கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்

இயற்றிய

மூவருலா

     மூவருலா உலா சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. விக்கிரம சோழன் (1118-1136), அவனது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் (1133-1150), பேரன் இரண்டாம் இராஜராஜ சோழன் (1146-1163) ஆகிய மூவரையும் புகழ்ந்து பாடியது. எனவே மூவருலா எனப்படுகிறது. விக்கிரம சோழன் உலா 342 கண்ணிகளையும், குலோத்துங்க சோழன் உலா 387 கண்ணிகளையும், இராசராச சோழன் உலா 391 கண்ணிகளையும் உடையன. இவை அனைத்தும் கண்ணி வகையைச் சேர்ந்தவை (கலிவெண்பாவில் ஒரே எதுகை வருபவை). சோழர் குலச்சிறப்பு, அரசர் பெருமை, பள்ளி எழுதல், அழகு செய்தல், யானையின் மீது அமர்தல், உடன் வருவோர், அவர்கள் கூற்று, ஏழுவகைப் பருவ மகளிரின் அழகு, உணர்ச்சிகள், விளையாட்டுகள், காமுறுதல், பேசுதல் போன்ற செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்நூலின் பகுதிகளான மூன்று உலாக்களும் தனி நூல்களாகவும் கருதப்படுகின்றன.

     மூவருலாவின் ஆசிரியர் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர். இவர் சோழவள நாட்டில் தஞ்சை ஒட்டங்காடு என்ற இடத்திற்கு அருகில் உள்ள மலரி என்னும் ஊரில் பிறந்தவர். இவர் தந்தையார் சிவசங்கர பூபதி. தாயார் வண்டார் பூங்குழலி.

     ஒட்டக்கூத்தருடைய இயற்பெயர் கூத்தர் என்பதாகும். கலைமகளை வழிபட்டு ஈட்டி எழுபது என்ற நூலைப் பாடி, வெட்டப்பட்ட தலைகள் ஒட்டி உயிர் பெறுமாறு பாடியதால் ஒட்டக்கூத்தர் என்று அழைக்கப் பெற்றார் என்றும், விக்கிரம சோழன் தன்மீது பாடிய உலாவில் உள்ள ஒரு கண்ணியை ஒட்டிச் செய்யுள் இயற்றும்படி கேட்க, உடன் ஒட்டிச் செய்யுள் பாடியமையால் ஒட்டக்கூத்தர் எனப் பெற்றார் எனவும் சிலர் கூறுவர். கூத்தர் என்பது இவரின் இயற்பெயர் என்றும், ஒட்டம் என்பது இடத்தைப் பொருத்து வந்ததென்றும் ஆய்வாளர் சொல்லுவர். சோழ மன்னர் மூவருக்கும் அரசவைப் புலவராக இருந்தவர். இம்மூவருள் ஒருவன் இவருக்கு அரிசிலாற்றங்கரையில் ஒரு ஊரையே கொடுத்தான். இது கூத்தனூர் என வழங்கப்பெறுகிறது. இவ்வாறு தமிழகமெங்கும் பல ஊர்கள் இவர் பெயரில் திகழ்கின்றன. இவர் அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டி எழுபது, காங்கேயன் நாலாயிரக் கோவை, குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், காளக்கவி என்றும் அழைக்கப் பெற்றார்.

