கல்லாடர்

அருளிய

கல்லாடம்

... தொடர்ச்சி - 2 ...

26. நின்குறை நீயே சென்று உரை என்றல்

வேற்றுப் பிடிபுணர்ந்த தீராப் புலவி
சுற்றமொடு தீர்க்க உய்த்த காதலின்
கருங்கை வெண்கோட்டுக் சிறுகண் பெருங்களிறு
உளத்துநின் றளிக்கும் திருத்தகும் அருநூல்
பள்ளிக் கணக்கர் பால்பட் டாங்கு 5

குறிஞ்சிப் பெருந்தேன் இறாலொடு சிதைத்து
மென்னடைப் பிடிக்குக் கைபிடித் துதவி
அடிக்கடி வணங்கும் சாரல் நாட!
அந்தணர் இருக்கை அகல்வோர் சூழ்ந்தென
நல்நயம் கிடந்த பொன்னகர் மூடிப் 10

புலைசெய்து உடன்று நிலைநிலை தேய்க்கும்
தள்ளா மொய்ம்பின் உள்உடைந்து ஒருகால்
வேதியன் முதலா அமரரும் அரசனும்
போதுதூய் இரப்ப புணரா மயக்கம்
நாரணன் நடித்த பெருவாய்த் தருக்கத்து 15

அறிவுநிலை போகி அருச்சனை விடுத்த
வெள்ளமுரண் அரக்கர் கள்ளமதில் மூன்றும்
அடுக்குநிலை சுமந்த வலித்தடப் பொன்மலை
கடுமுரண் குடிக்கும் நெடுவில் கூட்டி
ஆயிரம் தீவாய் அரவுநாண் கொளீஇ 20

மாதவன் அங்கி வளிகுதை எழுநுனி
செஞ்சரம் பேரிருள் அருக்கன் மதிஆக
தேர்வரை வையம் ஆகத் திருத்தி
சென்னிமலை ஈன்ற கன்னிவிற் பிடிப்ப
ஒருகால் முன்வைத்து இருகால் வளைப்ப 25

வளைத்தவில் வட்டம் கிடைத்தது கண்டு
சிறுநகை கொண்ட ஒருபெருந் தீயின்
ஏழுயர்வானம் பூழிபடக் கருக்கி
அருச்சனை விடாதங்கு ஒருப்படும் மூவரில்
இருவரைக் காவல் மருவுதல் ஈந்து 30

மற்றொரு வற்கு வைத்த நடம் அறிந்து
குடமுழவு இசைப்பப் பெரும்அருள் நல்கி
ஒருநாள் அருச்சனை புரிந்திடா அவர்க்கும்
அரும்பெறல் உளதாம் பெரும்பதம் காட்டி
எரியிடை மாய்ந்த கனல்விழி அரக்கர்க்கு 35

உலவாப் பொன்னுலகு அடைதர வைத்த
சுந்தரக் கடவுள் கந்தரக் கறையோன்
மாமி ஆடப் புணரி அழைத்த
காமர் கூடற்கு இறைவன் கழலிணை
களிப்புடை அடியர்க்கு வெளிப்பட் டென்ன 40

ஒருநீ தானே மருவுதல் கிடைத்து
கள்ளமும் வெளியும் உள்ளமுறை அனைத்தும்
விரித்துக் கூறி பொருத்தமும் காண்டி
ஈயா மாந்தர் பொருள்தேய்ந் தென்ன
நுண்ணிடை சுமந்து ஆற்றாது 45

கண்ணிய சுணங்கின் பெருமுலை யோட்கே! 46

27. இரவுக்குறி வேண்டல்

வள்ளியோர் ஈதல் வரையாது போல
எண்திசை கருஇருந்து இனமழை கான்றது
வெண்ணகைக் கருங்குழல் செந்தளிர்ச் சிறடி
மங்கையர் உளமென கங்குலும் பரந்தது
தெய்வம் கருதாப் பொய்யினர்க்கு உரைத்த 5

நல்வழி மான புல்வழி புரண்டது
காலம் முடிய கணக்கின் படியே
மறலி விடுக்க வந்த தூதுவர்
உயிர்தொறும் வளைந்தென உயிர்சுமந்து உழலும்
புகர்மலை இயங்கா வகைவரி சூழ்ந்தன 10

வெள்ளுடற் பேழ்வாய்த் தழல்விழி மடங்கல்
உரிவை மூடி கரித்தோல் விரித்து
புள்ளி பரந்த வள்ளுகிர்த் தரக்கின்
அதள்பியற் கிட்டு குதியாய் நவ்வியின்
சருமம் உடுத்து கரும்பாம்பு கட்டி 15

முன்புரு விதிகள் என்புகுரல் பூண்டு
கருமா எயிறு திருமார்பு தூக்கி
வையகத் துயரின் வழக்கறல் கருதி
தொய்யில் ஆடும் கடனுடைக் கன்னியர்
அண்ணாந்த வனமுலைச் சுண்ணமும் அளறும் 20

எழிலிவான் சுழலப் பிளிறுகுரற் பகட்டினம்
துறைநீர் ஆடப் பரந்தகார் மதமும்
பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து
சிஞ்சை இடங்கரை பைஞ்சிலைச் சேலை
உடற்புலவு மாற்றும் படத்திரை வையை 25

நிறைநீர் வளைக்கும் புகழ்நீர்க் கூடல்
வெள்ளியம் பொதுவில் கள்ளவிழ் குழலொடும்
இன்பநடம் புரியும் தெய்வ நாயகன்
அருவிஉடற் கயிறும் சுனைமதக் குழியும்
பெருந்தேன் செவியும் கருந்தேன் தொடர்ச்சியும் 30

ஓவா, பெருமலைக் குஞ்சரம் மணக்க
வளம்தரும் உங்கள் தொல்குடிச் சீறூர்க்கு
அண்ணிய விருந்தினன் ஆகி
நண்ணுவன் சிறுநுதற் பெருவிழி யோளே! 34

28. நகர் அணிமை கூறல்

புயற்கார்ப் பாசடை எண்படப் படர்ந்த
வெள்ளப் பெருநதி கொள்ளைமுகம் வைத்து
நீட நிறைபாயும் வான வாவிக்குள்
ஒருசெந் தாமரை நடுமலர்ந் தென்ன
மூவடி வழக்கிற்கு ஓரடி மண்கொடு 5

ஒருதாள் விண்ணத்து இருமைபெற நீட்டிய
கருங்கடல் வண்ணன் செங்கருங் கரத்து
ஒன்றால் இருமலை அன்றேந் தியதென
உந்திஒழுக் கேந்திய வனமுலை யாட்டியும்
வரைபொரும் மருமத்து ஒருதிறன் நீயும் 10

