2

     “வாம்மா பசிக்குது சோறு வச்சிட்டுத் தண்ணிக்குப் போ... வாம்மா” ஆயா முறைத்துப் பார்க்கிறாள். அப்படியே அப்பனின் அச்சு. அதே குறுகிய நெற்றி; அதே கண்கள்; நுனியில் தட்டி விட்டாற் போன்ற மூக்கு, கட்டைக் குரல்; அப்பனைப் போன்று உயரமும் கட்டை.

     “இன்னாம்மா பசி எடுத்துக் குடையிது சோறு வய்யே?”

     “மூணு நேரம் சோறு பொங்க இன்னா இருக்கு. காலம பால் குடுக்கப் போனவெ இந்நேரம் திரிஞ்சிட்டு வார. சோறு போடுன்னு அதிகாரம் பண்ற. அடுப்பு மேல கீது, எடுத்து வச்சிட்டுத் துண்ணு.”

     அவள் கிணற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டு வருவதற்குள் அவன் மீனா மீதி வைத்து விட்டுச் சென்ற சோற்றை ஆயா கொண்டு வந்த சுண்டைக் குழம்பில் புரட்டிப் போட்டுக் கொண்டு முன் வாயிலில் பீடி குடித்துக் கொண்டு சாய்ந்திருக்கிறான். புள்ளிச் சட்டையைத் துவைப்பதற்காக மூலையில் சுருட்டிப் போட்டிருக்கிறான்.

     ‘சட்டையைக் கழட்டி எறிஞ்சிருக்கே, இன்னாவேல பெரட்டுற? எங்கனாலும் ஏரிக்கரய்க்குப் போயிக் கசக்கிப் போடுறதில்லை? அது இஸ்கூலுக்குப் போற பொண்ணு, ஒரு நா ஒரு துணி சுருட்டிப் போடுதா?”

     சொல்லிக் கொண்டே ஆயா அதை உதறி ஆணியில் மாட்டுகிறாள்.

     “யம்மா, அது நாறுது. சோப்பு வாங்கியாந்து கசக்கணும். மீனா சோப்பு வச்சிருக்குமே...”

     “ஆமாண்டா! மீனா சோப்பு வைச்சிருக்கும்! நீ சம்பாரிக்கிறியே? ஒரு மாசமானாலும் அம்பது ரூபா முழுசா எங்கையிலே குடுத்திருக்கிறியா? ஒரு சில துணி வாங்கினியா? அது, ஒரு டீ வாங்கிக் குடிக்காம வருது. முள்ளு முறியாம அப்பிடியே சம்பளப் பணத்தக் கொண்டாந்து குடுக்குது. ஒரு பத்து ரூபா காசு கொண்டுக் குடுத்தா அதுக்கு மேலே புடுங்கிட்டுப் போற. ஒன் சர்ட்டு, குப்பு, டாப்பு, டீக்கடை, பயாஸ்கோப்பு, சைக்கிள் இதுக்கே பத்தல...”

     “கத்தாதேம்மா, நூறு ரூபாக்காசு! குடக்கூலி குடுக்கலியா நா? பெறகு சங்கக்காசி. காலம டீ குடிக்க வாணாமா? நா போன மாசம் மொளவா, புளி வாங்கியாந்தேன். இந்த ஒரே சர்ட்டு, இன்னு ஒண்ணு வாங்கிக்க, இதுங்கடன் அடையல. நீ பாத்திட்டிருக்கிறியே. நான் என்ன ரேஸ் ஆடப் போரேனா? பட்ட சாராயம் அது இதுன்னு எந்த வழிக்கானும் போறனா பொய்யினாப் பாத்துக்க, இன்னிக்குக் காலம நாஷ்தா ஒண்ணுமில்ல. தம்மத்துண்டு சோறு... பசியே அடங்கல...”

     “மொதலாளிட்ட கூடப் போட்டுச் சம்பளம் குடுக்கச் சொல்றமின்னியே?”

     “அதெங்க, இல்லென்னா நின்னுக்கம்பாரு. இப்பதா ஆருவாணா எந்த வேலைக்கின்னாலும் வாராங்க. மின்ன ஐநூறு பாக்கெட் பாலுக்கு வாடிக்கை இருந்திச்சி. இப்ப இன்னும் ரெண்டு பேரு காலேஜ் படிக்கிற பசங்க அவனுகளாகவே வாடிக்கை புடிச்சிட்டுக் கொண்டுக் குடுக்கிறானுவ. ஏதுனாலும் பேசினா இருக்கிற வேலையும் போயிடும்!”

