5

     "மிஸ்டர் பஞ்ச்! (பஞ்சைத் திரித்து 'பஞ்ச்'சாக்கிவிட்டார் மிஸஸ் ராக்ஃபெல்லர்!) ஐ டோண்ட் நோ எனிதிங்... இந்த மேரேஜ்ல ஒரு ஸ்மால் கம்ப்ளெயின்ட் கூட இருக்கக் கூடாது. யார் எது கேட்டாலும் ரெடியா இருக்கணும். 'டைகர் மில்க்' வேண்டுமானாலும் கொண்டு வந்து சேர்த்துடணும். தெரிஞ்சுதா? நீங்க தான் எல்லாத்துக்கும் இன்சார்ஜ். ஹெல்ப்புக்கு வேணும்னா லல்லியை அழைச்சிக்கிட்டுப் போங்க. இப்பவே நீங்க ரெண்டு பேரும் இண்டியாவுக்கு 'ஃப்ளை' பண்ணி அங்கிருந்து குக்ஸையும், பாட்டீஸையும் உடனே அனுப்பறதுக்கு ஏற்பாடு செய்யுங்க. இன்று முதல் மெட்ராஸுக்கு டெய்லி நாலு சார்ட்டர்ட் ப்ளேன்ஸ் போய் போய் ரிடர்ன் ஆயிக்கிட்டே இருக்கும்" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     டெல்லி பஞ்சுவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. ஹெல்ப்புக்கு லல்லியை அழைத்துப் போகச் சொல்லி விட்டாளல்லவா, அந்தச் சந்தோஷம் தான்! 'மிஸஸ் ராக்ஃபெல்லர் இங்கிதம் தெரிந்தவள்' என்று அந்தச் சீமாட்டியை மனதுக்குள்ளாக வாழ்த்தினான்.

     அடுத்த சில மணி நேரத்துக்கெல்லாம் பஞ்சுவும், லல்லியும் புறப்பட்டு விட்டார்கள். நாலு விமானங்கள் இண்டியாவை நோக்கிப் பறந்தன. இந்த 'ட்ரிப்'பில் பஞ்சு-லல்லி நட்பு ரொம்ப உயர்ந்து விட்டது! விமானக் காதல் ஆயிற்றே!

     "ஈவினிங் மூன்று மணிக்கு மெட்ராஸிலிருந்து ப்ளேன்ஸ் அரைவிங். எ பார்ட்டி ஆஃப் பாட்டீஸ் ப்ரம் பால்காட், டின்னவெல்லி அண்ட் டாஞ்சூர் கமிங். அவர்களை ரிஸீவ் பண்ண நாம் ஏர்போர்ட் போக வேண்டாமா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     "கட்டாயம் போகத்தான் வேணும்" என்றாள் மூர்த்தியின் மனைவி லோசனா.

     "அவங்களுக்கு 'கார்லண்ட்' போட்டு ரிஸீவ் செய்ய வேணுமா, இல்லே... இண்டியன் கஸ்டம்ஸ் எப்படி?" என்று கேட்டாள் ராக்ஃபெல்லர்.

     "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். கார்லே அழைத்துக் கொண்டு வந்தால் போதும்" என்றார் அய்யாசாமி.

     "ஏர்போர்ட்லே அவங்களுக்காக நூறு கார் வெயிட் பண்ணச் சொல்லியிருக்கேன். சீக்கிரம் புறப்படுங்க போகலாம்" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     பாலக்காட்டுப் பாட்டிகளுக்கு ஒரு விமானம். டின்னவெல்லி பாட்டிகளுக்கு ஒரு விமானம். டாஞ்சூர் பாட்டிகளுக்கு ஒரு விமானம், உளுந்து, உலக்கை, உரல் முதலிய சாமான்களுக்கு ஒரு விமானம் - ஆக நாலு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து இறங்கின.

     அவற்றிலிருந்து வரிசையாக இறங்கி வந்த பாட்டிமார்களைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ஏர்ஹோஸ்ட்டஸ் லல்லி, பால்காட் பாட்டிமார்களின் லீடரான துளசிப் பாட்டியை அறிமுகப்படுத்தினாள். டாஞ்சூர் குரூப் லீடர் காவேரிப் பாட்டி, டின்னவெல்லி குரூப் லீடர் சேஷிப் பாட்டி இவ்விருவரையும் பஞ்சு அறிமுகப்படுத்தினான்.

