உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
முதல் பாகம் 3. சானுப்பாட்டி சானுப்பாட்டிக்கு அன்றிரவு என்னவோ தூக்கமே வரவில்லை. பத்து மணிக்குப் படுத்தவள் புரண்டு புரண்டு படுத்துவிட்டுக் கடைசியில் தூங்கும்போது மணி பன்னிரண்டிருக்கும். அப்படி நேரங்கழித்துத் தூங்கியவன், இரண்டு மூன்று மணி நேரந்தான் சரியாகத் தூங்கியிருப்பாள். அதிசீக்கிரமே விழிப்புக் கொடுத்துவிட்டது. சிறிது நேரம் படுக்கையிலேயே விழித்துக்கொண்டே படுத்திருந்தாள். சாவித்திரி, பாகீரதி இருவரும் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தன. சாவித்திரியின் இரண்டாவது பிள்ளை அம்பிப் பயல் மட்டும் இரண்டு தரம் புரண்டு புரண்டு படுத்தான். அவன் விழித்துக் கொண்டு அலற ஆரம்பித்தானானால் ஊரையே எழுப்பிவிடுவான் என்று சானுவுக்கு அனுபவ ஞானம் உண்டு. எனவே, அவள் சப்தம் செய்யாமல் எழுந்திருந்து அம்பி பக்கத்தில் போய் உட்கார்ந்து அவன் அசையாமல் தூங்கும் வரையில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். “விடிந்தால் புதன்கிழமை” என்று சொல்லிக் கொண்டே, அம்பி தூங்கிய பின் அவள் எழுந்திருந்தாள். விடிய இன்னும் ஏழெட்டு நாழிகையாவது இருக்கும் போல் இருந்தது. சானு கூடத்து அலமாரியண்டை போய் அதில் வைத்திருந்த கடிகாரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே கொஞ்ச நேரம் நின்றாள். அவளுக்குக் கடிகாரம் பார்க்கத் தெரியாது. கண்ணும் சரியாகத் தெரியாது. “சரிதான், மணி மூணு மூணரை இருக்கும்” என்று ‘கடிகாரம் பார்த்துத்’ தெரிந்து கொண்டு இடைக்கட்டுக் கதவைத் திறந்து கொண்டு வாசல் பக்கம் போனாள். ‘எதிர்வீட்டுத் திண்ணையில், தன்னைப் போலவே தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டு தன் தோழி அம்மணிப்பாட்டி உட்கார்ந்திருக்க மாட்டாளா? அவளுடன் ஆப்தமாகத் தன் குறைகளையும் நிறைகளையும் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கலாமே’ என்று சானுவுக்கு ஆவல். ஆனால், எதிர்வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. சானுப்பாட்டியின் மூத்த பிள்ளை பட்டாபிராமன் வீட்டுக் குட்டித் திண்ணையில் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய குறட்டைச் சப்தத்தைத் தவிரச் சுவாமிமலை அக்கிரகாரத்தில் வேறு ஒரு சப்தமும் அப்பொழுது இல்லை. அமைதியாக, நிசப்தமாக இருந்தது. அந்த வருஷம் மழை அதிகமில்லையே தவிரக் குளிர் என்னவோ சற்று அதிகந்தான். தலைப்பை இழுத்து இறுகப் போர்த்துக் கொண்டு, திறந்த வெளிக்குறட்டில் இறங்கி நின்றாள் சானுப்பாட்டி. வானம் நிர்மலமாக இருந்தது. சந்திர ஒளி பூரணமாகவே இருந்தது. அன்று பௌர்ணமிக்கு