     “அதின்னாவோ, நீ ஒரு ரெண்டு வருசம் ஒரு எடத்தில நெலச்சி வேலை செய்யாம பொறண்டிட்டே இருக்கிற. ரொட்டிக்கட, சைக்கிள் கட, முட்ட வியாபாரம்னு நீ பாக்காத தொழிலில்ல, ஒண்ணும் சரிப்படல. ஓஞ்செலவுக்கு கட்டாம இங்க வந்து காசு கேக்குற. நா யாரிட்ட போயிச் சொல்லுவே? மேஸ்திரிகிட்ட இன்னாவோ மொறச்சிகினி யாமே? தங்கவேலு சொல்லிட்டிருந்தான்?”

     “அவனுக்கென்ன, சொல்லமாட்டான் பின்ன? ஊரிலிருக்கிற பாடைங்களுக்கெல்லா சாராய சப்ளை பண்ணிட்டு துட்டு அடிக்கிறா. அந்தக் கயவாளித்தனம் எங்கிட்ட நடக்காது!”

     “ஏண்டால கத்துற. அவ என்ன பண்ணினா நமக்கென்ன? நம்ம பாட்டப் பாத்திட்டு நாம போறம, யாரு இன்னா பண்ணினா நமக்கென்ன?”

     “அந்தப் பய குடிச்சிப் போட்டு வந்து இன்னா பேசி வம்பு சண்டைக்கிழுத்தா தெரியுமாம்மா?”

     “அவ எதுனாலும் பேசிட்டுப் போறா. அவனுக்கு இன்னிக்குப் பவுரு, மக்கமனுசா எல்லாம் கீறாங்க. நாம கம்மயா குடும்பம் பண்ணுறம், நம்ம வயிக்கு அவன் வராதவரய்க்கும் எத்தயும் செஞ்சிட்டுப் போறா, அதுக்கு நாயம் நல்லது பொல்லாதது பாக்க ஆண்டவன் கீறான்.” ஆயா உள்ளே வந்து அடுப்புக் கலயத்தைக் கழுவிச் சுத்தமாக்குகிறாள். அவளுக்கு மறு நேர வேலைக்குப் போகப் பொழுதாகி விட்டது. மாணிக்கம் சிறிது நேரம் தயங்கி விட்டு, “நம்ம வயிக்கு வரலன்னா நானு பேச மாட்டேன்” என்று தொடங்குகிறான். ஆயா முடியைக் கோதிக் கொண்டிருந்தவள் உறுத்துப் பார்க்கிறாள்.

     “மேஸ்திரிக்கு மீனாவைத் தங்கவேலுக்குக் கட்டி வச்சிடணும்னு இருக்குதாம். அந்தப் பய இத்தச் சொல்லி கொக்கரிச்சிட்டிருக்காம்மா? எனக்கு ரெத்தம் துடிச்சிட்டு வந்திச்சி. ஒரு, பத்தாவது படிக்க வக்கில்லாத பொறுக்கிப் பய, எனுக்கு தெரிஞ்சி எங்கெங்கோ மேஞ்ச கழுதப்பய, மீனா எனக்கு சொந்தம்னு ஏங்கிட்டே பேசுறான். அவன் மொவத்தத் தட்டி அப்பவே பல்லப் பேத்திருப்பேன். போனாப் போவுதுன்னு வுட்டேன். இன்னொருக்க இது போல எதுனாலும் பேச்சி காதுல வுழுந்திச்சின்னா, நா பொல்லாதவனாயிடுவே!”

     ஆயா நடுங்கிப் போகிறாள்.

