உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அகல் விளக்கு 4 சந்திரன் பள்ளியில் சேர்ந்த மறுநாள் அவனுடைய தகப்பனார் சாமண்ணா வாலாசாவுக்கு வந்தார். புத்தகம் முதலியவை வாங்குவதற்குப் பணம் கொண்டு வந்திருந்தார். சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து, "எங்கள் அப்பா வந்திருக்கிறார். உன்னைப் பார்க்கணும் என்றார், வா" என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். சாமண்ணா கூடத்தில் ஒரு பாயின் மேல் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், "வா’ப்பா நீயும் நான்காம் பாரம் படிக்கிறாயாமே, நல்லா படி; ஒருவருக்கொருவர் துணையாக இருங்கள்" என்றார். பக்கத்தில் உட்காரச் சொல்லி, முதுகைத் தடவிக் கொடுத்து, "கெட்ட பிள்ளைகளோடு சந்திரன் சேராதபடி பார்த்துக்கொள். பள்ளிக்கூடம் உண்டு, வீடு உண்டு என்று இருக்க வேண்டும். சினிமா, ஓட்டல் என்று அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நுழையக் கூடாது. படித்து முன்னுக்கு வரவேண்டும். சந்திரன் ஏதாவது தப்பாக நடந்தால், அத்தையிடம் சொல்லிவிடு. நான் பத்துப் பதினைந்து நாளுக்கு ஒருமுறை வருவேன், என்னிடம் சொல்லு" என்றார். சாமண்ணா அப்போது நாற்பது வயது உள்ளவராக நல்ல கட்டான உடம்போடு இருந்தார். மாநிறமானவர், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தபடி இருந்தது. நெற்றியில் சந்தனப்பொட்டும் குங்குமமும் இருந்தன. காலையில் ஊரில் அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது. வெண்ணிறமான உடையும் மலர்ந்த விழியும் புன்முறுவலும் அவருடைய உள்ளத்தின் தூய்மையை எடுத்துக் காட்டுவனபோல இருந்தன. சிறிது நேரம் தமக்கையாரோடு ஊர்ச்செய்திகளைப் பேசிக்கொண்டிருந்து மறுபடியும் என்னைப் பார்த்தார். "கண்ட பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட வேண்டா. சந்திரனும் நீயும் வீட்டிலேயே திண்ணையிலேயே விளையாடுங்கள். இவ்வளவு இடம் போதாதா? இனிமேல் படிப்புத்தான் முக்கியம். விளையாட்டு எதற்கு? விளையாடினது போதும், வாத்தியார்கள் கொடுத்த பாடங்களைப் படியுங்கள், எழுதுங்கள், வேளைக்குச் சாப்பிடுங்கள்", என்று எனக்கும் அதே வீட்டில் சாப்பாடு முதலியன ஏற்பாடு செய்துவிட்டவர் போல் பேசினார். சந்திரன் இங்கும் அங்கும் போய்க் கொண்டிருந்தான். நான் சாமண்ணா பக்கத்தில் உட்கார்ந்தவன் சிலைபோல் இருந்தேன். கையும் காலும் மடக்கிக் கொண்டு அவ்வாறு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தது துன்பமாக இருந்தது. சாமண்ணா அதையும் கவனித்தவர் போல், "டே! அப்பா! சந்திரா! நீ அரை வினாடி சும்மா இருக்கிறாயா? இங்கே போகிறாய், அங்கே போகிறாய், இதை எடுக்கிறாய். அதை வைக்கிறாய், அதோ பார், உன்னைப்போல் பிள்ளை எவ்வளவு அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். நீ இதை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். தெரியுமா?" என்றார். என் உள்ளத்தில் இருந்த துன்பம் அவருக்கு எப்படித் தெரியும்? உட்கார்ந்தது போதும் என்றும், எப்போது விடுதலை