உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
கல்லாடர் அருளிய கல்லாடம் ... தொடர்ச்சி - 3 ... 51. விரவிக் கூறல் வெயரமுது அரும்பி முயல்கண் கறுத்து தண்ணம்நின் றுதலலின் நிறைமதி ஆகி பொன்னம் பொகுட்டுத் தாமரை குவித்து நிறைஅளி புரக்கும் புதுமுகத்து அணங்குநின் ஒளிவளர் நோக்கம் உற்றனை ஆயின் 5 இன்னுயிர் வாழ்க்கை உடலொடும் புரக்கலை ஒருதனி அடியாற்கு உதவுதல் வேண்டி மண்ணவர் காண வட்டணை வாளெடுத்து ஆதிசாரணை அடர்நிலைப் பார்வை வாளொடு நெருக்கல் மார்பொடு முனைத்தல் 10 பற்றி நின்று அடர்த்தல் உள்கையின் முறித்தல் ஆனனத்து ஒட்டல் அணிமயிற் புரோகம் உள்கலந் தெடுத்தல் ஒசிந்திடம் அழைத்தல் கையொடு கட்டல் கடிந்துள் அழைத்தலென்று இவ்வகைப் பிறவும் எதிர்அமர் ஏறி 15 அவன் பகை முறித்த அருட்பெருங் கடவுள் கூடலம் கானல் பெடையுடன் புல்லி சேவல் அன்னம் திருமலர்க் கள்ளினை அம்மலர் வள்ளம் ஆகநின்று உதவுதல் கண்டுகண்டு ஒருவன் மாழ்கி 20 விண்டுயிர் சேர்ந்த குறிநிலை மயக்கே. 21 52. ஊடல் தணித்தல் அவ்வுழி அவ்வுழிப் பெய்உணவு உன்னி முகன்பெறும் இருசெயல் அகன்பெறக் கொளுவும் புல்லப் பாண்மகன் சில்லையும் இன்றி இன்பக் கிளவி அன்பினர்ப் போக்கி முடித்தலை மன்னர் செருக்குநிலை ஒருவி 5 பொன்னுறு ஞாழற் பூவுடன் கடுக்கும் பேழ்வாய்ப் புலிஉகிர் சிறுகுரல் விளங்க அமுதம் துளிக்கும் குமுதவாய் குதட்டிப் பழம்கோள் தத்தை வழங்குசொல் போலும் மழலைக் கிளவியும் இருநிலத்து இன்பமும் 10 ஒருவழி அளிக்கும் இருங்கதிர்ச் சிறுவனை தழல்விழி மடங்கல் கொலைஅரிக் குருளையைப் பொன்மலை கண்ட பொலிவு போல மணிகெழு மார்பத்து அணிபெறப் புகுதலின் கறங்கிசை அருவி அறைந்துநிமிர் திவலையும் 15 துருத்திவாய் அதுக்கிய குங்குமக் காண்டமும் குறமகார் கொழிக்கும் கழைநித் திலமும் நெடுநிலை அரங்கில் பரிபெறு தரளமும் புனம்பட எறிந்த கார்அகில் தூமமும் அந்தணர் பெருக்கிய செந்தீப் புகையும் 20 வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும் கந்திவிரி படிந்த மென்சிறை வண்டும் சந்தனப் பொங்கர்த் தழைச்சிறை மயிலும் முன்றில்அம் பெண்ணைக் குடம்பைகொள் அன்றிலும் ஒன்றி னொடு ஒன்று சென்றுதலை மயங்கும் 25 குளவன் குன்றக் கூடல்அம் பதிநிறை மஞ்சடை குழல்பெறு செஞ்சடைப் பெருமான் அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல் வாவியில் கேட்ட காவிஅம் களத்தினன் திருக்கண் கண்ட பெருக்கினர் போல் 30 முளரிஅம் கோயில் தளைவிட வந்து நல்லறம் பூத்த முல்லைஅம் திருவினள் நின்உளத்து இன்னல் மன்அறக் களைந்து பொருத்தம் காண்டி வண்டாரும் அருத்திஅம் கோதை மன்னவன் பாலே. 35 53. குலமுறை கூறி மறுத்தல் பெருமறை நூல்பெறக் கோன்முறை புரக்கும் பெருந்தகை வேந்தன் அருங்குணம் போல மணந்தோர்க்கு அமுதம் தணந்தோர்க்கு எரியும் புக்குழிப் புக்குழிப் புலன்பெறக் கொடுக்கும் மலையத் தமிழ்க்கால் வாவியில் புகுந்து 5 புல்லிதழ்த் தாமரைப் புதுமுகை அவிழ்ப்ப வண்டினம் படிந்து மதுக்கவர்ந் துண்டு சேயிதழ்க் குவளையின் நிரைநிரை உறங்கும் நிலைநீர் நாடன் நீயே இவளே மலைஉறை பகைத்து வான்உறைக்கு அணக்கும் 10 புட்குலம் சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம் பெருந்தேன் கவரும் சிறுகுடி மகளே! நீயே ஆயமொடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி மாயா நல்லறம் வளர்நாட் டினையே! இவளே தொண்டகம் துவைப்ப தொழிற்புனம் வளைந்து 15 பகட்டினம் கொல்லும் பழிநாட் டவளே நீயே எழுநிலை மாடத்து இளமுலை மகளிர் நடம்செயத் தரள வடம்தெறு நகரோய் இவளே கடம்பெறு கரிக்குலம் மடங்கல்புக்கு அகழத் தெறித்திடு முத்தம் திரட்டுவைப் பினளே 20 அணிகெழு நவமணி அலர்எனத் தொடுத்த நீயே பொற்கொடித் தேர்மிசைப் பொலிகுவை அன்றே இவளே மணிவாய்க் கிள்ளை துணியாது அகற்ற நெட்டிதண் ஏறும் இப்புனத் தினளே ஆதலின், பெரும்புகழ் அணைகுதி ஆயின் 25 நாரணன் பாற தேவர்கெட் டோட வளிசுழல் விசும்பின் கிளர்முகடு அணவிக் கருமுகில் வளைந்து பெருகியபோல நிலைகெடப் பரந்த கடல்கெழு விடத்தை மறித்துஅவர் உயிர்பெறக் குறித்துண் டருளி 30 திருக்களம் கறுத்த அருட்பெறு நாயகன் கூடல் கூடினர் போல, நாடல் நீ இவள் தழைத்தோள் நசையே. 