சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 4 |
2. பொன்னனும் குமரனும் சுப்பம்மாளின் இரு புதல்வர்களில் மூத்தவன் பொன்னன், தாயின் அம்சத்தைக் கொண்டவன்; உரமும் உறுதியும் கொண்ட உளத்தினன்; மடுவைப் போல் சலனம் காட்டாத தன்மையுடையவன். சிறு பிராயத்தில் அவன் பள்ளிப்படிப்பில் நாட்டம் வைக்கவில்லை. பள்ளிக்கு அனுப்பப் பெற்ற சொற்ப நாட்களிலே அவன் புளியமரத்தடியிலே தான் நேரத்தைத் தள்ளினான். புத்தகப் படிப்பிலே இல்லாத குறி, பொருள் கட்டுவதிலே இருந்தது. பத்துப் பிராயத்திலேயே பெரிய பண்ணாடி வீட்டு மாடுகளை மேய்க்கப் போனான். பதினைந்தாம் வயசிலே வண்டி ஓட்டப் பழகி விட்டான். காலணாக் காசும் அநாவசியமாகச் செலவழிக்க மாட்டான். அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே உண்டியலில் போட்டுக் காசு சேர்க்கக் கற்றுக் கொண்டான். ஒரு சினிமா, காபிக்கடை என்று பையன் காசைச் செலவழிக்காமல் சேர்த்து வைப்பது குறித்துப் பொன்னனிடம் தனியான திருப்தியும் மதிப்பும் சுப்பம்மாளுக்கு உண்டு. அவன் வண்டி ஓட்டத் தொடங்கிய காலத்தில் கணபதி பாளையத்தில் ரெயில் வண்டி நிலையமோ பஸ்ஸோ இல்லை. இவற்றுக்கு ஆறு மைல்களுக்கு அப்பால் உள்ள சூலூர் போக வேண்டும். பொன்னனுக்கு நல்ல கிராக்கி வந்தது. கணபதிபாளையத்திலேயே அவனுக்கு நிறைய வாடிக்கைக்காரர்கள் இருந்தார்கள். பள்ளிக்குப் போக, ஆஸ்பத்திரிக்குப் போக, ரெயிலுக்குப் போக - எல்லாவற்றுக்கும் குதிரை வண்டிதான். அவன் குறியுள்ளவன்; கெட்டிக்காரன். சராசரி நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதித்து விடுவான். கணபதிபாளையத்துக்குப் பஸ் வந்த பிறகுங் கூட அவன் வண்டிக்குக் கிராக்கி குறையவில்லை. நல்ல குதிரை; வண்டியும் புதுக்கருக்கு அழியாத நிலையில் உள்ளது. ஊசிப் பாளையத்தில் கிராம சேவை என்று பல ஆண்டுகளாகப் பலகை மாட்டிக் கொண்டு வைத்தியம் செய்யும் டாக்டரம்மாளுக்கு அவன் வண்டிதான் வாடிக்கை. தம்பி குமரனையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வான் அவன். தாய், பாரபட்சம் காட்டுகிறாள் என்பது அவனுடைய பிஞ்சுப் பருவத்திலேயே மனசில் தெறித்து விட்ட உணர்வு. ஆனால் அவனுடைய அழுத்தமான சுபாவம் தம்பியின் மீதோ தாயின் மீதோ வெறுப்பை வெளிப்படையாகக் காட்ட இடம் கொடுத்து விடவில்லை. தம்பியின் மீது வளர்ந்திருந்த வெறுப்புக்கு ஆதாரம் தேடிக் கொண்டு போனால் இன்னொரு காரணமும் புலப்படும். தான் படிக்காதவன்; அந்த மேன்மை தம்பியிடம் உண்டு என்ற குறைதான் அது. ‘ம், என்ன