விக்கிரம சோழன் உலா

     விக்கிரமசோழன் உலாவில் உள்ள கண்ணிகள் 342 ஆகும். முதல் 23 கண்ணிகள் சோழர் குலம் தோன்றிய காலம் தொட்டு வழிவழியாக ஆண்ட மன்னர்களில் சிறந்தோர்களை எடுத்துக்கூறுகின்றன. 24 முதல் 27 வரை உள்ள கண்ணிகள் முதற்குலோத்துங்கன் சிறப்பும், செயலும் கூறுகின்றன. 28 முதல் 35 வரை உள்ள கண்ணிகளில் விக்கிரம சோழன் பிறப்பும், சிறப்பும், ஆட்சி புரியும் ஆண்மையும் பிறவும் கூறப்படுகின்றன. பின்னர், பள்ளியெழுச்சி, நீராடல், தெய்வ வணக்கம், கொடை, அணி புனைதல், உலாவிற்குப் புறப்படல் ஆகியன 52 கண்ணிகள் வரை கூறப்படுகின்றன. பின் 64 கண்ணிகள் வரை பட்டத்து யானையின் சிறப்புப் பலவாறாகப் பேசப்படுகிறது. யானை மீதமர்ந்து பவனி வருவதும் உடன் வருவோர் தொகையும் 90 கண்ணிகள் வரை தொடர்ந்து கூறப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பேதை (113-133), பெதும்பை (134-162), மங்கை (163-192), மடந்தை (193-227), அரிவை (228-262), தெரிவை (263-305), பேரிளம்பெண் (305-327) ஆகிய ஏழு பருவப் பெண்களின் வனப்பும் பண்பும் செயல்களும் காதலும் மயக்கமும் முறையே கூறப்படுகின்றன. பின் தோழியர் பலர் ஏங்கி நின்று தம் தலைவியைப் புரக்குமாறு வேண்ட, விக்கிரம சோழன் உலாப் போந்தான் என விக்கிரம சோழன் உலா நிறைவு பெறுகிறது.

     இந்நூல் கலிவெண்பா என்னும் பாவினால் அமைந்தது. வெண்டளை பெற்று, இரண்டாமடி தனிச்சொல் பெற்று, முற்றுப்பெறுகின்றது. அடிதோறும் மூன்றாம் சீரிலாவது நான்காம் சீரிலாவது மோனை இடம் பெற்றுள்ளது. எதுகையும் மோனையும் இல்லாத கண்ணிகள் இந்நூலில் எங்கணும் இல்லை.

     விக்கிரமசோழன், இராசகேசரி முதற்குலோத்துங்கனுக்கும் மதுராந்தகிக்கும் பிறந்த எழுவரில் ஒருவன். இவனுடன் பிறந்தோர் இரண்டாம் இராசராசன், வீரசோழன், சோழகங்கன் ஆகிய மூவரே. மற்றை மூவர் பெண்மக்களாவர். எழுவரில் இவனே இளையோன் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இம்மன்னன் கி.பி. 1118-ஆம் ஆண்டில் முடி சூடி அரசு கட்டில் ஏறினான். கி.பி. 1122 வரை தந்தையுடன் இருந்து ஆட்சி புரிந்தான்.

     இம்மன்னன் அரசு புரியும் காலத்தில் வடஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில் வெள்ளக்கேடு நேர்ந்த காரணத்தால் ஊர்ப்பொது நிலங்களை விற்று அரசாங்கவரி செலுத்தப்பட்டது என அறிகிறோம். கல்வெட்டு ஒன்றில் இவ்வெள்ளக்கொடுமை நிகழ்ந்தது பொறிக்கப்பட்டுள்ளது.

     இவன் ஆட்சிக்காலம் முழுவதும் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராய் அமைந்திருந்தது. தில்லைக்கோயில் திருப்பணிகள் விக்கிரம சோழனது பத்தாம் ஆட்சியாண்டில் செய்யப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளன.

சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக்
கார்தந்த வுந்திக் கமலத்துப் - பார்தந்த 1

ஆதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன்
காதற் குலமைந்தன் காசிபனும் - மேதக்க 2

மையறு காட்சி மரீசியு மண்டிலஞ்
செய்ய தனியாழித் தேரோனும் - மையல்கூர் 3

சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்
மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத் 4

தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய 5

மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்
போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக் 6

கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்
தேற வழக்குரைத்த செம்பியனும் - மாறழிந் 7

தோடி மறலி யொளிப்ப முதுமக்கட்
சாடி வகுத்த தராபதியும் - கூடார்தம் 8

தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில்
வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் - ஆங்குப் 9

பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர்
குலமகளைக் கைப்பிடித்த கோவும் - உலகறியக் 10

காக்குஞ் சிறபுறவுக் காகக் களிகூர்ந்து
தூக்குந் துலைபுக்க தூயோனும் - மேக்குயரக் 11

கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியக்
தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும் - தெள்ளருவிச் 12

சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப்
பொன்னிக் கரைகண்ட பூபதியும் -இன்னருளின் 13

மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும் -மீதெலாம் 14

எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று
புண்கொண்ட வென்றிப் புரவலனும் - கண்கொண்ட 15

கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம்
காதலாற் பொன்வேய்ந்த காவலனும் - தூதற்காப் 16

பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோனும் - தண்டேவிக் 17

கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியனும் - வங்கத்தை 18

முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி
செற்ற தனியாண்மைச் சேவகனும் - பற்றலரை 19

வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும் - அப்பழநூல 20

பாடவரத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்
ஆடவரப் பாய லமைத்தோனும் - கூடல 21

சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த
துங்கமத யானை துணித்தோனும் - அங்கவன்பின் 22

காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள்
பூவலய முற்றும் புரந்ததற்பின் - மேவலர்தம் 23

சேலைத் துரந்துசிலையைத் தடிந்திருகால்
சாலைக் களமறுத்த தண்டினான் - மேலைக் 24

கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண்
டடல்கொண்ட மாராட் ரானை - உடலை 25

இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி - அறத்திகிரி 26

வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும்
ஆரிற் பொலிதோ ளபயற்குப் - பார்விளங்கத் 27

தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை
மூன்று முரசு முகின்முழங்க - நோன்றலைய 28

மும்மைப் புவனம் புரக்க முடிகவித்துச்
செம்மைத் தனிக்கோ றிசையளப்பத் - தம்மை 29

விடவுட் படுத்து விழுக்கவிகை யெட்டுக்
கடவுட் களிறு கவிப்பச் - சுடர்சேர் 30

இணைத்தார் மகுட மிறக்கி யரசர்
துணைத்தா ளபிடேகஞ் சூடப் - பணைத்தேறு 31

நீராழி யேழு நிலவாழி யேழுந்தன்
போராழி யொன்றாற் பொதுநீக்கிச் - சீராரும் 32

மேய் திகிரி விரிமே கலையல்குற்
றூய நிலமடந்தை தோள்களினும் - சாயலின் 33

ஓது முலகங்க ளேழுங் தனித்துடைய
கோதில் குலமங்கை கொங்கையினும் - போதில் 34

நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும்
உறைகின்ற நாளி லொருநாள் - அறைகழற்காற் 35

றென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு
தென்னர் மலையாரச் சேறணிந்து - தென்னர் 36

வரவிட்ட தென்ற லடிவருட வாட்கண்
பொரவிட்ட பேராயம் போற்ற - விரவிட்ட 37

நித்திலப் பந்தர்க்கீழ் நீணிலாப் பாயலின்மேல்
தொத்தலர் மாலைத் துணைத்தோளும் - மைந்தடங் 38

கண்ணு முலையும் பெரிய களியன்னம்
எண்ணு முலகங்க ளேழுடைய - பெண்ணணங்கு 39

பெய்த மலரோதிப் பெண்சக்ர வர்த்தியுடன்
எய்திய பள்ளி யினிதெழுந்து - பொய்யாத 40

பொன்னித் திருமஞ் சனமாடிப் பூசுரர்கைக்
கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை 41

மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலிப்
பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் - கறைக்களத்துச் 42

செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை
முக்கட் கனியை முடிவணங்கி - மிக்குயர்ந்த 43

அலங்காரங்கள் செய்துகொள்ளுதல்

தானத் துறைமுடித்துச் சாத்துந் தகைமையன
மானக் கலன்கள் வரவருளித் - தேன்மொய்த்துச் 44

சூழு மலர்முகத்துச் சொன்மா மகளுடனே
தாழு மகரக் குழைதயங்க - வாழும் 45

தடமுலைப் பார்மடந்தை தன்னுடனே தோளிற்
சுடர்மணிக் கேயூரஞ் சூழப் - படரும் 46

தணிப்பில் பெருங்கீர்த்தித் தைய லுடனே
மணிக்கடகங் கையில் வயங்கப் - பிணிப்பின் 47

முயங்குந் திருவுடனே முந்நீர் கொடுத்த
வயங்கு மணிமார்பின் மல்க - உயங்கா 48

அருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனே
மருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்பப் - பொருந்திய 49

