உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ. 118 (3 மாதம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
ஈரோடு புத்தகத் திருவிழா 2025 கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - 150 & 151 21-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 01/08/2025 முதல் 12/08/2025 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழா தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். தினமும் மாலை 6.00 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைவரும் வாரீர் |
1 ஆயா மடி நிறையக் குப்பைக் கீரையும் கையில் பழைய சோற்றுப் பாத்திரமுமாகக் குடிசைக்குத் திரும்புவதற்குள் மீனா ஊருணிக்கரைப் புதுமலர் போல் மேனி குளித்துத் தலைசீவிப் பொட்டிட்டுப் பள்ளிக்குச் செல்லத் தயாராகி விட்டாள். சிவந்த நிறத்தில் அவள் வைத்திருக்கும் ரெக்சின் தோள் பையில் நோட்டு புத்தகங்கள், மதியச் சோறு வைத்திருக்கும் சிறு டப்பி எல்லாம் காட்சியளிக்கின்றன. அழுக்குத் துலக்கும் பணி செய்து விட்டு வந்திருக்கும் தனக்கு அந்தப் புது மலரைத் தொடக் கூடத் தகுதியில்லை என்ற மாதிரியானதொரு பாவத்துடன் ஆயா அவளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். பிறகு அடுப்படியில் சிறு சட்டியில் அவளுக்கு மட்டும் பொங்கி வைத்த சோற்றுக் கலயத்தைத் திறந்து பார்க்கிறாள். “ஒழக்கரிசி பொங்கி வச்சே, அத்தையே மீதி வச்சிட்டியே கண்ணு? அம்மாந்தொலுவு போயி புள்ளங்களோடு சுத்துற. இம்மாஞ்சோறு துண்ண வேணாமா?” என்று ஒரு தேங்காயளவு கையைக் காட்டிக் கடிந்து கொள்கிறாள். “வெள்ளி முளக்கிமுன்ன எந்திரிச்சி தண்ணி தூக்கியாந்து சோறாக்கி வச்சிருக்கிற. நீ தம்மாத்துண்டு சோறுண்ண வேண்டாம்?” முல்லைப் பற்கள் தெரிய சிரித்து விட்டு மீனா ஆயாவின் கன்னத்தில் குனிந்து மென்மையாக முத்தமிடுகிறாள். பிறகு பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு “வாரேன், டாடா...” என்று சொல்லிக் கொண்டு குனிந்து குடிலை விட்டு வெளியேறுகிறாள். ஆயாவும் குனிந்து வெளியே வருகிறாள். ‘பெரியார் நகர்’ என்று பெயர் பெற்ற அந்தப் பேட்டை கண் விழித்து சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டது. எருமை மாட்டை ஓட்டு வரும் பெண்களும், சாணித் தட்டுபவர்களும், பீடி குடித்துக் கொண்டு ஏதும் வேலையில்லை என்று கூறாமல் உட்கார்ந்து பேசு விடலைகளும், இரவு நேரச் சினிமா, சீட்டாட்டம் என்று கழித்தவர்கள் என்று