     "ஹவ் டு யூ டு?" என்று மிஸஸ் ராக்ஃபெல்லர் அவர்களை விசாரித்த போது பாட்டிமார்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.

     அப்போது பஞ்சு குறுக்கிட்டு, "ஓ! தே டு ஒண்டர்புல் அப்ளம்ஸ்!" என்று ஹாஸ்யமாகச் சொல்லவே எல்லோரும் சிரித்து விட்டனர்.

     பாட்டிமார்களில் பாதிப் பேர் சம்மர் ஹவுஸிலும் மற்ற பாதிப்பேர் டம்பர்ட்டன் ஓக்ஸிலும் இறக்கிவிடப்பட்டனர்.

     "இவர்களுக்கெல்லாம் இப்போது என்ன ஆகாரம் கொடுப்பது? டீயும் பிஸ்கெட்டும் கொடுக்கச் சொல்லட்டுமா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     "சிவ சிவா! இன்றைக்கு ஏகாதசி! இவர்கள் பச்சைத் தண்ணீர் கூடத் தொடமாட்டார்கள். க்ளீன் பட்டினிதான்!" என்றான் பஞ்சு.

     "ஏகாடஸிக்கு ஏன் பட்டினி இருக்கணும்?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     "அப்போதுதான் வைகுண்டம் போவார்களாம்!" என்றான் பஞ்சு.

     "வைகவுண்ட்லே போகணுமா? எத்தனை வைகவுண்ட் வேணுமானாலும் நான் 'அரேஞ்ச்' பண்ணுவேனே!" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     "வைகவுண்ட் இல்லை. வைகுண்டம். அது மேலே இருக்கிறது" என்றான் பஞ்சு.

     "வைகவுண்ட் கூட மேலே தான் போகும்" என்றாள் மிஸஸ் ராக்.

     "சரி, அவங்க வந்த வேலை முடியட்டும். அப்புறம் வைகவுண்ட்டிலேயே ஏற்றி அனுப்பிவிடலாம்" என்றான் பஞ்சு.

     "நாளைக்கே அப்பளம் ஒர்க்ஸை பிகின் பண்ணிடலாமில்லையா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     "நாளைக்கு எப்படி முடியும்? கிணறே வெட்டி ஆகவில்லையே?" என்று கூறினாள் தஞ்சாவூர் காவிரிப்பாட்டி.

     "கிணறா? அப்படீன்னா?" என்றூ கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     "வெல்..." என்றான் பஞ்சு.

     "வெல் எதுக்கு?"

     "உளுந்தை ஊறப் போடறதுக்கு வெல்வாட்டர் தான் வேணும். அது மட்டுமில்லாமல் இவர்களெல்லாம் வெல் வாட்டர்லேதான் ஸ்நானம் செய்வார்கள்" என்றார் அம்மாஞ்சி.

     "அப்படின்னா இம்மீடியட்டா பெரிய வெல்லாக ஒன்று வெட்டுவதற்கு ஏற்பாடு செய்துவிடலாமே!" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     "நாளைக்குக் காலையிலே பந்தல் போடறவங்களும் பத்துப் பாத்திரம் தேய்க்கிறவங்களும் வராங்க. பந்தல் போடுகிற ஆசாமிகளை விட்டால் ஒரே நைட்ல கிணறு வெட்டி ராட்டினமும் போட்டுக் கொடுத்து விடுவார்கள்" என்றான் பஞ்சு.

     மறுநாளே பந்தல்காரர்கள் வந்ததும் அவர்களைக் கொண்டு பெரிய கிணறு ஒன்றை வெட்டி, ராட்டினமும் போட்டு விட்டான் பஞ்சு.

     கிணறை வந்து பார்த்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     "இதுதான் வெல்" என்றான் பஞ்சு.

     "வெரி குட் மிஸ்டர் பஞ்ச்! வெல் ரொம்ப நல்லாயிருக்குது" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     "கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு முன்னால் தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொளுத்த வேண்டும்" என்றாள் காவேரிப் பாட்டி.

