உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
11 வைதிக கோஷ்டியினர் 'ராக் க்ரீக் பார்க்'கை நோக்கி அணி அணியாகப் படையெடுத்துக் கொண்டிருந்தனர். உண்ட மயக்கத்துடன் நடந்து கொண்டிருந்த கனபாடிகள் ஒருவர், "என்ன இருந்தாலும் நம் தஞ்சாவூர் ஸைடைப் போல் ஆகாது. இந்த வாஷிங்டனில் பெரிய பெரிய கட்டடங்களாகத்தான் கட்டி வைத்திருக்கிறார்கள். என்ன பிரயோஜனம்? எந்த வீட்டிலாவது ஒரு திண்ணை உண்டா, சாப்பிட்டதும் படுப்பதற்கு?" என்று குறைபட்டார். "ஓய்! 'ராக் க்ரீக் பார்க்'கிலே வந்து பாரும், குளுகுளுவென்று காற்று வீசும். எங்கே பார்த்தாலும் பெஞ்சுகள் போட்டிருக்கும்" என்று கூறினார் சாம்பசிவ சாஸ்திரிகள். அவ்வளவு பேரும் ஆங்காங்கே மரத்தடிகளில் கும்பல் கும்பலாக உட்கார்ந்து, கல்யாண விமரிசைகளைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டனர். "அடாடா! மிஸஸ் ராக்ஃபெல்லருக்குத்தான் என்ன மனசு! என்ன மனசு!" என்று புகழ்ந்தார் ஒருவர். "பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் தனித்தனியாக இரண்டு கார் 'ப்ரஸண்ட்' பண்ணியிருக்காளாமே!" என்றார் இன்னொருவர். "ஆசீர்வாதத்தின் போது வந்து குவிந்த 'ப்ரஸண்டு'களைப் பார்த்தீரா? எத்தனை ரிஸ்ட் வாட்ச்! எவ்வளவு வெள்ளிப் பாத்திரம்? எத்தனை டிரான்ஸிஸ்டர்!" என்று வர்ணித்தார் மற்றொரு சாஸ்திரிகள். "உம்... நமக்கெல்லாம் என்ன செய்யப் போகிறாளாம்?" என்று கவலையோடு விசாரித்தார் வேறொருவர். "தலைக்கு நூறு டாலர்னு பேசிக்கிறா?" என்றார் கனபாடிகள். "கைக்கு ஒரு ரிஸ்ட் வாட்ச் இல்லையா?" என்று கேட்டார் மற்றொருவர். "காட்டன் ஸார் மனசு வைத்தால் எல்லாம் நடக்கும்" என்றார் இன்னொருவர். "மயிலாப்பூர் சாஸ்திரிகளே! ஒரு ரவுண்டு 'த்ரீ நாட் போர்' போடுவோமா?" என்று கேட்டார் மாம்பலம் கனபாடிகள். "அதுக்கு முன்னாலே ஒரு ரவுண்டு வெற்றிலைச் சீவலைப் போடலாம்!" என்றார் திருவல்லிக்கேணி தீட்சிதர். "இது வாஷிங்டன் நகரம். திருவல்லிக்கேணி இல்லை. கண்ட இடத்தில் துப்பக் கூடாது" என்றார் மாம்பலம் கனபாடிகள். சம்மர் ஹவுஸில், பெண்டுகள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். "மணி மூன்றாகிறதே, நலங்குக்கு நேரமாகல்லையா?" என்று பொதுவாக இரைந்து கொண்டே போனார் அய்யாசாமி ஐயர். "இன்னும் ப்ளேன் வரவில்லையாம். புஷ்பத்துக்காகக் காத்திருக்கிறோம்!" என்றாள் அத்தை. "ஷம்பந்தி வீட்டுக்கு டிபன் காப்பி அனுப்பியாச்சா? ருக்கு! நீ டிரஸ் பண்ணிக்கிட்டயா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள் மிஸஸ் ராக். "எல்லாம் ஆயிட்டுது மேடம்! பூ வந்ததும் நலங்கு ஆரம்பிக்க வேண்டியது தான்" என்றான் பாப்ஜி. "பாப்ஜி! ஈவினிங் ரிசப்ஷன் அரேஞ்ச்மென்டெல்லாம் எந்த மட்டில் இருக்குது? எத்தனை மணிக்குக் கச்சேரி?