அகல் விளக்கு 23 கோவைக்குச் சென்றதும் மாலனுடைய கடிதம் பார்த்தேன். வேலை எங்கும் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தான். நான் இருக்கும் கூட்டுறவுத் துறையிலேயே தனக்கும் வேலை தேடித் தருமாறு கோரி இருந்தான். ஒரு வேளை சோதிடர் சொன்னதைக்கேட்டே இந்த முடிவுக்கு வந்தானோ என எண்ணினேன். இயன்ற முயற்சி செய்து கேட்டும் பார்த்தேன். பி.ஏ. ஆனர்ஸ், எம்.ஏ. படித்தவர்கள் போட்டியிட்டுக்கொண்டு வருவதால் பி.ஏ.வில் ஒருமுறை தவறியவர்களுக்கோ, மூன்றாம் வகுப்பில் தேறியவர்களுக்கோ இடமே இருக்காது என்று சொல்லிவிட்டார்கள். அதை அவனுக்கு வருத்தத்தோடு தெரிவித்தேன். பிறகு அவன் எழுதிய கடிதத்தில் வேறு ஏதாவது ஒரு வேலை தேடித்தருமாறு கேட்டிருந்தான். வேறு சில துறைகளில் முயன்றேன். விண்ணப்பமும் அனுப்புமாறு செய்தேன். வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. கயற்கண்ணியோடு தனியே வாழ்ந்த வாழ்க்கை இன்பமாகவே இருந்தது. பல கடமைகளைச் செய்து முடித்து அலுத்தபின் வீட்டுக்கு வருவது ஆறுதலாக இருந்தது. அவளுடைய இளைமையழகும் இனிமைக் கவர்ச்சியும் எனக்குக் கள்வெறி ஊட்டி என்னுடைய களைப்பை மறக்கச் செய்தன. தனியே நான் மட்டும் வீட்டில் இருந்தபோது அவள் கரவற்ற உள்ளத்தோடு சிறு பெண்போல் என்னென்னவோ பேசுவாள். என் வயதையும் பொறுப்பான தொழிலையும் மறந்து நானும் சிறு பையன் போல் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பேன். உண்மையாகவே, அவள் பேசச் சலிக்கவில்லை; நான் கேட்கச் சலிக்கவில்லை. அவள் பேசிய பழைய பேச்சையே பேசினாலும் அதைக் கேட்பது எனக்கு இன்பமாகவே இருந்தது. தன் தாய் வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்களைப் பற்றிப் பேசுவாள். அந்த ஊரில் சில பெண்கள் கணவன்மாரோடு சண்டை போடும் வகைகளைப் பற்றிப் பேசுவாள். என்னுடைய தங்கையும் அவளுடைய கணவரும் பேசும் முறைகளையும் பழகும் முறைகளையும் பற்றிச் சொல்வாள். வாலாசாவில் கண்ட பலவகைப் பெண்களைப் பற்றியும் மதிப்புரை வழங்குவாள். பாக்கியத்தைப் பற்றி அடிக்கடி சொல்வாள். அவரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தனி மதிப்புத் தந்து அன்போடு பேசுவாள். சில சமயங்களில் அவருடைய திக்கற்ற வாழ்வை நினைத்து இரக்கத்தோடு பேசுவாள். அவர் தனக்குச் சொல்லிக் கொடுத்த சமையல் பாகங்களைப் பற்றி எனக்குச் சொல்வாள்; நான் ஒன்றும் விளங்காமலே கேட்டுக் கொண்டிருப்பேன். மிளகுவடை, கோதுமை அல்வா, தேன் குழல் இவற்றைப் பாக்கியம் கைப்படச் செய்தால் தனிச் சுவையாக இருக்கும் என்பாள். "உனக்கு என்ன தெரியும்? நீ நேற்று வந்தவள். நான் குழந்தையாக இருந்தது