5

     ஐந்தாறு நாட்கள் சாமியார் குடிசைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். வேல்சாமியின் ‘விபத்தும்’, வள்ளியின் ‘மரணமும்’ தொழிலாளர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் போடும் கோஷங்கள், தூரத்து இடிமுழக்கமாய் கேட்டது.

     சாமியார் குற்றவுணர்வில் தவித்தார். வேல்சாமியை தடுத்திருக்கலாம்... அவனுக்கும் ‘விபத்து’ வந்திருக்காது, வள்ளிக்கும் மரணம் வந்திருக்காது... நான் இரட்டைக் கொலை செய்துவிட்டேனோ... ஈஸ்வரா... ஈஸ்வரா... சர்வேஸ்வரா...

     கிராமத்துப் பையன், வள்ளி இறந்த மறுநாளும் பால் கொண்டு வந்தான். சாமியார், அவனைப் பார்த்து, “நான் ஈஸ்வரனுக்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்யறேன். பூஜை செய்யறதாய் உத்தேசமில்லை. நீ இனிமேல் வரவேண்டாம்” என்று சொல்லிவிட்டார். பெரிய விஷயங்களை உள்வாங்க முடியாத அந்த சின்னப் பையன் சாமியாரை, இனிமேல் பார்க்க முடியாதோ என்ற ஆதங்கத்தோடு போய்விட்டான்.

     சாமியாரால் குடிசைக்குள் முடங்கிக் கிடக்க முடியவில்லை. குருநாதரின் காவியாடை அவரை உறுத்தியது. தூங்கும்போது, லிங்கத்திற்குப் பூஜை செய்வதுபோல் கனவுகள் வந்தன. கனவில் இருந்து வெளிப்படவும், ஈஸ்வரன் அனாதையாக நிற்பது போலவும், அவனை தானே கவனிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது.

     ஒரு நாள் நடுநிசியில், ஒரு மானின் கூப்பாட்டில், அவர் திடுக்கிட்டு இருந்தார். மானின் மரணக் குரல். அது சன்னஞ் சன்னமாக அடங்கி, சதை சிதைந்த வேகத்தில் அதுவும் அடங்கியது.

     சாமியார் யோசித்துப் பார்த்தார்.

     “இதோ இந்தக் காட்டில், ஒரு மானை, ஓநாய்களோ அல்லது சிறுத்தையோ கொன்று புசித்திருக்க வேண்டும். ஏதுமறியாத இந்த மானை, ஒரு துஷ்ட மிருகம் கொல்ல வேண்டும்! துஷ்ட மிருகத்திற்கு கோர நகத்தையும், அதனிடையிலிருந்து தப்பிப்பதற்காக, மானுக்குப் பாய்ச்சலையும் கொடுத்தவன் யார்? தப்புவதற்கு பின் கதவைத் திறந்தும், தாக்குவதற்கு முன்கதவையும் திறந்துவிட்டவன் யார்? ஈஸ்வரன். இது அவனுடைய நீதி. எல்லா உயிர்களும் ஈஸ்வர சொரூபங்கள். கொல்வதும் கொல்லப்படுவதும் வெறும் பாவனைகளே, மானைப் புசிக்கும் சிறுத்தையின் நாடி நரம்பெங்கும் அந்த மானின் சதையும் ரத்தமும் ஐக்கியமாகின்றன. இதோ இந்த சிறுத்தை ஒரு நரியை அடிக்கிறதென்றால், அந்தச் செயல் அந்த மான்கறி கொடுத்ததால் ஏற்பட்ட ஊக்கம்தானே. அப்படியானால் மானே நரியை அடிப்பதாக ஏன் பாவிக்கக் கூடாது? ஈஸ்வர சக்தியை எப்படி என்று விவரிக்க முடியுமே தவிர, ஏன் என்று சொல்லமுடியாது. பூமியைவிட கோடிக்கணக்கான மடங்கு பெரிய நட்சத்திரத்தையே ஒரு துகளாகக் காட்டும் அண்டங்களும், அண்ட அடுக்குகளும் கொண்ட பிரபஞ்ச சொரூபனான ஈஸ்வரனை... ஏதோ ஒரு கோளத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக மறந்துவிடலாகாது ஈஸ்வரா என்னை மன்னிச்சிடு. மாயையில் இருந்து என்னை மீட்பாய். ஒன் அருள் இருந்தால் அந்தப் பையன் இன்று பால் கொண்டு வர வேண்டும். வராதே என்று தடுக்கப்பட்டவன் வலிய வர வேண்டும்.”

