![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
2 காலை நேரத்தில் தேவி, சாவி கொடுத்து ஓட விடப் பெற்ற பம்பரம் போன்றே இயங்க வேண்டும். அன்று வியாழக் கிழமை. பத்தரை மணியிலிருந்தே தையல் வகுப்புப் பெண்கள் வரத் தொடங்கி விடுவார்கள். கணவர் அலுவலகம் சென்று கொண்டிருந்த நாட்களில் காலை எட்டரைக்குள் சாப்பாட்டு வைபவம் முடிந்து விடும். அவர் சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக ஓட மாட்டார். சிறிது நேரம் விசிறியடியில் அமர்ந்து இளைப்பாறிய பிறகு தான் கால் சட்டையை மாட்டிக் கொள்வார். அங்கிருந்து பஸ் செல்லும் நெடுஞ்சாலைக்குப் பத்து நிமிஷம் நடக்க வேண்டும். ஒன்பதே கால் பஸ், அலுவலகத்துக்கு நேரத்துக்குக் கொண்டு செல்லும். நளினியும் அதே நேரத்துக்குத் தட்டு வைத்துக் கொண்டாலும், அவளுடைய கல்லூரிக்கு, நேர் எதிர்த்திசை பஸ்ஸில் செல்ல வேண்டும். கணவர் அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னோடியாகவே லீவெடுத்திருந்தார். எனவே இந்த மூன்று மாதங்களாகவே அவருடைய அன்றாட இயக்கத்தில் ஒழுங்கு இல்லை. காலையில் உணவு கொள்கிறாரா, இல்லையா என்பதைக் கேட்டறிய வேண்டியிருக்கிறது. சில நாட்களில் சட்டையைப் போட்டுக் கொண்டு மீண்டும் வேலை தேடும் படலம், விரைவான பென்ஷன் தீர்ப்புக்காகத் தூண்டல் என்று சாப்பிட்டவுடன் கிளம்பிப் போகிறார். சில நாட்களில் குளிக்கவே உச்சி நேரமாகிறது. முதல் நாள் இரவு அவள் வீடு திரும்புகையில் எட்டரை மணியாகி விட்டது. நளினி குழ குழவென்று ஒரு சோற்றை பொங்கி வைத்திருந்தாள். தவறு செய்த குழந்தையைப் போல் அவள் அவருடைய கடுங்குரலுக்கு எதிர்ப் பேச்சேதுமின்றி இயங்கினாள். காலையில் பழக்கத்தில் உடல் இயங்குகிறதே ஒழிய, மனம் அமைதியாகவோ, இயந்திர பரமாகவோ, எந்தத் தோத்திரத்தையும் முண முணக்கக் கூட இடம் கொடுக்காமல் பொருமுகிறது. “அம்மா! எனக்கு இன்னிக்குச் சீக்கிரமாகப் போகணும்! இன்னிக்குச் சாதத்தை வைக்காதே. பரோட்டா பண்ணிவை!” என்று உத்தரவிட்டவாறு நளினி குளியலறைக்குச் செல்கிறாள். பாரதி மாதர் சங்கத் தையல் வகுப்புக்குப் போகும் நாட்களில் அம்மாவால் தோசைக்கு அரைக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். முன்பெல்லாம் வாரத்தில் இரண்டு நாட்கள் அவள் தோசைக்கு அரைப்பாள். அதுவும் விநாயகர் கோயில் தெருவில் இருந்த நாட்களில் தெரு முனையில் அறைவை நிலையம் இருந்தது. சொந்த வீட்டில் அறைத்து எடுத்து வருவது போல் கொண்டு வருவாள். துரை, காலையில் இட்டிலியோ தோசையோ சாப்பிட்டுவிட்டுத் தான் வெளியே செல்வான். அவனுக்குப் பகல் சாப்பாட்டைப் பற்றிக் கூடக் கவலை கிடையாது. காலையில் அரை டஜன் இட்டிலியோ, தோசையோ வேண்டும். அவனும் வேறு எம்.