மறுநாள்; நிலவொளிக்குக் கேட்பானேன்? வானத்திலும் மாசு மறு இல்லை. சந்திர வெளிச்சம் இன்னும் மங்கி வெளிறடிக்க ஆரம்பிக்கவில்லை. ஆகவே, மணி நாலடிக்கவில்லை என்று நிச்சயமாயிற்று சானுப்பாட்டிக்கு. குறட்டுக்குக் கீழே வாசல் ‘கேட்’டுக்குக் காவல்போல இரண்டு தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. எதையோ எதிர்பார்த்து வேண்டுபவைபோல, வானத்தை நோக்கித் தூக்கும் பூமாதேவியின் கரங்கள்போல அவை அசையாமல் ஆடாமல் நின்றன. அண்ணாந்து பார்க்க அந்த நிலவிலே தென்னை மட்டைகளும் தென்னங்குலைகளும் அழகாக இருந்தன. பாரிஜாதம் மலர்ந்து ஓய்ந்து, முழு வேகத்துடனும் இல்லாமல் மங்கிய வாசனை வீசிற்று. சிவராமன் பட்டணத்திலிருந்து காசு கொடுத்து வாங்கி வந்து சட்டியில் வைத்து வளர்த்திருந்த ‘இரவு ராணி’ச் செடியும் கொத்துக் கொத்தாகச் சிறிய வெள்ளைப் புஷ்பங்கள் பூத்துக் குலுங்கி வாசத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. காற்றே இல்லை. பிரபஞ்சம் முழுவதும் சலனமின்றித் தூங்கிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. ஆனால், அது அதிசலனத்தின் சலனமின்மை என்பது தத்துவ விசாரம் செய்யாமலே, பள்ளிக்கூடம் போகாமலே, சைவ சித்தாந்தமோ வேறு சித்தாந்தங்களோ படிக்காமலே, சானுப்பாட்டிக்கு அளிபவபூர்வமாகத் தெரிந்த ஓர் உண்மை. அந்தச் சலனமின்மை வெறும் ஏமாற்று, புரட்டு, மகா மாயை - எத்தனையோ குழந்தைகள் அந்த வேளையில் பிறந்து குவாகுவா என்று கத்தத் தொடங்கிக் கொண்டிருக்கும். எத்தனையோ மனிதர்கள் - ஆண்களும், பெண்களும், வயசானவர்களும் வயசாகாதவர்களும் - உலகின் பல பாகங்களில் அதே விநாடியில் இறந்து கொண்டுதான் இருப்பார்கள். சாவு என்கிற தத்துவம், யமன் என்கிற தெய்வம். உண்மையிலேயே மிகவும் குளிராகத்தான் இருந்தது. சானுப்பாட்டி திறந்த குறட்டிலிருந்து கூரைக்குக் கீழே நகர்ந்தாள். அம்மணிப் பாட்டியையும் காணவில்லை, வெளியே இருந்துதான் என்ன பயன் என்று உள்ளே போனாள். இடைகட்டுக் கதவைத் தாழிடாமல் ஒருக்களித்து வைத்துவிட்டுப் போனாள். இன்னும் ஒரு மணி நேரம் போனால் எல்லோரும் எழுந்திருக்க வேண்டியதுதானே! செய்யவோ காரியம் ஒன்றுமில்லை. சமையல் அறை எல்லாம் முதல் நாள் இரவே மெழுகித் துமுத்து ஆகிவிட்டது. தேய்க்கவும் பாத்திரம் ஒன்றும் பாக்கியில்லை. மறுபடியும், தூக்கம் வராதபோது படுத்துப் புரளச் சானுவுக்கு மனசில்லை. கூடத்து அலமாரியிலிருந்து நெருப்புப் பெட்டியை எடுத்து மண்ணெண்ணெய்க் கை விளக்கை ஏற்றினாள். பிறகு குத்துவிளக்கில் இலுப்பெண்ணெய் இரண்டு கரண்டுமுட்டை எடுத்துவிட்டு, திரி போட்டு ஒரு முகத்தை மட்டும் ஏற்றிச் சமையலறைப் பக்கத்தில் இருந்த