உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ. 118 (3 மாதம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
ஈரோடு புத்தகத் திருவிழா 2025 கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - 150 & 151 21-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 01/08/2025 முதல் 12/08/2025 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழா தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். தினமும் மாலை 6.00 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைவரும் வாரீர் |
1. அதிர்ஷ்டச் சக்கரம் ஊசிப்பாளையம் கிராமத்தைத் தேடி சுப்பம்மாளிடம் எவரேனும் வந்து, ‘ஏன் அம்மா, நீங்கள் எத்தனை வருஷமாக ஆப்பம், இட்டிலி சுட்டு வியாபாரம் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் சட்டென்று பதில் கூறத் தெரியாமல் விழிக்கத்தான் விழிப்பாள்; விழித்துவிட்டு, ‘அது எப்படீங்க கணக்கிட்டுச் சொல்ல முடியும்? நான் பிறக்கிறதுக்கு முந்தியிருந்தே சுடுற வழக்கந்தானுங்க!’ என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. தேங்காய்ப் பூவில் பாலைப் போல், தொழிலில் அப்படி ஊறியவள் சுப்பம்மாள். கிராமத்தின் நடுநாயகமாக, ‘ட’வைப் போல் அமைந்திருந்த இரண்டு வீதிகளில் சிறியது ஒற்றைத் தெரு. அந்தத் தெருவின் கிழக்குக் கோடி வீடு தான் சுப்பம்மாளுக்குச் சொந்தமான வீடு. அந்த ஒட்டுத் திண்ணையிலேதான் அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அடுப்பெரிந்து வந்திருக்கிறது. அதே திண்ணையில் அவளுடைய தாய் அதே தொழிலை நடத்தினாள். அவளுக்குப் பிறகு மகள் வாரிசானாள். காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரையிலும் வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். ஊசிப்பாளையத்தில் குடியேறியிருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர்களும் பக்கத்துப் பஞ்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள்தாம். எஞ்சியிருந்தவர்களிலும் கூடைக்காரர்கள், கூலிக்காரர்கள் ஆகிய எளிய மக்களே அதிகம். எனவே சுப்பம்மாளுக்கு வாடிக்கைக்குப் பஞ்சமே கிடையாது. முன் வாசலில் வலப்புறத்துத் திண்ணை சிறியது. அடுப்புப் புகை ஏறிக் கரி படிந்த சுவர். இடப்புறத்துத் திண்ணை பெரியது. சுவர்ச் சுண்ணாம்புப் பூச்சில் ஒரு மாசு மறுக் காண முடியாது. கீழே சாணமிட்டு மெழுகிய தரை பளிச்சென்று துலங்கியது. சுவரின் வெளுப்போடு பளிச்சென்ற தரை கூடும் வரம்பு வெகு நேர்த்தியாக, நூல் பிடித்தாற் போன்ற ஒழுங்குடன், சுப்பம்மாளின் கைத்திறனைக் காட்டியது. திண்ணையைக் கடந்து உள்ளே சென்றால், வீட்டின் அகலவாட்டில் அமைந்த