![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 19. ஆதியின் கோபம் |
அத்தியாயம் - 18 திருச்சியை முற்றுகையிட்ட மைசூர் வீரர்கள் ஆங்காங்கே கூடாரங்கள் அடித்துத் தங்கிக் கொண்டனர். குமரய்யாவுக்கும் கூடாரம் தயாராகி, அதனுள் தங்கினான் குமரய்யா. நடு இரவுக்கு மேல் தன் படையை நகர்த்திய செஞ்சி மன்னன் சாம்பாஜியின் தளபதியாகிய அரசுமலை, காவிரியாற்றில் மூங்கில் பாலம் இருந்தும் நீர் குறைவாகவே ஓடிக் கொண்டிருந்ததால், தன் புரவிப் படையையும், காலாட் படையையும் ஆற்றிலேயே இறக்கி கரையேறும்படிச் செய்தான். பின் தன் படையை நான்காகப் பிரித்து நான்கு பக்கமிருந்தும் தாக்க ஏற்பாடு செய்தான். விடிவதற்கு ஒரு ஜாமம் இருக்கும் போது, ஆற்றின் கரையிலிருந்து மறுபடி படையை நகரும்படிக் கட்டளையிட்டான். விடிந்த பின் விழித்தெழுந்த மைசூர் படை வீரர்கள் தாங்கள் செஞ்சிப் படை வீரர்களால் சூழப்பட்டிருப்பதை அறிந்தார்கள். அதைத் தொடர்ந்து எழுந்தது ஒரு பெரும் போர். மதுரைப் படையையும், மதுரைத் தளவாயையும் எதிர்க்க வந்த மைசூர் படை, செஞ்சிப் படையின் தாக்குதலுக்கும், செஞ்சித் தளபதியின் ஆற்றலுக்கும் இலக்காக நேர்ந்தது. மாலை வரை நீண்ட அந்தப் போரில் மதுரைப் படை கலக்கவேயில்லை. இதை உணர்ந்த அரசுமலை உள்ளூர சினமும் கொண்டான். ஆனாலும், மைசூர்ப் படையை முறியடித்த பின், கவனித்துக் கொள்வதாக உள்ளூர எண்ணிக் கொண்டு போரை முடுக்கி விட்டான். மாலைக்கு மேல் தளபதி குமரய்யா தாக்குப் பிடிக்க முடியாமல், திரும்பிப் பின் வாங்க ஆரம்பிக்க படையும் பின் வாங்க, அரசுமலையும், செஞ்சிப் படையும் முன்னேறி முன்னேறி தாக்க ஆரம்பித்தனர். இரு படைகளுமே இரவு முகாமிட்டு தங்குவதும், காலையில் பின்வாங்குதலும், முன்னேறுவதுமாக இருந்தனர். அரசுமலை, குமரய்யாவை அவன் தன் மைசூர் எல்லை வரை பின்னேறும் வரை விடுவதாக இல்லாமல், முன்னேறித் தாக்கிக் கொண்டே சென்றான். ஏகோஜி தன் படையுடன் தஞ்சையை நோக்கி நகர ஆரம்பித்தான். இப்போது திருச்சியைத் தாக்கினால், மைசூர் படைக்கு நேர்ந்த கதி தன் படைக்கும் ஏற்பட்டு விடும் என்பதால். விடுதலை அடைந்த திருச்சியும் கோட்டையின் உள்ளே இருந்த வீரர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பின்னர் இரு பாளையக்காரர்களும் கோட்டை அதிகாரியும் இன்னும் சில முக்கிய வீரர்களும் சேதுபதியைச் சந்தித்தனர். “மைசூர்ப் படையை ஓட ஓட விரட்டிய பின், அரசுமலை கடுஞ்சினத்துடன் திரும்பி வந்து திருச்சியை முற்றுகை இடுவான்” என்ற சேதுபதி, “அதற்கு முன் சில நாட்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைச் சேமித்துக் கொள்ளுங்கள்” என்றும் எச்சரித்தான். பின்பு அவர்கள் அனைவரும் மதுரை நாட்டிற்கு சேதுபதி செய்த உதவிக்காகப் பாராட்டினார்கள். மதுரை நாடு சில ஆண்டுகளாக மாறி, மாறி ஏற்பட்ட குழப்பங்களால், அரியணைப் போட்டியினால் ஏற்பட்ட கலகங்களால் பலவீனம் அடைந்திருப்பதைச் சுட்டிக் காட்டிய சேதுபதி, திரும்பி வந்து முற்றுகையிடப் போகும் அரசுமலையுடன் மோதாமல் இருப்பதே அவர்களுக்கு நன்மை என்பதையும் உணர்த்தி, அப்படி முற்றுகையிடும் அரசுமலை சிறிது காலத்தில் திரும்பியும் போய் விடுவான் என்றும் கூறினான். பின்பு, ருஸ்தம்கான் விரட்டப்பட்டு