3

     ஒரு வாரம் போன இடம் தெரியவில்லை.

     சாமியார் கடுமையான யோகப் பயிற்சிகளால், மனித ஸ்லோகங்களில் இருந்துவிட்டு, மஹேஸ்வர ஸ்லோகத்திற்கு வந்துவிட்டார்.

     இனிமேல் எது வந்தாலும், அது மனமென்ற மலையில் மோதி சுக்கு நூறாகும் என்று மூக்கின் நுனியைப் பார்த்துப் பார்த்து ஓரளவு பெருமிதப்பட்ட சாமியாருக்கு, இன்னொரு நிகழ்ச்சி, வேறொரு மனப் பூதத்தைக் கிளப்பியது.

     மாலை வெயில், மங்கிய இருட்டாக மாறிக்கொண்டிருந்த வேளை, சாமியார் பூஜையை முடித்துவிட்டு, குடிசைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அருவியில் குளித்த கோலத்தோடு, ஒரு வாலிபனும், இளம் பெண்ணும், கோவிலுக்கு வெளியே சற்று தொலைவில் நின்று, லிங்கத்தையா, சாமியாரையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, கரங்கூப்பி, உடல் வளைந்து நின்றனர். அந்தப் பெண்ணும் அவனும் நின்ற தோரணை, சர்வேஸ்வரன் - சர்வேஸ்வரிபோல், சாமியாருக்குத் தோன்றியது. உரமேறிய உடலில், பூவேறிய மேனி ஒட்ட நின்ற அந்த ஜோடி, அவரைப் பார்த்து லேசாக விலகியது. சாமியார், அந்த வாலிபனை உற்று நோக்கினார். இறந்து போன மகனின் சாயல். ஏதோ ஒன்று அவர், நெஞ்சு திரண்டு, குரல்வளையைப் பிடித்தது. கிழிந்த வேட்டியின் கம்பீரமான தார்ப்பாய்ச்சலோடு நின்றவனுக்கு, மானசீகமாக, பேன்ட் - சட்டை போட்டு, கையில் ஒரு கடிகாரமும் கட்டி, அழகு பார்த்தார். அவன் தான்... அவனே தான்...

     லோகாயுகத்தில் தடுமாறி விழப்போய், எதையோ, தாங்கிப் பிடித்தவர் போல், சாமியார், மூக்கின் நுனியை, கண்களால் நோக்கினார். பிறகு, புருவ மத்தியில், கண் நோக்கைப் பாய்ச்சினார். ஆனாலும், அவரால், தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனிடம் பேச வேண்டும் போல் இருந்தது.

     “உன் பேரென்னப்பா?”

     அந்தச் சாமியாரை அடிக்கடி பார்த்திருக்கும் அந்த வாலிபன் - பேசியறியாத - பேச்சறியாத தன்னையும், சாமியாரையும் மாறி மாறிப் பார்த்தான். அவனாலும் ஏதோ பேச முடியவில்லை. அந்தப் பெண், அவன் விலாவில் இடித்து அவனை பதிலளிக்கச் சொல்வதுபோல் தோன்றியது. அவனும் சாமியாரை, சிரத்தையோடு பார்த்தபடி சொன்னான்.

     “வேல்சாமிங்க...”

     “என்ன வேலை பார்க்கிறப்பா?”

     “இந்த அணைக்கட்டுல... ஒரு காண்டிராக்டர்கிட்ட கொத்துவேல பார்க்கேமுங்க.”

     “சம்பளமெல்லாம் எப்படிங்க...”

     இப்போது வேல்சாமி, சங்கோஜமில்லாமல் பதிலளித்தான்.

     “காண்டிராக்டர் கொடுக்கிற சம்பளத்தையும், அவன் எங்கள மாதிரி ஆட்கள படுத்துற பாட்டையும் நினைச்சால், கோவிலுக்கு வரத் தோணாதுங்க... கோவிலுன்னு ஒண்ணு இருக்குமான்னு நினைக்கவும் தோணுங்க...”