முதல் அவர் கைப்படச் செய்து கொடுத்த தின்பண்டங்களைச் சாப்பிட்டுப் பழகியிருக்கிறேன்" என்று நானும் என்னுடைய இளமை அனுபவங்களை மெல்லச் சொல்வேன். வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பதில் பாக்கியத்துக்கு யாரும் இணை இல்லை என்று என் மனைவி சொன்னபோது கேட்ட என் உள்ளம் குழைந்தது. அறிவுத்திறன் உடையவர்கள் எந்தச் சிறு வேலையில் ஈடுபட்டாலும் தனிப்பெயர் பெற முடிகிறது என உணர்ந்தேன். பாக்கியம் தோட்டத்தில் நடத்தும் பள்ளிக் கூடத்தைப் பற்றி மனைவி பல குறிப்புகள் சொன்னாள். எந்தப் பையனையும் பெண்ணையும் அடிக்காமலே அன்பாகச் சொல்லித்திருத்தியது பற்றிப் பல நிகழ்ச்சிகளைச் சொன்னாள். பக்கத்துத் தெருவில் ஒரு பையன் பெற்றோர் என்ன சொன்னாலும் கேட்காமல் பள்ளிக்கூடத்துக்கும் போகாமல் அடம் பிடித்தானாம். அவனை முதலில் பாக்கியம் சேர்த்துக் கொள்ளவில்லையாம். "பிள்ளைகள் மிகுதியாக இருக்கிறார்கள். இடம் இல்லை. என்னாலும் கவனிக்க முடியவில்லை" என்று பாக்கியம் சொல்லி மறுத்து விட்டாராம். கடைசியில் பெற்றோர் என்னுடைய தாயிடம் வந்து முறையிட்டார்களாம். தாய் சிபாரிசு சொல்லவே சரி என்று பாக்கியம் சேர்த்துக் கொண்டாராம். அந்தப் பையனைத் தோட்டப் பள்ளிக்கூடத்தில் உட்கார வைத்து, படி என்று சொல்லவே இல்லையாம். அவன் பக்கத்தில் உட்கார்ந்து, கதைகளே சொல்லிக் கொண்டிருந்தாராம். இப்படி இரண்டு வாரம் கதை சொல்லிச் சொல்லி அவனுடைய மூளைக்கு உணவு கொடுத்த பிறகு ஒரு நாள் அவனே பெற்றோரைக் கேட்டு ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டு வந்தானாம். அதையும் பார்த்துவிட்டுப் பாக்கியம் பேசாமலே இருந்தாராம். அவனே அவரிடம் புத்தகத்தைக் காட்டிக் கற்றுக் கொடுக்கும்படி சொல்லும் நிலை வந்ததாம். இப்போது அந்தப் பையன் மற்றவர்களைவிடப் படிப்பில் ஆர்வம் மிகுந்தவனாக இருக்கிறானாம். இதை கேட்டவுடன் நான், "பாக்கியமே சாமி ஆகிவிட்டாரா? சரிதான்" என்றேன். "சின்ன பெண்ணைத் திருத்துவதற்கு வேறு என்ன செய்வது?" என்றாள் மனைவி. "நீ அந்தப் பிள்ளைகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்திருக்கிறாயா?" என்று மனைவியைக் கேட்டேன். "பாக்கியம் ஏதாவது வேலையாகப் போனால், நான் போய்ப் பார்த்துக் கொள்வேன். அய்யோ! அந்தச் சிறுவர்கள் பொல்லாத அமர்க்களம் செய்வார்கள். இது அது என்று என்னென்னவோ கதை கேட்பார்கள். கதையில் ஏதாவது மறந்து விட்டுவிட்டால், தவறாகச் சொல்லிவிட்டால், பூனைக்குப் பதிலாகக் குரங்கு என்று வாய் தவறிச் சொல்லி விட்டாலும், எல்லாச் சிறுவர்களும் சேர்ந்து கொல்லென்று சிரிப்பார்கள். அய்யோ! அவர்களை மேய்ப்பது துன்பமான வேலை! அந்த