1

     தையல் வகுப்பை முடித்துவிட்டு, தேவி பையும் குடையுமாகக் கிளம்புகிறாள். “போறீங்களா டீச்சர்? ஆண்டு விழாவுக்கு இருக்கல...?” சாரதாவின் கேள்விக்கு தேவி புன்னகையுடன் தலையாட்டுகிறாள்.

     “ஏன்?...”

     “இப்ப நாப்பத்தஞ்சைப் பிடிச்சால் நான் போய்ச் சேர ஒரு மணியாகும். வீட்டில் வேலைக்காரி வந்திடுவாள். டிஃபன் பண்ணணும்...”

     “அட ஒரு நாளைக்குத்தானே ஆண்டு விழா?...”

     “அதான் தினமும் உங்க ரிஹர்ஸலைப் பார்க்கிறேனே?”

     தேவி புன்னகையில் மழுப்பும் உண்மைக் காரணத்தைத் துருவும் வண்ணம் சாரதா பார்க்கிறாள். இதற்குள் முன்னறையில் குழந்தைகளுக்கு ஒப்பனை செய்து கொண்டிருக்கும் அருணா, பரபரப்பாகக் கையில் பவுடர் அப்பிய கோலத்துடன் வருகிறாள். “தேவி டீச்சர்! நீங்க இன்னிக்கு இல்லேன்னா எனக்கு ரொம்பக் கோபம் வரும்!”

     ராஜா, ராணி, வனதேவதை என்று அரைகுறை வேடங்களிலிருக்கும் குஞ்சுகளும் பிஞ்சுகளும் எட்டிப் பார்க்கின்றன.

     “என்னை என்ன பண்ணச் சொல்றே அருணா? பஸ் நின்னு நின்னு பழியா ஒரு மணியாறதே?”

     “ஆகட்டுமே? ஒரு நாள் பர்மிஷன் வாங்கி வரக் கூடாதா! என்ன ஆனாலும் இன்னிக்கு நீங்க போகக் கூடாது. எல்லா நிகழ்ச்சிகளும் முடிஞ்சு, முக்கியமாகக் குழந்தைகள் டிராமா நடந்து பிரைஸ் கொடுக்கும் வரையிலும் போகக் கூடாது?”

     அருணா அந்தப் பாரதி மாதர் சங்கத்தின் செயலாளர் என்று கூறினால் மட்டும் போதாது; அவள் தான் விசை. அந்தச் சங்கம் நடக்கும் இடம் அவர்களுடைய இல்லம் தான். தேவிக்குத் தெரிந்து அருணா திருமணமான புதிதில், இளம் மனைத் தலைவியாக அந்தச் சங்கத்தை உருவாக்கினாள். அந் நாட்களில் அடுத்த தெருவிலிருந்த தேவி, அந்தச் சங்கத்தின் தையல் வகுப்புக்களைத் தொடர, புதிதாக வந்தாள். அருணாவின் மூத்த பையன் இந்நாள் மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவன். தேவியின் கடைக்குட்டி நளினி அவனை விட ஓராண்டு மூத்தவள். எம்.எஸ்ஸி. முதல் வருஷம் படிக்கிறாள். சங்கத்தின் ஆண்டு விழாவும் வழக்கம் போல் அதே வீட்டின் மூன்றாம் மாடிக் கொட்டகையில்தான் நடக்கப் போகிறது. ஆண்டறிக்கை, தலைவர் உரை, கலை நிகழ்ச்சிகள், பரிசு வழங்கல் - பெண்களின் தாய்மைப் பொறுப்பு, குடும்பத்தின் நிலையான கௌரவம், மேன்மை, மாண்பு, வீட்டின் சிறப்பே நாட்டின் சிறப்பு என்றெல்லாம் பேசும் உரைகள்; புதிய பட்டுச் சேலைகளும் பூக்கொண்டைகளுமாகப் படம் எடுத்துக் கொண்டு, இனிப்பும் காரமுமாகச் சிற்றுண்டி அருந்தி, பரிசுகளும் வாங்கி அளித்துக் கொள்வார்கள். இது ஒரு பண்டிகை போன்ற நாள் தான். பெண்களுக்கே இயல்பான சில வேற்றுமைகளும், அரசல் பொரசலான கசமுசப்புக்களும் இந்த நாளைத் தொடர்ந்து தலைகாட்டுவதும் உண்டு. ஆனால் அருணா கெட்டிக்காரி. வசதியான குடும்பத்தில் உதித்தற்குரிய பெருந்தன்மையுடையவள். பழைமைப் பாங்கிலிருந்து வழுவ யோசனை செய்வாள். தேவி நான்காண்டுகளுக்கு முன் நகர எல்லையை விட்டு அப்பால் ஒரு அத்துவான ‘நகரில்’ குடி பெயர்ந்த பின்னரும், அவள் தான் தையல் வகுப்பைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி அவளை வாரம் மூன்று நாட்கள் பஸ் பயணம் மேற்கொள்ளச் செய்திருக்கிறாள். மாதம் பஸ் செலவு பதினைந்து ரூபாயானாலும் எழுபது ரூபாய் கைக்குக் கிடைக்கிறது. வீட்டில் வேறு தேவி செவ்வாய், வியாழன், சனி நாட்களில் வகுப்பு நடத்துகிறாள். மாதம் நூறைக் காண்பது கடினம். இவை தவிர அவள் தைத்துக் கொடுக்கிறாள். நகரின் நெருக்கடி மிகுந்த மையப் பகுதியில் குடியிருந்த நாட்களில் அவள் வீட்டில் வகுப்பு நடத்தினாலும் தைத்துக் கொடுப்பதைத்தான் முக்கியமாகக் கருதியிருந்தாள். இள நங்கையருக்கும் குழந்தைகளுக்கும் புதிய புதிய மாதிரிகளை ஆர்வமும் உற்சாகமுமாக உருவாக்கித் தந்திருக்கிறாள். கூலியை எந்நாளிலும் அவள் பேராசையுடன் கணித்ததில்லை. அதனாலேயே அந்த வட்டத்துப் பெண்கள் பெரும்பாலும் தேவி டீச்சரிடம் தைக்கக் கொடுப்பார்கள். பூத்தையல், சித்திரப் பின்னல் வேலை, மணிகள், கண்ணாடித் துண்டுகள் பொருத்தும் நகாசுகள், நாட்டிய நடனங்களுக்கான உடுப்புக்கள் எல்லாவற்றீலும் அவளுக்குப் பரிச்சயமுண்டு. கணவரின் வருவாய்க்கு மேல் ஊதியம் பெற வேண்டும் என்ற குறிக்கோளில் அவள் வீட்டிலிருந்த நிலையிலேயே இந்தக் கலையைப் பயின்றிருந்தாலும், அவளுடைய திறமையும், பயிற்சி அனுபவங்களும் வருவாய் மட்டுமின்றி, ஓரளவு புகழுக்கும் அவளை உரியவளாக்கி இருந்தன. ஆனாலும், அவள் இன்னமும் அந்தத் தனித்தன்மைகளைக் குடும்பம் என்ற அமைப்பின் ஆளுகையில் உருப்புரியாமல் கரைத்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