கூடம். அடுத்துச் சிறியதொரு சார்ப்புத் தாழ்வரை; அதை ஒட்டிப் பத்தடிச் சதுரத்தில் ஓர் அறை; பின்னால் மூங்கிற்படல் சூழ்ந்த சிறிய கொல்லை. தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால், கொல்லை வெறிச்சென்று கிடந்தது. சட்டி பானை கழுவும் தண்ணீர் வீணாகாமல் இருப்பதற்காகச் சுப்பம்மாள் ஊன்றியிருந்த அவரை விதை இன்னும் கொடி வீசிப் படரத் துவங்கவில்லை. காலை ஒன்பது மணிக்கு மேல், வியாபாரச் சந்தடி ஓய்ந்த பின்பு, வீட்டிலே அவளுக்கு எத்தனை வேலை! தெருக்கோடிக்குப் போய்ப் பொதுக் கிணற்றில் தண்ணீர் கொண்டு வந்து கழுவிப் பெருக்கி, அடுப்பிலே உலையேற்ற வேண்டும். பிள்ளைகள் இருவருக்கும் ஒன்று குறைவில்லாமல் வேளைக்குச் சோறாக்கிப் போட வேண்டும். ஆவணி மாசக் கடைசியாதலால் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சுப்பம்மாள் அதைப் பொருட்படுத்தாமலே முதல் நாள் நெல்லைப் புழுக்கிக் கொட்டியிருந்தாள். வாசலில் காயும் நெல்லைக் காவலும் காத்துக் கொண்டு, உள்ளே தாழ்வாரத்தில் அடுப்பையும் கவனித்துக் கொள்வதுதான் அவளுக்கு இப்போது தொல்லை கொடுக்கும் பிரச்னையாக இருந்தது. காலை ஒன்பது மணிக்கு மேல் வெளியே, அவள் அடுப்புப் பற்ற வைப்பதைக் கண்டால் இளைய மைந்தன் பொறுக்க மாட்டான். என்ன செய்வது? பானையிலே சோறு குழைந்தது. சுப்பம்மாள் கைக் குச்சியைக் கீழே போட்டு விட்டு, அடுத்த வீட்டுப் பக்கம் எட்டிப் பார்த்தாள். தையற்காரன் தங்கசாமியின் வீடு அது. இரண்டு மைலுக்கு அப்பால் கணபதிபாளையத்தில் அவன் கடை இருந்தது. அவன் கடைக்குப் போய் விடுவான்; மனைவி ஆலை வேலைக்குப் போய்விடுவாள். அவனுடைய தகப்பன் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு வீட்டில் இருப்பான். கதவு பூட்டியிருக்கிறதே! கிழவன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எங்கே போனானோ? மறுபடியும் கைக்குச்சியை எடுத்து நாற்புறமும் பார்த்துச் சுழற்றிப் பக்கத்துப் பூவரசமரத்தில் இருந்த காக்கைகளை எல்லாம் ஓட்டி விட்டு, சுப்பம்மாள் சோற்றை வடிக்க உள்ளே சென்றாள். இந்தத் தருணம் கிடைக்கக் கூடியதா? அண்டை அயலில் இதுகாறும் பதுங்கியிருந்த சிவப்புச் சேவல், சீமைப் பெட்டை, ,அணில், காகம் எல்லாமாக ஓடி வந்தன. திருட்டுத்தன்ம் செய்யும் போது காதும் காதும் வைத்தாற் போல் முடிக்க வேண்டும் என்பது இந்த நவயுகத்தில் பழகியும் காக்கைகளுக்கும் கோழிகளுக்கும் வராதது வியப்புத்தான். பானையைச் சரித்துக் கொண்டிருந்த சுப்பம்மாளுக்கு அப்போது மட்டும் சபிக்கும் சக்தி இருந்திருந்தால் இந்த உலகிலே காக்கைகளும் கோழிகளும் போன இடம் தெரியாமல் புல்முளைத்துப் போயிருந்திருக்கும். நல்ல வேளையாக, அந்தச் சமயத்தில் ‘ஜல் ஜல் கிலுங் கிலுங்’ என்ற பழக்கமான ஒலி அவன் செவிகளில் பாய்ந்து, சீற்றம் தணிய வகை செய்தது. “பொன்னா, அதுங்களை விரட்டு. கொள்ளையிலே போக! மூக்கு மூக்கா அள்ளிக்கிட்டுப் போக எங்கேன்னு காத்துக் கெடக்குதுங்க!” என்று உள்ளே இருந்தபடியே குரல் கொடுத்தாள். அவளுடைய மூத்த திருக்குமாரன் பொன்னன், வண்டியை விட்டுக் கீழே குதித்தான். கையில் இருந்த சாட்டைக் குச்சியை வீசிக் கொள்ளைக்காரக் கும்பலைச் சின்ன பின்னம் அடைந்து ஓடச் செய்தான். பின்பு குதிரையை அவிழ்த்துக் கொண்டு போய்ப் பூவரச மரத்தில் கட்டினான். தீனி போட்டான். வண்டிக்குள் துணியில் சுற்றி வைத்திருந்த கொய்யாக்கனிகளை எடுத்துக் கொண்டு திண்ணைக்கு வந்தான். சாட்டைக் குச்சியைக் கூரைச் சட்டத்தில் செருகி விட்டு, வாயிற்படியில் உட்கார்ந்தான். கொய்யாப்பழம் ஒன்றைக் கடித்துத் தின்னலானா. நாட்டுக் கொய்யாதான். சிவந்த ராசி. நல்ல ருசியாக இருந்தது. “அண்ணாச்சிக்கு என்ன, காவல் உத்தியோகமா? கொய்யாக்கா எத்தினீன்னு வாங்கினீங்க?” கேட்டுக் கொண்டு வந்தவள் ரஞ்சிதந்தான்; பொன்னனுக்கு ஒன்று விட்ட மாமன் மகள். மஞ்சள் பூச்சு மிளிர்ந்த மாநிற முகத்திலே களிதுள்ளும் கருவிழிகள்; ஒளியிடும் வெண்பற்கள். காதிலே வெள்ளைக் கம்மலும் கழுத்திலே சரட்டட்டிகையும் அவள் கொஞ்சும் முகத்துக்குப் பெருமையோடு எழில் கூட்டின. நீலப் பட்டு ரவிக்கைக்குப் பொருந்தக் கறுப்பு வாயில் சேலை. கைகளில் குலுங்கக் குலுங்கக் கண்ணாடி வளையல்கள். கால்களிலே கொலுசு துவள, அவள் நடைபயின்று அருகே வந்த போது, நீண்ட சடை நுனியில் பட்டு நாடா அசைந்தது தெரிந்தது. கையிலே கொண்டு வந்த தயிர்க்கலயத்தை உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு, அவள் பொன்னனுக்கு எதிரே வந்து நின்றாள். இந்தக் கன்னி வடிவம் இருபத்தைந்து பிராயக் காளையின் கண்களுக்கு விருந்தாகிக் கருத்திலே போதையூட்டக் கூடியதாக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லையே. “பதில் சொல்லாமே அண்ணன் என்ன யோசனை பண்ணுறாங்க? கொய்யாக்கா அணாக்கு எத்தினி?” பொன்னன் இப்போதும் பதில் பேசவில்லை. மடியில் இருந்த பழங்களில் இரண்டை எடுத்து அவளிடம் நீட்டினான். “எனக்கு வேண்டாம். நான் அணாவுக்கு அஞ்சுன்னு வாங்கினேன். குட்டையா ஓர் ஆத்தா மடத்துத் தோட்டத்திலேருந்து கொண்டாந்தாங்க. நல்ல இனிப்பு...” என்றாள் ரஞ்சிதம். “சும்மா வாங்கிச் சாப்பிடு ரஞ்சிதம். அந்த ஆத்தாகிட்டத்தான் நானும் அணாக்கு ஆறுன்னு வாங்கினேன்” என்றான் பொன்னன். “எனக்கு வேண்டாம். கொய்யாக்கா அஞ்சாறு தின்னாச் செரிக்காது. அத்தைக்கு ஏன் இன்னைக்கு இந்நேரம் சோறாக்க? மணி பன்னிரண்டு அடிக்கப் போவுதே!” “காவல் இருக்கத்தான் சரியாக