மாதரைப் புணர்ந்துமேனி தீண்டலும்
அற்புதமாய்க் காண்டலு மானவின்சொற் கேட்டலும்
கற்புடைமனத்திலெண்ணிக் காணற்கரி தாகவே
விற்பனநன் மாதவர் வேண்டுசுகந் துய்த்தனர். 367

காண்டங்களின் செய்யுட் தொகை

உஞ்சை நற் காண்டந் தன்னி லுயர்கவி நூற்றீரெட்டு
விஞ்சவே யிலாவா ணத்தின் வீறுயர் முப்பதாகும்
எஞ்சலின் மகத காண்ட மெழிலுடை முப்பத்தஞ்சாம்
அஞ்சுடனைம்பத் தொன்றா மரியவத் தவத்திலன்றே. 368

[நூற்றீரெட்டு - நூற்றுப்பதினாறு. கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பயன் கூறும் செய்யுள், உள்ளிட்ட நான்கு செய்யுள் நீங்கலாக உஞ்சைக் காண்ட செய்யுட்தொகை]

நறுமலர் மாலை மார்பனரவாக காண்டந் தன்னில்
அறுபது மொன்று மாகு மாகிய துறவுக் காண்டம்
அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந்
திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகுமன்றே. 369



உதயண குமார காவியம் : 1 2 3 4