கல்லாடர்

அருளிய

கல்லாடம்

     கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் 2 பாயிரம். அடுத்து வரும் 100 பாடல்கள் நூல்.

பாயிரம்

வேழமுகக் கடவுள் வணக்கம்

திங்கள் முடி பொறுத்த பொன்மலை அருவி
கரு மணி கொழித்த தோற்றம் போல,
இரு கவுள் கவிழ்த்த மதநதி உவட்டின்
வண்டினம் புரளும் வயங்கு புகர் முகத்த!
செங் கதிர்த் திரள் எழு கருங் கடல் போல, 5

முக் கண்மேல் பொங்கும் வெள்ளம் எறி கடத்த
பெரு மலைச் சென்னியில் சிறுமதி கிடந்தென,
கண் அருள் நிறைந்த கவின் பெறும் எயிற்ற!
ஆறு-இரண்டு அருக்கர் அவிர் கதிர்க் கனலும்,
வெள்ளை மதி முடித்த செஞ் சடை ஒருத்தன் 10

உடல் உயிர் ஆட ஆடுறும் அனலமும்,
தென் கீழ்த் திசையோன் தெறுதரு தீயும்,
ஊழித் தீப் படர்ந்து உடற்றுபு சிகையும்,
பாசக் கரகம் விதியுடை முக்கோல்
முறிக்கலைச் சுருக்குக் கரம் பெறு முனிவர் 15

விழிவிடும் எரியும், சாபவாய் நெருப்பும்,
நிலை விட்டுப் படராது காணியில் நிலைக்கச்
சிறு காற்று உழலும் அசை குழைச் செவிய!
ஆம்பல்-முக அரக்கன் கிளையொடு மறியப்
பெருங் காற்று விடுத்த நெடும் புழைக் கரத்த! 20

கரு மிடற்றுக் கடவுளை, செங் கனி வேண்டி,
இடம் கொள் ஞாலத்து, வலம் கொளும் பதத்த!
குண்டு நீர் உடுத்த நெடும் பார் எண்ணமும்,
எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும்,
அளந்துகொடு முடித்தல் நின் கடன் ஆதலின் 25

வரி உடல் சூழக் குடம்பை நூல் தெற்றியப்
போக்கு வழி படையாது உள் உயிர் விடுத்தலின்
அறிவு புறம்போய உலண்டு-அது போல,
கடல்-திரை சிறுக மலக்கு துயர் காட்டும்
உடல் எனும், வாயில், சிறை நடுவு புக்கு, 30

போகர் அணங்குறும் வெள்ளறிவேமும்,
ஆரணம் போற்றும் நின் கால் உற வணங்குதும்
கால் முகம் ஏற்ற துளை கொள் வாய்க் கறங்கும்,
விசைத்த நடை போகும் சகடக் காலும்,
நீட்டி வலி தள்ளிய நெடுங் கயிற்று ஊசலும் 35

அலமரு காலும், அலகைத் தேரும்,
குறை தரு பிறவியின் நிறை தரு கலக்கமும்,
என் மனத்து எழுந்த புன்மொழித் தொடையும்,
அருள் பொழி கடைக்கண் தாக்கி,
தெருள் உற, ஐய! முடிப்பை, இன்று, எனவே. 40

வேலன் வணக்கம்

பாய் திரை உடுத்த ஞால முடிவு என்ன,
முடங்குளை முகத்துப் பல் தோள் அவுணனொடு,
மிடை உடு உதிர, செங்களம் பொருது;
ஞாட்பினுள் மறைந்து, நடுவு அறு வரத்தால்;
வடவை நெடு நாக்கின் கிளைகள் விரிந்தென்ன, 5

செந் துகிர் படரும் திரைக் கடல் புக்கு,
கிடந்து எரி வடவையின் தளிர்முகம் ஈன்று,
திரை எறி மலைகளின் கவடு பல போக்கி,
கல் செறி பாசியின் சினைக்குழை பொதுளி,
அகல்திரைப் பரப்பின், சடை அசைந்து அலையாது, 10

கீழ் இணர் நின்ற மேற்பகை மாவின்
ஓர் உடல் இரண்டு கூறுபட விடுத்த
அழியாப் பேர் அளி உமை கண்ணின்று
தன் பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த,
அமையா வென்றி அரத்த நெடு வேலோய்! 15

கீழ்மேல் நின்ற அக் கொடுந் தொழிற் கொக்கின்
கூறு இரண்டு ஆய ஒரு பங்கு எழுந்து
மாயாப் பெரு வரத்து ஒரு மயில் ஆகி,
புடவி வைத்து ஆற்றிய பல் தலைப் பாந்தள்
மண் சிறுக விரித்த மணிப் படம் தூக்கி, 20

விழுங்கிய பல் கதிர் வாய்தொறும் உமிழ்ந்தென,
மணி நிரை சிந்தி மண் புக அலைப்ப;
கார் விரித்து, ஓங்கிய மலைத்தலைக் கதிர் என,
ஓ அறப் போகிய சிறை விரி முதுகில்,
புவனம் காணப் பொருளொடு பொலிந்தோய்! 25

போழ்படக் கிடந்த ஒரு பங்கு எழுந்து,
மின்னன் மாண்ட கவிர் அலர் பூத்த
சென்னி வாரணக் கொடும் பகை ஆகி,
தேவர் மெய் பனிப்புற வான் மிடை உடுத்திரள்
பொரியின் கொறிப்ப, புரிந்த பொருள் நாடித் 30

தாமரை பழித்த கை மருங்கு அமைத்தோய்!
ஒருமையுள் ஒருங்கி, இரு கை நெய் வார்த்து,
நாரதன் ஓம்பிய செந்தீக் கொடுத்த
திருகு புரி கோட்டுத் தகர் வரு மதியோய்!
முலை என இரண்டு முரண் குவடு மரீஇக் 35

குழற்காடு சுமந்த யானைமகட் புணர்ந்தோய்!
செங் கண் குறவர் கருங் காட்டு வளர்த்த
பைங் கொடி வள்ளி படர்ந்த புய மலையோய்!
இமயம் பூத்த சுனை மாண் தொட்டில்
அறிவின் தங்கி, அறு தாய் முலை உண்டு 40

உழல்மதில் சுட்ட தழல்நகைப் பெருமான்
வணங்கி நின்று ஏத்த, குரு மொழி வைத்தோய்!
'ஓம்' எனும் எழுத்தின் பிரமம் பேசிய
நான்மறை விதியை, நடுங்கு சிறை வைத்து,
படைப்பு முதல் மாய, வான்முதல் கூடித் 45

தாதையும் இரப்ப, தளை-அது விடுத்தோய்!
கூடம் சுமந்த நெடு முடி நேரி
விண் தடையர், மண் புகப் புதைத்த
குறுமுனி தேற, நெடு மறை விரித்தோய்!
ஆறு திரு எழுத்தும் கூறு நிலை கண்டு, 50

நின் தாள் புகழுநர் கண்ணுள் பொலிந்தோய்!
மணிக்கால் அறிஞர் பெருங் குடித் தோன்றி,
இறையோன் பொருட்குப் பரணர் முதல் கேட்ப,
பெருந் தமிழ் விரித்த அருந் தமிழ்ப் புலவனும்,
பாய் பார் அறிய, நீயே: ஆதலின், 55

வெட்சி மலர் சூழ்ந்த நின் இரு கழற் கால்
குழந்தை அன்பினொடு சென்னிதலைக் கொள்ளுதும்
அறிவு நிலை கூடாச் சில் மொழி கொண்டு,
கடவுள் கூற உலவா அருத்தியும்,
சனனப் பீழையும், தள்ளாக் காமமும், 60

அதன் படுதுயரமும் அடைவு கெட்டு இறத்தலும்,
தென்புலக் கோமகன் தீத் தெறு தண்டமும்,
நரகொடு துறக்கத்து உழல்வரு பீழையும்
நீளாது இம்பரின் முடித்து,
மீளாக் காட்சி தருதி, இன்று எனவே. 65

1. தமர் நினைவு கூறி வரைவு கடாதல்

அமுதமும் திருவும் பணிவரப் படைத்த
உடலக்கண்ணன் உலகு கவர்ந்து உண்ட
களவுடை நெடுஞ்சூர் கிளை களம்விட்டு ஒளித்த
அருள்நிறைந்து அமைந்த கல்வியர் உளமெனத்
தேக்கிய தேனுடன் இறால்மதி கிடக்கும் 5

எழுமலை பொடித்த கதிர்இலை நெடுவேல்
வள்ளி துணைக்கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த
கறங்கு கால்அருவிப் பரங்குன்று உடுத்த
பொன்னகர்க் கூடல் சென்னியம் பிறையோன்
பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினை 10

‍கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறி,
பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி
என்உளம் குடிகொண்டு இரும்பயன் அளிக்கும்
கள்அவிழ் குழல்சேர் கருணைஎம் பெருமான்
மலர்ப்பதம் நீங்கா உளப்பெருஞ் சிலம்ப! 15

கல்லாக் கயவர்க்கு அருநூல் கிளைமறை
சொல்லினர் தோம்என துணைமுலை யருத்தன
பலஉடம்பு அழிக்கும் பழிஊன் உணவினர்
தவம்எனத் தேய்ந்தது துடிஎனும் நுசுப்பே
கடவுள் கூறார் உளம்எனக் குழலும் 20

