உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதல் பாகம் 1. புஷ்பப் பல்லக்கு அன்றிரவு புஷ்பப் பல்லக்கு. சிதம்பரத்தில் இருந்து கொண்டு வைத்திய நாதனின் மேளக் கச்சேரி கேட்காமலும் இருக்கலாமோ என்று சிவராமன் சாப்பிட்டானவுடன் எட்டரை மணிக்கே ஸ்வாமியைக் கிளப்பி அழைத்து வரக் கோயிலுக்குப் போய்விட்டான். “இந்தப் பனீலே...!” என்று ஒரு பெரிய ஆச்சரியக்குறியுடன் மாமனார்ப் பிராம்மணன் நைசாகச் சொல்லிப் பார்த்தார். பலனில்லை. முந்திய இரவு நகர கதா காலக்ஷேபக் கமிட்டி அங்கத்தினராகக் கண்விழித்த சிரமம் வேறு. தவிரவும் கோர்ட்டிலே அன்று வழக்கத்துக்கு விரோதமாகக் கொஞ்சம் அதிக வேலையும் இருந்து விட்டது. பல்லக்கு, தம் வீட்டுக்கு எதிரே வரும் வரையில் விழித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வக்கீலுக்கு உத்தேசந்தான். எனினும் அவரால் முடியவில்லை. நாற்காலியிலிருந்து ஈஸிசேருக்கும், ஈஸிசேரிலிருந்து கட்டிலுக்குமாக நகர்ந்து சீக்கிரமே படுத்து, மணி பதினொன்று அடிக்கும் முன்னரே அவர் தூங்கிவிட்டார். ஆனால் தூங்குவதற்கு முன், ஜாக்கிரதையாகத் தம் மனைவியை, “ஏய்!, ஏய்! உன்னைத் தானே!” என்று இரண்டு தரம் கூப்பிட்டு, “பல்லக்கு நம்மாத்துக்கு எதிரே வரச்சே என்னையும் எழுப்பு” என்று சொல்லிவைத்தார். புஷ்பப் பல்லக்கு, கிளம்பும்போதே மணி பதினொன்றுக்குமேல் ஆகிவிட்டது. வானிலே நக்ஷத்திரங்கள் கூடக் கண்ணில் படாமல் மேகத்திரை படர்ந்து மறைத்துக் கொண்டிருந்தது. ‘மழை வந்துவிட்டால் என்ன பண்ணுவது?’ என்கிற பயம் ஒரு புறம் இருந்தாலும் பல்லக்கு மிகவும் மெதுவாகத்தான் நகர்ந்தது. தவிரவும் வைத்தியநாதனுக்கு அது தன்னுடைய கடைசிப் புஷ்பப் பல்லக்குக் கச்சேரி என்று தெரியும் போலும்! என்றும் இல்லாதபடி, அவனையும் மீறியே அதி அற்புதமாக அழகாக வாசித்தான். ஒரு கலைஞனுக்கு ஏற்ற ரசிகர்கள் அகப்பட்டுவிட்டால், அவன் தன் கலையின் கோடிகளை எட்டிப்பிடித்துக் காட்டாமல் விட்டுவிடுவானா? தன்னைச் சுற்றி நின்ற சிலர் முகத்திலே ரஸனை தாண்டவமாடுவதைக் கண்டுவிட்டான் வைத்தியநாதன். அவ்வளவுதானே அவனுக்கு வேண்டியது! மேளகாரனும், ரசிகர் குழாமும், ஜனக்கூட்டமும் நகர்ந்து வழிவிட்டால்தானே ஸ்வாமியும் பல்லக்கும் நகரலாம்? புஷ்பப் பல்லக்கு மேல வீதி திரும்பும்போது மணி இரண்டரை ஆகிவிட்டது. வானத்து மேகத்திரை சிற்சில சமயங்கள் உறுமுவதும், சரிகை வேலை செய்து காட்டுவதுமாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மழை பெய்வதானால் கூட மறுநாள் தான் பெய்யும்போல் இருந்தது. தவிரவும் ஜனங்களுக்கு, கானவர்ஷத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர்களுக்கு, மழை