33 54. காவற் பிரிவு அறிவித்தல் நடைத்திரைப் பரவை நாற்கடல் அணைத்து வரையறுத்து அமைந்த வகைநான் காக விதிவரத் திருத்திய மேதினிப் பொறையை குருமணி விரித்தலின் தேனொடு கிடந்து மாயாது தொடுத்த மணமலர் சுமத்தலின் 5 வரைஎன நிறுத்திய திருவுறை பெருந்தோள் தரித்தும் அணைத்தும் தான்எனக் கண்டும் செய்ததும் அன்றி திருமணம் பணைத்துக் காக்கவும் குரிசில் கருத்துறும் போலும் விடையா வடந்தைசெய் வெள்ளிஅம் சிலம்பினும் 10 தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும் கொண்டல்வந் துலவும் நீலக் குவட்டினும் கோடைசென் நுடற்றும் கொல்லிக் கிரியினும் பிறந்தவர் பிறவாப் பெரும்பதி யகத்தும் முடிந்தவர் முடியா மூதூர் இடத்தும் 15 கண்டவர் காணாக் காட்சிசெய் நகரினும் வேகத் தலையினும் விதிஆ கமத்தினும் கல்வியர் உளத்தும் கலர்நெஞ் சகத்தும் தெய்வம் விடுத்துப் பொய்கொள் சிந்தையினும் கொலையினர் கண்ணும் குன்றா தியைந்து 20 வெளியுறத் தோன்றி இருளுற மறைந்த விஞ்சைவந் தருளிய நஞ்சணி மிடற்றோன் சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும் சின்னக் குறளும் செழுங்கார் போலப் பெருமறை முழங்கும் திருநகர்க் கூடல் 25 ஒப்புற் றடைமலர் சுமந்த மைப்புறக் கூந்தல் கொடிவணங்கு இடையே! 27 55. உள் மகிழ்ந்து உரைத்தல் நுனிக்கவின் நிறைந்த திருப்பெரு வடிவினள் உயிர்வைத்து உடலம் உழன்றன போல நெடும்பொருள் ஈட்ட நிற்பிரிந்து இறந்து கொன்றுணல் அஞ்சாக் குறியினர் போகும் கடுஞ்சுரம் தந்த கல்லழல் வெப்பம் 5 தேவர் மருந்தும் தென்தமிழ்ச் சுவையும் என்னுயிர் யாவையும் இட்டடைத் தேந்தி குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்தநின் பெருமுலை மூழ்கஎன் உளத்தினில் தொடாமுன் வீழ்சுற்று ஒழுக்கிய பராரைத் திருவடக் 10 குளிர்நிழல் இருந்து குணச்செயல் மூன்றும் உடலொடு படரும் நிலைநிழல் போல நீங்காப் பவத்தொகை நிகழ்முதல் நான்கும் உடனிறைந் தொழியா உட்பகை ஐந்தும் மதியினின் பழித்த வடுஇரு மூன்றும் 15 அணுகாது அகற்றி பணிமுனி நால்வர்க்கு அறமுதல் நான்கும் பெறஅருள் செய்த கூடற் பெருமான் நீடருள் மூழ்கி இருபதம் உள்வைத் திருந்தவர் வினைபோல் போயின துனைவினை நோக்கி 20 ஏகின எனக்கே அற்புதம் தருமே! 21 56. புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலத்தல் கொன்றைஅம் துணரில் செவ்வழி குறித்து வால்உளை எருக்கில் வளர்உழை பாடி கூவிளங் கண்ணியில் குலக்கிளை முரற்றி வெண்கூ தளத்தில் விளரிநின் றிசைத்து வண்டும் தேனும் ஞிமிறும் கரும்பும் 5 உமிழ்நறவு அருந்தி உறங்குசெஞ் சடையோன் மதுமலர் பறித்துக் திருவடி நிறைத்த நான்மறைப் பாலனை நலிந்துயிர் கவரும் காலற் காய்ந்த காலினன் கூடல் திருமறுகு அணைந்து வருபுனல் வையை 10 வரைபுரண் டென்னத் திரைநிரை துறையகத்து அணைந்தெடுத் தேந்திய அரும்புமுகிழ் முலையோள் மதிநுதல் பெருமதி மலர்முகத்து ஒருத்தியை ஆட்டியும் அணைத்தும் கூட்டியும் குலவியும் ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும் 15 முழக்கியும் தபுத்தியும் முலைஒளி நோக்கியும் விளிமொழி ஏற்றும் விதலையின் திளைத்தும் பூசியும் புனைந்தும் பூட்டியும் சூட்டியும் நிறுத்தியும் நிரைத்தும் நெறித்தும் செறித்தும் எழுதியும் தப்பியும் இயைத்தும் பிணித்தும் 20 கட்டியும் கலத்தியும் கமழ்த்தியும் மறைத்தும் செய்தன எல்லாம் செய்யலர் போலஎன் நெட்டிலை பொலிந்தபொன் நிறைதிரு உறையுளில் பாசடைக் குவளைச் சுழல்மணக் காட்டினைக் கருவரிச் செங்கண் வசாலினம் கலக்க 25 வேரிமலர் முண்டகத்து அடவிதிக்கு எறிய வெள்ளுடற் கருங்கண் கயல்நிரை உகைப்ப மரகதப் பன்னகத்து ஆம்பல்அம் குப்பையைச் சொரி எயிற்றுப் பேழ்வாய் வாளைகள் துகைப்ப படிந்து சேடெறியும் செங்கண் கவரியும் 30 மலைசூழ் கிடந்த பெருங்குலைப் பரப்பும் மலையுடன் அலைந்த முதுநீர் வெள்ளமும் மிடைந்து வயல்இரிந்து முதுகுசரிந் துடைந்து சிறியோன் செருஎன முறியப் போகி உழவக் கணத்தைக் குலைக்குடில் புகுத்தும் 35 பெருநீர் ஊரர் நிறைநீர் விடுத்துச் செறிந்த தென்எனக் கேண்மின் மறிந்துழை விழித்த மறிநோக் கினரே! 38 57. தன்னை வியந்து உரைத்தல் விடம்கொதித்து உமிழும் படம்கெழு பகுவாய்க் கண்டல்முன் முளைத்த கடிஎயிற் றரவக் குழுவினுக்கு உடைந்து குளிர்மதி ஒதுங்க தெய்வப் பிறைஇருந்த திருநுதற் பேதையைக் கண்டுகண்டு அரவம் மயில்எனக் கலங்க 5 நெடுஞ்சடைக் காட்டினை அடும்தீக் கொழுந்தென தலைஏது அலையா நகுதலை தயங்க அணிதலை மாலையை நிறைமதித் திரள்எனப் புடைபுடை ஒதுங்கி அரவுவாய் பிளப்ப ஒன்றினுக்கு ஒன்று கன்றிய நடுக்கொடு 10 கிடந்தொளி பிறழும் நெடுஞ்சடைப் பெருமான் படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநட வேந்தன் அருகர்ச் சார்ந்துநின்று அருட்பணி அடைப்ப மற்றவன் தன்னை நெடுந்துயில் வருத்தி 15 இறையவன் குலத்து முறையர் இன்மையால் கருதி தோரை கல்லொடு பிறங்க மெய்யணி அளறாக் கைம்முழம் தேய்த்த