அண்ணற் படிவத் தரும்பே ரணியணிந்து
வண்ணத் தளவில் வனப்பமைந்து - கண்ணுதலோன் 50

காமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகு
தாம முடிவணங்கத் தந்தனைய - காமருபூங் 51

பட்டத்து யானை

கோலத் தொடும்பெயர்ந்து கோயிற் புறநின்று
காலத் ததிருங் கடாக்களிறு - ஞாலத்துத் 52

தானே முழங்குவ தன்றித் தனக்கெதிர்
வானே முழங்கினுமவ் வான்றடவி - வானுக் 53

கணியு மருப்பு மடற்கையு மின்மை
தணியும் யமராச தண்டம் - தணியாப் 54

பரிய பொருங்கோ டிணைத்துப் பணைத்தற்
கரிய தொருதானே யாகிக் - கரிய 55

மலைக்கோ டனைத்து மடித்திடியக் குத்தும்
கொலைக்கோட்டு வெங்கால கோபம் - அலைத்தோட 56

ஊறு மதந்தனதே யாக வுலகத்து
வேறு மதம்பொறா வேகத்தால் - கூறொன்றத் 57

தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும்
வாங்கிப் பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய 58

கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன்
முற்றப் பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற 59

வருத்த மறமறந்து மாதிரத்து வேழம்
பருத்த கடாந்திறந்து பாயப் - பெருக்கத் 60

துவற்று மதுரச் சுவடிபிடித் தோடி
அவற்றி னபரங்கண் டாறி - இவற்றை 61

அளித்தன னெங்கோமா னாதலா லின்று
களித்தன வென்றுவக்குங் காற்று - நௌித்திழிய 62

வேற்றுப் புலத்தை மிதித்துக் கொதித்தமரில்
ஏற்றுப் பொருமன்ன ரின்னுயிரைக் - கூற்றுக் 63

கருத்து மயிரா பதநின் றதனை
இருத்தும் பிடிபடியா வேறித் - திருத்தக்க 64

கொற்றக் கவிகை நிழற்றக் குளிர்ந்திரட்டைக்
கற்றைக் கவரியிளங் காலசைப்ப - ஒற்றை 65

வலம்புரி யூத வளைக்குல மார்ப்ப
சிலம்பு முரசஞ் சிலம்ப - புலம்பெயர்ந்து 66

வாட்படை கொட்ப மறவன் னவர்நடுங்கக்
கோட்புலிக் கொற்றக் கொடியோங்கச் -சேட்புலத்துத் 67

உடன் வருவோர்

தென்னரு மாளுவருஞ் சிங்களருந் தேற்றுதகை
மன்னருந் தோற்க மலைநாடு - முன்னம் 68

குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி
மலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல் 69

ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள்
பார்க்கு மதிமந்த்ர பாலகரிற் - போர்க்குத் 70

தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடக்
கொடுக்கும் புகழ்முனையர் கோனும் - முடுக்கரையும் 71

கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும்
கொங்கரையு மேனைக் குடகரையும் - தங்கோன் 72

முனியும் பொழுது முரிபுருவத் தோடு
குனியுஞ் சிலைச்சோழ கோனும் - சனபதிதன் 73

தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர்
வாளும் வலியு மதியமைச்சும் - நாளுமா 74

மஞ்சைக் கிழித்து வளரும் பொழிற்புரிசைக்
கஞ்சைத் திருமறையோன் கண்ணனும் - வெஞ்சமத்துப் 75

புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்க
ஒல்லாத கூற்ற முயிர்வாங்கப் - புல்லார்வம் 76

தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க
வாங்கு வரிசிலைக்கை வாணனும் - வேங்கையினும் 77

கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும்
ஓடா விரட்டத்து மொட்டத்தும் - நாடா 78

தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக்
கொடியெடுத்த காலிங்கர் கோனும் - கடியரணச் 79

செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன்
கம்பக் களியானைக் காடவனும் - வெம்பிக் 80