கிடைக்கும் என்றும் என் மனம் ஏங்கியது. அசைந்து, அசைந்து உட்கார்ந்தேன். கடைசியில் எழுந்து நின்று, "போய் வருகிறேன். அம்மா கூப்பிடுவார்கள்" என்றேன். உடனே சாமண்ணா தன் மகனைப் பார்த்து, "பார்த்தாயா! அம்மாவுக்கு எவ்வளவு பயப்படுகிறான்? நீ உன் அம்மாவை ஏய்க்கிறாயே" என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, "போய் வா, அப்பா! நல்ல பிள்ளைகளாக நடந்து படிப்பிலேயே கருத்தாக இருக்க வேண்டும். சந்திரனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார். வாயிலைக் கடந்தவுடன், அவிழ்த்துவிட்ட கன்றுபோல் துள்ளிக்கொண்டு வந்துவிட்டேன். சந்திரன் படிப்பை நான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சாமண்ணா சொன்னார். அந்த நிலையில் அவன் இல்லை. ஆங்கிலம் தவிர, எல்லாப் பாடங்களிலும் அவனே முதன்மையாக இருந்தான். ஆங்கிலத்தில் மட்டும் வரலாற்று ஆசிரியருடைய மகன் சந்திரகுப்தன் என்பவன் வல்லவனாக இருந்தான். அந்த ஒரு பாடத்தில் சந்திரன் அவனோடு போட்டிபோட முடியவில்லை. ஒருநாள் ஆங்கில ஆசிரியர் சந்திரனைப் பார்த்து, "நீ கிராமத்திலிருந்து வந்ததால் உனக்கு ஆங்கிலம் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. முயற்சியோடு படி, அடுத்த ஆண்டில் சந்திரகுப்தனைவிட நீயே வல்லவன் ஆவாய்" என்றார். அந்தச் சொற்கள் சந்திரனுக்கு ஊக்கம் கொடுத்தன. "நம் நண்பன் சந்திரன் அந்தச் சந்திரகுப்தனைவிடத் திறமையானவன்" என்று நானும் பெருமை கொண்டேன். ஆனால், கால் ஆண்டு தேர்வு முடிந்த பிறகு, என் தந்தையார் சந்திரன் பெற்ற எண்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, "சே இவ்வளவுதானா - நீ! கிராமத்துப் பையன் ஒருவன் வாங்குகிற மார்க்கும் நீ வாங்கவில்லையே, நீ எப்படி முன்னுக்கு வரப் போகிறாய்?" என்று வெறுத்தார். "எல்லாவற்றிலும் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன் பார்" என்று சொன்னேன். "அதுபோதுமா’டா உனக்கு வேறு என்ன வேலை? மளிகைக் கடைக்கு வரச்சொல்லி ஏதாவது வேலை வைக்கிறேனா? அரிசி பருப்பு அளந்து போடச் சொல்கிறேனா? புளி மிளகாய் நிறுத்தப் போடச் சொல்கிறேனா? அல்லது வீட்டில் உங்கள் அம்மா ஏதாவது வேலை வைக்கிறாளா? உன் படிப்புக்கு என்றே எல்லா ஏற்பாடும் செய்கிறோம். நீ இந்தக் கதியாக இருக்கிறாய், பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் காற்றாடி, பம்பரம், புள், கோலி என்று ஆடப் புறப்பட்டுவிடுகிறாய். நான் காலையில் சில்லறைக் கடைக்குப்போய் அங்கே ஆட்களோடு போராடிவிட்டு, இரவு பத்து மணிக்குக் கடையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறேன். அந்தக் காலத்தில் என்னை இப்படிப் படிக்க வைத்திருந்தால், நான் எவ்வளவோ படித்திருப்பேன். எனக்குச் சொல்வார் யாரும் இல்லை. உனக்கு எல்லாம் இருந்தும், உன் தலைவிதி இப்படி இருக்கிறது" என்று ஒரு புராணமே படித்துவிட்டார். அன்றைக்கு எனக்கு அந்தத் தேர்வு எண்களின்மேல் ஏற்பட்ட வெறுப்புக்கு அளவில்லை. இப்படி ‘மார்க்’ என்று சொல்லி ஒரு முறையை எந்தப் பாவிகள் ஏற்படுத்தினார்களோ, அதனால் அல்லவா அப்பாவிடம் வசை கேட்க வேண்டியிருக்கிறது