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். "கொஞ்சம் லேட்டாகத்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் மேடம்!" "ஏன்?" "பால்காட் மணி ஐயர் ப்ளேன்லே வந்ததாலே, ப்ளேன் சத்தம் அவர் காதிலேயே இருக்காம். அதனாலே சுருதி சேர்ப்பதற்குக் கொஞ்சம் சிரமப்படுமாம். கொஞ்ச நேரம் போனால் சரியாகிவிடுமென்று சொல்கிறார்" என்றான் பாப்ஜி. "பரவாயில்லை; கர்னாடிக் மியூஸிக்னா சுருதிதான் ரொம்ப முக்கியம்" என்றாள் மிஸஸ் ராக். "உங்களுக்கு மியூஸிக் கூட வருமா, மேடம்?" "ஓ எஸ்! பியானோ வாசிக்கறதுதான் எனக்கு பாஸ் டைம்!" என்றாள் மிஸஸ் ராக். ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்திக் கிடந்த பஞ்சுவை மெல்லிய கரம் ஒன்று தீண்டி எழுப்பியது. சுய உணர்வு பெற்ற பஞ்சு கண் விழித்துப் பார்த்த போது, கையில் காப்பியுடன் நின்று கொண்டிருந்த லல்லி, மோகினி வடிவமாகக் காட்சி அளித்தாள். அவளிடமிருந்து காப்பியைக் கையில் வாங்கிக் கொண்ட பஞ்சு, "தாங்க்ஸ்" என்றான் சிரித்துக் கொண்டே. "எல்லோரும் நலங்குக்கு ரெடியாயிட்டாங்க..." என்றாள் லல்லி. "இதோ, ஒன் மினிட்" என்று கூறிவிட்டு எழுந்தான் பஞ்சு. பந்தலில் பெரிய பெரிய பவானி ஜமக்காளங்களை விரித்து நலங்குக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் பாப்ஜி. புஷ்பங்கள் வந்ததும், டம்பர்ட்டன் ஓக்ஸிலிருந்து மாப்பிள்ளையை மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். நலங்கு ஆரம்பமாயிற்று. இதற்குள் பந்தலில் துளி இடமில்லாதபடி, அமெரிக்கப் பெண்மணிகளும், ராக்ஃபெல்லர் உறவினர்களும் கூடிவிட்டார்கள். மிஸஸ் ராக்ஃபெல்லர், கேதரின், லோரிட்டா மூவரும் பட்டுப் புடவை உடுத்தி, நலங்குப் பாய்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டனர். கூட்டம் நலங்குக் காட்சியைக் காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தது. முதலில் மாப்பிள்ளை ராஜா, மணையில் அமர்ந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் மணப்பெண் ருக்மிணி அவன் எதிரில் நாணத்துடன் வந்து நின்றாள். "நாயனக்காரர் ரெடியா?" என்று கேட்டார் அம்மாஞ்சி. நாகஸ்வரக்காரர், 'பீபீ!' என்று சீவாளியை எடுத்து ஊதி, தாம் இருப்பதை அறிவித்துக் கொண்டார். "ருக்கு! முதலில் ஒரு பாட்டுப் பாடி விட்டு மாப்பிள்ளைக்குச் சந்தனம் பூசு" என்று சொல்லிக் கொடுத்தாள் பெண்ணுக்கு மாமி. பந்தலில் கேலியும் சிரிப்புமாக அமர்க்களப்பட்டது! "சைலன்ஸ்!" என்றார் அம்மாஞ்சி வாத்தியார். "நலங்கிட ராரா... ராஜகோபாலா..." என்று ருக்கு பாடிய போது அத்தனை பேரும் உற்சாகத்துடன் பலமாகச் சிரித்தார்கள். அமெரிக்கர்களுக்கு அந்தப் பாட்டின் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், அவர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு சிரித்தார்கள். 