     சாமியார் பூக்கொய்தார். மாலை தொடுத்தார். சொல்லி வைத்ததுபோல அந்தப் பையனும், பால் கொண்டு வந்தான். சாமியார் நெகிழ்ந்து போனார். ஈஸ்வர கிருபையை நினைத்து நெக்குருகினார். அன்று கோவிலில், வட்டியும் முதலுமாக மணிக்கணக்கில் பிரார்த்தித்தார்.

     அவர், வெளிமனதில் வியாபித்திருந்த வேல்சாமியும், வள்ளியும், இதர முந்திய பிந்திய நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளின் மனிதப் பாத்திரங்களும் அடி மனதுள் போய்விட்டன. பூஜை, நாள்தோறும் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. அன்றாடப் பூஜையும், கடுமையான ஆசனப் பயிற்சிகளும், பிரணாயமும், சாமியார் மனக்கப்பலை நங்கூரம் பாய்ச்சின.

     மேலும் ஒரு மாதம் சலனங்களிலிருந்து விடுபட்டுக் கழிந்தது.

     ஆனால் அன்றோ -

     பௌர்ணமி இரவு மணி எட்டு இருக்கும். எங்கும் காட்டமைதி. கோவிலுக்கு வந்து, பூஜையைத் துவக்கப் போனார் சாமியார். அப்போது தொலைவில் இருட்டுருவமாய் தோன்றிய ஒரு கிழிசல் உருவம், கோவிலுக்கு முன்னால். அறுபது வயது மூதாட்டியாகி தன் தலையிலும் அடித்துக் கொண்டது. ஆடிய மேனி, வாடிய கண்கள் லிங்கத்தைப் பார்த்ததும், சொந்த தந்தையைப் பார்த்தது போல் அந்த மூதாட்டி, தலையில் பலங்கொண்டபடி அடித்துக் கொண்டு தூங்குமூஞ்சி மரத்தை ஆதரவாய்ப் பிடித்துக் கொண்டே அரற்றினாள்.

     “ஏய்யா... ஈசா... இருந்தது ஒரே மகன். லாரியில் மாட்டி ஒரேயடியாப் போயிட்டான். ஒன்கிட்டதான் வந்தேன். இப்போ அவனையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டியே... நான் என்ன பண்ணுவேன்? எங்கே போவேன்? இந்தத் தள்ளாத கிழவி என்னடா பண்ணுவேன்? ஒன்னை நம்புனவளை இப்படியாடா பண்ணுறது - சண்டாளா?”

     சாமியார், சாத்துவதற்காகத் தூக்கிய பூமாலையை மடியில போட்டுவிட்டு, அந்தக் கிழவியைப் பார்த்தார். அடிக்கடி இந்தப் பக்கம் வருகிறவள், பார்த்த ஞாபகம் இருக்கிறது. மகன் போனதால், இவளுக்கு போகுமிடம் தெரியாமல் போய்விட்டதோ? ‘ஈஸ்வரா... ஈஸ்வரா... இது தப்புடா?’

     பூஜை சமயத்தில் யாரிடமும் பேசாத சாமியார் இப்போது அந்த முதியவளிடம் பேச்சைத் துவக்கினார்:

     “ஒனக்கு இவன்தான் ஒரே பையனா?”

     “ஆமாங்க சாமி. திக்குல்லாத அனாதையாயிட்டேன். எங்கே போறது, என்ன செய்யறதுன்னே தெரியலே...”

     “சர்க்கார்ல வேலை பார்த்தானா?”

     “இவன் சர்க்கார் ஆளுல்ல சாமி... காண்டிராக்டர்கிட்ட வேலை பார்த்தவன்.”

     “காண்டிராக்டர் நஷ்ட ஈடு கொடுக்கமாட்டாரா?”

     “நல்லா கொடுத்தான். ஒன் பையன் அந்திமச் செலவுக்குக் காசு கொடுன்னு கேக்கான்.”