முழைவாய் அரக்கர் பாடுகிடந் தொத்த
நிறைகிடைப் பொற்றை வரைகடந்து இறந்தால்
எரிதழற் குஞ்சி பொறிவிழி பிறழ்எயிற்று
இருளுடல் அந்தகன் மருள்கொள உதைத்த
மூவாத் திருப்பதத்து ஒருதனிப் பெருமான் 15

எண்ணில் பெறாத அண்டப் பெருந்திரள்
அடைவுஈன் றளித்த பிறைநுதற் கன்னியொடும்
அளவாக் கற்பம் அளிவைத்து நிலைஇய
பாசடை நெடுங்காடு காணிகொள் நீர்நாய்
வானவில் நிறத்த நெட்டுடல் வாளைப் 20

பேழ்வாய் ஒளிப்ப வேட்டுவப் பெயர் அளி
இடைவுறழ் நுதப்பின் குரவைவாய்க் கடைசியர்
களைகடுந் தொழில்விடுத்து உழவுசெறு மண்ட
பண்கால் உழவர் பகடுபிடர் பூண்ட
முடப்புது நாஞ்சில் அள்ளல் புகநிறுத்தி 25

சூடுநிலை உயர்த்தும் கடுங்குலை ஏற
பைங்குவளை துய்க்கும் செங்கட் கவரி
நாகொடு வெருண்டு கழைக்கரும்பு உழக்க
அமுதவாய் மொழிச்சியர் நச்சுவிழி போல
நெடுங்குழை கிழிப்பக் கடுங்கயல் பாயும் 30

தண்ணம் பழனம் சூழ்ந்த
கண்இவர் கூடல் பெருவளம் பதியே! 32

29. அறியாள் போன்று நினைவு கேட்டல்

பற்றலர்த் தெறுதலும் உவந்தோர்ப் பரித்தலும்
வெஞ்சுடர் தண்மதி எனப்புகழ் நிறீஇய
நெட்டிலைக் குறும்புகக் குருதி வேலவ!
வேதியன் படைக்க மாலவன் காக்கப்
பெறாததோர் திருவுருத் தான் பெரிது நிறுத்தி 5

அமுதயில் வாழ்க்கைத் தேவர்‍கோன் இழிச்சிய
மதமலை இருநான்கு பிடர்சுமந்து ஓங்கிச்
செம்பொன் மணிகுயிற்றிய சிகரக் கோயிலுள்
அமையாத் தண்ணளி உமையுடன் நிறைந்த
ஆலவாய் உறைதரும் மூலக் கொழுஞ்சுடர் 10

கருவி வானம் அடிக்கடி பொழியும்
கூடம் சூழ்ந்த ‍நெடுமுடிப் பொதியத்து
கண்நுழை யாது காட்சிகொடு தோற்றிய
வெறிவீச் சந்தின் நிரைஇடை எறிந்து
மற்றது வேலி கொளவளைத்து வளர்ஏனல் 15

நெடுங்கால் குற்றுழி இதணுழை காத்தும்
தேவர் கோமான் சிறை அரி புண்ணினுக்கு
ஆற்றாது பெருமுழை வாய்விட்டுக் கலுழ்ந்தென
கமஞ்சூல் கொண்மூ முதுகு குடியிருந்து
வான்உட்க முரற்றும் மலைச்சுனை குடைந்தும் 20

பிரசமும் வண்டும் இரலிதெறு மணியும்
வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்து
துகில்நான்று நுடங்கும் அருவி ஏற்றும்
மறுவறு செம்மணி கால்கவண் நிறுத்தி
நிறைமதி கிடக்கும் இறால்விழ எறிந்தும் 25

எதிர்சொல் கேட்பக் கால்புகத் திகைத்த
நெருக்குபொழில் புக்கு நெடுமலை கூயும்
நுகப்பின் பகைக்கு நூபுரம் அரற்றப்
பைங்காடு நகைத்த வெண்மலர் கொய்தும்
மனத்தொடு கண்ணும் அடிக்கடி கொடுபோம் 30

செம்பொன் செய்த வரிப்பந்து துரந்தும்
இனைய பல்நெறிப் பண்ணை இயங்கும்
அளவாக் கன்னியர் அவருள்
உளமாம் வேட்கையள் இன்னளென் நுரையே 34

30. சுடரோடு இரத்தல்

ஈன்றஎன் உளமும் தோன்றும் மொழிபயின்ற
வளைவாய்க் கிள்ளையும் வரிப்புனை பந்தும்
பூவையும் கோங்கின் பொன்மலர் சூட்டிய
பாவையும் மானும் தெருள்பவர் ஊரும்
நெடுந்திசை நடக்கும் பொருள்நிறை கலத்தினைப் 5

பெருவளி மலக்கச் செயல்மறு மறந்தாங்கு
சேர மறுக முதுக்குறை உறுத்தி
எரிதெறும் கொடுஞ்சுரத்து இறந்தன ளாக
நதிமதம் தறுகண் புகர்கொலை மறுத்த
கல்இபம் அதனைக் கரும்புகொள வைத்த 10

ஆலவாய் அமர்ந்த நீலம்நிறை கண்டன்
மறிதிரைப் பரவைப் புடைவயிறு குழம்பத்
துலக்குமலை ஒருநாள் கலக்குவ போல
உழுவை உகிர்உழக்கும் ஏந்து கோட்டு உம்பல்
உரிவை மூடி ஒளியினை மறைத்து 15

தரைபடு மறுக்கம் தடைந்தன போல
விண்ணுற விரித்த கருமுகிற் படாம்கொடு
மண்ணகம் உருகக் கனற்றுமழல் மேனியை
எடுத்து மூடி எறிதிரைப் பழனத்துப்
பனிச்சிறுமை கொள்ளா முள்அரை முளரி 20

வண்டொடு மலர்ந்த வண்ணம் போல
கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி
மலர்தலை உலகத்து இருள்எறி விளக்கும்
மன்னுயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும்
மறைஉகு நீர்க்குக் கருவும் கரியும் 25

வடிவம் எட்டனுள் வந்த ஒன்றும்
சேண்குளம் மலர்ந்த செந்தா மரையும்
சோற்றுக் கடன்கழிக்கப் போற்றுயிர் அழிக்கும்
ஆசைச் செருநர்க்கு அடைந்துசெல் வழியும்
அருளும் பொருளும் ஆகித் 30

திருவுலகு அளிக்கும் பருதிவா னவனே! 31

31. இன்னல் எய்தல்

வள்ளுறை கழித்துத் துளக்குவேல் மகனும்
மனவுமயிற் கழுத்து மாலை யாட்டியும்
நெல்பிடித்து உரைக்கும் குறியி னோளும்
நடுங்கஞர் உற்ற பழங்கண் அன்னையரும்
அயரும் வெறியில் தண்டா அருநோய் 5

