உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
முதல் பாகம் 2. கல்கத்தாவில் தென்னிந்தியா கிளப்பை விட்டு அவ்வளவு சீக்கிரம் - மணி பன்னிரண்டு அடிப்பதற் குள்ளாகவே - கிளம்பி விடக் கிருஷ்ணஸ்வாமி சர்மாவுக்கு மனசில்லை. ஆனால், அதற்காக முன்பின் சரியாகத் தெரியாதவர்களுடன் உட்கார்ந்து சீட்டோ சதுரங்கமோ ஆடவும் அவருக்கு மனசில்லை. அவருக்கு ஆப்தமானவர்கள் ஏழெட்டுப் பேர் வழிகள்தாம். அவர்களுள் நாலைந்துபேர் மணி ஒன்பது அடிப்பதற்கு முன்னரே, ஏதோ அவசர ஜோலியிருப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்கள். அதுவரையில் சர்மாவுடன் சீட்டாடிக் கொண்டிருந்தவர்கள் கூட மறுநாள் காலையில் ஒன்பது மணிக்கு ஆபீஸ் போக வேண்டியவர்கள். ஆபீஸில் வேலை ஏதாவது செய்யும் உத்தேசம் இருந்தால், இரவு ஐந்தாறு மணி நேரமாவது தூங்கினால்தான் சரிப்படும் என்று சொல்லி, விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். போகிறேன் என்று கிளம்பியவர்களைத் தடுத்து நிறுத்த முயலவில்லை கிருஷ்ணஸ்வாமி சர்மா. அவருக்குக் காலையிலோ மாலையிலோ ஆபீஸ் என்று ஒன்றும் இல்லை. அவருக்குக் கடை என்று ஒன்று இருந்தது உண்மைதான். ஆனால், அவர் கடைக்கு எப்போது போவார், எவ்வளவு நேரம் அங்கிருப்பார் என்பது யாருக்கும் தெரியாத விஷயம். அவருக்கே தெரியாது. அவர் கடைப் பக்கம் ஒரு மாசம் பூராவும் போகாமலே இருந்தது கூட உண்டு. கடையைத் திறந்து வைத்துச் சரிவர நடத்த அவருடைய குமாஸ்தாவுக்கு - குமாஸ்தா என்று அவனைச் சொல்ல முடியாது. சர்மாவின் நெருங்கிய நண்பன் என்றுதான் சொல்ல வேண்டும், - சீனாக்காரன் - அறிவும் நாணயமும் இருந்தன. ஆகவே, கடையைப் பற்றி ஒருபொழுதும் கவலைப்பட்டு அறியார் சர்மா. எல்லாம் அவர் கவனியாமலே சரிவர நடந்துவிடும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. கடைவைத்து, வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பதைக் கூட அவர், சதுரங்கம், சீட்டாட்டம் போல ஒரு விளையாட்டாக, இன்ப சாதனமான ஒரு கலையாகவே கருதினார். அவர் வாழ்க்கையையே ஒரு கலையாக, பொழுது போக்குக் கலையாகக் கற்றவர். தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொரு தொழிலையும் கலையாக மதித்து அனுபவித்துச் செய்யப் பழகியவர். மனசில்லாத கோஷ்டியுடன் சீட்டாடுவதை விட ஆடாதிருப்பதே மேல் என்று எண்ணுபவர் அவர். அதனால்தான் போகிறேன் என்றவர்களை நிறுத்த அவர் முயலவில்லை. போகட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால், தமக்காகத் தம்முடைய ஆப்தமித்திரனான வேணுவாவது ஓர் ஆட்டம் சதுரங்கம் ஆடுவதற்குப் பின்தங்குவான் என்று