என்கிற ஞாபகமே வரவில்லை. மழை பெய்திருந்தால் கூடத் தலை நனைந்த பிறகுதான் சுயப்பிரக்ஞை வந்திருக்கும் அவர்களுக்கு. இப்படியாகப் புஷ்பப் பல்லக்கு மேல வீதிக் கோடியில் உள்ள தபாலாபீஸை நெருங்கிய போது மணி மூன்றரை ஆகிவிட்டது. தபாலாபீஸுக்கு அடுத்தாற்போலத்தான் சிவராமனின் மாமனார் வீடு. வீட்டில் எல்லோரும் நித்திரையில் ஆழ்ந்திருந்தார்கள். சிவராமனின் மாமியார் மட்டும் அடிக்கடி விழித்துக் கொள்வது, பல்லக்கு வருகிறதா, மேளச் சப்தம் கேட்கிறதா என்று கவனிப்பதுமாக இருந்தாள். பல்லக்கு மேலச் சந்நிதியைத் தாண்டுவதற்குள் ராதை அம்மாமி, வீட்டில் எல்லோரையும் எழுப்பி வாசலில் கொண்டு வந்து நிறுத்திவிட்டாள். அவள் பெண் ராஜமும் தூங்கிவழிந்த கண்களுடன் பல்லக்கின் வருகையையும், தன் கணவன் சிவராமனின் வருகையையும் எதிர்நோக்கி வாசல் குறட்டில் நின்று கொண்டிருந்தாள். மூத்த பிள்ளை குஞ்சு போய் வக்கீல் நாராயணஸ்வாமி ஐயரைத் தட்டி எழுப்பினான். நாலு குரலுக்கு அவர் எழுந்திருக்கவில்லை. ஐந்தாவது கூக்குரலுக்கு விழித்துக் கொண்டவர், “என்னடா அது? அதுக்குள்ளே? பல்லக்கு இன்னும் கடைத்தெருவைக் கூடத் தாண்டவில்லை. அதுக்குள்ளே என்னடா?” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் இழுத்துப் போர்த்துக்கொண்டு புரண்டு படுத்துத் தூங்க ஆரம்பித்துவிட்டார். வடக்கு வீதித் திருப்பத்தில் சிவராமன் நாகஸ்வரம் கேட்டுக் கொண்டு நின்றான். புஷ்பப் பல்லக்கு நாராயண ஸ்வாமி ஐயர் வீட்டு வாசலில் நின்றது. வெளிச்சமும் சப்தமும் கடைசியில் நாராயணஸ்வாமி ஐயரின் தூக்கத்தையும் கலைத்தன. அவர் தாமாகவே எழுந்து வந்து வாசல் கீழ்ப் படியில் நின்றுகொண்டு ஸ்வாமியைப் பார்த்து இரண்டு தரம் தாடையில் போட்டுக்கொண்டார். ஆறு மாதத்தில் வக்கீலாகத் தாம் செய்த பாபங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் அது என்று எண்ணுபவர்போலத் தாடையில் சற்று ஓங்கியே போட்டுக் கொண்டார். அடுத்த விநாடியே அவர் சிந்தனை ஸ்வாமியிடமிருந்து விலகிவிட்டது. “அப்பாடி, என்ன பனி!” என்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்துவிட்டு, “மழை வேறே பெய்யும்போல் இருக்கே” என்றார். அவர், ‘என்ன பனி!’ என்றது அவருடைய மனைவி காதில், ‘என்ன மணி?’ என்று விழுந்ததுபோலும். “மணி மூன்றரை” என்று பதில் அளித்தாள் ராதை அம்மாமி. “இந்த வருஷத்தைவிடப் போன வருஷந்தான் பல்லக்கு அலங்காரம் ஜோரா யிருந்தது” என்றாள். “புஷ்பப் பல்லக்குத்தான் எவ்வளவு அழகாயிருக்கு!” என்றாள் ராஜம். சிறிது நேரம் கழித்து அவள் மீண்டும் சொன்னாள்: “ஆனால், புஷ்பப் பல்லக்குப் பார்க்கிறதானால் தஞ்சாவூரிலே பார்க்கணும். எத்தனை