ஈயாது உண்ணுநர் நெடும்பழி போலப்
போகாக் காலை புணர்க்குவது என்னோ?
நான்கெயிற்று ஒருத்தல் பிடர்ப்பொலிவரைப்பகை
அறுகால் குளிக்கும் மதுத்தொடை ஏந்த
முள்தாள் செம்மலர் நான்முகத்து ஒருவன் 10

எண்ணிநெய் இறைத்து மணஅழல் ஓம்ப
புவிஅளந்து உண்ட திருநெடு மாலோன்
இருகரம் அடுக்கிப் பெருநீர் வார்ப்ப
ஒற்றை ஆழியன் முயலுடல் தண்சுடர்
அண்டம் விளர்ப்பப் பெருவிளக்கு எடுப்ப 15

அளவாப் புலன்கொள விஞ்சையர் எண்மரும்
வள்ளையில் கருவியில் பெரும்புகழ் விளைப்ப
முனிவர் செங்கரம் சென்னி ஆக
உருப்பசி முத‍லோர் முன்வாழ்த்து எடுப்ப
மும்முலை ஒருத்தியை மணந்துலகு ஆண்ட 20

கூடற்கு இறைவன் இருதாள் இருத்தும்
கவையா வென்றி நெஞ்சினர் நோக்க
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போலப்
பீரமும் நோயும் மாறில்
வாரித் துறைவற்கு என்னா தும்மே? 25

32. நெஞ்சொடு நோதல்

பொருள்செயல் அருத்தியின் எண்வழி தடைந்து
நால்திசை நடக்கும் அணங்கின் அவயவத்து
அலைதரு தட்டைக் கரும்புறம் மலைமடல்
கடல்திரை உகளும் குறுங்கயல் மானும்
கடுங்கான் தள்ளி தடைதரு நெஞ்சம்! 5

கயிலைத் தென்பால் கானகம் தனித்த
தேவர்நெஞ் சுடைக்கும் தாமரை யோகின்
மணக்கோல் துரந்த குணக்கோ மதனை
திருக்குளம் முளைத்த கண்தா மரைகொடு
தென்கீழ்த் திசையோன் ஆக்கிய தனிமுதல் 10

திருமா மதுரை எனும்திருப் பொற்றொடி
என்னுயிர் அடைத்த பொன்முலைச் செப்பின்
மாளா இன்பம் கருதியோ? அன்றி
புறன்பயன் கொடுக்கும் பொருட்கோ? வாழி!
வளர்முலை இன்பெனின் மறித்து நோக்குமதி 15

பெரும்பொருள் இன்பெனின் பெரிதுதடை இன்றே
யாதினைக் கருதியது? ஒன்றை
ஓதல் வேண்டும் வாழிய பெரிதே! 18

33. அல்லகுறி அறிவித்தல்

வற்றிய நரம்பு நெடுங்குரல் பேழ்வாய்
குழிவிழி பிறழ்பல் தெற்றற் கருங்கால்
தாளிப் போந்தின் கருமயிர்ப் பெருந்தலை
விண்புடைத்து அப்புறம் விளங்குடற் குணங்கினம்
கானம் பாடிச் சுற்றிநின் றாட 5

சுழல்விழி சிறுநகை குடவயிற்று இருகுழைச்
சங்கக் குறுந்தாட் பாரிடம் குனிப்ப
தேவர் கண்பனிப்ப முனிவர் வாய்குழற
கல்ல வடத்திரள் மடிவாய்த் தண்ணுமை
மொந்தை கல்லலகு துத்தரி ஏங்க 10

கட்செவி சுழல தாழ்சடை நெறிப்ப
இதழி தாதுதிர்ப்ப பிறைஅமுது உகுக்க
வெள்ளி அம்பலத்துள் துள்ளிய பெருமான்
கூடல் மாநகர் அன்ன பொற்கொடி!
இரவிக்கு அணிய வைகறை காறும் 15

அலமரல் என்னைகொல்? அறிந்திலம் யாமே
வெண்முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து
கடைந்த செம்பவளத் தொத்துடன் காட்டும்
இரும்பு கவைத்தன்ன கருங்கோட்டுப் புன்னைச்
சினைமுகம் ஏந்திய இணர்கொள்வாய்க் குடம்பையின் 20

எக்கர்ப் புள்ளினும் வெண்மை இடம்மறைக்கும்
சிறைவிரி தூவிச் செங்கால் அன்னம்
குறும்பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ
சேவலும் இனமும் சூழும்
காவில் மாறித் துயில் அழுங்கு தற்கே. 25

34. வேழம் வினாதல்

தன்னுடல் அன்றிப் பிறிதுண் கனையிருள்
பகல்வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல
பெருநிலவு கான்ற நீறுகெழு பரப்பில்
அண்ட நாடவர்க்கு ஆருயிர் கொடுத்த
கண்டக் கறையோன் கண்தரு நுதலோன் 5

முன்னொரு நாளில் நால்படை உடன்று
செழியன் அடைத்த சென்னி பாட
எள்ளருங் கருணையின் நள்ளிருள் நடுநாள்
அவனெனத் தோன்றி அருஞ்சிறை விடுத்த
முன்னவன் கூடல் மூதூர் அன்ன 10

வெண்ணகைச் செவ்வாய்க் கருங்குழல் மகளிர்
செம்மணி கிடந்தநும் பசும்புனத்து உழையால்
வாய்சொரி மழைமதத் தழைசெவிப் புழைக்கைக்
குழிகண் பரூஉத்தாள் கூர்ங்‍கோட்டு ஒருத்தல்
சினைதழை விளைத்த பழுமரம் என்ன 15

அறுகால் கணமும் பறவையும் கணையும்
மேகமும் பிடியும் தொடர
ஏகியது உண்டேல் கூறுவிர் புரிந்தே. 18

35. நலம் புனைந்துரைத்தல்

அருள் தரும் கேள்வி அமையத் தேக்க
பற்பல ஆசான் பாங்குசெல் பவர்போல்
மூன்றுவகை அடுத்த தேன்தரு கொழுமலர்
கொழுதிப் பாடும் குணச்சுரும் பினங்காள்
உளத்து வேறடக்கி முகமன் கூறாது 5

வேட்கையின் நீயிர் வீழ்நாள் பூவினத்துள்
காருடல் பிறைஎயிற்று அரக்க‍னைக் கொன்று
வரச்சித்தடக்'கை' வரைப்பகை சுமந்த
பழவுடல் காட்டும் தீராப் பெரும்பழி
பனிமலை பயந்த மாதுடன் தீர்த்தருள் 10

