3

     அவள், அருகில் புன்னகை மலர வருகையில் உடல் சிலிர்க்கிறது. முதல் நாள் அவளுக்குப் புலப்படாததோர் உண்மையை அந்த வடிவில் காண்கிறாள். பருவத்தின் வீச்சான வாளிப்பில் களங்கமற்ற குழந்தையின் பேதைமை மறையவில்லை. இன்றைய கட்டம் போட்ட மேல் சட்டை இடை வளைவை இலேசாகக் காட்டுகிறது. ஒரு தையற்காரி என்ற நிலையில் தேவி உடலமைப்பின் அழகு நிலைகளையும், அழகற்ற வடிவங்களையும் பார்வையின் கோணமாகவே கண்டு பழகி விட்டதனாலோ என்னவோ, மீண்டும் அந்த உடை அவளுக்குப் பொருந்தியிருப்பதாகவே நினைக்கிறாள்.

     கதவுத் தாழை தேவியே வந்து விலக்குகிறாள்.

     “வாம்மா!”

     “குட்மார்னிங் ஆன்ட்டி...”

     பற்கள் முல்லைச்சரம் கோத்தாற் போலிருக்கின்றன.

     நினைவுத் திரையில் பொறிகள் பளிச்சிட உராய்கின்றன. எங்கோ பார்த்துப் பழகினாற் போன்ற ஜாடை. நேற்றுத் தான் முதல் நாளாகப் பார்த்த நினைவில்லை. தன்னிடம் தையல் கற்றுக் கொண்ட பெண்களில் ஒருத்தியின் மகளாக இருப்பாளோ? எத்தனையோ தாயார், தம் குழந்தைகளுக்கு அழகிய பல மாதிரிகளில் உடைகள் தைத்துப் போட்டுப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் அவளை அணுகியிருக்கின்றனர். அவ்வாறு ஒரு ராணுவ தளபதியின் மனைவி, மீனா என்று பெயர். அவள் குழந்தை அஞ்சலா... தீர்க்கமான இத்தகைய வடிவழகு கொண்டவள். கொழுவிய கன்னங்கள் - இதழ்கள் மென்மையாக இருந்தாலும் மோவாயின் அமைப்பும் உயர்ந்த கழுத்தும் ஓர் அழுத்தமான பான்மையையே மனதுக்கு அறிவுறுத்துகின்றன. வத்சலாவின் தமையன் மகள் பேபியோ? அவள் தான் ரஞ்ஜனியோ?

     “நீங்கள் நேத்து கூட்டம் முடியுமுன்பே போய்விட்டீங்கல்ல? ரமணம்மா கூடக் கேட்டாங்க. பிறகு தான் அருணா சொன்னார், வீடு ரொம்ப தொலைவிலிருக்குன்னு நீங்க போய்விட்டதாக, நான் முக்கியமா உங்களைப் பார்த்து சிநேகம் பண்ணிக்கணும்னுதான் வந்தேன். மெட்றாஸுக்கு நான் வந்து மூணு வருஷமாயும் இப்பத்தான் நீங்க இங்கே இருப்பது தெரிஞ்சது. நான் யார்னு - என்னை எப்படியானும் அடையாளம் புரிஞ்சுக்க முடியுதா ஆன்ட்டி?”

     தேவி திகைத்து நிற்கிறாள்.

     “ஆன்ட்டி? உங்க பேர் ஸ்ரீதேவி தானே?”

     தூக்கி வாரிப் போடுகிறது. சுதாரித்துக் கொள்கிறாள். “உள்ளே வாம்மா, வெளியிலேயே நிற்கிறியே?”

     தையல் அறைக்குத்தான் அழைத்துச் செல்கிறாள். குளிர்ந்த சிவப்புச் சிமிட்டித் தரையில் பாயை விட்டு விலகியே உட்காருகிறாள்.

     “ஸ்ரீதேவிங்கற பேருக்கும் உங்களுக்கும் ரொம்பப் பொருத்தமாகத் தெரிகிறது ஆன்ட்டி... உங்களை நான் ஆன்ட்டின்னு கூப்பிடலாம் இல்லையா?”