அம்மாவுக்குச் சலிப்பே இல்லை" என்றாள். "என்ன வரும்படி கிடைக்கும்" என்று கேட்டேன். "சில பெற்றோர்கள் பணம் கொடுக்கிறார்கள். சிலர் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்காக அந்த அம்மாவும் பணம் கேட்டு வாங்குவதில்லை. எப்போதாவது கிடைத்ததை, அரிசி காய் முதலியவற்றைக் கொடுத்தனுப்புவார்கள். அவற்றை எல்லாம் நம் வீட்டுக்குத்தான் கொடுத்துவிடுவார். கையில் ஒன்றும் சேர்த்து வைப்பதில்லை. அவ்வப்போது கிடைப்பதை அம்மாவிடத்தில் கொடுத்துவிடுகிறார். அப்படி நூற்றைம்பது ரூபாய் சேர்ந்தது. அதில் இரண்டு மோதிரம் செய்து, உங்கள் தங்கைக்கு ஒன்றும் எனக்கு ஒன்றுமாகக் கொடுத்தார். இதைப் பார்த்து உங்கள் தம்பி தனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்" என்று தன் கைவிரலில் அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தைக் காட்டினாள். அதைக் கண்டேன். என் நெஞ்சம் உருகியது. திக்கற்றவர் உழைத்து வயிறு வளர்த்து அதில் மீதியானதைக் கொண்டு இப்படி நகையும் சேர்த்துத் தருகிறாரே என்று அவருடைய உள்ளன்பை நினைத்தேன். கலங்கிய என் கண்களைக் கயற்கண்ணி பார்த்தாள். "நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தெரியும். வேண்டா என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். அந்த அம்மா கேட்கவில்லை. 'மறுக்கவேண்டா. மறுத்தால் பாக்கியத்துக்கு வருத்தமாக இருக்கும்; வாங்கிக்கொள்' என்று மாமி சொன்னபிறகுதான் போட்டுக் கொண்டேன்" என்று அவள் தயங்கித் தயங்கிப் பேசினாள். "வாங்கிக் கொண்டது தவறு அல்ல. அந்த அம்மா யார்? நாம் யார்? அவருடைய உள்ளத்தின் அன்பை நினைத்துத்தான் உருகுகிறேன்" என்று கண்களைத் துடைத்தேன். "அது மட்டும் அல்ல. ஆளுக்கு ஒரு சோளி தைத்துக் கொடுத்தார்கள். ஆளுக்கு ஒரு திருக்குறளும் பெண்ணின் பெருமையும் புதுப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்தார்கள்." "நீ படித்து வருகிறாயா? நான் ஒரு நாளும் பார்த்ததில்லையே". "நீங்கள் வெளியூர்க்குப் போகும்போது படிக்கிறேன். நீங்கள் வீட்டில் இருக்கும்போது நான் ஏன் படிக்கவேண்டும்?" "திருக்குறள் பாதி விளங்குகிறது. பெண்ணின் பெருமை விளங்கவில்லை. உங்கள் தங்கையைப் பத்தாவது வரையில் படிக்க வைத்தார்கள். என்னை யார் அப்படிப் படிக்க வைத்தார்கள்? கிராமப் பள்ளிக்கூடத்தில் எட்டாவதோடு சரி" என்றாள். "அதைப் பற்றிக் கவலை இல்லை. பாக்கியம் எத்தனையாவது படித்தார்? படிக்கப் படிக்கத்தானே அறிவு வளரும்" என்றேன். உடனே, "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி" என்ற குறளைச் சொன்னாள். எனக்கு வியப்பாக