கொன்றை புறவுஅகற்றி நின்றஇருள் காட்டின
சுரும்பு படிந்துண்ணும் கழுநீர் போல
கறுத்துச் சிவந்தன கண்இணை மலரே
ஈங்கிவை நிற்க சீறூர் பெருந்தமர்
இல்லில் செறிக்கும் சொல்லுடன் சில்மொழி 25

விள்ளும் தமியில் கூறினர்
உள்ளம் கறுத்துக் கண்சிவந்து உருத்தே. 27

2. தாய் அறிவு கூறி வரைவு கடாதல்

பூமணி யானை பொன்என எடுத்து
திங்களும் புயலும் பரிதியும் சுமந்த
மலைவரும் காட்சிக்கு உரிய ஆகலின்
நிறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர்
ஈன்ற செங்கவி எனத்தோன்றி நனிபரந்து 5

பாரிடை இன்பம், நீளிடைப் பயக்கும்
பெருநீர் வையை வளைநீர்க் கூடல்
உடலுயிர் என்ன உறைதரு நாயகன்
கடுக்கைமலர் மாற்றி வேப்பலர் சூடி
ஐவாய்க் காப்புவிட்டு அணிபூண் அணிந்து 10

விரிசடை மறைத்து மணிமுடி கவித்து
விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி எடுத்து
வழுதி ஆகி முழுதுலகு அளிக்கும்
பேரருள் நாயகன் சீரருள் போல
மணத்துடன் விரிந்த கைதைஅம் கானல் 15

நலத்தொடர் வென்றிப் பொலம்பூண் குரிசில்
சின்னம் கிடந்த கொடிஞ்சி மான்தேர்
நொச்சிப் பூவுதிர் நள்இருள் நடுநாள்
விண்ணம் சுமந்து தோற்றம் செய்தென
தன்கண் போலும் எண்கண் நோக்கி 20

கள்வரைக் காணும் உள்ளம் போலச்
செம்மனம் திருகி உள்ளம் துடித்து
புறன்வழங் காது நெஞ்சொடு கொதித்தனள்
மாறாக் கற்பின் அன்னை
கூறுஆம் மதியத் திருநுதற் கொடியே! 25

3. பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்

பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினைப்
பொருத்தலும் பிரித்தலும் பொருபகை காட்டலும்
உட்பகை அமைத்தலும் உணர்ந்துசொல் பொருத்தலும்
ஒருதொழிற்கு இருபகை தீராது வளர்த்தலும்
செய்யா ‍அமைச்சுடன் சேரா அரசன் 5

நாடு கரிந்தன்ன காடுகடந்து இயங்கி
இடும்பை நிரப்பினர்க்கு ஈதலின் இறந்தோர்க்கு
இதழ்நிறை மதுவம் தாமரை துளித்தென
விழிசொரி நீருடன் பழங்கண் கொண்டால்
உலகியல் நிறுத்தும் பொருள்மரபு ஒடுங்க 10

மாறனும் புலவரும் மயங்குறு காலை
முந்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கால்
'அன்பின் ஐந்திணை' என்று அறுபது சூத்திரம்
கடல்அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்
பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத் 15

தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள்
தழற்கண் தரக்கின் சரும ஆடையன்
கூடல்அம் பெரும்பதி கூறார் கிளை என
நிறைநீர்க் கயத்துள் தருதாள் நின்று
தாமரை தவஞ்செய்து அளியுடன் பெற்ற 20

திருமகட்கு அடுத்ததுஎன் என்று
ஒருமை காண்குவர் துகிர்கிளைக் கொடியே! 22

4. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்

அண்டம்ஈன்று அளித்த கன்னி முனிவாக
திருநுதல் முளைத்த கனல்தெறு நோக்கினில்
ஆயிர மணிக்கரத்து அமைத்தவான் படையுடன்
சயம்பெறு வீரனைத் தந்துஅவன் தன்னால்
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த 5

இருள்மனத் தக்கன் பெருமகம் உண்ணப்
புக்க தேவர்கள் பொருகடற் படையினை
ஆரிய ஊமன் கனவென ஆக்கிய
கூடல் பெருமான் பொதியப் பொருப்பகத்து
அருவிஅம் சாரல் இருவிஅம் புனத்தினும் 10

மயிலும் கிளியும் குருவியும் நன்றி
செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வுஇல என்னும்
குன்றா வாய்மை நின்றுநிலை காட்டித்
தங்குவன கண்டும் வலிமனம் கூடி
ஏகவும் துணிந்தனம் எம்பெரும் படிறு 15

சிறிதுநின்று இயம்ப உழையினம் கேண்மின்இன்று
ஊற்றெழும் இருகவுள் பெருமதத் கொலைமலைக்
கும்பம் மூழ்கி உடல் குளித்து ஓட
பிறைமதி அன்ன கொடுமரம் வாங்கி,
தோகையர் கண்எனச் சுடுசரம் துரக்கும் 20

எம்முடைக் குன்றவர் தம்மனம் புகுதஇப்
புனக்குடிக் கணியர்தம் மலர்க்கை ஏடவிழ்த்து
வரிப்புற அணில்வால் கருந்தினை வளைகுரல்
கொய்யும் காலமும் நாள்பெறக் குறித்து
நிழலும் கொடுத்து அவர்ஈன்ற 25

மழலை மகார்க்கும் பொன்அணிந் தனரே. 26

5. இளமை கூறி மறுத்தல்

இரண்டுடல் ஒன்றாய்க் கரைந்து கண்படாமல்
அளவியல் மணநிலை பரப்பும் காலம்
தளைகரை கடந்த காமக் கடலுள்
புல்நுனிப் பனியென மன்னுதல் இன்றி
பீரம் மலர்ந்த வயாவுநோய் நிலையாது 5

வளைகாய் விட்ட புளிஅருந் தாது
செவ்வாய் திரிந்து வெள்வாய் பயவாது
மனைபுகை யுண்ட கருமண் இடந்து
பவள வாயில் சுவைகா ணாது
பொற்குட முகட்டுக் கருமணி அமைத்தெனக் 10

குங்குமக் கொங்கையும் தலைக்கண் கறாது
மலர அவிழ்ந்த தாமரைக் கயல்என
வரிகொடு மதர்த்த கண்குழி யாது
குறிபடு திங்கள் ஒருபதும் புகாது
பொன்பெயர் உடையோன் தன்பெயர் கெடுப்ப 15

தூணம் பயந்த மாண்அமர் குழவிக்கு
அரக்கர் கூட்டத்து அமர்விளை யாட
நெருப்புமிழ் ஆழி ஈந்தருள் நிமலன்
கூடல் மாநகர் ஆட எடுத்த
விரித்த தாமரை குவித்த தாளோன் 20

பேரருள் விளையாச் சீரிலர் போல
துலங்கிய அமுதம் கலங்கிய தென்ன
இதழ்குவித்துப் பணித்த குதலை தெரியாது
முருந்து நிரைத்த திருந்துபல் தோன்றாது
தெய்வம் கொள்ளார் திணிமனம் என்ன, 25

விரிதரு கூழையும் திருமுடி கூடாது
துணைமீன் காட்சியின் விளைகரு என்ன
பார்வையின் தொழில்கள் கூர்வழி கொள்ளாது
மறுபுலத்து இடுபகை வேந்துஅடக் கியதென
வடுத்தெழு கொலைமுலை பொடித்தில் அன்றே 30

செம்மகள் மாலை இம்முறை என்றால்
வழுத்தலும் வருதலும் தவிர்தி
மொழிக்குறி கூடாச் செவ்வே லோயே! 33

6. சுவடு கண்டு இரங்கல்

நிணமுயிர் உண்ட புலவு பொறாது
தலையுடல் அசைத்து சாணைவாய் துடைத்து
நெய்குளித்து அகற்றும் நெடுவேல் விடலை
அந்தணர் உகும்நீர்க்கு அருட்கரு இருந்து
கோடா மறைமொழி நீடுறக் காணும் 5

கதிருடல் வழிபோய்க் கல்லுழை நின்றோர்
நெருப்பு உருத்தன்ன செருத்திறல் வரைந்த
வாசகம் கண்டு மகிழ்ந்ததும் இவணே;
துணைவிளக்கு எரியும் நிலைவிழிப் பேழ்வாய்த்
தோகை மண்புடைக்கும் காய்புலி மாய்க்க 10

வாய்செறித் திட்ட மாக்கடிப்பு இதுவே
செடித்தலைக் காருடல் இடிக்குர ல் கிராதர்
மறைந்துண்டு அக்கொலை மகிழ்வுழி இந்நிலை
தவநதி போகும் அருமறைத் தாபதர்
நன்னர்கொள் ஆசி நாட்டியது இவ்வுழை 15

கறையணல் புயங்கன் எரிதழல் விடத்தை
மலைமறை அதகம் மாற்றிய அதுபோல்
கொடுமரக் கொலைஞர் ஆற்றிடைக் கவர,
எண்ணாது கிடைத்த புண்எழு செருநிலைக்
கைவளர் கொழுந்து மெய்பொடி யாகென 20