     சாமியார், அந்த மூதாட்டியையே பார்த்தபோது அவள் அவரையே ஈஸ்வரனாக நினைத்து ஒப்பித்தாள்.

     “என் மகன் சிதறிக்கிடந்த ஏழை பாழைகளை ஒன்று சேர்க்கதுக்கு சங்கம் அமைச்சான். இதைப் பொறுக்காத காண்டிராக்டரு அவன் மேல லாரியை ஏத்தி கொன்னுட்டான்... எனக்கு மருந்து வாங்கப்போன மகன், மாயமாய் போயிட்டான். அவன் போன ஏக்கத்துல, அவனையே நம்பியிருந்த ஒருத்தியும் தூக்குப்போட்டு இங்கேதான் செத்தாள். ஒங்களுக்குக் கூடத் தெரிஞ்சிருக்கும். அவளைக் கூடச் சாகடிச்சிருப்பாங்களோன்னு ஒரு சந்தேகம். ஏழை மேல சந்தேகம் வந்தால் எது வேணுமுன்னாலும் நடக்கும். ஏழை சந்தேகப்பட்டு என்ன சாமி நடக்கும்? வயிறுன்னு ஒண்ணு இருக்கு... நானும் என் சந்தேகத்தை வெளில காட்டிக்காமல் எனக்கு ஒரு வழி பண்ணுப்பான்னு கேட்டேன்.

     “இன்னொரு பையன் இருந்தால் கூட்டிக்கிட்டு வா வேலை கொடுக்கேன். இல்லன்னா ‘நீ கல்ல உடை’ன்னு சொன்னான். இன்னைக்குக் கல்லுடைச்சேன். ஆனா கோடு போட்ட இடத்துல உடைக்காமல் குறுக்கா உடைச்சேன். காண்டிராக்டர் வந்து ‘கல்லக் கெடுத்திட்டியேடி பாவி. திரும்பிப் பாராமல் ஓடலன்னா கழுத்தப் பிடிச்சுத் தள்ளுவேன்’னு சொல்லிட்டன சாமி. அவன் கை நகம் பட்டு... இந்தா பாரு சாமி கழுத்துல கீறல்.”

     சாமியார், அருவியோசை அடங்கும்படி அதிரொலியுடன் கேட்டார்:

     “அம்மா... நீ வேல்சாமியோட தாயா?”

     அந்த மூதாட்டி ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தாள். பிறகு “ஒங்களுக்கு அவனைத் தெரியுமா சாமி! என் தங்க மகனை... என் செல்ல மகனைத் தெரியுமா சாமி? அவனைப் பெற்ற பாவி நான்தான். எனக்காக இருக்காட்டாலும் அவனையே நம்புன பொண்ணுக்காகவாவது ஈஸ்வரன் அவனை விட்டு வச்சிருக்கலாம். இப்போ முடியக்கூடாத எல்லாம் முடிஞ்சிட்டு... முடிய வேண்டிய நான்தான் முடியாம நிக்கேன். இதோ! இந்தக் கழுத்துல காண்டிராக்டர் நகம் பட்ட கீறலை மட்டும் என் செல்ல மகன் பார்த்திருந்தால் எப்படித் துடிச்சிருப்பான் தெரியுமா? இனிமேல் சொல்லி என்ன செய்ய?”

     அந்த மூதாட்டி அழுவதற்குத் திராணியற்றவளாய், விக்கித்து நின்றாள். பிறகு ‘இதோ இந்தப் பையில இருக்கிற அவனோட வேட்டியையும், சட்டையையுந்தான் எடுத்து எடுத்துப் பார்த்துக்கறேன்’ என்று முனகினாள்.

     சாமியார் ஒளிப்பிழம்பானார்.

     “ஈஸ்வரா... ஈஸ்வரா... இந்தத் தாய் சொல்றது ஒனக்குக் கேட்டுதா? கேட்டுதா? நீ விஷத்தக் கண்டத்துல தேக்கி வச்சிருக்கே. இவளுக்கும் அதே இடத்துல நகக்கீறல் நீ தாங்குவது மாதிரி இவளால் முடியுமா? பாருடா மானுட விஷத்தை.”