பூஜை அலமாரியண்டை கொண்டுபோய் வைத்தாள். பிறகு, மண்ணெண்ணெய்க் கைவிளக்கை அணைத்துவிட்டுத் தாழ்வாரத்துத் தூணில் சாய்ந்துகொண்டு, முற்றத்தில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள். சாதாரணமாக அவளுக்குக் குளிர் தாங்காது. அன்று என்னவோ, அந்தக் குளிர் கூட அவளுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. சிதம்பரத்தில் வேட்டகத்துக்குப் போயிருந்த தன் பேரனைப் பற்றிய சிந்தனைகளே முதலில் அவள் மனசில் அலைபாய்ந்தன. அவன் பெயர்தான் சிவராமன் - பட்டாபிராமனின் ஒரே பிள்ளை. அவன் சிதம்பரம் போய்ப் பத்து பன்னிரண்டு நாளுக்கு மேல் ஆகிவிட்டது. நாலைந்து நாளில் வந்துவிடுவதாகச் சொல்லிப் போனவன் வேட்டகத்து விருந்துச் சம்பிரமங்களில் மயங்கிப் பின் தங்கிவிட்டான் போலு! இன்னும் வரவில்லை. ஆனால், நாளைந்து நாளில் வந்துவிடுவான். அவசரந்தான் என்ன? வேலையையும் விட்டுவிட்டானாமே! சிறிசுகள் அசட்டுப் பிசட்டென்றுதான் இருக்கும் கொஞ்ச நாள்! தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு கூடிய சீக்கிரமே திரும்பி விடுவான் சிவராமன். அவனுக்குக் கல்யாணமாகி எட்டு, இல்லை ஒன்பது வருஷங்கள் கூட ஆகிவிட்டன. சாந்திக் கல்யாணமாகி ஏழு வருஷம் ஆகிவிட்டது. தன் பிள்ளைக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என்று பட்டாபிராமனுக்கும் வருத்தந்தான். சானுப்பாட்டிக்கும் அந்த விஷயத்தில் வருத்தந்தான். ராமேசுவரம் போய்விட்டு வந்தால்தான் பிறக்குமோ என்னவோ என்று எண்ணினாள் சானுப்பாட்டி. பட்டாபிராமனுக்கும் ராமேசுவரம் போய் வந்த பிறகுதான் குழந்தை பிறந்தது. வருகிற ஆடி அமாவாசைக்கு ராஜியையும் சிவராமனையும் அழைத்துக் கொண்டு தானும் ஒரு தரம், கடைசித் தரம், ராமேசுவரம் போய்வந்தால் நல்லது என்று எண்ணினாள் சானுப்பாட்டி. கல்யாணமாய் எவ்வளவு வருஷங்கள் ஆயிருந்துதான் என்ன? சிவராமனும் ராஜியும் இன்னும் குழந்தைகள் மாதிரிதான் இருந்தார்கள். அவர்கள் கலகலவென்ற பேச்சையும், பரிகாசத்தையும், விளையாட்டையும் முதலில் பார்ப்பவர்கள் யாரோ உறவினர்கள், ஒன்றாக வளர்ந்தவர்கள் என்று எண்ணுவார்களே தவிர, கணவன், மனைவி என்று எண்ணமாட்டார்கள். சங்கோசமில்லாதவள் ராஜம். சிவராமன் விளையாட்டுப்பிள்ளை. அவர்கள் கொஞ்ச நாள் - சிவராமன் உத்தியோகத்திலிருக்கையில் - திருவனந்தபுரத்தில் தனிக் குடித்தனம் பண்ணிய அழகைச் சானுப்பாட்டி போயிருந்து பார்த்ததில்லை. பட்டாபிராமனும் பிறரும் வர்ணித்துத்தான் கேட்டிருந்தாள். என்னவோ தெரியவில்லை. சானுவுக்கும் சிவராமன் மனைவிக்கும் ஒத்துக்கொள்ளவில்லை, அவ்வளவாக. அந்தப் பெண்ணும் அப்படி ஒன்றும் கெட்ட