'ராஜகோபாலா' என்று தன் கணவன் பெயரைச் சொல்லிப் பாடிவிட்ட ருக்மிணிக்கு அப்போதுதான் தன்னுடைய தவறு புரிந்தது. சட்டென்று வெட்கம் சூழ்ந்து கொள்ளவே, நாக்கைக் கடித்துக் கொண்டு மௌனமாகிவிட்டாள். "எதுக்கு எல்லோரும் சிரிக்கிறீங்க?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். "ருக்கு தன் ஹஸ்பெண்ட் பேரைச் சொல்லிவிட்டாள்... அதற்குத்தான் சிரிக்கிறோம்!" என்றாள் லோசனா. "ருக்குவின் ஹஸ்பெண்ட் நேம் அவ்வளவு ஹ்யூமரஸா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். "இண்டியன் லேடீஸ் தங்கள் ஹஸ்பெண்ட் பேரைச் சொல்லக் கூடாது" என்றாள் லோசனா. "சொன்னால் என்ன? ரொம்ப வேடிக்கையாயிருக்குதே, உங்கள் கஸ்ட்டம்ஸ்!" என்றாள் ராக். "ருக்கு! பாடேண்டி!... என்ன வெட்கம்?" என்றாள் அத்தை. "அத்தை, எனக்குப் பாட்டே மறந்து போச்சு!" என்று கூறி விட்டாள் ருக்கு. "நான் பாடுகிறேன்" என்று கூறிவிட்டு லோசனா பாடத் தொடங்கினாள்.
"நலங்கிட ராரா ராஜகோபாலா என்னி ஜென்மமுலெத்தி நின்னே கோரி உன்னுரா" என்று அவள் சிந்து பைரவியில் பாடி முடித்ததும் உள்ளூர் நாகஸ்வரக்காரர் தவில் வாத்தியத்தின் துணையின்றி அந்தப் பாட்டை, அதே ராகத்தில், அப்படியே தன் குழலில் நையாண்டி செய்தார்! அதைக் கேட்டு, பந்தலே பிய்த்துக் கொண்டு போகும்படியாகச் சிரித்துக் குதூகலித்தனர் சுற்றியிருந்த பெண்மணிகள். அடுத்தாற் போல் ருக்கு தன் கணவனின் காலில் மஞ்சளை எடுத்துப் பூசி நலங்கினால் அழகாக வரிகள் போட்டு முடித்தாள். "ராஜா! இப்போது உன் 'டர்ன்'டா... உம்!" என்று தூண்டினான் மாப்பிள்ளைத் தோழன். உடனே ராஜா, தன் மனைவி ருக்குவின் பாதங்களில் மஞ்சளைப் பூசி செம்பஞ்சால் கீற்றுகளைக் கண்டபடி இழுத்து முடித்தான். பின்னர், பெண்ணும் மாப்பிள்ளையும் சுட்ட அப்பளங்களைத் தங்கள் இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் சுற்றி 'பட்பட்'டென்று மோதி உடைத்தார்கள். அந்தக் காட்சியை ஆங்காங்கே தத்தம் இல்லங்களில் டெலிவிஷனில் கண்டு களித்துக் கொண்டிருந்த அமெரிக்க மக்கள், "அடாடா! அப்பளங்களை வீணாக உடைத்து நொறுக்கிவிட்டார்களே!" என்று வருத்தத்துடன் சூள் கொட்டினர். கடைசியில், மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் தேங்காயை உருட்டிப் பந்தாடும் படலம் ஆரம்பமானது. தோழிகளின் விருப்பப்படி ருக்கு தேங்காயை உருட்டாமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டாள். ராஜா அந்தக் காயை அவள் கைகளிலிருந்து வெடுக்கென்று இழுத்துக் கொள்ள முயற்சி செய்தும் முடியாமல் போகவே, எல்லோரும் கை தட்டி நகைத்தனர். கடைசியில் ருக்கு ஏமாந்திருந்த வேளையில் தேங்காயைப் பறித்துக் கொண்டு விட்டான் அவன். அதைக் கண்ட