     “கூப்பிடேன்...” அவளுடைய புன்னகை இன்னும் அவளை இனம் கண்டு கொள்ளாததையே விளக்குகிறது.

     ஸ்ரீதேவி என்ற முழுப் பெயரைத் திருமணமாய் வந்த நாளிலிருந்து அவள் புகுந்த உலகில் அறிந்தவர் யாருமில்லை என்றே சொல்லலாம். அவள் ஆடி வெள்ளிக்கிழமையன்று பிறந்தாளென்று அம்மா அருமையாக ஸ்ரீதேவி என்று பெயரிட்டாளாம். அடுத்த இரண்டாம் ஆண்டில் மறுபடியும் ஆடி வெள்ளியில் பிறந்த பெண்ணுக்கு பூதேவி என்று பெயரிட்டாள். அவளைப் பெரியண்ணா விசுவம் மூதேவி என்று தான் கூப்பிடுவான். ஏனென்றால் அவள் பிறந்த வருஷத்தில் அவனுக்குப் பரீட்சை தவறியது மட்டுமில்லாமல், ஓடும் ரயிலைப் பிடித்துக் காலை முறித்துக் கொண்டான். அவளைப் பூதேவி என்று யாருமே அழைக்கவில்லை. மூதேவி என்று தான் அழைத்தார்களாம். அதனால் அம்மாவே அவளுக்கு விவரம் புரியும் வயதிலேயே சாந்தி என்று பெயரை மாற்றி விட்டாள்.

     இப்போது ஸ்ரீதேவி என்ற இந்தப் பெயரைச் சொல்லிக் கொண்டு உறவாடும் இவள்...

     “ஆ...! ஏம்மா? நீ திரிவேணி பெண்ணா?”

     அவள் முகம் ஒளிருகிறது. “எக்ஸாக்ட்லி. ஆமாம் ஆன்ட்டி. அம்மாவும் நீங்களும் ஒண்ணா ஸ்கூல்ல படிச்சீங்களாம்! சரிதானே? இதோ பாருங்க...” பைக்குள் கை விட்டு, ஒரு பழைய புகைப்படத்தை அவள் முன் நீட்டுகிறாள் ரஞ்ஜனி.

     தேவி ஆர்வமும் ஆவலுமாய் அந்தப் படத்தைப் பார்க்கிறாள்.

     “இதில் அம்மாவுடன் நீங்க தானே நிக்கிறீங்க?”

     “ஆமாம்...” கண்களில் நீர் மல்குகிறது. பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் அவளுடன் திருச்சியில் ஒரு சினிமா பார்க்கப் போய்விட்டு - ‘அம்பிகாபதி’ - இருவரும் ஸ்டூடியோவுக்குச் சென்று அந்தப் படம் பிடித்துக் கொண்டார்கள். வீடு திரும்பியதும் அண்ணா அடித்தான்; அப்பா உறுமினார்; அம்மா கத்தினாள்.

     “வயசு வந்த பெண், அந்தத் தறுதலையோடு வீட்டுக்குச் சொல்லாமல் சினிமாக்குப் போவியா? ஏண்டி? நாளைக்கு ஒருத்தன் கட்டிண்டு போகணும்னு நினைக்கிறியா, தெருவிலேயே திண்டாடணும்னு நினைப்பா? ஓடுகாலி! வெட்கம் கெட்டது!...”

     நாவால் உச்சரிக்க முடியாத சொற்களுடன் அவளை மாற்றி மாற்றித் தாக்கினார்கள். திரிவேணி படத்தை எடுத்துக் கொண்டு அவளைத் தேடி வீட்டுக்கு வந்த போது, “கண்ட கழிசடை எல்லாம் படி ஏறி வருதுங்க. எங்கேடி வந்தே?...” என்று வாசல் திண்ணையில் அவனைப் போன்ற விடலைகளுடன் உட்கார்ந்திருந்த விசுவம் விரட்டி விட்டான். திரிவேணி பிறகு அவள் கல்யாணத்திற்குக் கூட வரவில்லை. தங்கை சொர்ணாதான் வந்தாள். அவள் மாமாவுடன் பம்பாய்க்குப் போய்விட்டதாகச் சொன்னாள்.