பெம்மான் வாழும் பெருநகர்க் கூடல்
ஒப்புறு பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன்
கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு
நானம் நீவி நாள்மலர் மிலைந்து
கூடி உண்ணும் குணத்தினர் கிளைபோல் 15

நீடிச் செறிந்து நெய்த்துடல் குளிர்ந்த
கருங்குழற் பெருமணம் போல
ஒருங்கும் உண்டோ? பேசுவிர் எமக்கே! 18

36. உலகின்மேல் வைத்து உரைத்தல்

இருளொடு தாரகை இரண்டினை மயக்கி
குழலென மலரென மயல்வரச் சுமந்து
வில்லினைக் குனித்து கணையினை வாங்கி
புருவம் கண்ணென உயிர்விடப் பயிற்றி
மலையினைத் தாங்கி அமுதினைக் கடைந்து 5

முலையென சொல்லென அவாவர வைத்து
மெய்யினைப் பரப்பி பொய்யினைக் காட்டி
அல்குல் இடையென நெஞ்சுழலக் கொடுத்து
முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி
அடியென உடலென அலமரல் உறீஇ 10

மூரி வீழ்ந்த நெறிச்சடை முனிவர்
சருக்கம் காட்டும் அருமறை சொல்லி
உள்ளம் கறுத்து கண்சிவந்து இட்ட
மந்திரத்து அழல்குழி தொடுவயிறு வருந்தி
முன்பின் ஈன்ற பேழ்வாய்ப் புலியினை 15

கைதைமுள் செறிந்த கூர்எயிற்று அரவினை
காருடல் பெற்ற தீவிழிக் குறளினை
உரிசெய்து உடுத்து செங்கரம் தரித்து
செம்மலர் பழித்த தாட்கீழ்க் கிடத்தி
திருநடம் புரிந்த தெய்வ நாயகன் 20

ஒருநாள் மூன்று புரம்தீக் கொளுவ
பொன்மலை பிடுங்கி கார்முகம் என்ன
வளைத்த ஞான்று நெடுவிண் தடையக்
கால் கொடுத்தன்ன கந்திகள் நிமிர்ந்து
நெருக்குபொழில் கூடல் அன்னசெம் மகளிர் 25

கண்ணெனும் தெய்வக் காட்சியுள் பட்டோர்
வெண்பொடி எருக்கம் என்புபனை கிழியினை
பூசி அணிந்து பூண்டு பரிகடவி
கரத்தது ஆக்கி அந்நோ
அருத்தி மீட்பர் நிலைவல் லோரே. 30

37. நாண் இழந்து வருந்தல்

மைகுழைத் தன்ன தொள்ளிஅம் செறுவில்
கூர்வாய்ப் பறைதபு பெருங்கிழ நாரை
வஞ்சனை தூங்கி ஆரல் உண்ணும்
நீங்காப் பழனப் பெருநகர்க் கூடல்
கரம்மான் தரித்த பெருமான் இறைவன் 5

பொன்பழித் தெடுத்த இன்புறு திருவடி
உளம்விழுங் காத களவினர் போலஎன்
உயிரொடும் வளர்ந்த பெருநாண் தறியினை
வெற்பன் காதற் கால்உலை வேலையின்
வலியுடைக் கற்பின் நெடுவெளி சுழற்றிக் 10

கட்புலன் காணாது காட்டைகெட உந்தலின்
என்போல் இந்நிலை ஆறுவரப் படைக்கும்
பேறாங்கு ஒழிக பெருநாண் கற்பினர்
என் பேறு உடையர் ஆயின்
கற்பில் தோன்றாக் கடனா குகவே. 15

38. தோழி இயற்பழித்து உரைத்தல்

வடமீன் கற்பின்எம் பீடுகெழு மடந்தை
பெருங்கடல் முகந்து வயிறுநிறை நெடுங்கார்
விண்திரிந்து முழங்கி வீழா தாகக்
கருவொடு வாடும் பைங்கூழ் போல
கற்புநாண் மூடிப் பழங்கண் கொள்ள 5

உயர்மரம் முளைத்த ஊரி போல
ஓருடல் செய்து மறுமனம் காட்டும்
மாணிழை மகளிர் வயின்வை குதலால்
கருமுகிற் கனிநிறத் தழற்கண் பிறைஎயிற்று
அரிதரு குட்டி ஆயபன் னிரண்டினை 10

செங்கோல் முளையிட்டு அருள்நீர் தேக்கி
கொலைகளவு என்னும் படர்களை கட்டு
தீப்படர் ஆணை வேலி கோலி
தருமப் பெரும்பயிர் உலகுபெற விளைக்கும்
நால்படை வன்னியர் ஆக்கிய பெருமான் 15

முள் உடைப் பேழ்வாய்ச் செங்கண் வராலினம்
வளைவாய்த் தூண்டிற் கருங்கயிறு பரிந்து
குவளைப் பாசடை முண்டகம் உழக்கி
நெடுங்கால் பாய்ந்து படுத்த ஒண்தொழில்
சுருங்கை வழிஅடைக்கும் பெருங்கழிப் பழனக் 20

கூடற்கு இறைவன் இருதாள் விடுத்த
பொய்யினர் செய்யும் புல்லம் போல
பேரா வாய்மை ஊரன்
தாரொடு மயங்கி பெருமையும் இலனே. 24

39. பொழுது கண்டு இரங்கல்

கோடிய கோலினன் செருமுகம் போல
கனைகதிர் திருகிக் கல்சேர்ந்து முறைபுக
பதினெண் கிளவி ஊர்துஞ் சியபோல்
புட்குலம் பொய்கை வாய்தாழ்க் கொள்ள
வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி 5

இருள்மகள் கொண்ட குறுநகை போல
முல்லையும் மௌவலும் முருகுயிர்த்து அவிழ
தணந்தோர் உளத்தில் காமத் தீப்புக
மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர்விட
அன்றில்புற் சேக்கைபுக்கு அலகுபெடை அணைய 10

அந்தணர் அருமறை அருங்கிடை அடங்க
முதுகனி மூலம் முனிக்கணம் மறுப்ப
கலவையும் பூவும் தோள்முடி கமழ
விரிவலை நுளையர் நெய்தல் ஏந்தி
துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப 15

நீரர மகளிர் செவ்வாய் காட்டிப்
பசுந்தாட் சேக்கோள் ஆம்பல் மலர
தோளும் இசையும் கூறிடும் கலையும்
அருள்திரு எழுத்தும் பொருள்திரு மறையும்
விரும்பிய குணமும் அருந்திரு உருவும் 20