மதுரையில் மன்னர் சொக்கநாதர் மறுபடி சுய அதிகாரத்துடன் ஆட்சி செய்வார் என்றும் அதன் பின்பு தளவாய் கோவிந்தப்பையாவின் கட்டளை வரும் என்றும் அதன்படி நடக்கமால் என்றும் கூறி அனுப்பினான். அவர்களை அனுப்பிய பின் கூடாரத்தின் நடுத்திரையை விலக்கி உள்ளே அடி எடுத்து வைத்தவன் அங்கே கீழே விரிப்பில் ஒருக்களித்து சாய்ந்து கொண்டு ஒரு கையை தலைக்கு முட்டு கொடுத்தபடி கால் மேல் கால் பின்னியபடி ஒயிலாக இருந்த கதலியை தீவர்த்தியின் ஒளியில் கண்டவன் அந்தப் பெண்மையின் மோகனாஸ்திரங்கள் அவன் மேல் பாய்ந்து கட்டுப்படுத்தி விட்டதால் அறிவின் சக்தி குறைந்து உணர்ச்சிகளின் ஆளுகைக்கு ஆட்பட்டவன் “கதலி” என்று குரலிலும் உணர்ச்சியேற அழைத்தான். அவள் தன் நிலையில் இருந்து சற்றும் அசையாமலே கரு விழிகளை மட்டுமே திருப்பி அவனைப் பார்த்தவள் “ம்” என்று முனகினாள். “நீ இப்போது சயனித்திருக்கும் நிலை” என்று கூறி முடிக்காமலே விட்டவன்... “என்னை பித்தனாக ஆக்கிக் கொண்டிருக்கிறது” என்றான். “பித்து பிடித்தால் அறிவு வேலை செய்யாது என்று பொருள்” என்ற கதலி புன்னகையும் செய்தாள். அவளின் பற்களுக்கு இப்படிப்பட்ட வெண்மை எங்கிருந்து வந்தது என்று எண்ணி வியப்படைந்தவன் “முத்துக்களே வெட்கப்படும்” என்றும் கூறினான். “எதற்கோ?” “உன் பற்களின் வெண்மை கண்டு.” “அப்படியா?” “ரதி கூட வெட்கப்படுவாள் உன் அஸ்திரங்களைக் கண்டு.” சேதுபதி அவளை நெருங்கி வந்து அருகில் அமர்ந்து கொண்டான். “ஆண் மகன் மயங்கி விட்டால் பெண்ணுக்கு ஆணவம் அதிகமாகி விடுகிறது.” “ஆணவமா?” “ஆம்... தன் அழகில், மதிப்பில்.” “ஓகோ... இதுவும் ஆராய்ச்சியா?” “கதலி.” “ம்.” “நாளை நாம் புறப்படுகிறோம்.” “எங்கே? மதுரைக்கா?” “இல்லை. இராமனாதபுரத்திற்கு.” “மதுரை விஷயம்?” “எல்லாம் சீராகி விடும். உன் அண்ணன் எனக்குப் பதிலாக கவனித்துக் கொள்வான்.” “இங்கே நம்மைத் தேடி வந்தால்?” “வரமாட்டான்... அதற்குள் செய்தி அனுப்பி விடுவேன்.” “ஒரு மகத்தான காரியம் செய்து இருக்கிறீர்கள் சேதுபதி அவர்களே.” “இப்போது நான் இப்படிச் செய்தாலும் பின்னால் நானும் மதுரை மன்னருமே மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். இதெல்லாம் ராஜரீக விஷயங்கள். அரசு சூதாட்டங்கள். வாழ்க்கையின் நியதி... நாமெல்லாம் பகடைக் காய்கள். உண்மையில் நம்மை நகர்த்துவது இறைவனே.” கதலி அவன் தலையைக் கோதி விட்டாள். “இராமனாதபுரம் சென்றதும் என் இரண்டாவது பட்டத்து ராணி நீதான்.” “நானா... எனக்கு அப்படிப்பட்ட பாக்கியமா?” என்று வியப்புடன் வினவினாள் கதலி. “ஆம்... சேதுபதி சொன்ன சொல் தவற மாட்டான்.” “நான் ராஜபரம்பரை இல்லை.” “நீயும் ஒரு அரசனின் தங்கைதான் கதலி.” “இல்லை.” “ஆம்... புதுக்கோட்டையில் என் பிரதிநிதியாக ஆளும் பல்லவராயன் எனக்கு எதிராக சதி செய்வதாக செய்தி... ஏகோஜியுடன் உடன்பாடு செய்டு கொண்டிருப்பதாகவும் கேள்வி... அதனால் பல்லவராயனை நீக்கி விட்டு உன் அண்ணனை புதுக்கோட்டையின் அரசனாக ஆக்கப் போகிறேன்.” “உண்மையாகவா சொல்கிறீர்கள்?” “ஆம்... அப்போது நீயும் ஒரு அரசனின் தங்கையாக ராஜ பரம்பரையாக ஆகிவிடுகிறாய்...” அவன் அவளை அணைத்துக் கொண்டான். முற்றும். |