![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 19. ஆதியின் கோபம் |
அத்தியாயம் - 5 மறுநாள் இரண்டே வீரர்களோடும், கதலியுடனும் புறப்பட்டு, இருட்டும் நேரத்தில் மதுரையை அடைந்தான் சேதுபதி. மதுரை வணிகர் வீதியில், மதுரையில் இருந்து ஆண்டிற்கு இரு முறையாகிலும் இராமநாதபுரம் வழியாக இராமேஸ்வரம் சென்று வாணிகத்தையும், இறைவன் தரிசனத்தையும் முடித்துக் கொண்டு வரும் பெருங்குன்றனார் எனும் வணிகர் இருந்தார். சிறிய மாளிகை போன்றிருந்த தன் வீட்டின் முன்னால், புரவியை நிறுத்திக் கீழே குதித்த சேதுபதியைக் கண்ட பெருங்குன்றனார், வியப்பாலும் அதிர்ச்சியாலும் திகைத்துப் போய் நின்றார். "என்னை இங்கே எதிர்பார்க்கவில்லை யல்லவா?" என்று அவரை அணைத்துக் கொண்டான் சேதுபதி. பின், "தனியறைக்குப் போய் பேசுவோம்" என்றவன், அவரை அணைத்தபடியே உள்ளே நுழைந்தான். தனது அந்தரங்க அறைக்கு அவர்களை அழைத்துப் போன பெருங்குன்றனார், "சேதுபதி அவர்களே, இந்த நேரத்தில் நீங்கள் இங்கே வரலாமா..." என்று கேட்டார். "வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது" என்ற சேதுபதி, அவரிடம் ரகசியமாய் ஏதோ பேசினான். பின்பு "இந்த வீரர்கள் தங்க முதலில் ஏற்பாடு செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். அவன் சொன்னவுடன், அந்த இரு வீரர்களையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கிப் போனார் பெருங்குன்றனார். அவர் போன பின், ஒரு பணிமகள் உணவு எடுத்துக் கொண்டு வந்தாள். உணவு உண்டபின் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு பெரும்குன்றனார் சொன்னதாய் சொல்லிப் போனாள் அவள். "கதலி... உனக்கும் தனியறை ஏற்பாடு செய்யட்டுமா...?" என்று விருப்பமேயில்லாமல் கேட்டான் சேதுபதி. "வேண்டாம் சேதுபதி அவர்களே" என்ற போது அவன் முகம் மலர்ந்திருந்தது. "ஏன் வேண்டாம்?" "என் அண்ணன் தங்கள் உயிரை என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறார்" என்றாள் அவள் விஷமமாக! "ஓஹோ... நீ என் ஆபத்துதவியா?" என்று கேட்டுவிட்டுச் சிரித்த சேதுபதி, "வரலாற்றிலேயே ஒரு பெண் அரசன் ஒருவனின் ஆபத்துதவியாக இருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும்..." என்றான். "ஏன் இருக்கக்கூடாதா?" என்றாள் கதலி, சற்று கோபத்தோடு. "அந்த அளவுக்கு உனக்கு வீரமும் திறமையும் இருக்கிறதா என்பதுதான் என் ஐயம்" என்று அவன் சொல்லி முடிக்கு முன், அவள் தன் இடையில் இருந்த குறுவாளை எடுத்து வீச, அது அவனுடைய தலைப்பகையுடன் அப்பால் போய் விழுந்தது. சேதுபதி ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். "எப்படி என் திறமை?" என்று