     அன்றைய நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் தலைமை தாங்கும் ரமணம்மாவை எல்லோருக்கும் தெரியும். நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றுச் சிறை சென்றவர். பெண்கள் மறுமலர்ச்சிக்காக முன்னின்று தொண்டு செய்பவர். முன்னால் சட்டமன்றத்திலும் பணியாற்றியவர். முடி நரைத்து, உடல் சுருங்கக் காட்சியளித்தாலும், அவருடைய கண்களில் ஒளி பளிச்சிடுகிறது. பச்சையில் சிறு கரையிட்ட வெள்ளைச் சேலை உடுத்திருக்கிறார். அவருடைய தோற்றத்திலேயே ஒரு மரியாதைக்குரிய கம்பீரம் இருக்கிறது.

     “நாற்பது வருஷங்களுக்கு முன்னர் இதே தெருவில் இவர் கொடியுடன் ஊர்வலம் போய் எங்க மாமியார் பார்த்திருக்கிறாராம். அப்ப, இவர் எப்படிப் பேசுவாராம் தெரியுமா? எங்க மாமனார் - எங்க மாமியார் இவரையெல்லாம் பார்க்கக் கூடக் கூடாதுன்னு கதவைச் சாத்தி வைப்பாராம்!” என்று அருணா அவரை அறிமுகம் செய்யும் போது கூறுகிறாள்.

     ரமணம்மா மெல்லப் புன்னகை செய்து கொள்கிறார்.

     “ஏன்?...”

     சாரதாவுக்குப் புரியவில்லை.

     “ஏனா? அந்தக் காலத்தில் பெண்கள் படியைக் கடந்தாலே நடத்தை கெட்டு விடுவாள் என்ற காரணம் தான்” என்று சகுந்தலா ஆத்திரத்துடன் அவளுக்குப் பதிலிறுக்கிறாள். “ஏனாம்? அந்நாளைய ஆம்பிளைங்க அவ்வளவு மோசமா?”

     வேதநாயகி ‘களுக்’கென்று சிரிக்கிறாள்.

     “அந்த நாளில் ஆண்பிள்ளைங்கதான் மோசமாயிருந்தாங்க. இந்த நாளில் பொம்பிளைங்களும் அப்படியிருக்கிறாங்க...”

     மங்களம் குப்புசாமியின் இந்தக் கருத்து உரத்த குரலிலேயே வருகிறது. வேடம் புனைந்த குழந்தைகள் சாயமும் பவுடரும் ஜிகினாத்தூளுமாக முகங்களைத் திரைக்குப் பின்னாலிருந்து நெருக்கியடித்துக் கொண்டு காட்டுகின்றன. முன் வரிசைகளில் அமர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியரின் பேச்சொலிகளும் சிரிப்புக்களும் ஒரு கலகலப்புப் போர்வையாக அந்த நாளின் விழா நிகழ்ச்சிகளை அணி செய்கின்றன. ‘வீடு’ என்ற பொறுப்பின் கடுமையையோ, கசப்பையோ முற்றிலும் மறக்கச் செய்துவிடும் சூழல் அது. ரமணி நடராஜன் மேசையைத் தட்டி, தன் உரத்த குரலை ஒலிபெருக்கியின் முன் சென்று முழக்குகிறாள்:

     “ஸைலன்ஸ்!”