     அந்தப் புகைப்படத்தில் அவள் ஒல்லியாக, உயரமாக, கஃப் கை வைத்த நீல பாப்ளின் ரவிக்கை அணிந்து அம்மாவின் ஸ்பன்பட்டுச் சேலை, ஒன்பது கஜத்தை மடித்துச் சுற்றி உடுத்திருக்கிறாள். அவளுடைய கூந்தலில் நெளி வளைவே கிடையாது. அந்த நாட்களில் தளர்த்தியாகப் பின்னல் கூடப் போட்டுக் கொள்ள முடியாது. செவிகளில் வெள்ளைக் கல் தோடுகள். இரண்டு மூக்கிலும் மூக்குத்துகள். ஒன்று முக்கட்டி; மற்றொன்று ஒற்றை. தோட்டுக்கல் ஒன்றில் எண்ணெய் இறங்கி இருந்தது. இந்தக் கர்நாடகக் கோலத்துக்கு நேர் எதிர்மாறாகத் திரிவேணி விளங்குகிறாள். ரஞ்ஜனி அவளுடைய மறு வார்ப்புத்தான். தேவியும் திரிவேணியும் சமமான உயரமுடையவர்கள். தேவி நல்ல சிவப்பு. அவள் மாநிறம். முடி வளைவுச் சுருளாய் அலையலையாக இருக்கும். கோணல் வகிடெடுத்துப் பின்கழுத்தில் புரள, அரைச்சாணுக்கு நான்கு வரிதான் கால் போட்டுப் பின்னியிருப்பாள். மீதி முடியை பம்மென்று நுனியில் விட்டு விடுவாள். அது பிரியாது. மஸ்லின் போன்று நேர்த்தியான வெண்மையில் பம்பாய் மில் சேலை உடுத்து, மிகவும் குட்டையான கை வைத்த ஜம்பர் அணிந்திருக்கிறாள். மூக்குக் குத்திக் கொள்ளவே இல்லை. செவிகளில் சிறு நட்சத்திரத் திருகு தவிர வேறு நகைகளே கிடையாது. தேவியின் கழுத்தில் பொற் சங்கிலி இல்லையெனினும், அந்த மண் பவழ மாலையைக் கழற்றி விட்டால் தாயும் பாட்டியும் கொள்ளை போனாற் போல் கத்துவார்கள். அந்தக் காலத்தில் திரிவேணியின் நாகரிக சுதந்தரத்தை எண்ணி எண்ணி தேவி பொறாமை கூடப் பட்டதுண்டு. அவளுக்கும் தாய், பாட்டி, சித்தி என்று முதியவர்கள் இருந்தார்கள். திரிவேணியின் குடும்பம் - அவளுடைய தாய், தங்கை சுவர்ணா, தம்பி விட்டல் ஆகியோர் இரண்டாம் உலகப் போர் மும்முரமான போது, ரங்கூனிலிருந்து வந்தார்கள். கடைத்தெரு முனையில் ஒரு பெரிய மனைக்கட்டில் திரிவேணியின் தாத்தா ஒரு சிறு காபி ஓட்டல் தான் நடத்திக் கொண்டிருந்தார். இவர்கள் வந்த பிறகு, அதைப் பெரிதாகக் கட்டி, வியாபாரத்தைப் பெருக்கி விட்டனர். திரிவேணியின் தாய் குமுதம், ஆறு கஜம் கிரேப் ஸில்க் சேலையும், வயிரத்தோடும் வட்டக் கொண்டைப் பூவும், பவுடர் பூச்சும் மெல்லிய வெற்றிலைச் சிவப்பு இதழ்களுமாகக் கோயிலுக்கு வருவாள். திரிவேணியின் தந்தை ரங்கூனிலேயே தங்கி விட்டதாகப் பேசிக் கொள்வார்கள். பொதுவாக நல்லதல்லாததோர் கருத்து அவள் தாயைப் பற்றி நிலவி வந்தது. அதனாலேயே அவள் திரிவேணியுடன் சிநேகம் கொண்டாடுவதற்கு அவள் தாயும் பாட்டியும் தடுத்துக் கண்டித்தார்கள்.

     “வெள்ளைப் புடவையும் மொட்டைக் கையும் கழுத்தும் சகிக்கல! நல்ல குடும்பத்துப் பேரைக் கெடுக்கப் போறே, அவளோட சேர்ந்து!” என்பார்கள்.

     ஆனால், திரிவேணிக்குத் தேவியிடம் தான் ஒட்டுதல் அதிகம். ஆண் பிள்ளைகள் படித்த அந்தப் பள்ளியில் அவர்கள் வகுப்பில் நான்கு பெண்கள் இருந்தாலும் தேவியும் திரிவேணியும் தான் இணைபிரியாத் தோழிகள். தேவிக்கு வாயைத் திறக்கவே அச்சம். அவளோ, பள்ளிப் பேச்சுப் போட்டிப் பரிசுகளை அநாயாசமாகத் தட்டிக் கொண்டு போவாள். அந்தக் காலத்திலேயே அவளுக்குப் புரியாத அரசியல் விஷயங்களைப் பேசுவாள். பாரதியார் பாட்டுக்களை அவள் உற்சாகத்துடன் கற்றுக் கொண்டாள்.

     “பெண் என்ன அடிமையா? எந்த வீட்டிலானும் பெண்ணையும் ஆணையும் சமமாக நடத்துகிறார்களா? எங்கள் வீட்டில் நான் சண்டை போடுவேன். மூக்கே குத்திக் கொள்ளக் கூடாது. நீ ஏண்டி தேவி ரெண்டு மூக்கும் குத்திண்டே? கழற்றிப் போட்டுட்டுத் தொலைஞ்சுடுத்துன்னு சொல்லுடீ!” என்பாள்.

     “நகைகள் சுமை. அடி, நான் சைக்கிள் விடக் கத்துக்கப் போறேன். நட்டு சொல்லிக் கொடுக்கறேன்னிருக்கிறான். மாரியம்மன் கோவிலுக்குப் பின்னால மைதானத்தில். வரியா?” என்றாள் ஒருநாள். “நீயும் கத்துக்கோயேண்டி? பாலன்ஸ்தான் வரணும்...”

     அவளுக்கு ஆசை அடக்க முடியாமல் தானிருந்தது. ஆனால் துணிவு இல்லை.

     “நான் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன். அது அடிமைத்தனத்துக்கு உட்படும் வாழ்வு. நான் சமுதாய சேவை செய்யப் போகிறேன். பெண் தாழ்ந்தவளல்ல என்று நிரூபிப்பேன்...” என்றெல்லாம் சொல்வாள்.

     ஆனால் தேவி மணம் புரிந்து கொண்டு கணவர் வீடு வந்த பின் தாயின் மரணச் செய்தி கிடைத்து ஊருக்குச் சென்றிருந்த போது, திரிவேணி பம்பாயிலோ, ஹைதராபாத்திலோ ஒரு வடக்கத்திய புரொபசரைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாகக் கேள்விப்பட்டாள். திரிவேணியின் அம்மாவைக் கிழவியாகப் பஸ் நிலையத்தில் பார்த்தாள். பேசவேயில்லை. புகைப்படமும் கையுமாகப் பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்ட தேவியை அவள் குரல் கவர்ந்திழுக்கிறது.

     “ஆன்ட்டி, இந்த ஃபோட்டோ எப்படிக் கிடைச்சது தெரியுமா? சொர்ணா ஆன்டி இங்கே கொஞ்ச நாளைக்கு முன்ன வீரனூர் வீட்டை விக்கறதுக்காகப் போனாள். அப்ப நானும் போனேன். இது கிடைச்சது. மிஸ்டர் துரை சொன்னார், அது நீங்கதான்னு...”