பேரன்பு உருவப் பசுக்கா வலனை உலகினில் தமது முக்குறி யாக் 20 மணிமுடி வேணியும் உருத்திரக் கலனும் நிலவுமிழ் புண்ணியப் பால்நிறச் சாந்தமும் அணிவித் தருள்கொடுத்து அரசன் ஆக்கி அடுமால் அகற்றி நெடுநாள் புரக்க வையகம் அளித்த மணிஒளிக் கடவுள் 25 நெடுமறிக் கூடல் விரிபுனல் வையையுள் பிடிகுளி செய்யும் களிறது போல மயிலெனும் சாயல் ஒருமதி நுதலியை மருமமும் தோளினும் வரையறப் புல்லி ஆட்டுறும் ஊரன் அன்புகொள் நலத்தினை 30 பொன்னுலகு உண்டவர் மண்ணுலகு இன்பம் தலைநடுக் குற்ற தன்மை போல ஒன்றற அகற்றி உடன்கலந் திலனேல் அன்ன ஊரனை எம்மில் கொடுத்து தேரினும் காலினும் அடிக்கடி கண்டு 35 நெட்டுயிர்ப்பு எறிந்து நெடுங்கண் நீருகுத்துப் பின்னும் தழுவ உன்னும் அவ்வொருத்தி அவளே ஆகுவள் யானே தவலருங் கருநீர்க் குண்டு அகழுடுத்த பெருநீர் ஆழித் தொல்லுல குழிக்கே. 40 58. புதல்வன் மேல்வைத்துப் புலவி தீர்தல் அடியவர் உளத்திருள் அகற்றலின் விளக்கும் எழுமலை பொடித்தலின் அனல்தெறும் அசனியும் கருங்கடல் குடித்தலின் பெருந்தழற் கொழுந்தும் மரவுயிர் வௌவலின் தீவிழிக் கூற்றும் என்னுளம் இருத்தலின் இயைந்துணர் உயிரும் 5 நச்சின கொடுத்தலின் நளிர்தரு ஐந்தும் கருவழி நீக்கலின் உயர்நிலைக் குருவும் இருநிலம் காத்தலின் மதியுடை வேந்தும் ஆகிய மணிவேல் சேவலம் கொடியோன் வானக மங்கையும் தேன்வரை வள்ளியும் 10 இருபுறம் தழைத்த திருநிழல் இருக்கும் ஒரு பரங் குன்றம் மருவிய கூடல் பெருநதிச் சடைமிசைச் சிறுமதி சூடிய நாயகன் திருவடி நண்ணலர் போல பொய்பல புகன்று மெய்ஒளித்து இன்பம் 15 விற்றுணும் சேரி விடாதுறை ஊரன் ஊருணி ஒத்த பொதுவாய்த் தம்பலம் நீயும் குதட்டினை ஆயின் - சேயாய்! நரம்பெடுத்து உமிழும் பெருமுலைத் தீம்பாற்கு உள்ளமும் தொடாது விள்ளமுது ஒழுக்கும் 20 குதலைவாய் துடிப்பக் குலக்கடை உணங்கியும் மண்ணுறு மணியெனப் பூழிமெய் வாய்த்தும் புடைமணி விரித்த உடைமணி இழுக்கியும் சுடிகையும் சிகையும் சேர்ந்துகண் பனித்தும் பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும் 25 மறிக்கண் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில் சென்றழி யாது நின்றயர் கண்டும் உறுவதும் இப்பயன் அன்றேல், பெறுவது என்பால் இன்றுநின் பேறே. 29 59. தலைவி தோழியொடு புகல்தல் நடைமலை பிடித்த சொரிஎயிற்று இடங்கரை ஆழி வலவன் அடர்த்தன போல புன்தலை மேதி புனல்எழ முட்டிய வரிவுடற் செங்கண் வராலுடன் மயங்க உள்கவைத் தூண்டில் உரம்புகுந்து உழக்கும் 5 நிறைநீர் ஊரர் நெஞ்சகம் பிரிக்கும் பிணிமொழிப் பாணன் உடனுறை நீக்கி நூலொடு துவளும் தோல்திரை உரத்தின் மால்கழித்து அடுத்த நரைமுதிர் தாடிசெய் வெள்ளி குமிழ்த்த வெரூஉக்கண் பார்ப்பான் 10 கோலுடன் படரும் குறுநகை ஒருவி பூவிலைத் தொழில்மகன் காவல் கைவிட்டு திக்குவிண் படர்நதி திருமதி கயிலை நாமகள் பெருங்கடல் நாற்கோட்டு ஒருத்தல் புண்ணியம் இவைமுதல் வெள்ளுடல் கொடுக்கும் 15 புகழ்க்கவிப் பாவலர் புணர்ச்சி இன்பகற்றி எல்லாக் கல்வியும் இகழ்ச்சிசெய் கல்வியர் பெருநகைக் கூட்டமும் கழிவுசெய்து இவ்விடை மயக்குறு மாலை மாமகள் எதிர ஒருவழிப் படர்ந்தது என்னத் திருமுகம் 20 ஆயிரம் எடுத்து வான்வழிப் படர்ந்து மண்ணேழ் உருவி மறியப் பாயும் பெருங்கதத் திருநதி ஒருங்குழி மடங்க ஐம்பகை அடக்கிய அருந்தவ முனிவன் இரந்தன வரத்தால் ஒருசடை இருத்திய 25 கூடல் பெருமான் குரைகழல் கூறும் செம்மையர் போல கோடா நம்மையும் நோக்கினர் சிறிதுகண் புரிந்தே. 28 60. வழிபாடு கூறல் நிரைஇதழ் திறந்து மதுகண்டு அருத்தும் விருந்துகொள் மலரும் புரிந்துறை மணமும் செந்தமிழ்ப் பாடலும் தேக்கிய பொருளும் பாலும் சுவையும் பழமும் இரதமும் உடலும் உயிரும் ஒன்றியது என்ன 5 கண்டும் தெளிந்தும் கலந்தஉள் உணர்வால் பாலும் அமுதமும் தேனும் பிலிற்றிய இன்பமர் சொல்லி நண்பும் மனக்குறியும் வாய்மையும் சிறப்பும் நிழல்எனக் கடவார் விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும் 10 அளகைக்கு இறையும் அரும்பொருள் ஈட்டமும் கண்ணனும் காவலும் முனியும் பசுவும் ஒன்றினும் தவறா ஒழுங்கு இயைந்தனபோல் நீடிநின் றுதவும் கற்புடை நிலையினர் தவமகற் றீன்ற நெடுங்கற்பு அன்னை 15 முன்ஒரு நாளில் முதல்தொழில் இரண்டினர் பன்றியும் பறவையும் நின்றுரு எடுத்து கவையா உளத்துக் காணும் கழலும் கல்வியில் அறிவில் காணும் முடியும் அளவுசென் றெட்டா அளவினர் ஆகி 20 மண்ணும் உம்பரும் அகழ்ந்தும் பறந்தும் அளவா நோன்மையில் நெடுநாள் வருந்திக் கண்ணினில் காணாது உளத்தினில் புணராது நின்றன கண்டு நெடும்பயன் படைத்த திருஅஞ் செழுத்தும் குறையாது இரட்ட 25 இருநிலம் உருவிய ஒருதழல் தூணத்து எரிமழு நவ்வி தமருகம் அமைத்த நாற்கரம் நுதல்விழி தீப்புகை கடுக்களம் உலகுபெற் றெடுத்த ஒருதனிச் செல்வி கட்டிய வேணி மட்டலர் கடுக்கை 30 ஆயிரம் திருமுகத்து அருள்நதி சிறுமதி பகைதவிர் பாம்பும் நகைபெறும் எருக்கமும் ஒன்றிய திருவுரு நின்றுநனி காட்டிப் பேரருள் கொடுத்த கூடலம் பதியோன் பதம்இரண்டு அமைத்த உள்ளக் 35 கதியிரண்டு ஆய ஓர்அன் பினரே. 