உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ. 118 (3 மாதம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 13 மறுநாள் காலையில் மூன்று பிரிவுப் படைகளும் புறப்பட்டன. தொண்டைமான் ஐயாயிரம் புரவி வீரர்கள் படையுடன் திண்டுக்கல் நோக்கிப் புறப்பட்டான். சங்கிலித் தேவன் ஐயாயிரம் புரவி வீரர்கள் படையுடன் வடமேற்கு திசையில் நகர்ந்தான். வடுகநாதத் தேவன் காலாட் படையுடன் திருமயம் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை வழியாகத் தஞ்சையை அடைய நகர்ந்தான். அதையெல்லாம் கண்டு திருப்தி அடைந்த சேதுபதி கதலியுடனும் நூறு வீரர்களுடனும் விரைவாகவே குறுக்கு வழியில் புறப்பட்டான். வழியில் பகல் உணவுக்காக ஓரிடத்தில் சற்று இளைப்பாறினார்கள். பின் பயணமாகி நடு இரவில் தான் நினைத்த இடத்தை அடைந்து அங்கே முகாமிட்டான். திருச்சிக்கு ஐந்து கல் தொலைவில் தென் கிழக்கே அமைந்த கிராமம் அது. அங்கே பெரிய மண்டபம் ஒன்று இருந்தது. மண்டபத்தில் வீரர்களைத் தங்கச் செய்த பின் அருகில் தனக்குச் சிறிய கூடாரம் ஒன்று தயாரிக்கச் செய்து அதில் தங்கிக் கொண்டான். அங்கே சில செய்திகள் அவனுக்காகக் காத்திருந்தன. குமரய்யா தன் படையுடன் திருச்சிக்கு மேற்கே முகாமிட்டிருப்பதாகவும் அரசுமலை செஞ்சி படையுடன் காவிரிக்கு அப்பால் சமயபுரத்தில் முகாமிட்டிருப்பதாகவும் இதனால் ஏகோஜி குழப்பம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. உடனே யாரும் திருச்சியைத் தாக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட சேதுபதி திருப்தி அடைந்தான். “கதலி! மைசூர்ப் படையுடன் செஞ்சிப் படையும் வந்து விட்டனவாம்.” “தாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்திருக்கின்றது.” “ஆம்” என்ற சேதுபதி, “ஆனால் மூன்று படைத் தளபதிகளுமே திருச்சி கோட்டையைத் தாக்க மாட்டார்கள்” என்றான். “ஏன்?” “ஒன்று தாக்கினால் மற்றொன்று பின்னாலிருந்து அதைத் தாக்கலாம் எனும் அச்சம் இருக்கும்.” “ஓ... அப்படியா விஷயம்” என்ற கதலி, “தாங்கள் திறமையுடன் தான் திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறீர்கள்” என்று தன் இடைக் கச்சையைக் கழற்றி கொக்கியில் மாட்டியவள், “நானிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட நீண்ட தொலைவான விரைவான பயணத்தை மேற்கொண்டிருக்கக் கூடாது... நான் படுத்துறங்கி ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். நானாகக் கண் விழிக்கும் வரையில் என்னை எழுப்ப வேண்டாம்” என்றவள் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் சாய்ந்து கொண்டாள். “நானும் இப்போது வெளியில் கிளம்பப் போகிறேன். நாம் நாளை மாலை அல்லது இரவு சந்திப்போம். உறங்கு” என்ற சேதுபதி கூடாரத்தை விட்டு வெளியேறினான். வீரர்களின் தலைவனை அழைத்து தான் ஓரிடம் சென்று