விஷமமாகக் கேட்டபடியே எழுந்து போய், குறுவாளையும் தலைப்பாகையையும் எடுத்து வந்தாள் கதலி. சேதுபதிக்கு அவள் மீதிருந்த அலட்சியம் போய், மதிப்பு ஏற்ப்பட்டது. "இளமான் என்று நினைத்தேன். பாயும் வேங்கையாக இருக்கிறாயே" என்றான் குறும்பாக. "ஆபத்தில்தான் நான் பாயும் வேங்கை. மற்றப்படி இளமான்தான்" என்று சொல்லிவிட்டு புன்னகை செய்தாள் கதலி. அந்தப் புன்னகை சேதுபதியை மயக்கியது. அவளை முதன் முதலாகப் பார்த்தபோது ஏற்பட்ட எண்ணங்கள் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தன. தனது திண்மையான திரட்சியான அவயங்கள் மீது அவனது பார்வை பரவியதை கவனியாதவள் போல், "நான் ஏன் என் அண்ணனுடன் புறப்பட்டு வந்தேன் தெரியுமா சேதுபதி அவர்களே?" என்றாள் கதலி. "சொல்." "என் அண்ணன்மார்கள் எல்லாம் அரச குடும்பங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். நானும் அரச குடும்பத்துடன் சம்பந்தபட வேண்டுமென்று தான் புறப்பட்டேன்..." "நீயும் என் படைத் தலைவியாக விரும்புகிறாயா?" என்று அவளை இடைமறித்துக் கேட்டான் சேதுபதி, கேலியாக. "ஏன் ராணியாக சம்பந்தப்படக் கூடாதா?" என்று சிறிதும் தயங்காது அவள் பதில் கேள்வி கேட்க, எழுந்து அவளின் கையைப் பற்றிக் கொண்டபடி "கதலி" என்று காதலாய் அழைத்தான் சேதுபதி. அழைத்தபடியே, அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அவளின் முகத்தில் தன் முகத்தைப் பதிக்கவும் செய்தான். "உடனே உங்கள் விஷமத்தை ஆரம்பித்து விட்டீர்களே..." என்று பொய்யான கோபத்துடன் சொன்னாளென்றாலும், அவனை மயக்குவது போல் மீண்டும் ஒரு புன்னகையைச் சிந்தினாள் அவள். "இப்போது நான் இளமான்" என்று நிறுத்தியவள், "பாயும் வேங்கை யாரென்று சொல்லத் தேவையில்லை" என்று கூறி, பார்வையை அவன் மேல் செலுத்தினாள். "நீ நினைப்பது தவறு. நீ தேன். நான் வண்டு" என்று சொல்லியபடியே, தனது வலது கையை அவளின் மென் தோள்களுக்குக் கீழ் கொண்டு போனான் சேதுபதி. நடு இரவுக்கு மேல் மதுரை இளவரசனுடன் புறப்பட்டு காலை இரண்டாம் ஜாம ஆரம்பத்தில் அரண்மனை வாயிலை அடைந்தனர் சின்னக்காட்டீரனும், தொண்டைமானும், வீரர்களும். விஷயத்தை தெரிவித்ததும், ருஸ்தம்கானின் உப தளபதியாகிய முஸபர்கானே விரைந்து வந்து, அவர்களை அழைத்துப்போய் விருந்தினர் மாளிகையில் தங்கச் செய்தான். "படைத் தலைவர் அரண்மனையில் இல்லை. வெளியே போயிருக்கிறார். நாளைதான் வருவார்" என்று சொல்லிப் போனான் முஸபர்கான். மறுநாள் காலையில் வந்த ருஸ்தம்கானிடம் தகவல் சொல்லப்பட்டது. விசாரணை மண்டபத்தின் நடுவில் இருந்த பெரிய ஆசனத்தில் அமர்ந்து கொண்டவன், அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டான். உடனடியாக