     அவள் ஓர் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியை.

     பரிசுக்காக வாங்கியிருக்கும் பிளாஸ்டிக் கூடைகள், தட்டுக்கள், பைகள் போன்ற பொருள்கள் அனைத்தும் சீட்டுகள் துலங்கும் மேனிகளுடன் அரங்கத்துக்குப் பின்னே மேசையில் காட்சி தருகின்றன. “பாரதி மாதர் சங்கம்” என்ற எழுத்துக்கள் விளங்கும் முகப்பு சரியாகப் பொருந்தவில்லை. மேடையில் நிற்பவர் தலையில் இடிக்கிறது. இந்த அரங்கை ஒவ்வோர் ஆண்டு நிகழ்ச்சியின் போதும் சிறப்பாக அமைக்க வேண்டும் என்று தான் திட்டமிடுவார்கள்; என்றாலும் ஏதேனும் ஓர் குறை இருக்கும்.

     ரமணம்மா தலைமையுரைக்கு எழுந்து நிற்கையில் தேவிக்கு உறக்கம் வரும் போலிருக்கிறது. முதல் நாளிரவு அவள் பதினோரு மணி வரையிலும் தைத்துக் கொண்டிருந்தாள். பிறகு வெகு நேரம் வரையிலும் தூக்கம் வரவில்லை. கொசு வேறு பிய்த்தெடுத்தது. மேஜை விசிறி கால் பக்கம் இருந்தால் கொசுக்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டன. தலைப்பக்கம் இருந்தால் கால் - கைகளை இழுத்து மூடிக் கொள்ளாவிட்டால் கொண்டாட்டமாக வந்தன. முன்பெல்லாம் அவள் படுத்தால் உறங்கி விடுவாள். இந்நாட்களில் அவ்வாறு உறக்கம் வருவதில்லை. ஓர் சிறு முரணும் உறக்கத்தைப் பாதிக்கிறது. குபீரென்று உடலில் பூக்கும் ஓர் வெம்மையுணர்வு, அயர்ச்சி, பொருந்தாமை எல்லாம் மனதையும் அமைதியிழக்கச் செய்கின்றன. தேவி சட்டென்று நிமிர்ந்து ஆசுவாசம் செய்து கொள்கிறாள். எதற்கோ எல்லோரும் சிரிக்கிறார்கள். ரமணம்மா பேசுகிறார். மேசையின் மீது அவருக்குப் போட்ட அழகு நூல்மாலையும் பூச்செண்டும் இருக்கின்றன.

     அருணா மிகுந்த சூசக உணர்வுடன் குங்குமமணியாத ரமணம்மாவுக்கு ரோஜா, மல்லிகை மலர் மாலைகள் சரியல்ல என்று நூலினால் செய்யப் பெற்ற மாலையை வாங்கி வந்திருக்கிறாள். கைகளில் மட்டும் மலர்ச் செண்டை - அன்றலர்ந்த மலர்ச்செண்டைக் கொடுக்கலாம் போலும்!

     ரமணம்மா குழந்தை மணம் என்ற நிலையில் ஒரு மனைவியாகி, அதன் பொருள் புரியுமுன்பே கைமை நிலையடைந்தவர். அதற்குப் பின்னர் வீட்டின் நான்கு சுவர்கள், குடும்பம் என்ற அமைப்பு ஆகியவற்றின் வரையறைகளைக் கடந்து கல்வி கற்று சமுதாயப் பணி செய்ய வந்திருக்கிறார். ஒரு பெண்ணுக்கு சமுதாயம் கற்பிக்கும் நிலைகளைக் கடந்து ஓர் புதிய எல்லைக்குள் வந்து நிற்கும் இந்த மூதாட்டி, அருணாவும் மற்ற பெண்களும் இன்ன காரணத்தினால்தான் மலர் மாலையை அணிவித்துக் கௌரவிக்கவில்லை என்பதை உணருவாரோ? தேவிக்கு அவருடைய கருத்தையும் நிலையையும் அறிய வேண்டும் என்றோர் ஆசையும் சுவாரசியமும் தோன்றுகின்றன. அப்போது அவர் பேசுவதை அவள் கருத்தூன்றிச் செவிமடுக்கிறாள். “அந்தக் காலத்திலே, பெண்ணுக்கென்று ஓர் கூட்டையும் ஆணுக்கென்று ஓர் கூட்டையும் அமைத்திருந்தார்கள். அவரவர் பொறுப்புக்கென்று சில வரையறைகளும் இருந்தன. கருத்தூன்றி நுட்பமாகப் பார்த்தால் ஆண் தன் சட்ட திட்டங்களை மீறுவதற்குச் சுதந்திரம் வழங்கப் பெற்றிருந்தது புலப்படும். ஆனால், பெண்ணுக்கு அப்படியில்லை. அவள் எப்படியும் ஓர் புருஷனைச் சார்ந்தால்தான் கடைத்தேறலாம்; இல்லையேல் அவள் பிறவியே பயனற்றது, அதற்குப் பொருளே இல்லை என்று தான் வற்புறுத்தி வலியுறுத்தப் பெற்றது. இப்ப...”