     "சரி, அம்மாஞ்சி வாத்தியாரைக் கூப்பிடு" என்றார் அய்யாசாமி. அம்மாஞ்சி வாத்தியார் வந்து தேங்காய் உடைத்தார். அதைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர் ஆச்சரியத்துடன் "தேங்காயைச் சம அளவில் வட்டமாக எப்படி உடைத்தார்?" என்று கேட்டாள்.

     "தட் இஸ் தி இண்டியன் ஆர்ட்!" என்றான் பஞ்சு.

     தேங்காய்க்குக் குடுமி வைத்திருப்பதைக் கண்டுவிட்டு 'டஃப்டட் கோகனட்!' என்று சொல்லிச் சிரித்தாள் மிஸஸ் ராக்.

     "ஏண்டா பஞ்சு! அமெரிக்காவிலே தேங்காய்க்கெல்லாம் கிராப்பு வைப்பாளாமா?" என்று கேட்டாள் பாட்டி.

     "சரி, பூஜையாகிவிட்டது. இனி தண்ணீர் எடுக்கலாம். தாம்புக் கயிறு இருக்கிறதா?" என்று கேட்டார் அய்யாசாமி.

     "நாலு டஜன் தாம்புக் கயிறு கொண்டு வந்திருக்கிறேன். போதுமா?" என்றான் பஞ்சு.

     அய்யாசாமி, குடத்தில் தாம்புக் கயிறைச் சுருக்கிட்டுத் தண்ணீர் சேந்தினார்.

     ராட்டினம் 'கிறீச் கிறீச்' என்று சத்தமிட்டது.

     மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு அந்தச் சத்தம் மிகவும் பிடித்திருந்தது.

     "ஓ! வாட் எ மியூஸிகல் சவுண்ட்! இந்த சவுண்ட் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்குமா?" என்று விசாரித்தார் மிஸஸ் ராக்.

     "ராட்டினத்துக்கு கிரீஸோ, எண்ணெயோ போடாமலிருந்தால் இந்த சவுண்ட் எப்போதும் வந்து கொண்டிருக்கும். அது மட்டுமல்ல, இன்னும் பல தினுசான சவுண்டுகள் கூட வரும்!" என்றான் பஞ்சு.

     "பஞ்ச்! அப்படின்னா இந்த ராட்டினத்துக்கு யாரும் எண்ணெய் போட்டுவிடாமல் உஷாராகப் பார்த்துக்கணும். இப்பவே இங்கே ரெண்டு வாட்ச்மேன் போட்டுவிடுங்க. யாராவது எண்ணெய் போட வந்தால் அதைத் தடுத்துடணும்" என்றாள்.

     "சரி, மேடம்" என்றான் பஞ்சு.

     "எனக்கு இந்த வெல்லிலேயிருந்து வாட்டர் புல் பண்ணிப் பார்க்கணும் போல ஆசையாயிருக்குது" என்று கூறித் தண்ணீர்க் குடத்தைத் தானே இழுத்துப் பார்த்தாள். புதுத் தாம்புக் கயிறு ஆனதால் அந்தச் சீமாட்டியின் கைகள் சிவந்து எரிச்சலெடுத்தன. உடனே கைகளுக்கு 'க்ளவுஸ்' போட்டுக் கொண்டு சேந்தினாள். குடம் தாறுமாறாக ஊசலாடி 'நங்'கென்று சுவரில் மோதவே ஓட்டையாகித் தண்ணீரெல்லாம் கீழே போய்விட்டது. அதைக் கண்டு "வெரி ஸாரி பஞ்ச்! குடம் 'பஞ்சர்' ஆகிவிட்டது" என்று சொல்லி வருத்தப்பட்டாள்.

     "பரவாயில்லை மேடம்! 'வெல்டு' பண்ணிவிடலாம்" என்றான் பஞ்சு.

     ராட்டினத்திலிருந்து மியூசிகல் சவுண்ட் உண்டாகிறது என்னும் சேதியைக் கேள்வியுற்ற அமெரிக்க சங்கீத நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஹாலிவுட் ஆர்க்கெஸ்ட்ரா கோஷ்டியினரும் சம்மர் ஹவுஸ் தோட்டத்தை முற்றுகையிட்டனர்.