அவர் எதிர்பார்த்தார். அன்று இரவு இரண்டு மணி வரையிலாவது சதுரங்கம் ஆடுவது என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால், வேணுவின் மனைவி அன்று காலையில்தான் திருநெல்வேலியிலிருந்து ஆறுமாசக் கைக்குழந்தையுடன் கல்கத்தா திரும்பியிருந்தாள். இந்தச் சந்தர்ப்பத்தில் வேணு அவ்வளவு நேரம் கிளப்பில் தங்கியதே பெரிசு. அதற்கு மேலும் அவன் தங்குவான் என்று எதிர்பார்ப்பது தவறு என்று எண்ணினார் சர்மா. தம்மையே சமாதானம் செய்துகொண்டார். ‘வேணுவின் மனைவி திரும்பியிருந்தாள். வேணு அவசரப்பட்டுப் பன்னிரண்டு மணிக்குள்ளாகவே வீடு திரும்பினான்’ என்று எண்ணியபோது கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் மெல்லிய உதடுகள் ஒரு புன்சிரிப்பால் மலர்ந்தன. சர்மா அவர் மனைவியுடன் சம்சாரம் நடத்தி ஏழு, இல்லை எட்டு வருஷங்கள் ஆகிவிட்டன. அவர் சம்சார வாழ்க்கை அதற்கு மேலும் நடக்காததற்குக் காரணம், அவருடைய மனைவி லக்ஷ்மியின் அகால மரணந்தான். லக்ஷ்மி தன்னுடைய முதல் பிரசவத்தைத் தாண்டி ஏழு நாட்களே உயிருடன் இருந்தாள். நல்ல வேளையாக அவளுடைய குழந்தையும் அவளுக்குப் பிறகு இருபது நாட்களே உயிருடன் இருந்தது. ஒரே அடியில் எல்லாத் தளைகளும் இற்று விழுந்துவிட்டது பற்றிச் சர்மாவுக்கு ஒரு விதத்தில் பரம திருப்தி என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையையே கலையாகக் கற்று வாழ்ந்து ரசித்த சர்மாவுக்குக் கிருகஸ்தாசிரமத்தின் உண்மையான, நிரந்தரமான, அழகான அம்சங்கள் மட்டும் ஒன்றுமே பிடிபட்டதில்லை; புரிந்ததில்லை. இதற்குக் காரணம் அவர் மிகவும் சொற்ப காலமே கிருகஸ்தராக இருந்தார் என்பது மட்டுமல்ல. அவர் தம்முடைய பன்னிரண்டாவது வயசில் வீட்டை விட்டு வெளியேறியவர். மெட்ரிகுலேஷன் பரீக்ஷைக்குப் பணத்தைக் கட்டிவிட்டுப் பரீக்ஷை எழுதாமலே ஓடிப் போய்விட்டார். பரீக்ஷைக்குப் பயந்தும் அல்ல; வீட்டில் சண்டை சச்சரவு என்றும் அல்ல. அவர் அவ்வளவு சிறு வயசில் வீட்டை விட்டு வெளியேறி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. முத்தண்ணாவின் பராமரிப்பில் வெகு சௌக்கியமாக இருந்திருக்கலாம். ஆனால் என்னவோ - அவர் மனம் சுயேட்சையாக இருக்க விரும்பியது. அவர் வீட்டைவிட்டு ஓடிவிட வேண்டும் என்று விரும்பினார். ஒரு நாள் அப்படியே செய்தும் விட்டார். பன்னிரண்டாவது வயசிலிருந்து முப்பத்து நாலாவது வயசு வரையில், அவர் யாருக்கும் எதற்கும் கட்டுப்படாமலே, மனம் போனபடியெல்லாம் பரந்த உலகிலே அலைந்து திரிந்தார். இரண்டு மூன்று தரம் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் வியாபார