தோழியர்கள் ராஜாவைப் பார்த்து, "இது பெரிய ஆண்பிள்ளைத்தனமோ? அடி ருக்கு! தேங்காயை நீ இழுத்துக் கொள்ளடி!" என்றனர். "ஒரு தேங்காயை வைத்துக் கொண்டு எதற்காக சண்டை போடுகிறார்கள்? ஆளுக்கொரு தேங்காயை கொடுத்து விடலாமே!" என்றாள் அமெரிக்க மாது ஒருத்தி. கடைசியில், அத்தையும் மாமியும் வந்து ஆரத்தி சுற்றிக் கொட்டியதும் நலங்கு வைபவம் முடிவுற்றது. சரியாக ஆறு மணிக்கு ரிசப்ஷன் ஆரம்பமாயிற்று. சங்கீத வித்வான்களை மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் பஞ்சு. பிள்ளைக்குத் தகப்பனாரான லால்குடி கோபாலய்யர் "வயலின் வித்வான் எங்க ஊர் பிள்ளையாண்டான்!" என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார். "மிருதங்க வித்வான் எங்க ஊர், பால்காட்!" என்று சொல்லிச் சிரித்தாள் லல்லி. "சொந்த ஊர் அபிமானத்தைப் பாருங்களேன்" என்றான் பஞ்சு. "எங்க ஊர் ஆசாமி இங்கே யாரும் இல்லையா?" என்று சுற்று முற்றும் பார்த்தபடியே கேட்டு விட்டுச் சிரித்தார் அரியக்குடி. "கச்சேரி முடிந்ததும் இரவு டின்னருக்கு எல்லோரும் இருந்து சாப்பிட்டு விட்டுப் போகவேண்டும்" என்று உபசரித்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். இன்னொரு பக்கத்தில் டீ பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்பதற்காக, தொன்னையில் ஐஸ்கிரீம் வைத்துக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தான் பாப்ஜி! மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் சோபாவில் அமர்ந்து கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தனர். பாதிக் கச்சேரியில் அம்மாஞ்சி வாத்தியார் வந்து மணமக்களை அழைத்தார். "எதுக்கு அவங்களை டிஸ்டர்ப் பண்றீங்க?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். "ப்ரைடும், ப்ரைட்க்ரூமும் அருந்ததி பார்க்கணும்!" என்றார் அம்மாஞ்சி. "அருந்ததின்னா?" "அருந்ததின்னா, அது ஒரு ஸ்டார்!" "ஸ்டாரா? ஸ்டார்ஸெல்லாம் தான் 'முகூரட்' முடிஞ்சதுமே போயிட்டாங்களே!" என்றாள் ராக். "சினிமா ஸ்டார் இல்லை, மேடம்! ஆகாசத்திலே உள்ள அருந்ததி ஸ்டார்?" என்றார் அம்மாஞ்சி. "அப்படியா? டெலஸ்கோப் வரவழைக்கட்டுமா?" என்று கேட்டாள் திருமதி ராக். "அதெல்லாம் வேண்டாம்; ஆகாசத்திலே அருந்ததி நட்சத்திரம் இருக்குமிடம் எனக்குத் தெரியும்..." என்றார் அம்மாஞ்சி. "ஆமாம், நீங்கள் தான் ஸயன்டிஸ்ட் அம்மாஞ்சியாச்சே!" என்றாள் மிஸஸ் ராக் சிரித்துக் கொண்டு. கல்யாணத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் அன்று மாலையில் மஞ்சள் நீராடி மகிழ்ந்தனர். மஞ்சள் நீரை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டிருந்ததைக் கண்ட ராக்ஃபெல்லர், "ஏன் இப்படி 'யெல்லோ வாட்ட'ரை வேஸ்ட் பண்றீங்க?" என்று