     தேவிக்கு உப்பு உறைக்கும் பண்டத்தை ருசிப்பது போலிருக்கிறது. நிமிர்ந்து கொள்கிறாள்.

     “பெண்ணுக்குக் கல்வி கற்கும் உரிமை, பொருளாதார சுதந்திரம் இவை இன்று வந்துவிட்ட பிறகு, அவளுக்கென்று அன்றைக்கு அமைந்த கூடு பொருந்தவில்லை. பத்து வயது வளர்ச்சியடைந்த பெண்ணுக்கு மூன்று வயசில் தைத்த பாவாடை பொருந்துமா?”

     ஏதோ பெரிதாகப் புரிந்து கொண்டு விட்டாற் போன்று எல்லோரும் கை தட்டுகிறார்கள்.

     “ஆனால், குடும்பம் என்று அந்நாள் அமைத்த அமைப்பில், இவள் தன் வரையறைகளை மீறிக் கொண்டு வளர்ச்சி பெறும் போது, பல பிரச்னைகள் தோன்றுகின்றன. பெண்ணுக்குக் குடும்பம் முக்கியமா? அவள் பலதுறைக் கல்விகளிலும் ஈடுபட்டு வெளியே தனித்தன்மை தேடுவது முக்கியமா? அவள் குடும்ப அமைப்பை விட்டு வெளியேறுகையில் சமுதாயத்தின் ஆரோக்கிய அங்கங்களான குடும்பங்கள் பாதிக்கப் பெறாதா என்பதை எல்லாம் சிந்தனை செய்து பார்க்க வேண்டியிருக்கிறது. மாதர் உரிமைகள் என்பதை இன்றைய பெண்கள் பெருமாலும் தவறாகப் புரிந்து கொள்வதையே பார்க்கிறோம். குடும்ப வாழ்விலும், சமுதாய வாழ்விலும், ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் மதித்து, மரியாதை கொடுத்து, தோழமை உணர்வுடன் பங்கு கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் இணையும் போது ஒருவரை ஒருவர் எல்லா அம்சங்களிலும் புரிந்து கொண்டு குடும்ப வாழ்வு ஒருவரின்றி மற்றவரால் மட்டும் பூரணமாகாது என்றும், ஆனால் இருவரும் முழுதாகத் தனித்துவமுடையவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டால் தான் ஒருவரை மற்றவர் மதிக்க முடியும். பொதுவாகப் பெண்ணின் சிறப்பியல்பு, மக்களைப் பேணி அரவணைத்து அன்பு செய்யும் பாங்காக இருக்கிறது. எல்லாச் சிறுவர் பள்ளிகளும் ஆஸ்பத்திரிகளும் இத்தகைய பாங்குடைய பெண்களால் மேன்மை பெறட்டுமே? பொறுமையையும் திறமையையும் அடுப்படியிலும், தேவையற்ற அதிகார ஆணைக்கு ஒடுங்கும் வரையறைகளிலும் தான் விரயமாக்க வேண்டுமா? குடும்பத்தின் தனி வரையறைகள் மெல்ல மெல்லச் சமுதாயம் என்று அகலட்டுமே?...”

     அப்போது திடீரென்று ரமணம்மாவின் கண்களில் ஒளி முறுகித் திரியாகச் சுடரிடுவது போலிருக்கிறது.

     “வா... வா...!”

     கூட்டத்தில் எல்லோரும் திரும்பிப் பார்க்கின்றனர்.

     ஒரு இளம் பெண் மாடிப்படியேறி வரும் வாயிலிலிருந்து முன்னேறி வருகிறாள்.

     தேவியின் பிரக்ஞை வட்டத்தில் மத்தாப்பு ஒளிர்வது போன்றதொரு சுறுசுறுப்புத் தோன்றுகிறது. ஐந்தரையடி உயரமிருப்பாள். மேலுங்கூட இருக்கும். கூந்தல் கட்டையாக இருந்திருக்கலாம். ஆனால் பிடரியில் தொங்கும் நாகரிகத்துக்காக வெட்டப் பெற்றதாகக் கூடத் தெரியவில்லை. வீரனூரில் அவர்கள் வீட்டில் வாசல் தெளிக்கும் மாரி, சமயபுரம் ‘ஆயி’க்கு முடி கொடுத்துவிட்டு வருவாள். அவளும் நல்ல உயரம். பச்சைக்கோடு முன் உச்சி நெற்றியிலிருந்து மூக்கித் தண்டில் இறங்க, கருகருவென்று கட்டை கட்டையாக ஒழுங்கின்றித் தொப்பி போட்டாற் போல் மூடும் முடியுடன் அவள் காட்சி தருவாள். அந்த நினைவு வருகிறது. இவளும் மாநிறம். எடுப்பான நாசி - கூரிய அகன்ற விழிகள் - முகம் ஒருதரம் பார்த்தால் மறக்க முடியாது போலிருக்கிறது. மேலே வெளிர் நீலத்தில் மங்கிய சிறு நட்சத்திரப் பூக்கள் தெரியும் குர்த்தா; முழுக்கையுமின்றி அரைக்கையுமின்றி மணிக்கட்டுக்குச் சற்று முன்பே நின்று போகிறது. அவளுடைய உயரத்துக்கு, ‘பெல்ஸ்’ மிகப் பொருந்தி இருக்கிறது. ஒரு கையில் கடியாரம் மட்டுமே அணி. செருப்பைக் கொட்டகை ஓரம் கழற்றி வைத்துவிட்டு முன்னேறி வருகிறாள். செவிகளில் ஒரு திருகாணி கூட இல்லை. அவள் முன்னேறிச் சென்று, துளசிபாய் மேடையில் போடும் ஓர் நாற்காலியில், ரமணம்மாவின் அருகில் அமர்ந்து கொள்கிறாள்.