பெண் அல்ல. கொஞ்சம் வாய்த் துடுக்கு; அவ்வளவுதான். ஆசாரமும் மட்டுத்தான். ஆனால், இந்தக் காலத்தில் யார்தாம் அவ்வளவாக ஆசாரமாக இருந்து விடுகிறார்கள்? அதென்னவோ சானுப்பாட்டியின் பேரன் அகமுடையாள் சுவாமிமலையில் அந்த வீட்டில் அதற்குமுன் தங்கிய போதெல்லாம் ரகளையாகவே போய்விட்டது. அப்படிப் போனதற்குக் காரணம், தன் பெண் மங்களமும் அங்கிருந்ததுதான் என்று சானுப்பாட்டி எண்ணினாள். மங்களம் ஒரு விதவை; அவளுக்குப் பிள்ளைகள் இல்லை. இரண்டே இரண்டு பெண்கள்தாம். அந்த இரண்டு பெண்களும் - அவர்கள் அதிருஷ்டம் - விதவைகள்தாம். மூத்தவள் - அவள் பெயர் சாவித்திரி - கொஞ்ச காலம் தன் கணவனுடன் வாழ்க்கை நடத்திவிட்டு விதவையானவள். இளையவள் - அவள் பெயர் பவானி - வாழ்க்கை இன்பத்தையே அறியாதவள். அவளுடைய பன்னிரண்டாவது வயசில் கல்யாணம் ஆயிற்று. கல்யாணமான ஏழெட்டு மாசங்களுக்கெல்லாம் அவள் கணவன் சென்னையில் ஏதோ ஒரு விபத்தில் அகப்பட்டு மாண்டுவிட்டான். அண்ணாவின் உபதேசப்படி தன் இரண்டாவது பெண்ணைச் சென்னையில் படிக்க விட்டிருந்தாள் மங்களம். பவானி பி.ஏ. முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள்; பெண்கள் ஹாஸ்டலில் வசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் வயசு இன்னும் இருபத்திரண்டு ஆகவில்லை என்று கணக்குப் பண்ணினாள் சானுப்பாட்டி. படித்தாளே தவிரப் பவானி மிகவும் அடக்கமான பெண். சானுப்பாட்டிக்கு மிகவும் லாயக்கானவள். அவள் பி.ஏ. படிக்க நேர்ந்ததைத்தான் தலைவிதி என்று சொல்லவேணும் என்று எண்ணினாள் சானுப்பாட்டி. லக்ஷ்யம் இல்லை. பிள்ளையில்லாத குறை அவளுக்குப் பெரிய குறை. பத்தாம் பசலி ஆசாமி. அவள் சிதம்பரத்துப் பெண்ணை - வீட்டுப் புது மாட்டுப்பெண்ணை - பழைய காலத்து மாட்டுப் பெண்ணைப் பழைய காலத்து மாமியார் ஆட்டி வைப்பது போல ஆட்டி வைக்க முயன்றது பெரும் பிசகு. அது சிவராமனுக்கும், பட்டாபிராமனுக்கும், ஏன் சானுவுக்குங் கூடப் பிடிக்கத்தான் இல்லை. சொந்த மாமியார் இருந்து விட்டால் அது வேறு விஷயம். ‘மாமியார்பாடு, மாட்டுப்பெண்பாடு, நமக்கென்ன?’ என்று இருந்து விடலாம். அதுதான் இல்லையே என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள் சானுப்பாட்டி. பட்டாபிராமனின் மனைவி விசாலம், தங்கமான பெண் - சானுப்பாட்டிக்கு மிகவும் பிடித்திருந்த மாட்டுப் பெண். அவள் ஒரே ஒரு பிள்ளையையும் ஒரு பெண்ணையும் பெற்று வைத்துவிட்டு, முப்பது முப்பத்திரண்டு வயசு ஆவதற்கு முன்னரே அகாலத்தில் மரணமடைந்து விட்டாள். சானுப்பாட்டிதான் சிவராமனை எடுத்து வளர்த்ததெல்லாம். சிவராமனின் மனைவிக்கு எப்படி எப்படி இருக்க வேண்டும், எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லித்தர