     சாமியார் சத்தம் போட்டுக் கூவிவிட்டு, தன்னை உருக வைக்கும் வள்ளலார் பாடிய,

     ‘கழுமரக் கட்டைபோல நிற்பார் களைய... இக்
     கயவர் வாய் மதம் முழுதுமே
     மண்கொண்டு போகவோர் மருந்தருள்க’

     என்ற பாடலை, தன்னை மறந்து கூவினார். பாடுவது தெரியாமல் பாடினார். பல தடவை திரும்பத் திரும்பப் பாடினார். கைகளை யாசகம் கேட்பவர்போல் திருவோடு போல் வைத்துக் கொண்டு பாவத்தோடு பாடினார். பயத்தோடும், நயத்தோடும் பாடினார். கைகளை யாசகம் கேட்பவர்போல் திருவோடு போல் வைத்துக் கொண்டு பாவத்தோடு பாடினார். பயத்தோடும், நயத்தோடும் பாடினார். பாடப் பாட அந்தக் குளிரிலும் அவருக்கு உடலெங்கும் வியர்வை பெருக்கெடுத்தது. கண்களும் வியர்த்தன. பிறகு குரலை, சன்னஞ்சன்னமாக அடக்கி, அப்படியே தியானத்தில் அமர்ந்தார். ஒரு மணி நேரமாகியும் அவர் கண் விழிக்காததைப் பார்த்துவிட்டு அந்த முதியவள் தயங்கியபடியே நடந்து எங்கேயோ மறைந்தாள்.

     நீண்ட நேரத்திற்குப் பிறகு, கண்விழித்த சாமியார் யதார்த்த நிலைக்கு வந்தார். அந்த முதியவளைக் காணாதது அவருக்கு ஆறுதலாகவும் இருந்தது. தன்னையே அதட்டிக் கொண்டார். ஒரு துறவி எல்லாவற்றையும் ஒரே சீராகப் பார்க்க வேண்டும்; இன்பமும் துன்பமும் அவனைத் தாக்கக்கூடாது. அவஸ்தை கொடுப்பவனையும் அதை வாங்குபவனையும் சர்வேஸ்வரன் பார்த்துக் கொள்வான். எனக்கேன் வம்பு? என் கடன் ஈஸ்வரப் பணியே. உறவுக்காரர்களே நன்றி கெட்டவர்கள் ஆனார்கள். பெற்ற தாயே மாற்றாந் தாயானாள். ரத்தத் தொடர்புள்ள உறவே, ரத்தத்தைக் கொதிக்க வைத்த போது, யாரோ ஒருவருக்காக சிந்தனையை வீணடித்தல் தவறு. நன்றி கெட்ட உலகமிது. ஒரு மனிதனிடம் எத்தனை அணுக்கள் இருக்கின்றனவோ அத்தனை மனிதர்களாக அவன் நடமாடுகிறான். இனிமேல் ஈஸ்வர சிந்தனையன்றி, எதுவுமே எனக்குத் தோன்றலாகாது. ஈஸ்வரா... தோடுடைய செவியனே... அருளாளா... அருள்வாய். பாம்புபோல் பின்னியிருக்கும், கிடா, பிங்கல நாடிகளை எழுச்சி பெறச் செய்து, சுழி முனை நாடியில் ஆன்ம ஒளி பாய்ந்து குண்டலியுடன் கூட்டி அருள்வாய்... உலக பந்தத்தை அறுத்தெறி! எரிதழலே!

     சாமியார் குடிசைக்குப் போக மறந்து அங்கேயே தூங்கிவிட்டார். கண்விழித்த போது சிந்தனைச் சுமை சிறிது இறங்கியது போலிருந்தது. தொழு நோயாளியையும், நடுத்தர வயதுப் பெண்ணையும், முதியவளையும், வேல்சாமியையும், வள்ளியையும் மனதிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிவிட்டு, அருவியில் குளித்து முடித்துவிட்டு சதுரக்கல்லில் பத்மாசனம் போட்டு உட்கார்ந்தார்.

     காலைப் பொழுது கலகலப்பாகிக் கொண்டிருந்தது... “சாமி... என்னை தெரியாதுங்களா!” என்ற சத்தம் கேட்டு சாமியார், கோவிலுக்கு வெளியே பார்த்தார்.