     வேறு யாராவது அப்படிப் பேசியிருந்தால், சாமியார் பதில் பேசாமல் போயிருப்பார். ஏதோ அவன் பேச்சு அவரைக் குத்தவில்லை. சந்தம் வார்த்தைகளிலும், சாந்தம் முகத்திலும் நடனமாட சிரித்தபடி ஏதோ பேசப் போனபோது, அவன், அவள் விலா இடி தாளாமல், மன்னிப்புக் கோரும் தோரணையில் பேசினான்.

     “தப்பாப் பேசியிருந்தால், மன்னிச்சிடுங்க சாமி!”

     சாமியார் அவனையே உற்றுப் பார்த்தார். ‘தப்பாய் பேசியிருந்தால்’ என்கிறானே தவிர, பேசியது தப்பென்று நினைக்கவில்லை. கெட்டிக்காரப் பையன்... என் மகனும் இப்படித்தான்.

     சாமியார் சந்தம் வார்த்தைகளிலாட, சாந்தம் முகத்திலாட சிரித்தபடி பேசினார்.

     “காய் வெளிப்படத் துவங்கியதும் பூவுதிர்வதுபோல், ஒருவனுக்கு ஞானம் முதிரும்போது, கோவில் உதிரும். நீ... எதையும் தப்பாவும் பேசல - புதிதாகவும் பேசல... இன்னும் சொல்லப்போனால், கோவில் தேவையில்லாத ஒரு காலம் வர வேண்டும். உலகமே கோவிலாகவும், நாமெல்லாம் முக்திகளாகவும் மாறும் காலம் வர வேண்டும். பூமியே ஆவுடையாராகவும், ஆகாய வெளியே லிங்கமாகவும் அனுமானிக்கப்படும் காலம் வர வேண்டும்!”

     தன்பாட்டுக்குப் பேசிக் கொண்டே போன சாமியார், தான் பேசுவது அவனுக்குப் புரியாது என்பதைப் புரிந்து கொண்டவர் போல் சட்டென்று பேச்சை நிறுத்தினார். அந்தப் பெண், ஏதோ ஒன்றில் இருந்து விடுபட மனமில்லாமல் விடுபட்டவள் போலவும், அந்த வாலிபன், சாமியாரிடமிருந்து விடுதலை பெற்றவன் போலவும் தத்தம் தலைகளை, ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டார்கள்.

     “சரி... ரெண்டுபேரும் கோவிலுக்குள்ள வாங்க... விபூதி வாங்கிக்கலாமா?” அவள் முன்னேறுவது போலவும் அவன் பின்னேறுவது போலவும் தோன்றியது. சாமியார், சிரித்தபடி அழைத்தார்.

     “சும்மா வாப்பா... இது அணைக்கட்டுமல்ல... இந்த லிங்கநாதர் காண்டிராக்டரும் இல்ல... வெறுப்பை எல்லாம் வெளியே விட்டுவிட்டு வாங்கோ.”

     லேசாகத் தயங்கியவனின் கையை, வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துக்கொண்டு, அந்தப் பெண் கோவிலுக்குள் வந்தாள். அதைப் பார்த்து சாமியாருக்கு வேடிக்கையாகவும் இருந்தது. இந்த நாட்டில், பக்தி பெண்களால்தான் காக்கப்படுகிறது... இவனும் கொஞ்ச நாளில், ‘என் சம்சாரத்துக்காக... கோவிலுக்குப் போனேனாக்கும், என்று பேசத் துவங்கலாம்.

     வருவோர், போவோரை, தட்டில் இருந்து விபூதியை எடுத்துக் கொள்ளச் சொல்லும் சாமியார் அவர்கள் இருவருக்கும், கைநிறைய விபூதி எடுத்து, நெற்றி நிறையப் பூசினார். அப்படிப் பூசும்போது, ‘சிவ சிவா’ என்றூம் சொல்லிக் கொண்டார்.