என்று மிக வருந்தினேன். அம்மா ஒரு நாளும் என்னை அப்படிக் கண்டித்தது இல்லை. காலையில் நேரத்தோடு விழித்தெழாவிட்டால், அல்லது, மாலையில் விளக்கு வைத்தவுடன் படிக்க உட்காராவிட்டால், அப்போதுதான் அம்மாவின் வசை கேட்கும். சில வீடுகளில் வேளைக்குச் சாப்பிடாவிட்டாலும் தாய்மாரின் வசை கேட்கும். இயற்கை எனக்கு நல்ல பசியைக் கொடுத்திருந்தபடியால், நான் இந்த வசை கேட்கும்படி ஏற்படவில்லை. சந்திரனுடைய அத்தை என் தாயைவிட நல்லவர். காலையில் படுக்கையை விட்டு ஏழுமணி வரையில் எழாதிருந்தாலும், அந்த அத்தை ஏன் என்று கேட்பதில்லை. விளக்கு வைத்தவுடன் படிக்க உட்காராவிட்டாலும் கேட்பதில்லை. ஆனால் சந்திரன் காலையில் நேரத்தோடு எழாவிட்டாலும், மாலையில் படிக்கத் தவறுவதில்லை, பாடங்களை மிக ஒழுங்காகப் படித்துவந்தான். அதனால் அந்த அத்தை வசை பாடும் வழக்கமே இல்லாமல் இருந்தது. அத்தைக்கும் அம்மாவுக்கும் சந்திரன் வந்த அந்த வாரத்திலேயே பழக்கம் ஏற்பட்டது. அந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சந்திரன் தன் அத்தையை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குள் வந்தான். "வாங்க அம்மா, வாங்க" என்று அம்மா முகமலர்ச்சியோடு அந்த அத்தையை வரவேற்றார். பாய் போட்டு உட்கார வைத்தார். "இருக்கட்டும் அம்மா. நமக்கு ஏன் இதெல்லாம்?" என்று அத்தை பாயைச் சுருட்டிவிட்டுக் கம்பத்தின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். ஒரு பையில் கொண்டு வந்திருந்த நான்கு தேங்காயையும் ஒரு வெல்ல உருண்டையையும் எடுத்து வைத்து, "எங்கள் ஊரிலிருந்து கொண்டு வந்தவை. எங்கள் தோப்புத் தேங்காய்; எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார். அவற்றைக் கண்டதும், அம்மாவின் முகமலர்ச்சி முன்னைவிட மிகுதியாயிற்று. ஒரு தட்டுக் கொண்டுவந்து அவற்றை எடுத்து வைத்து எதிரில் உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இப்படிப் பொருள்களை வாங்கிக் கொள்வதில் அம்மாவுக்கு எப்போதும் மகிழ்ச்சி உண்டு. அப்பா வாரத்துக்கு ஒரு முறை இருபது முப்பது ரூபாய் கொண்டுவந்து கொடுப்பார். அந்த நோட்டுகள் அம்மாவின் மனத்துக்குப் பெரிய பொருளாகத் தோன்றுவதில்லை. தம்முடைய தம்பி மாதத்துக்கு ஒருமுறை இரண்டு மூன்று ரூபாய்க்குப் பழங்கள் முதலியன வாங்கிக்கொண்டு வந்து பொருள்களாகக் கொடுப்பார். அவைகளே அம்மாவுக்குப் பெருமையாக இருக்கும். பெண்களுக்கு பொதுவாக உள்ள இந்தப் பண்பைச் சந்திரனுடைய அத்தை எப்படியோ தெரிந்து கொண்டு அன்று முதல்முறையாக வந்தபோதே கை நிறையப் பொருள் கொண்டுவந்தார். அந்த அத்தையும் ஒரு பெண் அல்லவா? பெண்ணின் மனம் நன்றாகத் தெரிந்திருக்கும். தவிர, அவர்கள் குடும்பத்திலேயே கற்ற குடும்பக்கல்வி அது. பிற்காலத்திலும் அம்மாவிடம் இந்தப் பண்பைக் கவனித்திருக்கிறேன். எனக்கு ஓயாத வேலை; அதனால் சென்னையில் கடைக்குப் போய்ப் பொருள்களை வாங்கிச் சுமந்து கொண்டு ஊர்க்குப் போவதற்கு வாய்ப்பும் இல்லை. அது துன்பமாகவும் இருக்கும். அதனால் ஊர்க்குப் போகும் போதெல்லாம் அம்மாவிடம் பத்து இருபது என்று ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டு இரண்டொரு நாள் இருந்து விட்டுச் சென்னைக்குத் திரும்புவேன். ஆனால் என் தம்பி பொய்யாமொழி அம்மாவின் மனத்தை மகிழ்விக்கும் முறையில் நடந்து கொள்வான். கடைகடையாகத் திரிந்து அம்மாவுக்கு விருப்பமான பொருள்களை வாங்கி இரண்டு மூன்று பைகள் நிறைய எடுத்துக் கொண்டு போய்க்கொடுத்துவிட்டு வருவான். அந்தப் பொருள்களின் மதிப்பு எல்லாம் சேர்ந்து ஐந்து ஆறு ரூபாய் இருக்கும். அவன் செய்வதுதான் அம்மாவுக்கு மிக விருப்பமாக இருக்கும். இப்படி ஐந்து அல்லது ஆறு ரூபாய்க்குப் பொருள்களைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, ஊரிலிருந்து வரும் போது அம்மாவிடமிருந்து பத்துப் பதினைந்து ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு வந்துவிடுவான். ஆனாலும் அவன்தான் அம்மாவுக்கு அன்பான பிள்ளையாக இருந்தான். இந்த உண்மை தெரிந்திருந்தும் ஓய்வு இல்லாத காரணத்தால் என்னால் அப்படி நடக்கவும் நடிக்கவும் முடியவில்லை. சந்திரனுடைய அத்தை நடிக்கவில்லை; ஏமாற்றவில்லை பெண்களின் உறவு நீடிப்பதற்கு அது ஒரு வழி என்று கடமையாகவே கொண்டார். உண்மையாகவே அம்மாவுக்கும் அந்த அத்தைக்கும் உறவு வளர்ந்து நிலைபெற்றது. எந்த அளவிற்கு உறவு வளர்ந்தது என்றால், சந்திரனுடைய அத்தையை என் தாய் முதலில் அம்மா என்று பொதுவாக அழைத்தாலும், போகப்போகத் தன் தாயை அழைப்பது போலவே அன்புடன் அழைத்துப் பழகிவிட்டார். சந்திரனைப் பார்த்து நானும் அத்தை அத்தை என்றே அழைக்கப் பழகிவிட்டேன். என் சொந்த அத்தை வீட்டுக்கு வந்தபோது மட்டும் வேறுபாடு தெரிவதற்காக நம் அத்தை என்றும் சந்திரன் அத்தை என்றும் வேறுபடுத்திப் பேசுவேன். சொந்த அத்தை வந்து போய்விட்டபிறகு அத்தை என்று என் வாய் சொன்னால், அது சந்திரனுடைய அத்தையையே குறித்தது. அந்த அளவிற்கு எங்கள் பழக்கம் குடும்ப உறவாக வளர்ந்து விட்டது. இப்படி அத்தை எங்கள் வீட்டுக்கு வந்து பழகிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் பாக்கிய அம்மையாரின் பழக்கமும் ஏற்பட்டது. பாக்கிய அம்மையாரின் வீடு 18ஆம் எண் உடையது. எங்கள் வீட்டுக்கு தெற்கே மூன்றாம் வீடு. ஆகவே நானும் சந்திரனும் அந்த வழியாகவே பள்ளிக்குப் போய் வரவேண்டும். இரண்டாம் நாளே என்னைப் பார்த்து, "அது யார் வேலு!" என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அடுத்த வாரத்தில் ஒரு நாள் மாலையில் அத்தை எங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது பாக்கியமும் வந்தார். அப்போது அம்மா, அத்தை, பாக்கியம் மூன்று பேரும் உட்கார்ந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். வரவர பாக்கியம் அத்தை, வீட்டுக்கே நேராகப் போகவும் அத்தை நேராகப் பாக்கியத்தின் வீட்டுக்கே போகவும் பழக்கம் முதிர்ந்தது. இரண்டு நாள் பாக்கியத்திற்கு உடம்பு நலிவாக இருந்தபோது, அத்தையே அங்கே போய்ச் சமையலும் செய்து உதவினார். தம்முடைய ஊரிலும் இப்படிப் பல குடும்பங்களின் பெண்களுக்குத் தாய்போல் இருந்து உதவி செய்து அத்தை பெயர் பெற்றிருப்பதாகச் சந்திரன் சொன்னான். சந்திரனோடு