முதல்என் கிளவியும் விதமுடன் நிரையே
எட்டும் ஏழும் கொற்றன ஆறும்
ஐந்தும் நான்கும் அணிதரு மூன்றும்
துஞ்சலில் இரண்டும் சொல்அரும் ஒன்றும்
ஆருயிர் வாழ அருள்வர நிறுத்திய 25

பேரருட் கூடல் பெரும்பதி நிறைந்த
முக்கட் கடவுள் முதல்வனை வணங்கார்
தொக்கதீப் பெருவினை சூழ்ந்தன போலவும்
துறவால் அறனால் பெறலில் மாந்தர்
விள்ளா அறிவும் உள்ளமும் என்னவும் 30

செக்கர்த் தீயொடு புக்கநல் மாலை!
என்னுயிர் வளைந்த தோற்றம் போல
நாற்படை வேந்தன் பாசறை
யோர்க்கும் உளையோ? மனத்திறன் ஓதுகவே. 34

40. மா விரதியரொடு கூறல்

நிலவுபகல் கான்ற புண்ணிய அருட்பொடி
இருவினை துரந்த திருவுடல் மூழ்கி
நடுவுடல் வரிந்த கொடிக்காய் பத்தர்
சுத்திஅமர் நீறுடன் தோள்வலன் பூண்டு
முடங்குவீழ் அன்ன வேணி முடிகட்டி 5

இருமூன்று குற்றம் அடியறக் காய்ந்திவ்
ஆறு எதிர்ப்பட்ட அருந்தவத் திருவினர்
தணியாக் கொடுஞ்சுரம் தரும்தழல் தாவிப்
பொன்னுடல் தேவர் ஒக்கலொடு மயங்கி
கொண்மூப் பல்திரைப் புனலுடன் தாழ்த்தி 10

பொதுளிய தருவினுள் புகுந்து இமையாது
மருந்து பகுத்துண்டு வல்லுயிர் தாங்கும்
வட்டைவந் தனைஎன வழங்கு மொழிநிற்க
தாய்கால் தாழ்ந்தனள் ஆயம் வினவினள்
பாங்கியைப் புல்லினள் அயலும் சொற்றனள் 15

மக்கட் பறவை பரிந்துளம் மாழ்கினள்
பாடலப் புதுத்தார்க் காளைபின் ஒன்றால்
தள்ளா விதியின் செல்குநள் என்று
தழல்விழிப் பேழ்வாய்த் தரக்கின் துளிமுலை
பைங்கண் புல்வாய் பால்உணக் கண்ட 20

அருள்நிறை பெருமான் இருள் நிறை மிடற்றோன்
மங்குல்நிரை பூத்த மணிஉடுக் கணம் எனப்
புன்னைஅம் பெதும்பர்ப் பூநிறை கூடல்நும்
பொன்னடி வருந்தியும் கூடி
அன்னையர்க் குதவல் வேண்டும்இக் குறியே. 25

41. ஆடு இடத்து உயத்தல்

முன்னி ஆடுக முன்னி ஆடுக
குமுதம் வள்ளையும் நீலமும் குமிழும்
தாமரை ஒன்றில் தடைந்துவளர் செய்த
முளரிநிறை செம்மகள் முன்னி ஆடுக
நிற்பெறு தவத்தினை முற்றிய யானும் 5

பலகுறி பெற்றிவ் உலகுயிர் அளித்த
பஞ்சின் மெல்லடிப் பாவை கூறாகி
கருங்குரு விக்குக் கண்ணருள் கொடுத்த
வெண்திரு நீற்றுச் செக்கர் மேனியன்
கிடையில் தாபதர் தொடைமறை முழக்கும் 10

பொங்கர்க் கிடந்த சூற்கார்க் குளிறலும்
வல்லியில் பரியும் பகடுவிடு குரலும்
யாணர்க் கொடிஞ்சி நெடுந்தேர் இசைப்பும்
ஒன்றி அழுங்க நின்றநிலை பெருகி
மாதிரக் களிற்றினைச் செவிடு படுக்கும் 15

புண்ணியக் கூடல் உள்நிறை பெருமான்
திருவடி சுமந்த அருளினர் போல
கருந்தேன் உடைத்துச் செம்மணி சிதறி
பாகற் கோட்டில் படர்கறி வணக்கி
கல்லென்று இழிந்து கொல்லையில் பரக்கும் 20

கறங்கிசை அருவியம் சாரல்
புறம்பு தோன்றி நின்கண் ஆகுவனே. 22

42. இயல் இடங் கூறல்

வீதி குத்திய குறுந்தாள் பாரிடம்
விண்தலை உடைத்துப் பிறைவாய் வைப்ப
குணங்கினம் துள்ள கூளியும் கொட்ப
மத்தி யந்தணன் வரல்சொலி விடுப்பத்
தில்லை கண்ட புலிக்கால் முனிவனும் 5

சூயை கைவிடப் பதஞ்சலி ஆகிய
ஆயிரம் பணாடவி அருந்தவத்து ஒருவனும்
கண்ணால் வாங்கி நெஞ்சறை நிறைப்ப
திருநடம் நவின்ற உலகுயிர்ப் பெருமான்
கடல்மாக் கொன்ற தீப்படர் நெடுவேல் 10

உருளிணர்க் கடம்பின் நெடுந்தார்க் கண்ணியன்
அரிமகள் விரும்பிப் பாகம் செய்து
களியுடன் நிறைந்த ஒருபரங் குன்றமும்
பொன்அம் தோகையும் மணிஅரிச் சிலம்பும்
நிரைத்தலைச் சுடிகை நெருப்புமிழ் ஆரமும் 15

வண்டுகிளை முரற்றிய பாசிலைத் துளவும்
மரகதம் உடற்றிய வடிவொடு மயங்க
மரக்கால் ஆடி அரக்கர்க் கொன்ற
கவைத்தலை மணிவேல் பிறைத்தலைக் கன்னி
வடபால் பரிந்த பலிமணக் ‍கோட்டமும் 20

சூடகம் தோள்வளை கிடந்து வில்வீச
யாவர்தம் பகையும் யாவையின் பகையும்
வளனின் காத்து வருவன அருளும்
ஊழியும் கணமென உயர்மகன் பள்ளியும்
உவாமதி கிடக்கும் குண்டுகடல் கலக்கி 25

மருந்து கைக்கொண்டு வானவர்க்கு ஊட்டிய
பாகப் பக்க நெடியோன் உறையுளும்
தும்பி உண்ணாத் தொங்கல் தேவர்
மக்களொடு நெருங்கிய வீதிப் புறமும்
மதுநிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி 30