இருந்தது. "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி சொல்லும் என்பதுபோல் இருக்கிறதே பாக்கியத்தோடு பழகியதால்-" நான் சொல்லி முடிப்பதற்குள், "அந்த அம்மா அடிக்கடி சொன்ன குறள் இது. அதனால் மனப்பாடம் ஆகிவிட்டது" என்றாள். இருந்தாலும், புத்தகப் படிப்பில் அவளுக்கு, ஆர்வம் இல்லை. போகப் போக அதை நன்றாக உணர்ந்தேன். புத்தகப் படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், அறிவுப் பசி மட்டும் இருந்தது. செய்தித்தாள் படித்து ஏதாவது சொன்னால், ஆர்வத்தோடு கேட்பாள். வார இதழிலிருந்து ஏதாவது கதை படித்துச் சொன்னால் கேட்பாள். நாளடைவில் அவளே அந்த இதழ்களில் இருந்த கதைகளைப் படித்துப் பழகினாள். பழக்கம் விடவில்லை. வார இதழ்கள் எப்போது வரும் என்று காத்திருந்தாள். சிறு கதைகளைவிடத் தொடர் கதைகளில் ஆர்வம் காட்டினாள். போன வாரத்தில் கதைத் தலைவன் இந்த ஊருக்குப் போனான். தலைவி இப்படி இருந்தாள். இந்த வாரத்தில் என்ன நடக்குமோ தெரியவில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதைவிட ஆர்வம் மிகுதியாக இருந்த ஒரு துறை சினிமா என்று தெரிந்து கொண்டேன். சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசையை அவள் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். நெருங்கிப் பழகிய பிறகு, "அங்கே புதுப்படம் ஓடுகிறதாமே இங்கே புதுப்படம் ஓடுகிறதாமே. வாங்க போகலாம்" என்று என்னை வருமாறு வற்புறுத்தலானாள். எனக்கு வேலை நெருக்கடி மிகுதியாக இருந்த நாட்களில் "உங்களுக்கு வேலை தீர்ப்பாடு இல்லை. நீங்கள் வரமாட்டீர்கள். அந்த வீட்டுப் பெரியம்மா போகிறார்களாம். நான் அவர்களோடு போகட்டுமா?" என்று அனுமதி கேட்டாள். அவள் விருப்பம்போல் இசைந்து போகச் செய்தேன். ஆனாலும் அவளுடைய சினிமா வேட்கை தீரவில்லை. போன ஆண்டில் பார்த்த பழைய படமே திரும்பி வந்தால், மறுபடியும் போய்ப் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். வேண்டா என்று தடுத்தால் உடனே அவளுடைய முகம் மாறுவதைக் கண்டேன். அது எனக்கும் வருத்தமாக இருந்தது. இந்த வகையில் அவளைத் திருத்த முடியாதுபோல் இருக்கிறதே என்று அவள் விருப்பம் போல் விட்டேன். ஓய்வு கிடைத்தபோது நானே அவளைச் சினிமாவுக்கு அழைத்துச் சென்றேன். ஒருமுறை அடுத்தடுத்து மூன்று நாள் படம் பார்க்கப் போயிருந்தோம். அப்போது நான் விளையாட்டாக ஒரு தந்திரத்தைக் கையாண்டேன். வீட்டுக்கு வந்த பிறகு, சினிமா நடிகைகளைப் பற்றியே புகழ்ந்து பேசினேன். இன்னாருடைய முகவெட்டு இப்படி, கண் இப்படி, புருவத்தின் அழகே தனி, கன்னமும் உதடுகளும் அமைந்த அமைப்பே சிறப்பு. மார்பு இப்படி, வயிறு இப்படி