சிற்றிடைப் பெருமுலைப் பொற்றொடி மடந்தைதன்
கவைஇய கற்பினைக் காட்டுழி இதுவே
குரவம் சுமந்த குழல்விரித்து இருந்து
பாடலம் புனைந்தகற் பதுக்கை இவ்இடனே
ஒட்டுவிட்டு உலறிய பராரை நெட்டாக்கோட்டு 25

உதிர்பறை எருவை உணவுஊன் தட்டி
வளைவாய்க் கரும்பருந்து இடைபறிக் துண்ணக்
கண்டுநின்று உவந்த காட்சியும் இதுவே
செம்மணிச் சிலம்பும் மரகதப் பொருப்பும்
குடுமிஅம் தழலும் அவண்இருட் குவையும் 30

முளைவரும் பகனும் அதனிடை மேகமும்
சேயிதழ் முளரியும் கார்இதழ்க் குவளையும்
ஓர்உழைக் கண்ட உவகையது என்ன
எவ்வுயிர் நிறைந்த செவ்விகொள் மேனியின்
அண்டப் பெருந்திரன் அடைவுஈன்று அளித்த 35

கன்னி கொண்டிருந்த மன்னருட் கடவுள்
மலைஉருக் கொண்ட உடல்வாள் அரக்கர்
வெள்ளமும் சூரும் புள்ளியல் பொருப்பும்
‍நெடுங்கடற் கிடங்கும் ஒருங்குயிர் பருகிய
மணிவேற் குமரன் முதல்நிலை வாழும் 40

குன்றுடுத்து ஓங்கிய கூடலம் பதியோன்
தாள்தலை தரித்த கோளினர் போல
நெடுஞ்சுரம் நீங்கத் தம்கால்
அடும்தழல் மாற்றிய கால்குறி இவணே. 44

7. நற்றாய வருந்தல்

பொடித்தரும் பாதசின் முலைக்கொடி மடந்தையள்
மணிமிளிர் பெருங்கட்கு இமைகாப்பு என்ன
விழித்துழி விழித்தும் அடங்குழி அடங்கியும்
தன்னைநின்று அளித்த என்னையும் ஒருவுக
பல்மணிக் கலன்கள் உடற்குஅழகு அளித்தென 5

சுற்றுடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக
பிணிமுக மஞ்ஞை செருமுகத்து ஏந்திய
மூவிரு திருமுகத்து ஒருவேல் அவற்கு
வானுற நிமிர்ந்த மலைத்தலை முன்றிலின்
மனவுஅணி மடந்தை வெறியாட் டாளன் 10

வேல்மகன் குறத்தி மாமதி முதியோள்
தொண்டகம் துவைப்ப முருகியம் கறங்க
ஒருங்குவந்து இமையா அருங்கடன் முற்றிய
பின்னர்நின்று எற்றகைத் தாயையும் பிழைக்குக
கருந்தலைச் சாரிகை செவ்வாய்ப் பசுங்கிளி 15

தூவிஅம் தோகை வெள்ஓதிமம் தொடர்உழை
இவையுடன் இன்பமும் ஒருவழி இழக்குக
சேயிதழ் இலவத்து உடைகாய்ப் பஞ்சி
புகைமுரிந்து எழுந்தென விண்ணத்து அலமர
குழைபொடி கூவையின் சிறைசிறை தீந்த 20

பருந்தும் ஆந்தையும் பார்ப்புடன் தவழ
உடைகவட்டு ஓமை உலர்சினை இருக்கும்
வளைகட் கூகையும் மயங்கி வாய்குழற
ஆசையின் தணியா அழல்பசி தணிக்கக்
காளிமுன் காவல் காட்டிவைத்து ஏகும் 25

குழிகட் கரும்பேய் மகவுகண் முகிழ்ப்ப
வேம்உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப
நெடுந்தாட் குற்றிலை வாகைநெற்று ஒலிப்ப
திசைநின்று எழாது தழல்முகல் தெறிப்ப
சுடலையில் சூறை இடைஇடை அடிக்கும் 30

பேர்அழற் கானினும் நாடும்என் உளத்தினும்
ஒருபால் பசுங்கொடி நிறைபாட்டு அயர
பாரிடம் குனிப்ப ஆடிய பெருமான்
வையகத்து உருவினர் மலரா அறிவினைப்
புலன்நிரை மறைத்த புணர்ப்பு அதுபோல 35

குளிர்கொண்டு உறையும் தெளிநீர் வாவியை
வள்ளை செங்கமலம் கள்ளவிழ் ஆம்பல்
பாசடை மறைக்கும் கூடல் பெருமான்
செந்தாள் விடுத்துறை அந்தர்கள் தம்மினும்
மூவாத் தனிநிலைக்கு இருவரும் ஓருயிர் 40

இரண்டெனக் கவைத்தநல் லரண்தரு தோழியை
செருவிழம் இச்சையர் தமதுடல் பெற்ற
இன்புகள் நோக்கா இயல்பது போல
மருங்குபின் ‍நோக்காது ஒருங்குவிட்டு அகல
பொருந்தியது எப்படி உள்ளம் 45

அருந்தழற் சுரத்தின் ஒருவன் அன்பு எடுத்தே? 46

8. செலவு நினைந்துரைத்தல்

உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்
பழவினை புகுந்த பாடகம் போல
முதிர்புயல் குளிறும் எழுமலை புக்க
கட்டுடைச் சூர்உடல் காமம் கொண்டு
பற்றி உட்புகுந்து பசுங்கடல் கண்டு 5

மாவொடும் கொன்ற மணிநெடுந் திருவேல்
சேவலம் கொடியோன் காவல்கொண் டிருந்த
குன்றம் உடுத்த கூடல்அம் பதிஇறை
தொடர்ந்து உயிர்வவ்விய விடம்கெழு மிடற்றோன்
புண்ணியம் தழைத்த முன்ஓர் நாளில் 10

இருவிரல் நிமிர்த்துப் புரிவொடு சேர்த்தி
குழைவுடல் தலைவிரி கைத்திரி கறங்க
ஒரு விரல் தெறித்தும் ஐவிரல் குவித்தும்
பெருவாய் ஒருமுகப் படகம் பெருக்க
தடாவுடல் உம்பர்த் தலைபெறும் முழவம் 15

நான்முகம் தட்டி நடுமுகம் உரப்ப
ஒருவாய் திறந்து உள்கடிப்பு உடல்விசித்த
சல்லரி அங்கைத் தலைவிரல் தாக்க
கயந்தலை அடிஎன கயிறமை கைத்திரி
இருவிரல் உயர்த்திச் செருநிலை இரட்ட 20

இருதலை குவிந்த நெட்டுடல் தண்ணுமை
ஒருமுகம் தாழ்த்தி இருகடிப்பு ஒலிப்ப
திருமலர் எழுதிய வரைஇருபத் தைந்து
அங்குலி இரண்டிரண்டு அணைத்துவிளர் நிறீஇ
மும்முகக் கயலுடன் மயிர்க்கயிறு விசித்த 25

கல்ல வடத்திரள் விரல்தலை கறங்க
மரக்கால் அன்ன ஒருவாய்க் கோதை
முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க
நாடிரு முனிவர்க்கு ஆடிய பெருமான்
திருவடி வினவாக் கருவுறை மாக்கள் 30

நெஞ்சினம் கிடந்து நீண்டவல் இரவில்
செல்லவும் உரியம் தோழி நில்லாது
எம்எதிர்வு இன்றி இருந்து எதிர்ப்பட்டு
மறைவழி ஒழுகா மன்னவன் வாழும்
பழிநாட்டு ஆர்ந்த பாவம் போலச் 35

சேர மறைந்த கூர்இருள் நடுநாள்
அரிதின் போந்தனிர் என்றோர்
பெரிதின் வாய்மை வெற்பனின் பெறினே! 38

9. தூது கண்டு அழுங்கல்

வளைந்துநின்று உடற்றும் மலிகுளிர்க்கு உடைந்து
முகில்துகில் மூடி மணிநெருப்பு அணைத்துப்
புனம்எரி கார்அகில் புகைபல கொள்ளும்
குளவன் வீற்றிருந்த வளர்புகழ்க் குன்றமும்
புதவு தொட்டெனத் தன்புயல் முதிர்கரத்தினை 5

வான்முறை செய்த கூன்மதிக் கோவும்
தெய்வம் அமைத்த செழுந்தமிழ்ப் பாடலும்
ஐந்தினில் பங்குசெய்து இன்புவளர் குடியும்
தவலரும் சிறப்பொடு சால்புசெய்து அமைந்த
முதுநகர்க் கூடலுள் மூவாத் தனிமுதல் 10

ஏழிசை முதலில் ஆயிரம் கிளைத்த
கானம் காட்டும் புள்அடித் துணையினர்
பட்டடை எடுத்து, பாலையில் கொளுவி
கிளையில் காட்டி ஐம்முறை கிளத்தி
குரலும் பாணியும் நெய்தலில் குமட்டி 15

விளரி எடுத்து மத்திமை விலக்கி
ஒற்றைத் தாரி ஒரு நரம்பு இரட்ட
விழுந்தும் எழுந்தும் செவ்வழி சேர்த்தி
குருவிவிண் இசைக்கும் அந்தரக் குலிதம்
புறப்படு பொதுவுடன் முல்லையில் கூட்டி 20

விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்து
தூங்கலும் அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும்
ஆங்கவை நான்கும் அணிவுழை ஆக்கி
பூரகம் கும்பகம் புடைஎழு விளரி
துத்தம் தாரம் கைக்கிளை அதனுக்கு 25

ஒன்றினுக்கு ஏழு நின்றுநனி விரித்து
தனிமுகம் மலர்ந்து தம்இசை பாட
கூளியும் துள்ள ஆடிய நாயகன்
இணைஅடி ஏத்தும் இன்பினர்க்கு உதவும்
திருவறம் வந்த ஒருவன் தூதுகள் 30

இன்பமும் இயற்கையும் இகழாக் காமமும்
அன்பும் சூளும் அளியுறத் தந்துஎன்
நெஞ்சமும் துயிலும் நினைவும் உள்ளமும்
நாணமும் கொண்ட நடுவினர் இன்னும்
கொள்வதும் உளதோ கொடுப்பதும் உளதோ? 35

சேய்குறி இனிய ஆயின்
கவ்வையின் கூறுவிர் மறைகள் விட்டெமக்கே. 37

10. அறத்தொடு நிற்றல்

தன்னுழைப் பலவுயிர் தனித்தனி படைத்துப்
பரப்பிக் காட்டலின் பதுமன் ஆகியும்
அவ்வுயிர் எவ்வுயிர் அனைத்தும் காத்தலின்
செவ்விகொள் கருமுகில் செல்வன் ஆகியும்
கட்டிய கரைவரம்பு உட்புக அழித்து 5

நீர்தலை தரித்தலின் நிமலன் ஆகியும்
தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின்
அரிமுதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்
மூன்றழல் நான்மறை முனிவர் தோய்ந்து
மறைநீர் உகுத்தலின் மறையோன் ஆகியும் 10

மீனும் கொடியும் விரிதிணை ஐந்தும்
தேனுறை தமிழும் திருவுறை கூடலும்
மணத்தலின் மதிக்குல மன்னவன் ஆகியும்
நவமணி எடுத்து நன்புலம் காட்டலின்
வளர்குறி மயங்கா வணிகன் ஆகியும் 15

விழைதரும் உழவும் வித்தும் நாறும்
தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும்
விரிதிரை வையைத் திருநதி சூழ்ந்த
மதுரையம் பதிநிறை மைம்மலர்க் களத்தினன்
இணைஅடி வழுத்தார் அணைதொழில் என்ன 20

கைதையம் கரைசேர் பொய்தற் பாவையோடு
இருதிரை எடுக்கப் பொருதிரை எடுத்தும்
பூழிப் போனஇம் பொதுவுடன் உண்டும்
சாய்தாள் பிள்ளை தந்து கொடுத்தும்
முடவுடற் கைதை மடல்முறித் திட்டும் 25

கவைத்துகிர்ப் பாவை கண்ணி சூடக்
குவலயத் திருமலர் கொணர்ந்து கொடுத்தும்
நின்றான் உண்டொரு காளை
என்றால், இத்தொழில் செய்வது புகழே? 24

11. பரத்தையிற் பிரிவு கண்டவர் கூறல்

வடிவிழிச் சிற்றிடைப் பெருமுலை மடவீர்
தொழுமின் வணங்குமின் சூழ்மின் தொடர்மின்
கட்டுதிர் கோதை கடிமலர் அன்பொடு
முண்டக முகையின் முலைமுகம் தருமின்
உருளின் பூமி உள்ளுற ஆடுமின் 5

எதிர்மின் இறைஞ்சுமின் ஏத்துமின் இயங்குமின்
கருப்புரம் துதைந்த கல்லுயர் மணித்தோள்
வாசம் படரும் மருத்தினும் உறுமின்
பெருங்கவின் முன்நாள் பேணிய அருந்தவம்
கண்ணிடை உளத்திடை காண்மின் கருதுமின் 10

பூவும் சுண்ணமும் புகழ்ந்தெதிர் எறிமின்
யாழில் பரவுமின் ஈங்கிவை அன்றி
கலத்தும் என்றெழுமின் கண்ணளி காண்மின்
வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு
புவிபுனல் அனல்கால் மதிபுல வோன்என 15

முழுதும் நிறைந்த முக்கட் பெருமான்
பனிக்கதிர் குலவன் பயந்தருள் பாவையைத்
திருப்பெரு வதுவை பொருந்திய அந்நாள்
சொன்றிப் பெருமலை தின்றுநனி தொலைத்த
காருடல் சிறுநகைக் குறுந்தாட் பாரிடம் 20

ஆற்றாது அலைந்த நீர்நசை அடக்க
மறிதிரைப் பெருநதி வரவழைத்து அருளிய
கூடலம் பதிஉறை குணப்பெருங் கடவுள்
முண்டகம் அலர்த்தும் முதிராச் சேவடி
தரித்த உள்ளத் தாமரை ஊரன் 25

பொன்துணர்த் தாமம் புரிந்தொளிர் மணித்தேர்
வீதி வந்தது வரலான்நும்
ஏதம் தீர இருமருங்கு எழுந்தே. 28

12. கல்வி நலம் கூறல்

நிலையினின் சலியா நிலைமை யானும்
பலஉலகு எடுத்த ஒருதிறத் தானும்
நிறையும் பொறையும் பெறும்நிலை யானும்
தேவர் மூவரும் காவ லானும்
தமனியப் பராரைச் சயிலம் ஆகியும் 5

அளக்கஎன்று அமையாப் பரப்பின தானும்
அமுதமும் திருவும் உதவுத லானும்
பலதுறை முகத்தொடு பயிலுத லானும்
முள்ளுடைக் கோட்டு முனைஎறி சுறவம்
அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும் 10

நிறைவுளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை
தருதலின் வானத் தருஐந்து ஆகியும்
மறைவெளிப் படுத்தலின் கலைமகள் இருத்தலின்
அகமலர் வாழ்தலின் பிரமன் ஆகியும்
உயிர்பரிந்து அளித்தலின் புலமிசை போக்கலின் 15

படிமுழுது அளந்த நெடியோன் ஆகியும்
இறுதியில் சலியாது இருத்த லானும்
மறுமைதந்து உதவும் இருமை யானும்
பெண்இடம் கலந்த புண்ணியன் ஆகியும்
அருள்வழி காட்டலின் இருவிழி ஆகியும் 20

கொள்ளுநர் கொள்ளக் குறையாது ஆதலின்
நிறைவுளம் நீங்காது உறைஅருள் ஆகியும்
இவைமுதல் ஆகி இருவினை கெடுக்கும்
புண்ணியக் கல்வி உள்நிகழ் மாக்கள்
பரிபுரக் கம்பலை இருசெவி உண்ணும் 25

குடக்கோச் சேரன் கிடைத்துஇது காண்கஎன
மதிமலி புரிசைத் திருமுகம் கூறி
அன்புஉருத் தரித்த இன்புஇசைப் பாணன்
பெருநிதி கொடுக்கஎன உறவிடுத் தருளிய
மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன் 30

இருசரண் பெருகுநர் போல
பெருமதி நீடுவர்; சிறுமதி நுதலே! 32

13. முன் நிகழ்வு உரைத்து ஊடல் தீர்த்தல்

குரவம் மலர்ந்த குவைஇருள் குழலீ!
இருவேம் ஒருகால் எரிஅதர் இறந்து
விரிதலை தோல்முலை வெள்வாய் எயிற்றியர்க்கு
அரும்புது விருந்தெனப் பொருந்திமற்று அவர்தரும்
இடியும் துய்த்து சுரைக்குடம் எடுத்து 5

நீள்நிலைக் கூவல் தெளிபுனல் உண்டும்
பழம்புல் குரம்பை யிடம்புக்கு இருந்தும்
முடங்குஅதள் உறுத்த முகிழ்நகை எய்தியும்
உடனுடன் பயந்த கடஒலி ஏற்றும்
நடைமலை எயிற்றின் இடைத்தலை வைத்தும் 10

உயர்ந்த இன்பதற்கு ஒன்றுவமும் உண்டெனின்
முலைமூன்று அணைந்த சிலைநுதல் திருவினை
அருமறை விதிக்கத் திருமணம் புணர்ந்து
மதிக்குலம் வாய்த்த மன்னவன் ஆகி
மேதினி புரக்கும் விதியுடை நல்நாள் 15

நடுவூர் நகர்செய்து அடுபவம் துடைக்கும்
அருட்குறி நிறுவி அருச்சனை செய்த
தேவ நாயகன் கூடல்வாழ் இறைவன்
முண்டகம் மலர்த்தி முருகவிழ் இருதாள்
உறைகுநர் உண்ணும் இன்பமே 20

அறையல் அன்றிமற்று ஒன்றினும் அடாதே! 21

14. நிலவு வெளிப்பட வருந்தல்

நண்ணிய பாதி பெண்ணினர்க்கு அமுதம்
அடுமடைப் பள்ளியின் நடுஅவ தரித்தும்
திருவடிவு எட்டனுள் ஒருவடிவு ஆகியும்
முக்கணில் அருட்கண் முறைபெற முயங்கியும்
படிஇது என்னா அடிமுடி கண்டும் 5