     பேண்ட் - அதுவும் பெல்பாட்டம் பேண்டுடன், டிசைன்கள் போட்ட பாலிஸ்டர் சிலாக்கோடு, ஒரு நாற்பது வயதுக்காரர் சிரித்துக் கொண்டு நின்றார். அவரை அடையாளம் காண முடியாதவர் போல் சாமியார் புருவத்தை உயர்த்திய போது, அவர் மடமடவென்று ஒப்பித்தார்.

     “நான்தான் சாமி... சாரங்கன். ஆறு மாதத்துக்கு முன்னால இங்கே வந்து இரண்டு மாசம் முடங்கிக் கிடந்தேனே... ஞாபகம் இருக்கா? இப்போ ஓடிப்போன என் ஒய்ஃப் - அதுதான் சம்சாரம் திரும்பி வந்துட்டாள்.”

     பல் தெரியச் சிரித்த அந்த ஆசாமியையே சாமியார் மேனி சிலிர்க்கப் பார்த்தார். அவர் சொன்னதுபோல் ஆறு மாதத்திற்கு முன்பு தாடியும் மீசையுமாய் அழுக்கேறிய வேட்டியுடன் இதே இந்தக் கோவிலில் வந்து இரண்டு மாதம் வரை எழுந்தருளி, தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்ற பாடல்களை மாறி மாறிப் பாடி, ஓடிப்போன மனைவியைத் தந்தருளும்படி ஈஸ்வரனிடம் முறையிட்டவர் இவர். ஒருநாள் யாரோ வந்து இவரை அழைத்துக் கொண்டு போனார். அப்போது போனவர் இப்போது வந்திருக்கிறார். மனைவியைத் திருப்பிக் கொடுத்த ஈஸ்வரனைத் திரும்பிப் பார்க்க வந்திருக்கிறார். நாளானாலும் பரவாயில்லை. நன்றி சொல்ல வந்திருக்காரே... சாமியார், அன்பு ததும்பக் கேட்டார்.

     “கோவிலுக்கு வந்தியா? தேங்காய் ஊதுபத்திய எங்கே?”

     “நான் கோவிலுக்குன்னு வரல சாமி. இங்க அணை கட்டப்போறாங்க பாருங்க. ஒரு காண்டிராக்ட் விஷயமா நேற்றே வந்தேன். இப்போல்லாம் நேரமே கிடைக்க மாட்டேங்கு சாமி. இன்னொரு நாளைக்கு சௌகரியமாய் வாரேன். வரட்டுமா சாமி. குளிக்கணுமுன்னு வந்தேன். அதுக்குள்ள இன்னொரு காரியம் ஞாபகம் வந்துட்டு... வாரேன் சாமி.”

     சாமியார் ஆச்சரியத்தில் இருந்து விடுபடுமுன்னாலேயே, அவர் போய்விட்டார். முன்பு விபூதி கொடுத்தால், “நீங்களே பூசுங்க சாமி” என்று கேட்பவன் இன்று அவரை பூசக்கூடச் சொல்ல வேண்டாம், தட்டில் இருக்கும் விபூதியை எடுத்துப் பூசியிருக்கலாமே. சீச்சீ. தப்பு. நேரமில்லாத மனிதன். விபூதி பூசுகிற நேரத்தில், டெண்டரைத் திறந்துவிட்டால்...

     சாமியார் யோசித்தார்.

     இவன் ஈஸ்வரனிடமே நன்றியில்லாமல் நடந்து கொள்கிறானே... ஒரு தடவை ஓடியவள், இன்னொரு தடவையும் ஓடமாட்டாளா என்ன? ஈஸ்வரா... நான் ஓடணும்னு சொல்லல. இரண்டுபேரும் நல்லா இருக்கட்டும். எப்படியோ அவள் பேர்ல சொத்தை எழுதி வச்சுட்டு, ஆப்பசைத்த குரங்குமாதிரி இருந்தவன், சந்தோஷமாய் இருக்கிறதுல சந்தோஷந்தான். ஆனாலும் ஈஸ்வரன்கிட்ட இப்படியா நன்றியில்லாமல்...

     சாமியார் தன்னுள்ளே சிந்தனையை மீண்டும் அலசிப் பார்த்தார்.