ஏ., எம்.எஸ்ஸி என்று படித்துவிட்டு அதே கணக்கு நிர்வாக அலுவலகங்களிலோ, பாங்கியிலோ வேலை செய்ய இங்கிருந்து போவதாக இருந்தால் அவள் இந்நாள் ஓய்ந்து போயிருப்பாள். அவன் நல்லவேளையாக வேறு துறைக்குப் போனான் என்று தோன்றுகிறது. சட்டம் படித்து முடித்து மூன்று வருஷங்களாக அவன் நகரில் ஒரு பெரிய மீனிடம் சிறு மீனாகத் தொழில் பழகுகிறான். அவர்களுடைய அலுவலகத்துக்கருகிலேயே அறை. முதலில் வாரம் ஒரு முறை வருவதாகச் சொன்னான். இப்போது மாதம் ஒரு முறை கூட வருவதில்லை. இப்போது அவனைப் பார்த்து மூன்று மாதங்களாகின்றன... “தேவி...! தேவி! சலவைக்காரன் வந்திருக்கிறான், பார்!” அவள் கோதுமை மாவை அளையும் கையுடனிருக்கிறான். “நளியை வாங்கி வைக்கச் சொல்லுங்களேன்?” “அவள் தான் குளிக்கப் போயிட்டாளே?” “குளிக்கப் போனால் நீங்கள் தான் பார்க்கக் கூடாதா?” என்று முணமுணத்துக் கொண்டு அவள் சமையலறையை விட்டு வருகையில் அவர் முன்னறைச் சாய்வு நாற்காலியிலமர்ந்து ஏதோ பழைய காகிதங்களை, கடிதங்களை, குப்பையைக் கிளறிக் கொண்டிருப்பது புலனாகிறது. “நான் மாவுக் கையுடன் இருக்கிறது தெரியலியா?” அவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைகிறாள். “கணக்குப் புத்தகத்தை எடுத்துக் கூடக் கொடுக்காமல் நீ உள்ளே போனால் என்ன அர்த்தம்?...” கையில் மாவு பசையாய் ஒட்டித் தொலைக்கிறது. உளுந்த மாவை அரைத்ததும் கோதுமையைக் கொட்டி அரைத்துக் கலந்து விட்டானா? “கணக்குப் புத்தகம் எடுத்துக் கொடுக்க நான் வரணுமா? நீங்க தான் கொஞ்சம் பார்த்து எடுங்களேன்? அலமாரியில் தான் இருக்கும்?” அவள் மாவை உருட்டிப் பலகையில் வைத்து நசுக்கத் தொடங்குகிறாள். “ஆமாம், அலமாரி... அலமாரியாவா இருக்கு? இங்கே வந்து பாரு! இது என்ன, வெட்டுத் துணி? கோந்து பாட்டில் - மண்ணாங்கட்டி...! இங்கே வந்து பாரு? இங்கெங்கே சலவைக் கணக்குப் புத்தகம் இருக்கு?” ஆத்திரக் குரல் கேட்டு அவளுடைய பொருமலும் வெடிக்கிறது. “எதுக்கு இப்படி வாசலில் சலவைக்காரனை வைச்சிட்டுக் கத்தணும்?” வெளியே வருகிறாள். குமுதாவின் சட்டை பாதித் தையலுடன் வீசி எறியப்பட்டிருக்கிறது. அந்தத் துணி - மீட்டர் பதினெட்டு ரூபாய். அவள் நுனி விரல் நகத்தால் கொத்தி அதை மீண்டும் அலமாரியில் வைக்கிறாள். “நேத்து நான் தான் கை மறதியாக வச்சிருக்கேன். இப்படியா தூக்கி எறியணும்?” “நீ தையல் கிளாஸ் நடத்தறதுக்குத்தான் ஒரு முழு ரூம் இருக்கே? வீட்டிலே பாதிக்குமேல் உன் இடம் தானே? எனக்குன்னு ஒரு