     சாமியார் கொடுத்த சலுகையில் தைரியம் பெற்றவள் போல், அவள், அவரை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு, தன்னையறியாமலே, அவர் காலில் விழுந்தாள். மனிதன் மற்றவர் காலில் விழுந்து விழுந்தே காலால் நசுக்கப் பட்டான் அல்லது காலை வாரினான் என்பதை தெள்ளப் புரிந்தவன் போல் தயங்கியபடியே, கீழே குனிந்தவளைப் பார்த்த வேல்சாமியும், அவள், தன் காலில் கிள்ளியதாலோ, அல்லது சாமியாரின் அருட்பார்வை கொடுத்த செல்லக் கிள்ளலிலோ, தன்னையறியாமலே சாமியார் காலில் விழுந்தான்.

     சாமியார், இருவரையும் தூக்கிப் பிடித்து நிமிர்த்திய போது, அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவள் கழுத்தில் எதுவும் இல்லை. சந்தேகத்துடனும், சங்கோஜத்துடனும் கேட்டார்.

     “குழந்தை... ஒனக்கு... என்ன வேணும்பா?”

     வேல்சாமி நாணிப்பட்டபடியே பதிலளித்தான்.

     “நான் கட்டிக்கப்போற பொண்ணுங்க.”

     “பேஷ்! சொந்தமா?”

     “சொந்தமல்ல பந்தம்தான் சாமி... எங்களுக்குத் தெரியாதா, சொந்தத்துக்குப் பந்தமோ பந்தத்துக்கு சொந்தமோ தேவையில்லிங்க. இன்னும் கேட்டால்... அவள் எந்த ஜாதின்னு எனக்கோ நான் எந்த ஜாதின்னு அவளுக்கோ தெரியாது. நான் சொல்றது சாமிக்கு விரசமாப் பட்டால் மன்னிச்சிடணும்.”

     சாமியார், விரசமில்லாமல் சிரித்தபடியே பேசினார்.

     “மனிதனுக்கு... ஜாதி கூடாது என்கிற ஜாதியைச் சேர்ந்தவன் நான்... நீ, சாமியார்னா, வைதிகமுன்னு தப்பா நினைக்கே. அப்படி நீ நினைக்கிறதுலயும் தப்பில்ல. பிராமணர்களும், சைவ வேளாளர்களும் கடைபிடிக்கிற அனுஷ்டானங்களையும், கோவில் வழிபாடுகளையும் வைத்து நீ மதத்தை எடைபோடுற... ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ... ஒரு மதவாதியை வைத்து மதத்தை எடை போடக்கூடாது. ஒரு மதத்தை வைத்து மகேஸ்வரனை எடை போடக்கூடாது. சர்வேஸ்வரனுக்கு ஜாதி கிடையாது. அவன் பிள்ளைகளுக்கு மட்டும் எப்படி ஜாதி வரும்?”

     வேல்சாமி, அவரைத் திடுக்கிட்டுப் பார்த்தான். முழங்காலளவு வேட்டியுடன், வைரப்பட்ட எலும்புக்கூடு போல் தோன்றிய அந்த சாமியாரின் எளிமையின் பொருளைப் புரிந்துகொண்டவன் போல், உடலை குனிந்து, அவரை உற்று நோக்கினான். இதற்குள் அந்தப் பெண் சாமியாரின் அன்பினால் அன்னியோன்னியப்பட்டவள் போல், சரளமாகவும், சகஜமாகவும் பேசினாள்.

     “மகான் தரிசனம் பாப விமோசனமுன்னும் பெரியவங்க சொல்லுவாங்க சாமி. நீங்க... விபூதி கொடுத்த பிறகாவது இதுக்கு நல்ல புத்தி வருமுன்னு நினைக்கேன் சாமி.”

     சாமியார் அவனை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டபடியே, அவளிடம் கேட்டார்.

     “அவனைப் பார்த்தால் நல்லவன்மாதிரி தோணுது... அப்படி என்னம்மா அடாவடி பண்ணுறான்?”

