முன்னுரை

     மிக அதிகமாகப் பேசப்படும் ஒரு சமுதாயம் சார்ந்த கருத்து, ‘பெண் விடுதலை’ என்றால் தவறில்லை. பெண் கல்வி பயில வேண்டும், பொருளாதார சுதந்தரம் பெற வேண்டும் என்ற குரல் ஐம்பதாண்டுகளுக்கு முன்பிருந்தே ஒலிக்கத் தொடங்கி விட்டது. தாய்க்குலம், அன்னை, தேவி, என்று அவள் இயல்பைக் குறியாக்கிச் செய்யும் ‘பூசனை’களும் சமயம் சார்ந்து உரத்த குரலில் முழங்கப் பெறுகிறது. இதே குரலோடு, அன்றாட வாழ்வில் மோதும் பிரச்னைகளுக்குத் தீனியாக பிறப்பைக் குறையுங்கள்! தாய்மை வேண்டாம்; அல்லது தள்ளிப் போடுங்கள்! உங்களை நன்றாக அழகு செய்து கொள்ளுங்கள்! கண்கவர் வண்ணங்கள், அச்சுக்கள், பூவேலைகள் அமைந்த உடைகளைப் பாருங்கள்! எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்தப் பருவத்திலும் உல்லாசமாகக் களிக்கலாம் என்று கவர்ச்சிகளை வாரி இறைத்துச் சக்தி வாய்ந்த சாதனங்களை ஒரே முகமாகத் திருப்பிவிடும் நடப்புக்கள், அவசியமான கட்டுப்பாடுகள், ஆணுக்குச் சகல வாய்ப்புக்களையும் அளிக்கும் சலுகைகளாக உதவி புரிகின்றன.

     இளமையில் தந்தை; பின்னர் கொண்டவன்; முதுமையில் மகன் என்ற மரபு அப்படியே பாதுகாக்கப்படும் வகையில் பெண் மனம் போற்றி வளர்க்கப்படுகிறது. ஆனால், போற்றக் கடமைப்பட்டவளை எந்த விதத்திலும் அந்த மரபு பாதிப்பதில்லை. அவள் ஏழரை மணிக்குள் சமைத்து முடித்து, பிள்ளைகளையும் கொண்டவனையும் பேணி, போக்குவரத்து நெரிசலில் ‘கற்பெனு’ம் மரபுக்குப் பங்கம் வராமல் தப்பி, அலுவலகத்தில் இன்னொரு அல்லது பல மேலாளர்களிடம் அடிமை வேலை செய்து பொருளீட்டி வந்து, வீட்டு மேலாளரிடம் கொடுப்பதில் எந்தப் பண்புக் குறைவும் ஆணை ஒட்டுவதில்லை. கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்ற மாதிரியான பழமொழிகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் உரிமையை நிலைநாட்டுகின்றன.

     உண்மையில் ‘பெண் விடுதலை’ என்று ஒன்று சாத்தியமா? சாத்தியமானால் அது எவ்வாறு சாத்தியமாகக் கூடும்?

     ‘ஒரு பெண்ணின் உடற்கூறியலே அவளுக்கு முதல் பகையாகிறது. அவள் விடுதலை பெற முடியாதென்பதற்கு அதுவே காரணம்’ என்று எங்கோ கேள்விபட்ட மொழிகள் சிந்தனையைத் தட்டுகின்றன. ‘தாயைப் போற்று’ ‘பராசக்தியே லோகமாதா’ என்ற போற்றுதல் எவ்வாறு எழுந்திருக்கும்?

     உலகில் மக்கட்குலம் அதிகமாகப் பெருக வேண்டும் என்ற நிலை இருந்த காலத்தில், பெண்ணே மக்களைப் பெற்று சமுதாயத்துக்கு அளிக்கக் கூடிய சிறப்பைப் பெற்றிருப்பதை உணர்ந்து தோற்றுவிக்கப்பட்டதாக இருந்திருக்கிறது. அவளுடைய சிறப்பியல்புகளனைத்தும் இந்த உடற்கூறியலைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன என்றால் தவறில்லை. இதனாலே பெண்ணைப் போற்றினார்கள்; அவளைப் புகழ்ந்தார்கள்; உயிர்க்குலத்துக்கு உணவளிக்கும் மண்ணையும் நீரையும் கூடப் பெண்ணாக்கிச் சிறப்பித்தார்கள். அந்நாளில் பெண் ஒருத்தனுக்கு மட்டுமே இன்பமளிக்கும் உடமைப் பொருளாக இருந்திருக்கவில்லை என்றறிகிறோம்.