பல்லக்கு வரும்! ராத்திரி பூரா, பகல் பூரா வந்துகொண்டே இருக்குமே! விதவிதமா அழகழகா ஜோடிச்சு வரும்.” மனசில் லேசான பொறாமையுடன் ஸ்வாமிக்குப் போட்டிருந்த நகைகளைக் கணக்குப் பார்ப்பதில் ஈடுபட்டாள் ராஜம். அந்தக் கணக்கு ஒரு வழியாக எடுத்து முடிந்ததும், வடக்கு வீதித் திருப்பத்திலே மேளக்கச்சேரி கேட்டுக்கொண்டு நின்ற கூட்டத்தில் தன் கணவனின் உருவம் தெரிகிறதா என்று கவனித்தாள். ஆனால், காஸ் லைட்டுகளின் வெளிச்சமும், ஜனக்கூட்டமும் ஒரு நிலையாக நிற்காமல், ஏற்கெனவே தூக்கத்தால் கலங்கியிருந்த அவள் கண்களைத் திகைக்கச் செய்தன. குஞ்சு வாசல் குறட்டில் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து சங்கிலியில் சாய்ந்தபடியே தூங்கிப் போய்விட்டான். அவன் தம்பி துரைசாமி, பல்லக்கு வீட்டெதிரே வந்து சேருவதற்குக் கால்மணி நேரம் முன்னதாகவே உள்ளே போய்ப் படுக்கையில் சௌக்கியமாகப் படுத்துத் தூங்கி விட்டான். பட்டு எழுந்து வரவே இல்லை. மறுநாள் காலையில் புஷ்பப் பல்லக்கைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பார்த்தவர்களைத் தீர விசாரித்து, அவள் அறிந்து கொண்டு விடுவாள். கடைசிப் பையன் வெங்கிட்டுதான் அம்மா காலைச் சுற்றிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதில் ஈடுபட்டிருந்தான். உரக்க ஒரு கொட்டாவி விட்டார் நாராயணஸ்வாமி ஐயர். “மணியாறதே. என்ன, இன்னும் மாப்பிள்ளை வரவில்லையா?” என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கையில், “இதோ வந்துவிட்டேனே!” என்று கணீரென்று பதில் சொல்லிக்கொண்டே, வாசற்படி ஏறி உள்ளே வந்தார் மாப்பிள்ளைவாள். ராஜமும், அவள் தாயாரும் வழிவிட்டு மரியாதையாக ஒதுங்கி நின்றார்கள். மாமனார், முன்னால் போய், காமிரா அறை விளக்கைப் போட்டார். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் நாலடிக்க இன்னும் இருபது நிமிஷம் இருந்தது என்று காட்டிற்று. “அப்பாடி, மணி நாலடிக்கப் போகிறதே! இப்படி ராப்பூரா பனீலே நின்னுண்டு கண் விழிச்சா உடம்புக்கு எப்படி ஒத்துக்கும்?” என்றார் நாராயணஸ்வாமி ஐயர். “பனி என்ன பண்ணும்? சில பேருக்குத்தான் உடம்புக்கு ஒத்துக்காது. எனக்குப் பழக்கந்தான் பனியெல்லாம். தவிரவும் மனிதன் உடம்புக்குப் பனி மிகவும் அவசியம். இதை யாராவது ஒரு மேல்நாட்டு டாக்டர் சொல்லிவிட்டானானால் நம் ஊர்க்காராள் எல்லாரும் அப்பறம் பனீலே நிக்க ஆரம்பிச்சுடுவா” என்றான் சிவராமன். நாராயணஸ்வாமி ஐயர் ஒன்றும் பதில் சொல்லவில்லை. சிவராமன் மேலும் சொன்னான்: “பாட்டுச் சுகத்திலே, நிற்கிற சிரமங்கூட தோணலை.” “தூங்கற இன்பம் தெரிஞ்சவா இப்படி எல்லாம் சொல்ல