கைவிரல்கள் இப்படி, கழுத்தின் அழகு இப்படி, மூக்கின் எழில் இப்படி, இன்ன நடிகையின் கூந்தல் அழகே அழகு, பேசும்போது அவளுடைய உதடுகளின் அசைவு என்ன அழகு, நடக்கும்போது என்ன ஒயில், கைகளை வீசும்போது அதுவே ஒரு தனிக்கலை, அப்படி எட்டிப் பார்க்கும்போதே உயிர் போகும்போல் இருக்கிறது. ஒரு சிறு கண்சிமிட்டுக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடு ஆகாது என்று இப்படியே நாள்தோறும் ஒரு நடிகையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவள் ஒரு நாள் பொறுத்தாள், மறுநாளே என் பேச்சில் வெறுப்புக் காட்டத் தொடங்கினாள். பிறகு நான் இந்தப் பேச்சில் ஈடுபட்டபோதெல்லாம் எழுந்து போய்விட்டாள். சினிமாப் படங்களைப் பற்றி எந்நேரமும் பேசிக் கொண்டிருந்தவள், என் போக்கு இவ்வாறு ஆன பிறகு அந்தப் பேச்சையே விட்டுவிட்டாள். நானோ விடவில்லை. இந்த விளையாட்டின் எல்லைக்குப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று முனைந்தேன். ஒரு நாள் அவள் உணவு பரிமாற வந்தபோது, அவளுடைய கால்களைப் பார்த்தபடியே இருந்தேன். "என்ன, சினிமா நட்சத்திரங்களின் நினைப்பா?" என்றாள். "ஆ ஆ! அந்த படத்தில் பார்த்த நடிகை உன்னைப் போல் நடந்து வரும்போது ஆ ஆ! என்ன அழகு, என்ன ஒய்யாரம்! அந்தக் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது. ஒரு ரோசாப்பூவை ஒய்யாரமாகப் பறித்து அவள் தன் தலையில் சூட்டிக் கொண்டபோது அந்தக் கையை எடுத்ததே ஒரு கலை! அந்த விரல்களின் வளைவு நெளிவு அடடா! பூவைத் தலையில் சூடிக்கொண்டே அவள் திரும்பிப் பார்த்த பார்வை! அடடா! உயிரே கொள்ளை போகிறாற் போல் இருந்ததே!" என்றேன். "அய்யய்யோ! வர வர ஆபத்தாக வந்து முடியும்போல் இருக்கிறதே! உங்களுக்கு நடிகைப் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருக்கிறதே! என்ன இப்படிக் கெட்டுவிட்டீர்களே! இனிமேல் தயவு செய்து சினிமாவுக்கே போகவேண்டா. நானும் போகப் போவதில்லை. அடிக்கடி சினிமா பார்த்தால் குடும்ப ஆண்கள் கெட்டுப் போவார்கள் போல் இருக்கிறதே" என்றாள். "ஆண்கள் கெட்டுப் போவது போல் பெண்களும் கெட்டுப் போவார்கள் அல்லவா?" என்றேன். "ஒரு காலும் பெண்கள் இப்படிக் கெட்டுப்போக மாட்டார்கள். உங்களுக்குத்தான் அந்த நட்சத்திரங்கள் கண்ணிலேயே வந்து குடிபுகுந்து விடுகிறார்களே, நாங்கள் படம் பார்க்கிறோம். கதை தெரிந்து கொள்கிறோம். வந்து விடுகிறோம்." "எல்லோருமா அப்படி?" "யாரோ சில பெண்கள் உங்களைப் போல் பைத்தியம் பிடித்துப் பிதற்றுவார்கள். நாங்கள் அப்படி ஒருநாளும் நினைக்கவே மாட்டோம். இது என்ன அவமானம்! யாராவது கேட்டால் என்ன எண்ணுவார்கள்?" என்று