36 61. ஆதரம் கூறல் நெடுவரைப் பொங்கர்ப் புனம்எரி கார்அகில் கரும்புகை வானம் கையுறப் பொதிந்து தருநிழல் தேவர் தம்உடல் பனிப்பப் படர்ந்தெறி கங்கை விடும்குளிர் அகற்றும் பொன்னம் பொருப்ப! நின்உளத் தியையின் 5 கனல்தலைப் பழுத்த திரள்பரல் முரம்பு வயல்வளை கக்கிய மணிநிரைப் பரப்பே அதர்விரிந் தெழுந்த படர்புகை நீழல் பொதுளிய காஞ்சி மருதணி நிழலே! தீவாய்ப் புலிப்பற் சிறுகுரல் எயிற்றியர் 10 கழுநீர் மிலையும் வயல்மா தினரே அயற்புலம் அறியும் எயினர் மாத்துடி நடுநகர்க் கிரட்டும் களிஅரி கிணையே! இருள்கவர் புலன்எனச் சுழல்தரும் சூறை மதுமலர் அளைந்த மலையக் காலே 15 எழுசிறை தீயும் எருவையும் பருந்தும் குவளையம் காட்டுக் குருகொடு புதாவே வலியழி பகடு வாய்நீர்ச் செந்நாய் தழைமடி மேதியும் பிணர்இடங் கருமே பட்டுலர் கள்ளி நெற்றுடை வாகை 20 சுருள்விரி சாலியும் குலைஅரம் பையுமே வடதிரு ஆல வாய்திரு நடுவூர் வெள்ளி யம்பலம் நள்ளாறு இந்திரை பஞ்சவ னீச்சரம் அஞ்செழுத்து அமைத்த சென்னி மாபுரம் சேரன் திருத்தளி 25 கன்னிசெங் கோட்டம் கரியோன் திருவுறை விண்ணுடைத் துண்ணும் கண்ணிலி ஒருத்தன் மறிதிரைக் கடலுள் மாவெனக் கவிழ்ந்த களவுடற் பிளந்த ஒளிகெழு திருவேல் பணிப்பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன் 30 முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த அருவிஅம் சாரல் ஒருபரங் குன்றம் சூழ்கொள இருந்த கூடலம் பெருமான் முழுதும் நிறைந்த இருபதம் புகழார் போம்வழி என்னும் கடுஞ்சுரம் மருதம் 35 மாமை ஊரும் மணிநிறத்து இவட்கே. 36 62. முகம் கண்டு மகிழ்தல் நிறைமதி புரையா நிறைமதி புரையா தேரான் தெளிவெனும் திருக்குறள் புகுந்து குறைமதி மனனே நிறைமதி புரையா உவர்க்கடற் பிறந்தும் குறைவுடல் கோடியும் கருங்கவைத் தீநாப் பெரும்பொறிப் பகுவாய்த் 5 தழல்விழிப் பாந்தள் தான்இரை மாந்தியும் மிச்சில் உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும் தணந்தோர்க்கு எரிந்தும் மணந்தோர்க்கு அளித்தும் குமுதம் மலர்த்தியும் கமலம் குவித்தும் கடல்சூழ் உலகில் மதிநடு இகந்தும் 10 பெருமறை கூறி அறைவிதி தோறும் முத்தழற்கு உடையோன் முக்கட் கடவுளென்று உய்த்திடும் வழக்குக் கிடக்கஎன் றொருகால் வானவர் நதிக்கரை மருள்மகம் எடுத்த தீக்குணத் தக்கன் செருக்களம் தன்னுள் 15 கண்தொறும் விசைத்த கருப்புத் தரளமும் வளைஉமிழ் ஆரமும் சுரிமுகச் சங்கும் வலம்புரிக் கூட்டமும் சலஞ்சலப் புஞ்சமும் நந்தின் குழுவும் வயல்வயல் நந்தி உழவக் கணத்தர் படைவாள் நிறுத்தும் 20 கூடற்கு இறையோன் குரைகழற் படையால் ஈர்எண் கலையும் பூழிபட் டுதிர நிலனொடு தேய்ப்புண்டு அலமந்து உலறியும் சிதைந்து நைந்தெழு பழித்தீ மதிபுரையா முண்டகம் மலர்த்தி முதிராது அலர்ந்தும் 25 அமுதம் நின்றிரைத்தும் அறிவு அறிவித்தும் தீக்கதிர் உடலுள் செல்லா திருந்தும் திளையாத் தாரைகள் சேரா முளையா வென்றி இவள்முக மதிக்கே. 29 63. ஆயத்து உய்த்தல் வடவனத்து ஒருநாள் மாறுபட்டு எதிர்ந்து வழிநடம் தனது மரக்கால் அன்றி முதல்தொழில் பதுமன் முன்னாய் அவ்வுழி மான்தலைக் கரத்தினில் கூடை வயக்கி தூக்கல் வளையுடன் தொடர்பதம் எறிந்து 5 மற்றதன் தாள்அம் புத்திரி ஆக்கி நிமிர்த்தெறி காலில் கடைக்கண் கிடத்தி பாணியில் சிரம்பதித்து ஒருநடை பதித்து கொடுகொட் டிக்குக் குறிஅடுத்து எடுக்கும் புங்கம் வாரம் புடைநிலை பொறுத்து 10 சச்ச புடத்தில் தனிஎழு மாத்திரை ஒன்றைவிட் டொருசீர் இரண்டுற உறுத்தி எடுத்துத் துள்ளிய இனமுத் திரைக்கு மங்கலப் பாணி மாத்திரை நான்குடன் சென்றெறிந்து ஒடுங்கும் துருமிடை திருத்தி 15 ஞெள்ளலில் குனித்த இருமாத் திரைக்குப் பட்டடை எடுக்கப் புலுதம் பரப்பி புறக்கால் மடித்து குறித்தெறி நிலையம் பதினான்கு அமைத்து விடுமாத் திரைக்கு வன்மமும் பிதாவும் பாணியில் வகுத்து 20 வட்டம் கொடுக்கும் இந்திரை பணிக்கு மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து வலவை இடாகினி மண்இருந் தெடுத்த