     “இவள் - குமாரி ரஞ்ஜனி. நான் முதிய தலைமுறை புரட்சிக்காரி என்றால், இவள் இளைய தலைமுறை புரட்சிக்காரி!” ரமணம்மா புன்னகையுடன் அறிமுகம் செய்து வைக்கையில் கலகலப்பு உண்டாகிறது.

     தேவி அவளையே நோக்குகையில் அதற்குமுன் அவளை எங்கோ பார்த்தாற் போன்றிருக்கிறது. மிகவும் பரிச்சயமான முகமாகத் தோன்றுகிறது. தேவி இந்த இருபதாண்டு தையல் வாழ்க்கையில் நிறையப் பெண்களைப் பார்த்திருக்கிறாள். எத்தனையோ குழந்தைகளுக்கு அளவெடுத்து உடை தைத்திருக்கிறாள். இந்தக் குர்த்தா காஷ்மீர பாணியோ? ஆனால் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. இதில் ஓர் கம்பீரமும் தன்னடக்கமும் கூட மிளிர்கிறதாகத் தோன்றுகிறது. இரண்டு மீட்டர் குறுக்களவைக் காலுக்கு அளவாக வைத்துக் கொண்டு தொள தொளவென்ற யானைக்காலும், மேலே தையல் பிரியத் தெறித்து விடும் இறுக்கமுமாகப் பளீரென்ற வண்ணத்தில் சோளியுமாகப் பரட்டைத் தலையுடன் விளங்கும் சில நாகரிங்களை அவள் அருவருப்புடன் பார்ப்பதுண்டு. உடை ஒரு பெண்ணின் ஆளுமையுடன் தொடர்பு கொண்டுதானிருக்கிறது. சேலையின் அணி - முறைகள், சோளிகள் கூட உடல் - மன விகாரங்களைப் பிரதிபலிக்கின்றன அல்லவோ?...

     இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்தவளாக வைத்த கண் வாங்காமல் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்கையில், அவள் தோளை யாரோ தொடுகிறார்கள். தேவி திடுக்கிட்டுப் பார்க்கிறாள். செல்லம் கோபாலன்... “தேவி டீச்சர்! உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு.”

     “ஃபோனா?”

     ஒரு பதற்றம். திடீரென்று ஓர் இறுக்கம் வெளிப்பட்டு வெம்மைத் துளிகள் பூக்கும் அயர்வு. ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் குடிக்க வேண்டும் போன்ற அடித்தொண்டை வறண்டு போகிறது.

     அவள் கீழே இறங்கிச் செல்கிறாள். தொலைபேசி - கீழ்த் தளத்தில், மாடிப்படி வளைவில் இருக்கிறது. அருணாவின் கணவருக்குத் துறைமுகத்தைச் சார்ந்த கம்பெனி ஒன்றில் பெரிய பதவியில் வேலை. அவருடைய பதவிக்கான ஃபோன் மட்டுமில்லை. அவளுடைய மாமனார்... இந்தப் புரட்சிக்காரியை மனைவி பார்க்கக் கூடாதென்று கதவைச் சாத்தி விடுவார்!

     தொலைபேசி மல்லாந்து கிடக்கும் கறுப்பு நாய்க்குட்டி போலிருக்கிறது. ஆனால் உயிருள்ள நாய்க்குட்டி இப்படி அசைவற்று மல்லாந்து கிடக்காது. சட்...! என்ன இதெல்லாம்? நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு அவள் அந்த வாங்கியைச் செவியில் வைத்துக் கொள்கிறாள். குரல் பதறுகிறது:

     “ஹ...லோ ஓ...?”

     சிறிது நேரம் சூனியம். மீண்டும் குரல் கொடுக்கிறாள் “ஹலோ...?”

     “யாரு?... இஸ் இட் பாரதி சங்கம்?...” “ஆமாம். நாந்தான் தேவி பேசுறேன். இன்னிக்கு இங்கே ஆண்டு விழா. நான் முதலியேயே கிளம்பினேன். அருணாதான் போகக் கூடாதுன்னு நிறுத்திவச்சிட்டா...” அவள் பேசிக் கொண்டே போகிறாள். கண்ணுக்குப் புலப்படாத இழை போல் துடிக்கும் குரலை அவர் புரிந்து கொள்வாரா?

