எட்டாம் திருமுறை மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் ... தொடர்ச்சி - 4 ... 10. திருக்கோத்தும்பி (சிவனோடு ஐக்கியம்)
தில்லையில் அருளியது
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருச்சிற்றம்பலம் பூஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த நாஏறு செல்வியும் நாரணணும் நான் மறையும் மாஏறு சோதியும் வானவரும் தாமறியாச் சேஏறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 215 நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216 தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 217 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்து என்னை வாவென்ற வான் கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218 அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ. 219 வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்வியென்னும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ. 220 சட்டோ நினைக்க மனத்தமுதாம் சங்கரனைக் கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம் சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 221 ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த என்தாதை தாதைக்கும் எம்அனைக்கும் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 222 கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு மரணம் பிறப்பென்ற இவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 223 நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா இங்கிருந்து நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம் தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 224 வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 225 நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந் தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 226 நான்தனக் கன்பின்னை நானும்தா னும் அறிவோம் தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார் ஆன கருணையும் அங்குற்றுஏது ஆனவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 227 கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 228 நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான் தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 229 உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 230 பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்தன் செய்யர் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231 தோலும் துகிலுங் குழையும் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 232 கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே உள்ளத் துறதுயர் ஒன்றொழியா வண்ணமெல்லாம் தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 233 பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 234 திருச்சிற்றம்பலம் 11. திருத்தெள்ளேணம் (சிவனோடு அடைவு)
தில்லையில் அருளியது
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருச்சிற்றம்பலம் திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாம் அறியஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. 235 திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும் திருவாரூர் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. 236 அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட் டுலகமெல்லாம் சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணம் கொட்டாமோ. 237 அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே பவமாயம் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ. 238 அருமந்த தேவர் அயன்திருமாற்கு அரியசிவம் உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக் கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த திருவந்த வாபாடிக் தெள்ளேணம் கொட்டாமோ. 239 அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம் உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த் திரையாடு மாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ. 240 ஆவா அரிஅயன்இந்திரன் வானோர்க் கரியசிவன் வாவாஎன் றென்னையும் பூதலத்தேவலித் தாண்டுகொண்டான் பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே தேவான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ. 241 கறங்கோலை போல்வதோர் காயப் பிறப்போடு இறப்பென்னும் அறம்பாவம் என்றிரண்டச் சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான் மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத் திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. 242 கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால் பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர் தென்னா தென்னாஎன்று தெள்ளேணம் கொட்டாமோ. 243 கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவேய் அனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம் சினவேற்கண்நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 244 கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே அயல்மாண்டு அருவினைச் சுற்றமுமாண்டு அவனியின்மேல் மயல்மாண்டு மற்றுள்ள வாசகம்மாண்டு என்னுடைய செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ. 245 முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு பத்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி தித்திக்கு மாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ. 246 பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும் ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. 247 மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால் சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ. 248 உருகிப் பெருகி உளங்குளிர முகந்து கொண்டு பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம் திருவைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. 249 புத்தன் புரந்தராதி யர்அயன்மேல் போற்றிசெயும் பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த அத்தன் அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ. 250 உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் சவலைக் கடல் உளனாய்க் கிடந்து தடுமாறும் கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும் செயலைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. 251 வான்கெட்டு மாருதம் மாய்ந்துஅழல்நீர் மண்கெடினும் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ. 252 விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம் கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித் தென்னாதென்னாஎன்று தெள்ளேணம் கொட்டாமோ. 253 குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள் நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும் அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. 254 திருச்சிற்றம்பலம் 12. திருச்சாழல் (சிவனுடைய காருணியம்)
தில்லையில் அருளியது
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருச்சிற்றம்பலம் பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டடென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255 என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தான் ஈசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ? மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256 கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257 அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258 தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ? தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 259 அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ? நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ. 260 மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ? சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ. 261 கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ? ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 262 தென்பா லுகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 263 தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 264 நங்காய் ஈதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 265 கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ? ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266 மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்தும் கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267 தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ? தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268 கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 269 நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினும் கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. 270 அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ? நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ எம்பெருமான் ஈசாஎன் றேத்தினகாண் சாழலோ. 271 சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்குஅன் றருளியவா றென்னேடீ? நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 272 அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும் தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 273 அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ? அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 274 திருச்சிற்றம்பலம் 13. திருப்பூவல்லி (மாயாவிசயம் நீங்குதல்)
தில்லையில் அருளியது
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருச்சிற்றம்பலம் இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 275 எந்தைஎந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276 நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதும் தயாவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின் வாயிற் பொடிஅட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277 பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 278 தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே நானாடி ஆடிநின்று ஓலமிட நடம்பயிலும் வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279 எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமூன்று அறத்தன் திருப்புருவம் நெரித்தருளி உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. 280 வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்கத்தான் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான் அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281 நெறிசெய் தருளித்தன் சீரடியர் பொன்னடிக்கே குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 282 பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க் கல்நார் உரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 283 பேராசை யாமிந்தப் பிண்டம் அறப் பெருந்துறையான் சீரார் திருவடி என் தலைமேல் வைத்தபிரான் காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 284 பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285 வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவ னாய் நின்று கூடலிலாக் குணக்குறியோன் ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுது செய்யப் போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286 அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும் நின்றார ஏத்தும் நிறைகழலோன் புனைகொன்றைப் பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287 படமாக என்னுள்ளே தன்இணைப்போ தவையளித்திங்கு இடமாகக் கொண்டிருந்த ஏகம்பம் மேயபிரான் தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 288 அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் செங்கண் அரிஅயன் இந்திரனும் சந்திரனும் பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289 திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290 முன்னாய மாலயனும் வானவரும் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே என்ஆகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291 சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292 அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் முத்தி முழுமுதல்உத் தரகோச மங்கைவள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293 மாவார ஏறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலம் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294 திருச்சிற்றம்பலம்