புண்ணிய நீறுஎனப் பொலிகதிர் காற்றியும்
நின்றனை பெருமதி! நின்தொழு தேற்கும்
நன்னரின் செய்குறும் நன்றிஒன்று உளதால்
ஆயிரம் தழற்கரத்து இருட்பகை மண்டிலத்து
ஒரொரு பனிக்கலை ஒடுங்கிநின்று அடைதலின் 10

கொலைநுதி எயிறுஎன்று இருபிறை முளைத்த
புகர்முகப் புழைக்கை ஒருவிசை தடிந்தும்
மதுஇதழ்க் குவளைஎன்று அடுகண் மலர்ந்த
நெடுஞ்சுனை புதைய புகுந்தெடுத்து அளித்தும்
செறிபிறப்பு இறப்பென இருவகை திரியும் 15

நெடுங்கயிற்று ஊசல் பரிந்துகலுழ் காலை
முன்னையின் புனைந்தும் முகமன் அளித்தும்
தந்தஎம் குரிசில் தனிவந்து எமது
கண்எனக் கிடைத்துஎம் கண்எதிர் நடுநாள்
சமயக் கணக்கர் மதிவழி கூறாது 20

உலகியல் கூறி பொருளிது என்ற
வள்ளுவன் தனக்கு வளர்கவிப் புலவர்முன்
முதற்கவி பாடிய முக்கட் பெருமான்
மாதுடன் தோன்றிக் கூடலுள் நிறைந்தோன்
தன்னைநின் றுணர்ந்து தாமும் ஒன்றின்றி 25

அடங்கினர் போல நீயும்
ஒடுங்கிநின் றமைதி இந்நிலை அறிந்தே! 27

15. தேர் வரவு கூறல்

சலியாப் பராரைத் தமனியப் பொருப்பெனும்
ஒருகால் சுமந்த விண்படர் பந்தரின்
மூடிய நால்திசை முகில்துகில் விரித்து
பொற்சிலை வளைத்து வாயில் போக்கி
சுருப்பணி நிரைத்த கடுக்கைஅம் பொலந்தார் 5

நிரை நிரை நாற்றி நெடுங்காய் மயிர் அமைத்து
ஊதையில் அலகிட்டு உறைபுயல் தெளித்து
போற்றுறு திருவம் நால்திசைப் பொலிய
மரகதத் தண்டின் தோன்றி விளக்கெடுப்ப
குடத்தியர் இழுக்கிய அளைசித றியபோல் 10

கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப
பிடவலர் பரப்பிப் பூவை பூஇட
உயர்வான் அண்டர் கிளைவியப் பெய்த
உறவுஇணை நட்பு கிளைவியப் பெய்த
முகில்முழவு அதிர ஏழிசைமுகக்கும் 15

முல்லை யாழொடு சுருதிவண்டு அலம்ப
களவலர் சூடி புறவுபாட் டெடுப்ப
பசுந்தழை பரப்பிக் கணமயில் ஆல
முல்லையம் திருமகள் கோபம்வாய் மலர்ந்து
நல்மணம் எடுத்து நாளமைத்து அழைக்க 20

வரிவளை முன்கை வரவர இறப்பப்
போனநம் தனிநமர் புள்இயல் மான்தேர்
கடுவிசை துரந்த கான்யாற் றொலியின்
எள்ளினர் உட்க வள்இனம் மடக்கிமுன்
தோன்றினர் ஆதலின் நீயே மடமகள்! 25

முன்ஒரு காலத்து அடுகொலைக்கு அணைந்த
முகிலுருப் பெறும்ஓர் கொடுமரக் கிராதன்
அறுமறைத் தாபதன் அமைத்திரு செம்மலை
செருப்புடைத் தாளால் விருப்புடன் தள்ளி
வாயெனும் குடத்தில் வரம்பற எடுத்த 30

அழுதுகடல் தள்ளும் மணிநீர் ஆட்டி
பின்னல்விட் டமைத்த தன்தலை மயிரணை
திருமலர் விண்புக மணிமுடி நிறைத்து
வெள்வாய் குதட்டிய விழுதுடைக் கருந்தடி
வைத்தமை யாமுன் மகிழ்ந்தமுது உண்டவன் 35

மிச்சிலுக்கு இன்னும் இச்சைசெய் பெருமான்
கூடல்நின் றேத்தினர் குலக்கிளை போலத்
துணர்பெறு கோதையும் ஆரமும் புனைக
புதையிருள் துரக்கும் வெயில் மணித் திருவும்
தண்ணம் பிறையும் தலைபெற நிறுத்துக 40

இறைஇருந்து உதவா நிறைவளைக் குலனும்
பெருஞ்சூ டகமும் ஒருங்குபெற் றணிக
நட்டுப் பகையினர் உட்குடி போல
உறவுசெய்து ஒன்றா நகைதரும் உளத்தையும்
கொலையினர் நெஞ்சம் கூண்டவல் இருளெனும் 45

ஐம்பால் குழலையும் அணிநிலை கூட்டுக
விருந்துகொண் டுண்ணும் பெருந்தவர் போல
நீங்காத் திருவுடை நலனும்
பாங்கில் கூட்டுக இன்பத்தில் பொலிந்தே! 49

16. அழுங்கு தாய்க்கு உரைத்தல்

கல்லுயர் வரைதோள் செம்மனக் குரிசிலும்
கல்லா தவர்உளம் புல்லிய குழலும்
இம்மனை நிறைபுகுந்து எழில்மணம் புணர
கோளொடு குறித்து வரும்வழி கூறிய
மறைவாய்ப் பார்ப்பான் மகனும் பழுதிலன் 5

சோதிடக் கலைமகள் தோற்றம் போல
சொரிவெள் அலகரும் பழுதில் வாய்மையர்
உடல்தொடு குறியின் வரும்வழி குறித்த
மூதறி பெண்டிரும் தீதிலர் என்ப
பெருந்திரள் கண்ணுள் பேச்சுநின் றோர்ந்து 10

வாய்ச்சொல் கேட்டநல் மதியரும் பெரியர்
ஆய்மலர் தெரிந்துஇட்டு வான்பலி தூவி
தெய்வம் பராய மெய்யரும் திருவினர்
கருங்கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த
பனைக்குடிப் பரதவர் கலத்தொடும் மறிய 15

சுரிமுகச் செவ்வாய்ச் சூல்வளை தெறிப்ப
கழுக்கடை அன்ன கூர்வாய்ப் பெருங்கண்
பனைகிடந் தன்ன உடல்முதல் துணிய
ஆருயிர் கவரும் காருடல் செங்கண்
கூற்றம் உருத்தெழுந்த கொள்கை போல 20

நெட்டுடல் பேழ்வாய்ப் பெருஞ்சுறவு தடியும்
வரைநிரை கிடந்த திரைவுவர் புகுந்து
நெடுஞ்சடைக் கிடந்த குறும்பிறைக் கொழுந்தும்
கருமுகில் வெளுத்த திருமிடற்று இருளும்
நுதல்மதி கிழித்த அழலவீர் நோக்கமும் 25

மறைத்தொரு சிறுகுடிப் பரதவன் ஆகி
பொந்தலைப் புணர்வலை கொடுங்கரம் ஆக்கி
நெடுங்கடல் கலக்கும் ஒருமீன் படுத்த
நிறைஅருள் நாயகன் உறைதரு கூடல்
வணங்கார் இனமென மாழ்கி, 30

குணம்குடி போய்வித்த ஆய்வுளம் தவறே. 31

17. வெறி விலக்கல்

உழைநின் றீரும் பிழைஅறிந் தீரும்
பழங்குறி கண்ட நெடுங்கண் மாதரும்
ஒன்று கிளக்க நின்றிவை கேண்மின்
ஒருபால் பசுங்கொடி திருநுதல் பொடித்த
குறுவெயிர்ப்பு ஒழுக்கு எனப்பிறை அமுதெடுக்க 5

படிறர் சொல்எனக் கடுவுநஞ்சு இறைப்ப
அண்டப் பொற்சுவர் கொண்ட அழுக்கை
இறைத்துக் கழுவுவது என்னக் கங்கைத்
துறைகொள் ஆயிரம் முகமும் சுழல
அப்பெருங் கங்கை கக்கிய திரைஎனக் 10

கொக்கின் தூவல் அப்புறம் ஆக
மாணிக் கத்தின் வளைத்த சுவரெனப்
பாணிக் குள்பெய் செந்தழல் பரப்ப
தன்னால் படைத்த பொன்அணி அண்டம்
எண்திக்கு அளந்து கொண்டன என்னப் 15

புரிந்த செஞ்சடை நிமிர்ந்து சுழல
மேருவின் முடிசூழ் சூரியர் என்னத்
தங்கிய மூன்றுகண் எங்கணும் ஆக
கூடல் மாநகர் ஆடிய அமுதை
உண்டு களித்த தொண்டர்கள் என்ன 20

இம்மது உண்ண உம்மையின் உடையோர்
முருக நாறப் பருகுதல் செய்க
வேலனும் வெறிக்களன் ஏறுதல் ஆக
அணங்காட்டு முதியோள் முறங்கொள் நெல்எடுக்க
பிணிதர விசித்த முருகியம் துவைக்க 25