     “வாணாம்... நீ எதுனாலும் தலக்கிறுக்கா நடந்துக்கினு தலைல கல்லத் தூக்கிப் போட்டிராத. நாம் இத்தினி நா அச்சடக்கமா வாந்திட்டம். நெல்லபடியா இந்த எடத்த வுட்டுப் போகணும். சீதாம்மா மின்ன சக்கர வாங்க இங்க ஷ்டோருக்கு வந்தப்ப சொன்னாங்க. “மீனாவுக்குத்தா எங்கனாலும் வேலை பாக்கச் சொல்லுங்க ஐயாகிட்ட”ன்னேன், “பாக்கிப் பரிட்ச எழுதச் சொல்லுடி, கைமேல நெல்ல சம்பலன்னாங்க. ஒரு நாத்திக்கிழம கூட்டிட்டு வான்னாங்க. அங்க எங்கனாலும் அவுட்டவுசி, அது இதுன்னு எடம் பாத்திட்டுக் கவுரவமா கண்ட பேச்சில்லாம இங்க வுட்டுப் போகணும். நீ அதுக்குள்ளாற எதும் பேசிடாத... அவங்க விரோதம் வாணாம்...”

     மாணிக்கத்தின் கண்கள் திடீரென்று ஒளிருகின்றன.

     “அம்மா, நீ ஊருச்சாணியெல்லாம் பொறுக்கிட்டு வந்து தட்டுறியே, நாம ஒரு மாடு வாங்கி வச்சிட்டா? சீதாம்மா வூட்டுக்காரருதா பாங்கில கீறாரே, மாடு வாங்கக் கடன் எடுக்க முடியாது. மீனா இப்ப ஷூர்டி போடாது!”

     “இங்க நாம் குந்தவே எடமில்ல, மாட்ட வாங்கி எங்க கட்டுவம்? கோளி வாங்கி முட்ட வியாபாரம் பண்ணி கோட்ட கட்டுறதாக் கெனா கண்ட, அல்லாம நோவு புடிச்சிச் செத்துப் போச்சி...”

     “ஒரு தபா இன்னாமோ ஆச்சின்னா எப்பவும் அப்படியே இருக்குமா? கஷ்டப்பட்டா முன்னுக்கு வரலாம். இன்னொருக்க பாக்கிறது...”

     “பாங்கில கடங்குடுத்தா மாசா மாசம் வட்டியும் மொதலும் ரோக்கு டாக்காக் கட்டணும். மேஸ்திரி பொஞ்சாதி அஞ்செருமை வைச்சிட்டு வேவாரம் செய்யிறா. இங்க நாம் எரும மாடு வாங்கி வச்சிட்டு வியாபாரம் செய்ய முடியுமா? கஷ்டப்பட்டு மின்னுக்கு வரவன் எப்பவோ மின்னுக்கு வந்திருக்கலாம். படிக்கப் போட்டு, புள்ள படிச்சிடப் போறான்னு கெனாக் கண்டேன். அந்த அப்பனே உருப்படாம அடிச்சிட்டுப் போயிச் சேந்தாரு. அப்பங் கூடத்தா, படிக்கணும்னு கருத்திருந்தா ஏழாவது எட்டாவது படிச்சிருக்கக் கூடாது?”

     “நீ அப்பவே சொன்னியா? கஷ்டமோ நஸ்டமோ எப்படின்னாலும் படின்னு சொன்னியா? நானுந்தா அப்ப டாக்டர் கிட்ட வேல செஞ்சப்ப எல்லாம் கத்துக்கிட்டு ஒரு நெலக்கி வந்திரலான்னு நெனச்சே, அறுவது ரூவா சம்பளங் குடுத்திட்டு ராப் பகலா வேல வாங்கினாங்க புருசனும் பொஞ்சாதியுமா. அதுதாம் போவட்டும், சம்பளம் கூடப் போட்டுக் குடுங்கன்னு கேட்டதும், பேஷண்டு சிகரெட் வாங்கிட்டு வான்னு துட்டுக் குடுத்தத வச்சி நான் துட்டு வாங்கிட்டேன்னு ஒதச்சி அனுப்பிச்சா! படுபாவி ஒரு சர்ட்டிபிகேட்டு குடுன்னு கேட்டே, குடுக்கல, நெல்லா கட்டுக்கட்டுவே, ஊசி காச்சிக் குடுப்பே, அல்லாந்தான் செஞ்சேன். ஆனா, சர்ட்டிபிகேட்டு இல்லாம இன்னா செய்யிறது? அதாம் போவட்டும், தங்கச்சிய டாக்டருக்குப் படிக்க வச்சிடுவமனு பாத்தா, அதும் நடக்கல. அம்மா, மேஸ்திரி மேலுக்கு சக்கரயாப் பேசுறாரு. இவுரு மனசு வச்சிருந்தா பெருமாளுகிட்ட சொல்லி சீட்டு வாங்க முடியாதா?... எனக்கு இனுமே ரிக்ஷா வாங்கிக் குடுக்கப் போறாரு! இப்ப மீனாப் பொண்ண, அந்தப் பயலுக்குக் கட்டிக்கணும்னு பேச இன்னா தயிரியம் இருக்கணும்?”