     மிஸ்டர் துரை...! ஒரு திகைப்பிலிருந்து இன்னொரு முறை அதிர்ந்தாற் போல் தூக்கிவாரிப் போடுகிறது!

     “துரையா? அவனை எப்படித் தெரியும்?”

     “தெரியும் ஆன்ட்டி. உத்தண்டத்துங்கிட்ட தானே ஜூனியர்? அவர் புரொபசராச்சே? சொர்ணா ஆன்ட்டி வீட்டை விற்க துரைதான் ரொம்ப ஒத்தாசை செய்தார். கொஞ்சம் சிக்கலெல்லாம் இருந்தது. தாத்தா வில் எழுதி வைக்கலே. எங்க அம்மாவின் அங்கில் பையன் கனடாவுக்குப் போயிட்டார். எல்லாம் ஒரு மாதிரி செட்டில் பண்ணிட்டுப் போனாள். இப்ப மிஸ்டர் துரைதான் எங்க லாயர்!”

     தன் மகனுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு இப்படி ஒரு பெண் வருவாள் என்று அவள் எப்போதேனும் சிந்தனை செய்திருக்கிறாளா?

     “துரை... வெரி நைஸ் ஜென்டில்க்மன். ஹி வில் ஷைன் ஆஸ் எ சக்ஸஸ்ஃபுல் லாயர். ஆன்ட்டி, உங்களை நேற்றுப் பார்த்த போதே எனக்கு என் மம்மியைப் பார்த்தாற் போலிருந்தது. ராத்திரியெல்லாம் நான் தூங்கல. பொழுது எப்ப விடியப் போகிறதுன்னு ஓடி வந்தேன்...”

     “உன் மம்மி பம்பாயில் தானிருக்கிறாளா?”

     “நோ... ஷி இஸ் நோ மோர்...”

     துயரம் தளம் கட்டிக் கன்னத்தில் பெருகுகிறது. “புவர் ஸோல்...” தேவிக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

     “உன் அப்பா...?”

     “அவரும் போய்விட்டார். லூகேமியா வந்து மூணு மாசத்துக்கு முன்னதான் காலமானார்...”

     “சொர்ணா இங்கே இருக்கிறாளா?”

     “இல்ல. அப்பாவுக்காக அவளும் பம்பாய் போயிருந்தாள். சொத்து சமாசாரத்துக்காக இங்கே வந்தா. திரும்ப அங்கேயே போயிட்டா!”

     “அவ குடும்பம்... அங்கே இருக்கிறதாக்கும்?”

     ரஞ்ஜனி விழிகளை மலர்த்திப் பார்த்தவாறு, தலையை ஆட்டுகிறாள்.

     “சொர்ணா ஆன்ட்டி அப்புறம் கல்யாணம் ஒண்ணும் பண்ணிக்கல. மம்மி வீட்டை விட்டுப் போனதும் வேலையை ரிஸைன் பண்ணிட்டு எங்க கூட வந்து தங்கிட்டா...”

     “மம்மி வீட்டை விட்டுப் போனதுமா...?”

     தேவி வாய்விட்டு அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. ஆனால் அவள் முகமே கேள்விக்குறியாக நிற்கிறது.

     “ஆமாம். அப்பாவுடன் பிடிக்காமல் மனத்தாங்கல் பட்டுக் கொண்டு வீட்டை விட்டே போய்விட்டாள். அதைப் பற்றி நினைக்க நினைக்க எனக்கு ஆத்திரம் வருது. ஆத்திரமா வருது... அவ... அவ ஒரு ஜெம்... ஆனா குப்பையிலே வீசி எறியிறாப்பல எங்கப்பா நடந்தார். ஆன்ட்டி, இப்ப பொண்ணுரிமைப் போராட்டம்னு மேல் நாட்டிலெல்லாம் நடக்கிறதே, நீங்க அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?”

     சடாரென்று அவள் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறாள். தேவியோ திக்குமுக்காடிப் போனாற் போல் நிற்கிறாள்.