கேட்டாள். "கல்யாணத்துக்கு வந்து போகிறவர்களுக்கு இப்படி ஒரு அடையாளம் செய்து அனுப்புவது எங்கள் வழக்கம். இவர்கள் துணியில் உள்ள மஞ்சள் கறையைப் பார்க்கிற போது 'கல்யாணத்துக்குப் போய் வந்தவர்கள்' என்று மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்" என்றான் பஞ்சு. "இந்தத் துணிகளைப் பார்க்கிற போது எனக்கு 'ப்ளீடிங் மெட்ராஸ்' ஞாபகம் தான் வருகிறது" என்றாள் மிஸஸ் ராக். அன்று இரவே பாதிப் பேருக்கு மேல் ஊருக்குத் திரும்பிச் சென்று விட்டதால், கல்யாண வீடு களையும், கலகலப்பும் இழந்து காணப்பட்டது. "காலையில் கிரகப்பிரவேசம் ஆனதும், சம்பந்தி வீட்டில் நமக்கெல்லாம் எதிர் விருந்து நடக்கும். அது முடிந்ததும் நாளைக்கு ஈவினிங் டைடல் பேஸினில் பாலிகை விடணும். அப்புறம் நாங்களும் புறப்பட வேண்டியதுதான்" என்றான் பாப்ஜி. "எதிர் விருந்து என்றால் அது என்ன?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். "ஆப்போஸீட் டின்னர்!" என்று தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அதை மொழி பெயர்த்தார் அம்மாஞ்சி. "அத்தோடு மேரேஜ் கம்ப்ளீட் ஆயிடுமா?" "அப்புறம் சாந்தி கல்யாணம் இருக்கு" என்றார் அம்மாஞ்சி வாத்தியார். "வாட்! வாட்! சாந்தியா? அது யாரது? ருக்கு கல்யாணம் ஒண்ணே போதும். வேறே யார் கல்யாணமும் இப்ப வேண்டாம்!" என்றாள் மிஸஸ் ராக். முக்கோண வடிவமாகக் கோடு வரைந்து அந்தக் கோணங்களின் மூன்று முனைகளிலும் மூன்று புள்ளிகள் வைத்தால் எப்படி இருக்கும்? லிங்கன் மண்டபம், ஜெபர்ஸன் மெமோரியல், வாஷிங்டன் ஸ்தூபி ஆகிய மூன்றும் அம்மாதிரி அமைப்பில் தான் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு நின்றன. இந்த முப்பெரும் ஞாபகச் சின்னங்களுக்கு நடிவில் அமைந்திருப்பது தான் டைடல் பேஸின்! வாஷிங்டன் நகரிலேயே இயற்கையும், செயற்கையும் கைகோத்துக் களிநடனம் புரியும் அழகுமிக்க சூழ்நிலை இது. டைடல் பேஸினைச் சுற்றிலும் வரிசையாக நிற்கும் செர்ரி மரங்கள் வசந்த காலத்தில் புஷ்பங்களாகப் பூரித்துச் சிரிக்கும் நாட்களில், ஆண், பெண் ஜோடிகள் அந்தத் தடாகத்தைச் சுற்றிலும் உல்லாசமாக உலாவிக் கொண்டிருப்பார்கள். நிலவு இல்லாத நாட்களில் உயரத்திலுள்ள சர்ச் லைட்டுகள் அந்தப் பூக்களின் மீது ஒளி வெள்ளத்தை வீசிப் பாய்ச்சும் போது அந்த இடம் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழும். ஜெபர்ஸன் மண்டபத்துக் கெதிரில் டைடல் பேஸின் படித்துறையில் தான் பாலிகை விடுவதென முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமண கோஷ்டியினர், தங்கள் கார்களை அங்கே கொண்டு போய் நிறுத்தினார்கள். டைடல் பேஸினும் செர்ரி மரங்களும் நிலவொளியைக் குடித்து விட்டுப் போதையில் மயங்கிக் கிடந்தன. எல்லோரும் பாலிகைக் கிண்ணங்களுடன் காரை