1 பையன்கள் மேல் சிவவடிவேலுவுக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய அணுகுமுறைகள் பையன்களுக்கு அறவே பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே தகாறு முற்றி, மூத்தவன் தனியே போய்விட்டான். மூத்த மகன் தான் இப்படி என்றால் இளையவன் பாகவதர் தலையும் கிருதாவும் வைத்துக் கொண்டு பட்டி மண்டபம், கவியரங்கம் என்று அலைந்து கொண்டிருந்தான். மகள் சாது. வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். மகன்கள், மகள், மனைவி யாரையும் பெரியவர் நம்பவில்லை. பெரியவரை அவர்களும் நம்பவில்லை. ஒரு கூடை செங்கல்லும் பிடாரி என்பார் அவர். இதன் விளைவு? கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து தொடங்கிய தொழில் முழுகிவிடும் போலிருந்தது. தொட்டதெல்லாம் நஷ்டப்பட்டது. ஆடிட்டர் எச்சரிக்கை செய்தார்: “இதை இப்படியே விடக்கூடாது. நஷ்டம் பயங்கரமாக இருக்கிறது. திவாலாகி விடும். வாங்கின கடனுக்கும் முதலீட்டுக்கும் வட்டிக் கூடக் கட்ட முடியாமே இதை நடத்தறதிலே பிரயோசனமில்லே. ஏதாவது நடவடிக்கை உடனே எடுத்தாகணும்.” பெரியவர் சிவவடிவேலுவுக்குக் கண்களைக் கட்டி நடுக்காட்டில் கொண்டு போய் விட்ட மாதிரி இருந்தது. விவசாயம், எஸ்டேட் நிர்வாகம் எல்லாம் அவருடைய குடும்பத்துக்குப் பரம்பரையாகப் பழக்கமானவை. ஹோட்டல் நிர்வாகம் புதிது. அந்த நிர்வாகத்துக்கு அவரும் அவருக்கு அந்த நிர்வாகமும் புரிபடவில்லை. முன்னே போனால் இழுத்தது. பின்னே போனால் உதைத்தது. சரிப்பட்டு வரவில்லை. அவர் மகன்களில் மூத்தவன் தண்டபாணி அவரோடு கோபித்துச் சண்டை போட்டுக் கொண்டு தனியே போய் டில்லியில் உத்தியோகம் பார்க்கிறான். இளையவன் குமரேசன் பகல் எல்லாம் வீட்டில் படுத்துத் தூங்கிவிட்டு மாலையில் பட்டு மண்டபம், கவியரங்கம் என்று அலைந்து விட்டு அகாலத்தில் புத்தம் புதுக் கைத்தறித் துண்டுகளும், கசங்கிய மாலையும், இருபது முப்பது என்று கவரில் வைத்துக் கொடுக்கப்படும் அழுக்கு ரூபாய் நோட்டுக்களுமாக வீடு திரும்புகிறான். ஓட்டல் நிர்வாகத்துக்கு அவர்களால் ஒருவிதமான ஒத்தாசையுமில்லை. எதிலும் சந்தேகமும், அவநம்பிக்கையும் உள்ள அவரை நெருங்கவே அஞ்சினார்கள் அவர்கள் அவர் ஒரு தனித் தீவாக ஒதுக்கி விடப்பட்டிருந்தார்.
விவசாய சமூகத்திலிருந்து தொழில் சமூகத்துக்கு மாறிய காலகட்டத்தில் உச்சவரம்பு காரணமாக அதிக நிலங்களை விற்று வந்த பணத்தில் இருந்தும் மேற்கொண்டு கடனாக வாங்கிய தொகையிலிருந்தும் ஒருவழியாக ஓட்டல் பார்கவி போர்டிங் அண்ட் லாட்ஜிங்கைக் கட்டி முடித்துத் திறந்தும் ஆயிற்று. திறந்த பின்புதான் பிரசினைகளே ஆரம்பமாயின. நஷ்டமும் ஆரம்பமாயிற்று.