உறக்கம் கலையாமலிருக்கும் ஆடவரும், மண்ணில் விளையாடும் மதலைகளும், குப்பையைக் கிளறக் கூடையும் கையுமாகப் புறப்பட்டு விட்ட குமரிப் பெண்களும், இன்னும் கோழிகள், நாய்கள், ஆடுகள் என்ற உயிர்ப்புக்களும் பொங்கி வரும் வெங்கதிரோனை வரவேற்கின்றனர். தாழ்ந்த வாயில்களும், குட்டித் திண்ணைகளும், போகுமிடம் தெரியாமல் புறப்பட்டுத் தடுமாறும் சாக்கடைகளும், மீனாவின் அந்நியத் தன்மை கண்டு பிரமிக்கையில் மீனா அந்தப் பேட்டையைக் கடந்து பெரிய சாலைக்குச் செல்லும் தெருவுக்கு முன்னேறி விடுகிறாள். மனதுக்குள் திருட்டி முறித்துக் கொண்டு ஆயா குடிசைக்குள் நுழைகிறாள். அரசாணி போல் அப்படி ஒரு மென்மை. ரோஜாவும் சந்தனமுமாக நிறம். அலையலையாகச் சுருளும் முடி, பிரமிக்க வைக்கும் இந்தச் சுடர் இருக்க வேண்டிய இடமா இது? இந்த ஏழையால் அதற்கு ஒரு மறைவிடம் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை. நான்கு கம்பிகளை ஊன்றி கீற்று ஒன்று முடைந்து மறைவாகக் கட்டி வைத்திருக்கிறாள். கம்பும் தென்ன மட்டையும் வேலை செய்யும் வீட்டிலிருந்து இரந்து பெற்று வந்தாள். இந்தப் பேட்டையில் அவள் யாருடனும் தேவையில்லாமல் ஒரு சொல் கூட உதிர்க்க மாட்டாள். மீனா அப்பகுதிக்கு அந்நியமாக இருப்பதால் தன்னையும் அந்நியமாகவே பாவித்துக் கொள்கிறாள். மடிக்கீரையைக் கொட்டி ஆய்ந்து வைக்கிறாள். பின்னர் உள்வீட்டைத் துப்புரவாகப் பெருக்கித் துடைத்து விட்டு கைகளைக் கழுவிக் கொள்கிறாள். வேலை செய்த வீட்டில் இருந்து கொண்டு வந்த சோற்றுப் பாத்திரத்தைத் திறக்கிறாள். ருக்குமணி அம்மா வேலைக்காரிக்குத் தானே என்று சலித்துப் போகும்படி சோற்றை நீரூற்றாமல் வைக்க மாட்டாள். குழம்பையும் ஊசி விடாமல் பக்குவமாகக் காய்ச்சி வைத்திருப்பாள். அன்று பருப்பில்லாத சுண்டை வற்றல் குழம்பு. சிறிதளவேயுள்ள நீர்ச்சோற்றில் அதைச் சிறிது ஊற்றிக் கலக்கிக் கொண்டு ஆயா குடிக்கும் நேரத்தில் “மீனா இஸ்கூல் போயிடிச்சா ஆயா?” என்று கேட்டுக் கொண்டு தேவானை உள்ளே நுழைகிறாள். கூழைப் பாய்ந்து விட்ட முடி பிசிறு பிசிறாக முன் மண்டையில் தூக்கி நிற்க, சிவப்பு நாடா பளீரென்று கண்களைப் பறிக்கப் பின்புறம் சேர்த்துக் கட்டியிருக்கிறாள். என்றோ மினுமினுப்பாக விளங்கியதைச் சிறிதும் நினைவுக்குக் கொண்டு வராததோர் அழுக்கு ரவிக்கை. கொசகொசத்த வாயில் சேலை, கண்களிலும் வாயிலும் தூங்கிய தடம் போகாத அறுவறுப்புடன் வந்து நிற்கிறாள். “எங்கடீ வந்த? கசுமாலம், தூங்கி எந்திரிச்சா ஊத்த வாயோடு வந்திட்டா!” தேவானை ஊத்தைப் பற்களை மேலும் காட்டிக் கொண்டு தலையைச் சொரிகிறாள். “ஒடம்புக்கு