அத்தை நகரத்துக்கு வந்ததனால், பெருங்காஞ்சியில் பல பெண்களுக்குக் கையொடிந்தது போல் இருக்கும் என்றும் சொன்னான். பாக்கியம் குழந்தை பெற்றுத் தாயாக விளங்காவிட்டாலும் தாய்மையுள்ளம் நிறைந்த அம்மையார். அதனால் என்னையும் என் தங்கை மணிமேகலையையும் மற்றொரு தாய்போல் இருந்து வளர்த்து அன்பு காட்டினார். ஆனால், இயற்கை பொல்லாதது! வளர வளர நாங்கள் இறக்கை வளர்ந்த குஞ்சுகள் போல், பாக்கியத்தின் அன்புக் கூட்டிலிருந்து பறந்துவிட்டோம். எங்கள் அன்பு மாறுவதைப் படிப்படியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வேதனை பாக்கியத்தின் மனத்துக்கு இருந்திருக்கும். மனம் மட்டும் அல்ல, தோற்றமும் அவ்வளவு அழகாகக் கவர்ச்சியாக இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்கவேண்டிய கட்டான உடம்பும் ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ், அந்த அம்மையாருக்குத் தனிமைத் துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்து விட்டது. நான் என் தாயின் வயிற்றில் இருந்தபோது பாக்கியத்திற்குத் திருமணம் ஆனதாம். நிறைந்த கர்ப்பமாக இருந்த காரணத்தால் தான் அம்மா அவருடைய திருமணத்திற்குப் போகவில்லை என்று ஒரு பேச்சில் தெரிவித்தார். நான் பிறந்த அன்றுதான், பாக்கியம் கணவனை இழந்தாராம். பிறந்த மகனுடைய முகத்தைக் கண்டு பூரித்து முகமலர்ந்து இருந்த என்தாய், மூன்றாம் வீட்டின் அழுகை ஆரவாரத்தைக் கேட்டுச் செய்தி தெரிந்து கொண்டு கண்ணீர் வடித்தாராம். பாக்கிய அம்மையாரின் உள்ளத்தில் என்னை வளர்த்த பாசம் ஒரு புறம் இருந்தபோதிலும், என்னைப் பார்த்த சில வேளைகளில் தம் கணவனை இழந்த நாள் நினைவுக்கு வந்து கண்ணீர் விடுவது உண்டு. ஆனால் எனக்கு அறிவும் நினைவும் வளர்ந்தபிறகு, அப்படிப் பாக்கியம் கண்ணீர் விட்டதைப் பார்த்ததில்லை. நான் குழந்தையாக இருந்தபோது அப்படிக் கண்ணீர் வடித்திருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது? அம்மா சொன்னது இன்னொன்றும் - அத்தையிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னதும் - நினைவுக்கு வருகிறது. அம்மாவும் பாக்கியமும் அடுத்தடுத்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, நான் அம்மாவின் நெற்றியிலிருக்கும் குங்குமத்தை எடுத்துப் பாக்கியத்தின் நெற்றியில் இடுவேனாம். பாக்கியம் தடுத்துத் தடுத்துக் கண்ணீர் விடுவாராம். "வேண்டா கண்ணு! நான் இடக்கூடாது கண்ணு!" என்று அழுவாராம். "அக்கா மூஞ்சிக்குத்தான் குங்குமம் நல்லா இருக்குது" என்று நான் பிடிவாதம் செய்வேனாம். உண்மையாகவே பாக்கியம் அழகான நெற்றியும் கண்களும் உடையவர். அவருடைய கருவிழிகளில் ஒளி மிகுதி. என் தாயின் முகத்தைவிடப் பாக்கியத்தின் முகத்தில் கவர்ச்சி அதிகம். அதனால் என்னுடைய பிஞ்சு நெஞ்சம் இரண்டு முகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கும்; பொட்டு இல்லாத குறையைத் தீர்க்க எண்ணியிருக்கும், பாக்கியம் சொன்ன காரணம், அப்போது என் அறிவுக்கும் பொருந்தாத காரணமாக இருந்திருக்கும். அதனால் நானும் பிடிவாதம் செய்திருப்பேன். ஒரு