இடம் இருந்தா அதில் இது எதுக்கு வரணும்?” “மன்னிச்சுக்குங்கோ. என்னால் அவ்வளவுக்கு வரவரக் கணக்காக இருக்க முடியல. நேத்து காலமே அதைப் பிரிச்சுத் தைக்க உட்கார்ந்தேன். யாரோ வந்தா, எழுந்துட்டேன், அப்படியே வச்ட்ட்டு, ஊரார் பொருள். நீங்க தூக்கி எறியலாமா?” “அது சரி. ஊரார் பொருள், ஊரார் வேலை. உனக்கு வீட்டு நினைப்பே கிடையாது இப்போதெல்லாம்?” அவள் பேசவில்லை. அலமாரியில் இருந்து அவளே கணக்குப் புத்தகத்தைப் பார்த்து எடுக்கிறாள். சலவைக் கணக்கைப் பார்த்து வாங்கியாயிற்று. கணக்குப் பார்த்துப் பணமும் அவள் தான் தையல் அறை அலமாரியிலிருந்து எடுத்துக் கொடுக்கிறாள். அழுக்குப் போடும் ஆவர்த்தனம் இப்போது வேண்டாம் என்று பிறகு வரச் சொல்கிறாள். அவள் மீண்டும் அறைக்குத் திரும்புகையில் அவள் மீது ஒரு கார்டு வந்து விழுகிறது. திடுக்கிட்டாற் போன்று குனிந்து எடுக்கிறாள். சாந்தா போன மாதம் போட்ட கார்டு. உடலிலுள்ள ஈரமே வறண்டு விட்டாற் போன்று ஓர் குற்ற உணர்வு அவளைக் குறுக்குகிறது. அதை அவரிடம் அவள் காட்டவில்லை. “நேத்து நீ அங்கேதானே போயிருக்கே? பிள்ளை வக்கீல் படிச்சது யாருக்கு உபயோகப்பட்டாலும் படாத போனாலும் பிறந்த வீட்டுப் பஞ்சக் கும்பலுக்கு உபயோகப்படுகிறது. அதை என்னிடம் ஏன் காட்டக்கூடாது? ஏண்டி காட்டல?” அவளுக்கு அடுப்பில் பரோட்டா தீய்ந்து போகிறது. “உங்களுக்குப் பிடிக்காதுன்னுதான் காட்டல.” கண்ணீரை அடக்கிக் கொண்டு அவள் உணர்ச்சியைக் காட்டாமல் பதிலளித்துவிட்டு அடுப்பைக் கவனிக்கச் செல்கிறாள். அந்தக் கடிதத்தை அவள் தையல் அறை அலமாரியின் உள்ளறையில் வைத்திருந்தாள். எப்போது குடைந்து எடுத்தாரோ? “அம்மா? அம்மா?...” குளியலறையிலிருந்து நளினியின் கூவல். “என்ன?” “ஸ்கர்ட்டில் நாடா இல்லைம்மா, வேற ஒண்ணு எடுத்துப் போடேன்?” வெளியே சென்று அவர் முன் விழிக்கக் கூடப் பிடிக்கவில்லை. திடீரென்று இருபத்தெட்டு வருஷ வெறுப்பெல்லாம் திரண்டு அவள் இயக்கத்தையே பிடித்து நிறுத்துவது போலிருக்கிறது. சலவைப் பாவாடையை எடுத்துக் குளியலறைக் கதவின் மீது போட்டு விட்டு அவள் பரோட்டாவைப் பண்ணி முடிக்கிறாள். டப்பியில் வைத்து மூடி அவளுடைய புத்தக மேசை மீது கொண்டு வைக்கிறாள். குப்பையில் வைத்த நெருப்பு புகைந்து கொண்டே இருக்கும். இன்று இந்த ‘மூட்’தான். “இந்த வீட்டில் நினைச்சுப் பார்த்தால் எனக்கு ஒரு ஊசி மதிப்புக் கூட இல்லை. தில்லு முல்லுப் பண்ணி வகையாக மாட்டிண்டான், ஜெயிலுக்குப் போனான். இந்த லச்சணத்துக்கு, ஜாமீன் கொடுக்க அக்கா உறவு, பிள்ளை உறவு! அவன் எவ்வளவு தைரியம் இருந்தால் வெட்கமில்லாம