இருந்ததே? சோறு கூழாப் போச்சு. நான் இப்பத்தான் நினைச்சுக்கிட்டேன். தயிரு இல்லாமப் போனா அவன் சோற்றை விரலாலே தொடமாட்டானே? நேத்தே மாடு உதைச்சுதுன்னுதே ரஞ்சிதம்; பாலு கூட உறைச்சிருக்குதோ இல்லையோன்னு நெனச்சேன். வந்திட்டே” என்றாள் சுப்பம்மா, ரஞ்சிதம் வைத்த தயிர்க்கலயத்தைத் திறந்து பார்த்த வண்ணம். “உழக்குப் பால் தான் அத்தே. அத்தானுக்குன்னு கொண்டாந்தேன்” என்று பதில் அளித்த ரஞ்சிதம் திண்ணை ஓரம் சார்த்தியிருந்த கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். அவள் மடியில் மறைந்திருந்த ‘குரோஷே’ ஊசியும் நூலும் அவளுடைய மெல்லிய விரல்களோடு இணைந்து, அசைந்து, மின்னி, மறைந்து பின்னல்களை உருவாக்கின. பொன்னன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் கொய்யாக்கனி, அவன் கடித்தது கடித்தபடி இருந்தது. இன்னொரு கையில் ரஞ்சிதத்துக்கென்று அவன் நீட்டிய இரு பழங்கள் - ஏமாற்றம், ஆத்திரம், குரோதம் முதலிய உணர்ச்சிகளுக்கு இலக்காயிற்று அவன் நெஞ்சு. அவன் பெரியவன்; முதல் உரிமைக்காரன்; இளமையில், ஆற்றலில் சோடை சொல்ல முடியாதவன். இருந்தும்... இருந்தும் என்ன? அவன் அண்ணனாம்! அந்தச் சோம்பேறி, அத்தான் முறைக்காரனாமே? ஹும்! அனல் மூச்சின் உணர்ச்சிகளைப் பொசுக்கி விட்டுப் பொன்னன் அதே வேகத்தில் எச்சிற்பட்ட கனியை வெளியே வீசி எறிந்தான். மடியில் இருந்த மீதிக் கனிகளைத் திண்ணையில் உருள விட்டுவிட்டு அலுப்போடு, “சோறாச்சாம்மா?” என்றான். “அண்ணனுக்குப் பசி வயித்தைக் கிண்டுது. கொய்யாக்காயைக் கூடத் தூக்கி எறிஞ்சிட்டுக் குழம்பு வாசனையிலே மயங்கி எந்திரிச்சிட்டாங்க!” - விழிகளில் கேலிச்சுடர் தெறிக்கக் கிளுக்கியவளின் பார்வை சட்டென்று வாசற்புறம் விழுந்தது. “ரொம்ப நல்லாயிருக்கிறது அண்ணே, நீங்க காவல் இருக்கிறது...!” என்று சிரித்தாள். “படிப்படியாக் கொத்திக்கிட்டுப் போவுதுங்களே! ஏண்டா தம்பி?” என்று சுப்பம்மாள் ஓடி வந்து ஆத்திரத்துடன் காக்கைகளைத் துரத்திய போது ரஞ்சிதம், “அண்ணனுக்குப் பசி. நான் சோறு வைக்கட்டுமா, அத்தே? எல்லாம் ஆச்சுதா?” என்றாள் கன்னம் குழிய. பொன்னன் வெறித்த பார்வையுடன் நிற்கையிலே, தபால்காரர் வந்து சேர்ந்தார். சுப்பம்மாளின் முகம் தபால்காரரைக் கண்டதுமே அலாதியாக ஒளிர்ந்தது. “அங்கிருந்தபடியே காயிதத்தை வீசி எறிஞ்சிட்டுப் போயிடுவாங்களே. என்ன சேதி இன்னைக்கு?” என்று சுப்பம்மாள் விசாரித்தாள். தபால்காரர் வேர்வையைத் துடைத்துக் கொண்டே, “தம்பி இல்லையா? ஒரு வி.பி.