சின்னக்காட்டீரனும், தொண்டைமானும், இளவரசனும் அழைத்து வரப்பட்டனர். ஆறடி உயரத்திற்கு மேல் ஆஜானுபாகுவாக, முகத்தில் கொடூரக்களையுடனும், சிறிய கண்களுடனும், குறுந்தாடியுடனுமிருந்த ருஸ்தம்கானை அப்போது தான் முதல் முறையாகப் பார்த்தான் தொண்டைமான். "சபாஷ் பாளையக்காரரே, சபாஷ்! மன்னரின் கட்டளைப்படி நான் கொடுத்த வேலையைப் பொறுப்பாகச் செய்து முடித்தீர்கள்" என்ற ருஸ்தம்கான், "இவரை மன்னர் முன் நிறுத்தி அவர்களது கட்டளையை நிறைவேற்றி விட்டு வருகிறேன். நீங்கள் விருந்தினர் மாளிகையில் தங்கியிருங்கள்" என்று சொல்லி விட்டுப் போனான். இளவரசனும் ருஸ்தம்கானின் வீரர்கள் தொடர அவனைப் பின் தொடர்ந்தான். சின்னக்காட்டீரனுக்கு இப்போது எல்லமே புரிவது போலிருந்தது. வழக்கமாய், தளவாய் கோவிந்தப்பையாதான் வரும் பாளையக்காரர்களை வரவேற்பார். அந்த வழக்கம் மாறியிருக்கிறது. தவிர, அரண்மனையின் வாயிலிலும் உள்ளேயும் முக்கியமான இடங்களில் ருஸ்தம்கானின் முஸ்லிம் வீரர்களே காவல் புரிந்தனர். மாலையில் விருந்தினர் மாளிகைக்கு வந்த வீரன் ஒருவன் "பாளையக்காரரை மட்டும் வரச் சொல்லி உத்தரவு" என்றான் பணிவுடன். ஒரு கணம் தயங்கிய சின்னக்காட்டீரன், தொண்டைமான் போகச்சொல்லி சைகை காட்ட அந்த வீரனுடன் புறப்பட்டான். மன்னர் மாளிகைக்கு முன்னே இருந்த மளிகைக்குள் அந்த வீரனுடன் நுழைந்தான் சின்னக்காட்டீரன். அது தளவாயின் மாளிகை. உள்ளே, பெரிய அலங்காரமான அறையில் அமர்ந்திருந்த ருஸ்தம்கான் சின்னகாட்டீரனை வரவேற்றான். ருஸ்தம்கானிடம் எச்சரிக்கையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொண்ட பாளையக்காரன், "தளவாய் அவர்கள் இல்லையா?" என்று சாதாரணமாய்க் கேட்பது போல் கேட்டான். "ஏன்?" "வழக்கமாக தளவாய் அவர்கள் தான் எங்களை வரவேற்பார்கள். தவிர மன்னர் அவர்களையும் சந்திக்க வைப்பார்கள்" என்று சாமர்த்தியமாக பேச்சை தொடர்ந்தான் சின்னக்காட்டீரன். "தளவாய் திருச்சி கோட்டைக்குப் போய் இருக்கிறார். மன்னருக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் யாரையும் சந்திக்க அவர் விரும்பவில்லை" என்றான் ருஸ்தம்கான். "நீங்கள் எப்படி இளவரசரை சிறை செய்தீர்கள்?" என்று தொடர்ந்து கேட்டான் அவன். "இராமநாதபுரம் சேதுபதி இளவரசரை சிறை செய்து தம் படைத்தலைவர் மூலம் அனுப்பி வைத்தார். நான் அவர்களை வளைத்துக் கொண்டு கேட்டவுடன், என்னிடம், அவரை ஒப்படைத்து விட்டுப் போய்விட்டனர்." "உண்மையாகவா?" "இல்லாவிட்டால் எனக்கு லிகிதம் வந்த அன்றே இளவரசரைப் பிடித்து வந்திருக்க முடியாதே" என்ற பாளையக்காரன், "சேதுபதி அவர்கள் இளவரசருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், அவரைப் பிடிக்க