வருவதாகவும், கவனமாய் இருங்கள் என்றும் எச்சரித்து விட்டு ஒற்றர்கள் ஏறி வந்திருந்து ஓய்வு பெற்றிருந்த புரவிகளில் ஒன்றில் தாவி ஏறிக் கொண்டு புறப்பட்டு விட்டான். சேதுபதி அப்படிப் புறப்பட்டவன் பொழுது புலரும் நேரத்தில் தஞ்சை வீரர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தான். அந்த முகாமிட்டிருந்த இடத்திற்கு ஒரு கல் தொலைவிலேயே தன் புரவியை நிறுத்திவிட்டு ஒரு குன்றின் மீது ஏறி வரிசையாக தொலைவில் அமைத்திருந்த கூடாரங்களைப் பார்த்துவிட்டு இறங்கினான். சூரியன் உதிக்கும் வரை புரவியை மேய விட்டவன் உதித்ததும் புரவியுடன் கொஞ்ச தூரம் நடந்து குறுக்கே ஓடிய ஆற்றில் நீராடினான். ஆற்றில் நீர் கொஞ்சமாகவே ஓடிக் கொண்டிருந்ததால் புரவி மீது ஏறி, புரவியை ஆற்றில் இறக்கி அக்கரையில் ஏற்றி கூடாரங்களை நோக்கிப் போக, ஆங்கே பரவலாக அமர்ந்திருந்த காவல் வீரர்கள் அவனைக் கண்டதும் உஷாராகி எழுந்து நின்று கொண்டனர். புரவி அருகில் நெருங்கியதும் ஒரு காவல் வீரன் வாளைக் குறுக்கே நீட்ட புரவியை நிறுத்தி விட்டு கீழே குதித்த சேதுபதி, தன்னுடைய இலச்சினையை எடுத்தபடி, “தஞ்சை மன்னரின் படை முகம் தானே இது?” என்று கேட்டான். “ஆம்.” “இதை மன்னரிடம் காட்டுங்கள். நான் அவரைப் பார்க்க வேண்டும்.” “நீங்கள் யார்?” “இந்த இலச்சினைக்குரியவர் வந்துள்ளார் என்று கூறுங்கள்.” ஒரு காவல் வீரன் விரைந்தான். அரை நாழிகையில் திரும்பினான். “என்னுடன் வாருங்கள்.” புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடியே அந்தக் காவல் வீரனுடன் நடந்தான் சேதுபதி. பல கூடாரங்களைக் கடந்து நடுவே பெரியதாக அமைந்திருந்த அலங்காரமான கூடாரத்தை அடைந்ததும் அதற்குப் பலத்த பாதுகாப்பு இருப்பதை அறிந்து கொண்டான். “இருங்கள். உத்தரவு வாங்கி வருகிறேன்” என்ற காவல் வீரன் தொங்கிக் கொண்டிருந்த திரையை விலக்கிக் கொண்டு உள்ளே போனான். சில கணங்களில் திரும்பி வந்தான். “உள்ளே போகலாம்” என்று வணங்கி வழி விட சேதுபதி புரவியை விட்டி விட்டு திரையை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைய திரைக்கு அப்பால் நின்று கொண்டிருந்த தஞ்சை மன்னனான ஏகோஜி அவனை வரவேற்றான். “வாருங்கள். வாருங்கள். தாங்கள் சேதுபதிதானே?” “ஆம். ஏகோஜி அவர்களே...” என்று நீட்டிய ஏகோஜியின் கரத்தைப் பற்றிக் கொண்டான். “தாங்கள் மட்டுமா வந்தீர்கள்?” “ஆம்... இப்போது நாம் நண்பர்கள் தானே... எப்படி வந்தால் என்ன?” இருவரும் கையைப் பற்றியபடியே மேலே சென்றனர். இருவருக்கும் சமமாகவே இரு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. இருவரும் அமர்ந்து கொண்டனர். மராட்டிய மன்னனான சிவாஜியின் மாற்றாந்தாய் மகனான ஏகோஜியை நன்றாகவே ஆராய்ந்தான் சேதுபதி. ஏகோஜியும் சேதுபதியை எடை போட்டான். தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை பிரதேசத்தின் மீது