சூரரக் கன்னியர் உடல்பனி செய்யும்
கடைக்கால் மடியும் பொங்கர்ப் பக்கமும்
ஊடி ஆடுநர்த் திரையொடு பிணங்கித்
தோழியின் தீர்க்கும் வையைத் துழனியும்
அளவா ஊழி மெய்யொடு சூழ்ந்து 35

நின்று நின்றோங்கி நிலைஅறம் பெருக்கும்
ஆனாப் பெரும்புகழ் அருள்நகர்க் கூடல்
பெண்ணுடல் பெற்ற ‍சென்னிஅம் பிறையோன்
பொற்றகடு பரப்பிய கருமணி நிரைஎன
வண்டும் தேனும் மருள்கிளை முரற்றி 40

உடைந்துமிழ் நறவுண்டு உறங்குதார்க் கொன்றையன்
திருவடி புகழுநர் செல்வம் போலும்
அண்ணாந்து எடுத்த அணிவுறு வனமுலை
அவன்கழல் சொல்லுநர் அருவினை மானும்
மலைமுலைப் பகைஅட மாழ்குறும் நுசுப்பு 45

மற்றவன் அசைத்த மாசுணம் பரப்பி
அமைத்தது கடுக்கும் அணிப்பாம்பு அல்குல்
ஆங்கவன் தரித்த கலைமான் கடுக்கும்
இருகுழை கிழிக்கும் அரிமதர் மலர்க்கண்
புகர்முகப் புழைக்கை துயில்தரு கனவில் 50

முடங்குளை கண்ட பெருந்துயர் போல
உயிரினும் நுனித்த அவ்வுருக் கொண்டு
பொன்மலை பனிப்பினும் பனியா
என்னுயிர் வாட்டிய தொடிஇளங் கொடிக்கே. 54

43. அன்னத்தோடு அழிதல்

கவைத்துகிர் வடவையின் திரள்சிகை பரப்பி
அரைபெறப் பிணித்த கல்குளி மாக்கள்
உள்ளம் தீக்கும் உவர்க்கடல் உடுத்த
நாவலம் தண்பொழில் இன்புடன் துயில
உலகற விழுங்கிய நள்ளென் கங்குல் 5

துயிலாக் கேளுடன் உயிர்இரை தேரும்
நெட்டுடல் பேழ்வாய்க் கழுதும் உறங்க
பிள்ளையும் பெடையும் பறைவாய்த் தழீஇச்
சுற்றமும் சூழக் குருகு கண்படுப்ப
கீழ்அரும்பு அணைந்த முள்அரை முளரி 10

இதழ்க்கதவு அடைத்து மலர்க்கண் துயில
விரிசினை பொதுளிய பாசிலை ஒடுக்கி
பூவொடும் வண்டொடும் பொங்கரும் உறங்க
பால்முகக் களவின் குறுங்காய்ப் பச்சிணர்
புட்கால் பாட்டினர்க்கு உறையுள் கொடுத்த 15

மயிர்குறை கருவித் துணைக்குழை அலைப்ப
வரிந்தஇந் தனச்சுமை மதிஅரவு இதழி
அகன்று கட்டவிழ்ந்த சேகரத் திருத்தி
வீதியும் கவலையும் மிகவளம் புகன்று
பொழுதுகண் மறைந்த தீவாய்ச் செக்கர் 20

தணந்தோர் உள்ளத் துள்உறப் புகுந்தபின்
காருடல் காட்டி கண்டகண் புதைய
அல்எனும் மங்கை மெல்லெனப் பார்க்க
முரன்றெழு கானம் முயன்று வாதியைந்த
வடபுல விஞ்சையன் வைகிடத்து அகன்கடை 25

தென்திசைப் பாணன் அடிமை யானென
போகா விறகுடன் தலைக்கடை பொருந்தி
உந்தித் தோற்றமும் ஓசைநின்று ஒடுங்க
பாலையில் எழுப்பி அமர்இசை பயிற்றி
தூங்கலும் துள்ளலும் சுண்டிநின் றெழுதலும் 30

தாரியில் காட்டித் தரும்சா தாரி
உலகுயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க
இசைவிதி பாடி இசைப்பகை துரந்த
கூடற்கு இறையோன் தாள்விடுத் தோர்என
என்கண் துஞ்சா நீர்மை 35
முன்கண்டு ஓதாது அவர்க்கிளங் குருகே. 36

44. தலைவற்குப் பாங்கி தலை வருத்தம் கூறல்

ஈன்ற செஞ்சூழல் கவர்வழி பிழைத்த
வெறிவிழிப் பிணர்மருப்பு ஆமான் கன்றினை
மென்னடைக் குழைசெவி பெறாவெறுங் கரும்பிடி
கணிப்பணைக் கவட்டும் மணற்சுனைப் புறத்தும்
தழைக்குற மங்கையர் ஐவனம் அவைக்கும் 5

உரற்குழி நிரைத்த கல்லறைப் பரப்பும்
மானிட மாக்கள் அரக்கிகைப் பட்டென
நாச்சுவை அடுக்கும் உணவு உவவாது
வைத்துவைத் தெடுக்கும் சாரல் நாடன்
அறிவும் பொறையும் பொருள்அறி கல்வியும் 10

ஒழுக்கமும் குலனும் அமுக்கறு தவமும்
இனிமையும் பண்பும் ஈண்டவும் நன்றே
வெடிவால் பைங்கண் குறுநரி இனத்தினை
ஏழிடம் தோன்றி இனன்நூற்கு இயைந்து
வீதி போகிய வால்வுளைப் பரவி 15

ஆக்கிய விஞ்சைப் பிறைமுடி அந்தணன்
கொண்டோற்கு ஏகும் குறியுடை நன்னாள்
அன்னையர் இல்லத்து அணிமட மங்கையர்
கண்டன கவரும் காட்சி போல
வேலன் பேசி மறிசெகுத்து ஓம்பிய 20

காலம் கோடா வரைவளர் பண்டம்
வருவன வாரி வண்டினம் தொடர
கண்கயல் விழித்து பூத்துகில் மூடி
குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து
கருங்கால் மள்ளர் உழவச் சேடியர் 25

நிரைநிரை வணங்கி மதகெதிர் கொள்ள
தண்ணடைக் கணவற் பண்புடன் புணரும்
வையை மாமாது மணத்துடன் சூழ்ந்த
கூடல் பெருமான் பொன்பிறழ் திருவடி
நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல 30

சலியாச் சார்பு நிலைஅற நீங்கி
அரந்தை யுற்று நீடநின் றிரங்கும்
முருந்தெயிற் றிளம்பிறைக் கோலம்
திருத்திய திருநுதல் துகிர்இளங் கொடியே 34