ஐயவி அழலொடு செய்யிடம் புகைக்க
இன்னும்பல தொழிற்கு இந்நிலை நின்று
மாறு பாடு கூறுதல் இலனே
ஈங்கிவை நிற்க யாங்கள்அவ் அருவியில்
ஒழுக புக்குத் தழுவி எடுத்தும் 30

ஒருமதி முறித்துஆண்டு இருகவுட் செருகிய
ஏந்துகோட்டு உம்பல் பூம்புனம் எம்உயிர்
அழிக்கப் புகுந்த கடைக்கொள் நாளில்
நெடுங்கை வேலால் அடும்தொழில் செய்து
பெறுமுயிர் தந்து மருவி அளித்த 35

பொன்நெடுங்குன்றம் மன்னிய தோளன்
செவ்வே தந்தமை துயர்இ ருப்ப
கூறு பெயரொடு வேறு பெயரிட்டு
மறிஉயிர் உண்ணக் குறுகி வந்திருந்த
தெய்வம் கற்ற அறிவை 40

உய்யக் கூறிலோர் நெஞ்சிடம் பொறாதே. 41

18. உலகியல்பு உரைத்தல்

பழமை நீண்ட குன்றக் குடியினன்
வருந்தாது வளர்த்தும் குடங்கை துயிற்றியும்
மானின் குழவியொடு கெடவரல் வருத்தியும்
பந்து பயிற்றியும் பொற்கழங்கு உந்தவும்
பாவை சூட்டவும் பூவை கேட்கவும் 5

உடைமை செய்த மடமையள் யான்என
எம்எதிர் கூறிய இம்மொழி தனக்குப்
பெருமை நோக்கின் சிறுமையது உண்டே
செறிதிரைப் பாற்கடல் வயிறுநொந்து ஈன்ற
செம்மகள் கரியோற்கு அறுதி போக 10

மகவின் இன்பம் கடல் சென்றிலவால்
அன்றியும் விடிமீன் முளைத்த தரளம்
வவ்வின ரிடத்தும் அவ்வழி ஆன
திரைக்கடல் குடித்த கரத்தமா முனிக்கும்
திங்கள் வாழ்குலம் தங்கும் வேந்தற்கும் 15

அமுதஊற் றெழுந்து நெஞ்சம் களிக்கும்
தமிழ்எனும் கடலைக் காணி கொடுத்த
பொதியப் பொருப்பும் நெடுமுதுகு வருந்திப்
பெற்று வளர்த்த கல்புடை ஆரம்
அணியும் மாமகிழ்நர் பதியுறை புகுந்தால் 20

உண்டோ சென்றது கண்டது உரைக்க
பள்ளிக் கணக்கர் உள்ளத்துப் பெற்ற
புறம்ஆர் கல்வி அறமா மகளைக்
கொண்டு வாழுநர்க் கண்டு அருகிடத்தும்
அவர்மன அன்னை கவரக் கண்டிலம் 25

பெருஞ்சேற்றுக் கழனி கரும்புபெறு காலை
கொள்வோர்க் கன்றி அவ்வயல் சாயா
பூம்பணை திரிந்து பொதிஅவிழ் முளரியில்
காம்புபொதி நறவம் விளரியோ டருந்தி
கந்தித் தண்டலை வந்து வீற்றிருந்து 30

கடிமலர்ப் பொழிலில் சிறிதுகண் படுத்து
மயக்கநிறை காமத்து இயக்கம் கொண்டு
நின்ற நாரணன் பரந்த மார்பில்
கலவாக் குங்குமம் நிலவிய தென்னக்
கார்வான் தந்த பேர்கொள் செக்கரில் 35

வீதிவாய்த் தென்றல் மெல்லென் றியங்கும்
மூதூர்க் கூடல் வந்தருள் முக்கணன்
காமனை அயனை நாமக் காலனை
கண்ணால் உகிரால் மலர்கொள் காலால்
சுட்டும் கொய்தும் உதைத்தும் துணித்த 40

விட்டொளிர் மாணிக்க மலையின் ஒருபால்
அடங்கப் படர்ந்த பசுங்கொடி அதனை
வளர்ந்த சேண்மலை உளத்துயர் கொண்டு
தொடர்ந்ததும் இலைகீழ் நடந்தசொல் கிடக்க
பாலைக் கிழத்தி திருமுன் நாட்டிய 45

சூலத் தலையின் தொடர்ந்துசிகை படர்ந்து
விடுதழல் உச்சம் படுகதிர் தாக்க
பாடல்சால் பச்சைக் கோடகக் காற்றை
மையில் காட்சிக் கொய்யுளை நிற்ப
வயிற்றில் இருந்து வாய்முளைத் தென்ன 50

இருகால் முகனிற்கு அருகா துரந்து
படுமழல் நீக்கக் குடகடல் குளிக்கும்
நாவாய குறியாத் தீவாய் பாலையில்
தம்மில் இன்பம் சூளுடன் கூடி
ஒன்றி விழைந்து சென்றாட்கு உடைத்து 55

பொன்பதி நீங்கி உண்பதும் அடங்கி
முழங்கப் பெருங்குரல் கூஉய்ப்
பழங்கண் எய்தியது பேதைமை அறிவே. 58

19. மகிழ்ந்து உரைத்தல்

குங்குமக் கோட்டுஅலர் உணங்கல் கடுக்கும்
பங்குடைச் செங்கால் பாட்டளி அரிபிடர்க்
குருவில் தோய்ந்த அரிகெழு மரகதக்
கல்எனக் கிடப்பச் சொல்லிய மேனித்
திருநெடு மா க்கு ஒருவிசை புரிந்து 5

சோதிவளர் பாகம் ஈந்தருள் நித்தன்
முனிவர் ஏமுற வெள்ளிஅம் பொதுவில்
மனமும் கண்ணும் கனியக் குனிக்கும்
புதிய நாயகன் பழமறைத் தலையோன்
கைஞ்ஞின்றவன் செங்கால் கண்டவர் போல 10

விளக்கமும் புதுமையும் அளப்பில் காட்சியும்
வேறொப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும்
அறிவோர் காணும் குறியாய இருந்தன
இருந்திண் போர்வைப் பிணிவிசி முரசம்
முன்னம் எள்ளினர் நெஞ்சுகெடத் துவைப்ப 15

மணம்கொள் பேரணி பெருங்கவின் மறைத்தது என்று
எழுமதி குறைத்த முழுமதிக் கருங்கயல்
வண்டு மருவி உண்டு களியாது
மற்றது பூத்த பொன்திகழ் தாமரை
இரண்டு முகிழ்செய்து நெஞ்சுறப் பெருகும் 20

வற்றா மேனி வெள்ளத்துள் மறிய
நுனித்தலை அந்தணர் கதழ்எரி வளர்த்துச்
சிவந்த வாய்தொறும் வெண்பொரி சிதறிச்
செம்மாந்து மணத்த வளரிய கூர்எரி
மும்முறை சுழன்று தாயார் உள்மகிழ 25

இல்லுறை கல்லின் வெண்மலர் பரப்பி
இலவலர் வாட்டிய செங்கால் பிடித்து
களிதூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி
இரண்டுபெயர் காத்த தோலாக் கற்பு
முகனுறக் காணும் கரியோர் போல 30

இடப்பால் நிறுத்தி பக்கம் சூழ
வடமீன் காட்டி விளக்கணி எடுத்துக்
குலவாழ்த்து விம்ம மணஅணிப் பக்கம்
கட்புலம் கொண்ட இப்பணி அளவும்
வாடி நிலைநின்றும் ஊடி ஏமாந்தும் 35

என்முகம் அளக்கும் காலக் குறியைத்
தாமரைக் கண்ணால் உட்புக அறிந்தும்
உலகம் மூன்றும் பெறுதற்கு அரியதென்று
எண்ணா வாய்மை எண்ணிக் கூறியும்
கல்லுயர் நெடுந்தோள் அண்ணல், 40

மல்லுறத் தந்த ஈர்ந்தழை தானே. 41

20. பிறை தொழுகென்றல்

நெடுவளி உயிர்த்து மழைமதம் ஒழுக்கி
எழுமலை விழுமலை புடைமணி ஆக
மீன்புகர் நிறைந்த வான்குஞ் சரமுகம்
வால்பெற முளைத்த கூன்கோடு ஆனும்
பேச நீண்ட பல்மீன் நிலைஇய 5

வானக் கடலில் தோணி அதுஆனும்
கொழுநர் கூடும் காம உததியைக்
கரைவிட உகையும் நாவாய் ஆனும்
கள்ளமர் கோதையர் வெள்ளணி விழவில்
ஐங்கணைக் கிழவன் காட்சியுள் மகிழ 10

இழைத்து வளைத்த கருப்பு வில்லானும்
நெடியோன் முதலாம் தேவர் கூடி
வாங்கிக் கடைந்த தேம்படு கடலில்
அழுதுடன் தோன்றிய உரிமை யானும்
நிந்திரு நுதலை ஒளிவிசும்பு உடலில் 15

ஆடிநிழல் காட்டிய பீடுஅது வானும்
கரைஅற அணியும் மானக் கலனுள்
தலைபெற இருந்த நிலைபுக ழானும்
மண்ணகம் அனைத்தும் நிறைந்தபல் உயிர்கட்கு
ஆயா அமுதம் ஈகுத லானும் 20