பி. வந்திருக்குதே.” “என்ன அது? வேலைக்கு எதினாலும் உத்தரவு வந்திருக்குதா? குடுத்திட்டுப் போக மாட்டீங்களா?” தன் இளைய மகன் படித்தவன் என்ற பெருமை ஒவ்வொரு சொல்லிலும் பொங்கி வழிந்தது. “வந்திருக்குது, குடுத்திட்டுப் போவாங்க. வாங்கி வச்சுக்க. ஏன்? முன்னே மூட்டைப்பூச்சி மருந்து வரவழைச்சான். இப்பக் கரப்பான் பூச்சி மருந்து வரவழைச்சிருப்பான். படிச்ச பயல் அல்ல!” பொன்னனின் கிண்டல், சுப்பம்மாளின் மலர்ச்சியை மாற்றிவிட வில்லை. ரஞ்சிதத்துக்குத்தான் முகம் வாடியது. தபால்காரர் சுருக்காகத் தபாலை விட்டெறிந்து விட்டுப் போய்விடும் பட்டணத்தார் அல்லவே? அவர் தொழிலை ரசித்துச் செய்பவர். கிராமத்துச் சமாசாரம் அத்தனையும் அவருக்கு அற்றுபடி. எல்லா வீட்டு நடவடிக்கைகளும் அவருக்கு எட்டியவை. “வி.பி.பி. அம்மா; பணங்கட்டி வாங்கிக் கொள்ள வேணும். தம்பி எங்கே?” என்றார். “பணங்கட்ட வேணுமா? போடுறவங்க, தலை ஒட்டாமையா போட்டாங்க? அப்படி யார் போட்டிருக்காங்க, தபால்காரையா?” என்று சுப்பம்மாள் விசாரித்தாள். “மறந்து போயிட்டாங்க அம்மா. ஆப்பக்காராத்தா கிட்டக் காசு இருக்குங்கிற தைரியந்தான்...” என்று பொன்னன் சிரித்தான். “நீ செத்தேச் சும்மா இரேன்!” என்று தாய் எரிந்து விழுந்தாள்; “ஏய்யா, எம்பிட்டுப் பணம்?” தபால்காரர் சிரிப்பது தெரியாமல் சிரித்தார். “மூன்று ரூபாய் பதினெட்டுப் பைசா. இதோ, இந்தப் ‘பாக்கெட்’ வந்திருக்குது.” சுப்பம்மாளுக்குத் தூக்கி வாரிப் போட்டாற் போல் இருந்தது. “என்னது? மூணு ரூபாய் சொச்சமா? என்ன அது அப்படி?” “பொன்னன் ஊசியேற்றுவது போல் பேசினான். “முன்னே மூட்டைப்பூச்சி மருந்து ஒரு ரூபா கட்டி வாங்கலே? அது போல இது கரப்பாம்பூச்சி மருந்தா யிருக்கும். தபால்காரையா, முன்னே நீங்க லீவிலே போயிருந்தீங்கல்ல; அப்ப இப்படித்தான் ஒண்ணு வந்தது. பேப்பரிலே, ‘மூட்டை பூச்சி சாக’ வழி, ஒரு ரூபாய் விலை, தபாலிலே அனுப்புறோம்னு போட்டிருந்தானாம். ஐயா படிச்சவரில்லே? மறுநாள் எளுதிப் போட்டிட்டாரு. எங்கம்மா அதை ஊரெல்லாம் பெருமையோடே டமாரம் அடிச்சாங்க. பீப்பாயிலே வருமுன்னவங்க, டின்னிலே வருமுன்னவங்க, பீச்சாங்குழலும் கூட வருமுன்னவங்க எல்லாரும் வாயைப் பிளந்துக்கிட்டு உட்கார்ந்திருக்கையிலே, வந்தது பாருங்க...!” முடிக்காமலே பொன்னன் இடி இடி என்று சிரித்தான். சுப்பம்மாள் இருள் அடைந்த முகத்துடன் மூன்று சொச்சத்திலேயே சுழன்றவளாய் நின்றாள். “ம், என்ன வந்தது?” என்று தபால்காரர் தூண்டிவிட்டார். “ஏம்மா, சொல்லேன்?” என்றான், பின்னும் பொன்னன். “அட, ஏன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே! இது என்ன தபால்காரையா? அது போல இருந்தா அந்தப் பயலுக்குத் தெரியவே வேணாம். திருப்பி அனுப்பிச்சிடுங்க. ஆமா” என்றாள் சுப்பம்மாள் கண்டிப்பாக. “மூட்டைப்பூச்சி மருந்துன்னு என்ன வந்தது?” என்றார் தபால்காரர் விடாமல். “அதுவா? பெரீஇஇசா வந்துது! ஒரு வத்திப் பெட்டியிலே குண்டூசி ஒண்ணு. சுண்டைக்காயளவு பஞ்சு. ஊசியாலே மூட்டைப் பூச்சியைக் குத்திப் பஞ்சிலே துடைக்க வேணும். எப்படி?” தபால்காரர் இந்தப் பிழைப்பு வித்தையைக் கேட்டுச் சிரித்துச் சிரித்து அனுபவித்தார். “தம்பியா அப்பிடி ஏமாந்தது?... அட!” அவர் இப்படி வியந்தவண்ணம் வி.