     பின்னர், மன்னை உடமையாக்கிக் கொண்டாற் போல், மக்கள் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட இனம், வமிசம் என்று தான் பெருக வேண்டும் என்ற பாகுபாடுகள் வந்த பிறகு, பெண் வேறொரு வமிசத்தானின் சந்ததிகளைப் பெருக்கி விடுவாள் என்ற அச்சத்தில் அவளை அடக்கி ஒடுக்கப் பல தடைகளை நிலை நிறுத்தினார்கள். சதி, கைம்பெண், குழந்தை மணம் எல்லாம் இதன் விளைவுகளே என்று கொள்ளலாம். பெண்கள் போகக் கருவிகளாகப் பெருமளவுக்குக் கருதப் படவும் வாய்ப்புக்கள் வந்துவிட்டன. அதற்கென்று தனிச் சமுதாயமே அனுமதிக்கப்பட்டது. மனித ஒழுக்கத்தை அறிவுறுத்தும் சமயங்களும் இதை ஆமோதிக்கின்றன.

     இந்த அம்சங்களில் ஒன்றையேனும் கூட வேரறுக்காமல், பெண் விடுதலையைப் பற்றித் தம்பட்டம் கொட்டி வருவதையே இந்நாளில் பார்க்கிறோம். குடும்பத்தை உடைக்க வேண்டும் என்று சொல்லி அதீத விடுதலையைக் கனவு காணும் பெண்களும், குடும்ப வாழ்வு சாத்தியமில்லாமல் வறுமையில் உழலும் பெண்களும் பாதுகாப்பற்று, பயங்கர விளைவுகளில் முடிவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. பட்டங்களும், சட்டங்களும் ஒரு பெண்ணுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளித்து விடவில்லை. திருமணம் செய்து கொள்வதை அவள் விருப்பப்படி அன்றி ஒரு சமுதாயப் பாதுகாப்பின் நிர்ப்பந்தமாக ஏற்க வேண்டியிருக்கிறது. அவள் தாய்மைப் பொறுப்பை ஏற்பது பற்றிய சுதந்தரம் அவளுக்கு இல்லை. திருமணம் என்ற பெயரிலும் ‘கற்பழிப்பு’ நிகழ்வதாகவே சொல்லலாம். அவள் சுமப்பதையும், குடும்பக்கட்டுக்காகச் சுமையை நிறுத்திக் கொள்வதையும் பற்றித் தீர்மானிக்க அவளுக்கு உரிமை இல்லை. திருமண அமைப்புக்குள்ளேயே சுதந்தரம் இந்த வகையில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் போது, அந்த அமைப்புக்குள் வராமலே அவள் சுமை சுமக்க நேரும் போது... அந்த அவலத்தை விவரிக்கத் தேவையில்லை. இத்தகைய பொத்தல்களை வைத்துக் கொண்டு எல்லோரும் பெண் விடுதலை பற்றித் தம்பட்டம் அடிப்பதையே பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறோம்.

     அன்றைய நிலையிலிருந்து முற்றிலும் மாறிவிட்ட சமுதாயப் பொருளாதார நெருக்கடிகளில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண் விடுதலை அவளுடைய உடற்கூறியல், தாய்மை இயல்புகளை முக்கியத்துவமாகக் கொண்டிருப்பதை உணர்ந்து ஏற்று அது சமுதாயத்தின் ஆணிவேரான பந்தம் கொண்டது என்பதை வலியுறுத்தி, சட்டங்களும் நியதிகளும் மாற்றப்பட வேண்டும். இது ஆணின் ஏக போக உரிமைகளைக் கட்டுப்படுத்தும். சமய ஒப்புதலோடு வேரூன்றி விட்ட வழக்கங்களைக் கெல்லி எறிவதாக இருக்கும்.

     வெங்காயத் தோலை உரித்துக் கொண்டே போக யாரும் விரும்புவதில்லை. ‘ஓசைகள் அடங்கிய பிறகு’ மிஞ்சுவது யாதென்பதை மீனாவின் வாயிலாக நான் சுட்டிக் காட்ட முனைந்துள்ளேன். எனது எல்லா முயற்சிகளுக்கும் எனக்குப் பேராதரவு அளித்து என் நூல்களை வெளியிட்டு வரும் பாரி புத்தகப் பண்ணையாரே இதையும் வெளியிட முன் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. நல்லுலகமனைத்தும், இந்த முயற்சியை ஏற்பார்களென நம்புகிறேன்.

நன்றி,
ராஜம் கிருஷ்ணன்



ஓசைகள் அடங்கிய பிறகு... : முன்னுரை 1