     மறுமுனையில் கடுகடுப்பு வெடிக்கிறது. “நேரம் இருட்டிப் போனல் தனியாக வருவாயா? டெஃபனட்டா ஒரு தீர்மானமில்லாத நீ பாட்டில போய் உட்கார்ந்தால் என்ன அர்த்தம்? மணி இப்போதே அஞ்சே முக்கால். நான் வரச்சே கேட் திறந்து கிடக்கிறது. ஆடும் மாடுமா செடியெல்லாம் மொட்டை பண்ணிருக்கு. சாவி வாங்கித் திறந்து பார்த்தால் நீ ஒரு சீட்டுக் கூட வைக்கல. வேலைக்காரி வந்துட்டு வேலை செய்யாம போயிருக்கிறா. பால்காரி மட்டும் இப்ப கொண்டு வந்து ஒரு தண்ணியை ஊத்திட்டுப் போனா. சரி, சரி, புறப்பட்டு, இருட்டுறதுக்கு முன்ன வந்து சேரு.”

     அவளுடைய பதிலைக் கேட்கப் பொறுமை இல்லை. தொடர்பைத் துண்டித்து விட்டார்.

     தேவிக்குச் சிறிது நேரம் எதுவும் தோன்றவில்லை. மண்டைக்குள் ‘ஆணுக்கென்றொரு கூட்டையும், பெண்ணுக்கென்றொரு கூட்டையும்’ என்ற சொற்கள் முட்டி மோதிக் கொள்கின்றன. வாங்கியை அதன் இடத்தில் வைக்கிறாள். பத்து நாட்கள் காய்ச்சலடித்துக் கிடந்தாற் போன்று அயர்வு தோன்றுகிறது. படி ஏறி வருவதே கஷ்டமாக இருக்கிறது. இன்னமும் ரமணம்மாதான் பேசிக் கொண்டிருக்கிறார். “சமூகத் தராசுத் தட்டில் இவ்வளவுக்கு மேம்பாடுகளை வைத்தும் பெண்ணின் மதிப்பு உயர்ந்திருக்கிறதா? இல்லை. முன்பெல்லாம் பெண்ணுடைய உடல் மதிப்பு ஒன்றுதான். அதை அடிமையாக்கினார்கள். இப்போது, அவள் கல்வி அறிவு பெற்ற பின்னர், பொருளாதார ரீதியாகத் தன்னைத் தான் உயர்த்திக் கொண்ட பின்னர், ஒட்டு மொத்தமாக அடிமையாகிறாள். அதுமட்டுமில்லாமல் அந்த எடைக்குச் சரியாக வாழ்வை வாங்கிக் கொடுக்க, அடிமைப்படுத்த இன்னமும் பொருளைத் தேட வேண்டியிருக்கிறது. இதுவா மேம்பாடு, முன்னேற்றம்...?”

     தேவிக்கு இருந்து கேட்க வேண்டுமென்ற ஆர்வம் உந்தித் தள்ளுகிறது. ஆனால்...

     அவள் கீறிய கோட்டைத் தாண்டி வழக்கமேயில்லாதவள். நாற்பத்தைந்து பஸ்ஸில் ஏறிச் சென்று பழகினால். அதே வழியாகச் சென்றாலும் முப்பத்தாறில் கூட ஏறமாட்டாள். நூல் பிடித்த வரையறை போன்று கண்களுக்குப் புலப்படாத கட்டுப்பாட்டைத் தானே விதித்துக் கொண்டு இயங்கிய பழக்கம்.

     அன்று ஆண்டு விழா என்பது அவருக்குத் தெரியாததல்ல. அவள் காலையில் உணவு பரிமாறும் போது கூட மெதுவாக அதைச் சொன்னாள்: “நான் கிளாசை முடிச்சிட்டு வந்துடுவேன்... ஆனால் அருணா என்ன சொல்வாளோ?”

     “அதற்கென்ன, இருந்து விட்டு வாயேன்? ஒருநாள் சமாளித்துக் கொண்டால் போச்சு. நளினி காலேஜிலிருந்து ஆறு மணிக்கு வந்து விடுவாள்” என்று அவர் சொல்லக் கூடாதா?

     அந்த மாதிரியான இணக்கமோ, ஆதரவோ அவரிடம் எதிர்பார்ப்பது கூடத் தவறு என்று உரைக்கும்படியான பாவம் முகத்தில் பளிச்சிடும். “எனக்கென்னமோ, நீ இரண்டு மணி நேரம் பஸ்ஸில் லொட லொடன்னு போய் வருவது பிடிக்கல. நான் சொல்லக் கூடாதுன்னு இருக்கேன்” என்றார்.

     “மாசம் எழுபது எழுபத்தைந்து ரூபாய், பாலுக்கேனும் ஆகிறதேன்னு பார்க்கிறேன். நீங்க...”