பி.பி. பாக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மற்ற மூவரின் கண்களும் எதிரே நிலைத்தன. மடிப்புக் கலையாத பாப்ளின் சட்டை, மில் வேட்டி, வாசனைத் தைலமிட்டு அழகாக வாரிவிட்ட கிராப்பு, எல்லாம் இளமையோடு கட்டமைத்த உடலோடு பொருந்திக் காட்சியளித்தன. உல்லாசமான சின்மா மெட்டு ஒன்றை உதடுகள் குவித்து சீழ்க்கையாக வெளியிட்டன. வீட்டின் இளவரசாக வளையவரும் தம்பி, குமரன் வந்தான். “என்ன தபால்காரையா? வரவா செலவா? நமக்குத்தானா?... என்ன உண்டு?” கவலை என்பதை மருந்தளவுக்கும் அறிந்திராத சிரிப்பு ஒலித்தது. “வரவு செலவு, இரண்டுந்தான் தம்பி. மூன்று ரூபாய் பதினெட்டுப் பைசா செலவு; வரவு இந்தப் பாக்கெட்.” குமரன் பரபரப்புடன் அதை வாங்கிப் பார்த்தான். “அட! அந்தப் பயல் எழுதிப் போட்டிருக்கிறேன்னு நிசத்துக்குத்தான் சொன்னானா? அட பாவி? இதை அனுப்பிட்டாங்களே! எவ்வளவு? த்ரீ ருபீஸ் எய்ட்டீன் நயே பைசே.” பொன்னன் உதட்டை நெளித்து அழகு காட்டினான் அந்த ஆங்கிலத்துக்கு. குமரன் சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நோட் ஒன்றை எடுத்தான். சுப்பம்மாள் விழிகள் தெறித்து விடுவது போல் பார்க்கையிலேயே அது தபால்காரரின் கைக்கு மாறிக் காக்கிப் பைக்குள் புகுந்தது. ஒரு ரூபாய் எண்பத்திரண்டு பைசாச் சில்லறையை அவர் பொறுக்கி வைக்கு முன் குமரன் கையொப்பமிட்டுக் கொடுத்தான். தபால்காரர் பாக்கெட்டை அவன் கையில் கொடுத்துவிட்டு அடுத்த தபாலைத் தனியாகக் கையில் எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினார். “லாலலா... அதிருஷ்டச் சக்கரம்... அம்மா அதிர்ஷ்டச் சக்கரம்.” பாட்டோடு பழுப்பு நிற உறைக் காகிதம் உரிந்து விழுந்தது. உள்ளே ஒரு சிறு அட்டைப் பெட்டி; பெட்டிக்குள் பளபளவென்று காக்காய்ப்பொன் மினுக்கில் ஒரு வில்லைத் தகடு இருந்தது.அதில் ஒரு சக்கரம் பொறித்திருந்தது. அண்ணன், அம்மா, அருமைக்காதலி ரஞ்சிதம் எவரையும் பாராதவனாகப் பாட ஆரம்பித்து விட்டான் தம்பி.