     “இந்த ஈஸ்வரனுக்கு, இவன் நன்றியில்லாதவன் என்பது தெரியாதா என்ன? தெரிந்துதானே இவனை இரண்டு மாதம் கொண்டு வந்து போட்டிருப்பான். தெரிந்துதானே மனைவியை மீட்டுக் கொடுத்திருப்பான்... இவன், தன்னைப் பார்க்க வராமல் அணைக்கட்டு வேலைக்காக வந்தவனை, இங்கே இப்போது கொண்டு வந்து விட்டவனும் ஈஸ்வரன்தானே. ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று திருவாசகம் சொல்கிறது. அப்படியானால், இவன் அருளில்லாமல் அவன் இங்கே வந்திருக்க முடியுமா? நன்றி என்பது ஈஸ்வரனுக்கு அடுத்தபடியான பெரிய வார்த்தை... நன்றி வந்தாலும் சரி, அதற்கு எதிர்மாறானது வந்தாலும் சரி. அவற்றை, சிவா அர்ப்பணமாக்கிவிட்டு, பலனை எதிர்பார்க்காமல் செயல்படுபவனே யோகி. அவனே ஈஸ்வர அருளுக்கு, தன்னை அருகதையாக்கிக் கொள்கிறவன். ஈஸ்வர அருள், போற்றுபவனுக்கும், தூற்றுபவனுக்கும் ஒரே மாதிரி கிடைக்கக் கூடியது. அந்த அருளுக்கு, நாம் நம்மை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டாமா என்பதுதான் உயிர்ப்பான தத்துவம். பாவம்! அந்த முதியவள் எப்படி இருக்காளோ? சொந்தத்தையே வீடாகக் கொள்ளாமல், சமூகத்தையே வீடாகக் கொண்டவனின் தாய். ஈஸ்வரன் நிச்சயம் ‘வீடு’ கொடுப்பான். இந்த காண்டிராக்டர்கள் மண்ணையும், கல்லையும் வைத்துக் கட்டுகிறார்களா, அல்லது மனித உடல்களை அடுக்கி, குருதியால் பூசுகிறார்களா?

     சாமியார், ஏதோ ஒரு பெரிய சுமை இறங்கிவிட்டது போல் தலையை ஆட்டிக் கொண்டிருந்த போது, இரவில் வந்த முதியவள், ஒரு கையில் தூக்குப் பையுடன் வந்து கோவிலுக்கு முன்னால் நின்று கரங்குவித்தாள். அவள் கும்பிட்டு முடிவது வரைக்கும் பொறுக்க முடியாமல் சாமியார் குறூக்கிட்டுக் கேட்டார். தனிப்பட்ட மனிதர்களிடம் சிக்கிக் கிடக்கும் எளியோரைப் பார்த்த நினைவு அப்போது ஒட்டுமொத்தமாக வந்து நின்றது.

     “என்னம்மா செய்யப்போற?”

     “திக்கில்லாதவங்க என்ன செய்வாங்களோ அதைத்தான் செய்யப்போறேன்.”

     “அதாவது...”

     “ஊருஊராய், தெருத் தெருவாய், வீடு வீடாய், பிச்சை எடுக்கப்போறேன். ஒன் கையால போணி பண்ணுசாமி... நீ கொடுக்கற பத்து பைசா, எனக்குப் பத்தாயிரம் மாதிரி... ஈஸ்வரா! நீ, பிச்சையில உதவுறியோ இல்லியோ, ஒரு தடவையாவது இந்தக் கிழவி ஒன்னைப் பார்க்கதுக்கு வரம் கொடுப்பா. சாமி, ஒரு பத்து பைசா...”

     சாமியார், யதார்த்தத்தின் சூடு தாங்கமாட்டாதவராய், அந்த முதியவளைப் பார்த்தார். அவள் முகத்தில், இப்போது புத்திர சோகம் இல்லை. எப்படிப் பிழைப்பது, எப்படி தன்னைக் காத்துக் கொள்வது என்ற ஒரு கவலை. ஒரே கவலைதான் அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. மௌனமாக ஐம்பது பைசா நாணயத்தை, அவளிடம் நீட்டினார். அந்த முதியவள், ஆகாயத்தை வளைத்துக் கட்டியது போலிருந்த லிங்கத்தையே பார்த்துவிட்டு, கீழே வைத்த கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். சாமியாருக்கு ஊனெல்லாம் உருகி, உள்ளொளியாகி, அது அந்தக் கிழவியின் பின்னால் போவது போலிருந்தது. லோகமாதா, அதோ போய்க் கொண்டிருக்கிறாள். சப்த லோகங்களைப் பிரசவித்தவள் தனியாகப் போகிறாள்.