கலக்கிய வஞ்சக் கலியதனைப் பாரில்
விலக்கிய வேணாடர் வேந்தும் - தலைத்தருமம் 81

வாரிக் குமரிமுதன் மந்தா கினியளவும்
பாரித் தவனனந்த பாலனும் -பேரமரில் 82

முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலும்
மட்டித்த மால்யானை வத்தவனும் - அட்டையெழக் 83

காதிக் கருநாடர் கட்டரணங் கட்டழித்த
சேதித் திருநாடர் சேவகனும் - பூதலத்து 84

முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்
கட்டிய காரானை காவலனும் - ஒட்டிய 85

மான வரச ரிரிய வடகலிங்கத்
தானை துணித்த வதிகனும் - மீனவர்தம் 86

கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன்
வாட்டார் மதயானை வல்லவனும் - மோட்டரணக் 87

கொங்கை குலைத்துக் குடகக் குவடிடித்த
செங்கைக் களிற்றுத் திகத்தனும் - அங்கத்து 88

வல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும்
வில்லவனுங் கேரளனு மீனவனும் - பல்லவனும் 89

என்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர்
முன்னு மிருமருங்கு மொய்த்தீண்டப் - பன்மணிசேர் 90

குழாங்கள்

சோதி வயிர மடக்குஞ் சுடர்த்தொடியார்
வீதி குறுகுதலு மேலொருநாள் - மாதவத்தோன் 91

சார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்த
பூந்துவரை யந்தப் புரம்போன்றும் - ஏந்திப் 92

பரக்குங் கலையல்குற் பாவையரே யாணை
புரக்குந் திருநாடு போன்றும் - வரக்கருதா 93

ஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன்
சேனை திரண்ட திரள்போன்றும் - கானலங் 94

கண்டன் மணற்குன்றத் தன்னக் கணம்போன்றும்
கொண்டலின் மின்னுக் குழாம்போன்றும் - மண்டும் 95

திரைதொறுந் தோன்றுந் திருக்குழாம் போன்றும்
வரைதொறுஞ் சேர்மயில்கள் போன்றும் - விரைவினராய் 96

இந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பிச்
சிந்தை பரப்பித் தெருவெங்கும் - வந்தீண்டி 97

உத்தி சுடர வொளிமணிச் சூட்டெறிப்பப்
பத்தி வயிரம் பரந்தெறிப்ப - முத்தின் 98

இணங்கு மமுத கலசங்க ளேந்தி
வணங்கு தலையினராய் வந்து -கணங்கொண்டு 99

பார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்பக் கிஞ்சுகவாய்
கூர்க்கு மெயிறுவெறுங் கோளிழைப்ப - வேர்க்க 100

வரைகொ ணெடுமாடக் கீணிலையின் மல்கி
உரக வரமகளி ரொப்பார் - விரல்கவரும் 101

வீணையும் யாழுங் குழலும் விசிமுழவும்
பாணி பெயர்ப்பப் பதம்பெயர்த்துச் -சேணுயர் 102

மஞ்சிவரும் வெண்பளிக்கு மாடத் திடைநிலையில்
விஞ்சையர் மாத ரெனமிடைவார் - அஞ்சனக் 103

கண்ணிற் சிறிது மிமையாத காட்சியும்
மண்ணிற் பொருந்தா மலரடியும் - தண்ணென்ற 104

வாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகு
வீடா நிலாமுற்ற மேனிலையிற் - கூடி 105

உருவி னொளியி னுணர்வி னுரையிற்
பொருவி லரமகளிர் போல்வார் - அருகணைந்து 106

குழாங்களின் கூற்று

சீரள வில்லாத் திருத்தோ ளயன்படைத்த
பாரள வல்ல பணைப்பென்பார் - பாருமின் 107

செய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோ
வைய முடையபிரான் மார்பென்பார் - கையிரண்டே 108

ஆனபோ தந்த முருகவே ளல்லனிவன்
வேனில்வேள் கண்டீ ரெனமெலிவார் - யானெண்ணும் 109

எண்ணுக் கிசைய வருமே யிவனென்பார்
கண்ணிற் கருணைக் கடலென்பார் - மண்ணளிக்கும் 110

ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை
பாதியே யன்றா லெனப்பகர்வார் - தாதடுத்த 111

கொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல்
செங்கை குவிப்பார் சிலர்செறிய - அங்கொருத்தி 112