     “பின்ன என்ன சாமி... வந்த இடத்துல... நாம உண்டு... நம்ம பிழைப்பு உண்டுன்னு இருக்காமல் காண்டிராக்டருக்கிட்ட இருக்கிற வேலையாட்களை சேர்த்து யூனியன் வைக்கப் போறேன்னு சொல்லுது. நேத்துகூட இதுக்கும் ஒரு சூப்பர்வைசருக்கும் அடிதடி வராத குறை. இந்த காண்டிராக்டருங்க பொல்லாத பாவிங்க சாமி! சர்க்கார் எஞ்ஜினியருங்களே... இவங்ககிட்ட சலாம் போடுறாங்க. அவங்ககிட்ட ‘இது’ மோத முடியுமா? ஏற்கனவே இதமாதிரி குதிச்ச இரண்டு மூணுபேரை... லாரியால அடிச்சி, போற இடம் தெரியாம போக்கிட்டதா ஜாடைமாடையா பேசுறாங்க. இதுக்கு ஒண்ணு ஆச்சுதுன்னா... என் நிலம என்னாகிறது சாமி? சரி என்னவிடுங்க. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இதப் பெத்துட்டு... கண்ணு தெரியாம இத்தோட ஆத்தா கிடக்கிறாள். அந்தம்மா நிலைமை என்னாகிறது. நீங்களாவது புத்தி சொல்லுங்க சாமி.”

     வாலைச் சிரிப்போடு, வார்த்தெடுத்த உடம்போடு அந்தப் பெண், இப்போது குலுங்கிக் குலுங்கி அழுதாள். சகலமும் துறந்த சாமியார், துடித்துப் போனவர் போல் ‘என்னம்மா குழந்தே...’ என்று சொல்லியபடியே, லிங்கத்தைப் பார்த்தார். வேல்சாமி, அவள் அழுவதால் வெகுண்டவன் போல், சாமியாரைப் பாதியும் அவளை மீதியும் நோக்கியபடி உணர்ச்சிப் பிழம்பாய் பேசினான்.

     “நீங்களும் உலக நடப்புல இருந்து விடுபட்டுத் தான் சாமியாராய் ஆகியிருப்பீங்க. ஒங்களுக்குத் தெரியாதது இல்ல சாமி... நான் சொல்றதைக் கேக்கணும். அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் கட்டுப்படறேன்.”

     அவன் தொடர்ந்தான்.

     “நாமெல்லாம் சர்வேஸ்வரன் பிள்ளைங்க என்கிறது நிஜமுன்னால், இவ்வளவு போலித்தனங்கள் எதுக்காக இருக்கணும்? அதுவும் போலித்தனங்கள் பேசுறவன்களோ புண்ணியவான்கள் மாதிரி பேசுறது... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுறது மாதிரி ஆயிடுது. ஈஸ்வரன் ஒருவன் இருந்தால், அவன் இந்த நிலைமைகளை அனுமதித்தால், அவன் தேவையே இல்லையோன்னுகூட எண்ணத் தோணுது சாமி.”