     சாமியார் ஆவேசப்பட்டவராய் வெளியே வந்தார். கோவில் முனையில் ஸ்தாபனம் செய்யப்பட்டிருந்த நடராஜர் சிலையையே விழியாடாமல் பார்த்தார். நடனம் வேகமாக நடைபெறுவதைக் காட்டும் கலைந்த சடை. மார்பிலே பாம்பாரம், ஒரு கையில் உடுக்கை, இன்னொரு கையில் அக்கினிக் குண்டம் வலதுகால் தூக்கி நிற்கிறது. இடதுகால் கொடுமையின் அவதாரமான முயலவன் மீது அழுந்தியிருக்கிறது. அந்த ‘நாதாந்த, போதாந்த, யோகாந்த, வேதாந்த’ சிலையையே உற்றுப் பார்க்கிறார். கண்கொண்ட குருடர்க்கு வழிகாட்டும் அந்தச் சிலையின் பின்னால் வள்ளலார் வந்து,

     ‘நடராஜர் தன்னடம் நன்னடமே
     நடம் புரிகின்றதும் என்னிடமே’

     என்று பாடுகிறார்.

     அந்தப் பாட்டு, அவர் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்தச் சமயத்தில், கண்களுக்கு நடராஜர் சிலை, சிறிது சிறிதாக மாறுவதுபோல் தெரிகிறது. சூரிய சந்திரர் ஆழிகளாக, பதினான்கு உலகங்களும் தேர்த்தட்டுக்களாக, எண் திசை மலைகள் தூண்களாக, இமயமலை கொடியாக, வேதங்கள் பரிகளாக, பிரம்மா சாரதியாக, மகாமேரு வில்லாக, மகாவிஷ்ணு அம்பாக, திரிபுரம் எரிக்கத் தெய்வத் தேரில் புறப்படும் விரிசடைக் கடவுளின் தோற்றம் தெரிகிறது. அது தெரியத் தெரிய செயற்பாடே பக்தி என்று ஏதோ ஒன்று சொல்கிறது. அண்ட சராசரங்கள் சுழல்வதும், எதுவுமே இருந்த இடத்தில் இல்லாமல் நகர்வதும் புரிகிறது. தீமையை எதிர்த்து செயல்படுவதே ஈஸ்வர சேவை என்று ஏதோ ஒன்று உணர்த்துகிறது. ஏழை எளியவர்களை வாட்டி வதைக்கும் புதிய முயலவன்களை எதிர்த்து அடக்குவதே ஈஸ்வர நடனத்தின் தாத்பரியம் என்று உள்ளுக்குள் ஒன்று - பெரிதான ஒன்று கூவுகிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிமுறைகளை விட எளியவர்களும் வாழ்வாங்கு வாழ, வழி காட்டுவதே ஈஸ்வர வழி என்று ஏதோ ஒன்று அவரை வழிப்படுத்துகிறது.

     சாமியார் பிரபஞ்ச இயக்கத்தின் ஆதார சக்தியைப் பிரதிபலிக்கும் அந்த நடராஜர் சிலையையே பார்ப்பதை இன்னும் விடவில்லை. பார்க்கப் பார்க்க புதிய பார்வை உண்டாகிறது. இந்த சமூக அமைப்பில் ஏழை எளியவர்களுக்கு இடமில்லை. சூப்பப்பட்ட பனம் பழமாய் அவர்கள் வீசி எறியப்படுகிறார்கள். கண் முன்னாலேயே, அதுவும் கோவில் முன்னாலேயே, திக்கின்றித் திணறும் எத்தனையோ எளியவர்களைப் பார்த்தாகிவிட்டது. இன்னும் பார்த்துக் கொண்டே இருப்பது, ஈஸ்வர நிந்தைக்குச் சமமாகும். ஏதாவது என்னளவில் செய்ய வேண்டும். இந்த முதியவளைப் போல் எத்தனை பேர், கண்ணில் கண்டுபிடிக்க முடியாத குக்கிராமங்களில் இருக்கிறார்களோ... இவர்களுக்காகப் பெரிய அளவில் செய்ய முடியாமல் போனாலும், இங்கே காண்டிராக்டர்களிடமும், வெடிப் பாறைகளிடமும் மாட்டிக் கொண்டு, சிதறிக் கிடக்கும் ஏழை எளியவர்களை ஒன்று சேர்த்து, மானுடத்தின் மேன்மைக்காகப் பாடுபடலாம். பாடுபட வேண்டும். அக்கிரமக்காரர்களை, பாடுபடுத்த வேண்டும்.