     “நீ வுடுரா அந்தப் பேச்ச, பாலு லாரி வந்திடப் போறது. எந்திரிச்சுப் போ! பொயுது போவுது...”

     ஆயாவுக்கு அந்தக் குரலிலேயே கவலை கனக்கிறது. கண்ணாயிரம் இப்போது இவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கையில், இப்படி ஓர் எண்ணம் இருப்பது எதிர்பாராததல்ல. ஆனால், மேஸ்திரியின் இரு பிள்ளைகளும் படிக்கவில்லை. ஒருவனுக்கு ரயில் நிலையத்தின் பக்கம் சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகை எடுத்துக் கொடுத்திருக்கிறான். இந்தத் தங்கவேலு எலக்ட்ரிக் ஒயர் வேலை செய்கின்றான். மைக்கு செட் வாடகைக்கு விடும் தொழில், மடிப்பு அலுங்காத சட்டை சராய் தொப்பி போட்டாற் போன்ற முடி, கிருதா மீசை எல்லாமாகத் தானிருக்கிறான். ஆனால், மீனா... மீனா.

     அவள் தப்பி விழுந்த மலர், அவள் பேணுகிறாள்.

     அந்தக் காலத்தில் ஆரோக்கியவரத்துக் கான்வென்டில் ஆயா ஏனம் துலக்கி, கோழிக்கூடு மாட்டுக் கொட்டில் சுத்தம் செய்து கஞ்சி குடித்த நாட்களில் புருசன் விவசாயக் கூலியாக இருந்த நாட்களில் குடித்துவிட்டு அன்றாடம் அவளை அடித்து இம்சித்த நாட்களில் தெற்குச் சீமையின் கடலோரங்களும் பன மரங்களும் முட்கருவைக் காடும் அவள் மனக் கண்களில் தோன்றுகின்றன. அவர் நெடுநெடுவென்று உயரமாக இருந்தார். நீல முழுக்கைச் சட்டையும் சராயும் அணிந்திருந்தார். தங்க பிரேம் கண்ணாடி. கருகருவென்று முடி. அவருக்கு முப்பது வயசுக்கு மேலிராது என்று உணர்த்திற்று. அவர் கையில் துருதுருவென்று கண்களும் புசுபுசுவென்ற முடியும் சல்லாக் குச்சி வைத்த இள நீல பிராக்குமாக ஒரு குழந்தை கெபியில் இருக்கும். ஆஞ்சு பொம்மையைப் போலிருந்தது. கீழிறக்கி விட்ட போது கையில் தன்னைப் போலவே தோற்றமுள்ள பொம்மை ஒன்றை வைத்துக் கொண்டு அவளையே பார்த்தது.

     முன்புறத்தறையில் பெரிய ஸிஸ்டரைப் பார்க்க எத்தனையோ பேர் வருவார்கள். அங்கு பள்ளிக்கூடம் இருந்தது. ஒரு ஆஸ்பத்திரி இருந்தது, ஏஞ்சலோ ஸிஸ்டரும், மோனிகா ஸிஸ்டரும் ஆஸ்பத்திரிக்குப் போவார்கள். பெரிய ஸிஸ்டர், மேரி ஸிஸ்டர் இருவருமே பள்ளிக்கூடம் போவார்கள். ஜோசபின் ஸிஸ்டர் படிக்காத ஸிஸ்டர். அங்கேயே மேற்பார்வை செய்து கொண்டும் குசினி வேலை செய்து கொண்டும் இருப்பாள். ஆயா தோட்டத்துக்கப்பால் முன்புறத்துப் பகுதிகளைக் கூட்டிப் பெருக்குவாளே ஒழிய உள்ளே சென்றதில்லை.