விட்டு இறங்கித் தடாகத்தின் கரையில் போய் நின்றார்கள். ருக்குவும், ராஜகோபாலனும் வெள்ளிக் கம்பிகளாக முளைவிட்டிருந்த இளம் பாலிகைப் பயிர்களைத் தண்ணீரில் மிதக்க விட்டனர். எங்கிருந்தோ வேகமாகப் பாய்ந்து வந்த மீன் கூட்டம் ஒன்று அவற்றைக் கொத்திக் கொண்டு போயிற்று. "'லார்ஜ்-மௌத் பாஸ்!' என்ற இந்த வகை மீன்கள் இங்கே அதிகம்" என்றாள் மிஸஸ் ராக். பாலிகை விடும் சடங்கு வெகு சீக்கிரமே முடிந்துவிட்டது. ஆனாலும் ஒருவருக்கும் அந்த இடத்தை விட்டுப் போகவே மனம் இல்லை. "எல்லோரும் இப்படிப் புல் தரையில் சற்று நேரம் உட்கார்ந்து தமாஷாகப் பேசிக் கொண்டிருக்கலாமே!" என்ற யோசனையை வெளியிட்டாள் மிஸஸ் மூர்த்தி. "வெரி குட் ஐடியா! தோசையும் புளியோதரையும் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதையும் இங்கே 'பிக்னிக்' மாதிரி சாப்பிட்டு விட்டுப் போய்விடலாம்" என்றார் அய்யாசாமி. "எடுங்கள் அதை!" என்றார் மாமா. அத்தையும், பாட்டியும் ஆளுக்கு இரண்டு தோசையும், கொஞ்சம் புளியோதரையும் எடுத்து வைத்தார்கள். "மிளகாய்ப்பொடி இருக்கா?" என்று நாக்கில் ஜலம் ஊறக் கேட்டார் மூர்த்தி. சாப்பிட்டு முடிந்ததும் சற்று நேரம் எல்லோரும் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். "இந்த இடத்தில் உங்களோடு சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டால் எப்போதும் அது ஒரு ஞாபகார்த்தமாயிருக்கும்" என்று தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டார் அய்யாசாமி. "ஓ... எஸ்! அதுவும் சரியான யோசனைதான். ஜெபர்ஸன் மண்டப் படிகளில் நின்று எடுத்துக் கொள்ளலாமே!" என்றாள் மிஸஸ் ராக். லோரிட்டாவும், வசந்தாவும் சற்று தூரத்தில் செர்ரி மரங்களைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார்கள். போட்டோ என்றதும் சாம்பசிவ சாஸ்திரிகள் வாயிலிருந்த வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு வர ஓடினார். "ஓய்! கண்ட இடத்தில் வெற்றிலையைத் துப்பக் கூடாது. அமெரிக்காள் பார்த்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள்" என்றார் அம்மாஞ்சி. "என்ன நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்! ஆரத்தி சுற்றிக் கொட்டியிருக்கிறது என்று எண்ணிக் கொள்வார்கள்" என்றார் சாஸ்திரிகள். மிஸஸ் ராக்ஃபெல்லர் எல்லோருக்கும் நடுநாயகமாக நின்று கொண்டாள். அந்தச் சீமாட்டிக்கு இரு பக்கத்திலும் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் நின்றனர். ஒரு பக்கம் சம்பந்தி வீட்டாரும், இன்னொரு பக்கம் பெண் வீட்டாரும் நின்று கொண்டனர். ஞாபகமாகப் பிள்ளைக்கு மாமாவை அழைத்துப் பிள்ளையின் பக்கத்தில் நிற்கச் சொன்னாள் மிஸஸ் ராக். மாமாவுக்கு