![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
15. நம்பியின் நாடகம் எல்லாம் குமரன் நம்பி எதிர்பார்த்தபடியே நடந்திருந்தது. ஆனால் முற்றிலும் எதிர்பாராததொரு மாறுதலும் இருந்தது. முகத்துவாரத்தில் புகுந்து உள்ளே வருகிற படகு கண்ணுக்குத் தென்பட்டதும் தான் அந்த மாறுதல் புரிந்தது. வந்த படகில் அவன் எதிர்பாராத விதத்தில் அணிவகுப்பு இருந்தது. ஆந்தைக்கண்ணனிடம் சிறைப்பட்டிருந்த சேர நாட்டு வீரர்களிடம் இருந்து தன்னை நோக்கிப் பழிவராமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாட்டைக் குமரன் நம்பி செய்திருந்தான். ஆனால், இப்போதும் அந்தப் பழி வராமல் காப்பாற்றிக் கொள்ள அரிய முயற்சி செய்ய வேண்டிய நிலையில் தான் அவன் இருந்தான். முகத்துவாரத்திற்கு வந்த படகில் திரும்ப வந்திருந்த சேர நாட்டு வீரர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாகக் கடம்பர்கள் சுற்றி இருந்தனர். எனவே கடம்பர்களை அழிக்கவும் கொடுங்கோளூர் வீரர்களைக் காப்பாற்றவும் ஒரே சமயத்தில் உபாயம் தேட வேண்டி இருந்தது. பொன்வானிக் கரையின் இருமருங்கும் புதர்களில் மறைந்திருந்த சேர நாட்டு வீரர்கள் முகத்துவாரத்திற்குள் முன்னேறும் படகைப் பார்த்தும் - என்ன செய்வதென்று குமரன் நம்பியின் சைகையை எதிர்பார்த்திருந்தார்கள். படகில் வருகிறவர்களில் கடம்பர்களை மட்டும் தனியே பிரித்துத் தாக்குவதோ, அம்பு செலுத்துவதோ சாத்தியமென்று தோன்றவில்லை. அப்படியே ஒவ்வொருவராகத் தேடிக் குறிவைத்துக் கடம்பர்கள் மேல் அம்பு செலுத்தி விடலாம் என்றாலோ - அதன் விளைவாக உடனிருக்கும் கொடுங்கோளூர் வீரர்களுக்குக் கடம்பர்களிடமிருந்து என்னென்ன கெடுதல்கள் உடனே உண்டாகுமோ என்ற தயக்கமும் இருந்தது. இந்த நிலையில் தயக்கத்துடன் கூடிய விநாடிகள் நகர்ந்து கொண்டிருந்தன. படகும் நெருங்கிக் கொண்டிருந்தது. முடிந்த வரை சாதுர்யமாக நிலைமையை எதிர்கொள்ள விரும்பினான் குமரன் நம்பி. படகிலுள்ள கடம்பர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. கொடுங்கோளூர் வீரர்களிடம் ஆயுதங்கள் எதுவுமே இல்லை. கடம்பர்களிடம் சிறைப்பட்டவர்கள் என்ற முறையில்தான் இன்னும் கொடுங்கோளூர் வீரர்கள் இருந்தனர். தான் கடலுக்குள் அனுப்பியிருந்த 'செவிட்டூமை' ஒற்றன் - படகில் திரும்பி வரவில்லை என்பதையும் குமரன் நம்பி கவனித்திருந்தான். படகிலிருந்த கொடுங்கோளூர் வீரர்களைச் சூழ்ந்து முரட்டுக் கடம்பர்கள் ஆயுதங்களோடு அமர்ந்திருந்ததனால், அவர்களை எதிர்த்துத் தாக்கவோ, எவரையும் தாக்காமலே கொடுங்கோளூர் வீரர்களை மட்டும் மீட்கவோ முடியாமலிருந்தது. படகிலிருந்த கடம்பர்களின் கண்களிலும், முகத்திலும் தெளிவான தீவிரமான நம்பிக்கை எதுவும் தெரியவில்லை. 