நிமித்தம் சுற்றுப்பிரயாணம் செய்தார். ஏழெட்டுத் தடவை சீனாவுக்கும், நாலைந்து தடவை ஜப்பானுக்கும் போய் வந்தார். சர்க்கரை, தோல், உலோகங்கள், சிகரெட்டு - இம்மாதிரியான பல வியாபாரத்துறைகள் மூலம் அவருக்குப் பெரிய பெயரும், நிறையப் பணமும் கிடைத்தன. முக்கியமாகத் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் அவர் பெயருக்கு மதிப்பு அதிகம். அப்போதெல்லாம் பணம் சம்பாதிப்பதும் செலவழிப்பதுமே அவருடைய வாழ்க்கை லக்ஷ்யங்கள் என்று சொல்லலாம். அந்த இருபத்திரண்டு வருஷங்களில் அவர் உலகத்தில் சுவைக்க வேண்டிய இன்பங்களை எல்லாம் சுவைத்துக் களித்து, பட வேண்டிய கஷ்டங்களை எல்லாம் பட்டு, அலுத்துவிட்டார். வாழ்க்கையிலே அவர் சம்பந்தப்பட்ட வரையில் மிஞ்சியது சக்கைதான். சுயேட்சையான, யாருக்கும் அடங்காத மனிதர், திடீரென்று கொஞ்சம் மாறினார். அந்த மாறுதல் வடக்கே லாகூரில் இருக்கும்போது அவர் கிழத்தாயை அவருடன் கொண்டு போய் வைத்துக் கொள்வதில் ஆரம்பமாயிற்று. அவருக்குக் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று அவர் தாயார் விரும்பியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், அவர் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தது தான் ஆச்சரியம்! எவ்வளவோ நாளாகத் தமிழ்நாட்டுப் பக்கமே வராதவர் தம்முடைய முப்பத்து நாலாவது வயசில் திரும்பி வந்து, பதினாறு வயசுப் பெண் ஒருத்திக்குத் தாலி கட்டிவிட்டு, மீண்டும் வடநாடு திரும்பினார். அந்தப் பெண், லக்ஷ்மி நல்ல கருப்பு. தாய் தந்தையில்லாமல் சிறு வயசிலிருந்தே கஷ்டத்திலும் ஏழ்மையிலும் அடிபட்டுப் பண்பட்டவள். கொஞ்சமும் படிப்பு இல்லை என்றாலும் நல்ல சமர்த்துள்ளவள். கல்யாணமாகி இரண்டொரு வருஷங்களுக்கெல்லாம், லாகூரில் வியாபாரம் செய்து நிறையச் சம்பாதித்துக் கொண்டிருந்த தன் கணவனே கதி என்று வந்து சேர்ந்தாள். சந்நியாச ஆசிரமத்துக்குச் சித்தமாக இருந்த சர்மாவை - பொருள் நிறையச் சம்பாதிக்கத்தான் சம்பாதித்தார் எனினும், அவர் மனைவி அவரை வந்தடையும் வரையில், சந்நியாசி என்றேதான் சொல்ல வேண்டும் - முழுமனசுடனும் தன்னுடைய கிருகஸ்தாசிரமத்தில் ஈடுபடச் செய்த பெருமை அந்தச் சிறுபெண் லக்ஷ்மியையே சாரும். அது எவ்வளவு பெரிய விஷயம், எவ்வளவு பெருமையான விஷயம் என்பது அந்தக் காலத்தில் சர்மாவை அறிந்திருந்தவர்களுக்கே நன்கு தெரிய முடியும். அழகில்லை; படிப்பில்லை; ஆனால் பெண்மை என்கிற ஒரே தத்துவத்தைப் பக்கபலமாகக் கொண்டு அவள் தன் கணவனை முற்றும் தன் வசமாக்கிக் கொண்டாள். அதுவரையில் எந்தத் தனி