படிப்பு? நான் இவனை விட மேலானவன். இவன் நாலு காசு சேர்க்க, இருப்பதெல்லாம் கரையும். பூவைப் போட்டுப் பகட்டிவிட்டால் போதுமோ, பூவென்று ஊதினால் பறந்து போகும் துணி ஒரு வருஷம் உடுத்தத் தகுதியாகுமோ? போட்டுப் புரட்டித்து வைத்து உடுத்த, உழைக்கும் துணி வேண்டும். துணி, உடுத்துவதற்கு; பகட்டுவதற்கு அல்ல’ என்று எண்ணித் தன் குறையை மூடிக் கொள்வான். அவனுக்கு வரையறைக்கு உட்பட்ட சாமானிய மனிதர்களுடைய சாதாரண உலகந்தான் சொந்தம். அவனுடைய கனவுகள், கற்பனைகள் எல்லாம் அந்த உலகுக்குள் அடங்கியவை தாம். குமரனின் படிப்பு, தன் ஆற்றல் ஒழுங்கு உறுதி இவற்றுக்கு மிஞ்சியவை அல்ல என்பதைத் தாய்க்கு நிரூபிக்க வேண்டும். ஏன்? தன்னைப் பிரமாதமாக நினைத்துக் கொண்டிருக்கிறானே, அவனுக்கே வெட்ட வெளிச்சமாக்க வேண்டும். அந்த வெற்றிச் சிகரத்திலிருந்து தாயின் தோல்வியைக் கண்டு களிக்க வேண்டும். அவனுடைய குறிக்கோள் அன்றிலிருந்து இதுவேதான். உடனுக்குடன் வெறுப்பை வெளிப்படையாக உமிழ்ந்து விட்டால் புரையோடுவதற்கு வழியில்லை. இது ஆழமான எதிர்ப்பன்றோ? தாய், பாரபட்சம் காட்டியதற்குப் பழிவாங்கும் எண்ணம் என்று கூடச் சொல்லலாமே! சுப்பம்மாளுக்குக் குமரனின் மீது தனியான பாசம் உண்டு என்பது பொய் அல்ல. அவன் அவளைக் கொண்டவனின் மறு வார்ப்பு. வேலையிலே அப்பழுக்குச் சொல்ல முடியாது என்றாலும் அவளுடைய புருஷன் பொருந்தி வேலை செய்து குறியாகக் காசு சேர்த்தவன் அல்ல. கொத்துக் கரண்டி பிடித்து வேலை செய்தவன் தான். கூலியுள்ள நாட்களிலே ராஜாவைப் போல் நடப்பான். காபிக்கடை, நாடகம், சுப்பம்மாளுக்குக் கொண்டைக்குப் பூ, குழந்தை பொன்னனுக்குச் சட்டை, குல்லாய், ஜோடு என்று கைப்பணத்தை எந்த விதமேனும் கரைத்து விடுவான். சுப்பம்மாளுக்கோ, பிறவியிலிருந்தே உயிரெல்லாம் காசிலே இருந்தது. அவள் இல்லைப் பாட்டுப் பாடினால் அவன் பொறுக்கமாட்டான்; ‘இல்லை இல்லைன்னு சாவுறியே? இருக்கும் வரையிலும் ஜோராய் நட; நாளைப் பாடு நாளைக்கு’ என்பான். ‘சாகக் கூடிய வயசா? ஒரு நோவு நொடி என்று தான் படுத்தாரா?’ வருஷம் இருபதுக்கு மேல் ஆனாலும் சுப்பம்மாளுக்கு நினைத்தால் அந்தத் துயரம் கனிந்து விடும். சாரத்தில் உட்கார்ந்து கொத்துக் கரண்டியைப் பிடித்தவன் தலை சுற்றுகிறதென்று இறங்கி வந்தவன் தானாம். உயிர் பிரிந்த உடலைத்தான் வீட்டுக்குக் கொணர்ந்தார்கள். சுப்பம்மாள் நிறைமாசக்காரியாக இருந்தாள். அவன் உயிர் போனது கூட எல்லாருக்கும் சந்தேகமாக இருந்தது. சிரிப்பது போலவே இருந்தன இதழ்கள். அவளுக்கு