உனக்குக் கடிதாசி எழுதுவா, நீ எவ்வளவுக்குக் கொழுப்பெடுத்துப் போயிருந்தால் எனக்குத் தெரியாம பிள்ளையைப் போகச் சொல்லி இருப்பே?” “நான் போகச் சொல்லல. நான் துரையைப் பார்த்து மூணு மாசமாகிறது. ஏன் நீங்க இப்பக் கத்தணும்?” “நீ அரிச்சந்திரன் மாதா? நான் நம்பணும்? அந்தத் தடியனை அந்த டெல்லி வேலைக்கு அப்ளை பண்ணுடான்னு முட்டிக் கொண்டேன். பண்றேன், பண்றேன்னு புளுகியிருக்கிறான். நேத்து நாயரைப் பார்த்தேன். அந்த இடத்துக்கு அபாயிண்ட்மென்ட் ஆயிட்டுதாம். லீகல் அட்வைசர் மாதிரி. ஆயிரத்தைந்நூறு எடுத்த எடுப்பில் சம்பளம். இவன் ஸிடியில் ரூம் வச்சிருக்கறதும், என்ன சம்பாதிக்கிறான், எங்கே கொடுக்கிறான்னு தெரியாமலேயே போவதும் வருவதும் எனக்குப் பிடிக்கவேயில்லை. ‘ஆ, ஊ’ன்னா, அம்மாக்கு ‘காஸ்’ வாங்கிக் கொடுத்திருக்கிறான், துடைப்பக்கட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறான்னு பேச்சு?...” நளினி மடிப்பு மடிப்பான கொசுவத்தை ஒழுங்கு செய்து கொண்டு வருகிறாள். தந்தையின் வார்ப்பு. மாநிறம். குட்டை. அந்தக் காலத்தில் அவரும் கச்சலாகத்தான் இருந்தார். வட்டமுகம். அகன்ற நெற்றி என்பது தெரியாமல் வழியும் கூந்தல். சுமதியும் அவர்கள் வீட்டு அங்க அமைப்புக்களையே கொண்டிருந்தாலும், கூந்தலடர்த்தி இவளுக்குத் தான் அதிகம். முன்புறம் கத்திரித்துக் கொண்டு சினிமா நடிகையைப் போல் காதோரங்களில் வளைத்துக் கொண்டிருக்கிறாள். இந்தக் கூந்தல் சிங்காரத்துக்கு இவள் எடுத்துக் கொள்ளும் நேரந்தான் வீட்டிலிருக்கும் பொழுதில் முக்கால் பங்கும் செல்கிறது. சுமதி கல்லூரிக்குச் செல்லும் நாட்களில் முதலில் ஒரு பழம் புடைவையைச் சுற்றிக் கொண்டே சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு விடுவாள். அவளுக்குக் கொரித்தால் போதாது. இவள் மகா அலட்டல். இன்று நைலக்ஸ் உடுத்தியிருக்கிறாள். ஸ்டூலில் உட்கார்ந்து கையில் தட்டை வைத்துக் கொண்டு கொரிப்பாள். விரைத்த கஞ்சிப் புடைவையை உடுத்து விட்டால், சாப்பாடே நின்று கொண்டு தான். ஆவி பறக்கும் குழம்பையும் சோற்றையும் அப்பாவுக்குக் குனிந்து பரிமாறும் போது இவளுக்கு நின்று சேவிக்க வேண்டும். கூந்தலைப் பாதி பின்னலிட்டு விட்டுக் கொண்டிருக்கிறாள். முகத்தில் பவுடர், மை சாந்துக் குங்குமம். சுவாமி அலமாரியிலிருந்து ஒரு பொட்டு விபூதி எடுத்து அந்த மைச்சாந்துக்கு மேல் வைத்துக் கொண்டு விளக்கேற்றுகிறாள். பிள்ளையாருக்குப் பத்துத் தோப்புக் கரணம். இந்த பிள்ளையார் வழிபாடு புதிய சேர்க்கை. நல்ல இடத்தில் திருமணமாகும் என்று பிரவசனக் கூட்டத்தில் கேட்டதன் பலனாக