     ராட்டினத்தில் உண்டான விதவிதமான ஒலிகளைக் கேட்டுப் பரவசமாகி, இத்தகைய இனிய சங்கீதத்தை எழுப்பும் அந்த அதிசய மியூசிகல் இன்ஸ்ட்ருமென்ட்டை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஆராய்ச்சி செய்து பார்த்தனர்.

     இந்த வாத்தியத்தைக் கண்டுபிடித்த இந்திய நிபுணரைப் பேட்டி காணவும் அந்த மேதையின் அறிவுக் கூர்மையை அமெரிக்க நாட்டின் சங்கீத வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்தனர்.

     ஹாலிவுட் பட முதலாளிகள் அப்போது தாங்கள் எடுத்துக் கொண்டிருந்த சில படங்களில் இந்த அதிசய சங்கீதக் கருவியின் ஒலியைப் பின்னணியாக உபயோகிக்கத் தீர்மானித்தனர். ஆனால், இவ்வளவு பெரிய வாத்தியத்தைப் பெயர்த்து அப்பால் எடுத்துச் செல்ல முடியாது என்று அறிந்த போது, அதே மாதிரி வாத்தியக் கருவி ஒன்றைத் தங்கள் ஸ்டூடியோவிலேயே சொந்தமாகச் செய்து வைத்துக் கொள்ள விரும்பினர். ஆனால் இன்னொரு வாத்தியம் செய்தால் அதிலிருந்து இதே மாதிரி 'சவுண்ட்' வரும் என்பது நிச்சயமில்லை என்று தோன்றவே, சம்மர் ஹவுஸ் ராட்டினத்தையே உபயோகித்து அதிலிருந்தே தேவையான ஒலிகளை ரிக்கார்ட் செய்து கொள்வதெனத் தீர்மானித்தனர்.

     அப்பளம் இடுவதை வேடிக்கை பார்க்க மிக ஆவலாயிருந்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். பாட்டிமார்கள் கொண்டு வந்திருந்த வண்ணக் குழவிகளை வாங்கி அவற்றைத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே, "பெகூலியர் ஷேப்! நாள் ஒன்றுக்கு ஒரு பாட்டி எத்தனை அப்பளம் செய்வாள்?" என்று கேட்டாள்.

     "நூறு, நூற்றைம்பது..." என்று பதில் கிடைத்தது.

     "மோர் தேன் ஏ செஞ்சுரி!" என்று வியந்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     "மூணு நாளில் சஹஸ்ரநாமம் கூடச் செய்து முடிக்கலாம். இதென்ன பிரமாதம்!" என்றார் அம்மாஞ்சி.

     "என் ஃபிரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் எல்லோரும் நாளைக்கு வர்றாங்க. அப்பளம் இடுவதைப் பார்க்க அவங்களெல்லாம் ரொம்ப ஆசையாயிருக்காங்க" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

     மறுநாளே பாட்டிமார்கள் அப்பளம் இடத் தொடங்கிவிட்டார்கள். அறுபத்து மூவர் உற்சவம், நேரு மீட்டிங், எலிசபெத் ராணி விஜயம், கிரிக்கெட் மாட்ச் இம்மாதிரி சமயங்களில் கூடக் காண முடியாத அத்தனை பெரிய கூட்டம் வாஷிங்டன் நேஷனல் ஆர்ட் காலரி வாசலில் கூடியிருந்தது! காரணம், அத்தனை பாட்டிமார்களும் இட்டுப் போடுகிற அப்பளங்கள் அந்த மாடிக்குத்தான் ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டன.

     பத்திரிகைகளில் அப்பளத்தைப் பற்றிய வர்ணனைகளும், செய்திகளும் அடுத்தடுத்து வந்து கொண்டேயிருந்தன. ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரில் அப்பளங்கள் வருகிற போது மக்கள் "தேர்! தேர் கம்ஸ் தி ஹெலிகாப்டர்" என்று கையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

     ஆர்ட் காலரி வாசலில் ஒரு பெரிய போர்டு வைக்கப்பட்டிருந்தது.

