முன்னுரை

     குறிப்பிட்டதொரு வட்டத்துக்குள்ளேயே சுழன்று வரும் வாழ்வை உடைய பெண்ணொருத்தி நாவல் எழுதப் புகுவதென்பது, அவ்வளவு இலகுவான செயல் அன்று. சமுதாயத்தின் பல்வேறு படிகளில் காணும் மக்களைக் கண்டு நெருங்கிப் பழகும் வாய்ப்புக்களோ, உலக அரங்கில் அகலக்கால் வைத்துப் பல வண்ணங்களில் நிகழும் வாழ்க்கை நாடகங்களைப் பற்றி அறியும் வாய்ப்புக்களோ, தான் புழங்கும் வீடும் குடும்பமுமே உலக அநுபவமாகக் கொண்ட பெண்ணுக்கு இல்லை.

     இத்தகைய நிலையில் பரிசயம் அதிகமில்லாத சூழ்நிலையை நிலைக்களனாக வைத்து, பழக்கம் அதிகமில்லாதபடியிலுள்ள மக்களைப் பாத்திரங்களாகப் படைத்து, நிகழ்ச்சிகளைப் பின்னி ஒரு கதை புனைவதற்கு நான் முயன்றேன் என்றால், அதற்கு வெறும் துணிவு மட்டும் காரணமன்று. இத்துறையில் எனக்கு இதுவரையிலும் கிடைத்துள்ள ஆதரவும், வாசகர்கள் அளித்த ஊக்கமும் காரணங்களாகும். கோவை மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில், அக்கிராம மக்களிடையே சில மாதங்கள் வாழும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

     அன்றாட வாழ்க்கையில், வறுமையின் கொடுமையால், சந்தர்ப்பக் கோளாறுகளால், பிழை செய்யும் ராணிகளும், பொறுப்பும் தீவிரமும் வாழ்க்கையில் பெற்றிராத குமரன் போன்ற இளைஞர்களும், பணமே குறியாக உள்ள சுப்பம்மாளைப் போன்ற தாய்மார்களும், வெள்ளை மனம் கொண்ட ரஞ்சிதத்தைப் போன்ற கிராமப் பெண்மணிகளும் காணப்படாதவர்கள் அல்ல.

     என் குறுகிய அநுபவத்தையும், சொற்ப அறிவையும் துணைகொண்டு துணிவுடன் தான் ‘மலையருவி’யை நான் உருவாக்கினேன். நாவலில் வரும் பாத்திரங்கள் உயிர்க்களை பெற்றவர்கள் ஆகவும், அவர்களின் வாழ்வும் சம்பவங்களும் கண் முன் காண்பது போலவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். என் நோக்கத்தில் நான் வெற்றியடைந்திருக்கிறேனா என்பதை வாசகர்கள் தீர்ப்புக்கு விட்டு விடுகிறேன்.

     இக்கதையை, அன்புடன் ஏற்று, கலைமகள் ஆசிரியர் அவர்கள், கலைமகள் பத்திரிகையில் தொடர்கதையாக வெளியிட்டார்கள். இப்போது, ‘மலையருவி’யைக் கலைமகள் காரியாலயத்தார் புத்தக உருவில் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு, என்னுடைய உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வணக்கம்,
ராஜம் கிருஷ்ணன்
குந்தா,
17-3-60


| முதல் அத்தியாயம்

மலையருவி : முன்னுரை 1