இருக்கும். “பர்சில் பணம் இருக்கா, வேணுமா?” தட்டில் கறியை வைத்துக் குழம்பை ஊற்றுகிறாள் தேவி. “எத்தனை பரோட்டா வச்சிருக்கே?” “மூணு. சின்னதாத்தான் வச்சிருக்கேன்.” “இந்தக் கொத்தவரைக் கறியா வச்சிருக்கே?” “ஆமாம், பருப்பு உசிலிதானே; நிறைய எண்ணெய் விட்டு நெஞ்சைப் பிடிக்காமல் பண்ணியிருக்கேன்...” “போம்மா! அதுக்கு ஒரு உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு ஒரு கூட்டுப் பண்ணக்கூடாது? எனக்கு டிஃபனே வேண்டாம் போ!” “வேண்டாட்டா போ! உங்களுக்கெல்லாம் பயந்து பயந்து செய்யச் செய்யத்தான் ஏறுகிறது!” “ஏய்! என்ன ஜாடை பேசறே? ஜாடையாகச் சொல்லிக் காட்டுறியோ?” வெளியிலிருந்து வரும் அந்தக் குரல் தொடர்ந்து மூளப் போகும் ஓர் ருத்திர தாண்டவத்தை அறிவிக்கும் ஒலியாக இருக்கிறது. மகள் தாயைக் கடிந்து கொள்கிறாள். “என்னம்மா, நீ? மெதுவாகச் சொல்லக் கூடாது? அப்பாவுக்கு இப்பல்லாம் திடீர் திடீர்னு மூட் அவுட்டாயிடறது. இப்ப ஒரு சைக்கலாஜிகல் டென்ஷன் அவருக்கு...” ‘உங்கப்பாக்கு டென்ஷன். எனக்கு உணர்ச்சியே கிடையாது; மரக்கட்டை.’ மனம் தான் முணமுணக்கிறது. “நீ அப்பாவுக்குத் தெரியாம எதுக்கு எதானும் செய்யறே? சித்தி கடிதாசி எழுதினா அப்பாக்குக் காட்டியிருக்கணும். அவருக்குத் தெரியாம பிள்ளையை நீ ஜாமீன் அது இதுன்னு ஹெல்ப் பண்ணச் சொன்னா கோபம் வராதா?” “வாயை மூடு! உன்னைக் கேக்கல இப்ப அபிப்பிராயம்! ஏன்? நான் ஹெல்ப் பண்ணணும்னு நினைக்கறது என்ன தப்பு? என்னுடன் பிறந்தவள் அவள். அவளுக்கு ஒரு கஷ்டம் சுகம் எதுவுமே என்னைப் பாதிக்காமலிருக்குமா? சாகக் கிடந்த தாயாரைக் கூடப் பார்க்கப் போகாமல் பந்த பாசங்களைத் தியாகமாகச் செய்து கொண்டு... சே! என்ன பெண் ஜன்மம் இது!” “சரி, நன்றாகச் சண்டை போடு, வாங்கிக் கட்டிக் கொள்! வீணாக அவரைக் கோபத்தைக் கிளப்பாதேன்னா நீயும் கேட்க மாட்டே!” அவள் ஒரு மாமியாரின் தோரணையில் இந்த முடிவை உதிர்த்து விட்டு கைப்பையை மாட்டிக் கொள்கிறாள். வேண்டா வெறுப்புடன் எடுத்துக் கொள்வது போல் டிபன் சம்பிடத்தைத் திறந்து பார்த்து விட்டுப் பைக்குள் வைத்துக் கொண்டு நடக்கிறாள். “சாயங்காலம் கொஞ்சம் நேரமானாலும் ஆகும்... ஃபோன் கீன் பண்ணி ரகளை செய்ய வேண்டாம்!” கொஞ்சமும் தாய் என்ற கசிவு கூட இல்லாத குரலில் அவள் அறிவித்துவிட்டுப் படி இறங்குகையில் தந்தை முன்னறையில் கூண்டுப் புலியைப் போல் உலவிக் கொண்டிருக்கிறார். இவருடைய இன்றைய உத்தேசம் என்னவென்று எப்படிக் கேட்பது? அது நிமித்தமாகவே சண்டை தொடர்ந்து விடும். ஆனால் கேட்காமலும் இருக்க முடியாதே? “காப்பி ஒரு