ஸ்திரீயிடமும் சென்று லயிக்காத மனம் அவளிடம் லயித்து விட்டது ஆச்சரியந்தான்! லக்ஷ்மி வந்து சேர்ந்ததற்கு மறு வருஷம், கிருஷ்ணஸ்வாமி சர்மா வியாபாரத்தைப் பெருக்கும் உத்தேசத்துடன் தம் தலைமைக் காரியாலயத்தை லாகூரிலிருந்து கல்கத்தாவுக்கு மாற்றிக் கொண்டார். அப்பொழுது அவரிடம் இரண்டு மூன்று லக்ஷம் பணமும் அந்தத் துறையிலே நல்ல பெயரும் இருந்தன. கல்கத்தா வந்த பிறகு இரண்டு, இரண்டரை வருஷங்களே லக்ஷ்மி உயிருடன் இருந்தாள். அவள் இறந்தது தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில். அவள் கணவன் பக்கத்தில் இல்லை. முத்தண்ணா பட்டாபிராம ஐயரின் பிள்ளை சிவராமன் - கோவைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன், விடுமுறைக்குத் தஞ்சாவூர் வந்திருந்தவன் - அவன் தான் கொள்ளிவைத்துக் கிரியைகளை எல்லாம் செய்தான். லக்ஷ்மி இறந்துவிட்டாள் என்று அறிவித்த தந்தி கிடைத்த விநாடி முதலே கிருஷ்ணஸ்வாமி சர்மா - அதை வேறு விதமாக எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை - எப்படியோ என்றுமில்லாத விதமாகப் புது மனிதனாக மாறிவிட்டார். அதற்குப் பிறகு, அவருடைய வாழ்க்கைக்கு உத்ஸாகம் அளித்தவை நாலைந்து விஷயங்கள் தாம் - சீட்டு, சதுரங்கம், ஜோசியம், இலக்கியம், சகோதரர்களின் குழந்தைகள் - இவைதாம். அவருக்கு எவ்விதமான கவலையும் இல்லை; பொறுப்பும் இல்லை. கடையிலிருந்து தேவைக்கு அதிகமாகவே வருமானம் வந்தது. ஆனால், பணம் சேர்ப்பதிலும் செலவழிப்பதிலுங்கூட அவருக்கு முன்போல் எல்லாம் ஆர்வம் இல்லை. வந்த லாபம் போதுமென்று நாளடைவில் வியாபாரத்தையும் சுருக்கிக் கொள்ள ஆரம்பித்து விட்டார். நூற்றுக் கணக்கில் ஆட்கள் வேலை செய்த அவர் கடையிலே இப்போது ஏழெட்டு ஆட்களும் ஒரு குமாஸ்தாவுமே வேலை செய்தார்கள். இடையில் லக்ஷ்மி இறந்து இரண்டொரு வருஷங்களுக்கெல்லாம், சர்மாவின் தம்பி வேங்கடராமையருக்குக் கல்கத்தாவில் வேலையாயிற்று. ஏதோ கம்பெனி மானேஜர்; மாசம் இருநூறு ரூபாய் சம்பளம்; அதுவும் சர்மாவின் சிபாரிசில் கிடைத்ததுதான். வேங்கடராமையரும் அவர் மனைவி மதுராம்பாளும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் கல்கத்தா வந்து சேர்ந்தார்கள். சர்மாவின் புண்பட்ட மனசுக்கு ஏதோ கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது. அவர் தம் தம்பியுடன்தான் வசித்தார். கடைக்குச் சற்று நேரம் போவது, தென்னிந்தியா கிளப்புக்குப் போவது, படிப்பது, ஜோசியம் பார்ப்பது, எஞ்சிய நேரமெல்லாம் தம்பியின் குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடுவது என்று இன்பமாகவே தம் காலத்தைக் கடத்தி வந்தார் கிருஷ்ணஸ்வாமி சர்மா. நண்பன் வேணுவின் மனைவி அன்றுதான் பிறந்தகத்திலிருந்து திரும்பி வந்திருந்தாள் என்று எண்ணியதும் கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் உதடுகள் லேசான புன்னகையால் மலர்ந்தன. தம் கிருகஸ்தாசிரமத்தைப் பற்றிய சிந்தனைகள் அவர் மனசில் ஓடின, ஓடி விளையாடின. பற்றற்ற சிந்தனைகள் அவை. சிந்தனைகள் அலைபாய்ந்து ஓயும்போது தம்மை எண்ணித் தமக்குள்ளேயே சிரித்துக்கொண்டார் அவர். “ஆம்; நானும் ஒரு மனிதன் தான்; ஒரு மனிதன் தான்!” என்று தமக்கே நம்பிக்கை பிறக்கும் வண்ணம் சொல்லிக் கொண்டார். கடிகாரம் மணி பன்னிரண்டரை ஆனதை டங் என்று ஓர் அடி அடித்துக் காட்டியது. “வா போகலாம்; இப்படி ரெண்டு மூணு மைல் மைதானம் வரையில் நடந்துவிட்டு வீடு திரும்பினால் சரியாக இருக்கும்” என்று யோசித்தவராகச் சர்மா தென்னிந்தியா கிளப்பை விட்டுக் கிளம்பினார். கதர்த் துப்பட்டாவை விரித்துக் கதர்ஜிப்பா மேல் குளிருக்கு அடக்கமாகப் போர்த்துக் கொண்டு, ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு கிளம்பினார். ஒரு வாலிபனுடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்த சங்கரையர், “இருங்களேன் சர்மா, சித்த நாழி. நானும் அந்தப் பக்கந்தானே போகணும்; வரேனே; சேர்ந்து போகலாமே” என்றார். சர்மா நிற்காமல், “நான் நேரே வீட்டுக்குப் போகவில்லை” என்று கூறிவிட்டு வெளியேறினார். சங்கரையருடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்த வாலிபன் கல்கத்தாவுக்குப் புதுசு. ‘போஸ்டல் என்ஜினீரியங் சூப்பர்வைஸ’ராகப் பரீக்ஷையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி பெறக் கல்கத்தாவுக்கு வந்தவன் அவன். கல்கத்தா வந்து ஒரு வாரந்தான் இருக்கும். அங்கே அவனுக்கு இன்னும் அதிகப் பேரைத் தெரியாது. சர்மாவைப் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது. சங்கரையரின் வாயைத்தான் கிண்டலாமே என்று அவன் கிருஷ்ணஸ்வாமி சர்மா போனபின், சிரித்துக் கொண்டே, பரிகாசமாக, “ஏன் ஸார்? அவர் எங்கேயாவது போவார். நானும் வரட்டுமா என்று நீங்கள் கரடி விடலாமா?” என்றான். “சர்மாவை உனக்குத் தெரியாது. சும்மா இரு” என்று அவனுக்குப் பதில் அளித்தார் சங்கரையர். சங்கரையருடைய வார்த்தைகளைவிட அவருடைய குரலும், அவர் இதைச் சொன்ன விதமும் அவ்வாலிபனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. பிறரைப் பற்றி எப்போதுமே ரஸாபாசமாக ஏதாவது பேசத் தயாராக இருக்கும் சங்கரையரே ஒருவரைப் பற்றி இப்படிப் பேசுவதானால்...! அந்த