பாற்கடல் உறங்கும் மாயவன் போல
தவள மாடத்து அகல்முதுகு பற்றி
நெடுங்கார் கிடந்து படும்புனல் பிழியும்
கூடல் வீற்றிருந்த நாடகக் கடவுள்
பொன்சுடர் விரித்த கொத்தலர் கொன்றையும் 25

தாளியும் அறுகும் வால்உளை எருக்கமும்
கரந்தையும் வன்னியும் மிடைந்தசெஞ் சடையில்
இரண்டுஐஞ் ஞூறு திரண்டமுகம் எடுத்து
மண்பிலன் அகழ்ந்து திக்குநிலை மயக்கி
புரியாக் கதமோடு ஒருபால் அடங்கும் 30

கங்கையில் படிந்த பொங்குதவத் தானும்
அந்நெடு வேணியின் கண்ணிஎன இருந்து
தூற்றும் மறுஒழிந்த ஏற்றத் தானும்
மணிவான் பெற்றஇப் பிறையைப்
பணிவாய் புரிந்து தாமரை மகளே! 35

21. ஆற்றாமை கூறல்

பொருப்புமலி தோளினும் நெருப்புமிழ் வேலினும்
செந்ல்ரு மகளை செயம்கொள் மங்கையை
வற்றாக் காதலின் கொண்டமதி அன்றி
களவு அலர்தூற்ற தளவுகொடி நடுங்க
வேயுளம் பட்டுப் பூவை கறுக்க 5

தண்டா மயல்கொடு வண்டுபரந்து அரற்ற
காலம் கருதித் தோன்றிகை குலைப்ப
துன்பு பசப்பூரும் கண்நிழல் தன்னைத்
திருமலர் எடுத்துக் கொன்றை காட்ட
இறைவளை நில்லாது என்பன நிலைக்க 10

கோடல் வளைந்த வள்ளலர் உகுப்ப
கண்துளி துளிக்கும் சாயாப் பையுளை
கூறுபட நாடி ஆசையொடு மயங்கி
கருவிளை மலர்நீர் அருகுநின் றுகுப்ப
பேரழல் வாடை ஆருயிர் தடவ 15

விளைக்கும் காலம் முளைத்த காலை
அன்பும் சூளும் நண்பும் நடுநிலையும்
தடையா அறிவும் உடையோய் நீயே
எழுந்து காட்டிப் பாடுசெய் கதிர்போல்
தோன்றி நில்லா நிலைப்பொருள் செய்ய 20

மருங்கில் பாதி தரும்துகில் புனைந்தும்
விளைவயல் ஒடுங்கும் முதிர்நெல் உணவினும்
தம்மில் வீழுநாக்கு இன்பமென் றறிந்தும்
தண்மதி கடுஞ்சுடர் வெவ்வழல் கண்வைத்து
அளவாப் பாதம் மண்பரப் பாக 25

தனிநெடு விசும்பு திருவுடல் ஆக
இருந்திசைப் போக்குப் பெருந்தோள் ஆக
வழுவறு திருமறை ஓசைகள் அனைத்தும்
மொழிதர நிகழும் வார்த்தை ஆக
உள்நிறைந் துழலும் பாடிரண்டு உயிர்ப்பும் 30

பகலிரவு ஒடுங்கா விடுவளி ஆக
அடுபடைப் பூழியன் கடுமுரண் பற்றி
இட்டவெங் கொடுஞ்சிறைப் பட்ட கார்க்குலம்
தளையொடு நிறைநீர் விடுவன போல
புரைசை யொடுபாசம் அறவுடல் நிமிர்ந்து 35

கூடமும் கந்தும் சேறுநின் றலைப்ப
மூன்றுமத நெடும்புனல* கான்று மயலுவட்டி
ஏழுயர் கரித்திரள் கதமொடு பிளிறும்
பெருநகர்க் கூடல் உறைதரு கடவுளை
நிறையப் பேசாக் குறையுளர் போலவும் 40

கல்லா மனனினும் செல்லுதி பெரும!
இளமையும் இன்பமும் வளனும் காட்சியும்
பின்புற நேடின் முன்பவை அன்றால
நுனித்த மேனித் திருவினட்கு அடைத்த
வினைதரும் அடைவின் அல்லது 45

புனையக் காணேன் சொல்ஆ யினவே. 46

22. தன்னுள்கையாறு எய்திடு கிளவி

நீர்நிலை நின்று கால்கறுத் தெழுந்து
திக்குநிலை படர்ந்த முகில்பா சடையும்
இடையிடை உகளும் மீனாம் மீனும்
செம்முகில் பழநுரை வெண்முகில் புதுநுரை
எங்கும் சிதறிப் பொங்கியெழு வனப்பும் 5

பலதலை வைத்து முடியாது பாயும்
எங்கும் முகம்வைத்தக் கங்கைக் காலும்
கொண்டு குளிர்பரந்த மங்குல் வாவிக்குள்
முயல்எனும் வண்டுண அமுதநறவு ஒழுக்கி
தேவர் மங்கையர் மலர்முகம் பழித்து 10

குறையாப் பாண்டில் வெண்மையின் மலர்ந்த
மதித்தா மரையே! மயங்கிய ஒருவேன்
நின்பால் கேட்கும் அளிமொழி ஒன்றுள
மீன்பாய்ந்து மறிக்கத் திரையிடை மயங்கி
சூல்வயிறு உளைந்து வளைகிடந்து முரலும் 15

புன்னையம் பொதும்பரில் தம்முடை நெஞ்சமும்
மீன்உணவு உள்ளி இருந்தவெண் குருகெனச்
சோறு நறைகான்ற கைதைய மலரும்
பலதலை அரக்கர் பேரணி போல
மருங்கு கூண்டெழுந்து கருங்காய் நெருங்கி 20

விளைகள் சுமந்த தலைவிரி பெண்ணையும்
இன்னும் காணாக் காட்சிகொண் டிருந்த
அன்னத் திரளும் பெருங்கரி யாக
சொல்லா இன்பமும் உயிருறத் தந்து
நாள்இழைக் திருக்கும் செயிர்கொள் ‍அற்றத்து 25

மெய்யுறத் தணந்த பொய்யினர் இன்று
நெடுமலை பெற்ற ஒருமகள் காண
நான்முக விதியே தாளம் தாக்க
அந்த நான்முகனை உந்தி பூத்தோன்
விசித்து மிறைபாசத்து இடக்கை விசிப்ப 30

மூன்றுபுரத்து ஒன்றில் அரசுடை வாணன்
மேருக் கிளைத்த தோள்ஆ யிரத்தொடும்
எழுகடல் கிளர்ந்த திரள்கலி அடங்க
முகமவேறு இசைக்கும் குடமுழுவு இரட்ட
புட்கால் தும்புரு மணக்கந் திருவர் 35

நான்மறைப் பயனாம் ஏழிசை அமைத்து
சருக்கரைக் குன்றில் தேன்மழை நான்றென
ஏழு முனிவர்கள் தாழும் மாதவர்
அன்பினர் உள்ளமொடு என்புகரைந் துருக
விரல்நான்கு அமைத்த அணிகுரல் வீங்காது 40

நான்மறை துள்ளும் வாய்பிள வாது
காட்டியுள் உணர்த்தும் நோக்கம் ஆடாது
பிதிர்கணல் மணிசூழ் முடிநடுக் காது
வயிறு குழிவாங்கி அழுமுகம் காட்டாது
நாசி காகுளி வெடிகுரல் வெள்ளை 45

பேசாக் கீழ்இசை ஒருபுறம் ஒட்டல்
நெட்டுயிர்ப்பு எறிதல் எறிந்துநின்றி ரட்டல்
ஓசை இழைத்தல் கழிபோக்கு என்னப்
பேசறு குற்றம் ஆசொடும் மாற்றி
வண்டின் தாரியும் கஞ்ச நாதமும் 50

சிரல்வான் நிலையும் கழைஇலை வீழ்வதும்
அருவி ஓசையும் முழவின் முழக்கமும்
வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியும்
இன்னுமென் றிசைப்பப் பன்னிய விதியொடு
மந்தரம் மத்திமம் தாரம் இவைமூன்றில் 55

துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல்
கூடிய கானம் அன்பொடு பரவ
பூதம் துள்ள பேய்கை மறிப்ப
எங்குள உயிரும் இன்பம் நிறைந்தாட
நாடக விதியொடு ஆடிய பெருமான் 60

மதுரை மாநகர்ப் பூழிய னாகி
கதிர்முடி கவித்த இறைவன் மாமணிக்
கால்தலைக் கொள்ளாக் கையினர் போல
நீங்கினர் போக்கும் ஈங்குழி வருவதும்
கண்டது கூறுதி ஆயின் 65

எண்தகப் போற்றிநின் கால்வணங் குதுமே. 66

23. வேறுபடுத்துக் கூறல்

கண்ட காட்சி சேணின் குறியோ
என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ
சூர்ப்பகை உலகில் தோன்றினர்க்கு அழகு
விதிக்கும் அடங்கா என்பன விதியோ
என்னுடைக் கண்ணும் உயிரும் ஆகி 5