'செவிட்டூமை' - ஒற்றனை நம்பாமல் அவனைத் தன்னிடமே வைத்துக்கொண்டு, கொடுங்கோளூர் வீரர்களை அனுப்புவது போல் அனுப்பி அவர்களுக்குக் காவலாகக் கடம்பர்களையும் சேர்த்து அனுப்பியிருப்பதால் - ஆந்தைக்கண்ணன் முழு நம்பிக்கையோடு - எதையும் செய்யவில்லை என்று குமரன் நம்பியால் அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. தன்னால் அனுப்பப்பட்ட 'செவிட்டூமை' ஒற்றனை எப்போது ஆந்தைக்கண்ணன் திருப்பி அனுப்பவில்லையோ அப்போதே அந்த ஒற்றனை அவன் முழுமையாக நம்பவில்லை என்பதையும் - ஒற்றனின் ஓலையில் இருந்த செய்தியையும் முழுமையாக நம்பவில்லை என்பதையும் உய்த்துணர முடிந்தது. கொடுங்கோளூர் வீரர்களையும் உடன் வைத்துக்கொண்டு படகில் பொன்வானி முகத்துவாரத்தின் வழியே முன்னேறும் அந்த வேளையில் கடம்பர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முயன்று கொண்டிருந்தான் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத் தலைவன். 'வழிகளைக் காட்டுவதற்காகச் சேர நாட்டு வீரர்களின் துணைகளோடு நம் படைகளைச் சேர்ந்த கடம்பர்களையும் சேர்த்து இன்றிரவு பொன்வானியாற்று முகத்துவாரத்தின் வழியே நகருக்குள் அனுப்பவும் இங்கு யாவும் நமக்கு உறுதியான தன்னிலையில் உள்ளன. இந்த ஓலையைக் கொண்டு வருபவன் ஒரு செவிட்டூமை. குமரன் நம்பி நமக்கு மிகவும் துணையாயிருக்கிறான். இந்த ஓலையைக் கொண்டு வருபவன் மேலும் என் மேலும் தாங்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காக இதை நாங்கள் இங்கு வந்த அதே படகில் அனுப்புகிறேன்' - என்று தான் அனுப்பியிருந்த ஓலையின் செய்தியை மீண்டும் நினைவு கூர்ந்தான். படகில் உள்ளே வந்த கொண்டிருப்பவர்கள் தங்களைக் குமரன் நம்பி எதிர்கொண்டு வரவேற்பான் என்று எதிர் பார்க்கவும் கூடும். அதே வேளையில் படகில் உடன்வரும் சேர நாட்டு வீரர்களோ ஒன்றுமே தெளிவாகப் புரியாமல் தயங்கவும் கூடும். குமரன் நம்பியே பொன்வானி முகத்துவாரத்தில் எதிர் கொண்டு வரவேற்பான் என்று எதிர்பார்த்தபடியே படகில் வரும் ஆந்தைக்கண்ணனின் வீரர்களுக்கு யாருமே தங்களை எதிர்கொள்ளாத இந்நிலை வியப்பைத் தராமல் போகாது. தாங்கள் கரைசேரப் போவதையோ, கடம்பர்களின் கைகளிலே சிக்கி அழியப்போவதையோ - எதையுமே நிர்ணயிக்க முடியாமல் படகில் உடன்வரும் கொடுங்கோளூர் வீரர்களும் மனம் குழம்பிப் போய்க் குமரன் நம்பியின் மேற் கோபமாயிருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் படகில் வருகிற கடம்பர்களை அழிக்கவும் உடன் வருகிற கொடுங்கோளூர் வீரர்களை அழியாமல் காப்பாற்றிக் கரைசேர்த்து மீட்கவும் ஒரே சமயத்தில் முயலவேண்டிய நிலையில் இருந்தான் அவன். தீவிரமாக அவன் இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் வலியனும், பூழியனும் அருகில் வந்து ஏதோ பேச்சுக் கொடுத்தார்கள். உள்ளூற அவர்கள் இருவர் மேலும் அவனுக்குத் தாங்கமுடியாத கோபம் ஏற்பட்டாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ள முடியாமல் இருந்தது. "நாம் இங்கிருந்து அனுப்பிய 'செவிட்டூமை' ஒற்றன் இன்னும் திரும்பி வரவில்லை. அந்த ஒற்றனை மட்டும் ஆந்தைக்கண்ணன் ஏன் திருப்பி அனுப்பவில்லை என்பது உங்களுக்குச் சந்தேகத்தை அளிக்கவில்லையா படைத்தலைவரே?" - என்று பரபரப்படைந்து வினாவினான் வலியன். "ஒற்றன் ஏன் திரும்பி வரவில்லை என்று கவலைப்படுவதைவிட வந்திருப்பவர்களில் நமக்கு வேண்டியவர்களை எப்படிக் காப்பாற்றிக் கரை சேர்ப்பது? என்பதைப் பற்றிக் கவலைப்படுவது பயனுள்ளதாக இருக்கும். நேரமாகிறது. பொழுது நன்றாக விடிந்து விட்டது. படகு உள்ளே வரவர இங்கு நிலவும் மயான அமைதியைப் பார்த்து அவர்கள் மனத்தில் சந்தேகம் அதிகமாகுமே