அழுகையே வரவில்லை அப்போது. மத்தாப்பு எரிந்து கருகி விட்டாற் போல் ஒரே இருளாக இருந்ததுதான் தெரிந்தது அன்று. இரண்டு மூன்று தினங்கள் சென்ற பிறகு தான். பூங்கொத்துச் சிதறிப் பொலபொலத்தாற் போன்ற அந்தச் சிரிப்பும் பேச்சும் உடையவன் போய்விட்டான் என்ற உணர்வு அடி நெஞ்சிலிருந்து அள்ளிப் பிடுங்கினாற் போல் பீரிட்டுக் கொண்டு வந்தது. துக்கம் கடலாகப் பெருகியது. காய்ப்பருவத்தில் உள்ள புளிப்பெல்லாம் கனியும் போது கற்கண்டுச் சுவையாக மாறிவிடுகிறதன்றோ? அவள் கணவனைப் பறிகொடுத்த துயரமெல்லாம் குமரனின் முகத்திலே கரைகாணாப் பாசமாக, இன்பமாக மாறியது. அதே சிரிப்பு, அதே கன்னக் குழிவு, அதே நடை, அதே பேச்சு. குணமும் அப்படியே. அவனைப் பார்த்துப் பார்த்து அவள் தன கனவுகளை விரித்தாள். ஆசைக்கோட்டைகளை எழுப்பினாள். குமரனும் நாள் தவறாமல் பள்ளிக்கூடம் சென்றான்; புளியமரத்தடியில் காலத்தை ஓட்டாமல் பாடங்களைக் கேட்டான்; ஒவ்வோர் ஆண்டும் வகுப்பு மாறினான். அவன் ஒவ்வோர் ஆண்டும் வகுப்பு மாறினான். அவன் ஒவ்வோர் ஆண்டிலும் நிறைய நிறையப் புத்தகங்கள் வாங்கக் கண்டு அவள் மகிழ்ச்சி கொண்டாள். அவளுக்குப் புரியாத ஆங்கிலப் பாடத்தை அவன் சத்தம் போட்டுப் படித்த போதெல்லாம் அவள் தன்னையே மறந்து அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். புத்தகம், நோட்ஸ், சட்டை, ‘எக்ஸ்கர்ஷன்’ என்றெல்லாம் அவன் காசு கேட்ட சமயங்களில் காலணாவைக் கூடப் பிரிய மனம் இல்லாத அவள் காரணம் புரியாது போனாலுமே மறுபேச்சின்றிக் கொடுத்திருக்கிறாள். எல்லாவற்றுக்கும் பிரதியாக, அவன் சராயும் கோட்டும் போட்டுக் கொண்டு போய்க் கைநிறையச் சம்பாதித்து வந்து, அவள் கையில் கொடுக்கப் போகிறான் என்று கனவுகள் கண்டாள். ஒவ்வொரு சமயத்தில் தன் புருஷன் அந்த உயர்வையும் மேன்மையையும் கண்டு களிக்க இல்லாமல் போய்விட்டானே என்று வருத்தம் மேலிட்டாலும் தேற்றிக் கொண்டாள். அவனே மறு உருவத்தில், தன் ஆசைக்கும் அன்புக்கும் பாத்திரமாக வந்திருப்பதாகவே அவளுள் ஓர் உணர்வு. ஆனால் நாட்கள் ஓட ஓட, மாசங்களும் வருஷங்களும் செல்லச் செல்ல, அவளுடைய கனவுகளில் ஒரு பகுதி பூச்சிழந்து காட்சி தந்ததே ஒழிய, ஆதாரமான பகுதி பளிச்சென்று துலங்கவில்லையே! கருத்து இல்லாமல் தான் அவன் காசைச் செலவழித்தான். வாசனைத் தைலம் இல்லாமல் அவனால் தலை சீவ முடியவில்லை. வண்ணான் சலவை செய்யாத உடை உடுத்த முடியவில்லை. கணபதிபாளையம் காபிக்கடைக்குப் போகாமல் இருக்க முடியாவில்லை. இன்னும் இதுபோல் படிப்பின் நிமித்தம் வந்த ‘நாகரிக’ங்களில் கோயம்புத்தூர்ச் சினிமாவும் ஒன்று. அவனுடைய உள்மனசுக்குத் தாய் இன்ன நோக்கத்தோடு, ஆசையோடு தன்னைப் பள்ளிப்படிப்பிலும், பின்பு கோயம்புத்தூர்க் கல்லூரிப் படிப்பிலும் போட்டாள் என்பது தெரியுமோ என்னவோ? அவன் போக்கிலே தாயின் வருத்தமோ, ஆவலோ அறிந்த சோடே துலங்கவில்லை. சில சமயங்களில் அவன் அவளுக்கே புரியாத பையனாக இருந்தான். அவனிடம் பூவின் மென்மை உண்டு. தெள்ளிய அருவியோட்டம் போல் இனிமையும் வேகமும் உண்டு. குழந்தை போலச் சிரிப்பான்; கோபம் வந்தால் அடுப்பு விறகு போலச் சீறுவான். ஆனால் ஒரு கணந்தான் கோபம். மறுகணமே பாடத் தொடங்கி விடுவான். உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு பேச அவனுக்குத் தெரியாது. அவனால் முடியாது. “அம்மோவ்! நாங்கள் எல்லாரும் போட்டோ எடுத்துக் கொள்ளப் போகிறோம்; அஞ்சு ரூபாய் கொடேன்” என்பான். காலணாக்களாக, அடுப்புப் புகையில் கண்களை அவித்துக் கொண்டு சேர்த்த காசாயிற்றே? ‘அஞ்சு ரூபாயா?’ என்று கேட்காவிட்டாலும் மலைத்துப் போய் நிற்பாள். “என்ன அம்மா, காசை எடுத்துக் கொடுக்க வேணுமின்னாக் கஷ்டப்படுறியே? அது இன்னைக்கு வராப் போல வரும், போகும்” என்று அந்த உதடுகள் மலர, அவன் நகை சிந்தும் போது சுப்பம்மாளுக்கு உள்ளம் குலுங்கிவிடும். படம் பிடித்துக் கொள்ள உண்மையில் ஐந்து ரூபாய் செலவு இருக்காது. இரண்டோ மூன்றோ செலவழித்தால், மீதிக்கு ஒரு சினிமாப் பார்த்துவிட்டு அவளுக்கு உதவாத பொருள் எதையேனும் வாங்கி வருவான். கையில் காசும் இருந்து, கண்ணில் கண்ட பொருள் மனசுக்கும் பிடித்து விட்டால் போதும். அவனைத் தடுக்க முடியாது. “அம்மோவ்! ஆப்பிள் தின்னிருக்கிறியா நீ? சம்பளம் கட்டி அஞ்சணா மீதி இருந்தது. பாரம்மா, கோயமுத்தூர் மார்க்கெட் பக்கம் போனேன், வாங்கினேன்” என்று அவளிடம் காட்டிக் கொண்டே ஆப்பிள் பழத்தை நறுக்குவான். அழுவதா, சிரிப்பதா என்று புரியாது அவளுக்கு. “இதெல்லாம் நமக்கு எதுக்கடா தம்பி? கட்டுப்படியாகுமா? அஞ்சணா இருந்தால் அரை வீசைப் புளி வாங்குவேனே!” என்று அவள் அழாக்குறையாகப் பதிலளித்தால், அவன் சமாதானம் இப்படித்தான் இருக்கும். “அட என்னம்மா, நாம் தின்னக் கூடாதா? இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இருப்பது நிச்சயம் இல்லை அம்மா; இருக்கிற வரையிலும் சந்தோஷமாய் நட. இதைத் தின்னு பாரு, எப்படி இருக்குதுன்னு” என்று அவளுடைய வாயில் இரு துண்டைக் கொண்டு வந்து போடுவான். சுப்பம்மாள் நாவடைத்து நிற்பாள்; அப்பனைப் போலவே