45. சொல்லாது ஏகல்

இலதெனின் உளதென்று உள்ளமொடு விதித்தும்
சொல்லா நி‍லைபெறும் சூளுறின் மயங்கிச்
செய்குறிக் குணனும் சிந்தையுள் திரிவும்
உழைநின் றறிந்து பழங்கண் கவர்ந்தும்
கண்எதிர் வைகி முகன்கொளின் கலங்கியும் 5

வழங்குறு கிளவியின் திசைஎன மாழ்கியும்
ஒருதிசை நோக்கினும் இருக்கினும் உடைந்தும்
போக்கென உழையர் அயர்ப்பிடைக் கிளப்பினும்
முலைகுவட்டு ஒழுக்கிய அருவிதண் தரளம்
செம்மணி கரிந்து தீத்தர உயிர்த்தும் 10

போமென வாய்ச்சொல் கேட்பினும் புகைந்தும்
கொள்ளார் அறுதியும் கொண்டோர் இசைத்தலும்
ஈதெனக் காட்டிய மயல்மட வரற்கு
முன்னொரு வணிகன் மகப்பேறு இன்மையின்
மருமான் தன்னை மகவெனச் சடங்குசெய்து 15

உள்ளமும் கரணமும் அவனுழி ஒருக்கி
முக்கவர்த் திருநதி துணையுடன் மூழ்கி
அப்புலத் துயிர்கொடுத்து அருட்பொருள் கொண்டபின்
மற்றவன் தாயம் வவ்வுறு மாக்கள்
காணி கைக்கொண்ட மறுநிலை மைந்தனை 20

நிரைத்துக் கிளைகொள் நெடுவழக்கு உய்த்தலும்
மைந்தனும் கேளிரும் மதிமுடிக் கடவுள்நின்
புந்தியொன் றிற்றிப் புகல்இலம் என்றயர்
அவ்வுழி ஒருசார் அவன்மா துலனென
அறிவொளி நிறைவே ஓருருத் தரிந்துவந்து 25

அருள்வழக் கேறி அவர்வழக் குடைத்த
கூடல் நாயகன் தாள்பணி யாரென
எவ்வழிக் கிளவியின் கூறிச்
செவ்விதின் செல்லும் திறன்இனி யானே. 29

46. தெளிதல்

நின்றறி கல்வி ஒன்றிய மாந்தர்
புனைபெருங் கவியுள் தருபொருள் என்ன
ஓங்கி புடைபரந்து அமுதம் உள்ளூறி
காண்குறி பெருத்து கச்சவை கடிந்தே
எழுத்துமணி பொன்பூ மலையென யாப்புற்று 5

அணிபெரு முலைமேல் கோதையும் ஒடுங்கின
செங்கோல் அரசன் முறைத்தொழில் போல
அமுதமும் கடுவும் வாளும் படைத்த
மதர்விழித் தாமரை மலர்ந்திமைத் தமர்ந்தன
செய்குறை முடிப்பவர் சென்மம் போலப் 10

பதமலர் மண்மிசைப் பற்றிப் பரந்தன
அமுதம் பொடித்த முழுமதி என்ன
முகம்வியர்ப்பு உறுத்தின உள்ளமும் சுழன்றன
இதழியும் தும்பையும் மதியமும் கரந்து
வளைவிலை மாக்கள் வடிவு எழுந்தருளி 15

முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால்
வீதி கூறி விதித்தமுன் வரத்தால்
கருமுகில் விளர்ப்ப அறல்நீர் குளிப்ப
கண்புகை யாப்புத் திணிஇருள் விடிய
உடல்தொறும் பிணித்த பாவமும் புலர 20

கண்டநீள் கதுப்பினர் கைகுவி பிடித்து
குருகுஅணி செறித்த தனிமுதல் நாயகன்
குருகும் அன்னமும் வால்வளைக் குப்பையை
அண்டமும் பார்ப்பும் ஆமென அணைக்கும்
அலைநீர்ப் பழன முதுநகர்க் கூடல் 25

ஒப்படைத்து ஆயஇப் பொற்றொடி மடந்தை
அணங்கினள் ஆம்என நினையல்
பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே. 28

47. மெலிவு கண்டு செவிலி கூறல்

கதிர்நிரை பரப்பும் மணிமுடித் தேவர்கள்
கனவிலும் காணாப் புனைவருந் திருவடி
மாநிலம் தோய்ந்தோர் வணிகன் ஆகி
எழுகதிர் விரிக்கும் திருமணி எடுத்து
வரையாக் கற்புடன் நான்கெனப் பெயர்பெற்று 5

ஆங்காங்கு ஆயிர கோடி சாகைகள்
மிடலொடு விரித்து சருக்கம் பாழி
வீயா அந்தம் பதம்நிரை நாதம்
மறைப்பு புள்ளி மந்திரம் ஒடுக்கமென்று
இனையவை விரித்துப் பலபொருள் கூறும் 10

வேதம் முளைத்த ஏதமில் வாக்கால்
குடுமிச் சேகரச் சமனொளி சூழ்ந்த
நிறைமதி நான்கின் நிகழ்ந்தன குறியும்
குருவிந் தம்செள கந்திகோ வாங்கு
சாதரங் கம்எனும் சாதிகள் நான்கும் 15

தேக்கின் நெருப்பின் சேர்க்கின் அங்கையின்
தூக்கின் தகட்டின் சுடர்வாய் வெயிலின்
குச்சையின் மத்தகக் குறியின் ஓரத்தின்
நெய்த்துப் பார்வையின் நேர்ந்து சிவந்தாங்கு
ஒத்த நற்குணம் உடையபன் னிரண்டும் 20

கருகிநொய் தாதல் காற்று வெகுளி
திருகல் முரணே செம்மண் இறுகல்
மத்தகக் குழிவு காசம் இலைச்சுமி
எச்சம் பொரிவு புகைதல் புடாயம்
சந்தை நெய்ப்பிலி எனத்தரு பதினாறு 25

முந்திய நூலில் மொழிந்தன குற்றமும்
சாதகப் புட்கண் தாமரை கழுநீர்
கோபம் மின்மினி கொடுங்கதிர் விளக்கு
வன்னி மாதுளம் பூவிதை என்னப்
பன்னுசா தரங்க ஒளிக்குணம் பத்தும் 30

செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம்
முயலின் சோரி சிந்துரம் குன்றி
கவிர்‍அலர் என்னக் கவர்நிறம் எட்டும்
குருவிந் தத்தில் குறித்தன நிறமும்
அசோகப் பல்லவம் அலரி செம்பஞ்சு 35