யார் இருந்தார்கள்? அவளுடைய பிறந்தகத்தில் எதுவுமே சரியாக நடக்கும் என்று சானுவுக்குத் தோன்றவில்லை. அவள் தாயார் பணக்காரியாம்; தகப்பனாரையும் விடப் பணக்காரியாம். அதனால், அவளுக்கு எல்லோரிடமும் ஓர் அலக்ஷ்யம். பெண்களிடம் பணம் இருந்து விட்டால் எப்பவுமே இப்படித்தான். கணவனைக் கூட மதிக்க மாட்டார்கள். மொத்தத்தில் குடும்பத்தையே குட்டிச்சுவர் ஆக்கிவிடுவார்கள் என்று எண்ணினாள் சானுப்பாட்டி. அவள் கையில் தம்பிடி கூட இல்லை. இருக்க வேண்டும், வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டதும் இல்லை. பணம் அவசியம் இல்லை அவளுக்கு. தன் உள்ளத்தாலேயே எல்ல்லோரையும் வசீகரிக்கக் கூடிய சக்தி பெற்றவள் அவள். ‘எதற்குப் பணமும் காசும்?’ என்று நினைப்பவள் சானு. சிவராமனின் மனைவிக்கு அவ்வளவாகச் சரியான பயிற்சி இல்லை. அதுதான் பெரிய குறை. அவர்கள் கொஞ்சம் மட்டமான ஜாதிதான். ஆனால், இந்தக் காலத்திலே ஜாதி, குலம் எல்லாந்தான் கவிழ்ந்து விட்டதே என்று எண்ணினாள் சானுப்பாட்டி. மட்டமான ஜாதியாக இல்லாவிட்டால், கல்யாணப் பந்தலில், அத்தனை புருஷர்களுக்கும் மத்தியில் சண்டைக்கு வந்திருப்பார்களா வீட்டு ஸ்திரீகள்? சிவராமனின் கல்யாணத்தில் மாலை மாற்றுவதற்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தை, எட்டு வருஷங்களுக்குப் பிறகு எண்ணிப் பார்க்கும் போது கூட சானுப்பாட்டிக்கு வெட்கத்தாலும், பெண்களின் எல்லை மீறிய அந்த நடத்தையாலும், உடல் குன்றியது. சம்பந்தி அம்மாவுக்கு அக்காவாம்; ஒருத்தி வந்திருந்தாள். விசுக் விசுக்கென்று நடந்து வந்து, ஒரு பந்தலில் எல்லோருக்கும் எதிரில் கணவனை, “உலக்கை மாதிரி வெறுமே உட்கார்ந்திருக்கேளே!” என்று ஏசிவிட்டு விசுக் விசுக்கென்று நடந்து உள்ளே போய்விட்டாள். அவள் கணவன் ஒரு டெபுடி கலெக்டராம் என்று எண்ண எண்ணச் சானுப்பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுடைய ஜனங்கள் எப்படியிருந்தால் என்ன? சிவராமனுக்குத்தான் என்ன வந்தது? பெண் சரியாக இருந்தால் சரிதான். சிவராமனுக்கு ஏற்ற மனைவியாக இருக்கச் சொல்லித் தர வேண்டியது தன் பொறுப்பு என்று சானுப்பாட்டி உணர்ந்தாள். இந்தத் தடவை அந்தப் பெண் வந்தால் அவளைத் தன்னுடன் ஒரு வருஷமாவது வைத்துக் கொண்டு சரியானபடி ‘டிரெய்ன்’ பண்ணவேணும் என்று தீர்மானித்தாள். சானுப்பாட்டிக்குப் போதிய பொறுமை உண்டு; அளிபவ ஞானமும் உண்டு. சிவராமனுக்கு எந்த எந்த விஷயங்களில் என்ன என்ன பிடிக்கும் என்று அவளுக்குத் தெரியும். பதினைந்து வருஷங்களாகத் தாயார் ஸ்தானத்திலிருந்து, அவனுக்கு வேண்டியதை எல்லாம் அன்புடன் செய்து வந்தது