“அதிர்ஷ்டச் சக்கரம் - இது அதிர்ஷ்டச் சக்கரம். ஆனந்தமாய் இருக்க உதவும் அதிர்ஷ்டச் சக்கரம். லாட்டரியிலே பணம் கட்டினால் லட்ச ரூபாய் நிச்சயம் லண்டன், ஸ்வீடன் சென்றிடலாம் லாபம் கோடி கோடி...” பெற்ற வயிற்றின் எரிச்சல் இந்தப் பாடில் பொங்கிச் சீறி வந்தது. “டேய் போதுமடா! உனக்கு இப்படிப் புத்தி கெட்டுப் போகுமின்னு நான் நினைக்கல்லே. ஏண்டா, அஞ்சு ரூபாயை அப்பிடியே கொடுத்துப் போட்டு அஞ்சு காசு பெறாத இதை வச்சிக்கிட்டுப் பாட்டுப் பாடுறியே! புத்தி இருக்குதாடா உனக்கு?” சுப்பம்மாளுக்குக் கண் கலங்கியது; குரல் நெகிழ்ந்தது. “ஏண்டா, உனக்கு அம்பதும் நூறுமா அள்ளி அள்ளிக் குடுத்துச் சட்டை, வேட்டி, புத்தகம்னு படிக்க வச்சேனே! அந்தப் படிப்பின் லட்சணமா? ஏண்டா? வவுறெல்லாம் எரியுதே!” பிரலாபத்தை அவள் அப்படியே ஒப்பாரியாக நீட்டி விடுவதற்குள் பொன்னன் கடுகடுத்தான். “யம்மா, பசி கிண்டுது, சோறு போடப்போறியா இல்லியா இப்ப?” சுப்பம்மாளின் செவிகளில் அவன் குரல் விழுந்ததாகவே தெரியவில்லை. “நேத்தைக்கு அது இது, ஆபீசிலே கட்டணும், பாங்கியிலே கட்டணும்னு அஞ்சு ரூபா வாங்கிட்டுப் போனே. இந்தச் சக்கரமும் இன்னொன்னும் வாங்கி அஞ்சு ரூபாவை...” “என்னம்மா அஞ்சு ரூபா, அஞ்சு ரூபான்னு உயிரை விடுறே! அஞ்சு ரூபா எங்கேம்மா குடுத்தேன்? இந்தா பாக்கி!” - சீறிய குமரன் சில்லறையை விட்டெறிந்தான். காசு அவள் காலடியில் உருண்டு போயிற்று; நோட்டு அவள் முகத்துக்கு முன் பறந்து வந்தது. “யம்மா, இப்ப நீ சோறு வைக்கப் போறியா இல்லையா? நான் போயிருவேன்!” பெரியவனின் பயமுறுத்தலுக்குப் பணிந்தவளாய்க் காலடியில் உருண்டு போன சீதேவியைப் பொறுக்கிக் கண்களில் ஒத்திக் கொண்டு சுப்பம்மாள் மௌனமாக் உள்ளே சென்றாள். குமரன் ஒரு பெருமூச்சுடன் திண்ணைக் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். இதுகாறும் சிலைபோல் வாசற்படி மூலையில் நின்ற ரஞ்சிதம் கண்களிலே கோபக்குறி காட்டி அவனைப் பளீர் பளீர் என்று வெட்டினாள். அவன் அருகில் வந்து பின்னலூசியையும் நூல்கண்டையும் எடுத்துக் கொண்டு, நின்றவாறே வெகு வேகமாகப் பின்ன ஆரம்பித்தாள். திண்ணையில் கவனிப்பாரற்று உருண்டு கிடந்த கொய்யாக் கனிகளில் ஒன்றை எடுத்துக் கடித்துக் கொண்டு அவன் அவளைப் பார்த்தான்; சிரித்தான். அவள் கோபம் பின்னல் ஊசியில் ஆவிர்ப்பவித்திருந்தது. நிமிர்ந்தே அவனைப் பார்க்காமல் பின்னலில் கவனம் செலுத்தினாள். அவன் மெதுவான குரலில் பாட ஆரம்பித்தான்.
“கொஞ்சும் கிளியே கொய்யாப்பழமே கோபமேனோ? அஞ்சுகமே ஆசைமுகத்தில் ஆத்திர மேனோ?” பாட்டுக்குப் பலன் அவன் எதிர்பாரா விதமாக இருந்தது! பின்னலூசியையும் நூல்கண்டையும் சுருட்டி மடியில் வைத்துக் கொண்டு அவள் விடுவிடென்று இறங்கி வீட்டைப் பார்க்க நடந்தாள். அவள் நடையைப் பார்த்துவிட்டுக் குமரன் விழுந்து விழுந்து சிரித்தான். சிரித்துக் கொண்டே கொய்யாப் பழங்களைத் தீர்த்துக் கட்டினான். இதுதான் சமயம் என்று கோழிப்படை, காக்கைக் கூட்டம், ஆடு மாடு, எல்லாமாக வாசலில் இருந்த நெல்விருந்தைச் சுகமாக அநுபவித்தன. |