பேசும் அவன், அப்படியே அற்பாயுளில் போய் விடுவானோ? அந்த அர்த்தமற்ற பயம் அவள் நெஞ்சை அடைத்து, வாய்க்குப் பூட்டுப் போட்டுவிடும். கல்லூரியில் அவன் இரண்டு ஆண்டுகளே படித்தான். பரீட்சையில் ஒரு பகுதி தவறிவிட்டதால் படிப்புக்கு முற்றுப்புள்ளி யிட்டு விட்டான். இனிச் சுப்பம்மாள் கனவு கண்டபடி அவன், அவள் செலவழித்த பொருளை வட்டியோடு கொண்டு வந்து குவிக்க வேண்டியது தான் பாக்கியாக இருந்தது. பத்திரிகை வாங்கிப் படித்தான்; தபால்கள் எழுதினான்; கோயம்புத்தூருக்கு ரெயில் செலவுக்கு வாங்கிக் கொண்டு போனான். வேலை உருப்படியாக ஒன்றும் கிட்டவில்லை. அதுதான் போகட்டும். அதற்காகக் கவலைப்பட்டானா? படிப்பு அவன் சுபாவத்தை அணுவளவும் மாற்றி விடவில்லை. ஐந்து வயசிலே எப்படி விளையாட்டுப் பிள்ளையாக இருந்தானோ, அப்படியே இன்னமும் இருக்கிறானே! ஊரிலுள்ள பையன்களைச் சோம்பேறிகளாக்கும் சங்கம் ஒன்று (சுப்பம்மாளின் அபிப்பிராயத்தில்) இருந்தது. அதற்குப் பெரிய தெருக்கோடியில் ஓர் அறை. அந்தச் சங்கத்திலே குமரன் தான் படித்த பெரிய மனிதன். புத்தகங்களும் செய்தித்தாள்களும் அங்கே வரும். அநேகமாகக் குமரன், நாளின் முக்கால்வாசிப் பொழுதையும் ஊர்ச்செய்தி, நாட்டுச்செய்தி எல்லாவற்றையும் அலசிக் கொண்டு அங்கே போக்கினான். எப்போதேனும் காந்தி ஜயந்தி, நேரு ஜயந்தி, புத்தர் பெருநாள், திலகர் திருநாள் என்று மைதானத்தில் கொடியேற்றிக் கூட்டம் கூட்டுவார்கள். அங்குள்ள புளியமரத்திலே ஒலிபெருக்கியைப் பொருத்தி ஒரு சினிமாப் பாட்டை வைக்க வேண்டியதுதான் தாமதம். கிராமத்துக் குஞ்சு குளுவான்கள் வந்து மைதானத்தில் கூடி விடுவார்கள். கோயம்புத்தூரிலிருந்தோ, கணபதிபாளையத்திலிருந்தோ குமரன் எவரையேனும் பேச அழைத்துக் கொண்டு வருவான். வரவேற்று மாலை போடுவது, சோடா உடைத்துக் கொடுப்பது எல்லாம் அவனே தான் செய்வான். பத்து மனிதர்கள் முழுசாக இல்லாத அந்தக் கூட்டத்தில் ஒலிபெருக்கியின் முன் நின்று குமரன், “சகோதர, சகோதரிகளே” என்று விளித்து, சுப்பம்மாளுக்கு நன்றாகப் புரியாத நல்ல தமிழில் நான்கு வரவேற்பு வார்த்தைகள் சொல்லிப் பேச வந்த பெரிய மனிதருக்கு மாலை போடுகையில் அவள் உள்ளம் பாலில் முழுகிக் குளிராமல் இல்லை. ஆனால் உருப்படியாக அந்தப் பெருமை, காலணா வரும்படியைக் கூடக் கொடுக்க வில்லையே! இதோடு நின்றால் கூடச் சுப்பம்மாளுக்குக் கவலை கனக்காதே! குமரன் ஊர் விவகாரங்களில் தலையிட்டுப் பேசினான். இளங்கன்று பயமறியாது என்ற சொல்லை நிரூபிப்பவன் போல் நல்லது பொல்லாதது, நியாயம் அநியாயம் என்று