     நம் ஊர்களில் கிரிக்கெட் டெஸ்ட் நடந்து கொண்டிருக்கும் போது ஸ்கோர் போர்டில் ரன்களையும், ஓவர்களையும் போட்டுக் கொண்டிருப்பார்களல்லவா? அந்த மாதிரி, எத்தனை பாட்டிமார்கள் எத்தனை அப்பளம் இட்டார்கள்? எவ்வளவு பேர் செஞ்சுரி போட்டார்கள்? எந்த குரூப் எவ்வளவு அப்பளம் இட்டு முடித்தது? போன்ற விவரங்களை போர்ட்டில் மணிக்கொரு முறை எழுதிக் கொண்டே இருந்தார்கள்!

     முதல் நாளே அப்பள ஸ்கோர் பதினைந்தாயிரத்து முன்னூற்றைம்பதை எட்டிப் பிடித்துவிட்டபோது வாஷிங்டன் மக்கள் வானமே அதிர்ந்து போகிற மாதிரி கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

     டாஞ்சூர் குரூப்தான் அதிக அப்பளம் இட்டு முடித்திருந்தார்களாதலால், 'டாஞ்சூர் குரூப் லீடிங்', 'பால்காட் செகண்ட்', 'டின்னவெல்லி லாஸ்ட்' என்று சொல்லிக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

     "பால்காட் மே லீட் டுமாரோ" என்று பத்திரிகைகளில் வெளியான ஹேஷ்யங்களைப் பார்த்து விட்டு கூட்டத்தினர் 'ஐ பெட்! பால்காட் இஸ் நாட் வின்னிங்!' என்று தங்களுக்குள் பந்தயம் கட்டிக் கொண்டார்கள்.

     "ஒரு அப்பளத்தைக் கூடக் கண்ணால் பார்க்க முடியவில்லையே!" என்று சிலர் வருத்தப்பட்டனர்.

     அங்கே, சம்மர் ஹவுஸிலும், டம்பர்ட்டன் ஓக்ஸிலும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அப்பளம் புரொடக்ஷனைப் பார்க்க மிஸஸ் ராக்ஃபெல்லர் உறவினர்களும், சிநேகிதர்களும் நூறு பேருக்கு மேல் கூடியிருந்தார்கள்.

     பாட்டிமார்கள் வரிசை வரிசையாகவும், அர்த்த சந்திர வடிவத்திலும் உட்கார்ந்து கொண்டு அப்பளம் இடுகிற காட்சியைக் கண் கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். சில பாட்டிமார்கள் ஒரு பக்கம் உரல்களை வரிசையாக வைத்து அப்பள மாவு இடித்துக் கொண்டிருந்தனர்.

     "உலக்கையின் நுனியில் ஏன் இரும்புப் பூண் போடப்பட்டிருக்கிறது?" என்று கேட்டாள் அமெரிக்க மாது ஒருத்தி.

     "இல்லாவிட்டால் உலக்கையின் நுனியில் கொழுந்துவிட்டுத் துளிர்த்துவிடும். அதற்காகத்தான் பூண் போட்டு வைத்திருக்கிறார்கள்" என்று அம்மாஞ்சி ஒரு போடு போட்டார்.

     அப்பள உருண்டைகளைத் தொட்டுப் பார்த்து விட்டு 'வெரி ஸாப்ட் பால்ஸ்' என்று கூறி வியந்தனர் சில அமெரிக்க மாதர்கள்.

     மிஸஸ் ராக்ஃபெல்லர் உறவுக்காரப் பெண் ஒருத்தி அப்பள உருண்டையைக் கையில் எடுத்துப் பார்த்த போது அது அவள் கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. உடனே அவள் அதை இன்னொரு கையால் இழுத்தாள். அது இன்னொரு கையிலும் ஒட்டிக் கொண்டு ரப்பர் போல் நீண்டது. மேலும் இழுத்தால் அறுந்து போகும் என பயந்து அவள் தன் இரண்டு கைகளையும் வெகு நேரம் அப்படியே வைத்துக் கொண்டிருந்தாள்!

     சிலர் அப்பள மாவை வாயில் போட்டுச் சுவைத்த போது பற்களோடு ஒட்டிக் கொள்ளவே, 'இண்டியன் சுவிங்கம்' என்று வர்ணித்தார்கள்.