அவள்தானே! சிவராமனின் எதிர்கால வாழ்வு சௌகரியமாக இருப்பதற்கு வேண்டியதைச் செய்வதும் அவள் கடமைதான். இருந்தாலும் சிவராமனுக்கு முன்கோபம் சற்று அதிகம்... பேரப் பிள்ளையைப் பற்றிச் சானுப்பாட்டியின் இந்தச் சிந்தனைகள், திடீரென்று யாரோ அருகில், “அக்காடியோ!” என்று கூப்பிடுவது போலக் காதில் விழவே கலைந்தன. குரல் அவளுடைய இரண்டாவது பிள்ளை கிருஷ்ணஸ்வாமியின் குரல்போல இருந்தது. ஆனால், அவன் அப்போது கல்கத்தாவில் அன்றோ இருந்தான்? சானுப்பாட்டி திடுக்கிட்டுச் சுற்று முற்றும் பார்த்தாள். இடைக்கட்டுக் கதவு அவள் சாத்தியபடியே இருந்தது. கூடத்தில் படுத்திருந்தவர்கள் எல்லோரும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். சானுப்பாட்டிக்கு வீட்டில் அக்கா என்று தான் பெயர். அவளுடைய மூத்தபிள்ளை பட்டாபிராமன் முதல் இரண்டு வயசாகாத சாவித்திரியின் பிள்ளை வரையில் எல்லோரும் அவளை அக்கா என்றுதான் அழைப்பார்கள். வீட்டில் எல்லோருக்கும் மூத்தவள் அவள் தான். ஆனால், பெயரில் மட்டுந்தான் அக்கா அவள். அந்தக் குடும்பத்திலே அவளைத் தான் ஸ்ரீதேவி என்று சொல்லவேண்டும். அந்தக் குடும்பம் அவளால்தான் ஒருமைப்பட்டுச் சரியானபடி நடந்தது என்று சொல்வது மிகையாகாது. அவளுக்கு அக்கா என்று பெயர் வந்தது ஒரு விசேஷ காரணத்தால். அவளுக்குக் கல்யாணமானபோது - அது எப்போதோ, புராதன காலத்தில் நடந்த காரியம், அவள் விதவையாகியே இப்போது முப்பது வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டன - அவள் ஓர் அநாதை. தாயோ, தந்தையோ அற்ற ஏழைப் பெண். அநாதைத் தங்கை ஒருத்தியும் அவளுக்கு உண்டு. ஐந்தாறு வயசிருக்கும் தங்கைக்கு. அப்போது ஜானகி (பாட்டியான பின் சானுப்பாட்டி) கல்யாணமான பின் சிவகங்கையிலிருந்து புக்ககமான சுவாமிமலைக்கு வந்தபோது, அவளுடன் அவள் தங்கையும் வந்தாளாம். போக வேறு இடம் அந்தத் தங்கைக்கு இல்லை. ஜானகி தங்கையை வளர்க்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டாள். அப்போது ஜானகிக்கு வயசு பதினைந்துக்குள்தான் இருக்கும். ஜானகியின் புக்ககத்தில், ஜானகியைக் கஷ்டப்படுத்தியவர்கள் கூட, ஜானகியின் தங்கை விஷயத்தில் வெகு பிரியத்துடனும் அன்புடனும் நடந்து கொண்டார்கள். ஜானகியின் தங்கை தன் குணங்களாலும், நடை, உடை, பாவனைகளாலும் எல்லோரையும் வசப்படுத்திக் கொண்டாள். தன் ஸ்திதியை உள்ளபடி அறிந்து தன் வயசையும் மீறிய அறிவுடன் நடந்து கொண்டாள் அவள். ஜானகியின் தலைச்சன் பிள்ளை பட்டாபிராமன் பிறந்தான். இரண்டு மூன்று வருஷங்களுக்கெல்லாம் தன் ஞாபகார்த்தமாக அந்தப் பிள்ளைக்குத் தாயை “அக்கா” என்று அழைக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டுத் திடீரென்று