     வயிற்றுக்கில்லாத துன்பம் தாங்காமல் இங்கே வேலை செய்வதால் கிடைக்கும் அற்பத்தையும் புருசன் பிடுங்கிக் கொண்டு அடிப்பான். மாணிக்கத்துக்கு முன் இரண்டு பெண்கள் இருந்தன. காசம் வந்தே இரண்டு குழந்தைகளும் மடிந்தன. மாணிக்கத்தைப் படிக்கச் சேர்த்திருந்தாள். அவனுக்கு அங்கேயே பால், சோறு இரண்டும் கிடைத்து விடும். அவனை ஜோசபின் ஸிஸ்டர் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதையோ சிலுவை போட்டதையோ ஆயா மறுக்கவில்லை. கான்வென்ட் மதிலுக்குள்ளோ மாதா கோயில் வளைவில் இருந்த பள்ளி முற்றத்திலோ அவன் பிள்ளைகளோடு பிள்ளைகளாய் ஆடிக் கொண்டிருப்பான். ஒரு நாள் குடித்து விட்டு பெரிய அடிதடி சண்டையில் அகப்பட்டுக் கொண்ட அப்பன் போலீசில் பிடிபட்டுச் சிறைக்குப் போனான். ஆயா நாலைந்தாண்டுகள் அந்தப் புருசனின் இம்சையின்றி கான்வென்ட் வளைவுக்குள்ளேயே கழித்தாள்.

     பள்ளிக்கூடத்தை ஒட்டி பெண் குழந்தைகளுக்கு ஒரு விடுதி இருந்தது. பத்துக் குழந்தைகள் அறைக்கு இருவராகத் தங்கிக் கொள்ள இடமும் மற்ற வசதிகளும் சாப்பாட்டுக் கூடமும் தனியாக உண்டு. இது மாசம் எழுபது ரூபாய் கொடுத்துப் படிக்கும் செல்வ வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரியதாகும்.

     இது தவிர, அநாதைகளுக்கென்றதொரு கஞ்சி விடுதியும் தனியாக இருந்தது. அவர்கள் ஒரே கூடத்தில் படுத்துறங்க வேண்டும். வேலையாட்கள் கிடையாது. தாமே எல்லா வேலைகளையும் செய்து கொண்டு, பள்ளியில் படிக்க வேண்டும்.

     மீனாவை அவள் தந்தை அங்கு பெரிய சிஸ்டரிடம் ஒப்புவிக்கும் போது, அவளுக்கு நான்கு வயது கூட ஆகியிருக்காது. அநாதை விடுதியில் ஐந்து வயசுக் குழந்தைகள் இருந்தார்கள். ஆனால் பெரிய ஆஸ்டலில் சிறிய குழந்தைகள் யாரும் இல்லை.

     குழந்தையின் தாய் அக்கரைச் சீமையில் இறந்து விட்டாளென்றும், தாம் சாதிவிட்டுத் திருமணம் செய்து கொண்டதால் வேறு யாரும் ஒப்பி உதவவில்லை என்றும், அக்கரைச் சீமையில் தாம் பெரிய வியாபாரி என்றும், குழந்தையை ஓராண்டுக் காலம் பாதுகாத்துக் கொண்டால் தாம் வந்துவிடுவதாகவும் அவர் சொல்லியிருந்தாராம். எப்படியும் குழந்தை அந்தக் கல்விச் சாலையில் தான் கல்வி பயிலவிடப் போவதாகவும் சொன்னாராம். விடுதிக்கு அன்பளிப்பாக ஆயிரம் ரூபாய் பணமும் குழந்தைக்கான விடுதிச் செல்வை ஓராண்டுக் காலத்துக்கு முன்கூட்டியே கட்டியிருந்தார். அந்நாட்களில் மீனா, தேவக் குழந்தை போல் தோட்டத்தில் ஆடிக் கொண்டிருப்பாள். பெரிய ஹாஸ்டலில் உள்ள விடுதியில் சந்திரா டீச்சரின் அருகில் தான் படுக்கை என்று பெயர். ஆனால் ஜோசபின் ஸிஸ்டரின் கூடவே திரிந்து கொண்டிருப்பாள். அப்போது இவளுக்கு ரீனா என்று பெயர்.

     ஒரு வருஷம் ஆயிற்று அப்பா வரவில்லை; விடுதிக்கு அவர் கட்டிய பணம் தீர்ந்து விட்டது. அவர்கள் அவர் தந்திருந்த முகவரிக்குக் கடிதங்கள் எழுதினார்கள், ஏதும் பதில் வரவில்லை.