     “உங்கப்பாவும் அம்மாவும் பிரியப்பட்டுக் கல்யாணம் பண்ணிண்டதாகத் தானே கேள்விப்பட்டேன்?”

     “இருக்கலாம், ஆன்ட்டி, இந்த ஆண்வர்க்கமே முக்காலும் பெண்ணைப் பொம்மை போல வச்சு விளையாடத்தான் நினைக்குது. குழந்தை ஒரு சமயம் பொம்மையை வச்சுக்கும், அடிக்கும், உதைக்கும், மண்ணில புரட்டும். அப்படித்தான். எங்கப்பா அப்படித்தான் நினைச்சார். ஆனா, மம்மி வாழ்க்கையில் எல்லோரையும் போல் இயந்திரமாக இயங்கிவிட்டு மண்பொம்மையாக மாய இஷ்டப்படாமல் புகழ் சேர்க்க விரும்பினாள். அது நடக்கல. அதற்குப் பிறகுதான் ஆன்ட்டி, நான் தீவிரமாக இப்படி ஒரு புரட்சி பண்ணனும்னு விரும்பினேன். ஆன்ட்டி, பெரிய பெரிய படிப்புப் படிச்சு, வேலை செய்து ஆணுக்குக் குறையாமல் சம்பளம் வாங்குபவர்களெல்லாம் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, படுக்கையறைப் பொம்மை அந்தஸ்துக்குத் தலை குனியறாங்களே? அக்கிரமமாயில்லை?

     அவள் உதடுகள் துடிக்கின்றன. அவளை ‘என் கண்ணே’ என்று நெஞ்சாரத் தழுவிக் கொள்ளும் உணர்ச்சி உந்துகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் வரையறை சமைத்துக் கொண்டே உணர்ச்சியற்றுப் போய்விட்ட பழக்கம் அவளைக் கட்டுப்படுத்துகிறது.

     “அக்கிரமம்தான்... உன்னைப் பார்த்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறதும்மா. எனக்குச் சொல்லத் தெரியவில்லை...”

     “நான் பெரிய இயக்கமே ஹைதராபாத்ல இருக்கப்ப ஆரம்பிச்சு நடத்தினேன். ஆனால் அப்பாவுக்கே பிடிக்கல. சொர்ணா ஆன்ட்டியும் ரொம்ப எதிர்ப்பு. காலேஜை விட்டே நின்னு பிறகு இங்கே வந்தேன். இங்கும்...”

     திடீரென்று ஒரு பயங்கர மௌனம் சோக நிழலாய் அவளைக் கவ்விக் கொண்டாற் போலிருக்கிறது.

     “நீ இரம்மா, எதானும் குடிக்கக் கொண்டு வரேன்.”

     தேவி நகரத் தொடங்கியதும் அவள் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். பேதையாக ஓர் சிரிப்பு இதழ்களில் இயங்குகிறது. “திடீர்னு இப்படி ரொம்ப... வீக்காப் போயிட்டது. சில சமயம் ரொம்ப டிப்ரெஸிங்கா... நேத்துக்கூட என்னையறியாம அதான் விழுந்துட்டேன். ரமணம்மா ரொம்ப ஸ்வீட் லேடி...ல்ல? நான் நர்ஸிங் ஹோம்ல இருந்தப்ப தினம் வருவார்.”

     கோர்வை இல்லாமல் எதை எதையோ அவளிடம் சொல்ல வேண்டும் என்று சொல்வது போலிருக்கிறது.

     “இப்ப... அவர் கூடத்தானிருக்கிறாயா?...”

     “இல்ல. நான் ஒரு பாடாவதி ஹாஸ்டலே இருக்கிறேன். எனக்கு அந்த ஹாஸ்டலே பிடிக்கலே. ஒரு குரங்குமூஞ்சி, ஓப்னா அக்கிரமத்துக்கு ரூம்விட்டு சம்பாதிக்கிறது. திரையைக் கிழிச்சி இவங்களை அம்பலப்படுத்தணும். ஆன்ட்டி, எனக்குக் கொதிக்கிறது. என் போன்ற கர்ள்ஸெல்லாம், சின்னச்சின்ன ஆசைக்கெல்லாம் எப்படித் தங்களையே பலியாக்கிக்கிறாங்க தெரியுமா? உங்களாலெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது!”