தவிரக் குறையப் போவதில்லை. படகிலுள்ள ஆந்தைக்கண்ணனின் வீரர்களைத் தவிர நம்முடைய வீரர்களுக்கும் சந்தேகம் உண்டாவதை இனிமேல் தவிர்க்க முடியாது. எனவே நிலைமையைத் தந்திரமாக எதிர்கொண்டு என்னென்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறேன் நான்" - என்று வலியனுக்குக் குமரன் நம்பி கூறிய பதிலில் அவனுடைய கோபமும் மெல்ல ஒலித்தது. "அதற்காகக் கேட்கவில்லை படைத்தலைவரே! அமைச்சர் பெருமான் இங்கு நிகழும் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பார். அவருக்குச் செய்தி சொல்லி அனுப்பவே உங்கள் உள்ளக்கிடக்கையை வினாவினோம்" என்று சிறிது தணிவான குரலிலேயே பதில் கூறினான் பூழியன். அவர்கள் இருவரும் இவ்வாறு அடிக்கடி அமைச்சர் பெருமானின் பெயரை நினைவூட்டிக் கொண்டிருப்பதையும் குமரன் நம்பி விரும்பவில்லை. ஆனால் மறுமொழி எதுவும் கூறாமல் மேலே ஆக வேண்டிய காரியத்தைச் செயற்படுத்தலானான் அவன். இதே அமைதியைத் தொடரவிட்டால் ஒன்று படகில் வரும் கடம்பர்கள் சேர நாட்டு வீரர்களையும் திரும்ப அழைத்துக் கொண்டு வந்த வழியே மீண்டும் சென்று விடுவார்கள் அல்லது - தங்களுக்கு ஏற்பட்ட வெறுப்பினாலும் - உடனிருக்கும் கொடுங்கோளூர் வீரர்களைத் துன்புறுத்தத் தொடங்குவார்கள். இந்த இரண்டு விளைவுகளுமோ அல்லது இரண்டில் ஏதாவது ஒன்றோ ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால் உடனடியாகச் செயல்பட வேண்டும். சிறிது நேரத் தாமதம் கூட விளைவை மாற்றிவிடும். மின்னல் நேரத்தில் குமரன் நம்பியின் உள்ளத்தில் ஒரு சூழ்ச்சி தோன்றியது. தானும் சில வீரர்களும் எதிர்ப்பட்டு - முகத்துவாரத்தில் வந்து கொண்டிருக்கும் கடம்பர்களின் படகை - அவர்களுடைய சதிக்குத் துணையாகிற விதத்தில் வரவேற்பது போல வரவேற்றுக் கரையிறக்குவதென்றும், கரையிறங்கியதுமே கடம்பர்களை மட்டும் சிறைப்பிடிப்பதென்றும் முடிவு செய்து கொண்டான் அவன். இந்த முடிவுக்கு உடன் துணை வருவதற்கு ஏற்ற வீரர்கள் பலரை அருகிலேயே புதர்களில் மறைந்திருக்கச் செய்வதென்றும் தீர்மானித்துக் கொண்டான். இதில் ஒரு தொல்லையும் இருந்தது. படகை எதிர்கொண்டு கடம்பர்களைத் தான் அவர்களுக்கு வேண்டியவன் போல் நடித்து வரவேற்றுக் கொண்டிருக்கையில் படகிலிருக்கும் கொடுங்கோளூர் வீரர்கள் - தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வது என்றும் தயங்கினான் குமரன் நம்பி. இந்தத் தயக்கமும் சிறிது நேரம் தான் இருந்தது. குமரன் நம்பியின் மனம் துணிந்து விட்டது. அந்த நாடகத்தை நடித்தே தீரவேண்டிய நிலையில் தான் இருப்பதை அவன் உணர்ந்தான். தன்னுடன் வரவேண்டிய வீரர்களுக்கும், வலியன், பூழியன் ஆகியோருக்கும் திட்டத்தை விளக்கி விட்டுச் செயலில் இறங்கினான் குமரன் நம்பி. அவனும் அவனுடன் அந்த வஞ்சக நாடகத்தில் நடிக்க இருந்த வீரர்களும் புதர்களிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றினர். குமரன் நம்பி முன்னால் நடந்து சென்று கரையில் நின்றபடியே படகை நோக்கிப் புன்முறுவல் பூத்தான். "வரவேண்டும் வரவேண்டும் நண்பர்களே! ஆந்தைக்கண்ணனின் திட்டத்துக்கு நன்றியோடு உதவி செய்ய நாம் சேர்ந்து பாடுபடுவோம். இன்னும் சிறிது