மாட்டா” என்றார் வக்கீல் விட்டுக்கொடுக்காமல். “அப்படிச் சொல்லலாமோ நீங்கள்? ராப்பூராவும் கண் விழிக்கறவனுக்குத்தான் தெரியும் தூக்கத்தின் அருமை. பட்டினி கிடப்பவன்தான்...” “மணி அஞ்சாகப் போறது. விளக்கை அணைச்சுட்டுப் படுத்துக்கறேளா? நானும் போய்ச் சித்தே படுத்துத் தூங்கறேன்” என்று சொல்லிவிட்டு, நாராயணஸ்வாமி ஐயர் மாப்பிள்ளையின் பதிலை எதிர்பார்த்து நின்றால் உண்மையிலேயே மணி ஐந்தாகிவிடுமோ என்று பயந்தவராக, அவசரம் அவசரமாக உள்ளே போய்விட்டார். சிவராமன் நாற்காலியில் உட்கார்ந்து சில நிமிஷ நேரம் நாகஸ்வர கீதச் சுவையின் ஞாபக இன்பத்திலே ஈடுபட்டவனாகச் சும்மா இருந்தான். பிறகு உரக்க “ராஜீ! ராஜீ!” என்று கூப்பிட்டான். வாசற் கதவைத் தாழிட்டுப் பூட்டிக் கொண்டு உள்ளே தன் தாயாருடன் படுக்கச் சென்று கொண்டிருந்தாள் ராஜம். மீண்டும் தூக்கம் கெடுகிறது என்று கண்டு முகத்தைச் சுளித்துக்கொண்டு காமிரா அறைக்குள் வந்தாள். “என்ன?” “ஒரு டம்ளர் தீர்த்தம் கொண்டு வாயேன் ராஜி.” “ராத்திரி நாலு மணிக்குப் படுத்துக்கப் போறச்சே தீர்த்தம் எதுக்காம்?” “நான் உடனே படுத்துக்கப் போறதில்லையே! கொஞ்ச நேரம் எழுதப் போறேன்” என்றான் சிவராமன். “நன்னா எழுதினேள், ராத்தூக்கம் இல்லாமே. சும்மாப் படுத்துக்கோங்கன்னா...” என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள் ராஜம். “உள்ளே போய்த் தீர்த்தம் கொண்டுவர உனக்கு சோம்பலாயிருந்தால்...” “பனீலே இவ்வளவு நாழி நின்னுட்டு வந்து தீர்த்தமும் சாப்பிட்டுட்டு ராப்பூராக் கண் விழித்தால் ஜலதோஷம் வரும்; ஜுரம் வரும். அப்போ ராஜி, ராஜி என்னுங்கோ, சொல்றேன்” என்று தன் கணவனைப் பயமுறுத்தினாள் ராஜம். “அப்போ சொல்றத்துக்கும் கொஞ்சம் பாக்கியிருக்கட்டும். இப்போ ஒரு டம்ளர் தீர்த்தம் கொண்டு வா, போ” என்றான் சிவராமன், விவாதத்தை முடிக்கும் உத்தேசத்துடன் சற்றுக் கடுமையாகவே. பதில் சொல்லாமல் உள்ளே போனாள் ராஜம். இரண்டு நிமிஷம் கழித்து ஒரு டம்ளரில் குளிர்ந்த ஜலம் டொப்பென்று மேஜைமேல் கொண்டு வந்து வைக்கப்பட்டது. “டம்ளர் முழுசா இருக்கட்டும்” என்றான் சிவராமன் சிரித்துக்கொண்டே. தீர்த்தத்தைச் சாப்பிட்டுவிட்டுச் சொன்னான்: “இதோ பார்... ராஜி. நான் இப்போது என்ன கதை எழுதப் போறேன் தெரியுமா? புஷ்பப் பல்லக்கு என்று ஒரு கதை. அதிலே இரவு மூன்று மணிக்குப் புஷ்பப் பல்லக்குக் கூட்டத்திலே ஒரு...” “நான் போய்ப் படுத்துக்கட்டுமா? தூக்கம் வர்றது எனக்கு?” என்றாள் ராஜம். ஒரு நிமிஷம் ஒன்றுமே சொல்லாமல் சிவராமன் அவளையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பிறகு, தீர்மானமாக லேசாகக் கசப்புத் தொனிக்கும்படியாக, ஆனால் புன்சிரிப்புடனே, “நீ ஓர் இலக்கியாசிரியனின் மனைவியாக இருப்பதற்கு லாயக்கற்றவள்!” என்றான். ராஜம் பதில் சொல்லத் தயங்கவில்லை. “ஆமாம். ஆனால், முதலில் நீங்கள் ஓர் இலக்கியாசிரியராக இருப்பதற்கு லாயக்குள்லவர்தாமா என்பதே இன்னும் நிச்சயமாகிவிடவில்லையே!” என்றாள். சிவராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. “உம், இந்தப் பேச்சைத்தான் கண்டது!” என்றான். “இல்லாவிட்டால் இலக்கியம் இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு, ஒத்தரும் படிக்காத, ஒத்தரும் பிரசுரிக்கக்கூடப் பிரசுரிக்காத கதைகளை எழுதி எழுதி...” “வக்கீல் பெண் வேண்டாம், அது மிகவும் வாயாடி” என்று பாடினான் சிவராமன். பாடிவிட்டு, “உன்னைப் பிரம்மதேவன் ஏதாவது கொஞ்சம் மூளையோடு படைத்திருந்தால்தானே...?” என்றான். “ச்சொ சொ... பெண் பார்க்க வந்தபோதே, மூஞ்சியைப் பார்த்த மாதிரி மூளையையும் பார்த்திருக்கக் கூடாதோ நீங்கதான். யார் வேண்டாம்னது? இப்ப வேணுமானாலும் எனக்கொண்ணும் ஆக்ஷேபம் இல்லை. இலக்கியாசிரியனுக்குத் தகுந்தவளா ஒத்தியைப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கலாமே நீங்க. பேஷாச் செய்யுங்கோ, நான் குறுக்கே நிக்கல்லே. மனசுக்குப் பிடிச்சவளா, படிச்சிண்டிருக்கிறவளா... ஏன் அத்தங்காளேதான் ஒத்தி இருக்காளே...” என்று ஒரே மூச்சில் பேசி முடித்தாள் ராஜம். “ஆயிடுத்தா உன் பிரசங்கம்? போடி, அதிகப் பிரசங்கி! இந்த வாய்தான்...” “உங்களோடு வாயாடிண்டு நிக்க எனக்கு மூளையும் போறாது... இப்போ போதும் கிடையாது. எனக்குத் தூக்கம் வர்றது. நான் போய்ப் படுத்துக்கப் போறேன். அவர் தலையெழுத்து; இலக்கியாசிரியர் கண் விழிக்கணும். அவர் பொண்டாட்டிக்கு என்ன வந்தது? நான் போறேன்” என்று சொல்லிவிட்டுச் சிவராமனின் சமாதான முயற்சிக்குச் சிறிதும் இடங்கொடாமல் ராஜம் உள்ளே போய்விட்டாள். நோட்டுப் புஸ்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டான் சிவராமன். ஒரு பக்கத்தில் மேலே புஷ்பப் பல்லக்கு என்று தலைப்பை எழுதி அதன் கீழே ஒரு கோடு கிழித்தான். சற்று நேரம் கழித்து இன்னொரு கோடு கிழித்தான். இன்னும் சற்றுநேரம் கழித்து மூன்றாவது கோடும் கிழித்தான். சற்றுமுன் துறுதுறுவென்று துடித்துக் கொண்டிருந்த அவன் கற்பனை இப்பொழுது நகரவே மறுத்தது. ராஜம் அப்பொழுது அங்கு அறையில் இல்லை என்றாலும் அவள் வார்த்தைகள் அங்கிருந்தும், அவன் மனசிலிருந்தும் அகல மறுத்தன. சிவராமனின் சிந்தனைகள், விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகளைப் போல ராஜத்தின் வார்த்தைகளைச் சுற்றிச் சுற்றி வந்தன. ராஜத்தின் வார்த்தைகள் மட்டும் போதா என்றுதான் ராதை அம்மாமி