அதில் ரொம்பத் திருப்தி! வசந்தாவும், லோரிட்டாவும் ருக்குவின் பக்கத்தில் நின்றார்கள். குழந்தைகள் கீழ்ப்படியில் வரிசையாக உட்கார்ந்து கொண்டனர். "லல்லியும் பஞ்சுவும் எங்கே?" என்று திடீரென்று ஒரு குரல் எழுந்தது. "அவர்கள் இரண்டு பேரையும் ரொம்ப நேரமாகவே காணோம்! எங்காவது ஜோடியாகக் கைகோத்துக் கொண்டு போயிருப்பார்கள். வசந்த காலமோன்னோ?" என்று விஷமமாகச் சிரித்தார் அம்மாஞ்சி. அதற்குள் லல்லியும், பஞ்சுவும் தொலைவில் நடந்து வந்து கொண்டிருப்பதைக் கண்ட அய்யாசாமி, "அதோ வருகிறார்களே!" என்றார். அவர்கள் வந்ததும், "பஞ்ச்! அதுக்குள்ளே எங்கே போயிட்டீங்க? குரூப்லே வந்து நில்லுங்க" என்றாள் மிஸஸ் ராக். குரூப் போட்டோ எடுத்து முடித்ததும் எல்லோரும் காரில் ஏறி சம்மர் ஹவுஸை அடைந்தனர். "சம்பந்தி வீட்டார், பெண் வீட்டார் இவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் இன்று இரவே புறப்பட்டுப் போகிறார்களாம்" என்றான் பஞ்சு. "ஸாஸ்ட்ரீஸெல்லாம் கூடவா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். "ஆமாம், அவர்களும் கூடத்தான்" என்றான் பஞ்சு. "அம்மாஞ்சி, அப்பு ஸாஸ்ட்ரி, ஸாம்ஸனு ஸாஸ்ட்ரி இவங்க மூணு பேரும் மட்டும் நாளைக்குப் போகட்டும்! ஆயிரம் ஸாஸ்ட்ரீஸ்லே யாராவது ஒருத்தர் இந்த ஜார்ஜ் டவுனிலேயே பர்மனென்ட்டாக இருந்து பிள்ளையார் கோயில் பூஜையைக் கவனித்துக் கொள்ளட்டும்" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். "சரி மேடம். நான் அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்து விடுகிறேன்" என்றான் பஞ்சு. "ஸாஸ்ட்ரீஸுக்கெல்லாம் ஈச் டூ ஹண்ட்ரட் டாலர்ஸ் கொடுத்துடுவோம். அதைத் தவிர ஆளுக்கு ஒரு வாட்ச்! போதுமா?" என்றாள் மிஸஸ் ராக். "எதேஷ்டம்னா! இந்த மாதிரி மனசு யாருக்கு வரும்!" என்றார் அம்மாஞ்சி. "இண்டியாவின் வேதிக் கல்ச்சரை ஸாஸ்ட்ரீஸுங்க தான் காப்பாத்திக்கிட்டிருக்காங்க. தே ஆர் ப்ரம் தி லாண்ட் ஆப் சங்கராச்சார்யா! அவங்களையெல்லாம் நல்லபடியா கௌரவமா வைத்துக் கொள்ள வேண்டியது ரொம்ப இம்பார்ட்டெண்ட்" என்றாள் மிஸஸ் ராக். "ஆகா! சத்தியமான வார்த்தை!" என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள். "அம்மாஞ்சி வாட்யார், ஸாம்ஸன் ஸாஸ்ட்ரி, அப்பு ஸாஸ்ட்ரி மூன்று பேருக்கும் ஈச் தௌஸண்ட் டாலர்ஸ், ஒன் ரிஸ்ட் வாட்ச், அண்ட் ஒன் ஸ்கூட்டர்" என்றாள் மிஸஸ் ராக். சந்தோஷ மிகுதியால் அம்மூவருக்கும் சற்று நேரம் பேச்சே கிளம்பவில்லை. "அங்க்கிள் ஸாமைக் கூப்பிடுங்கள்" என்றாள் மிஸஸ் ராக். அவர் வந்ததும், "உங்களுக்கு ஒரு கார் 'ப்ரஸண்ட்' பண்ணியிருக்கேன்" என்றாள் மிஸஸ் ராக். "எனக்கா? எனக்கெதற்கு கார்?" என்று கேட்டார் பிள்ளைக்கு மாமா. "நீங்க மனசு வைக்கலேன்னா ஷம்பந்தி ஷண்டையே நடந்திருக்காதே! ஷம்பந்தி ஷண்டை நடக்கலேன்னா