நாள் என் பிடிவாதத்திற்குப் பாக்கியம் விட்டுக் கொடுத்தாராம். நான் அந்த அளவில் விடாமல், கண்ணாடி கொண்டுவந்து "பாக்கியம்மா, நீயே இப்போ பார். எவ்வளவு அழகாக இருக்கே" என்று கண்ணாடியைக் காட்டினேனாம். பார்க்க முடியாதபடி பாக்கியத்தின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்ததாம். உடனே என்னைக் கட்டி அணைத்து, "கண்ணே! உனக்கு இருக்கிற அவ்வளவு கருணை கடவுளுக்கு இல்லையே, கண்ணே!" என்று கதறி அழுதாராம். இப்படி எல்லாம் பாக்கியத்திடம் அன்பாகக் கொஞ்சியும் உள்ளத்தின் துன்பத்தைக் கிளறியும் பழகிப் பழகி அவருடைய உள்ளத்தில் ஒரு மகனுக்கு உரிய இடத்தைப் பெற்றுவிட்டேன். உணர்ச்சி மிக்க காதலுக்கு உரிய அவருடைய இளமைப்பருவம் என்னுடைய ஆடல் பாடல்களிலும் பிடிவாதங்களிலும் அழுகை ஆரவாரங்களிலும் ஈடுபட்டுக் கழிந்தது. பாக்கியத்திடம் நான் பெற்ற அன்பில் பாதிதான் என்தங்கை மணிமேகலை பெற்றிருப்பாள். தம்பி பொய்யாமொழியோ அதிலும் பாதிதான் பெற்றிருப்பான். சந்திரன் எங்கள் தெருவுக்குக் குடிவந்தபோது, பாக்கியத்தின் துயரம் ஒருவாறு ஆறிப்போயிருந்தது எனலாம். கண்ணீரிலும் விம்மலிலும் மூழ்காமல், சிந்தனையிலும் பெருமூச்சிலும் பாக்கியத்தின் துயரம் கழிந்த காலம் அது. கடமையுணர்ச்சியோடு, குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஆனாலும் என் மேலும் சந்திரன் மேலும் அன்பு இருந்தது; அந்த அன்பு ஒரு தாயின் அன்பு என்று சொல்ல முடியாதபடி குறைந்திருந்தது. என்மேல் பேரன்பு செலுத்தி, நான் விலக விலக, ஏமாற்றம் அடைந்த உள்ளம் ஆகையால், மறுபடியும் அப்படிப்பட்ட பாசம் பிறக்கவில்லை போலும். அந்தக் குடும்பம் சிறைபோன்ற குடும்பம்; சிறையிலாவது ஒத்த மனம் உடையவர்கள் இருப்பார்கள்; அதனால் ஆடல்பாடலும் சிரிப்பும் வேடிக்கையும் இருக்கும். பாக்கியத்தின் குடும்பத்தில் அப்படி யாரும் இல்லை. தாய் இல்லாத குடும்பம் அது. பாக்கியம் பருவம் அடைவதற்கு முன்பே அவர் தாய் காலமாகிவிட்டாராம், தந்தையோ அன்று முதல் நொந்த உள்ளத்தோடு குடும்பச் சுமையைத் தாங்கிக் கொண்டிருந்தார். பாக்கியத்திற்கு ஒரு தம்பி உண்டு. அவர் நலிந்த உடல் உடையவர். பதினாறு வயதிலேயே அறுபது வயதுக்கு உரிய அடக்கமும் ஒடுக்கமும் அவரிடம் இருந்தன. விநாயகம் என்பது அவருடைய பெயர். அவர் அக்காவுடன் பேசுவது குறைவு. பத்தாவதில் தேர்ச்சி பெறாமல், கூட்டுறவு மளிகையில் கணக்கராகப் போகுமாறு வற்புறுத்தப்பட்டார். அந்த வேலைக்குப் போவதும் வருவதும், அக்கா நான்கு சொல் சொல்லிக் கேட்டால் இரண்டு சொல் விடையாகச் சொல்வதும், திண்ணையில் ஒரு மூலையில் உட்கார்ந்து கிடப்பதும், படிப்பகத்துக்குப் போய்ச் செய்தித்தாளை மட்டும் படித்து வருவதுமாக இப்படி அவர் வாழ்க்கையைக் கழித்தார். இப்படிப்பட்ட தம்பியோடு ஓர் அக்கா எப்படி உள்ளம் திறந்து சிரித்துப் பழக முடியும்? தந்தையோ மனைவி இறந்த பிறகு இட்ட முக்காட்டை இன்னும் களையாதவர் போல் இருந்தார். தலையில் இட்ட முக்காட்டைக் களைந்துவிட்டாலும், உள்ளம் முக்காடு இட்டபடியே கிடந்தது. "அம்மா இறந்த பிறகு அப்பா சிரித்ததை நான் பார்த்ததே இல்லை" என்று