     அதைச் சொல்லாமல் அவர் முகத்தைப் பார்த்தே விழுங்கிக் கொண்டாள். சென்ற மாதத்திலிருந்து உத்தியோக ஓய்வு பெற்று விட்டார். இந்த மாதமே சம்பளம் வரவில்லை. பென்ஷன் கணிக்கப் பெற்று ஒழுங்காக வர எத்தனை மாதங்களாகுமோ? கிராஜ்சுவிட்டி பணம் வந்து வீட்டின் மேலுள்ள கடனை அடைக்க வேண்டும்; பெரியவள் கல்யாணத்திலேயே சேமிப்புக்கள் வறண்டு விட்டன. நளினிக்கு இந்த வருஷத்துக்குப் பிறகு இன்னொரு வருஷம் இருக்கிறது. எம்.எஸ்ஸி. கணிதம் ஆர்வமாக எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளால் புரிந்து கொள்ள இயலாத வகையில் பெரிய பெரிய புத்தகங்களை வைத்துக் கொண்டு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கையில் தேவிக்குப் பெருமை பொங்குகிறது. அவள் நிச்சயம் முதல் வகுப்பு வாங்காமல் இருக்க மாட்டாள். உடனே, கல்லூரி விரிவுரையாளராகவோ, பாங்கியிலோ வேலையும் கிடைத்து விடும். இப்போதுதான் வயது இருபது முடிந்திருக்கிறது. மூன்று வருஷமேனும் வேலை செய்யட்டுமே? பணம் பணம் என்று பிடுங்காத பையனாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும்...

     ரமணம்மாவும் பெண்ணினத்திற்கே சாபக் கேடான அந்த மூடத்தனமான கொடிய பழக்கங்களைத்தான் சாடுகிறாள். தேவிக்கு அமர்ந்திருக்கவும் இருப்புக் கொள்ளவில்லை. சரேலென்று விளக்குகள் மங்கி அணைகின்றன. ஒலிபெருக்கி இல்லாததால் ரமணம்மாவின் நைந்த இழைக்குரல் அங்கு எழுந்த கலவர ஒலியில் முழுகிப் போகிறது. அப்போது ‘வீல்’ என ஒரு ஓல ஒலி... மேடைப் பக்கமிருந்து தான் வருகிறது. என்ன, என்ன என்று எல்லோரும் ஓடுவதும் முட்டி மோதிக் கொள்வதுமாக அந்தக் கூரைக் கொட்டகை கலவரமடைகிறது. கீழே அருணாவும் மற்றவரும் தடதடவென்று ஓடுகின்றனர். “இதுவே ஆண் பிள்ளைகள் கூடியிருந்தால் நெருப்புக்குச்சி இருக்கும்” என்று யாரோ ஒருத்தி சமய சந்தர்ப்பம் தெரியாமல் ஹாஸ்யம் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாள்.

     சில நிமிடங்களில் டார்ச், அரிக்கேன் வருகின்றன. பெட்ரோமாக்ஸுக்கு ஓடுகின்றனர். “ஒண்ணுமில்ல, தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் அடியுங்கள். எல்லாரும் விலகிப் போங்களேன்...”

     “யாரு? யாரு?” என்ற குரல்கள் செவிகளில் விழுகின்றன. சுமார் இருநூறு பேர் குழுமியுள்ள அந்தச் சிறு கூட்டத்தில் முன்னேறி தேவி முன்னே செல்கிறாள். நாற்காலிகளை விலக்கியிருக்கின்றனர். ரமணி நடராஜன் புடைவைத் தலைப்பால் விசிறுகிறாள். பெல்ஸ் குர்த்தா அணிந்த அந்தப் பெண் மயக்கமாக விழுந்திருக்கிறாள். தன் கண்களையே தேவியினால் நம்ப முடியவில்லை. இளம் புரட்சிக்காரி! புரட்சிக்காரியா இவள்? அந்த முகம். சற்று முன் ‘தன்னம்பிக்கையும் உறுதியும்’ என்று அறிவுறுத்தினாற் போன்று, தோன்றிய முகம், சூறாவளியில் அகப்பட்டுத் துவண்ட மலரை நினைப்பூட்டுகிறது. ‘கம்பீரமும் தன்னடக்கமும்’ என்று அவளுக்குத் தோன்றிய பண்புகள் உண்மையில் காயம் பட்டதோர் ஆளுமையின் எதிரொலிகளோ என்று நினைக்கச் செய்கிறது.

     “கொஞ்சம் எல்லாரும் அமைதியாக இருங்கள். ஒன்றுமில்லை...” என்று ரமணம்மா கையமர்த்துகிறார்.

     “காலில் ஏதோ குத்தியிருக்குமோ, கடித்திருக்குமோ? வீல்னு கத்தினாள். இல்லே?”

     “அதான் ஆச்சரியமாயிருக்கு, கூரைக் கொட்டகை, எதானும் பூச்சி பொட்டு வந்திருக்குமோன்னு பயமாயிருக்கு!”

     “விளக்கு பாரு, இப்பன்னு பாத்துப் போயிட்டுது?”

     “என்னமோ கண் பட்டாப்பல இருக்கு. இப்படி ஒரு தடவை கூட நேர்ந்ததில்ல. நல்லபடியாகட்டும். நம்ம சங்கத்தின் பேரில் கோவிலில் ஒரு அர்ச்சனை செய்யணும்?”

     “ரமணம்மாக்கு உறவா இந்தப் பொண்ணு?”