நாம் படை எடுக்க நேர்ந்திருக்கும்" என்றான். "சேதுபதியாகவே ஏன் இளவரசரை இங்கே அனுப்ப வேண்டும்... மன்னர் அனுப்பிய லிகிதம் கூட அவருக்கு கிடைத்திருக்காதே..." என்று கேட்டான், ருஸ்தம்கான். "நம்முடன் வீணாக இப்போது பகை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்." "உங்களுடன் விருந்தினர் அறையில் தங்கி இருப்பவர்தான் சேதுபதியின் படைத்தலைவர் தொண்டைமான் என்று நான் கருதுகிறேன். அப்படிதானே" என்ற ருஸ்தம்கானின் அடுத்த கேள்வி பாளையக்காரனைத் திடுக்கிட வைத்தது. "ஆம்... உங்களுக்கெப்படித் தெரியும்" என்று வியப்போடு கேட்டான் பாளையக்காரன். "யூகம்தான். நீங்கள் இங்கே ஒப்படைக்கிறீர்களா இல்லையா என்று பார்த்து, சேதுபதி அவர்களிடம் பொறுப்புடன் போய் பதில் சொல்ல வேண்டுமல்லவா?" "ஆம், ஆம்" என்று அவன் சொன்னதை ஆமோதித்தான் பாளையக்காரன். "நீங்கள் எப்பொழுது புறப்படுகிறீர்கள்" என்று கேட்டான், ருஸ்தம்கான். "இப்பொழுதே புறப்படலாமென்றிருகிறேன்." "தொண்டைமான் இங்கேயே இருக்கட்டும். தொண்டமானுக்குப் பரிசும், சேதுபதி அவர்களைப் பாராட்டி லிகிதமும் கொடுக்க வேண்டும். அவர் காலையில் புறப்படட்டும்" என்றான் ருஸ்தம்கான். ருஸ்தம்கானிடம் விடை பெற்றுக் கொண்ட பாளையக்காரன், விருந்தினர் மாளிகையில் தொண்டைமானைச் சந்தித்து ருஸ்தம்கானுடன் நடந்த உரையாடலைச் சுருக்கமாக விளக்கினான். பின் அவனது செவியருகில் ஏதோ முணுமுணுத்து விட்டு, தன் வீரர்களுடன் புறப்பட்டான். தன்னை இன்னார் என்று அறிந்து கொண்ட ருஸ்தம்கானைப் பற்றியும், வேறு யோசனையிலும் ஆழ்ந்து போனான் தொண்டைமான். அப்போது அங்கே ஒரு இளம் பெண் வந்தாள். "தாங்கள் தானே தொண்டைமான்" என்றாள் அவனிடம். "ஆம்." "வாருங்கள் என்னுடன்." சொல்லிவிட்டு அவள் முன்னே செல்ல, தொண்டைமான் அவளைப் பின் தொடர வேண்டியதாகி விட்டது. அவள் அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். பின்னர் இன்னோர் மண்டபத்தை எட்டிப் பார்த்துவிட்டு, "என்னுடன் ஓடி வாருங்கள்" என்று சொன்னபடியே ஓட ஆரம்பித்தாள். "இவள் யார்? நான் ஏன் இவளுடன் ஓட வேண்டும்?" என்று மனசுக்குள் கேட்டுக் கொண்டானேன்றாலும், ஓடுவதை நிறுத்தவில்லை தொண்டைமான். சற்று இருட்டான இடத்துக்கு வந்ததும் அந்தப் பெண் நின்றாள். பின் சுவரைத் தடவிக் கொண்டே சற்று தொலைவு நடந்து ஒரு கதவைத் தள்ள, அது திறந்து கொண்டது. அந்த அறைக்குள் அவள் நுழைந்தாள். தொண்டைமானிடம் "உள்ளே வாருங்கள்" என்று கொஞ்சுவது போல், அவள் சொல்ல, அவன் உள்ளே வந்ததும் கதவை மெல்ல மூடினாள். அப்போது, அந்தக் கதவின் வெளிப்பக்கம் யாரோ நாதாங்கியை மாட்டிப் பூட்டும் சப்தம் கேட்டது. |