     அமெரிக்க விஞ்ஞானிகள் அப்பள உருண்டைகளைக் கண்ணாடி டியூப்களில் போட்டு விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி நடத்திப் பார்த்துவிட்டு, 'இதைப் போன்ற அதிசயப் பொருள் உலகத்தில் வேறு கிடையாது' என்ற கருத்தைத் தெரிவித்தனர்.

     அமெரிக்க தொழிலதிபர்கள் பலர் கோடிக்கணக்கில் அப்பளங்கள் புரொட்யூஸ் செய்து ரஷ்யாவைத் திகைக்க வைக்க வேண்டும் என எண்ணினார்கள். ஒரு பாட்டி அம்மாளை அழைத்து உளுந்து ஊறப் போடுவது முதல் எல்லா விஷயங்களையும் விளக்கமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

     "எல்லாம் சரிதான்; அப்பளங்களை எப்படி வட்டமாகச் செய்கிறீர்கள்?" என்று கேட்டார் ஒருவர்.

     "உங்களிடம் 'காம்பஸ்' கூட இல்லையே! பென்சிலால் வட்டமாகக் கோடு போட்டுக் கொண்டு கத்தரியால் வெட்டி எடுப்பீர்களா? அப்படியானால் மிச்சம் விழும் கட்பீஸுகளை என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார் இன்னொருவர்.

     பாட்டியம்மாள் சிரித்துக் கொண்டே, "இது ரொம்ப ஈஸி, இதோ பாருங்கள்" என்று சொல்லி வட்ட வடிவமான அப்பளம் ஒன்றை இட்டுக் காட்டினாள். அதைக் கண்ட விஞ்ஞானிகள் வியந்து போனார்கள்!

     கடைசியில், அவர்கள் அப்பள ஷீட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களைக் கண்டு பிடிப்பது சாத்தியமென்றும், ஆனால் அந்த ஷீட்டுகளை வட்டமாகக் கத்தரித்து எடுப்பதற்கு தனியாக வேறு இயந்திரத்தைத்தான் உபயோகிக்க வேண்டுமென்றும் கூறினர்.

     "அப்படியானால், அந்த மெஷின்களை உடனே தயார் செய்யுங்கள்" என்றனர் தொழிலதிபர்கள்.

     "செய்யலாம்; ஆனால் அதில் ஒரு இடையூறு இருக்கிறது" என்றனர் விஞ்ஞானிகள்.

     "அதென்ன இடையூறு?"

     "அப்பள ஷீட்டுகளில் சீரகங்களை எப்படிப் பதிப்பது என்பதுதான் விளங்கவில்லை. எப்படியும் 1968-க்குள் சீரகங்கள் பதித்த அப்பள ஷீட்டுகள் தயாரிப்பது சாத்தியமாகலாம் என்று எண்ணுகிறோம்" என்றனர்.

     "அதற்குள் ரஷ்யர்கள் முந்திக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே!" என்று கவலைப்பட்டனர் அமெரிக்கத் தொழிலதிபர்கள்.

     மூன்றாவது நாள் மாலை அப்பளங்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டிவிட்டது. ஆர்ட் காலரி வாசலில் கூட்டமும் மூன்று மடங்காகப் பெருகி வழிந்தது. திடீரென அன்று மாலை பலத்த காற்று வீசத் தொடங்கவே, மாடி மீது உலர்த்தப்பட்டிருந்த அப்பளங்களில் பாதிக்கு மேல் ஆகாசத்தில் பறக்கத் தொடங்கிவிட்டன. வட்டம் வட்டமாக வானத்தில் பறக்கும் அப்பளங்களைக் கண்ட வாஷிங்டன் மக்கள் அதிசயத்தில் ஆழ்ந்து 'ஃபிளையிங் ஸாஸர்' 'ஃபிளையிங் ஸாஸர்' என்று கத்தியபடி ஆகாசத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஸ்ட்ரீட்டுகளும், அவென்யூக்களும், அல்லோல கல்லோலப்பட்டன. சிலர் துப்பாக்கியால் அந்தப் பறக்கும் தட்டுகளைக் குறி பார்த்துச் சுட்டனர். சிலர் பறக்கும் அப்பளங்களைப் பிடிக்க அவற்றைத் துரத்திக் கொண்டு ஓடினர். பறக்கும் அப்பளங்களைப் பற்றிப் பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வர்ணித்துச் செய்திகள் பிரசுரிக்கப்பட்டன. சில அப்பளங்கள் நம் ஊர் காற்றாடிகளைப் போல் மரங்களின் மீதும், கட்டிடங்களின் மீதும், சிலைகளின் மீதும் தொத்திக் கொண்டன. இன்னும் சில பொடோமாக் நதியில் விழுந்து வெள்ளத்தில் மிதந்து சென்றன.