     சந்திரா டீச்சர் கல்யாணமாகிப் போய் விட்டாள். விடுதியில் வேறு பிள்ளைகள் வந்தார்கள். இந்த நாட்களில் எப்போதோ விடுதலையாகியிருந்த ஆயாவின் புருஷன் கான்வென்ட் பக்கம் வந்தான். அவளையும் மாணிக்கத்தையும் உதைத்து இழுத்துச் சென்றான்.

     மாணிக்கத்துக்கு அப்போது பன்னிரண்டு வயசு. ஆறாவது படித்துக் கொண்டிருந்தான். பிள்ளையின் கழுத்தில் தொங்கிய சிலுவையை அவிழ்த்து எறிந்தான். எங்கெங்கோ கூலிப் பிழைப்புப் பிழைத்துவிட்டு இந்தப் பட்டணக் கரைக்கு வந்தார்கள்.

     பையனை ஒரு ரொட்டிக் கடையில் வேலைக்குச் சேர்த்தான். அவளை வீட்டு வேலை செய்ய அனுமதித்துக் கிடைத்த காசைப் பிடுங்கிச் சென்று குடித்தான். ஆண்டவனாக இவள் துன்பம் பொறுக்காமல் பட்டைச் சாராயத்தில் நஞ்சாக வந்திருந்து அவனுக்கு முடிவு கட்டினார். சைக்கிள் கடையில் வேலையாக இருந்த மாணிக்கம் தான் ஒரு நாள் செய்தி கொண்டு வந்தான்.

     “ஜோசபின் சிஸ்டரில்லாமா? அவுங்கே இங்கே வந்து கிறாங்க. எத்தினி குண்டா ருப்பாங்க? மெலிஞ்சி பூட்டாங்க. நா ரயில் டேசனாண்ட பாத்தேன். கவுக்குனு நாபகம் வச்சிட்டு ‘ஏ மாணிக்கமில்ல’ அன்னம்மா சுகமாருக்கிறாளா, ஐயா நல்லபடியாகிறாரான்னு விசாரிச்சாங்க. நா ஐயா செத்திட்டாருன்னேன். ஒடனே ஜபம் சொன்னாங்க.”

     “அட? அப்படின்னா அவங்களப் பாக்கணுமே? இங்கதா வேலயாவே கிறாங்களா?”

     “அதெல்லாங் கேக்கல அன்னம்மாள வரச் சொல்லு ரீனால்ல ரீனா அதைப்பத்திப் பேசணும்னு சொல்லுன்னாங்க!” அவளுக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. மாணிக்கத்தை அழைத்துக் கொண்டு டிரங்க் ரோடில் நடந்து சென்று அந்தக் கான்வெண்டுக்குள் சென்றாள். உண்மையில் ஜோசப்பின் ஸிஸ்டரை அடையாளமே தெரியவில்லை. ‘அன்னம்மா? மாணிக்கம் சொன்னானா? ஆண்டவரிடம் தினம் மன்றாடினேன்’ என்று கண்ணீர் மல்கக் கடவுளுக்குத் தோத்திரம் சொன்னாள்.

     “ஸிஸ்டர் உங்களுக்கு உடம்புக்கு என்ன? இப்படித் துரும்பாயிட்டீங்களே?”

     “ஒண்ணில்ல அன்னம்மா உனக்கு ரீனாவத் தெரியுமில்ல? என்ன அழகா சுட்டியா யிருக்கும்...”

     “ஆமாம்மா, ரீனாவைத் தெரியாதா? தோட்டத்தில் தான் எந்நேரமும் ஆடிக்கிட்டிருக்கும்! பெரிய ஸிஸ்டர்லேந்து அல்லாருக்கும் அதும் பேரில உசிராச்சே?” ஜோசபின் ஸிஸ்டர் சிலுவைக் குறி செய்து கொண்டாள்.

     குழந்தையின் தந்தை பிறகு வரவேயில்லை. இவர்களுக்கு வெளி உலகைப் பற்றி என்ன தெரியும்? எப்படியோ யார் மூலமாகவோ அவர் தந்திருந்த விலாசத்தில் விசாரித்தார்கள். ஒரு தகவலும் தெரியவில்லை. அவருடைய நன்கொடையையும் மனசில் கொண்டு சுமார் இரண்டு ஆண்டுக் காலம் வசதியுடன் அவளை வைத்துக் கொண்டார்கள். அதற்கு மேல் விதிகள் இடம் கொடுக்கவில்லை. இந்த நாட்களில் குழந்தை சிறிது விவரம் தெரியாதவளாக வளர்ந்து இருந்தாள். அவள் தந்தையிடம் இருந்து கடிதம் ஏதும் வரவில்லை என்று புரிந்து கொள்ளச் செய்தார்கள்.