கடுகடுப்பாகப் பேசினாள். மறுநாள் காலையில் மற்றொரு தந்திரம் செய்தேன். உணவு முடித்து அலுவலகத்திற்குச் செல்வதற்குமுன் கூடத்தில் இருந்த ஒரு காலண்டரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சினிமா நடிகையின் படம் இருந்தது. அவளுடைய தோற்றமும் பார்வையும் அழகாக அமைந்திருந்தன. நான் அதைப் பார்த்தபடியே நெடுநேரம் இருந்தேன். கூடத்துப் பக்கமாக மனைவி வந்தபோது, நடிகையின் அழகை அனுபவிப்பது போல் பாசாங்கு செய்தேன். அழகில் மயங்கிப் பார்ப்பதுபோல் பார்த்து அடிக்கடி தலையை அசைத்துக் கொண்டிருந்தேன். வந்தவள் விர்ரென்று போய்விட்டாள். அன்று மாலையில் அலுவலகத்திலிருந்து வந்து பார்த்தபோது அந்தக் காலண்டர் அங்கே காணோம். அதோடு இன்னும் இரண்டு சினிமாப் படங்களும் காணப்படவில்லை; எங்கே அந்தப் படம் என்று மனைவியைக் கேட்டேன். அடுப்பில் இட்டு எரித்துவிட்டதாகக் கூறினாள். "அழகு இன்னது என்று தெரியாத களி மண் நீ! யாரைக் கேட்டு அதை அடுப்பில் போட்டாய்? அதற்காகவா நான் கேட்டு வாங்கிவந்து, கூடத்தில் மாட்டினேன்? உனக்கு அப்படிப்பட்ட அழகு இல்லையே என்ற பொறாமையால் செய்திருப்பாய்? இருக்க இருக்க உன் மூளையே மாறுகிறது" என்று பொய்க் கோபத்துடன் பேசினேன். "நான் அப்படித்தான் செய்வேன். உங்கள் நடத்தையே எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. ஊருக்கு வாங்க. பாக்கிய அம்மாவிடத்திலே மாமியிடத்திலே சொல்லிப்பார்க்கிறேன். யாருக்கு மூளை மாறிவிட்டது என்று அவர்களே சொல்லட்டும்" என்று அழத் தொடங்கினாள். "அழகான படம், கூடத்துக்கு அலங்காரமாக இருக்கும் என்று வாங்கிக் கொண்டு வந்தேனே" என்று கொஞ்சம் தணிந்த குரலில் சொல்லி வருந்தினேன். "பார்க்கிறவர்களின் மனம் கெடுமானால், எவ்வளவு அழகான படமாக இருந்தாலும் வாழ்கிற வீட்டுக்குள் வரக்கூடாது. உங்களுக்குத் தேவையானால், என்னை ஊருக்கு அனுப்பிவிட்டு, அப்புறம் என்னாவாவது செய்யுங்கள்". இதற்கு மேல் போகக்கூடாது என்று நடிப்பை நிறுத்திக் கொண்டேன். உடனே உண்மையைச் சொன்னாலும் பயன்படாது என்று அமைதியாக இருந்தேன். மூன்று நாள் கழித்து, "இன்று சினிமாவுக்குப் போகலாமா?" என்றேன். "வேண்டா. நான் வரவில்லை" என்றாள். "என்ன அவ்வளவு வெறுப்பு" "ஆமாம். வெறுப்புத்தான். அதை பார்த்துக் கெட்டுப் போவதைவிட வீட்டோடு நல்லபடி இருக்கலாம்." "நான் வாயால் அழகைப் பாராட்டியது குற்றமா? மனத்திற்குள்ளே நினைத்துக் கொண்டு மனத்திலேயே அவர்களின் அழகைப் போற்றிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். நான் வெளிப்படையாக உன்னிடம் பாராட்டிச் சொன்னது குற்றம். பெண்கள் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள். ஆண்கள் அழகை