கோகிலக் கண்நீடு இலவலர் செம்பெனத்
தருசெள கந்தி தன்நிறம் ஆறும்
செங்கல் குராமலர் மஞ்சள் கோவை
குங்குமம் அஞ்சில் கோவாங்கு நிறமும்
திட்டை ஏறு சிவந்த விதாயம் 40

ஒக்கல் புற்றாம் குருதி தொழுனை
மணிகோ கனகம் கற்பம் பாடி
மாங்கி சகந்தி வளர்காஞ்சு உண்டையென்று
ஆங்கொரு பதின்மூன்று அடைந்தன குற்றமும்
இவையெனக் கூறிய நிறையருட் கடவுள் 45

கூடல் கூடா குணத்தினர் போல
முன்னையள் அல்லள் முன்னையள் அல்லள்
அமுதவாய்க் கடுவிழிக் குறுந்தொடி நெடுங்குழல்
பெருந்தோள் சிறுநகை முன்னையள் அல்லள்
உலகியல் மறந்த கதியினர் போல 50

நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின
பகழிசெய் கம்மியர் உள்ளம் போல
ஐம்புலக் கேளும் ஒருவாய்ப் புக்கன
அதிர்உவர்க் கொக்கின் களவுயிர் குடித்த
புகரிலை நெடுவேல் அறுமுகக் குளவன் 55

தகரம் கமழும் நெடுவரைக் காட்சி
உற்றனள் ஆதல் வேண்டும்
சிற்றிடைப் பெருந்தோள் தேமொழி தானே. 58

48. பருவங்கண்டு பெருமகள் புலம்பல்

பசிமயல் பிணித்த பிள்ளைவண்டு அரற்ற
ஆசையின் செறிந்த பொங்கர்க் குலத்தாய்
அருப்பு முலைக்கண் திறந்துமிழ் மதுப்பால்
சினைமலர்த் துணைக்கரத்து அன்புடன் அணைத்து
தேக்கிட அருத்தி அலர்மலர்த் தொட்டில் 5

காப்புறத் துயிற்றும் கடிநகர்க் கூடல்
அருளுடன் நிறைந்த கருவுயிர் நாயகன்
குரவரும்பு உடுத்த வால்எயிற்று அழல்விழிப்
பகுவாய்ப் பாம்பு முடங்கல் ஆக
ஆலவாய் பொதிந்த மதிமுடித் தனிமுதல் 10

சேக்கோள் முளரி அலர்த்திய திருவடி
கண்பரு காத களவினர் உளம்போல்
காருடன் மிடைந்த குளிறுகுரல் கணமுகில்
எம்முயிர் அன்றி இடைகண் டோர்க்கும்
நெஞ்சறை பெருந்துயர் ஓவாது உடற்றக் 15

கவையா நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர்
கண்ணினும் கவரும் கொல்லோ
உள்நிறைந்து இருந்து வாழிய மனனே. 18

49. முகிலொடு கூறல்

கருங்குழற் செவ்வாய்ச் சிற்றிடை மடந்தைக்கு
உளத்துயர் ஈந்து கண்துயில் வாங்கிய
ஆனா இன்னல் அழிபடக் காண்பான்
விரிபொரி சிந்தி மணமலர் பரப்பி
தெய்வக் குலப்பகை விண்ணொடும் விம்ம 5

இருநால் திசையும் உண்பலி தூவி
நன்னூல் மாக்கள் நணிக்குறி சொற்று
பக்கம் சூழ்ந்த நெடுநகர் முன்றில்
கோடகழ்ந் தெடுத்த மறிநீர்க் காலும்
வெங்கள் பெய்து நாள்குறித்து உழுநரும் 10

சூல்நிறைந் துளையும் சுரிவளைச் சாத்தும்
இனக்கயல் உண்ணும் களிக்குரு கினமும்
வரைப்பறை அரிந்த வாசவன் தொழுது
நிரைநிரை லிளம்பி வழிமுடி நடுநரும்
நாறு கழிதுற்ற சககு ஈர்க்குநரும் 15

தாமரை பாடும் அறுகால் கீளையும்
உறைத்தெழு கம்பலை உம்பரைத் தாவி
முடித்தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும்
அள்ளற் பழனத்து அணிநகர்க் கூடல்
நீங்காது உறையும் நிமிர்கடைப் பெருமான் 20

உரகன் வாய்கீண்ட மாதவன் போல
மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக்
கூலம் சுமக்கக் கொற்றாள் ஆகி
நரைத்தலை முதியோள் இடித்தடு கூலிகொண்டு
அடைப்பது போல உடைப்பது நோக்கி 25

கோமகன் அடிக்க அவனடி வாங்கி
எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக் கெல்லாம்
அவ்வடி கொடுத்த அருள்நிறை நாயகன்
திருமிடற் றிருளெனச் செறிதரும் மாமுகில்
எனதுகண் கடந்து நீங்கித் 30

துனைவுடன் செல்லல் ஒருங்குபு புரிந்தே. 31

50. தழை விருப்பு உரைத்தல்

அறுகும் தும்பையும் அணிந்தசெஞ் சடையும்
கலைமான் கணிச்சியும் கட்டிய அரவமும்
பிறிதும் கரந்து ஒரு கானவன் ஆகி
அருச்சுனன் அருத்தவம் அழித்தமர் செய்தவன்
கொடுமரத் தழும்பு திருமுடிக்கு அணிந்து 5

பொன்னுடை ஆவம் தொலையாது சுரக்கப்
பாசு பதக்கணை பரிந்தருள் செய்தோன்
வாசவன் மகட்புணர்ந்து மூன்றெரி வாழ
தென்கடல் நடுத்திடர் செய்துறைந்து இமையவர்
ஊருடைத் துண்ணும் சூருடல் துணித்த 10

மணிவேற் குமரன் களிமகிழ் செய்த
பேரருட் குன்றம் ஒருபால் பொலிந்த
அறப் பெருங்கூடல் பிறைச்சடைப் பெருமான்
திருவடிப் பெருந்தேன் பருகுநர் போல
மணமுடன் பொதுளிய வாடா மலர்த்தழை 15

ஒருநீ விடுத்தனை யான்அது கொடுத்தனன்
அவ்வழி கூறின் அத்தழை வந்து
கண்மலர் கவர்ந்தும் கைமலர் குவித்தும்
நேட்டுயிர்ப் பெறிந்தும் முலைமுகம் நெருக்கியும்
ஊடியும் வணங்கியும் உவந்தளி கூறியும் 20

பொறை அழி காட்சியள் ஆகி
நிறையழிந் தவட்கு நீஆ யினவே! 22



கல்லாடம் : 1 2 3 4