முடியல ஆயா, தூக்கமா வருது...” “வரும் வரும்! போடி, இங்க குந்தாத!” “ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போவணும் ஆயா...” என்று அவள் குந்திக் கொள்கிறாள். முழங்கால்களைக் குத்திட்டு முகத்தைக் கவிழ்க்கிறாள். “கசுமாலம்... எங்கேந்தோ வந்து தொலஞ்சிட்டுது. வூடில்ல, வாசல்ல, புருசனில்ல, போக்கில்ல, இதுக்கு மட்டும் கொறவுல்ல. ஆயாவத் தேடிகினு வாரா? போடி, இங்க வந்து குந்தாத? ஒரு தொழில் செஞ்சா நாணயமா ஒடம்பு வணங்குறதில்ல. பூவெடுக்கப் போறவ காலம எந்திரிச்சிப் போறதில்ல. அங்கங்க பல்ல இளிச்சிட்டு நிக்கிறா! எந்திரிடி சொல்ற!” “கோச்சிக்காத ஆயா! பூவெடுக்கத்தா கெளம்புன. தல சுத்திக்கினு வந்து வுயிந்திட்ட...” நிமிர்ந்து பார்க்கும் கண்கள் இறைஞ்சுகின்றன. இன்னும் குழந்தைத்தனம் மாறாத முகம். உலகின் கவடு சூதுகள் படியாமலே அவற்றுக்கு இரையாகி விட்ட பேதை. “ஒயுங்கா ஒரு பக்கம் இருன்னா கேக்குறியா? இந்தத் தபா, நா ஒன்ன ஒரு பக்கமும் கூட்டி போக மாட்டே. நீயே போயிப் படுத்திட்டு சாவு!” “அப்பிடிச் சொல்லாத ஆயா, எல்லாரும் இங்கிய என்னத்தா திட்டுறாங்க. நா என்ன பண்ணுவ? நானும் ஊருல இருந்தா நெல்லபடியா கண்ணாலங்காச்சி கட்டிக்கிட்டு இருப்பே. அல்லாம பெத்துப் போட்டுச் சத்துப் போனாங்க. அந்தப் பாவிப்பய, என்னக் கண்டதும் ஆசகாட்டிக் கூட்டியாந்து இங்கவுட்டுப் போட்டுப் போனா. ஒழுங்காதா இருக்கணும்னிருக்கே. நாயிங்க...” “மூடுடி வாய, ஊத்த வாயி? போயி மூஞ்சக் கழுவிவிட்டு வாடி, கசுமாலம்! ஒப்பாரி வக்கிறா! துப்புக் கெட்டவ!” அவள் எழுந்து சென்று ஆயா வைத்திருக்கும் நீரில் ஒரு குவளை முகர்ந்து முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். வாயைக் கொப்புளிக்கிறாள். ஆயா அவளை உட்கார வைத்து விட்டுத் தெருவோரக் கடையிலிருந்து ஒரு காய்ந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து சுக்கைத் தட்டிப் போட்டுப் பிழிந்து கொடுக்கிறாள். தேவானை அதை வாங்கி ருசித்து அருந்துகிறாள். “நீ நெல்லாயிருப்பே ஆயா... உம்புள்ள நெல்லாயிருக்கும். மீனா நல்லாயிருக்கும்.” ஆயா பதிலேதுமின்றி பழஞ்சோற்றுக் கரைசலை மீண்டும் கலக்கிக் குடிக்கிறாள். அந்த மலிவு அலுமினியம் வட்டையை நன்றாகத் துலக்கி மூலையில் கவிழ்த்துகிறாள். பிறகு குந்தி சுருக்குப் பையிலிருந்து ஒரு வெற்றிலையையும் அரைப்பாக்கையும் போட்டு மெல்லுகிறாள். ஒரு துளி சுண்ணாம்பும், துண்டு புகையிலையும் அந்த ஓய்வு நேரத்தை அவளுக்கு சுவர்க்கமாக்குகின்றன. சோர்ந்து படுத்திருக்கும் தேவானையின் சேலை