     “இப்போ... என்னை மாதிரி ஏழையானவர்கள் நிலையை எடுத்துக்குங்க. இந்த அணைக்கட்டுமான வேல கோடிக்கணக்கான பணத்துல, பல காண்டிராக்டருங்கிட்ட பிரிச்சு கொடுத்திருக்கு. நான் ‘மேன்ஷன்’ காண்டிராக்டருகிட்ட இருக்கேன். ஏழு வருஷமா தினக்கூலி... கேஷுவல்லேபர். டெய்லி எட்டுரூபாய் சம்பளம். லீவு கிடையாது மருத்துவ வசதி கிடையாது. பி.டபிள்யு.டி. தொழிலாளிங்களுக்காவது குவார்ட்டஸ் இருக்கு. யூனியனும் இருக்கு. நாங்க இருக்கது சேரும் சகதியும் நிறைஞ்ச குடிசை. கொசுத்தொல்ல தாங்க முடியல. ஒரு கம்பளி கிடையாது, கட்டிலு கிடையாது. எட்டுமணி நேர வேலைன்னு பேரு. பனிரெண்டு மணி நேர வேல. எங்களுக்கு வேட்டியே போர்வை. கொசுவே தோழன். நோயே உடன்பிறப்பு. பலர் காசநோய்ல கிடக்காங்க. பலர் செத்தே போயிட்டாங்க. எங்க பிள்ளைங்களும் படிக்க வேண்டாமா? பள்ளிக்கூடத்துல, கேசுவல் தொழிலாளி பிள்ளைங்களுடன் கேசுவலா கூட போக முடியாது. எங்களுக்கு எட்டு ரூபாய் கூலி, காண்டிராக்டருக்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம். நாங்க லாபத்துல பங்கு கேட்கல... உழைப்புக்கு ஏத்த கூலி கூட கேட்கல. உயிரு உடம்புல இருக்கக்கூடிய அளவுக்கு வசதி கேட்டோம். இதுக்காக சிதறிக் கிடக்கிற கேசுவல் தொழிலாளிகளை யூனியன் சேர்க்க நினைச்சேன். இது தப்பா சாமி? இந்த நிலைமை இங்க மட்டுமில்ல சாமி... நாடு முழுதும் இருக்கு. மூணு வருஷத்துக்கு முன்னாடி மெட்ராஸ்ல ஒரு கம்பெனில மெக்கானிக்காய் இருந்தேன். சர்க்கார் வண்டி எந்த ரோட்லயாவது ரிப்பேர்ல நிற்கும். நான் போய் ரிப்பேர் பார்த்துட்டு வருவேன். எனக்கு ஏழு ரூபாய் கூலி - கம்பெனியில் போடுற நூறு ரூபாய்க்கு. பாத்திங்களா சாமி! இது ஈஸ்வரனுக்கு அடுக்குமா சாமி! அந்த பீடை வேண்டாமுன்னு இங்கே வந்தால்... இதுவும் பெரிய பீடையாய் இருக்கு. கம்பெனி ‘மஸ்டர் ரோல்’ல என் பேரு இருக்கு. பதினஞ்சு ரூபாய் கொடுத்ததாயும், லீவு எடுத்ததாயும் எழுதுறாங்க. எங்களுக்கும் சட்டம் இருக்காதா? எங்கே இருக்குன்னு தான் தெரியல? லேபர் அதிகாரிங்ககிட்ட கேட்டால் சிரிக்காங்க. சும்மா சொல்லப்படாது... நல்லாவே சிரிக்காங்க.”

     இப்போது அந்தப் பெண்ணே இடைமறித்தாள்.

     “சொம்மா பேசாதய்யா... நீங்களா சொல்லுங்க சாமி! அவ்வளவு பெரிய மனுஷன் காண்டிராக்டரே, இந்த துரைகிட்ட வந்து, ‘நீ எது கேட்டாலும் தாரேன். கையை நீட்டு, வாயை மூடு’ன்னு சொல்லிட்டார். இது கேட்கமாட்டங்கு... முன்னேறணும்னு புத்தி இருந்தால், இது அதுக்கு சம்மதிச்சிருக்கணுமா இல்லியா.. சொல்லுங்க சாமி?”

     சாமியார் சொல்லும் முன்பே வேல்சாமி மேற்கொண்டு பேசினான்.

     “பார்த்தீங்களா சாமி, இந்தப் பெண்ணோட புத்தி போற இடத்தை?”

     “ஒனக்கு ஒண்ணுன்னா போய்யா... இனிமேல் என்கிட்ட வரப்படாது.. நீயாச்சு, ஒன்னோட யூனியனாச்சு.”

     “பாத்தீங்களா சாமி... இவளோட கடைசி ஆயுதத்தை? ஒரு லட்சியத்தைப் பிடிக்கவனுக்கு சொந்த லாப நஷ்டம் ஒரு பொருட்டல்லன்னு தெரியமாட்டக்கு. திருநாவுக்கரசரை, பல்லவ மன்னன் கடலுல தூக்கிப் போடும்போது அவர் விட்டுக் கொடுத்தாரா! உயிரை வெல்லக்கட்டின்னு நினைச்சாரா? ‘நாமார்க்கும் குடியல்லோ’முன்னு சொன்னாரா, இல்லையா? சொல்லுங்க சாமி! ஏன் சாமி அப்படிப் பாக்கீங்க? எங்கப்பா பஜனை பாடுனவர். நான்கூடப் பாடுனவன்... ஒங்க ‘உலகத்துல’ எனக்குக் கொஞ்சம் பரிச்சயம் உண்டு!”