     பிறகு முடிவெடுத்து அவளை அநாதை இல்லத்துக் கூட்டு வாழ்வுக்கு மாற்றினார்கள். கட்டிலும், மெத்தையும் முட்டையும், பாலும் சோறும் பருப்பும் போய், பீத்தற் பாயும், கஞ்சியும் கூழும், பொறாமையும், சண்டையுமான ஓர் இழிவுக்குத் தள்ளப்பட்டாள்.

     முதல் இரவிலேயே ஓவென்று அழுது கொண்டு சிஸ்டரைக் கூவியழைத்தாள். அவளுடைய அலறலில் ஜோசபின் சிஸ்டர் மனமதிர்ந்து ஓடி வந்தாள். ‘என்ன அங்கிட்டுக் கூட்டிப் போங்க. ஸிஸ்டர், அங்க அங்க...’ என்று விக்கியழுதாள்.

     உலகியலின் கபடங்களோ, பணத்தின் மதிப்போ புரிந்திராத குழந்தையால் இந்தத் திடீர்ச் சரிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜோசபின் ஸிஸ்டர் அந்தக் குழந்தைக்கு ஆறுதல் கூற இயலாமல் தவித்துவிட்டு, வராந்தாவில் தனிப் படுக்கைப் போடச் செய்தாள். இரவு நாள்தோறும் அவள் உறங்கும் வரை அருகில் இருப்பாள். விதிகளை மீறி கண்டும் காணாமலும் அவளுக்குக் கஞ்சியில்லாத நாஷ்தா, வேறு உணவு வகைகள் கொடுக்கச் செய்தாள். நாள்தோறும் நித்திய ஆண்டவரே, இந்தப் பாவப்பட்ட குழந்தையின் துன்பத்தைத் தீரும் என்று நெஞ்சுருக ஜபம் சொன்னாள்.

     நாளுக்கு நாள் இவள் பிரச்னை தீரவில்லை. ஜோசபின் ஸிஸ்டருக்கு உடம்பு நோவு வந்து இரண்டு வருடங்களாகி விட்டன. வயிற்றில் கட்டி வந்து தூத்துக்குடி ஆஸ்பத்திரி சென்று ஆபரேசன் செய்தார்கள். இத்தனை நாட்களாக அவள் அங்கேயே இல்லை. இப்போதும் இங்கே கரன்ட் வைத்துக் கொள்ளத்தான் வந்திருக்கிறாள். இத்தனை வருடங்களாகியும் ரீனா அநாதை இல்லத்தில் வாழப் பொருந்தவில்லை. அங்கே மற்றப் பிள்ளைகளுக்கும் இவளுக்கும் எப்போதும் சண்டை; இவளுக்குத் தனிப் படுக்கை போட்டு நல்ல சாப்பாடு கொடுப்பாரும் யாருமில்லை. படிப்பிலும் பின் தங்கி மோசமாகி விட்டாள். அண்மையில் ஒரு நாள் ஓடிப்போய்க் கடற்கரையோரம் திரிந்து கொண்டிருந்தாளாம். இழுத்து வந்தார்களாம். ஸிஸ்டர் இதெல்லாம் கூறி வருந்தினாள்.