     “தெரியல. ‘லா’ படிச்சிட்டிருக்காளோ, முடிச்சிட்டாளோன்னு சொன்னாங்க. ஆனால் ரொம்பப் பிரமாதமாப் பேசுவ. போன வருஷம் வேதா காலேஜில் யூத் ஃபோரம் மீட்டிங்கில் பேசினாள்; கேட்டேன். இங்கிலீஷ், தமிழ், ரெண்டும் அவ்வளவு அற்புதமாப் பேசும்...”

     “ஓ புரியறது. ஆமாமாம். போன வருஷமங்கே ஃபன் ஃபேர்ல, விளக்கை அணைச்சிட்டு சில காலிப்பசங்க அட்டகாசம் பண்ணித்துங்களே? தெரியாதா?... பத்திரிகையில் கூட ‘வேதா கல்லூரியில் நடந்தது என்ன?’ன்னு கேட்டிருந்ததே?...”

     அடங்கிய குரலில் ருக்மணி விள்ளுகிறாள்.

     தேவிக்குச் சில்லென்று குளிர் திரி ஓடினாற் போன்று உடல் குலுங்குகிறது. நளினி அந்தக் கல்லூரியில் படிக்கவில்லை. ஆனால் பெண்கள் கல்லூரிக் களிச்சந்தையில் காலிக் கும்பல் புகுந்து அட்டகாசம் செய்ததையும், கல்லூரிக்குக் கெட்ட பெயர் வந்து விடுமென்று அது அமுக்கப்பட்டதையும் நளினி சொல்லிருக்கிறாள். “இதுங்களுக்கு நல்லா வேணும்! இதெல்லாம் கூட ஃபன்!” என்று நளினி அதைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்களைக் கடிந்து கொண்டாள். தன் மகள் வரையறை தாண்டாதவள் என்ற மகிழ்ச்சியும் கூட தேவிக்கு அப்போது தோன்றியது. அவளுக்குச் சேலை தவிர மாற்று நாகரிக உடைகள் கூடப் பிடிக்காது. மூக்குக் குத்திக் கொண்டு, இப்போதே குடும்பப் பெண்ணாகத்தான் காட்சி தருகிறாள். ஆனால் இந்தப் பெண்... நிசமாகவே எதானும் பூச்சி கடித்திருக்குமோ? இவளுடைய உடையும், நடையும் எந்த விகற்பத்தையும் தோற்றுவிக்கவில்லையே? விளக்கு வரவில்லை. பெட்ரோமாக்ஸ் ஒன்றைக் கொளுத்திக் கொண்டு வருகிறார்கள். பெரிய மொட்டைமாடி. ஓர் பெஞ்சியை அங்கே இழுத்துப் போட்டு, அவளைப் படுக்க வைக்கின்றனர். முகத்தில் தண்ணீர் தெளித்தும், வாயில் சர்க்கரை நிரம்பிய ஸ்பூனை நுழைத்தும் அவர்கள் சிகிச்சை செய்கையில் அந்தப் பெண் கண் விழிக்கிறாள்.

     “ஒன்றுமில்லை. சரியாகப் போயிடும். காஃபி எதானும் வேணாக் கொடுங்க...”

     அம்புஜம் - ஹெல்த் விசிட்டர் கூட்டத்துக்கு வந்திருப்பது இப்போதுதான் புரிகிறது. ஃபிளாஸ்கில் காபியுடன் ரமணி நடராஜன் பக்கத்திலேயே நிற்கிறாள். அந்தப் பெண் சரேலென்று எழுந்து உட்கார்ந்து வெட்கத்துடன் பார்க்கிறாள். கழுத்து வேர்வையைத் துடைத்துக் கொள்கிறாள். யாரோ கைக்குட்டை கொடுக்கின்றனர்.

     தேவிக்கு எல்லாம் கனவில் நிகழ்வது போலிருக்கிறது. உண்மை என்று நம்ப முடியவில்லை. அருணா நிலைமையைச் சமாளிக்கிறான்.

     “கீழே வந்து அவள் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் மேடம், நாம் நிகழ்ச்சியைத் தொடரலாம். இன்னொரு பெட்ரோமாக்ஸுக்குச் சொல்லியிருக்கிறேன்...”

     “ஓ, நோ, எனக்கு ஒண்ணுமில்லை. நீங்க... நீங்க ஆரம்பியுங்கள்...” என்று ரஞ்ஜனி தலையை ஆட்டுகிறாள்.

     இந்தக் கட்டத்தில் விளக்குகள் பளிச்சென்று வந்து விடுகின்றன.

     தேவி கைக்கடியாரத்தைப் பார்க்கிறான். மணி ஏழேகால். அருணாவிடம் சொல்லிக் கொள்ளக் கூட நேரமில்லை. அவள் விடவும் மாட்டாள். எனவே தேவி நின்ற இடத்திலிருந்தே மெள்ள நழுவுகிறாள். மணி ஏழேகால். பஸ் கிடைத்து அவள் வீட்டை அடைய எட்டரையாகிவிடும்.

     அந்தப் பெண் மயங்கி விழுந்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. வீட்டை அடையும் வரை அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறாள்.



வீடு : 1 2