நேரத்தில் இந்தக் கொடுங்கோளூர் - கடம்பர் வசமாகிவிடும்" என்று இரைந்த குரலில் அவன் படகை நோக்கிக் கத்தியபோது - படகிலிருந்த கடம்பர்களின் முகத்தில் மலர்ச்சியும், கொடுங்கோளூர் வீரர்களின் முகத்திலே சீற்றமும் தோன்றலாயின. அதைக் குமரன் நம்பியும் கவனிக்கத் தவறவில்லை. படகு கரையை நெருங்கிற்று. ஒவ்வொருவராகத் தயங்கியபடியே கரையில் இறங்கினர். கடம்பர்களை ஓர் ஓரமாகவும், ஆந்தைக்கண்ணனின் கப்பலிலிருந்து சிறை மீண்டுவந்த கொடுங்கோளூர் வீரர்களை ஓர் ஓரமாகவும் கரையில் பிரித்து நிறுத்தினான் குமரன் நம்பி. அப்படி இருசாராரையும் பிரித்து நிறுத்துவது கடம்பர்களின் மனத்தில் உடனடியாக எந்த விதமான சந்தேகத்தையும் உண்டாக்கி விடக் கூடாதே என்று கருதி, "இந்தச் சேர வீரர்கள் நம்மிடம் சிறைப்பட்டவர்கள். ஆகையால் இவர்களைத் தனியே பிரித்துப் பாதுகாக்க வேண்டும்! பாருங்கள்! இப்போது இவர்களை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? இவர்கள் தப்பி ஓடாமல் இவர்களைப் பிடித்துக் கட்டிப் போடவும் என் ஆட்களை நம்மைச் சுற்றிலும் ஆயுதபாணிகளாக மறைந்திருக்கச் செய்திருக்கிறேன். அவர்களை இதோ இந்த விநாடியே கைதட்டி அழைத்துவரச் செய்கிறேன்! அவர்கள் வந்து அடக்கினால் தான் இவர்களுடைய கொழுப்பு ஒடுங்கும்" என்று கூறியபடியே இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டி ஒலி எழுப்பினான் குமரன் நம்பி. அடுத்த விநாடியே அந்த ஒலியின் விளைவாகச் சுற்றிலும் இருந்த புதர்களிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கோளூர் வீரர்கள் திரண்டோடி வந்தனர். அப்படி ஓடி வந்தவர்கள் முற்றிலும் எதிர்பாராத வண்ணம் கடம்பர்கள் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி விரைந்து அவர்களை வளைத்துக் கொண்டார்கள். கடம்பர்களோ புதர்களிலிருந்து வரும் சேர வீரர்கள் தங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை என்ற எண்ணத்தில் எந்த விதமான முன் எச்சரிக்கையுமின்றி நின்று கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு தாக்குதலை எதிர்பாராத கடம்பர்கள் அனைவரும் கொடுங்கோளூர் வீரர்களிடம் சிறைப்பட நேர்ந்தது. "எப்படி என் தந்திரம்? உங்களை ஆபத்தின்றி மீட்கவே இப்படி ஒரு தந்திரம் செய்தேன்" என்று கூறியபடியே புன்முறுவல் பூத்த முகத்தோடு ஆந்தைக்கண்ணனிடமிருந்து சிறைமீண்டு வந்த தன் நண்பர்களை நெருங்கினான் படைக் கோட்டத் தலைவன் குமரன் நம்பி. "இப்படி ஒரு திருப்பம் இதில் நிகழுமென்பதை நாங்களே கூட நம்ப முடியாதபடி செய்து விட்டீர்களே? எங்களைப் பொறுத்தருள வேண்டும் படைத் தலைவரே! ஆந்தைக் கண்ணனுடைய மரக்கலத்தில் இருந்து நீங்கள் தப்பி வந்த விநாடியிலிருந்து இந்த விநாடி வரை எங்கள் மனத்திலிருந்த சந்தேகங்கள் யாவும் இப்போதுதான் நீங்கின படைத் தலைவரே! உங்கள் தந்திரங்களை அப்போதே புரிந்து கொள்ளாமற் போனதற்காக நாங்கள் பெரிதும் வருந்துகிறோம்" என்று அவர்கள் குமரன் நம்பியிடம் மன்னிப்புக் கேட்கலானார்கள். குமரன் நம்பியோ அவர்களில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பெயர் சொல்லி அழைத்து அன்புடனும், கருணையுடனும் உரையாடலானான். அவர்களும் அவனை அன்புடன் எதிர் கொண்டனர். |