வாலிபன் சதுரங்கத்தையும் மறந்துவிட்டு, ஆச்சரியத்தால் வாயைப் பிளந்துகொண்டே உட்கார்ந்துவிட்டான். “நகர்த்தேண்டா, நாழியாறதே!” என்று சங்கரையர் அவனைத் தூண்டிவிட வேண்டியிருந்தது. கிருஷ்ணஸ்வாமி சர்மாவுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது. அவர் நேரே ரஸ்ஸா ரோடுக்குப் போய் ஒரு பஞ்சாபிக் கடையில் காய்ச்சின பால் வாங்கிக் குடித்துவிட்டு, சிகரெட்டு ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு மைதானத்தை நோக்கி விறு விறு என்று நடந்தார். மைதானத்தில் விக்டோரியா மெமோரியலைச் சுற்றியிருக்கும் வெளிச்சுவரின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டார். தூரத்தில் ஒரு மாதா கோயில் மணி ஒன்றோ, ஒன்றரையோ அடித்தது. பனி ஜாஸ்தியில்லை. ஆனால், சிலு சிலுவென்று குளிர்ந்த காற்று மட்டும் வீசிக் கொண்டிருந்தது. நிர்மலமான வானத்திலிருந்து சந்திரன் பாலாகப் பொழிந்து கொண்டிருந்தான். எட்டிப் பிடிக்க முடியாத ஒரு லக்ஷ்யத்தை நோக்கிக் கையைக் காட்டிக் கொண்டு நிற்பது போல் நின்றது அந்த விக்டோரியா மெமோரியல். தாஜ்மகால் என்கிற லக்ஷயத்தை எட்டிப் பிடிக்காத கட்டிடந்தானே அது! அடிவானத்துக்கருகே சில நட்சத்திரங்கள் பளிச்பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தன. மைதானத்தில் புல்தரை மேலே வீடு. விதியற்றோர் பலர் படுத்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். நிலவேபோல, அமைதியாக, இந்த இரவேபோல அசைவின்றிக் கிடந்தார்கள். கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் ஆத்மா நிஷ்களங்கமாய் அப்பொழுது பொழிந்து கொண்டிருந்த நிலவேபோல நிர்மலமாய் வெண்மையாய் இருந்தது. அவர் மனசு நிச்சலமாய்ச் சிந்தனையேயின்றி இருந்தது கொஞ்ச நேரம். அலைகளேயின்றி நிலவு கொட்டும் வெட்ட வெளியாக இருந்தது அவர் உள்ளம். அகத்திலும் புறத்திலும் அவர் அப்போது வெண்ணிலவையே தான் கண்டார். அறிவு, பேதைமை, பொய், உண்மை, நல்லது, கெட்டது, எல்லாம் அச்சமயம் அவர் மனசையும் ஆத்மாவையும் விட்டுத் தூர விலகி நின்றன. தூரத்து மாதா கோயில் மணி இரண்டடிப்பது, வேறு ஓர் உலகிலிருந்து வரும் இனிய கீதம் போல லேசாகச் சர்மாவின் காதில் ஒலித்தது. தலையில் மயிர் நிறைய வைத்திருப்பவன், ஸ்நானம் செய்துவிட்டு மயிரில் தண்ணீர் தங்கிவிடாமல் தலையை ஆட்டுவதுபோல, சர்மா இரண்டு தரம் தலையை ஆட்டினார்; வேகமாக ஆட்டினார். அவருடைய பற்றற்ற, சிந்தனையற்ற, விகல்பமற்ற நிலை அத்துடன் கழன்று விழுந்துவிட்டது போல் இருந்தது. சமாதி கலைந்து அவர் எழுந்து நின்றார். தம் மனசுக்குள்ளாகவே சொல்லுவதாக