     அதுக்கு ஒரே வெறுப்பு. ஸிஸ்டர், நான் செத்துப் போறேன். நான் இல்லாட்டி வெளியே போய்ப் பிச்சை எடுக்கிறேன். அப்படீன்னெல்லாம் பேசுது. அன்னம்மா, எங்கிட்ட அப்பிடி ஒட்டிக் கொள்ளும். அதுக்கு ஒரு குடும்பம், தாயன்பு இருந்தா நல்லபடியாக வளரும். நான் ரொம்பநா உயிரோட இருக்க மாட்டேன். அத்த நீ கூட்டிட்டுப் போயி வச்சுக்கிறியா அன்னம்மா? எனக்கென்னமோ, ஒரு நல்ல பிறவி, நல்ல ஜீவன் இப்படி மனம் வருந்தி, நம்பிக்கையில்லாமல் போயிடக் கூடாதுன்னு மனசு துடிக்கிது. உன்னை இங்க பார்க்கிறதே யேசுவின் கருணைதான்னு நினைச்சு மனசு பொங்குது. அந்தப் பிள்ளைக்கு நீ குடிக்கிற கஞ்சியக் குடு. ஆண்டவன் படைப்பில ஆரும் தீயவங்க இல்ல. கபடறியாத பிள்ள அது. அதை முதலிலேயே இதுதான்னு ஏழைப் பிள்ளைங்களோடு போட்டிருந்தா ஒத்திட்டிருக்கும். ஆயா என்ன சொல்வதென்று தெரியாமல் சிலையாக நின்றிருந்தாள். அப்போது அவளுக்கு ரீனா அங்கு இருக்கிறாள் என்றே தெரியாது. ‘எஸ்கர்! ஸ்கூல் விட்டிருக்குமே? அந்த ரீனா பிள்ளையக் கூட்டிட்டு வா!’ என்று ஸிஸ்டர் அங்கு வந்தப் பெண்ணை அனுப்பினாள். அங்கு வந்த சிறுமியைப் பார்த்து ஆயா அதிர்ச்சியுற்றாள். அவளை அடையாளம் கண்டு கொள்ள அந்த இரண்டு கண்கள் தாம் உதவின. நீலம் மங்கிய மேல் சட்டையும் அழுக்குப் போகாததோர் அரைப் பாவாடையும் புதுமை மங்கிப் பல நாட்களாயிருந்தன. கைகளும் கால்களும் குச்சிக்குச்சியாக அநாதை விடுதியின் பற்றாத உணவையும், துயரங்களையும் விண்டன.

     “தோத்திரம் ஸிஸ்டர்” என்று கூறியவள் நாணத்துடன் தலை குனிந்து கொண்டாள். கிணற்றின் ஆழத்தில் வெளிச்சம் படும் போது பிரதிபலிக்கும் நிழல்களைப் போன்று அந்தக் கண்களில் மலர்ச்சியின் நாணம் தெரிந்தது.

     “ரீனாக் கண்ணு...!” என்று ஸிஸ்டர் அவளை அருகில் அழைத்துத் தலையைப் பற்றி ஆசி மொழிந்தாள்.

     “ஆயா, அன்னம்மாள் உனக்கு நினைப்பிருக்கில்ல? உன்னச் சின்னப் பிள்ளையில எத்தினி நா தண்ணி எரச்சி ஊத்திக் குளிப்பாட்டிருக்கு. அன்னம்மா கூட இருக்கிறியா...?” ரீனா அவளை நிமிர்ந்து பார்த்துத் தலையை ஆட்டிற்று.

     “ஆயா, உனக்கு ரெண்டு பொம்பிளைப் பிள்ள இன்னக் கொண்ணு, மக்கா நாளொண்ணுன்னு செத்துப் போச்சியில்ல. யேசு ஈடுபண்ண இத்தக் கொடுத்திருக்கினார்னு நினைச்சிக்க. நீ துன்பப்பட்டு சகிச்சவ. துன்பப் பட்டவங்கல்லாம் கருணையுள்ளவங்களாத்தான் இருக்க முடியும். இந்தப் பிள்ளை உங்கிட்ட இருந்து படிக்கட்டும். யேசு உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.”

     பள்ளிக்கூடத்தில் அவளுக்கு ரீனா என்று தான் பெயர் இருந்தது. பிறகுதான் அவளாகவே மாற்றிக் கொண்டாள். ஆயாவுக்கு ரீனா என்று வராது. மீனா என்று தான் வாயில் எளிதாக வரும். எனவே மீனா என்று பெயராயிற்று.

     ஜோசபின் ஸிஸ்டர் இவள் வரும் போது, இவள் பேரில் ஒரு ஐநூறு ரூபாய் பணம் போட்ட தபாலாபீஸ் புத்தகமும், ஒரு சிலுவைச் சின்னமும் கொடுத்து ஆசீர்வதித்தாள். பிறகு மூன்று மாதங்கள் கூட அந்த ஸிஸ்டர் உயிர் வாழ்ந்திருக்கவில்லை.



ஓசைகள் அடங்கிய பிறகு... : முன்னுரை 1 2