ஓட்டல் பார்கவி போன்ற ஒரு பெரிய ஓட்டலைத் தாங்கும் அளவிற்கு ஜமீன் குருபுரம் பெரிய ஊரும் இல்லை. ஆனால் அதன் கேந்திரத்தன்மை காரணமாக ஓர் ஓட்டலுக்கு அவசியமும் தேவையும் இருந்தன. நாட்டில் அந்த வேளையில் உச்சவரம்புச் சட்டம் வர இருந்ததாலும் ஆடிட்டர் யோசனை சொன்னதாலும் தான் சிவ வடிவேலு இந்த முடிவை எடுத்தார். ஓட்டல் கட்டினார். ஜமீன் குருபுரத்திற்கு அருகே ஒரு மலைத் தொடரில் வரப் பிரசாதியான ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இருந்தது. அடிவாரத்தில் இருந்த பெரிய ஊரான குருபுரத்துக்கு வந்துதான் அங்கே செல்ல முடியும். மலையடிவாரத்திலிருந்து வளைந்து நெளிந்து சுற்றிச் சுற்றி மலை மேல் ஏறும் ‘காட்செக்ஷன்’ சாலையில் முப்பது கிலோமீட்டர் பயணம் செய்துதான் ஆஞ்சநேயரைத் தரிசிக்க முடியும். மலை மேல் தங்க வசதிகள் எதுவும் கிடையாது. குருபுரத்தில் வந்து தங்கித்தான் போயாக வேண்டியிருந்தது. மிளகாய், காய்கறி, நெல், ஏலக்காய் ஆகிய மொத்த வியாபாரத்துக்கான மண்டிகள் பல இருந்ததனால் கொள்முதலுக்காகத் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் அடிக்கடி வந்து போனார்கள். அவர்களுக்கும் ஒரு நல்ல ஓட்டல் தேவையாயிருந்தது. ஊரைச் சுற்றிலும் முந்திரிக் காடு. மலை மேல் ஏலம், கிராம்பு, ஜாதிக்காய், தேயிலை, காப்பி என்று வாசனைப் பொருள்களும் ஏற்றுமதி அயிட்டங்களும் விளைந்தன. பணப் புழக்கம் உள்ள பிரதேசமாகத்தான் இருந்தது. பெரியவர் சிவவடிவேலுவுக்கும் மலை மேல் எஸ்டேட் இருந்தது. எஸ்டேட்டை அப்படியே வைத்துக் கொண்டு நிலங்களில் சட்டத்திற்கு அதிகமாக இருந்ததை விற்று, மேற்கொண்டு கடனும் வாங்கித்தான் ஓட்டல் பார்கவியைக் கட்டியிருந்தார். கொஞ்சம் தாராளமாகவே செலவழித்துக் கட்டி விட்டார். ஆனால், ‘போர்டிங்’ வகையிலும் நஷ்டம், ‘லாட்ஜிங்’ வகையிலும் நஷ்டம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு விரக்தியில், கிடைத்த விலையை வாங்கிக் கொண்டு ‘பார்கவி’யை விற்று விடலாம் என்று கூட முடிவு செய்தார். மதுரையிலோ, கோவையிலோ, இப்படி ஓர் ஓட்டல் விலைக்கு வருகிறது என்றால் போட்டி போட்டுக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று வாங்க முன் வருவார்கள். குருபுரத்தில் அப்படி யாரும் வரவில்லை. நஷ்டத்தில் நடக்கிறது என்று வேறு பேராகி விட்டதால் பயந்து ஒதுங்கினார்கள். அருகில் வரவே அஞ்சினார்கள். அவரே தொடர்ந்து நடத்தியாக வேண்டி வந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தானாகவும் தீர்வு காண முடியாமல், பிள்ளைகளுடைய ஒத்தாசையும் கிடைக்காமல் திண்டாடினார் சிவவடிவேலு. ஆடிட்டரிடம் போய் அழுது புலம்பாத குறையாக மன்றாடினார். “இந்த மாதிரி என்னன்னு புரியாமே நஷ்டத்திலே நடக்கிற தொழில்களைச் சரிப்படுத்தற வேலையைச் செய்யறதுக்கே டெல்லியிலே ஒருத்தர் இருக்கார். ‘சந்திரஜித் குப்தா’ன்னு பேர். சார்ட்டட் அக்கௌண்டெண்ட் மட்டுமில்லை. ஹாவர்டு யூனிவர்சிடியிலே எம்.பி.ஏ. பண்ணியிருக்கார். ‘பிஸினஸ் கிளினிக்’னு வச்சிருக்கார். தன்னையும் ‘பிஸினஸ் டாக்டர்’னு சொல்லுகிறார். தொழில் நிர்வாகத்திலே ‘ஸிக் இண்டஸ்ட்ரி ரெஸ்க்யூ மெத்தட்ஸ்’ (நோய்வாய்ப்பட்ட தொழில்களை மீட்கும் முறைகள்) என்று தனிப் பிரிவை மட்டும் ஆராய்ச்சி பண்ணிப் படிச்சிட்டு வந்திருக்கார். அவரு வந்து பார்த்து யோசனைகள் சொன்னப்புறம் எத்தனையோ நஷ்டப்பட்ட தொழில்கள் மீண்டும் லாபம் அடைஞ்சிருக்கு, பதினைஞ்சு நாள் அல்லது அதிகமாகப் போனால் ஒரு மாசம் நம்ம கூடவே தங்கினார்னா எங்கே கோளார்னு கண்டுபிடிச்சிடுவார். அவரை வரவழைக்கலாமா?” ஆடிட்டர் கேட்டார். ஆடிட்டர் சொன்ன விஷயம் கொஞ்சம் புதுமையாகவும் புரியாததாகவும் இருக்கவே சிவவடிவேலு யோசித்தார். வருகிறவர் எவ்வளவு செலவு வைப்பாரோ, என்ன கேட்பாரோ என்று எண்ணித் தயங்கினார். “ஆடிட்டர் சார்! எனக்கு என்னமோ இதெல்லாம் அவசியம்தானான்னு சந்தேகமா இருக்கு. ஆனால் நீங்க சொல்றப்போ நான் தட்டிச் சொல்ல முடியாது. பல வருஷமா எங்க குடும்ப வரவு செலவு உங்களுக்கு நல்லாத் தெரியும். நீங்க எது சொன்னாலும் அது என் நன்மைக்காகத்தான் இருக்கும்னு ஒப்புக்கறேன். ரொம்பச் செலவு இழுத்து விட்டுடாமப் பார்த்துக்குங்க. சிக்கனமா இருந்து லாபம் சம்பாதிக்க வழி என்னன்னு ஒருத்தனைக் கூப்பிட்டு யோசனைக் கேட்கப் போய் அதைக் கண்டுபிடிக்க அவனும் நாமுமாக ஊதாரிச் செலவு பண்ணின கதையா ஆயிடக் கூடாது” என்று கவலைப்பட்டார் சிவவடிவேலு. “அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது. கவலைப் படாதீங்க. நான் இன்னிக்கே குப்தாவுக்கு லெட்டர் எழுதிடறேன். சீக்கிரமா அவனை வரவழைச்சிடலாம்” என்றார் ஆடிட்டர். |