காலுடன் சுழல ஆடிய காளி நாணிநின் றொடுங்கத் தானும்ஓர் நாடகம் 25 பாண்டரங் கத்தொரு பாடுபெற் றமைந்த மோகப் புயங்க முறைத்துறை தூக்கி அதற்குச் சாரணி அருட்கரம் ஒன்றில் பாணி இரண்டும் தாளம் ஆக்கி ஒருதாள் மிதித்து விண்உற விட்ட 30 மறுதாள் மலரில் மலர்க்கரம் துடக்கி பார்ப்பதிப் பாணியைத் துடிமணி எடுப்ப சுருதியைத் தண்டி வலிகொண்டு அமைப்ப முதலேழ் அதனை ஒன்றினுக்கு ஏழென வீணை பதித்து தானம் தெரிக்க 35 முன்துடி மணியில் ஒற்றிய பாணியை நாதம் கூட்டி மாத்திரை அறுத்து மாங்கனி இரண்டில் ஆம்கனி ஒன்றால் முன்ஒரு நாளில் முழுக்கதி அடைந்த அம்மைப் பெயர்பெறும் அருட்பேய் பிடிப்ப 40 பூதமும் கூளியும் பேயும் குளிப்ப அமரர்கண் களிப்ப ஆடிய பெருமான் மதுரையம் பதிஎனும் ஒருகொடி மடந்தை சீறிதழ்ச் சாதிப் பெருமணம் போல நின்னுளம் நிறைந்த நெடுங்கற்பு அதனால் 45 வினையுடல் புணர வரும்உயிர் பற்றிப் புண்ணியம் தொடரும் புணச்சி போல காலம்உற் றோங்கும் நீள்முகில் கூடி மணிதரு தெருவில் கொடிநெடுந் தேரும் நாற்குறிப் புலவர் கூட்டெழு நனிபுகழ் 50 மருந்தயில் வாழ்க்கையர் மணிநகர் உருவின உருளெழு பூமியும் அவ்வுருள் பூண்ட கலினமான் துகளும் கதிர்மறை நிழலின் நின்றுமுன் இட்ட நிறைஅணி பொறுத்து பெருங்குலைக் கயத்துக் கருந்தாள் கழுநீர் 55 நிறைவினுள் பூத்த தாமரை ஒன்றென நின்னுயிர் ஆய நாப்பண் மன்னுக வேந்தன் வரவினுக்கு எழுந்தே. 58 64. கற்புப் பயப்பு உரைத்தல் எழுகடல் வளைந்த பெருங்கடல் நாப்பண் பத்துடை நூறு பொற்பமர் பரப்பும் ஆயிரத்து இரட்டிக் கீழ்மேல் நிலையும் யோசனை உடுத்த மாசறு காட்சிப் பனிக்குப் பொருப்பில் திடர்கொள் மூதூர்க் 5 களவுடை வாழ்க்கை உளமனக் கொடியோன் படர்மலை ஏழும் குருகமர் பொருப்பும் மாஎனக் கவிழ்ந்த மறிகடல் ஒன்றும் கடுங்கனல் பூழி படும்படி நோக்கிய தாரை எட்டுறையும் கூரிலை நெடுவேல் 10 காற்படைக் கொடியினன் கருணயொடு அமர்ந்த புண்ணியக் குன்றம் புடைபொலி கூடல் பிறைச்சடை முடியினன் பேரருள் அடியவர்க்கு ஒருகால் தவறா உடைமைத் தென்ன பிரியாக் கற்பெனும் நிறையுடன் வளர்ந்த 15 நெடுங்கயல் எறிவிழிக் குறுந்தொடித் திருவினள் தெய்வமென் றொருகால் தெளியவும் உளத்திலன் பலவுயிர் தழைக்க ஒருகுடை நிழற்றும் இருகுல வேந்தர் மறுபுலப் பெரும்பகை நீர்வடுப் பொருவ நிறுத்திடப் படரினும் 20 ஏழுயர் இரட்டி மதலைநட் டமைத்த தன்பழங் கூடம் தனிநிலை அன்றி உடுநிலை வானப் பெருமுகடு உயரச் செய்யுமோர் கூடம் புணர்த்தின் நெய்ம்மிதி உண்ணாது அவன்கடக் களிறே. 25 65. மருவுதல் உரைத்தல் பெண்எனப் பெயரிய பெருமகள் குலனுள் உணாநிலன் உண்டு பராய அப் பெருந்தவம் கண்ணுற உருப்பெறும் காட்சியது என்னக் கருவுயிர்த் தெடுத்த குடிமுதல் அன்னை நின்னையும் கடந்தது அன்னவள் அருங்கற்பு 5 அரிகடல் மூழ்கிப் பெறும் அருள் பெற்ற நிலமகள் கடந்தது நலனவள் பொறையே இருவினை நாடி உயிர்தொறும் அமைத்த ஊழையும் கடந்தது வாய்மையின் மதனே கற்பகம் போலும் அற்புதம் பழுத்த 10 நின் இலம் கடந்தது அன்னவள் இல்லம் பேரா வாய்மைநின் ஊரனைக் கடந்தது மற்றவள் ஊரன் கொற்ற வெண்குடையே ஏழுளைப் புரவியோடு எழுகதிர் நோக்கிய சிற்றிலை நெரிஞ்சில் பொற்பூ என்ன 15 நின்முகக் கிளையினர் தம்மையும் கடந்தனர் மற்றவள் பார்த்த மதிக்கிளை யினரே உடல்நிழல் மான உனதருள் நிற்கும் என்னையும் கடந்தனள் பொன்னவட்கு இனியோன் கொலைமதில் மூன்றும் இகலறக் கடந்து 20 பெருநிலவு எறித்த புகர்முகத் துளைக்கை பொழிமதக் கறையடி அழிதரக் கடந்து களவில் தொழில்செய் அரிமகன் உடலம் திருநுதல் நோக்கத்து எரிபெறக் கடந்து மாறுகொண்டு அறையும் மதிநூல் கடல்கிளர் 25 சமயக் கணக்கர் தம்திறம் கடந்து புலனொடு தியங்கும் பொய்உளம் கடந்த மலருடன் நிறைந்து வான்வழி கடந்த பொழில்நிறை கூடல் புதுமதிச் சடையோன் மன்நிலை கட வா மனத்தவர் போல 30 ஒன்னவர் இடும்திறைச் செலினும் தன்நிலை கடவாது அவன்பரித் தேரே. 