தம்ளர் கலந்து தரட்டுமா?” “வேலை வெட்டி இல்லாத தண்டத்துக்கு அஞ்சு தரம் காப்பி வேற கேடா? நீதான் சம்பாதிக்கிறே. உனக்கு வேணுன்னா குடியேன்?” “ராம ராம. ஏனிப்படி, பேசறதெல்லாம் குத்தலாப் படணும்? நான் சாந்தாவுக்காக துரையைத் தேடிப் போனேன்னு நீங்க சந்தேகமே படவேண்டாம். சம்பளத்துக்கு மேல சம்பாதிக்கும் போதே இந்த நினைப்பெல்லாம் இருக்கணும். இப்ப தலைக்கு மேல வந்து ஜெயிலுக்கும் போனப்புறம் எனக்குக் கடிதாசி எழுதக் கூடாதுதான். நீங்க... உங்களுக்குப் பிடிக்காதுன்னு கடிதாசைக் காட்டலியே ஒழிய நான் என்னிக்கோ மறந்து போயாச்சு. எனக்கு ஒரு பிறந்த வீடு என்று இருந்ததாகக் கூட நினைப்பில்லே. சகலமும் நீங்கதான்னு எப்போதோ நான் தீர்த்தாச்சு. ஆனா, அதுக்காக அங்கேருந்து யாரானும் எழுதினா நான் என்ன பண்ணட்டும்? நான் பதில் கூடப் போடுவதில்லை...” “ஏன் மனதறிஞ்சு பொய் சொல்றே? நீ குலாவுவதில்லையா? சுமதி கல்யாணத்தின் போது, உன் தம்பியாண்டான் வந்து சபையில் நின்று மானத்தை வாங்கலியா? எல்லோரையும் போல் கௌரவமாக இருந்தால் நானே உறவு கொண்டாடுவேன். உறவு கொண்டாடும் நிலையில் கௌவரமாக உன் பிறந்த வீட்டில் ஒரு குஞ்சிருக்கிறதா? விரலை மடக்கு! அவர்களுக்கு நாணமில்லை. ஆனால் நமக்கு ஒரு மானம் மரியாதை எல்லாம் இருக்கு...” அவளுடைய கண்களில் நீர் நிரம்புகிறது. ஆனால் எதுவும் பேசவில்லை. உள்ளே சென்று நளினியின் தட்டைச் சுத்தம் செய்கிறாள். “இவன் பிராக்டிஸ் பண்ணிக் கிழிச்சான்! இந்த மாதிரித் தொழில் பண்ணி முன்னுக்கு வரக்கூடிய சாமர்த்தியம் எல்லாம் நம்மவங்களுக்குக் கிடையாது. ஏதோ மாசச் சம்பள வேலைன்னா ஒரு செக்யூரிட்டி, காரண்ட்டி இருக்கும். மாசம் என்ன வருதாம்?...” அவள் அவர் சமையலறை வாயிற்படியில் வந்து கேட்பதற்கும் பதில் கூறவில்லை. ஆனால் அவளைக் குத்திக் குத்தித் தூண்டி வார்த்தைகளை இழுத்து வருவதே அப்போதைய அவர் நோக்கம். பேச வைப்பார். பொறுமையின் எல்லையிலிருந்து சாட வைப்பார். “இவன் ‘லா’ படிக்கப் போனதே பிடிக்கல எனக்கு. அது பணக்கார வீட்டு மைனர்களுக்கு, பாலிடிக்ஸில் விதண்டாவாதம் பண்ணப் போறவங்களுக்கு உள்ள படிப்பு. இத்தனை நாள் பி.எஸ்ஸி., பி.ஏ.ன்னு படிச்சிருந்தா என் ஆபீசிலேயே உக்காத்தியிருப்பேன். இல்லே டெக்னிகலா இன்ஜினிரிங்னு எதானும் கோர்ஸ் படிச்சிருக்கலாம். இதில் போய் விழுந்து ராவா பகலா படிச்சான். மூணு வருஷமா ஆபீஸ் ஆபீஸ்னு போறான். உத்தண்டத்தின் ஜூனியர்னு தான் இன்னும் பேராயிருக்கு. தனிப் போர்டுக்குக் கூட வழியைக் காணோம். இப்படி இருந்தா இவன் என்னிக்குப் பணம் சேர்த்து குடும்பம்னு ஒண்ணுக்கு வழி