எண்ணிக்கொண்டு அவர் சொன்ன ஒரு வாக்கியம் அவரும் அறியாமலே உரக்க வெளிவந்து விட்டது. “என்னில் பாதி அவள். மறுபாதி அவன்!” என்றார் சர்மா. தன் இன்ப அலுவல்களை முடித்துக்கொண்டு, அவசரம் அவசரமாக வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒருவன் காதில், சர்மா உரக்கச் சொன்ன இந்த வார்த்தைகள் விழுந்தன. தன்னுடன்தான் பேசுகிறாரோ என்று எண்ணி அவன் திரும்பிப் பார்த்தான். நல்லவேளை; அவன் ஒரு வங்காள பாபு. சர்மாவுக்குத் தெரிந்தவனல்ல. அந்த வேளையில் தனிமையையே விரும்பினார் கிருஷ்ணஸ்வாமி சர்மா. வீட்டுக்குப் போகலாமே என்று எழுந்து கிளம்பிய கிருஷ்ணஸ்வாமி சர்மா, மீண்டும் சுவரின் மேல் ஏறி உட்கார்ந்து விட்டார். ஆனால், அவர் இந்தத் தடவை முன்போல மோனப் பரவெளியில் லயித்து விடவில்லை. அவர் தம் மனக்குரங்கை அதன் இஷ்டப்படி ஓட விட்டுவிட்டு உட்கார்ந்திருந்தார். தம் ஞாபகத்தாலோ, பகுத்தறிவாலோ மனக்குரங்கை எட்டிப் பிடித்துக் கட்டுப்படுத்த முயலவில்லை அவர். எங்கெல்லாமோ சஞ்சரித்தது அவர் மனக்குரங்கு. இன்றைய உலகம், நேற்றைய உலகம், வேண்டாத உலகம், இருப்பவர் உலகம், இறந்தவர் உலகம் - என்று எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து அலைந்து திரும்பியது அவர் மனம். அவர் அனுபவத்திலிருந்த ஐம்பது ஆண்டுகளையும் ஒரே விநாடியில் அடக்கிப் பார்க்க முயன்றது அது. கிருஷ்ணஸ்வாமி சர்மா கொஞ்ச நேரம் இப்படி உட்கார்ந்திருந்தார். பிறகு, எழுந்து அவர் சட்டை மேல் போட்டிருந்த கதர்த் துப்பட்டாவை எடுத்து உதறிப் போர்த்துக்கொண்டு கிளம்பினார். அப்போது மாதாகோயில் மணி மூன்றடித்தது. “மூன்றாகிவிட்டது; நாழிதான் ஆகிவிட்டது. தாங்காத அவசரம் இல்லையா இது? வெங்கிட்டுவிடம் சொல்ல வேண்டும். இன்று திருவாதிரைக்கு மறுநாள் அல்லவா?” என்று தம்மையே கேட்டுக் கொண்டார் சர்மா. திருவாதிரை என்கிற ஞாபகத்துக்கும் சிதம்பரம் என்கிற ஞாபகத்துக்கும் அதிக தூரம் இல்லை. சிதம்பரம் என்கிற ஞாபகம் வந்ததும் அவருக்குச் சிவராமனின் ஞாபகம் வந்தது. திடீரென்று எப்போதோ நாலைந்து வருஷங்களுக்கு முன், சிவராமனுடன் சிதம்பரத்தில் புஷ்பப் பல்லக்குப் பார்த்தது ஞாபகம் வந்தது. அன்று கேட்ட நாகஸ்வர கீதம் இன்ப அலைகளாகக் காதில் ஒலிக்க நடந்தார். கிருஷ்ணஸ்வாமி சர்மா. பவானிபூரில் பாகுல் பகன் ரோடில் ஒரு பெரிய வீட்டில் சௌகரியமான ஒரு பகுதியில் அவரும் அவர் தம்பியும் வசித்து வந்தார்கள். அவர் வீடு போய்ச் சேரும்போது மணி மூன்றரையும் அடித்துவிட்டது. சர்மாவின் அகக் காதில் ஒலித்துக் கொண்டிருந்த நாகஸ்வரத்தின் அலைகள் ராஜத்தின் - வேங்கடராமையரின் பெண் ராஜத்தின் - அழுகுரல் அலைகளாக மாறின வீட்டை நெருங்கியதும். கதவைத் தட்டாமலே சர்மா, “ராஜம்” என்று ஒரு தரம் கூப்பிட்டார். ராஜம் தன் அழுகையை நிறுத்திவிட்டுக் கிடுகிடென்று முன்கூடத்திற்கு ஓடி வந்தாள். ஆனால், அவளுக்கு லைட் ஸ்விட்சோ கதவுத் தாழ்ப்பாளோ எட்டாது. ஆகையால், இருட்டில் உள்ளே நின்றபடியே கதவுக்கப்பால் வெளியே நின்ற பெரியப்பாவிடம் அழுகையால் தடித்த குரலில் விம்மல்களுக்கிடையே சொல்லத் தொடங்கினாள்: “பெரியப்பா! பெரியப்பா! அம்மா என்னை...” அதற்குள் அவள் அம்மா வந்து முன்கூடத்து விளக்கையும் போட்டு, வாசற்கதவையும் திறந்துவிட்டு உள்ளே போனாள். கிருஷ்ணஸ்வாமி சர்மா உள்ளே நுழைந்ததும் ராஜம் ஓடி வந்து அவர் மேல் விழுந்து காலைக் கட்டிக் கொண்டாள். அவர் குழந்தையை எடுத்துத் தோள் மேல் சார்த்திக் கொண்டு சமாதானப்படுத்தினார். “அழாதே ராஜம்!” என்று அவர் சொல்லி வாய் மூடுமுன் அவளுடைய அழுகை நின்றுவிட்டது. அதற்குப் பிறகு, அவளைச் சாந்தப்படுத்திச் சிரிக்க வைக்க அவருக்குச் சரியாக இரண்டே நிமிஷந்தான் பிடித்தது. “அம்மாகிட்டப் போய் ஒரு டம்ளர் ஜலம் வாங்கிக்கொண்டு வா ராஜம். சமத்தோல்லியோ?” என்றார் சர்மா. ராஜம் உள்ளே போனாள். வாசல் கதவு திறந்தே கிடந்தது. வேலைக்காரன் விரித்திருந்த படுக்கையில் உட்காராமல் சர்மா ஒரு பெட்ஷீட்டை மட்டும் தனியாக எடுத்து விரித்து அதில் காலை மடக்கிக் கொண்டு உட்கார்ந்தார். உள்ளே சமையல் அறையில் குடத்திலிருந்து ஜலம் எடுக்கப்படும் சப்தம் கேட்டது. பிறகு, “நான் தான் பெரியப்பாவுக்குத் தூத்தங் கொண்டு போய்க் கொடுப்பேன்; ம்...” என்று ராஜத்தின் குரல் உரக்கக் கேட்டது. அவள் தாயார், “மெதுவாகக் கீழே கொட்டாமல் ஜாக்கிரதையாகக் கொண்டு போய்க் கொடு” என்றாள். ராஜம் கொண்டு வந்த ஜலத்தை வாங்கிக் குடித்து விட்டுச் சர்மா, “வெங்கிட்டு டவுனுக்குப் போய்விட்டானோ இன்னிக்கு, இங்கேதான் இருக்கானோ?” என்று விசாரித்தார். “...ங்குட்டு தூங்கறான்!” என்று ராஜம் பதில் அளித்தாள். “போக்கிரி! அப்பாவை நீ வெங்குட்டுன்னு சொல்லலாமோ?” என்றார் சர்மா. “நீ போய் அப்பாவை எழுப்பிண்டு வா” என்றார். மதுராம்பாளுக்கு என்னவோ ஏதோ என்று அப்பவே மனசு திக்கென்றது. முன்னறைக்குள் எட்டிப் பார்த்தாள். அண்ணா, விருத்திருந்த படுக்கையில் உட்காராமல் தனியாக ஒரு பெட்ஷீட்டை விரித்துக்கொண்டு அதன்மேல் உட்கார்ந்திருக்கிறார் என்பதைக் கண்டாள். அவள் பயம் அதிகரித்தது. என்னவோ ஏதோ தெரியவில்லையே என்று குழம்பினாள். தன் கணவனை எழுப்பி அழைத்து வரப் படுக்கையறைக்குள் போனாள். |