     தேவி உள்ளே வருகிறாள். அவளும் தொடர்ந்து சமையலறைக்குள் வருகிறாள்.

     “எவ்வளவு அழகான கிச்சன்? ஆன்ட்டி, நான் ஒண்ணு... ஒண்ணு கேட்டா நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே, என்னடா, முன்பின் தெரியாம ஒரு பொண்ணு இப்படி வந்து உறவு கொண்டாடுதேன்னு நீங்க நினைப்பீங்களோ என்னமோ? எனக்கு உங்களைக் கண்டதும் முன்பின் தெரியாத மாதிரியே தோணல...”

     “இல்லம்மா, எனக்கு உண்மையில் சொல்லத் தெரியாத சந்தோஷமாக இருக்கு. நீ எது வேணுன்னாலும் கேள். தப்பாக நினைக்கவே மாட்டேன்...”

     “...எனக்கு அந்த ஹாஸ்டலே பிடிக்கல. நர்ஸிங்ஹோமில் எத்தனை நாள் இருப்பேன்? எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்ல. உங்க கூட, இந்த வீட்டில் பிரியமாகக் கொஞ்ச நாள் இருக்க அலோ பண்ணுவீங்களா ஆன்ட்டி? சில சமயம் எனக்கு ரொம்ப சொல்லத் தெரியாம டிப்ரெஸிங்கா இருக்கு. வாழ்க்கையையே முடிச்சுக்கலாம் போல...”

     “சே... அசடு? எதுக்கு அழறே?”

     “ஒண்ணுமில்ல...”

     தேவி அவள் தோளில் கை போட்டு அணைத்தவாறு கண்களைத் துடைக்கிறாள். ஆனால் ‘வந்து இரு’ என்று சொல்ல முடியுமா? எப்படிச் சொல்வாள்?

     “இந்தச் சின்ன வயசில் இப்படி எல்லாம் நினைக்கிறதே தப்பு. அந்த நாளில் உன் அம்மாவை அவள் பேச்சை, நடப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நிற்பேன். எல்லாப் பெண்களிடமும் இல்லாத தனித்துவம் அவளிடம் இருந்தது. உன்னை நேத்துப் பார்த்த உடனேயே எனக்கு அப்படித்தான் தோணித்து. இந்நேரம் உன் பேச்சைக் கேட்டு சந்தோஷப்பட்டேன். நீ அப்படியெல்லாம் மனசுக்குத் தளர்ச்சிக்கும் இடமே கொடுக்கக் கூடாது...”

     “நான் எத்தனையோ தேறுதல் செய்துக்கறேன். ஆனாலும்... நேத்து... நேத்து பாருங்க, விளக்கணைஞ்சதும் சட்டுனு என்னையறியாம பயம் கவ்விட்டது. ஆன்ட்டி, என்னைப் போல ஒரு பெண் எப்படியும் தனி வாழ்க்கை வாழ முடியாதில்ல? ரமணம்மாவிடம் கூடக் கேட்டேன். எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தாலும், சமய சந்தர்ப்பங்கள் உங்களுக்குச் சவாலாக இல்லையான்னு...”

     “என்ன சொன்னார்?”

     “மனசு உறுதிதான் முக்கியம். ஒண்ணுமே இல்லாம சேற்றை அள்ளி வீசுவா. நம்ம பெண்களே செய்வா. பொருட்படுத்தக் கூடாதுன்னார். எனக்கு நான் கேட்டதுக்கு விடை கிடைக்கல...”

     தேவி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சர்க்கரையைப் போட்டு நீரூற்றிக் கரைக்கிறாள். கண்ணாடித் தம்ளரில் அவளுக்கு ஊற்றிக் கொடுக்கிறாள். தானும் ஒரு தம்ளரை எடுத்துக் கொள்கிறாள்.