பண்ணப் போறான்?” இவர் குளித்து விட்டு உணவு கொள்ள வரக் கூடாதா என்று எண்ணுகிறாள். வகுப்புக்கு எல்லோரும் வந்து விடுவார்கள் என்பது மட்டுமல்ல; அவளுக்கு வயிற்றில் பசி உணர்ச்சி கிண்டுகிறது. இந்நாட்களில் அவளுக்கு எட்டரை மணிக்கே இவ்வாறு ஓர் பசி தோன்றுகிறது. அந்தக் காலத்தில் மூன்று குழந்தைகளும் சிறியவர்களாக இருக்கையில், வாழ்க்கை வசதிகளும் குறைவாக இருந்த போதெல்லாம் எவ்வளவு வேலைகள் செய்திருக்கிறாள்? தளர்ச்சி, தாகம், ஆற்றாமை ஒன்றுமே தெரியாது. பழக்கமேயில்லாததால் இப்போது அவளால் முன்னதாகச் சாப்பிடவும் முடியாது; மேலும்... தையல் அறையில் வேலையும் ஓடாது. இன்னும் மேலும்... நெஞ்சம் துயரத்தை அடக்கிக் கொள்ள மறுக்கிறது. இந்த மாதிரியான ஒத்துழைக்க மறுக்கும் அற்ப குணமுடைய ஒரு கணவருடன் அவள் வாழ்கிறாள் என்ற விஷயம் அந்தக் குடும்பக் கோட்டைக்கப்பால் ஒரு குஞ்சுக்குத் தெரியாது. தையல் வகுப்புக்கு வரும் பெண்கள் எல்லாரும் உண்மையில் தையல் படிக்கவா வருகின்றனர்? நூல் பிடித்த வரையறைகளுடன் கூடிய பள்ளி வகுப்பா அது? ஒருத்தி ஒருத்தியாக வருவார்கள். அந்தத் தையல் வகுப்பே ஏதோ வீட்டுக் கட்டுப்பாட்டை விட்டுச் சுதந்தரமாகப் பேசுவதற்குரிய வாய்ப்பைப் போல் பேசுக்கள் பொல பொலக்கும். அவள் இடையறைக் கதவை அழுத்திச் சாத்தி வைப்பாள்... சமையல் குடும்பக் குறிப்பு, விலைவாசி, குழந்தை வளர்ப்பு எல்லாவற்றுக்கும் மேல் பிறரைப் பற்றிய விமரிசனங்களும் அந்தப் பேச்சு ஓட்டத்தில் பிரவாகித்து வரும். தேவி வெகு கவனமாகப் பட்டுக் கொள்ளாமல் வேலையில் கண்ணாக இருக்க வேண்டும். இரண்டு மாதமாகவே அவருக்குச் சம்பளம் வரவில்லை. துரை மூன்று மாதங்களுக்கு முன் தந்தையிடம் தான் ஆயிரம் ரூபாய் கொடுத்தான். அந்தப் பணத்திலிருந்துதான் நளினிக்குக் கல்லூரிப் பணம் கட்டினார்கள். வீட்டுக் கடன் நூறு நூறாக இரண்டு மாசத்துக்குப் போய் விட்டது. வீட்டுச் சாப்பாட்டுச் செலவுக்கு அவள் தான் சமாளிக்கிறாள். பென்ஷன் எப்படியும் நூற்றைம்பதுக்கு மேல் வராது என்று துரையே கூறினான். இன்ஷ்யூரென்ஸ் தொகை, அவளுடைய வயிரத்தோடு முதலிய நகைகள், மேலும் சேமிப்பு நிதியில் ஓர் பகுதி எல்லாம் சுமதி கல்யாணத்திலேயே உதவிவிட்டன. இவள் கல்யாணத்தை அவருக்கு வரப் போகும் இருபதுக்குள் முடித்து விட வேண்டும். பிறகு பென்ஷன், அவளுடைய வருமானம் இவற்றைக் கொண்டு வீட்டுக் கடனையும் மெல்ல மெல்ல அடைத்துக் காலத்தை ஓட்டலாம். பையனைத் தான் நம்பவேண்டும் என்பதில்லை. ஆனால் அவன் நல்ல பிள்ளை. தனக்குப் பிடித்த தொழிலைத் தேர்ந்து கொண்டான். கஷ்டப்பட்டு