தான் எத்தனை அழுக்காக இருக்கிறது? மூட்டைக்காரனிடம் இதை வாங்கி ஒரு மாசமாகவில்லை. சுத்தமே இல்லாத அழுக்கு மூட்டையாக, பழகி விட்டது. இந்தப் பேட்டையே இப்படித்தான். இங்கு தூய்மையும், நெறிகளும் தனித்து நிற்க முடியாது. ஒரு பெரிய அசுரக் கும்பலின் நிழலில் இருப்பது போல் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது. இங்கே மீனா இருக்கிறாள். இந்தக் கறிபடிந்த குடிலை அவளுக்காக ஆயா தூய்மையாக வைத்திருக்கிறாள். அவள் வேலையில் ஒரு பிசிறு இருக்காது. சேலையில் ஒரு அழுக்கு ஒட்டாது. சுருக்கம் விழுந்த முகத்தில் வயசு எத்தனை என்று சொல்ல முடியாததொரு பதவிசும் மென்மையும் இருப்பதாக மீனா சொல்லுவாள். “ஆயா உன்னப் போல அழகு யாருமே இல்ல...” என்று கழுத்தைக் கட்டிக் கொள்வாள். எண்ணத்தில் தூய்மையும் செய்கையில் ஒழுங்கும் சுயநலமற்ற பண்பும் அவளுடைய சின்னஞ்சிறு இயக்கத்திலும் கூடப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. அவள் பாத்திரம் துலக்குவதையும் துணி துவைப்பதையும் பார்த்து, வேறு பல பெண்கள், அம்மாமார் வேலைக்குக் கூப்பிட்டிருக்கிறார்கள். முப்பது, நாற்பது என்று ஆசை காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவள் சீதம்மா வீட்டில் பத்து வருசம் வேலை செய்தாள். சீதம்மா இப்போது எங்கோ ராஜேசுவரி நகரில் வீடு கட்டிக் கொண்டு போய் விட்டாள். ருக்குமணி அம்மாவுக்காக பதினைந்தாண்டுகளாக வேலை செய்கிறாள். டிக்கி கன்யாஸ்திரீகள் மடத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். இப்போது பங்களூரில் வேலைக்குப் போய் விட்டான். ருக்குமணி அம்மா தலை நரைத்துக் கிழவியாகி விட்டாள். சீதம்மா விட்டுப் போன பிறகு இப்போது ஒரு கன்னடக்காரர் வீட்டில் வேலை செய்கிறாள். அந்நாட்கள் ஏழும் எட்டும் பதினைந்து ரூபாய் சம்பாதித்தாள். அப்போது மீனா இங்கு வரவில்லை. மீனா இக்குடிசைக்கு வந்த பிறகு, மொத்தமாக இருபது ரூபாய் சம்பாதிக்கத் தொடங்கினாள். மாணிக்கம் பயல் ஏதேனுமைந்து பத்து கொடுப்பான். ருக்குமணி அம்மா தாராள மனசு. வீட்டு வளைவில் நான்கு தென்னை உண்டு. பன்னாடை, மட்டைக் குச்சி, கொட்டாங்கச்சி எல்லாம் இவள் எடுத்து வரலாம். புருசன் இறந்து அவள் இங்கே ஒண்ட வந்த போது, இப்படித் தனி வீடு இல்லை. மேஸ்திரி வீட்டிலேயே முற்றத்தோரம் சாக்குப் படுதா கட்டிக் கொண்டு குடித்தனம் செய்தாள். மேஸ்திரி என்ற கண்ணாயிரத்துக்கும் அப்போது இவ்வளவு செல்வாக்கும் செழிப்பும் இல்லை. கொல்லத்து வேலைக்குப் போவான். காங்கிரசில் சேர்ந்து கூட்டமெல்லாம் போட்டான். இப்போது