32 66. பள்ளிடத்து ஊடல் நீரர மகளிர் நெருக்குபு புகுந்து கண்முகம் காட்டிய காட்சித்து என்ன பெருங்குலை மணந்த நிறைநீர்ச் சிறைப்புனல் மணிநிறப் படாம்முதுகு இடையறப் பூத்து சுரும்பொடு கிடந்த சொரிஇதழ்த் தாமரை 5 கண்ணினும் கொள்ளாது உண்ணவும் பெறாது நிழல்தலை மணந்து புனல்கிட வாது விண்உடைத் துண்ணும் வினைச்சூர் கவர்ந்த வானவர் மங்கையர் மயக்கம் போல பிணர்க்கரு மருப்பின் பிதிர்பட உழக்கி 10 வெண்கார்க் கழனிக் குருகெழப் புகுந்து கடுக்கைச் சிறுகாய் அமைத்தவாற் கருப்பை இணைஎயிறு என்ன இடை இடை முள்பயில் குறும்புதல் முண்டகம் கரும்பெனத் துய்த்து செங்கண் பகடு தங்குவயல் ஊரர்க்கு 15 அருமறை விதியும் உலகியல் வழக்கும் கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி ஐந்திணை வழுவாது அகப்பொருள் அமுதினை குறுமுனி தேறவும் பெறுமுதல் புலவர்கள் 20 ஏழ்எழு பெயரும் கோதறப் பருகவும் புலனெறி வழக்கில் புணருலக வர்க்கும் முன்தவம் பெருக்கும் முதல்தா பதர்க்கும் நின்றறிந் துணர தமிழ்ப்பெயர் நிறுத்தி எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன் 25 மெய்த்தவக் கூடவிளைல்பொருள் மங்கையர் முகத்தினும் கண்ணினும் முண்டக முலையினும் சொல்லினும் துவக்கும் புல்லம் போல எம்மிடத்து இலதால் என்னை தம்முளம் தவறிப் போந்தது இவ்விடனே. 30 67. வழிப்படுத்து உரைத்தல் செங்கோல் திருவுடன் தெளிந்தறம் பெருக்கிய மறுபுல வேந்தன் உறுபடை எதிர்ந்த கொடுங்கோல் கொற்றவன் நெடும்படை அனைத்தும் சேர இறந்த திருக்தகு நாளில் அவன்பழி நாட்டு நடுங்குநற் குடிகள் 5 கண்ணொடு கண்ணில் கழறிய போல ஒருவரின் ஒருவர் உள்ளத்து அடக்கித் தோன்றா நகையுடன் துண்டமும் சுட்டி அம்பல் தூற்றும் இல்வூர் அடக்கி கடல்கிடந் தன்ன நிரை நிரை ஆய 10 வெள்ளமும் மற்றவர் கள்ளமும் கடந்து தாயவர் மயங்கும் தனித்துயர் நிறுத்தி பறவை மக்களைப் பரியுநர்க் கொடுத்து கிடைப்பல் யானே நும்மை தழைத்தெழு தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும் 15 பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும் முடைத்தலை எரிபொடி உடைமையின் பாலையும் ஆமையும் சலமும் மேவலின் மருதமும் கடுவும் சங்கும் ஒளிர்தலின் நெய்தலும் ஆகத் தனது பேரருள் மேனியில் 20 திணைஐந்து அமைத்த இணைஇலி நாயகன் வரும்தொழில் அனைத்தும் வளர்பெரும் பகலே எரிவிரிந் தன்ன இதழ்ப்பல் தாமரை அருள்முகத் திருவொடு மலர்முகம் குவிய மரகதப் பாசடை இடையிடை நாப்பன் 25 நீலமும் மணியும் நிரைகிடந் தென்ன வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ்விரிப்ப குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவிப் பாசடைக் குடம்பை யூடுகண் படுப்ப துணையுடன் சகோரம் களியுடன் பெயர்ந்து 30 விடும் அமு தருந்த விண்ணகத்து அணக்க சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும் எறிதிரைப் பழனக் கூடல் செறிக இன்றம்ம திருவொடும் பொலிந்தே 34 68. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல் இருநிலம் தாங்கிய வலிகெழு நோன்மைப் பொன்முடிச் சயிலக் கணவற் புணர்ந்து திருவெனும் குழவியும் அமுதெனும் பிள்ளையும் மதியெனும் மகவும் அமருலகு அறியக் கண்ணொடு முத்தம் கலுழ்ந்து உடல் கலங்கி 5 வாய்விட் டலறி வயிறுநொந் தீன்ற மனன் எழு வருத்தம் அதுஉடையை ஆதலின் பெருமயல் எய்தா நிறையினள் ஆக என்ஒரு மயிலும் நின்மகளாக் கொண்டு தோன்றிநின் றழியாத் துகளறு பெருந்தவம் 10 நிதிஎனக் கட்டிய குறுமுனிக்கு அருளுடன் தரள மும் சந்தும் எரிகெழு மணியும் முடங்குளை அகழ்ந்த கொடுங்கரிக் கோடும் அகிலும் கனகமும் அருவிகொண் டிறங்கிப் பொருநைஅம் கன்னிக்கு அணிஅணி பூட்டும் 15 செம்புடல் பொதிந்த தெய்வப் பொதியமும் உவட்டாது அணையாது உணர்வெனும் பசியெடுத்து உள்ளமும் செவியும் உருகிநின்று உண்ணும் பெருந்தமிழ் அமுதும் பிரியாது கொடுத்த தோடணி கடுக்கைக் கூடல்எம் பெருமான் 20 எவ்வுயிர் இருந்தும் அவ்வுயிர் அதற்குத் தோன்றாது அடங்கிய தொன்மைத் தென்ன ஆர்த்தெழு பெருங்குரல் அமைந்துநின் றொடுங்கிநின் பெருந்தீக் குணனும் ஒழிந்துளம் குளிருறும் இப்பெரு நன்றி இன்றெற்கு உதவுதி 25 எனின்பதம் பணிகுவல் அன்றே நன்கமர் பவள வாயும் கிளர்பச் சுடம்பும் நெடுங்கயல் விழியும் நிறைமலை முலையும் மாசறப் படைத்து மணிவுடல் நிறைத்த பெருமுகில் வயிறளவு ஊட்டித் 30 திருவுலரு அளிக்கும் கடல்மட மகளே! 31 69. பிரிவு இன்மை கூறல் நிலையுடைப் பெருந்திரு நேர்படு காலைக் காலால் தடுத்துக் கனன்று எதிர்கறுத்தும் நனிநிறை செல்வ நாடும் நன்பொருளும் எதிர்பெறின் கண்சிவந்து எடுத்தவை களைந்தும் தாமரை நிதியமும் வால்வளைத் தனமும் 5 இல்லம் புகுதர இருங்கதவு அடைத்தும் அரிஅயன் அமரர் மலைவடம் பூட்டிப் பெருங்கடல் வயிறு கிடங்கெழக் கடைந்த அமுதம் உட்கையில் உதவுழி ஊற்றியும் மெய்யுலகு இரண்டினுள் செய்குநர் உளரேல் 10 எழுகதிர் விரிக்கும் மணிகெழு திருந்திழை நின்பிரிவு உள்ளும் மனன்உளன் ஆகுக முழுதுற நிறைந்த பொருள்மனம் நிறுத்திமுன் வேடம் துறவா விதியுடைச் சாக்கியன் அருட்கரை காணா அன்பெனும் பெருங்கடல் 15 பலநாள் பெருகி ஒருநாள் உடைந்து கரைநிலை இன்றிக் கையகன் றிடலும் எடுத்துடைக் கல்மலர் தொடுத்தவை சாத்திய பேரொளி இணையாக் கூடல் மாமணி குலமலைக் கன்னியென் றருள்குடி யிருக்கும் 20 விதிநெறி தவறா ஒருபங்கு உடைமையும் பறவை செல்லாது நெடுமுகுடு உருவிய சேகரத்து உறங்கும் திருநதித் துறையும் நெடும்பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் அருங்கரை இறந்த ஆகமக் கடலும் 25 இளங்கோ வினர்கள் இரண்டறி பெயரும் அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்துப் பறந்தும் அகழ்ந்தும் படியிது என்னாது அறிவகன்று உயர்ந்த கழல்மணி முடியும் உடைமையன் பொற்கழல் பேணி 30 அடையலர் போல மருள்மனம் திரிந்தே. 