பாக்கியமே ஒருமுறை சொன்னார். கணவனும் மனைவியும் அவ்வளவு அன்பாக வாழ்ந்தார்களாம். காதல் மனைவி இல்லாத சூழ்நிலையில் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் எப்படிச் சிரிப்புப் பொங்கி எழும்? என்ன வயது ஆனாலும், காதல் மனைவியிடம் தான் மனிதன் சிறு பிள்ளையாக நடந்துகொள்கிறான். மூப்பு என்பதை உடல் கண்டாலும் உள்ளம் காணாத உலகம் அந்தக் காதல் உலகம் ஒன்றுதானே? அன்பான கணவனுக்கும் மனைவிக்கும் வயது அறுபதைக் கடந்தாலும், உள்ளம் இருபதைக் கடப்பதே இல்லை. பத்தைக் கடப்பதும் இல்லை எனலாம். அப்படி அன்பாக இல்வாழ்க்கை நடத்தியவர் ஆகையால், மனைவி இறந்தவுடனே அவருடைய உள்ளம் ஒரே நொடியில் மூப்பு அடைந்து சாக்காடையும் நெருங்கிவிட்டது. அதனால் ஒரு நாளும் தந்தை சிரிக்கப் பார்த்ததில்லை என்று பாக்கியம் சொன்னது உண்மையாக இருக்கலாம். பாக்கியமோ சிரிப்பது குற்றம் என்னும் விதவை வாழ்வை அடைந்துவிட்டாள். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த தம்பிக்கு இயற்கையான மனவளர்ச்சி இல்லாமற்போயிற்று. ஆனால் தாயும் தந்தையும் மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலத்தில் வளர்ந்த பாக்கியத்தின் உள்ளமோ வளர்ச்சி அடைந்த உள்ளம். அந்த உள்ளத்தின் உணர்ச்சிகள் வெளிப்படுவதற்கு ஒரு வகையில் என்னுடைய குழந்தைப் பருவம் உதவியாக இருந்தது. நானோ, குழந்தையாக இல்லாமல் வளர்ந்துவிட்டேன். என் மனமும் வளர்ந்து விட்டது. என் வளர்ச்சி பாக்கியத்தின் ஏமாற்றமாக முடிந்தது. தை பிறந்தால் எனக்குச் சிரங்கு பிறப்பது வழக்கம். தக்க உணவை அளவாக உண்ணாத காரணத்தாலும் இயல்பாகவே மெலிந்த நுரையீரலாலும் அடிக்கடி சிரங்கு வரும் என்பதைப் பிற்காலத்தில் தெரிந்துகொண்டேன். பள்ளிக் கூடத்தில் எந்தப் பையனோடோ பழகிய காரணத்தால் தொத்திக்கொண்டது என்பது என் பெற்றோர்களின் எண்ணம், சந்திரனும் என்னோடு படித்தான், பழகினான்; அவனுக்குச் சிரங்கு வரவில்லையே என்று நான் சொல்லி வந்தேன். சந்திரனோ, எனக்குச் சிரங்கு வந்துவிட்டதே என்ற காரணத்தால் என்னை விட்டு விலகவில்லை; பழகுவதற்குக் கூசவில்லை. நன்றாகப் பழகினான்; முன்போலவே அணுகியும் தொட்டும் பழகினான்; என் தோள்மேல் கை போட்டுக்கொண்டு பள்ளிக்கு வந்தான்; என் பக்கத்தில் உட்கார்ந்தே பள்ளியில் படித்தான். ஆனாலும் அவனுக்குச் சிரங்கு வரவில்லை. நான் மட்டும் சிரங்கால் வருந்தியது என் மனத்துக்கு வேதனையாக இருந்தது. இந்த ஆண்டில் சிரங்குப் புண் ஒவ்வொன்றும் பெரிதாய்க் காலணா அகலம் இருந்தது. யானைச் சிரங்கு என்று சொன்னார்கள். கந்தகத்தைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி என் உடம்பெல்லாம் அம்மா பூசினாள். கந்தகத்தின் தீமை அப்போது எனக்கு எப்படித் தெரியும்? அதன் நாற்றம் எனக்கு மிக அருவருப்பாக இருக்கும். அய்யோ தலையெழுத்தே என்று பொறுத்திருப்பேன். கோவணம் கட்டிக்கொண்டு கந்தகம் பூசிக்கொண்டிருந்தபோது அம்மா அப்பா தவிர, வேறு யாரும் என்னை அணுகமாட்டார்கள். யாராவது அப்போது வீட்டுக்கு வந்தாலும், நான் அவர்களின் கண்ணில் படாதபடி தோட்டத்துக்கு ஓடிப்போய் ஒளிந்து