இந்தப் பேட்டைக்கே அவன் பெரிய கை. என்னென்னவோ கட்சியெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் ஆயாவுக்குப் புரியாது, கேட்கத் தேவையில்லை. ஆனால் கண்ணாயிரம் வீட்டைப் பெரிதாக சிமிட்டி போட்டுக் கட்டி விட்டான். இரண்டு குடி சம்சாரியாகி விட்டான். இளையகுடி எருமைமாடு வைத்துக் கொண்டு பால் வியாபாரம் செய்கிறாள். தோட்டம் குத்தகை எடுத்திருக்கிறான். பத்துத் தென்னை இருக்கிறது. இந்தக் குடிசையும் அவனுடையதுதான். ஜோசப்பின் சிஸ்டர் இறந்து போய் மீனாவை இங்கே அவள் பத்து வயதுப் பெண்ணாகக் கூட்டி வந்த போது அவனுக்கு சாதாரணமாகத்தான் இருந்தது. அப்போது அந்த அநாதை விடுதியிலிருந்து பஞ்சைக் கோலமாக, ஒட்டி உலர்ந்த முகத்துடன் வந்த மீனா தான் இவள் என்று யாரே கூறுவர்? ஆயாவிடம் ஊட்டம் அளிக்கப்பாலும் தயிருமா பெருகியிருந்தது? தான் குடிக்கும் கஞ்சியைத் தான் அளித்தாள். இவளுடைய அன்பே அந்த ரசவாதத்தைச் செய்திருக்கிறது. ஒரு வருசம் கூடத் தடங்கலில்லாமல் படித்து முதன்மையாகத் தேறி வந்திருக்கிறாள். பத்தாவது படிக்கும் போது, பரீட்சைக்கு முன்பாக அம்மை போட்டு காய்ச்சல் வந்திருந்தது. முடியாமலே போயும் பரீட்சை எழுதி விட்டு வந்தாள். அப்படியும் நன்றாகத் தேறி இருந்தாள். இந்த முழுப் பேட்டையிலும் கல்லூரிக்குச் சென்று நான்காண்டுகள் படித்திருப்பவள் மீனா ஒருத்திதான். கண்ணாயிரத்துக்கு அவள் மீது மீனாவினால்தான் மிக மரியாதை. ‘பாப்பா படிக்கிறதா? பாப்பா இஸ்கூல் போயுடிச்சா? பாப்பா ஏன் அம்மாந்தொலவு போய் தண்ணிக்கு நிக்கிது? நம்ம கெணத்திலேந்து கொண்டிட்டுப் போகக் கூடாது?’ என்றெல்லாம் பரிவு விசாரணைகள் செய்வான். அவனுடைய அந்த ஆதரவின் பலத்தினால் தான் மீனாவின் மீது எந்தக் கயவனின் பார்வையும் விழவில்லை. பல சமயங்களிலும் அவளால் மாச வாடமையான பத்து ரூபாயைக் கொடுக்க முடியாமலிருந்திருக்கிறது. “அடுத்த மாசம் சேத்துக் குடித்திடறேன். பாப்பா கான்வெண்டில டியூஷன் எடுக்குது. எட்டாந்தேதி பணம் வரும்” என்று குறுகிக் கொண்டு ஒரு முறை சொல்லப் போனாள். “அது படிக்கிறபுள்ள. இப்பவே ஏன் சம்பாரிக்க வைக்கிற ஆயா? இந்த மாசம் இல்லென்னா அடுத்த மாசம் கொஞ்சம் சேத்துக்குடு. அதுக்கென்ன?” என்றான். நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படித்து முடிந்ததும் மேல் வருக்கப் பெண்களைப் போல் மீனா நூறு நூறாக ஆயிரமாகச் சம்பாதிக்கத் தொடங்கி விடுவாள். இந்த சூழலை விட்டு அவளைக் கொண்டு போய் விட வேண்டும் என்பது தான் ஆயாவின் நினைப்பு. ஆனால் அது எளிதாக இல்லை. மீனாவுக்கு எங்கும் அப்படி எளிதாக வேலை கிடைக்கவில்லை. கண்ணாயிரம் அந்தத் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினருக்குப் பரிச்சயமானவன்; வேண்டியவன். தேர்தல் என்றால் இவன் கொடி கட்டிப் பறப்பான். ஆனாலும் மீனா விஷயமாகச் சொல்லுகிறேன் என்று தான் கூறுகிறான். அததுக்கு நேரம் வரணுமில்லை? “மீனாவை நெல்லபடியாக் கொண்டு வர்ரது எம்பொறுப்பு. நீ ஏன் அதப்பத்திக் கவலப்படுற” என்று சொல்கிறான். கான்வென்ட் பள்ளியில் வேலை கொடுக்க இன்னும் இரண்டு வருஷம் படிக்க வேண்டுமாம்! அவளுக்கு எதுவும் புரியவில்லை. மீனா இன்னமும் ஆயாவுக்குப் பாரமாகப் படிக்க மாட்டேன் என்று தானாக இந்த வேலையை எப்படியோ தேடிக் கொண்டிருக்கிறாள். காலையில் இங்கிருந்து நடந்து சென்று மின் வண்டி நிலையம் சென்று, பிரயாணம் செய்து, பிறகு அங்கே இறங்கி மீண்டும் நடக்க வேண்டும். ஞானசாமி மிஷன் ஸ்கூல். குருபூசை என்று பண்ணுவார்கள். அப்போது அந்த சாமிஜி வந்திருக்கிறார். ஓமம் வளர்த்து அன்னதானமெல்லாம் பண்ணுகிறார்கள். சென்ற ஆண்டு ஆயா அதை எல்லாம் போய்ப் பார்த்தாள். சம்பளம் நூற்றைம்பது ரூபாய்தான் கொடுக்கிறார்கள் என்றாலும், மீனா, ஓர் உயர்ந்த படியில் மேல் வருக்கக் குழந்தைகளுடன் பழகுகிறாள் என்று ஆறுதல் ஆயாவுக்கு இருக்கிறது. வெயில் ஏறிவிட்டது. ஆயா இனி சீலையைத் துவைத்து உலர்த்தி விட்டுக் குளிக்க நீர் கொண்டு வர வேண்டும். தேவானையைத் தட்டி எழுப்புகிறாள். “எந்திரிடீ, அறுவு கெட்டவளே? பூக்கொண்டாந்து போட்டிருப்பால்ல, இந்நேரம்? நீதா பூவெடுக்கப் போகல கட்டிக்குடுத்தா நாலு காசு கையில் கிடைக்குமில்ல? எந்திரிச்சிப் போடி மூதேவி?...” தேவானை எழுந்து நடக்கிறாள். பூவெடுத்துக் கட்டி விற்பதுதான் அவளுக்குத் தெரிந்த தொழில். கைகள் மாய மந்திர ஜாலம் செய்வது போல் பூச்சரத்தை உருவாக்கும். இந்தப் பக்கம் முழுவதும் கோடம்பாக்கத்திலிருந்து ஒருத்தி பூவெடுக்க வந்து வாடிக்கை கொடுக்கக் குத்தகையாக்கிக் கொண்டிருக்கிறாள். ஐம்பது ரூபாய்ப் பூவைக் கொண்டு வந்து அம்காவின் வீட்டில் கொட்டுவாள். இந்த அசட்டுக்குக் கூலியைச் சரியாக வாங்கக் கூடத் தெரியாது. எல்லாவற்றுக்கும் ஏமாந்து நிற்கும் பிறவி. அவள் சென்ற பிறகு ஆயா வரிக்கம்பில் தொங்க விட்டிருக்கும் மீனாவின் சேலை, பாவாடை துணிகளை அழகாக மடித்து அட்டைப் பெட்டியில் வைக்கிறாள். பிறகு தன் சேலையைக் கசக்கிக் கொண்டு குளிக்கிறாள். சேலையைப் பிழிந்து உலர்த்திவிட்டு, வாளியுடன் நீருக்குச் செல்ல இருக்கையில் மாணிக்கம் எதிரே வருகிறான். |