31 70. ஊடல் நீட வாடி உரைத்தல் நிறைவளை ஈட்டமும் தரளக் குப்பையும் அன்னக் குழுவும் குருகணி இனமும் கருங்கோட்டுப் புன்னை அரும்புதிர் கிடையும் முடவெண் தாழை ஊழ்த்தமுள் மலரும் அலவன் கவைக்கால் அன்னவெள் அலகும் 5 வாலுகப் பரப்பின் வலைவலிது ஒற்றினர்க்கு ஈதென அறியாது ஒன்றிவெள் இடையாம் மாதுடைக் கழிக்கரைச் சேரிஓர் பாங்கர் புள்ளொடு பிணங்கும் புள்கவ ராது வெள்ளிற உணங்கல் சேவல் ஆக 10 உலகுயிர் கவரும் கொலைநிலைக் கூற்றம் மகளெனத் தரித்த நிலைஅறி குவனேல் விண்குறித் தெழுந்து மேலவர்ப் புடை த்து நான்முகன் தாங்கும் தேனுடைத் தாமரை இதழும் கொட்டையும் சிதறக் குதர்ந்து 15 வானவர்க்கு இறைவன் கடவுகார் பிடித்துப் பஞ்செழப் பிழிந்து தண்புனல் பருகி ஐந்தெனப் பெயரிய நெடுமரம் ஒடித்து கண்உளத்து அளவா எள்ளுண வுண்டு பொரியெனத் தாரகைக் கணன்உடல் கொத்தி 20 அடும்திறல் அனைய கொடுந்தொழில் பெருக்கிய மாயா வரத்த பெருங்குருகு அடித்து வெண்சிறை முடித்த செஞ்சடைப் பெருமான் கூடற்கு இறையோன் குறிஉரு கடந்த இருபதம் உளத்தவர் போல 25 மருவுதல் ஒருவும் மதியா குவனே. 26 71. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல் சிலைநுதல் கணைவிழித் தெரிவையர் உளம்என ஆழ்ந்தகன் றிருண்ட சிறைநீர்க் கயத்துள் எரிவிரிந் தன்ன பல்தனத் தாமரை நெடுமயல் போர்த்த உடல்ஒரு வேற்கு குருமணி கொழிக்கும் புனல்மலைக் கோட்டுழி 5 நின்பதி மறைந்த நெட்டிர வகத்துள் குருகும் புள்ளும் அருகணி சூழ தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமி பெருந்துயில் இன்பம் பொருந்துபு நடுநாள் காணூம்நின் கனவுள் நம் கவர்மனத் தவரைக் 10 கொய்யுளைக் கடுமான் கொளுவிய தேரொடு பூவுதிர் கானல் புறம்கண் டனன்என சிறிதொரு வாய்மை உதவினை அன்றேல் சேகரம் கிழித்த நிறைமதி உடலம் கலை கலை சிந்திய காட்சியது என்ன 15 கடுமான் கீழ்ந்த கடமலைப் பல்மருப்பு எடுத்தெடுத் துந்தி மணிக்குலம் சிதறி கிளைஞர்கள் நச்சாப் பொருளினர் போல சாதகம் வெறுப்ப சரிந்தகழ்ந் தார்த்து திரள்பளிங் குடைத்துச் சிதறுவ தென்ன 20 வழியெதிர் கிடந்த உலமுடன் தாக்கி வேங்கையும் பொன்னும் ஓருழித் திரட்டி வரையர மகளிர்க்கு அணியணி கொடுத்து; பனைக்கைக் கடமா எருத்துறு பூழி வண்டெழுந் தார்ப்ப மணி எடுத்து அலம்பி 25 மயில்சிறை ஆற்ற வலிமுகம் பனிப்ப எதிர்சுனைக் குவளை மலர்ப்புறம் பறித்து வரையுடன் நிறைய மாலையிட் டாங்கு நெடுமுடி அருவி அகிலொடு கொழிக்கும் கயிலைவீற் றிருந்த கண்ணுதல் விண்ணவள் 30 நாடகக் கடவுள் கூடல் நாயகன் தாமரை உடைத்த காமர் சேவடி நிறைவுளம் தரித்தவர் போல குறைவுளம் நீங்கி இன்பா குவனே. 34 72. பதி பரிசு உரைத்தல் எரிதெறக் கருகிய பொடி பொறுத்து இயங்கினை முகில்தலை சுமந்து ஞிமிறெழுந்து இசைக்கும் பொங்கருள் படுத்த மலர்கால் பொருந்துக! கடுங்கடத்து எறிந்த கொடும்புலிக்கு ஒடுங்கினை வரிஉடற் செங்கண் வராலினம் எதிர்ப்ப 5 உழவக் கணத்தர் உடைவது நோக்குக கொலைஞர் பொலிந்த கொடித்தேர்க்கு அணங்கினை வேதியர் நிதிமிக விதிமகம் முற்றி அவபிர தத்துறை ஆடுதல் கெழுமி பொன்னுருள் வையம் போவது காண்க 10 ஆறலை எயினர் அமர்க்கலிக்கு அழுங்கினை பணைத்தெழு சாலி நெருக்குபு புகுந்து கழுநீர் களைநர் தம் கம்பலை காண்க தழல்தலைப் படுத்த பரல்முரம்பு அடுத்தனை சுரிமுகக் குழுவளை நிலவெழச் சொரிந்த 15 குளிர்வெண் தரளக் குவால்இவை காண்க அலகைநெட் டிரதம் புனல்எனக் காட்டினை வன்மீன் நெடுங்கயல் பொதிவினை யகத்துக் கிடங்கெனப் பெயரிய கருங்கடல் காண்க முனகர்கள் பூசல் துடிஒலி ஏற்றனை 20 குடுமிஅம் சென்னியர் கருமுகில் விளர்ப்பக் கிடைமுறை எடுக்கும் மறைஒலி சேண்மதி அமரர்கள் முனிக்கணத் தவர்முன் தவறு புரிந்துடன் உமைகண் புதைப்ப மற்றுமையும் ஆடகச் சயிலச் சேகரம் தொடர்ந்த 25 ஒற்றையம் பசுங்கழை ஒல்கிய போல உலகுயிர்க் குயிரெனும் திருவுரு அணைந்து வளைக்கரம் கொடுகண் புதைப்ப அவ்வுழியே உலகிருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர் பிரமன் உட்பட்ட நிலவுயிர் அனைத்தும் 30 தமக்கெனக் காட்டும் ஒளிக்கண் கெடலும் மற்றவர் மயக்கம் கண்டவர் கண்பெறத் திருநுதல் கிழித்த தனிவிழி நாயகன் தாங்கிய கூடல் பெருநகர் ஈங்கிது காண்க முத்தெழில் நகைக்கொடியே! 