கொள்வேன். ஒரு முறை அம்மா கந்தக எண்ணெய்க் கிண்ணத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அதில் கோழியிறகைத் தோய்த்துத் தோய்த்து என் புட்டத்தில் இருந்த சிரங்குகளில் தடவிக் கொண்டிருந்தார். அப்போது கதவைத் திறந்து கொண்டு பாக்கிய அம்மையார் வந்தார். அவரைப் பார்த்தவுடன் நான் தோட்டத்தை நோக்கி ஓடினேன். "வா’டா யாரும் இல்லை’டா ‘அக்கா’டா; உன்னை வளர்த்தவள்தான். வா’டா. உனக்கு எத்தனை நாள் அக்குளும் அரையும் தேய்த்துத் தண்ணீர் வார்த்திருப்பாள். அக்கா பார்த்தால் என்ன? வாடா" என்று அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நான் தோட்டத்தில் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு பாக்கியம் வீட்டை விட்டுப் போகும் வரையில் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தேன். இப்போது எண்ணிப் பார்க்கிறேன். தாய்போல் பாசம் காட்டி வளர்த்த அந்த மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும்? நீ தாய் அல்ல உன் பாசம் வேண்டா என்று மறுப்பதாக அல்லவா என்னுடைய கொடுஞ்செயல் இருந்திருக்கும். சிறுவர்களாகக் கூடி விளையாடும்போது, யாராவது ஒருவனுக்குத் தக்க மதிப்பு கொடுக்காவிட்டால் உடனே அவன் எங்கள் குழுவை விட்டு, வேறொரு குழுவில் சேர்ந்து விடுவான். எங்கள் வயிறு எரிய வேண்டும் என்று அந்தக் குழுவைப் புகழ்வான்? அங்கே திறமையாக ஆடிச் சுறுசுறுப்பாக இருப்பான். வளர்ந்த மனிதரிடத்திலும் இந்தப் பண்பைப் பார்த்திருக்கிறேன். ஒரு வீட்டுத் திருமணத்திலோ வேறு அலுவலிலோ ஒருவனுக்கு மதிப்புக் கொடுக்கவில்லையானால், அவன் அவர்களின் பங்காளி வீட்டுக்கோ பகையாளி வீட்டுக்கோ போய் அங்கு நடக்கும் அலுவலைப் பெருமைபடுத்துவான். அந்த மனப்பான்மையை மெல்ல மெல்ல பாக்கிய அம்மையாரிடம் காணத் தொடங்கினேன். அந்த அம்மா வேண்டுமென்று அப்படி நடந்திருக்கமாட்டார்; அந்த மனிதப் பண்பு இயற்கையாகத் தம்மை அறியாமலே அவரிடம் வந்திருக்கும் என்று எண்ணுகிறேன். அதனால் என்னைவிடச் சந்திரனை மிக்க அன்போடு பார்க்கத் தொடங்கினார்; ஆர்வத்தோடு பேசத் தொடங்கினார்; பாராட்டவும் தொடங்கினார். என்மேல் இருந்த அன்பைக் குறைத்துக் கொண்டார் என்று சொல்ல முடியாது; அவனிடம் மிகுதியான அன்பு காட்டியது போல் இருந்தது. சந்திரன் என்னுடைய பங்காளியும் அல்ல; பகையாளியும் அல்ல. என்ன காரணமோ, பாக்கிய அம்மையாரின் போக்கில் அந்த வேறுபாடு ஏற்பட்டதாகத் தோன்றியது. ஆனால் என் தாயிடம் பழகுவதிலும், வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதிலும், சிறப்பான உணவு வகைகள் செய்தால் எனக்காகக் கொண்டுவந்து தருவதிலும் அந்த அம்மா முன்போலவே இருந்தார். அதனால் சிலநாள் கழித்து எண்ணிப் பார்த்து அந்த அம்மாவுக்கு என்மேல் வெறுப்பு இல்லை என்று உணர்ந்தேன். சந்திரன் என்னைவிட அழகாகவும் அறிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதால், பாக்கியம் மிக்க அன்பு காட்டுகிறார் என்று முடிவுக்கு வந்தேன். என் தாயும் என்னைவிடச் சந்திரனைப் பாராட்டிப் பேசுவதைக் கேட்டு, அதுதான் காரணம் என்று ஆறுதல் அடைந்தேன். |