நினைத்தாள் போலும். தன் மாப்பிள்ளையின் காதில் விழவேணும் என்று எண்ணியவள்போல் அவள் சற்று உரக்கவே ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தாள். இந்தக் குட்டிப் பிரசங்கத்தின் அர்த்தபுஷ்டியான வார்த்தைகள் சில சிவராமனின் காதில் தெளிவாகவே விழுந்தன. “என்ன எழுத்து வேண்டிக்கிடக்கு; எழுத்து! நூறு ரூபாய் சம்பளத்தையும் விட்டுத் தொலைத்துவிட்டு வந்து ராப்பகலாகத் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு உடம்பு கெட...” என்று பிரசங்கம் செய்து கொண்டிருந்தாள் ராதை அம்மாமி. சிவராமன் விளக்கை அணைத்துவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய், வெளி ஆளோடியில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக உலாத்த ஆரம்பித்தான். அவர்கள் சொல்லியதெல்லாமும் ஒரு விதத்தில் நிஜந்தான் என்று அவனே ஒப்புக்கொள்ள வேண்டி இருந்தது. இலக்கியம் என்கிற ஒதுங்கி நிற்கும் தேவி ஒருத்திக்காக அவன் எவ்வளவு தியாகங்கள் செய்துவிட்டான்! நல்ல உத்தியோகம், பொருள், காலம் எல்லாவற்றையுமே அவன் இலக்கிய தேவியினுடைய பாதகமலங்களில் சமர்ப்பித்துவிட்டு நின்றான். லாபம் என்ன? பைத்தியக்காரன் என்று சாதாரண மக்களும், வக்கீல் ஐயாவும், அவர் சம்சாரமும் அவனை எண்ணினார்கள். அவ்வளவுதான் கண்ட லாபம்! ஆனால், செய்ததெல்லாவற்றையும் தியாகம் தியாகம் என்று தானே கருதும் வரையில், வேறு என்ன, எப்படிப்பட்ட, லாபந்தான் கண்டுவிட முடியும் என்று ஒரு விநாடி தன்னையே நொந்துகொண்டான் சிவராமன். ஆறு மாதங்களுக்கு முன் தன் சொந்தக் காசு போட்டுச் சிவராமன் நாவல் ஒன்று பிரசுரம் செய்தான். ‘அந்த இருநூறு ரூபாய்க்கு எனக்கு ஒரு ஜோடி வைர டோலக் வாங்கியிருக்கலாமே! என்பது ராஜத்தின் கட்சி. அந்த நாவலைப் பத்திரிகை விமர்சகர்களும், ஒரு சில நண்பர்களும், வானளாவப் புகழ்ந்தும் விற்றது ஏதோ நூறு நூற்றைம்பது பிரதிகள் தாம். எஞ்சிய பிரதிகள் எல்லாம் அவன் வீட்டில் சிதறிக் கிடந்தன. “உம்... இப்போ எழுதித்தான் என்ன ஆகணும்?” என்று சொல்லிக் கொண்டே சிவராமன் காமிரா அறைக்குள் வந்து, கதவைத் தாழிட்டுவிட்டு, விளக்கை ஏற்றாமலே விரித்திருந்த படுக்கையில் படுத்தான். கொசு வலையை அவிழ்த்து விட்டான். திடீரென்று அவனைப் போலவே கொசு வலைக்குள் சிறைப்பட்ட கொசு ஒன்று ஆத்திரத்துடன் ரீங்காரமிட்டது. உன் கூடத்தில் அவனுடைய மாமியாரும் தன் பிரசங்கத்தை முடித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பிரசங்கத்தின் கடைசி வார்த்தைகளும் அவன் காதில் விழுந்தன. “என்ன எழுத்து வேண்டிக்கிடக்கு? எல்லாம் நாளைக்கு எழுதிக்கலாம். படுத்துக்கச் சொல்லுடி.” ‘ராஜி தூங்கிவிட்டாள் போலிருக்கு. அதான் அவள் பதில் ஒன்றும் சொல்லல்லை’ என்று தனக்குள்ளேயே சிவராமன் சொல்லிக்கொண்டான். அப்போது கோயில் மணி ‘டங், டங், டங், டங்’ என்று நாலு அடித்தது. ‘ஆத்துக் கடிகாரத்தில் மணி நாலடித்துப் பத்து நிமிஷம் ஆகிறதே! வேகமாய்ப் போறது போல் இருக்கு!’ என்று எண்ணினான் சிவராமன். கோயில் மணியின் இன்ப ஒலி சிவராமனுக்கு மீண்டும் வைத்தியநாதனின் நாகஸ்வர இன்பத்தை ஞாபகமூட்டியது. அந்த இசையையும் விட அதிகமாக இசையின் ஞாபகம் இன்ப மூட்டியது. மனக்குரங்கு மற்றெல்லா விஷயங்களையும் நழுவ விட்டுவிட்டது. சற்று நேரத்திற்குள் மனக்குரங்கு அவனுடைய அகக்கண்முன் அவனுடைய சிற்றப்பாவைக் கொண்டு வந்து நிறுத்தியது. “அவர் இன்று இங்கே என்னுடன் இருந்தால் இந்தக் கச்சேரியை எவ்வளவு ரசித்திருப்பார்! அவர் உண்மையிலேயே ரசிகர், கலைஞர். எதிலுமே அவருக்கு ரசனையும் ஈடுபாடும் அதிகந்தான். முன் ஒருதரம் - 1930இலா, 31இலா? நான் அண்ணாமலை சர்வகலாசாலையில் பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, என்னைப் பார்க்க அவர் வந்திருந்தார். அன்றும் புஷ்பப் பல்லக்குத் தினந்தான். அன்றும் வைத்தியநாதனின் நாகஸ்வரந்தான். அவரும் நானும் அன்றிரவு நாகஸ்வரம் கேட்டுக்கொண்டே புஷ்பப் பல்லக்குடன் நாலு வீதியும் சுற்றி வந்தோம். ஹாஸ்டலை நோக்கித் திரும்பிய போது கிழக்கு வெளுத்துவிட்டது. காலையில் ஹாஸ்டலில் காபி சாப்பிட்டபோது சித்தப்பா, ‘ஏண்டா ராஜா, பல்லக்கு எப்படிடா இருந்தது?’ என்று கேட்டார். சிரித்துக் கொண்டே நான், ‘பார்க்கலையே சித்தப்பா!’ என்றேன்... அவர் மட்டும் இன்று இங்கிருந்தால்...! ...ம். அவர் கண் விழிப்பதற்கு அஞ்சவேமாட்டார். இரவு முழுவதும் தூங்காமலே கழிப்பது அவருக்குச் சர்வ சாதாரணமான காரியம். இப்போதுதான் என்ன? மணி நாலாகிறதே! சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருப்பார். நான் இப்போது அவரைப் பற்றி நினைப்பது போல அவரும் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கலாம். என்னிடம் அவருக்கு அலாதியான பிரியந்தான்... ம்... ஆமாம். சித்தப்பா இன்னும் தூங்கியிருக்க மாட்டார். கிரக சஞ்சாரம் எதையாவது கணித்துக் கொண்டிருப்பார்; விரல் விட்டு, விரல் விட்டுக் கணக்குப் பண்ணிக் கொண்டிருப்பார். ஜோசியத்திலே நம்பிக்கை வைப்பது பிசகுதான் என்றாலும் அவர் சொன்னாரே - நான் வேலையை ராஜீனாமாச் செய்வதற்கு இரண்டு மாசங்களுக்கு முன்னதாகவே அவர் சொன்னாரே - ‘பிறகு என்ன சித்தப்பா பண்ணுவேன்?’ என்று கேட்டேன். ‘பிறகா? பிறகு சொல்றேன்’ என்றார்... ம்... எவ்வளவோ விஷயங்களில்...” சிவராமனின் மனக் குரங்கும் நித்திராதேவிக்கு வசமாகிவிட்டது. |