35 73. தேறாது புலம்பல் புட்பெயர்க் குன்றமும் எழுவகைப் பொருப்பும் மேல்கடல் கவிழ்முகப் பொரிஉடல் மாவும் நெடுங்கடல் பரப்பும் அடும்தொழில் அரக்கரும் என்உளத்து இருளும் இடைபுகுந்து உடைத்த மந்திரத் திருவேல் மறம்கெழு மயிலோன் 5 குஞ்சரக் கொடி யொடும் வள்ளியம் கொழுந் தொடும் கூறாக் கற்பம் குறித்துநிலை செய்த புண்ணியம் குமிழ்த்த குன்றுடைக் கூடல் நிறைந்துறை கறைமிடற்று அறம்கெழு பெருமான் பேரருள் விளைத்த மாதவர் போல 10 முன்னொரு நாளில் உடலுயிர் நீஎன உள்ளம் கரிவைத்து உரைசெய்த ஊரர் தம்மொழி திரிந்து தவறுநின் றுளவேல் அவர்குறை அன்றால் ஒருவன் படைத்த காலக் குறிகொல் அன்றியும் முன்னைத் 15 தியங்குடல் ஈட்டிய தரும்கடு வினையால் காலக் குறியை மனம்தடு மாறிப் பின்முன் குறித்தநம் பெருமதி அழகால் நனவிடை நவிற்றிக் கனவிடைக் கண்ட உள்ளெழு கலக்கத் துடன்மயங் கினமால் 20 குறித்தஇவ் இடைநிலை ஒன்றே மறிக்குலத்து உழையின் வழிநோக் கினளே! 22 74. மாலைப் பொழுதொடு புலம்பல் ஆயிரம் பணாடவி அரவுவாய் அணைத்துக் கருமுகில் நிறத்த கண்ணனின் சிறந்து நிறையுடல் அடங்கத் திருவிழி நிறைத்துத் தேவர்நின் றிசைக்கும் தேவனின் பெருகி குருவளர் மரகதப் பறைத்தழை பரப்பி 5 மணிதிரை உகைக்கும் கடலினின் கவினி முள்எயிற்று அரவம் முறித்துயிர் பருகிப் புள்எழு வானத்து அசனியின் பொலிந்து பூதம் ஐந்துடையும் காலக் கடையினும் உடல்தழை நிலைத்த மறம்மிகு மயிலோன் 10 புரந்தரன் புதல்வி எயினர்தம் பாவை இருபால் இலங்க உலகுபெற நிறைந்த அருவிஅம் குன்றத்து அணிஅணி கூடற்கு இறையவன் பிறையவன் கறைகெழு மிடற்றோன் மலர்க்கழல் வழுத்தும்நம் காதலர் பாசறை 15 முனைப்பது நோக்கிஎன் முனைஅவிழ் அற்றத்து பெரும்பக லிடையே பொதும்பரில் பிரிந்த வளைகட் கூருகிர்க் கூக்குரல் மோத்தையை கருங்கட் கொடியினம் கண்ணறச் சூழ்ந்து புகைஉடல் புடைத்த விடன்வினை போல 20 மனம்கடந்து ஏறா மதில்வளைத்து எங்கும் கருநெருப்பு எடுத்த மறன்மருள் மாலை நின்வரற்கு ஏவர் நல்கின நின்வரல் கண்டுடல் இடைந்தோர்க் காட்டுதும் காண்மதி மண்ணுடல் பசந்து கறுத்தது விண்ணமும் 25 ஆற்றாது அழன்று காற்றின் முகம்மயங்கி உடுஎனக் கொப்புள் உடல்நிறை பொடித்தன ஈங்கிவற் றடங்கிய இருதிணை உயிர்களும் தம்முடன் மயங்கின ஒடுங்கின உறங்கின அடங்கின அவிந்தன அயர்ந்தன கிடந்தன 30 எனப்பெறின் மாலை என்னுயிர் உளைப்பதும் அவர்திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க உள்ளது மொழிமோ நீயே விண்ணுழை வந்தனை என்னில் வரும்குறி கண்டிலன் மண்ணிடை எனினே அவ்வழி யான 35 கூடிநின் றனைஎனின் குறிதவ றாவால் தேம்படர்ந் தனைஎனின் திசைகுறிக் குநரால் ஆதலின் நின்வரவு எனக்கே ஓதல் வேண்டும் புலன்பெறக் குறித்தே. 39 75. வாய்மை கூறி வருத்தம் தணித்தல் திருமலர் இருந்த முதியவன் போல நான்முகம் கொண்டுஅறி நன்னர் நெஞ்சிருந்து வேற்றருள் பிறவி தோற்றுவித் தெடுத்து நிலம்இரண் டளந்த நெடுமுகில் மான அரக்கர்தம் கூட்டம் தொலைத்து நெய்உண்டு 5 களிற்றுரி புனைந்த கண்ணுதல் கடுப்ப அழலெடுத்து ஒன்னலர் புரம்எரி ஊட்டி இனையஎவ் வுலகும் தொழுதெழு திருவேல் சரவணத்து உதித்த அறுமுகப் புதல்வன் பரங்குன் றுடுத்த பயங்கெழு கூடல் 10 பெருநகர் நிறைந்த சிறுபிறைச் சென்னியன் மால்அயன் தேடி மறைஅறைந்து அறியாத் தன்உரு ஒன்றில் அருள்உரு இருத்திய ஆதி நாயகன் அகல் மலர்க் கழல்இணை நண்ணலர் கிளைபோல் தன்மனம் திரிந்துநம் 15 துறைவன் தணக்க அறிகிலம் யாமே பிணர்முடத் தாழை விரிமர் குருகென நெடுங்கழிக் குறுங்கயல் நெய்தலுள் மறைந்தும் புன்னைஅம் பொதும்பர்க் குழைமுகம் குழைமுகம் கருந்திரை சுமந்தெறி வெண்தர ளத்தினை 20 அரும்பெனச் சுரும்பினம் அலரநின் நிசைத்தும் கலம்சுமந் திறக்கும் கரியினம் பொருப்பென பருகிய முகிற்குலம் படிந்துகண் படுத்தும் பவளநன் கவைக்கொடி வடவையின் கொழுந்தென சுரிவளை குளிக்குநர் கலனிடைச் செறிந்தும் 25 வெள்ளிற உண்ண விழைந்துபுகு குருகினம் கருங்கழி நெய்தலைக் காவல்செய் கண்என அரவுஎயிற்று அணிமுள் கைதையுள் அடங்கியும் விண்தொட எழுந்து விழுதிரைக் குழுவினைக் கடல்வயிற்று அடங்கிய மலையினம் வரவுஎன 30 குழிமணற் கேணியுள் கொம்பினர் படிந்தும் முயங்கிய உள்ளம் போகி மயங்கிய துறையினம் ஒருங்குழி வளர்ந்தே. 33 |