பேதை

வந்து பிறந்து வளரு மிளந்திங்கள்
கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து - பைந்தழைத் 113

தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல்
வாகை புனைய வளர்கரும்பு - கோகுலத்தின் 114

பிள்ளை யிளவன்னப் பேடை பிறந்தணிய
கிள்ளை பவளங் கிளைத்தகிளை - கள்ளம் 115

தெரியாப் பெருங்கட் சிறுதேற றாயர்ப்
பிரியாப் பருவத்துப் பேதை - பரிவோடு 116

பாவையு மானு மயிலும் பசுங்கிளியும்
பூவையு மன்னமும் பின்போதக் - காவலன் 117

பொன்னிப் புகார்முத்தி னம்மனையுந் தென்னாகை
நன்னித் திலத்தி னகைக்கழங்கும் - சென்னிதன் 118

கொற்றைக் குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகை
கற்கைக்கு வேண்டுவன கைப்பற்றிப் - பொற்கொடியார் 119

வீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண்
ஆதி யுகம்வந் தடிக்கொள்ள - மேதினிமேல் 120

ஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன்
மூன்று முரச முகின்முழங்க - வான்றுணைத் 121

தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுது
தாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் - சேயோன் 122

படியின் மதியும் பகலவனுந் தோற்கும்
முடியி லொருகாலு மூளா - வடிவில் 123

மகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும்
நெகிழ்ந்த திருநோக்கி னேரா - முகிழ்ந்து 124

சிரிக்குந் திருப்பவளச் சேயொளியூ டாடா
விரிக்குந் திருநிலவின் வீழா - பரிக்கும் 125

உலகம் பரவுந் திருப்புருவத் தோரா
திலக முகாம்புயத்துச் சேரா - பலவும் 126

திசையை நெருக்குந் திருத்தோளிற் செல்லா
இசையுந் திருமார்பத் தெய்தா - வசையிலாக் 127

கைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறா
மெய்ம்மலர்ப் பேரொளியின் மீதுறா - அம்மகள் 128

கண்ணு மனமுங் கழுநீர்க் குலமுழுதும்
நண்ணுந் தொடையன்மே னாட்செய்ய - உண்ணெகிழா 129

வம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கித்
தம்மின்க ளென்றுரைப்பத் தாயரும் - அம்மே 130

பெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமே
திருமாலை தாவென்று செல்வேம் - திருமாலை 131

யாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்னத்
தேங்கொள்ளு மின்சொற் சிறியாளும் - ஆங்குத்தன் 132

மார்வத்துக் கண்ணினீர் வாரப் பிறர்கொள்ளும்
ஆர்வத்துக் கன்றே யடியிட்டாள் - சேர 133

இருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும்
அருத்தி யறவே யயர்த்தாள் - ஒருத்தி 134

பெதும்பை

மழலை தனது கிளிக்களித்து வாய்த்த
குழலி னிசைக்கவர்ந்து கொண்டாள் - நிழல்விரவு 135

முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின்
பின்னர் நகைகொண்ட பெற்றியாள் - கன்னி 136

மடநோக்கந் தான்வளர்த்த மானுக் களித்து
விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் - சுடர்நோக்கும் 137

தானுடைய மெய்ந்நுடக்கந் தன்மா தவிக்களித்து
வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் - பூநறும் 138

பாவைகள் பைங்குர வேந்தப் பசுங்கிளியும்
பூவையு மேந்தும் பொலிவினாள் - மேவும் 139

மடநடை யன்னப் பெடைபெறக் கன்னிப்
பிடிநடை பெற்றுப் பெயர்வாள் - சுடர்கனகக் 140

கொத்துக் குயின்ற கொடிப்பவள பந்தத்தின்
முத்துப் பொதியுச்சி முச்சியாள் - எத்திறத்தும் 141

வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல்
மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் - நேரொத்த 142

கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற்
பூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள் - பாங்கியரும் 143