     அப்போதுதான், ஞான-முக்தி பெற்றவர் போல், சாமியார் தொலைவில் மறையப் போகும் முதியவளைப் பார்த்து, “அம்மா... தாயே... தயவு காட்டி இங்கே வாம்மா” என்று உரக்கக் கூப்பிடுகிறார். அவள் நின்று, நிதானித்து திரும்பி வருகிறாள். அவள் வருவது நிச்சயப்பட்டதும் சாமியார், நடராஜர் சிலையை கைகூப்பி தொழுதபடி நிற்கிறார். இதற்குள் முதியவளும் அவர் அருகில் வந்து நிற்கிறாள். சாமியார், அந்த எளிய வர்க்கத்தின் பிரதிநிதியையும் பாமரவர்க்க நாதனாய் நிற்கும் நடராஜர் சிலையையும் மாறி மாறிப் பார்க்கிறார். பிறகு திடீரென்று தன் காவி வேட்டியைக் களைந்து உள்ளே போய் சதுரக்கல்லில் போட்டுவிட்டு, வெளியே வந்து லங்கோட்டுடன் நிற்கிறார். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்பதுபோல பயந்து ஒடுங்கிய முதியவளைப் பார்த்து அமைதியாகக் கேட்கிறார்.

     “பையில்... ஒன் மகனோட வேட்டி சட்டை இருக்குதுன்னு சொன்னல்லா?”

     “எதுக்கு சாமி?”

     “நான் இன்று முதல் ஒன் மகன். இந்த நடராஜன் என் அப்பன். நீதான் என் ஆதிபராசக்தி... வேட்டி சட்டையை எடு... உம்... சீக்கிரம்...”

     முதியவள் ஒன்றும் புரியாமல் மகனின் வேட்டியையும், சட்டையையும் எடுத்து நீட்டுகிறாள். முன்பு தன் குருநாதரிடம் காவியாடையை எப்படி பயபக்தியோடு வாங்கினாரோ, அப்படி அந்த ஆடையை பயபக்தியோடு வாங்கிக் கொண்டே நடராஜரையே பார்க்கிறார். அவரையே சாட்சியாக வைத்துக் கொண்டது போல், அசுர வேகத்தில், தப்பு, ஆடலரசன் வேகத்தில் அந்த ஆடைகளை அணிந்து கொள்கிறார். பிறகு “உம்... நடம்மா... ஒன் மகனை காண்டிராக்டர்கிட்ட சொல்லி, வேலையில சேரு... ஒன் இறந்த மகன் நினைத்ததை இந்த மகன் செய்து முடிப்பான். உம், நடப்போமா தாயே...!”

     முதியவள், ஏதோ ஒன்று புரிந்தவள் போல முன்னால் நடக்கிறாள். சாமியாருக்கு கோவிலை விட்டுப் புறப்படும் போதும், காவியாடையைக் காணும்போதும் மனசு கனக்கிறது. உடனே அந்த கனத்தை, ஆடலரசின் தூக்கி நிற்கும் வலதுகால் தூக்கிப் பிடித்துக் கொள்கிறது! கீழே விழுந்து கிடக்கும் முயலவன், விழாமல் நிற்கும் முயலவன்களை நினைவுபடுத்துகிறான்.

     உரிமையும், கடமையும் ஒன்றான மானுடத் தேரில் ஏறி, புதிய திரிபுரங்களை அழித்து, ஆட்கொள்ளப் புறப்பட்டவர்போல், ராமையா அந்த முதியவள் பின்னால் போய்க் கொண்டிருக்கிறார்.

(முற்றும்)



புதிய திரிபுரங்கள் : 1 2 3 4 5