மற்றவர் துணியாத செயல்களில் பிறர் விஷயங்களில் நுழைந்து பேசுவது அவளுக்கு நன்மையாகவே படவில்லை. ஆசைக்கும் அர்த்தமற்ற பீதிக்கும் இடையே, கவலைக் கேணியில் அவள் சுழலுவதை ஓர் அணுவளவேனும் உணர்ந்தால் அவன் மூன்று ரூபாய் சொச்சம் கொடுத்து அதிர்ஷ்ட சக்கரம் வரவழைப்பானா? வேலைக்கு விண்ணப்பம், அது இது என்று உண்மையில் அவளை நம்ப வைத்து ஏமாற்றிப் பணம் பறிக்கிறானே! சுப்பம்மாளின் வயிறு நினைக்க நினைக்க எரியத்தான் எரிந்தது. பொன்னன், வட்டியில் சோற்றையும் குழம்பையும் அணைகட்டி ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனையே பார்த்துக் கொண்டு நின்ற சுப்பம்மாளுக்குச் சிந்தனை சட்டென்று இறங்கி அவனோடு இழைந்தது. சாதுப் பையன்; தன் வேலை உண்டு தான் உண்டு என்று குறியாக இருப்பவன். படிக்காது போனால் என்ன? கோடரி தூக்கிப் பொன்னன் விறகேனும் பிளப்பான். அரைப்படி அரிசிச் சோறு உண்டாலும் சவாரி கிடைக்கிறதென்றால் முழு நாளும் சோற்றை மறந்து இருப்பான். குமரனால் என்ன முடியும்? “படிச்ச பய, உடம்பு வணங்க மாட்டான்; வேலைக்கு லாயக்கில்லை” என்று மளிகைக் கடைக்காரர் சொல்லுவதை எண்ணிப் பார்த்துக் கொண்ட சுப்பம்மாளுக்குப் படிக்கப் போட்டு மைந்தனைக் கெடுத்து விட்டோமே என்று தான் வேதனையும் சலிப்புமாக இருந்தது. பொன்னன் உண்டு முடிந்து ஏப்பம் விட்டுக் கொண்டு எழுந்து விட்டான். சுப்பம்மாளின் சிந்தனை கலைந்தது. வாசலில் கோழிகள் கொக்கரிக்கும் சத்தம். நெல்லின் நினைவில் அவள் ஓடி வந்தாள். குமரன், கீழே படியிறங்கி, காளியம்மா வீட்டுச் சேவல், பெட்டை குஞ்சுகள் சகிதம் நெல்மணிகளைக் கொத்தும் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். சுப்பம்மாள் அம்பு பாய்ந்த வேகத்தில் வந்து எல்லாவற்றையும் குச்சியால் அடித்துத் துரத்தினாள். கோழிகளுக்கு வசை பாடிய மூச்சோடு குமரனின் சிரிப்பையும் எதிர்த்து, “உனக்குப் புத்தி இருக்கிறதாடா? கோழிங்களைக் கூட்டி வச்சுக்கிட்டுக் குலாவுறியே!” என்றாள் எரிய எரிய. “அதுங்க தின்னு எத்தினி நெல்லம்மா குறைஞ்சு போச்சு? கோபப்படாம பாரு. அந்தச் சேவலுக்கு யாரு எண்ணெய் முழுக்காட்டுறாங்க? வாலும், கொண்டையும் எத்தினி திறம்! மினுமினுப்பு அழகு...! எம்மா, எப்படீம்மா, வளர்த்திட்டுக் கழுத்தை முறிக்க...” “எலேய், போதுமடா, வாயை மூடு, எனக்குப் பத்திக்கிட்டு வருது. வாயை மூடு!” என்று கத்தினாள் சுப்பம்மாள். குமரன் சிரிப்பை விழுங்கி, வாயை மூடிக் கையால் பொத்திக் கொண்டு நாடக பாணியில் நின்றான். |