     அந்தப் பெண் இடைமறித்தாள்.

     “இது உருப்படாத கேஸ் சாமி... இது கதையே எனக்கு வேண்டாம் - நான் வாரேன் சாமி.”

     வேல்சாமி, போகப் போனவளின் கையைப் பற்றி, தன் பக்கமாக இழுத்தான். பிறகு, சாமியாரைப் பார்த்துவிட்டு, சிறிது வெட்கப்பட்டவன் போல தலை குனிந்தான்.

     சாமியார் “பரவாயில்லப்பா... நானும் ஒரு காலத்துல குடும்பஸ்தன் தான்...” என்று சிரித்துக் கொண்டே சொன்ன போது அந்தப் பெண் சிரிக்க முடியாமலும், அழ முடியாமலும், சிரித்தாள். அழுகை வந்துவிடும் என்று அஞ்சியவள் போல, அழுதால் சிரிப்பு வந்துவிடும் என்று நாணியவள் போல தவித்தாள். வேல்சாமி இப்போது நளினக் குரலில் முறையிட்டான்.

     “இந்தா பாரு வள்ளி... நம்ம விவகாரம் இப்பவே தீரணும்... சாமி சொல்றத இரண்டுபேரும் கேட்கணும். சாமியே சொல்லட்டும். சாமி! நான் சொல்றதைச் சொல்லிட்டேன். நீங்க நாங்க வசிக்கிற இடத்தையும், நாங்க படுற பாட்டையும் நேர்ல பார்த்தால் தவிர... அந்த என்னை மாதிரி ஆட்களால சொல்லுல விவரிக்க முடியாதுன்னாலும் கால்வாசி விளக்கிட்டேன். இப்போ நீங்க என்ன சொன்னாலும் அதுக்குக் கட்டுப்படுறேன், ஒங்க முகத்துல இருக்கிற வைராக்கியத்தை பார்த்த பிறகு, நீங்க எது சொன்னாலும் அது நியாயமாய் இருக்கும். ஏன்னா, எங்கப்பாவுக்கும் இது இருந்தது. அவர் செத்துட்டார். அவர் கடைபிடிச்ச நியாயம், அது பக்திவகையோட சேர்ந்ததுன்னாலும், அது என்கிட்ட, பாட்டாளி நியாயமாய் மாறி வந்திருக்கு. சொல்லுங்க சாமி... நான் சிதறிக் கிடக்கிற ஆட்களை ஒண்ணு திரட்டி யூனியன் அமைக்கட்டுமா? இல்ல இதோ இருக்கிற லிங்கநாதர் பார்த்துக்கிடுவார்னு நினைச்சு சும்மா இருக்கட்டுமா? சொல்லுங்க சாமி! ஒங்ககிட்ட சாமியார்ங்கிற முறையில கேட்கல... என்னோட அப்பா ஸ்தானத்துல வச்சு கேக்கறேன். நான் யாரையும் விட என் அப்பாவை அதிகமாக மதிக்கிறவன்... சொல்லுங்க சாமி - நீங்க என்ன சொன்னாலும் கட்டுப் படறேன்.”

     சாமியார் பரபரத்தார். ‘மகனே மகனே’ என்று கூவிய மனதை வாயரங்களில் ஆடவிடாமல் தடுத்தார். வள்ளியைப் பார்த்தார். அவள் நாணச் சிரிப்போடு அவரை நம்பிக்கையோடு பார்த்தாள். லிங்கத்தைப் பார்த்தார். அதன் விபூதிப்பட்டை, லிங்கநாதரின் வாய்போல மோனமாய் சிரித்தது. சுவாமி விவேகானந்தர் மாதிரி, மார்போடு சேர்த்து, கரங்களை மடித்து வைத்துக் கொண்டு சாமியார் அழுத்தமாகப் பேசினார்.