     அவள் ஆவலாக வாங்கிப் பருகுகிறாள். புத்துணர்வு பெற்ற மலர்ச்சியுடன் தம்ளரை வைக்கிறாள்.

     அப்போது முன்னறையில் அவர் வந்து விட்ட அரவம் கேட்கிறது. திடுக்கிட்டாற் போலிருந்தாலும் புன்னகையுடன் தேவி சமாளிக்கிறாள். இவளுடைய உடையும் கோலமும் அவருக்கு உவப்பாக இருக்காது என்பதை அறிவாள். இருந்தாலும் முன்பக்கம் சென்று தேவி, “குளிக்க வெந்நீர் போடணுமா?” என்று கேட்கிறாள்.

     அவர் மறுமொழி கூறவில்லை. ஒரு கேள்விக் குறியுடன் பின்னே நிற்கும் பெண்ணைப் பார்க்கிறார். தையல் வகுப்புக்கு வந்தவளாக இருக்கலாம். ஆனால் அவள் இவ்வளவு சுவாதீனமாக அடுக்களை வரையில் செல்கிறாளே? மேலும் பார்க்கப் புதிதாக இருக்கிறாளே?

     “...இவள்... இவள் அம்மா என்னுடன் படித்தவள். நேற்று பாரதி சங்கத்தில் பார்த்தேன்... இங்கே ஹாஸ்டலில் படிக்கிறாள்...”

     ரஞ்ஜனி, ஓரமாக அவர் நிமிர்ந்து பார்ப்பார், ‘நமஸ்தே’ கூற வேண்டும் என்று நிற்கிறாள். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை.

     “வெந்நீர் வேண்டாம். நான் குளிக்கப் போறேன். உனக்குக் கிளாஸுக்கு எல்லாரும் வரா, பார்!”

     அவர் எழுந்து துண்டைத் தேடுகிறார். அவள் கையில் எடுத்துக் கொடுக்கிறாள்.

     “காலமே டிஃபன் சாப்பிட்டியாம்மா?”

     ஆமென்று தலையை ஆட்டுகிறாள் ரஞ்ஜனி.

     அவள் கேட்ட கேள்விக்கு, கோரிக்கைக்கு இன்னும் தான் எந்த பதிலையும் கூறவில்லை, கூற முடியாத நிலையில் குழம்புகிறாள் என்ற உணர்வு நெஞ்சை வதைக்கிறது. தையல் அறைக் கதவைத் திறந்து விட்டு இடைக்கதவைச் சாத்திக் கொண்டு வருகிறாள்.

     “அப்ப நான் வரட்டுமா ஆன்ட்டி?”

     “சாப்பிடாம போகக் கூடாது. இரு...”

     “நான் கேட்டேனே ஆன்ட்டி, யோசிச்சுச் சொல்றீங்களா?...”

     “உனக்கு... இதபார், இது இவ்வளவு - இங்கே தான் இடம். எனக்கு நளினின்னு ஒரு பெண்ணிருக்கிறாள்...”

     “தெரியும் ஆன்ட்டி. அவள் பி.ஜி. காலேஜில் மாத்ஸ் எம்.எஸ்ஸி படிக்கிறாளில்லை? நான் பஸ்ஸை விட்டிறங்கி வரப்ப அவள் எதிரே பஸ்ஸில் ஏறினாள். நான் அவளோடு சண்டை போடுவேனோன்னு பயப்படுறீங்களா, ஆன்ட்டி?”

     அவள் சிரிக்கிறாள்.

     “சே, சே, உனக்கு சௌகரியமாக வசதி இருக்குமோன்னு தான் யோசித்தேன்...”

     தயகத்தைக் கண்கள் மறைக்கவில்லை.

     ரஞ்ஜனி வற்புறுத்தியும் உணவு கொள்ள நிற்கவில்லை.

     அவள் படியிறங்கிச் செல்கையில் தேவி சூனியத்தைப் பார்த்த வண்ணம் செய்வதறியாமல் நிற்கிறாள்.



வீடு : 1 2 3