யசோதர காவியம்

... தொடர்ச்சி - 3 ...

தூர பாரஞ் சுமந்த துயரது
தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள்
ஆர மூழ்குவ தம்மயி டங்கரை
சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே. 201

வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால்
அரைச வன்ன மெனும்பெய ராகும்நம்
அரைச வாகன மாயது போயதென்
றுரைசெய் தாரர சற்குழை யாளரே. 202

ஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த’ தென்று அரசனுக்கு அறிவித்தன ரென்க

அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன்
வணிகர் தம்பொருள் வாரி மயிடமும்
பிணிசெய் தெம்முறை வம்மெனப் பேசினான்
கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர். 203

அரச னாணை யறிந்தரு ளில்லவர்
சரண நான்கினை யுந்தளை செய்தனர்
கரண மானவை யாவுங் களைந்தனர்
அரண மாமற னில்லது தன்னையே. 204

கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந்
தார வூட்டி யதன்வயி றீர்ந்தவர்
நெய்பெய் சலாகை கடைந்தபின்
கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர். 205

ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி
மேய மேதித் தசைமிக வெந்ததை
வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள்
மாயை செய்தன ளென்றனர் மற்றையார். 206

இன்னு மாசை யெனக்குள திவ்வழித்
துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது
தன்னி னாய குறங்குக டித்தது
தின்னி னாசை சிதைந்திட மென்றனள். 207

இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்

அனங்க னான பெருந்தகை யண்ணலைச்
சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில்
கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள்
மனங்கொ ளாவொரு மானுட நாயினை. 208

குட்ட மாகிய மேனிக் குலமிலா
அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின்
நட்ட மாகிய நல்லெழின் மேனியள்
குட்ட நோயிற் குளித்திடு கின்றனள். 209

அழுகி நைந்துட னஃகு மவயவத்
தொழுகு புண்ணி னுருவின ளாயினள்
முழுகு சீயின் முடைப்பொலி மேனியள்
தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள். 210

உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள்
இம்மைச் செய்த வினைப்பய னேயிவை
எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை
பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல. 211

நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல்
தீய வல்வினை தேடுத லேகொலோ
மேய மேதிப் பிணத்தை மிசைந்தனள்
மாய மற்றிது தன்னையும் வவ்வுமே. 212

பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்

என்று தன்புறத் திப்படிக் கூறினர்
சென்று சேடியர் பற்றிய வத்தகர்
ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும்
சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ. 213

தேவி யென்னை முனிந்தனை சென்றொரு
பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ
பாவி நின்னுரு வின்னண மாயது
பாவி யென்னையும் பற்றினை யின்னணம். 214

நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை
எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை
வஞ்ச னைமட வாய்மயி டம்மது
துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ. 215

என்று கண்ட மொறுமொறுத் தென்செயும்
நின்று நெஞ்சம துள்சுட நின்றது
அன்று தேவி யலைப்ப வழிந்துயிர்
சென்ற தம்மயி டத்தொடு செல்கதி. 216

எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்

மற்றம் மாநகரத்து மருங்கினில்
சிற்றில் பல்சனஞ் சேர்புறச் சேரியின்
உற்று வாரணப் புள்ளுரு வாயின
வெற்றி வேலவன் கண்டு விரும்பினான். 217

கண்டு மன்னவன் கண்களி கொண்டனன்
சண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக்
கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன்
மண்டு போர்வினை வல்லவு மாயவே. 218

தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சவியன்ன
மருள மாசனம் வளர்விழி சுடர்சிகை மணிமுடி தனையொத்த
வொளிரு பொன்னுகிர்ச் சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ
தளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே. 219

நான்காஞ் சருக்கம்

செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங்
கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச
செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச
வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ. 220

இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன்
வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு
வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டர்
இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான். 221

பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொற்
சூடக மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி
நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார்
பாடலி னமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான். 222

வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன்
தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன்போகி
வளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி
களைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான். 223

அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத்
தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த முன்னர்த்
தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர்
மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான். 224

வடிலநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி
அடிகணீ ரடங்கி மெய்யி ருள்புரி மனத்தி ராகி
நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான்
முடிபொருடானு மென்கொல் மொழிந்தருள் செய்கவென்றான். 225

ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச்
சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலுமென்றே
பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே
கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே. 226

அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி
நினைந்தவெண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச்
சினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி
அனந்தகா லத்து நிற்ற லப்பொருட்டன்மை யென்றான். 227

கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்க டம்மை
இருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே
ஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை
பெரியதோர் சோரன் றன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும். 228

மற்றொரு கள்வன் றன்னை வதைசெய்யு முன்னும் பின்னும்
இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன்
உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்தும்
மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே. 229

முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.

