![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
11. அமைச்சரின் சிந்தனைகள் இரவோடிரவாகக் கடலுக்குள் சென்ற குமரன் நம்பியும் உடன் துணை சென்றவர்களும் திரும்பவில்லை என்பதோடு கொள்ளைக்காரர்களின் மரக்கலங்கள் கொடுங்கோளூரை நெருங்கிவிட்டன என்பதும் அமைச்சர் அழும்பில்வேளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. உடனே அவர் அதிகப் பரபரப்படைந்து விடவில்லை என்றாலும் வேளாவிக்கோ மாளிகையில் ஓர் மந்திராலோசனை நிகழ்த்தினார். "குமரன்நம்பியும் அவனுடைய கொடுங்கோளூர் படைக்கோட்டத்து வீரர்களும் கொள்ளைக்காரர் முற்றுகையை முடியடிக்கத் தவறினால் அடுத்து என்ன ஏற்பாடு செய்வதென்று இப்போது நாம் சிந்திக்க வேண்டும்?" என்று அமைச்சர் கூறியபோது சேரநாட்டு அரசவையோடு பெருந் தொடர்புடைய வஞ்சிமா நகரத்து மூதறிஞர் சிலர் குமரன் நம்பியின் குறைந்த ஆற்றலையும் இளம் பருவத்தையும் குறைவாக மதிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்தார்கள். முற்றுகையிலிருந்து சேர நாட்டுக் கடற்கரை நகரங்களை மீட்கும் பொறுப்பைக் குமரன் நம்பியைப் போன்ற ஓர் இளைஞனிடம் ஒப்படைத்தது தவறு என்று கூட அவர்களில் சிலர் கருதுவதாகத் தெரிந்தது. "பெரு வீரரும் பெரும்படைத் தலைவரும் மாமன்னரோடு வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் குமரன் நம்பியைத் தவிர வேறெவரும் இல்லை. நீங்கள் நினைப்பது போல் எல்லாக் காரியங்களையும் வயது முதிர்ந்தவர்களே நிறைவேற்றித் தருவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. சில காரியங்களை வயது முதிர்ந்தவர்களை விட இளைஞர்கள் ஆர்வத்தோடு நிறைவேற்றித்தர முடியும். இது அப்படிப்பட்ட காரியமாக ஆக்கியே குமரன்நம்பியை அனுப்பி வைத்திருக்கிறேன்" என்றார் அழும்பில்வேள். மந்திராலோசனையில் கலந்து கொண்டிருந்த மற்றவர்களுக்கு இது பிடிக்கவுமில்லை, புரியவுமில்லை. ஆனால் வேளாவிக்கோ மாளிகை எல்லையில் இருந்து கொண்டு அழும்பில்வேளை எதிர்த்துப் பேசவும் அவர்கள் அஞ்சினார்கள். அழும்பில் வேளோ முற்றுகையை நீக்குவதற்கு குமரன் நம்பியை விட வேறு தகுதியான ஆளில்லை என்றே வாதித்தார். தலைநகரப் பாதுகாப்பிற்கென்று இருந்த சில வீரர்களும் கொடுங்கோளூர்க்கு அனுப்பப்பெற்றனர். வேளாவிக்கோ மாளிகை என்ற அரசதந்திரக் கட்டிடம் இதற்கு முன் இவ்வளவு பரபரப்பை அடைந்ததே கிடையாது. அந்த மாளிகையின் தூண்கள் கட்டிடத்தை மட்டும் தாங்கி நிற்பதில்லை. மாபெரும் அரசதந்திர நிகழ்ச்சிகளையும் அதிராமல் தாங்கி நின்றிருக்கிறது. சேர நாட்டின் பெரிய பெரிய அரசியல் முடிவுகள் எல்லாம் இந்த அரசதந்திர மாளிகையில் தான் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றன. அழும்பில்வேள் வஞ்சிமா நகரத்தின் முதியவர்களோடு மந்திராலோசனை முடித்து அவர்களை எல்லாம் அனுப்பி விடை கொடுத்து அனுப்பி விட்டாலும் தமக்குள் தவிர்க்க முடியாத சிந்தனையில் ஆழ்ந்தார். இந்தப் பொறுப்பில் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவனாக குமரன் நம்பி எந்த அளவு நிறைவேற்றியிருக்கிறான் அல்லது நிறைவேற்றவில்லை என்பதை அவரால் இன்னும் கணித்தறிய முடியாமலிருந்தது. அவன் சொந்தமாகவே பரபரப்புக் காண்பிக்க ஏற்ற காரணம் தெளிவாகவே கூறப்பட்டிருந்தும் அதை அவன் விரைந்து நிறைவேற்றினானா இல்லையா என்பது தெரிய மகோதைக் கரையில் கொடுங்கோளூரிலிருந்தும், முசிறியிலிருந்தும் ஒவ்வொரு விநாடியும் செய்திகளை எதிர்பார்த்த வண்ணம் விழித்திருந்தார் அழும்பில்வேள். வலியனும், பூழியனும் அவருக்கு உறுதுணையாக உடனிருந்தனரென்றாலாவது சிறிது ஆறுதலாயிருக்கும். அவர்களையும் குமரனோடு கொடுங்கோளூர் அனுப்பியாயிற்று. கொடுங்கோளூரிலிருந்து அவர்கள் கடைசியாக அமைச்சர் பெருமானுக்கு அனுப்பிய செய்தி: 'குமரன் முதலில் ஒருமுறை நிலைமையறிவதற்காகக் கடலுக்குள் சென்று வந்தது தவிர மீண்டும் சில வீரர்களோடு கடம்பர் மரக்கலங்கள் உள்ள கடற்பகுதிக்குப் போயிருக்கிறான். போன