14. திருவுந்தியர் (ஞான வெற்றி)
தில்லையில் அருளியது
(கலித்தாழிசை) திருச்சிற்றம்பலம் வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295 ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296 தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழந்தன முப்புரம் உந்தீபற. 297 உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற. 298 சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி உந்தீபற உருந்திர நாதனுக் குந்தீபற. 299 ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் றுந்தீபற சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300 வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301 பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேஏடி யுந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற. 302 புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினார் உந்தீபற வானவர் கோனென்றே உந்தீபற. 303 வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சின வாபாடி உந்தீபற தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304 ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி உந்தீபற கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305 உண்ணப் புகுந்த பகன் ஒளிந் தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306 நாமகள் நாசி சிரம்பபிர மன்படச் சோமன் முகன் நெரித் துந்தீபற தொல்லை வினைகெட உந்தீபற. 307 நான்மறை யோனும் அகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியில் உந்தீபற. 308 சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309 தக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310 பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே யுந்தீபற குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311 நல்ல மலரின்மேல் நான்முக னர்தலை ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312 தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம் ஈரைந்தும் இற்றவா றுந்தீபற இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313 ஏகாசமிட்ட இருடிகள் போகாமல் ஆகாசங் காவலென் றுந்தீபற அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314 திருச்சிற்றம்பலம் 15. திருத்தோள் நோக்கம் (பிரபஞ்ச சுத்தி)
தில்லையில் அருளியது
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருச்சிற்றம்பலம் பூத்துஆரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய் கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம். 315 என்றும் பிறந்திறந்து ஆழாமே ஆண்டுகொண்டான் கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித் துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. 316 பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்கு அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 317 கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் போலஎன் நெஞ்சினுள்ளே புகுந்தருளி நற்பாற் படுத்தென்னை நாடறியத் தான்இங்ஙன் சொற்பாலது ஆனவா தோணோக்கம் ஆடாமோ. 318 நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகுஏழ் எனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 319 புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச் சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ. 320 தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப் பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். 321 மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர் வானம் தொழுந்தென்னன் வார்கழலே நினைத்தடியோம் ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே ஆனந்த மாகிநின்று ஆடாமே தோணோக்கம். 322 எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக் கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின் எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம். 323 பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத் தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவாறு எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. 324 காமன் உடலுயிர் காலன்பல் காய்கதிரோன் நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச் சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையும் தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. 325 பிரமன் அரியென் றிருவரும்தம் பேதைமையால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 326 ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந்து என்பிறவித் தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. 327 உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும் கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத் துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ. 328 திருச்சிற்றம்பலம் 16. திருப்பொன்னூசல் (அருட்சுத்தி)
தில்லையில் அருளியது
(ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா) திருச்சிற்றம்பலம் சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாயடியேற்கு ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப் போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329 மூன்றுஅங்கு இலங்கு நயனத்தன் மூவாத வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள் தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக் கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை போன்றுஅங்கு அனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330 முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம் பன்னூறு கோடி இமையோர்கள் தாம் நிற்பத் தன்நீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து மன்ஊற மன்னுமணி உத்தர கோசமங்கை மின்ஏறு மாட வியன்மா ளிகைபாடிப் பொன்ஏறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331 நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன் மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள் நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332 ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக் கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333 மாதுஆடு பாகத்தன் உத்தர கோசமங்கைத் தாதுஆடு கொன்றைச் சடையான் அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித் தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால் போதுஆடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334 உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் அன்னத்தின் மேலேறி ஆடும் அணி மயில்போல் என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப் பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335 கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச் சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித்து அகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336 தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப் பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337 திருச்சிற்றம்பலம் 17. அன்னைப்பத்து (ஆத்தும பூரணம்)
தில்லையில் அருளியது
(கலிவிருத்தம்) திருச்சிற்றம்பலம் வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதர்இந் நாதனார் அன்னே என்னும். 338 கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர் உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும் உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 339 நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால் அன்னே என்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும். 340 ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவா றன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுஎன்னே அன்னே என்னும். 341 நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநன் னாடரால் அன்னே என்னும் பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 342 உன்னற் கரியசீர் உத்தர மங்கையர் மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும் மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார் என்ன அதியசம் அன்னே என்னும். 343 வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டான் உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 344 தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆளெம்மை ஆளும் அடிகளார் தம்கையில் தாள மிருந்தவா றன்னே என்னும். 345 தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையும்இது என்னே அன்னே என்னும். 346 கொன்றை மதியமும் கூவின மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே என்னும் துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே இன்றெனக்கு ஆனவா றன்னே என்னும். 347 திருச்சிற்றம்பலம் 18. குயிற்பத்து (ஆத்தும இரக்கம்)
தில்லையில் அருளியது
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) திருச்சிற்றம்பலம் கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய். 348 ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய் ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப் பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 349 நீல உருவின் குயிலே நீள்மணி மாடம் நிலாவும் கோல அழகின் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில் சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய். 350 தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேஇது கேள்நீ வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய ஒருத்தன் மான்பழித் தாண்டமென் நோக்கி மணாளனை நீவரக் கூவாய். 351 சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவர் ஆசை அறுப்பான் முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச் சிந்துரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய். 352 இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன் நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக் கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். 353 உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன் பொன்னை அழித்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன் மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய். 354 வாஇங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி ஓவியவர் உன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன் தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய். 355 காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே சீருடைச் செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன் பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய். 356 கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ அந்தண னாகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி எந்தம ராம்இவன் என்றிங்கு என்னையும் ஆட்கொண்டருளும் செந்தழல் போல்திரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய். 357 திருச்சிற்றம்பலம்
|