பையவே காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று
வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விற்கை யூன்ற
ஐயென வங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற
திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணரத்ல் வேண்டும். 230

இதுவும் அது

சிக்கென வாயு வேற்றித் தித்திவாய் செம்மித் தூக்கிப்
புக்கவவ் வாயு நீங்கிப் போயபின் நிறைசெய் தாலும்
ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளிகைக் கீழ்த்
திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும். 231

இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம்
வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி
மையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர்
ஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும். 232

ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர்
ஏகசித் தத்த ராய விறைவர்கட் கெளிது போலும்
போகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க்
காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள வென்றான். 233

அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும்
பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு வாருக்
குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும்
முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமையென்றான். 234

உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும்
அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தெளிவு காட்சி
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்
இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான். 235

பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண்
தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத லொழுக்க மென்றான். 236

கொலையின் தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும்
மலைதலில் வாய்மை யார்க்கு வாய்மொழி மதிப்பை யாக்கும்
விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி
உலைதலில் பெருமை திட்ப முறுவலி யொழிந்த தீயும். 237

தெருளுடை மனத்திற் சென்ற தௌ¤ந்துணர் வாய செல்வம்
பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள்.
ஒருவிய பயனு மஃதே யொளியினோ டழகு வென்றி
பொருள்மிகு குலனோ டின்பம் யுணர்தலு மாகு மாதோ. 238

சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம்
உலைதலில் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்கவென்னக்
கொலையி¢னி லொருவலின்றிக் கொண்டனெனருளிற்றெல்லாம்
அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிகளென்றான். 239

முனிவரர் மீண்டும் கூறல்

ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகிக கண்ணால்
ஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந துய்ய நிற்றல்
வாரியின் வதங்கட் கெல்லா மரசமா வதமி5 தற்கே
சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான். 240

இறந்தா ளென்றுமுள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க்
கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய்
பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ்
சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ. 241

நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ வென்றிக்
கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச்
சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய்
அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம். 242

இன்னுமீ தைய கேட்க இசோமதி தந்தை யாய
மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்
கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்
பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ. 243

வீங்கிய வினைக டம்மால் வெருவரத் தக்க துன்பந்
தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார்
ஆங்கவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார்
ஈங்குநின் அயலக் கூட்டி லிருந்த கோழிகளு மென்றான். 244

உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம்
மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால்
உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார்
செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான். 245

மற்றவ னினைய கூற மனநனி கலங்கி வாடிச்
செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தெளிவு காதல்
பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு
பெற்றன னடிக ணுமமாற் பெரும்பய னென்று போந்தான். 246

கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிக டம்மைக்
கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட்
டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட
பாட்டருந் தன்மைக் தன்றே பான்மையின் பரிசு தானும். 247

பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர்
மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் மறுகு சென்றே
அறவிய லடிக டம்மா லறவமிர் தாரப் பெற்றாம்
பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்ற வன்றே. 248

அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக்
குறைவில வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச்
செறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன்
முறுவல்கொண் முகத்து நல்லார்முகத்தொருசிலைவளைத்தான். 249

சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும்
நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச்
சில்லறி வினக ளேனுந் திருவறப் பெருமை யாலே
வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே. 250

விரைசெறி பொழிலி னுள்ளால வேனிலின் விளைந்த வெல்லாம்
அரைசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி
முரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க் குழலி னாரோ
டுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே. 251

இன்னண மரசச் செல்வத் திசோமதி செல்லு நாளுள்
பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங்
இன்னிய லிரட்டையாகு மிளையரை யீன்று சின்னாள்
பின்னுமோர் சிறுவன் றன்னைப் பெற்றனள் பேதை தானே. 252

அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன் னுருசி தங்கை
அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம்
பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார்
இன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும். 253

பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும்
வரிசையிற்கரிமேற்கொண்டும் வாட்டொழில்பயின்று மன்னர்க்
குரியவத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும்
அரசிளங் குமரன் செல்நா ளடுத்தது கூற லுற்றேன். 254

நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ
டேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப
நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல்
வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான். 255

இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு¢ மியற்கைச்
சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும்
பதத்தயன் மதக்களி றெனப்படிம நிற்பக்
கதத்துட னிழித்தடு கடத்திடை மடுத்தான். 256

கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற்
கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும்
பாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான்
மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே. 257

கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய்
ஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி
செந்தசைகள் சென்றுகவர் கென்றுடன் விடுத்தான்
நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே. 258

அறப்பெருமை செய்தரு டவப்பெருமை தன்னால்
உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக்
கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ
மறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான். 259

இதுமுதல் நான்கு கவிகளின் வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்

காளைதகு கல்யாண மித்திர னெனும்பேர்
ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய
கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன்
வாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான். 260

வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர்
அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண்
சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான்
மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய். 261

ஆகவெனி னாகுமிவ ரழிகவெனி னழிப
மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின்
ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும்
மாகமழை வண்கைமத யானைமணி முடியோய். 262

அடைந்தவர்கள் காதலினொ டமரரச ராவர்
கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர்
அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள்
கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே. 263

இந்திரர்கள் வந்தடிபணிந்தருளு கெனினும்
நிந்தையுடன் வெந்துயர்க ணின்னனர்கள் செயினும்
தந்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார்
அந்தர மிகந்தருள் தவத்தரசர் தாரோய். 264

இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென்
றவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்குஞ்
செவ்விமையி னின்றவர்தி ருந்தடி பணிந்துன்
வெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல்வேலோய். 265

என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே
கன்றுசின முங்கர தலப்படையு மாற்றி
இன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன்
கன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான். 266

இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள்
கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப்
பொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட
சி¢ங்கமிவ னென்றுதௌ¤ தேர்ந்துணரின் வேந்தே. 267

இதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு முனிவர்பெருமையைத் தௌ¤விக்கின்றான்

மேகமென மின்னினொடு வில்லுமென வல்லே
போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே
ஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே
போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான். 268

நாடுநக ரங்களும் நலங்கொள்மட வாரும்
ஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள்
சூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம்
ஆடைமுத லாயினவொ டகல்கவென விட்டான். 269

வானவரும் மண்ணின்மிசை யரசர்களும் மலைமேல்
தானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான்
ஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுள்ளிக்
கானமலை நாடுகள்க லந்துதிரி கின்றான். 270

யானுமல தெனதுமல திதமுமல தென்று
மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய்
ஏனைவினை மாசுதன துருவினிறு வாதே
ஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான். 271

ஈடின்முனி யோகினது பெருமையினி லிறைவ
காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக்
கூடுவதா ழிந்ததுகொ லின்றுகொலை வேலோய்
நாடுவதென் ஞமலியிவை நணுகலகள் காணாய். 272

என்றவ னுளங்கொள வியம்பின னியம்பச்
சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா
இன்றெனது பிழைதணிய வென்றலை யரிந்து
நின்றமுனி சரணிலிட லென்றுநினை கின்றான். 273

இன்னதுநி னைந்ததிவ னென்றுகை யெடுத்தே
மன்னநின் மனத்தது விடுத்திடு மனத்தில்
தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக் வானால்
நின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம். 274

முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப்
பின்னுமிகை பிறவுமுரை பேசுதிற நினைவுந்
துன்னுயிரின் முன்னிது துணிந்தபிழை தூரப்
பின்னைநினை கின்றவிது பிழைபெரிது மென்றான். 275

மன்னவன் மனத்ததை விரித்தருள் வளர்க்குஞ்
சொன்னவில் சுதத்தமுனி தொன்மல ரடிக்கட்
சென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப்
பன்னியரு ளிறைவவெமர் பவமுழுது மென்றான். 276

ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை
வாங்கியவ னுணரும்வகை வைத்தருள் செய்கின்றான்
ஈங்குமு னியற்றிய தவத்தினி லசோகன்
ஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான். 277

சுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்

அருமணியி னொளிதிகழு மமரனவ னாகிப்
பிரமனுல கதனுண்மிகை பெறுகடல்கள் பத்துந்
திருமணிய துணைமுலைய தெய்வமட வாரோடு
அருமையில் னகமகிழ்வின் மருவுமன் மாதோ. 278

வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை நஞ்சில்
துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி
அஞ்சின் மொழி யமிர்தமதி யருநரகின் வீழ்ந்தாள்
நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய். 279

இருளினிரு ளிருள்புகையொ டளறுமணல் பரலின்
மருள்செயுரு வினபொருளின் வருபெயரு மவையே
வெருள்செய்வினை தருதுயரம் விளையுநில மிசையத்
தெருளினெழு வகைநரக குழிகளிவை தாரோய். 280

மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு தட்பம்
நீரெனவு ருக்கிடுநி லப்புரைய வைந்தாம்
ஓரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தா
ளாருமில ளறனுமில ளமிர்தமதி யவளே. 281

ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழு தருநரக ரோடிச்
சூழ்ந்துதுகை யாவெரியு ளிட்டனர்கள் சுட்டார்
போழ்ந்தனர்கள் புண்பெருக வன்றறிபு டைத்தார்
மூழ்ந்தவினை முனியுமெனின் முனியலரு முளரோ. 282

செந்தழலின் வெந்தசைக டின்றனைமு னென்றே
கொந்தழலின் வெந்¢துகொது கொதுகென வுருகுஞ்
செந்தழலி னிந்திதர்கள் செம்புகள் திணிப்ப
வெந்தழலி னைந்துருகி விண்டொழுகு முகனே. 283

கருகருக ரிந்தன னுருவி னொரு பாவை
பெரு கெரியி னிட்டுருகு மிதுவுமினி தேயென்
றருகணைய நுந்துதலு மலறியது தழுவி
பொருபொருபொ ரிந்துபொடி யாமுடல மெல்லாம். 284

நாவழுகி வீழமுது நஞ்சுண மடுத்தார
ஆவலறி யதுவுருகி யலமரினு மையோ
சாவவரி திவணரசி தகவில்வினை தருநோ
யாவும்விளை நிலமதனி னினியவுள வாமோ. 285

முன்னுநுமர் தந்தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்
கின்னுமினி துன்னவய வங்கடின லென்றே
தன்னவய வம்பலத டிந்துழல வைத்துத்
தின்னவென நொந்தவைக டின்னுமிகைத் திறலோய். 286

திலப்பொறியி னிட்டனர்தி ரிப்புவநெ ருப்பின்
உலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக்
கொலைக்கழுவி னிட்டனர் குலைப்பவுமு ருக்கும்
உலைப்பரு வருத்தம துரைப்பரிது கண்டாய். 287

ஒருபதினோ டொருபதினை யுந்தியத னும்பர்
இருபதினொ டைந்துவி லுயர்ந்தபுகை யென்றும
பொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும்
ஒருபதினொ டெழுகடல்க ளளவு மொளித் தாரோய். 288

தொல்லைவினை நின்று சுடுகின்றநர கத்துள்
அல்லலிவை யல்லனவு மமிழ்தமதி யுறுவ
வெல்லையில விதுவிதென வெண்ணியெரு நாவிற்
சொல்லவுலவா வொழிக சுடருநெடு முடியோய். 289

எண்ணமி லிசோதரனொ டன்னையிவர் முன்னாள்
கண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே
நண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த
வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய். 290

மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின மீனாய்
பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி
மன்னுசிறை வாரணம தாகிவத மருவி
மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான். 291

சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர்
வந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி
முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி
வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள். 292

இதுநுமர்கள் பவம்வினை கள் விளையுமியல் பிதுவென்
றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா
விதுவிதுவி திர்த்தக நெகிழ்ந்துமிகை சோரா
மதுமலர்கொள் மணிமுடிய மன்னவன் மருண்டான். 293

ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந்
தாங்கலர்கள் சென்றுதவ வரசனரு ளாலே
நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார்
ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார். 294

தந்தையும் தந்தை தாயு மாகிய தழுவு காதல்
மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி
சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு
கொந்தெரியழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்ன னானான். 295

எந்தையு மெந்தை தாயு மெய்திய பிறவி தோறும
வெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ
அந்தமி லுயிர்கள் மாய வலைபல செய்து நாளும்
வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய்கேனோ. 296

அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே
பொருளோடு போக மேவிப் பொறியிலே னென்செய் கேனோ
அருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந்
தெருளல னினைந்த தீமைச் சிறியனே னென்செய் கேனோ. 297

மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதேல்
ஆவினி யளிய னேது மஞ்சிலே னவதி யென்கொல்
காவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ
மாவல வஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான். 298

அறிவில ராய காலத் தமைவில செய்த வெல்லாம்
நெறியினி லறிவ தூற நின்றவை விலகி நிற்பர்
அறியலர் வினைக ளாலே யருநவை படுநர்க் கைய
சிறியநல் வதங்கள் செய்த திருவினை நுமர்கட் காணாய். 299

அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய நல்கிப்
பொருள்கொலை களவுகாமம் பொய்யொடு புறக்கணித்திட்
டிருள்புரி வினைகள்சேரா விறைவன தறத்தையெய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால். 300

என்றலு மடிகள் பாதத் தெழின்முடி மலர்கள் சிந்தக்
கன்றிய வினைக டீரக் கருணையி னுருகி நெஞ்சிற்
சென்றன னறிவு காட்சி திருவறத் தொருவ னானான்
வென்றவர் சரண டைந்ததார் விளைப்பதுவென்றியன்றோ. 301