நானும் என் ப்ரண்ட்ஸும் ரொம்ப ஏமாந்து போயிருப்போமே" என்று கூறி, மாமாவின் கையைக் குலுக்கினாள் மிஸஸ் ராக். அடுத்தாற்போல் பாப்ஜியை அழைத்து, வைர மோதிரம் ஒன்றும் ரிஸ்ட் வாட்ச் ஒன்றும் அவனுக்குப் பரிசாகக் கொடுத்து விட்டு, "பாப்ஜி! உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை; கடைசி நேரத்தில் நீ டாக்ஸ் அனுப்பலேன்னா ஜான்வாசமே 'டல்'லாப் போயிருக்கும்" என்று அவன் முதுகில் ஒரு 'ஷொட்டு' கொடுத்தாள். "பஞ்சுவுக்கு என்ன கொடுக்கப் போறீங்க?" என்று கேட்டார் அய்யாசாமி. "பஞ்ச்சுக்கு நான் ஒண்ணும் கொடுக்கப் போறதில்லை. தாங்க்ஸ் கூடச் சொல்லப் போறதில்லை" என்று கூறிய போது உணர்ச்சிப் பெருக்கில் அந்தச் சீமாட்டியின் குரல் கரகரத்தது. "லல்லி! உனக்கும் நான் ஏதும் கொடுக்கப் போவதில்லை" என்று கூறிய மிஸஸ் ராக், "பஞ்ச்! இந்தா இவளை உனக்குப் பரிசாகவும், லல்லிக்கு உன்னைப் பரிசாகவும் கொடுக்கப் போகிறேன். உங்கள் இருவருக்கும் அடுத்த மே மாதம் பால்காட்டில் திருமணம் நடக்கும். நானே நேரில் வந்து அதை நடத்தி வைக்கப் போகிறேன்" என்று இருவர் கைகளையும் சேர்த்து வைத்தாள். வாஷிங்டன் விமான கூடம். மணப்பெண் ருக்கு, மணமகன் ராஜா, பஞ்சு, லல்லி, பாப்ஜி, அய்யாசாமி ஐயர், அம்மாஞ்சி, சாஸ்திரிகள், மாமா, பாட்டி, அத்தை எல்லோரும் மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் வந்து ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டிருந்தனர். மிஸஸ் ராக்ஃபெல்லர் பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, "உங்களையெல்லாம் விட்டுப் பிரியவே மனமில்லை. நீங்கள் எல்லோருமே என்னிடம் ரொம்ப அன்போடு பழகிக் கொண்டிருந்தீர்கள். உங்களையெல்லாம் மறுபடியும் எப்போது பார்க்கப் போகிறேனோ?" என்றாள். "அதற்கென்ன? சீக்கிரமே ரிஷிபஞ்சமி விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எல்லோரும் வந்து நடத்தி வைக்கிறோம்" என்றார் அம்மாஞ்சி. அத்தையும், பாட்டியும் கட்டுச் சாத மூட்டையுடன் விமானத்தை நோக்கி நடந்தார்கள். மணப்பெண் ருக்மிணி கலங்கிய கண்களுடன் ராக்ஃபெல்லர் மாமிக்கு நமஸ்காரம் செய்தாள். "அழக்கூடாது, ஸ்மைல் பண்ணனும். தெரிஞ்சுதா? அடிக்கடி லெட்டர் போட்டுகிட்டு இரு. நெக்ஸ்ட் இயர் நான் இண்டியாவுக்கு வரப்போ உன்னை 'பேபி'யோடு பார்க்கணும்!" என்று செல்லமாக அவள் கன்னத்தைக் கிள்ளி விடை கொடுத்தனுப்பினாள் ராக். எல்லோரும் ராக்ஃபெல்லர் மாமிக்குக் கைகூப்பி நமஸ்காரம் செய்துவிட்டுப் போய் விமானத்தில் ஏறிக் கொண்டனர். விமானம் மேல் நோக்கிப் பறக்கத் தொடங்கியது. மிஸஸ் ராக்ஃபெல்லர் அந்த விமானத்தையே பார்த்தவண்ணம் கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள். அந்தச் சீமாட்டியின் கண்களில் பனித்திரையிட்டது.
சுபம். |