கனாக் கூறுதல்

தாயரும் போற்றாமே தானே துயிலெழுந்து
பாயல் புடைபெயர்ந்து பையச்சென் - றியாயே 144

தளரு மிடையொதுங்கத் தாழுங் குழைத்தாய்
வளரு மொருகுமரி வல்லி - கிளரும் 145

கொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி
எழுந்து கிளைகலிப்ப வேறித் - தொழுந்தகைய 146

கொங்குடைய பொன்னடருஞ் சென்னிக் கொழுங்கோங்கின்
பங்குடைய மூரிப் பணையணைந்து - தங்குடைய 147

வண்டு முரல மணநாற வைகுவது
கண்டு மகிழ்ந்தேன் கனவிலெனக் - கொண்டு 148

வருக வருக மடக்கிள்ளை முத்தம்
தருக தருகவெனத் தாயர் - பெருக 149

விரும்பினர் புல்லி விரைய முலைவந்
தரும்பின வாகத் தணங்கே - பெரும்புயங்கள் 150

புல்லி விடாத புதுவதுவை சென்னியுடன்
வல்லி பெறுதி யெனவழுத்தும் -எல்லை 151

அரச னபய னகளங்க னெங்கோன்
புரசை மதவரைமேற் போத - முரசம் 152

தழங்கு மறுகிற் றமரோடு மோடி
முழங்கு முகின்மாட முன்றிற் - கொழுங்கயற்கட் 153

பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு
மின்னென வந்து வௌிப்பட்டு - மன்னருயிர் 154

உண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கைச்
செண்டாற் கிரிதிரத்த சேவகனைத் - தண்டாத 155

வேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளைச்
சோகங் கெடுத்தணைத்த தோளானை - ஆகத்துக் 156

கொங்கை பிரியாத வீறோடுங் கேகானக
மங்கை பிரியாத மார்பானை - அங்கமலக் 157

கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
செய்ய கரிய திருமாலைத் - தையலும் 158

கண்டகண் வாங்காள் தொழமுகிழ்ந்த கைவிடான்
மண்டு மனமீட்கு மாறறியாள் - பண்டறியாக் 159

காமங் கலக்கக் கலங்கிக் குழல்சரியத்
தாமஞ் சரியத் தனிநின்றாள் - நாமவேற் 160

சேரனு மீனவனுஞ் சேவிப்பச் செம்பியரில்
வீரனு மல்வெல்லை விட்டகன்றான் - மாரனும் 161

தக்குத் தகாதாளை யெய்து தரைப்படுத்தப்
புக்குத் தொடைமடக்கிப் போயினான் - மைக்குழல் 162

மங்கைப் பருவத் தொருத்தி மலர்பொதுளுங்
கங்கைப் புளினக் களியன்னம் - எங்கோனை 163

மன்னனை மன்னர் பிரானை வரோதயனை
தென்னனை வானவனைச் செம்பியனை- முன்னொருநாள் 164

கண்ட பெதும்பைப் பருவத்தே தன்கருத்தாற்
கொண்ட பரிவு கடைக்கூட்ட - புண்டரிகச் 165

செய்ய வடிமுதலாச் செம்பொன் முடியளவும்
மைய லகல மனத்திழைத்துக் - கையினால் 166

தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம்
காட்டுங் கனவு தரக்கண்டு -நாட்டங்கொண் 167

டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்றுத்
தாதொன்றுந் தொங்கற் சயதுங்கன் - வீதி 168

வருகின்றா னென்று மணியணிகள் யாவும்
தருகென்றாள் வாங்கித் தரித்தாள் - விரிகோதை 169

சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சே
றாடினா டன்பே ரணியணிந்தாள் - சேடியர் 170

மங்கை தன்னையே ஐயுறுதல்

காட்டும் படிமக் கமலத்துக் கமலத்தை
ஓட்டும் வதனத் தொளிமலர்ந்து - கேட்டு 171

விடைபோ மனங்கன்போல் வேல்விழிக டாமும்
படைபோய் வருவனபோற் பக்கம் - கடைபோய் 172

மறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி
எறிக்குங் குழைக்காதிற் கேற்றும் - நெறிக்கும் 173