வெருள்செயும் வினைக டம்மை வெருவிய மனத்த னாகி
மருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை
அருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத்
தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க வென்றான். 302

ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகள் றன்னை
ஆருயிர்க் கரண மாய வடிகளோ டைய நீயும்
நேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப்
பாரியற்பொறையை நெஞ்சிற் பரிந்தனன்மன்னனானான். 303

மணிமுடி மகனுக் கீந்து மன்னவன் றன்னோ டேனை
யணிமுடி யரசர் தாமு மவனுயிர்த் துணைவ னாய
வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித்
துணிவனர் துறந்து மூவார் தொழுதெழு முருவங்கொண்டார். 304

தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்ட தல்லால
ஓதநீர் வட்டந்தன்னை யொருதுகள் போல வுள்ளத்
தாதரம் பண்ணல் செல்லா வபயனு மரசு தன்னைக்
காதலன் குமரன் றம்பி கைப்படுத் தனன்வி டுத்தான். 305

மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய
பேதையும் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர்
ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சி னஞ்சாய்
மாதவன் சரண மாக வனமது துன்னி னாரே. 306

வினைகளும் வினைக டம்மால் விளைபயன் வெறுப்பு மேவித்
தனசர ணணையு ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து
வினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே
சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார். 307

ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்மின
சாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா சய்யமத்தின்
ஏற்றவந் நிலைமை தன்னை யிதுபொழு துய்மி னென்றான்
ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார். 308

அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப்
பெருங்குழு வொருங்குசூழப் பெறற்கருங்குணங்கடம்மாற்
கருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னிந்நாள்
அருங்கடி கமழுஞ் சோலை யதனுள்வந் தினிதி ருந்தான். 309

அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோ மதிக்குத
தனயர்க டம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின்
எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார்
அனையவ ராக வெம்மை யறிகமற் றரச வென்றான். 310

இணையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின்
இனையதுவினைகள்பின்னா ளிடர்செய்த முறைமைதானும்
இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின்
இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான். 311

செய்த வெந்தியக் கொலையொரு துகள்தனில் சென்றுறு பவந்
எய்து மாயிடிற் றீர்ந்திடாக் கொலையிஃ திருநில முடிவேந்தே
மையல் கொண்டிவண்மன்னுயிரெனைப்பலவதைசெயவருபாவ
தெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுளைந் திரங்குகின். 312

ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி லருவினை நரகத்தாழ்ந்
தெய்தும்வெந்துயரெனைப்பலகோடி கோடியினுறுபழிதீர்ந்தேன்
பொய்ய தன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக
மையின் மாதவத் தொருகடலாடுதல் வலித்தன னிதுவென்றான். 313

இன்சொல் மாதரு மிளங்கிளைச் சுற்றமு
     மெரித்திர ளெனவஞ்சிப்
பொன்செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந்
     தற்கிது பொறையென்றே
மின்செய் தாரவன் வெறுத்தன னரசியல்
     விடுத்தவ ருடன்போகி
முன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரற்
     றெழுதுநன் முனியானான். 314

வெய்ய தீவினை வெருவுறு மாதவம
     விதியினின் றுதிகொண்டான்
ஐய தாமதி சயமுற வடங்கின
     னுடம்பினை யிவணிட்டே
மையல் வானிடை யனசனர் குழாங்களுள்
     வானவன் றானாகித்
தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம்
     தொகுதியின் மகிழ்வுற்றான். 315

அண்ண லாகிய வபயனுந் தங்கையு
     மாயுக மிகையின்மை
நண்ணி நாயக முனிவனி னறிந்தனர
     நவின்றநற் குண மெல்லாம்
கண்ணி னார்தம துருவின
     துடலங்கள் கழிந்தன கழி போகத்
தெண்ணில் வானுல கத்திரண் டாவதி
     னிமையவர் தாமானார் 316

அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரஞ்
செம்பொன்மாமணி தோள்வளைகடகங்கள் செறிகழன்முதலாக்
நம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த
வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே. 317

வந்துவானவர்திசைதொறும்வணங்கினர் வாழ்த்தினர்மலர்மாரி
மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மருங்கெங்கும்
அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம்
வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந 318

மாசின் மாமணி மேனியின் வாசமொ ரோசனை மணநாறத்
தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னனையார்கள்
ஆசி லெண்குண னவதியொடமைந்தனரலைகடலளவெல்லாம
ஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின் 319

வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது
தருவது சுரகதி தந்து பின்னரும்
பொருவறு சிவகதி புணர நிற்பது
திருவற நெறியது செவ்வி காண்மினே. 320

யசோதர காவியம் முற்றிற்று.



யசோதர காவியம் : 1 2 3