ஏகோஜிக்கு ஒரு கண் இருப்பதையும் அதைத் தன் ஆட்சிக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்ள சூழ்ச்சி செய்வதையும் திட்டமிட்டிருப்பதையும் அதனால் பின்னால் தனக்கும் அவனுக்கும் போரும் ஏற்படலாம் என்பதையும் நன்கு உணர்ந்தே இருந்தான் சேதுபதி. ஏகோஜியின் மனதிலும் அப்படிப்பட்ட எண்ணங்களே ஓடின. இருப்பினும் இப்போது ருஸ்தம்கான் எனும் ஒரு அன்னியன் கையில் மதுரையும் திருச்சியும் போய்விடக் கூடாது என்பதற்காகவே சேர்ந்திருக்கின்றனர். நட்பாகவும் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். “நீங்கள் எனக்கு அனுப்பிய லிகிதத்தின் படியே திருச்சிக்குப் படை எடுத்து வருவதாக எச்சரிக்கை அனுப்பி விட்டு படையுடன் இங்கே முகாமிட்டுள்ளேன்” என்றான் ஏகோஜி. “நன்றி ஏகோஜி அவர்களே.” “நீங்களும் படையுடன் வந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.” “ஆம். என் காலாட் படையினர் பத்தாயிரம் பேர் புதுக்கோட்டை வழியாக வந்து கொண்டிருக்கின்றனர்.” “பத்தாயிரம் பேர் மட்டுமா? ...புரவிப் படை?” என்று வினவினான் ஏகோஜி. “என் புரவிப் படையை இரண்டாகப் பிரித்து திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பாதையில் இரண்டு இடங்களில் இருக்கும்படி அனுப்பி விட்டேன்.” “ஏன் அப்படி?” “ருஸ்தம்கானை முறியடிக்க.” “ருஸ்தம்கான் பயந்து ஓடி விடுவான் என்பது உங்கள் எண்ணமா?” “ஆம்.” “நமக்கு அஞ்சியா?” “இல்லை. அதற்கு வேறு காரணம் இருக்கும்” என்ற சேதுபதி, “தஞ்சை மன்னரே... மதுரையின் மொத்தப் படையுடன் மோதுவதாக என் எண்ணம் இல்லை” என்றும் கூறினான். “என்ன? ...அப்படியென்றால்?” “ருஸ்தம்கானை மட்டும் அவனுடைய புரவிப் படையுடன் பிரித்து முறியடிப்பதுதான் என் நோக்கம்.” இதைக் கேட்ட ஏகோஜிக்கு சினமே ஏற்பட்டது. ஏகோஜியின் உள் நோக்கம் என்னவென்றால் சேதுபதியுடன் சேர்ந்து திருச்சியைக் கைப்பற்றி, அதில் பாதியைப் பங்கு போட்டுக் கொள்வதுதான். “நான் என்ன பகடைக் காயா?” என்று சினத்துடனே கேட்டான் ஏகோஜி. “சினம் கூடாது ஏகோஜி அவர்களே. நான் நினைத்தது வேறு. இப்போது நடந்திருப்பது வேறு. நான் என்ன செய்யட்டும்” என்று பணிவாகவே கூறினான் சேதுபதி. “இப்போது என்ன நடந்திருக்கிறது?” “மைசூர்ப் படை திருச்சியை நோக்கி வந்து விட்டது.” “என்ன? ...உண்மையா?” “உண்மைதான். திருச்சிக்கு மேற்கே முகாமும் இட்டுள்ளதாம். தளபதி குமரய்யாவின் தலைமையில் வந்துள்ளது.” “ஓகோ” என்ற ஏகோஜி மேலும் சினம் அடைந்தான். “முன்பிருந்த மைசூர் மன்னன் மதுரையின் மேல் படை எடுத்து வந்து உங்களுக்கு முன்பிருந்த சேதுபதியால் ஓட ஓட விரட்டப்பட்டதை மறக்கவில்லையா என்ன?” என்றும் கூறிக் கொண்டான். “அதற்குப் பழி வாங்கவே இப்போதைய மன்னன் சிக்கதேவராயன் படை எடுத்துள்ளான் போலும்” என்ற சேதுபதி அடுத்த அதிர்ச்சியையும் ஏகோஜிக்கு அளித்தான். |