பதினோராவது வயசில் இறந்துவிட்டாள் அவள். இப்போது, அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களில் சானுப்பாட்டியைத் தவிர, வேறு யாருக்கும் அந்தத் தங்கையைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அவள் ஞாபகம் அழியாமல் இருக்கும்படி, அதாவது சானுப்பாட்டி உள்ள வரையில் அழியாதிருக்கும்படியாக, அக்கா என்ற பெயர் நிலைத்து விட்டது. அக்கா என்றுதான் சானுப்பாட்டியை அவள் பெண்ணும், பிள்ளைகளும், பேரன், பேத்திகளும், கொள்ளுப் பேரன் பேத்திகளும், மாட்டுப்பெண்களுங்கூட அழைத்தார்கள். சிவராமன் மனைவி ராஜமும் அக்கா என்றுதான் அவளைக் கூப்பிடுவாள். அப்பெயர் சமயத்துக்கு ஏற்றபடி, கூப்பிடுகிறவர்களுக்கு ஏற்றபடி மருவியும் சிதைந்தும் வழக்கில் இருந்தது. “அக்காடி” என்பது அவளுடைய இரண்டாவது பிள்ளை கிருஷ்ணஸ்வாமி, அவளுக்கு இட்டிருந்த செல்லப் பெயர். சிறு வயசிலிருந்தே அவன் தன் தாயை மற்றவர்களைப் போல் அழைக்காமல் அக்காடி என்றுதான் அழைப்பான். ஏழெட்டு வயசு ஆகும் வரையில் அவன் மழலை மாறாமலே இருந்தது. அவன் மழலை பேசுவதைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே வேண்டும் என்று பலர் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவன் வாயைக் கிண்டுவார்கள். தேசிங்குராஜன் பாட்டை அவன் ராகம் போட்டுப் பாடும்போது கேட்க வேடிக்கையாக இ ருக்கும். சானுப்பாட்டியின் முகம் வெகு காலத்துக்கு முந்திய அந்த இன்பத்தின் ஞாபகத்தில் ஈடுபட்டு மலர்ந்தது. அந்தப் பிள்ளை காரணமாகச் சானுப்பாட்டி பின்னர் எவ்வளவோ கஷ்டப்பட்டாள். வீட்டை விட்டுக் காரணமில்லாமல் ஓடிப்போன பையனைப் பற்றி இருபத்திரண்டு வருஷங்கள் தகவலே கிடைக்கவில்லை. தாய் மனம் எவ்வளவோ பாடுபட்டது. பின்னர், மீண்டும் பிள்ளையைப் பெற்றெடுத்ததைப் போலச் சந்தோஷப்பட்டாள். லக்ஷ்மி என்கிற அபூர்வமான குணங்கள் படைத்த ஒரு பெண்ணை மணம் செய்வித்தாள். லக்ஷ்மி இறந்தது மட்டுமின்றிப் பெற்றெடுத்த பிள்ளையையும் அழைத்துக் கொண்டு போய்விட்டாள். இரண்டாவது மணம் செய்துவைக்க வேண்டுமென்று சானு முயன்றதெல்லாம் வீணாயிற்று. சந்நியாசி மாதிரி வடக்கே எங்கேயோ காலங் கழித்துக் கொண்டிருந்தான் அவன் - அவளுடைய இரண்டாவது ‘குழந்தை’. இப்போது அந்தக் குழந்தைக்கு வயசு ஐம்பது, ஐம்பத்திரண்டு ஆகிவிட்டது. சானுப்பாட்டிக்கே வயசு கிட்டத்தட்ட எண்பது இருக்கும். ஆயுள் பூராவும், நாள் தவறாமல் உழைத்து உழைத்து, உறுதியும் வலுவும் பெற்று அவள் சரீரம் அவள் வயசுக்குத் தளராமலே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவளுடைய கண்கள் மட்டும் - அதுவும் ஆறேழு மாசங்களாகத்தான் - கொஞ்சம் மங்கிவிட்டன. கிழத்தனத்தின் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் அவளிடம் அவ்வளவாகச் செலாவணியாகவில்லை. நல்லதோ, கெடுதலோ, கல்யாணமோ, சீமந்தமோ, சிராத்தமோ - எதற்குமே அவள் பிறர் உதவியை நாடாமல் தனியாகவே செய்யவேண்டியதை எல்லாம் செய்துவிடுவாள். மனத் தெம்புடன் உடல் தெம்பும் போதியது இருந்தது அவளுக்கு. சானுப்பாட்டியின் வாழ்க்கை பரிபூரணமானது என்றுதான் சொல்லவேண்டும். குடும்பக் கவலைகளுக்கு என்றுமே குறைவில்லை அவளுக்கு. சதா யாராவது நாட்டுப் பெண்ணோ, பேத்தியோ பிரசவத்திற்கென்று சுவாமிமலையில் வந்து தங்குவார்கள். பட்டாபிராமனின் பெண் பாகீரதி வந்திருந்தாள் இப்போது. போன வருஷம் வெங்குட்டுவின் மனைவி மதுரம் வந்திருந்தாள். தன் பேரன் பேத்திகளைப் பெற்றெடுத்து வளர்க்க உதவுவதைத் தவிரச் சானுப்பாட்டிக்கு வாழ்க்கை லக்ஷ்யம் வேறு என்ன இருக்க முடியும்? வாழ்க்கை பூராவும் இன்பமயமாக இருந்துவிடுமா? எத்தனையோ துன்பங்களும் உண்டு. கேட்க வேண்டுமா? வாழ்க்கையில் அவளுக்கு வெறுப்பளித்து அவளைச் சோர்வுறச் செய்து, திணறடித்த சம்பவங்களிலே முக்கியமான முதல் சம்பவம் முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன் நடந்தது. அவளுடைய மூன்றாவது பிள்ளை ராமஸ்வாமி காளைப் பருவத்தில் கண்காணாத இடத்தில், வேண்டியவர் யாருமே அருகில் இல்லாமல் அநாதை மாதிரி இறந்து வைத்தான். அதற்குப் பிறகு, ஒருவர் பின் ஒருவராக அவள் கணவன், மூத்தப் பிள்ளையின் பெண்டாட்டி, மாப்பிள்ளை, பெண் வயிற்றுப் பேத்தியின் கணவன், இரண்டாவது பிள்ளையின் பெண்டாட்டி இப்படி வரிசையாக நாலைந்து வருஷங்களுக்கு ஒருவராகக் குடும்பத்திலே சாவு. ஏதோ சாபக்கேடு போலத்தான் இருந்தது. இல்லாவிட்டால் சின்னஞ் சிறிசுகளையும், பிள்ளை குட்டிகளையும் அழைத்துப்போன யமன் கண்ணில், சானுப்பாட்டி இன்னமும் படாமல் இருப்பானேன்? அவள் இருப்பதால் யாருக்கு என்ன பிரயோசனம்? “அக்காடியோ!” என்று மீண்டும் இரண்டாவது பிள்ளை கிருஷ்ணஸ்வாமியின் குரல் அவள் காதில் ஒலித்தது. ஆச்சரியத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள் சானுப்பாட்டி. “என்ன இது? ஏதாவது கெடுதல் நடக்காமல் இருக்க வேணுமே” என்று பிரார்த்தித்தவளாகப் பூஜை அலமாரிப் பக்கம் நோக்கினாள். அவள் சற்று முன் ஏற்றிவைத்திருந்த குத்துவிளக்கு அணைந்துவிட்டது. அதன் முகம் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது. “அக்காடியோ!” என்ற குரல் மீண்டும், மூன்றாவது முறை தெளிவாக அவள் காதில் விழுந்தது. “ஈசுவரனே! இன்றைப் போது நன்றாக விடிய வேணுமே!” என்று பிரார்த்தித்துக் கொண்டே சானுப்பாட்டி குத்துவிளக்கை மறுபடியும் ஏற்றினாள். |