     “நான் ஒரு வகையில சாமியார் என்றால் நீ இன்னொரு வகையில சாமியார்... என்னை விட ஒசத்தியான சாமியார். சுயநலத்தில இருந்து முழுதும் விடுபட்டு, ஊருக்காக உழைக்கிறவன் தான் உசத்தியான சாமியார். ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் ஒரு வழி அமைச்சுக் கொடுக்கிறான். அந்த வழிக்கு நான் குறுக்கே நின்றால் அது ஆண்டவ விரோதம்! ஒன்னோட சேவையை மெச்சுறேன்... நீ வெற்றி பெற என் ஆசி! பேய்மனதின் ஆசைகளை அறுக்கிறவன் தனிப்பட்ட சாமியார். ஏழைகளின் ஆசைகளை நிறைவேற்றுகிறவன் சமூகச் சாமியார். சமூகம் தனிப்பட்ட மனிதனை விட உயர்ந்தது. வெற்றிவேல்! வீரவேல்! குமரேசனும் ஒரு வகையில் சமரேசன் தான். அவன் ஒனக்கு அருள்பாலிப்பான்.”

     வேல்சாமி சாமியார் காலில் விழுந்து வணங்கினான். நெடுமரம்போல் பிரமித்து நின்ற வள்ளியின் காலைக் கிள்ளினான். அவளும், சாமியார் காலைத் தொட்டாள்.

     இருவரும் கோவிலைவிட்டு, மலைச்சரிவு வழியாக கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள். வேல்சாமி, சிணுங்கியபடியே பின் தங்கி நடந்த வள்ளியை இடுப்போடு சேர்த்து அணைத்து, அவள் தலையில் செல்லமாகக் குட்டிக் கொண்டு போவதைப் பார்த்த சாமியார் மெல்லச் சிரித்துக் கொண்டார். பிறகு லிங்கத்தைத் திரும்பிப் பார்த்தார். அப்படியே உட்கார்ந்தார். அவர் மனதில எத்தனையோ எண்ணங்கள்... இறந்துபோன மகன்... இறக்காமல் இறந்துகொண்டு இருக்கும் இந்தத் தொழிலாளிகள். இங்கே கொட்டும் மழையிலும் கல்லுடைக்கும் தொழிலாளிகளையும், குளிரில் ஆடிக்கொண்டே வேலை பார்க்கும் சித்தால் பெண்களையும் பார்க்க வேண்டும் போலிருந்தது.

     மெல்ல நடந்தார்.

     ஒரு கிலோ மீட்டர் நடந்ததும், அணைக்கட்டுப் பகுதி, கண்ணில் பட்டது. அணைக்கட்டுக்கு மேலே இருந்த மலைப் பகுதியில் கற்சுவர்களிலான வீடுகளும், டெண்டுகளும், கதவுகள் வழியாகத் தெரிந்த கட்டில் பீரோக்களையும், டிரான்சிஸ்டர்களையும் பார்த்த சாமியார் கண்கள், மற்றொரு பக்கம் மலைச் சரிவில், தென்னங் கீற்றுக்களால் வேயப்பட்ட குடிசைகளைப் பார்த்தார். மிருகங்கள் தீண்டக் கூடிய - ஆற்று வெள்ளம் உயர்ந்தால் அடித்துப் போகக்கூடிய - அபாயப் பகுதி. அபயம் அளிக்க ஆளில்லா நிலைமை. வீடு என்ற பெயரில் பனை மட்டைகளே தூண்களாகவும், கோணியே வாசல் கதவுகளாகவும் கொண்ட கொசு ‘வாச’ ஸ்தலங்கள். அங்கே நோயில் விழுந்த மனிதர்கள்... குச்சிக் கால், குச்சிக்கை பெண்கள்... மழைத் தூறலில் அணைந்த அடுப்பைப் பற்ற வைக்க முடியாமல் தவிக்கும் பாமர ஜாதிகள். இவர்களுக்கு வேலை மட்டும் ‘கேசுவல்’ அல்ல... வாழ்க்கையே ‘கேசுவல்’தான்.

     ‘ஈஸ்வரா... ஈஸ்வரா... பிள்ளைகளைப் பார்த்தாயா... பார்த்தாயா’ என்று தனக்குள்ளேயே மந்திரம்போல் ஜபித்தபடி சாமியார் திரும்பி நடந்தார்.



புதிய திரிபுரங்கள் : 1 2 3 4 5