இடத்தில் அவனுக்கும் அவனுடன் சென்றவர்களுக்கும் என்ன நேர்ந்ததென்றே இதுவரை தெரியவில்லை. ஆனால் ஒரு மாறுதல் மட்டும் மகோதைக் கரை மக்கள் யாவரும் வெளிப்படையாகக் காணும்படி நேர்ந்திருக்கிறது. முன்பு கடலில் வெகு தொலைவில் ஒரு தீவினருகே நின்றிருந்த க்டம்பர் மரக்கலங்கள் இப்போது கொடுங்கோளூருக்கும், முசிறிக்கும் மிகமிக அருகே நெருங்கியிருக்கின்றன.' இந்தச் செய்தியைத் தம்முடைய அந்தரங்க ஊழியர்களாகிய வலியனும் பூழியனுமே அனுப்பியிருந்ததனால் ஒரு வார்த்தையும் மிகையாகவோ, குறைவாகவோ இருக்குமென்று தோன்றவில்லை. 'குமரன் தன்னுடன் சென்றவர்களோடு கடம்பர்களிடம் பிடிபட்டிருப்பானோ?' - என்ற சந்தேகமும் அவர் மனதில் இருந்தது. தலைநகரத்தில் பேரரசரும், படைத்தலைவரும் பிறரும் உள்ள நேரமாயிருந்தால் அமைச்சர் அழும்பில்வேள் மிகமிக இன்றியமையாத இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டிற்கு இப்படிக் குமரன் நம்பியைப் போன்ற ஓர் இளைஞனை நம்பி அனுப்பியிருக்க மாட்டார். ஆனால் யாரும் தலைநகரில் இல்லாத நிலையை எண்ணி, இருப்பவர்களைக் கொண்டு எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது. 'குமரனைப் பற்றிய எந்த செய்தியும் தெரியவில்லை என்று தெரிய வந்ததும், கொள்ளை மரக்கலங்கள் வளைத்துத் தாக்க வேண்டும் என்பதையும், துரத்த வேண்டும் என்பதையும் விட அந்த மரக்கலங்களில் ஏதாவதொன்றில் கொடுங்கோளூர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி சிறைப்பட்டிருப்பதாகக் கருதி அவளை முதலில் மீட்பதே தன் கடமை என்ற எண்ணத்தில் செயல்பட்டு - அதன் காரணமாகவே குமரன் அகப்பட்டுக் கொண்டிருப்பானோ' என்றும் உய்த்துணர முடிந்தது அமைச்சரால். ஆனாலும் அவர் அயர்ந்து விடவில்லை. நம்பிக்கையோடு - வேளாவிக்கோ மாளிகையிலிருந்த வேறொரு வீரன் மூலம் - கொடுங்கோளூருக்குக் கட்டளைகளை அனுப்பினார். 'குமரனும் அவனோடு சென்றவர்களும் திரும்பவில்லை என்பதற்காகக் கலங்க வேண்டாம். எந்தச் சமயத்தில் - மகோதைக் கரையின் எந்தப் பகுதியிலிருந்து - கடம்பர்களின் மரக்கலங்கள் நகரத்தைக் கொள்ளையிட நெருங்கினாலும் அந்தப் பகுதியின் கரைப்பகுதியில் எல்லாவிதங்களிலும் எதிர்த்துத் தாக்கவும், தடுக்கவும் ஆயத்தமாக இருக்குமாறு' - செய்திகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. கொள்ளைக்காரர்கள் மகோதைக் கரை நகரங்களில் ஊடுருவுவதற்குக் காரணமான இடமாகப் பெரும்பாலும் பொன்வானி, ஆயிரை, பேரியாறு போன்ற ஆறுகளின் முகத்துவாரங்களே பயன்படக் கூடுமாதலால் அந்த முகத்துவாரங்களில் காவலையும், கட்டுத் திட்டத்தையும், விழிப்பாகச் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்திருந்தும், வேளாவிக்கோ மாளிகையிலிருந்த அமைச்சர் அழும்பில்வேளுக்கு மன நிம்மதியில்லை. உள்ளம் ஒரு விநாடிகூட விடுபடாத சிந்தனைகளில் மூழ்கியிருந்தது. கொடுங்கோளூர்க்கு உடன் சென்ற பூழியனும், வலியனும் அங்கே படைக் கோட்டத்தில் இருப்பதால் சமயோசிதமாக ஏதாவது செய்து அவர்கள் நகரத்தைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. நல்ல வேளையாக எல்லா நிலையிலும், எல்லாச் சமயங்களிலும் குமரன் நம்பியோடு உடன் செல்லுவதே தங்கள் கடமை என்று எண்ணி அந்த இருவரும் கடம்பர் மரக்கலங்கள் இருந்த கடற்பகுதிக்குச் சென்று அகப்பட்டுக்கொண்டு விடவில்லை என்பது அமைச்சருக்கு நம்பிக்கை அளித்தது. அவர்களும் கடற்பகுதிக்குச் சென்று குமரனைப் போல் திரும்பாமலிருந்தால் தமக்குச் செய்தி தெரியவும், தாம் செய்திகளைத் தெரிவிக்கவும் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்தில் நம்பிக்கை வாய்ந்த மனிதர்களே இல்லாமல் போயிருப்பார்கள் என்பதை அமைச்சரும் உணர்ந்துதான் இருந்தார். அமைச்சர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் கடம்பர் மரக்கலங்களில் இருந்த குமரனும் அவனுடன் சென்றவர்களும் என்ன ஆனார்கள் என்பதை இனிமேல் கவனிக்கலாம். |