     பறந்து சென்ற அப்பளங்களில் ஒன்று வெனிசூலா சுதந்திர வீரன் கையிலிருந்த கூரிய வாள் முனையில் சிக்கிக் கொண்டது. அந்தச் சிலைக்கு உயிர் இருந்தால் தன்னிடம் ஓர் அப்பளம் சிக்கியது பற்றி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அடைந்திருக்கும்!

     அப்பள நஷ்டத்தைக் குறித்து மிஸஸ் ராக்ஃபெல்லர் அடைந்த வருத்தத்துக்கு அளவேயில்லை. அப்பளம் 'லாஸ்' ஆனது பற்றி அந்தச் சீமாட்டிக்கு உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் அனுதாபத் தந்திகள் வந்து குவிந்து கொண்டிருந்தன.

     "நீங்க கவலைப்படாதீங்க...! இரண்டு நாளில் முப்பதாயிரம் இட்டு முடித்து விடலாம்!" என்று ஆறுதல் கூறினாள் மிஸஸ் மூர்த்தி. வெங்கிட்டுக்கு மட்டும் இதெல்லாம் ஒரே தமாஷாயிருந்தது. அவன் தன் பாட்டியிடம் ஓடிப் போய், "பாட்டி! அப்பளத்தையெல்லாம் சுட்டு விட்டார்களாம்" என்றான்.

     "அட பாவமே! சுடுவானேன்? என்னிடம் சொல்லியிருந்தால் எண்ணெயில் பொரித்துக் கொடுத்திருப்பேனே! சுட்ட அப்பளம் நன்றாயிருக்காதேடா?" என்றாள் அந்தப் பாட்டி.

     சம்மர் ஹவுஸ் வாசலிலும் டம்பர்ட்டன் ஓக்ஸ் வாசலிலும் அப்பளப் பாட்டிகளின் வருகையை எதிர்பார்த்துப் பத்திரிகை நிருபர்கள், புகைப்பட நிபுணர்கள், கையெழுத்து வேட்டைக்காரர்கள், பொதுமக்கள் எல்லோரும் காத்துக் கொண்டிருந்தனர்.

     இரண்டு செஞ்சுரி போட்ட எச்சுமிப் பாட்டிதான் முதல் முதல் கையில் அப்பளக் குழவியுடன் வெளியே வந்தாள். பத்திரிகை நிருபர்கள் அந்தப் பாட்டியைச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் பாட்டியின் சார்பில் பஞ்சு தான் பதில் கூறினான்.

     "ஆர் யூ தி கேப்டன் ஆப் டாஞ்சூர் டீம்?" என்று கேட்டார் ஒரு நிருபர்.

     "நோ ஷீ இஸ் ப்ரம் டின்னவெல்லி!" என்றான் பஞ்சு.

     சிலர் எச்சுமிப் பாட்டியிடம் 'ஆட்டோகிராஃப்' கேட்டனர்.

     "ஆட்டோகிராஃபாவது? ஆட்டோ ரிக்ஷாவாவது? அதெல்லாம் எனக்கொன்றும் தெரியாது" என்று கூறிவிட்டு வேகமாகப் போய்விட்டாள் அந்தப் பாட்டி.

     அந்தச் சமயம் அந்தப் பக்கமாக வந்த மிஸஸ் ராக்ஃபெல்லர், "பாட்டீஸைத் தொந்தரவு செய்யாதீங்க. அவங்க ரெஸ்ட் எடுத்துக்கட்டும்..." என்று கூறிக் கூட்டத்தினரைப் போகச் சொன்னாள்.


வாஷிங்டனில் திருமணம் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11