உள்நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி
மலைக்குஞ் சரத்தின் கடக்குழி யாகி
நெடுமலை விழித்த கண்ணே ஆகி
அம்மலைத் திருநுதற்கு அழியாது அமைத்த
வெள்ளைகொள் சிந்துர நல்லணி ஆகி 10

தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி
அமுதொடு கிடக்கும் நிறைமதிப் பக்கம்
ஒருபால் கிடந்த துணைமதி யாகி
அருவி வீசப் பறவை குடிபோகி
வீண்டுநறவு ஒழுக்கும் பாண்டில் இறாலாய் 15

இளமை நீங்காது காவல்கொள் அமுதம்
வரையர மாதர் குழுவுடன் அருந்த
ஆக்கியிடப் பதித்த வள்ளமும் ஆகி
இடைவளி போகாது நெருங்குமுலைக் கொடிச்சியர்
சிறுமுகம் காணும் ஆடி ஆகி 20

சிறந்தன ஒருசுனை இம்மலை ஆட
அளவாக் காதல் கைம்மிக்கு அணைந்தனள்
அவளே நீயாய் என்கண் குறித்த
தெருமரல் தந்த அறிவுநிலை கிடக்க
சிறிதுநின் குறுவெயர் பெறும் அணங்கு ஆறி 25

ஒருகணன் நிலைக்க மருவுதி ஆயின்
இந்நிலை பெயர உன்னும்அக் கணத்தில்
தூண்டா விளக்கின் ஈண்டவள் உதவும்
அவ்வுழி உறவு மெய்பெறக் கலந்தின்று
ஒருகடல் இரண்டு திருப்பயந் தாங்கு 30

வளைத்த நெடுங்கார்ப் புனத்திரு
மணிநிற ஊசல் அணிபெற உகைத்தும்
கருங்கால் கவணிடைச் செம்மணி வைத்து
பெருந்தேன் இறாலொடு குறிவிழ எறிந்தும்
வெண்துகில் நுடங்கி பொன்கொழித் திழியும் 35

அருவி ஏற்றும் முழைமலை கூஉயும்
பெருஞ்சுனை விழித்த நீலம் கொய்தும்
கொடுமரம் பற்றி நெட்டிதண் பொலிந்து
தினைக்குரல் அறையும் கிளிக்கணம் கடிதிர்
வெள்ளி இரும்பு பொன்எனப் பெற்ற 40

மூன்றுபுரம் வேவ திருநகை விளையாட்டு
ஒருநாள் கண்ட பெருமான் இறைவன்
மாதுடன் ஒன்றி என்மனம் புகுந்து
பேணா உள்ளம் காணாது நடந்து
கொலைகளவு என்னும் பழுமரம் பிடுங்கி 45

பவச்சுவர் இடித்துப் புதுக்கக் கட்டி
அன்புகொரு மேய்ந்த நெஞ்ச மண்டபத்து
பாங்குடன் காணத் தோன்றி உள்நின்று
பொன்மலர்ச் சோலை விம்மிய பெருமலர்
இமையோர் புரத்தை நிறைமணம் காட்டும் 50

கூடலம் பதியகம் பீடுபெற இருந்தோன்
இருதாள் பெற்றவர் பெருந்திருப் போல
மருவிய பண்ணை இன்பமொடு விளைநலம்
சொல்லுடன் அமராது ஈங்கு
வில்லுடன் பகைத்த செந்திரு நுதலே! 55

24. காமம் மிக்க கழிபடர் கிளவி

வானவர்க்கு இறைவன் நிலம்கிடை கொண்டு
திருவுடல் நிறைவிழி ஆயிரத் திரளும்
இமையாது விழித்த தோற்றம் போல
கஞ்சக் கொள்ளை இடையற மலர்ந்து
மணம்சூழ் கிடந்த நீள்கருங் கழியே! 5

கருங்கழி கொடுக்கும் வெள்இறவு அருந்தக்
கைபார்த் திருக்கும் மடப்பெடை குருகே!
பெடைக்குருகு அணங்கின் விடுத்தவெண் சினையொடு
காவல் அடைக்கிடக்கும் கைதைஅம் பொழிலே!
வெம்மையொடு கூடியும் தண்மையொரு பொருந்தியும் 10

உலகஇருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர்
காலம் கோடா முறைமுறை தோற்ற
மணிநிரை குயிற்றிய மண்டபம் ஆகி
பொறைமாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள்
காளையாது உடுக்கும் பைந்துகில் ஆகி 15

வேனிற் கிழவன் பேரணி மகிழ
முழக்காது தழங்கும் வார்முரசு ஆகி
நெடியோன் துயிலா அறிவொடு துயில
பாயற்கு அமைந்த பள்ளியறை யாகி
சலபதி ஆய்ந்து சேமநிலை வைத்த 20

முத்துமணி கிடக்கும் சேற்றிருள் அரங்காய்
புலவுஉடற் பரதவர் தம்குடி ஓம்ப
நாளும் விளைக்கும் பெருவயல் ஆகி
கலமெனும் நெடுந்தேர் தொலையாது ஓட
அளப்பறப் பரந்த வீதி யாகி 25

சுறவ வேந்து நெடும்படை செய்ய
முழக்கமொடு வளைத்த அமர்க்களம் ஆகி
மகரத் தெய்வம் நாள் நிறைந்து உறைய
மணிவிளக்கு நிறைந்த ஆலயம் ஆகி
நீர்நெய் வார்த்துச் சகரர் அமைத்த 30

தீவளர் வட்டக் குண்டம் ஆகி
எண்திகழ் பகுவாம் இனமணிப் பாந்தள்
தண்டில் நின்றுஎரியும் தகளி யாகி
பஞ்சவன் நிறைந்த அன்புடன் வேண்ட
மாறிக் குனித்த நீறணி பெருமாற்கு 35

அமுத போனகம் கதுமென உதவும்
அடும்தீ மாறா மடைப்பள்ளி ஆகி
இன்னும் பலமாய் மன்னும் கடலே
நுங்கள் இன்பம் பெருந்துணை என்றால்
தண்ணம் துறைவற்கு இன்று இவள் ஒருத்தி 40

நெருப்புறு மெழுகின் உள்ளம் வாடியும்
அருவி தூங்கக் கண்ணீர் கொண்டும்
அரவின்வாய் அரியின் பலவும் நினைந்தும்
நிலையாச் சூளின் நிலையா நெஞ்சம்
கொண்டனள் என்என என்முகம் நாடி 45

உற்ற வாய்மை சற்றும் தருகிலீர்
அன்றெனின் நும்மின் ஒன்றுபட் டொருகால்
'இவளோ துயரம் பெறுவதென்?' என்று
வினவாது இருக்கும் கேண்மை,
மனனால் நாடின் கொலையினும் கொடிதே! 50

25. இடம் அணித்து என்றல்

பொருப்பு வளன்வேண்டி மழைக்கண் திறப்ப
குருகுபெயர்க் குறைத்து உடல்பக எறிந்த
நெடுவேள் கடவுள் மயில்கொடி முன்றில்
பெருங்கிளை கூண்டு ‍வெட்சிமலர் பரப்பி
இறால்நறவு அளாய செந்தினை வெள்இடி 5

தேக்கினல் விரித்து நால்திசை வைத்து
மனவுஅணி முதியோன் வரை அணங்கு அயர்ந்து
மூன்று காலமும் தோன்றக் கூற
வேலன் சுழன்று குறுமறி அறுப்ப
கருவி நுதிகொள் நெறியினல் ஈந்தின் 10

முற்றிய பெருநறவு எண்ணுடன் குடித்து
நெட்டிலை அரம்பைக் குறுங்காய் மானும்
உளியம் தணித்தகணை கொள்வாய்த் திரிகல்
ஒப்புடைத் தாய வட்டவாய்த் தொண்டகம்
கோல்தலை பனிப்ப வான்விடு பெருங்குரல் 15

வீயாது துவைக்கும் கடன்மலை நாகிர்
வருந்தியேற் றெடுத்த செந்திரு மடமகள்
ஒருவுக உளத்துப் பெருகிய நடுக்கம்
எம்மூர்ச் சேணும் நும்மூர்க் குன்றமும்
பெருந்தவர் குழுவும் அருங்கதி இருப்பும் 20

பொதியமும் களிப்ப விரிதரு தென்றலும்
கனைகடல் குடித்த முனிவனும் தமிழும்
மேருவும் மூவர்க்கு ஓதிய புரமும்
உலகம்ஈன் றளித்த உமையும் மாஅறனும்
தேவர்க்கு அரசனும் காவல் தருவும் 25

வழுவா விதியும் எழுதா மறையும்
செங்கோல் வேந்தும் தங்கிய குடியும்
தவம்சூழ் இமயமும் கமஞ்சூல் மழையும்
எல்லையில் ஈங்கிவை சொல்லிய அன்றி
கண்ணன் கரமும் வெண்‍ணெயும் போலப் 30

பாசடை புதைத்த நெட்டாற்று ஏரியுள்
பூத்தலர் விரித்த சேப்படு தாமரை
உள்வளை உறங்கும் வள்ளவாய்க் கூடல்
நிறைந்துறை முக்கண் பெருந்திறல் அடிகள்
அடியவர்க்கு எவ்வளவு அதுஆம் 35

கொடிபுரை நுசுப்பின் பெருமுலை யோளே! 36



கல்லாடம் : 1 2 3 4



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247