அழகு என்று வாயால் சொல்கிறார்கள். அது குற்றமா?" இரண்டு நாள் கழித்து மறுபடியும் படம் பார்க்க அழைத்துப் பார்த்தேன். முடியவில்லை. மறுநாள் முயன்றேன். அன்றும் மறுத்துவிட்டாள். எல்லாம் பழங்கதையாய்ப் போகட்டும் என்று இரண்டு வாரம் சும்மா இருந்தேன். பிறகு, இனி அப்படி நடிகைகளின் அழகில் மயங்குவதில்லை என்று உறுதிமொழி கொடுத்து, சினிமாவுக்கு வருமாறு அழைத்தேன். அன்று மனம் இறங்கி வந்தாள். நானும் பழைய நடிப்பு ஒன்றும் இல்லாமல் நடந்து கொண்டேன். இருந்தாலும், வீட்டுக்கு வந்த பிறகு, "ஆண்களையே நம்ப முடியாது. நீங்கள் அந்த நடிகைகளின் அழகை அடிக்கடி மனத்திற்குள் நினைக்கிறீர்கள் அல்லவா?" என்று கேட்டாள். "எனக்கு இப்போது வேலை மிகுதி. ஓய்வு ஏது? அவர்களின் அழகைப் பற்றிய நினைப்பே வருவதில்லை" என்றேன். "கடவுள் உங்களுக்கு எந்த நாளும் ஓயாத வேலை கொடுத்தபடியே இருக்கவேண்டும்" என்று கையெடுத்துக் கும்பிட்டாள். எனக்குச் சிரிப்பாக இருந்தது. "இதற்காக நான் மாடுபோல் ஓயாமல் உழைக்கவேண்டும் என்று சாபம் கொடுக்கிறாயா? நீ மட்டும் ஓய்வாக வீட்டில் சுகப்படு" என்றேன். அவளும் சிரித்தாள். அப்போதுதான் என் உள்ளம் திறந்து சொன்னேன். "நான் அப்படிப் படத்தின் அழகில் மயங்கிக் கெட்டுப் போகிற ஆள் அல்ல. அதெல்லாம் உண்மை அழகு அல்ல. மேற்பூச்சும் அலங்காரமுமே அதிகம். அவற்றை நம்புகிற பேர்வழி நான் அல்ல. நடிப்பு மட்டும் உண்மையாகவே சிறந்த கலை. அதைத்தான் பாராட்ட வேண்டும்" என்றேன். "அப்படியானால் நீங்கள் அவர்களின் அழகில் மயங்கவில்லையா?" "நீ ஆண் நடிகரின் அழகில் மயங்கவில்லையா?" "சேச்சே! அந்த எண்ணம் வந்தால் நான் சினிமாவுக்கே போகமாட்டேன். தெரியுமா?" "அவர்கள் என்னைவிட அழகாக இல்லையா? அதனால் உனக்கு ஆசையாக இல்லையா!" "சே! என்ன பேச்சு இது! தெருவில் போகிற ஒருவன் அழகாக இருந்தால், அதனால் அவன்மேல் ஆசை தோன்றி விடுமா? நம் அம்மாவைவிட இன்னொருத்தி அழகாக இருந்தால் அவள்மேல் ஆசை வளருமா? அழகு குறைவாக இருந்தாலும் என்னைப் பெற்று வளர்த்தவள்தான். எனக்கு வேண்டும், அவள்தான் எனக்குத் தாய். அப்படித்தான் நீங்களும் எனக்கு." "கண்ணி! என் நிலையும் அதுதான். ஊரில் எந்தப் பெண் எவ்வளவு அழகாக இருந்தால் எனக்கு என்ன? அயலாருடைய கண் அழகாக இருந்தால் அதற்காக என் கண்ணைக் குத்திக்கொள்வேனா? என் கண்தான் என் கண்! என் கண்ணிதான் என் கண்ணி!" என்று அன்போடு அவள் முகத்தை நோக்கினேன். உடனே அவள் என் தோள்மேல் சாய்ந்து என் கன்னங்களைத் தடவினாள். இவ்வாறாக எங்கள் சினிமா நாடகம் முடிந்தது. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |