![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 06 அக்டோபர் 2025 06:00 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
அகல் விளக்கு அறிமுகம் சந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரிவு விரிந்து பரந்து ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்குக் கொண்டு சேர்த்துவிட்டது. சந்திரனுடைய வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது. வேலய்யனுடைய வாழ்வு சமவெளியில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றை ஒத்தது. சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல், ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக் கொண்டு, மற்றொருபுறம் அவற்றிற்கு மாறான இயல்புள்ள இலைகளைக் கொண்டிருப்பது. வேலய்யனுடைய வாழ்க்கை துளசிச் செடியைப் போன்றது. துளசிச் செடியில் அழகிய மலர்கள் இல்லை, வெறுக்கத்தக்க பகுதியும் இல்லை. மலரும், இலையும், தண்டும், வேரும் எல்லாம் ஒத்த ஒரே வகையான மணம் கமழ்வது அது. சந்திரனைப் போல் நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று அதனால் செருக்கடைந்து சீரழிந்து தாமும் கெட்டுப் பிறர்க்கும் சுமையாக வாழ்வதைவிட வேலய்யனைப் போல் அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ்ந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கோள் இக் கதையைப் படிக்கின்றவர்கள் உள்ளத்தில் உருவாகும். "ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்க வேண்டிய கட்டான உடம்பும், ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ் அந்த அம்மையார்க்குத் தனிமைத் துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்து விட்டது" என்ற வரிகளைப் படிக்கும்போது துக்கம் நம் நெஞ்சை அடைக்கிறது; வாய்விட்டுக் கதறி அழவேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது. அத்தகைய துக்கத்தைப் பெற்ற பாக்கிய அம்மையார் தம் துன்பங்களை எல்லாம் மறந்து ஆற்றியிருந்து திருக்குறளையும், திரு.வி.க. போன்ற பெரியார்களின் நூல்களையும் படித்துப் பயன்பெற்று ஒளிவிளக்காய்த் திகழ்கிறார். அந்த விளக்கின் ஒளிபட்ட கற்பகமும் கயற்கண்ணியும் மணிமேகலையும் நற்பண்புகள் பல பெற்று வாழ்க்கைச் சிக்கலில் உழலாமல் உயர்கின்றார்கள். அறிவொளியை அளிக்கும் கல்வியைப் பயின்றும் மூட நம்பிக்கைகள் பலவற்றை வளர்த்துக் கொண்ட மாலன் குறுக்கெழுத்துப் போட்டியிலும், குதிரைப் பந்தயங்களிலும் பணத்தை இழந்து மனம் ஏங்குகிறான். உழைப்பு இல்லாமலும் எளிதாகவும் செல்வத்தைச் சேர்க்க மனம் எண்ணுகிறது. செம்பைப் பொன்னாக்கும் ரசவாத வித்தை காட்டும் சாமியார்களின் பின் சென்று அலைகிறான். அவன் வாழ்வில் இரக்கம் கொண்ட வேலய்யன் "எனக்கு உழைப்பில் நம்பிக்கை உண்டு, அறத்தில் நம்பிக்கை உண்டு" என்று கூறி மாலனுடைய தவறான நம்பிக்கைகளைப் போக்கும் முயற்சி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. "என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா? ... ஆண்கள் இருவர் பழகும்போது அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம், ஏமாற்றம் எல்லாம்?" .... இமாவதியின் ஆழ்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த இந்தக் கேள்வியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எண்ணி எண்ணி விடை காண முடியுமானால், சமுதாயம் பண்பாடு மிக்கதாய் எளிதில் முன்னேற்றம் எய்தலாம். சீரழிந்த சந்திரன் தொழுநோயின் பிணிப்பிலேயே உழன்று வருந்திக் கடைசியாக உணர்வுபெற்று உண்மைகளையெல்லாம் வெளியிட்டு ஆத்திரத்துடன் பேசும் பேச்சுகள் உள்ளத்தை உருக்குகின்றன. "நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும், அறிவையும் அப்போது எல்லாரும் விரும்பினார்கள், பாராட்டினார்கள், என்ன பயன்? வர வர எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது, மங்கிவிட்டேன், நீதான் நேராகச் சுடர்விட்டு, அமைதியாக எரியும் ஒளிவிளக்கு" என்று வேலய்யனிடம் சந்திரன் கூறும் கருத்துகள் கதையின் கருப்பொருளாக அமைகின்றன. "டே எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா, வேகம் உன்னையும் கெடுக்கும், உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்" என்று சைக்கிளில் செல்பவன் கூறும் மொழிகள் நம்மைத் தடுத்தாட் கொள்கின்றன. "விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும். தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக்கொண்டு, உன் விருப்பம் போல் ஆட முடியாது, தெரிந்து கொள்" என்று பந்தாட்டக்காரன் சொல்லும் சொற்கள் நமக்கு அறன் வலியுறுத்தலாக எண்ணிக் கொள்ளவேண்டும். "படிப்பு எங்கே? பண்பு எங்கே? அழகுக்கு அழகு, அறிவுக்கு அழகு, அன்புக்கு அழகு என்று விலைபோக வேண்டிய நல்ல வாழ்வுகள் பணத்துக்கு அழகு, பணத்துக்கு அறிவு, பணத்துக்கு அன்பு, என்று விலை போகும் கொடுமையை நன்றாக உணர்ந்தேன்... படித்த இளைஞர்களும், பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூற முடியாது" என்று வரும் பகுதிகளைப் படிக்கும் போது, இன்று தமிழ்ச் சமுதாயத்தில் வளர்ந்து மூடியுள்ள சீர்கேடுகளை எண்ணி எண்ணிப் பண்புடையார் உள்ளத்தில் பொங்கி எழும் குமுறலையே காண்கின்றோம். "கோவலனுடைய தவறு நன்றாகத் தெரிந்திருந்தும் எதிர்த்துப் பிரிந்து வாழ்வதை விட, அந்தத் தவறான வாழ்வுக்கும் துணையாக இருந்து சாவதே நல்லது என்ற துணிவு கண்ணகியிடம் இருந்தது. அதனால்தான், பொருள் இழந்து வருந்திய கணவனுக்குத் தன் கால் சிலம்பைக் கொடுக்க முன் வந்தாள். கணவனைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாதபோதும் அந்த வாழ்வுக்குத் துணையாக இருந்து விட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது. குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்குக் கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை அழிக்கத் துணியும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும்! எவ்வளவு தியாகம் வேண்டும்!" என்ற பகுதி துறவியான இளங்கோவடிகள் கண்ணகியின் கதையைக் காப்பியமாகப் பாடிய பெருமையைப் பேசுகிறது. தமிழ் மொழியின் ஒலிவளம், தமிழ் நாட்டின் நான்கு வகை நில அமைப்பு முதலான சிறப்புகளையெல்லாம் ஆசிரியர் எடுத்துச் சொல்லும் போது யாருக்குத்தான் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உண்டாகாமல் போகும்? இன்னும் ஆசிரியரின் பொன்னான கருத்துகள் எத்தனையோ, இந்நூலில் கற்கின்றோம். வெறும் பொழுது போக்கிற்காகவே கதைகளைப் படித்துக் காலத்தை வீணாக்கிய தமிழ் மக்களை, படிக்கத் தெரிந்த இளைஞர்களை இத்தகைய கதை நூல்கள் அல்லவோ கருத்துலகத்தில் ஈர்த்து, வாழ்க்கையின் அடிப்படையில் உள்ள சிக்கல்களை எண்ணச் செய்து வருகின்றன? கா.அ.ச. ரகுநாயகன் திருப்பத்தூர், வ.ஆ. 31-1-1958 |