ஊன்றட்டுமே?... நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டைச் சுற்றி அவள் தான் தோட்டம் போட்டிருக்கிறாள். காசித்தும்பை பூத்துக் குலுங்குகிறது. கொஞ்சம் பூவைப் பறித்துத் தொடுத்து சுவாமி அலமாரியிலுள்ள படத்துக்குச் சாத்துகிறாள். சேலையைப் பிழிந்து உலர்த்தி விட்டு, கத்திரிச் செடிக்குச் சாம்பல் தூவுகிறாள். பிறகு அவள் தையல் அறையின் பக்கக் கதவைத் திறந்து வைக்கிறாள். வீட்டைக் கட்டும் போது, தையல் வகுப்பு நடத்த வசதியாக, தனி வாயிலுடன் அந்தப் பெரிய அறையை அமைக்கச் சொன்னாள். ஒரு பெடல் மெஷின், ஓர் கைச் சுற்று இயந்திரம். தரையிலமர்ந்து அளவு பார்த்து வெட்டுவதற்கு வசதியான பலகை, துணிகள், காகிதங்கள் வைத்துக் கொள்ள வசதியாக ஓர் மர அலமாரி, அமர்ந்து தைக்க வசதியாக இரண்டு நாற்காலிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும் அந்த அறையில் மண் கூசாவில் தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறாள். பிறகு பாயை விரிக்கிறாள். அப்போது வாசல் சுற்று வேலிக் கதவின் தாழ் ‘க்ளக்’கென்று ஓசை செய்கிறது. சன்னல் திரையை விளக்கி அவள் பார்க்கிறாள். கணவர் எங்கோ சட்டையை மாட்டிக் கொண்டு செல்கிறார். ‘எங்கே’ என்று கேட்க முடியாது. அலுவலகம் இருந்த நாட்களில் அவர் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. நளினி கூறினாற் போன்று இந்த வேலை இல்லாத நிலை அவருள் ஓர் இயலாத ஆத்திரத்தைக் கிளப்பி விடுகிறது. ஐம்பத்தைந்துக்கு ஓய்வென்பது சிரமம் தான். நோய் நொடி, சர்க்கரை, இதயம் என்று ஒரு கோளாறு கிடையாது. வெற்றிலை மட்டும் போடுவாரே ஒழிய, புகையிலை, சிகரெட் என்று ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. அலுவலக எழுத்தர் என்ற நிலையிலிருந்து உயர்வு பெற, அடுத்தடுத்துப் பரீட்சையில் தோல்வி கண்டதனால் மேற்படிக்குச் செல்லவே முடியவில்லை. அந்த நாட்களில் பி.ஏ. முதல் வகுப்பில் தேறியவர்தாம் என்றாலும் அதனால் ஒரு உயர்வும் தனிப்பட்ட முறையில் வாழ்க்கையில் கிடைக்கவில்லை. அவருடைய மனப்புழுக்கத்தின் காரணம் அதுவே. ஆனால் அதற்கு அவள் என்ன செய்வாள்? தேவி ஜன்னலையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தாற் போலிருக்கிறது. அந்தத் தெருவுக்கு எதிர்ச்சாரி வீடுகள் கிடையாது. பள்ளிக்கூடம் வரப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்தத் திசையிலிருந்து, முதல் நாள் சங்கத்தில் அவள் பார்த்த ரஞ்ஜனி, மயங்கி விழுந்த இளம் புரட்சிக்காரி, அதே போன்ற பெல்ஸ் - மேல் சட்டை உடையில் ஒரு தொங்கு பையுடன் அவர்கள் வீட்டை நோக்கி வருகிறாள். |