அளக முதலாக வைம்பாற் படுத்த
வளர்கருங் கூந்தன் மலிந்துங் - கிளர 174

அரியன நித்திலத்தி னம்பொற் றோடித்தோள்
பரியன காம்பிற் பணைத்தும் - தெரியற் 175

சுவடு படுகளபத் தொய்யில்சூழ் கொங்கை
குவடு படவெழுச்சி கொண்டும் - திவடர 176

முந்துங் கலையல்குன் மூரித் தடமகன்றும்
நொந்து மருங்கு னுடங்கியும் - வந்து 177

மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ
அடையுந் தனதுருக்கண் டஞ்சிக் - கொடையனகன் 178

பண்டறியு முன்னைப் பருவத் துருவத்துக்
கண்டறியு மவ்வடிவு காண்கிலேன் - பண்டறியும் 179

முன்னை வடிவு மிழந்தேன் முகநோக்கி
என்னை யறிகலன்யா னென்செய்கேன் - தன்னை 180

வணங்கி வருவ தறிவ னெனவந்
திணங்கு மகளி ரிடைநின் - றணங்கும் 181

இறைவ னகளங்க னெங்கோன் குமரித்
துறைவ னிருபகுல துங்கன் - முறைமையால் 182

காக்குங் கடல்கடைந்த கைம்மலரு முந்திமலர்
பூக்கு முலகளந்த பொற்கழலும் - நோக்கும் 183

திருக்கொள்ளு மார்பமுந் தெவ்வேந்த ரெல்லாம்
வெருக்கொள்ளு மூரித்தோள் வெற்பும் - உருக்கும் 184

மகரக் குழைக்காது மாதரார் மாமை
நுகரப் புடைபெயரு நோக்கும் - துகிரொளியை 185

வௌவிய கோல மணிவாயு மெப்பொழுதும்
செவ்வி யழியாத் திருமுகமும் - எவ்வுருவும் 186

மாறுபடா வண்ணமுந்தன் வண்ணப் படிவத்து
வேறு படுவனப்பு மெய்விரும்பித் -தேறிப் 187

பிறையாம் பருவத்துப் பேருவகை யாம்பல்
நிறையா மதிக்கு நெகிழ்ந்தாங் - கிறைவனைக் 188

கண்டு மனமு முயிருங் களிப்பளவிற்
கொண்டு பெயர்ந்து கொல்யானை - பண்டு 189

நனவு கிழியிற் பகற்கண்டு நல்ல
கனவு தரவிரவிற் கண்டு - மனமகிழ்வாள் 190

தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும்
நாட்ட முறங்கா மையுநல்க - மீட்டுப் 191

பெயர்ந்தா டமர்தம் பெருந்தோள் களில்வீழ்ந்
தயர்ந்தா ளவணிலையீ தப்பாற் - சயந்தொலைய 192

மடந்தை

வெந்து வடிவிழந்த காமன் விழிச்சிவப்பு
வந்து திரண்டனைய வாயினாள் - அந்தமில் 193

ஓலக் கடலேழு மொன்றா யுலகொடுக்கும்
காலக் கடையனைய கட்கடையாள் - ஞாலத்தை 194

வீட்டி வினைமுடிக்க வெங்கால தூதுவர்கள்
கோட்டி யிருக்குங் குவிமுலையாள் - நாட்ட 195

வடிவின் மருங்குலான் மாரனைப்போன் மேலோர்
முடிவு லுணர்வை முடிப்பாள் - கடிதோடிப் 196

போகா தொழியா திடையென்று போய்முடியல்
ஆகாமை கைவளரு மல்குலாள் - பாகாய 197

பந்தாடுதல்

சொல்லி யொருமடந்தை தோழியைத் தோள்வருந்தப்
புல்லி நிலாமுற்றம் போயேறி - வல்லிநாம் 198

சேடிய ரொப்ப வகுத்துத் திரள்பந்து
கோடியர் கண்டுவப்பக் கொண்டாடி - ஓடினால் 199

என்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான்
தன்மாலை வாங்கித் தருகென்று - மின்னனையான் 200

வட்டித் தளகமுங் கொங்கையும் வார்தயங்கக்
கட்டிக் கனபந்து கைப்பற்றி - ஒட்டிப் 201

பொருதிறத்துச் சேடியர்தம் போர்தொலையத் தானே
இருதிறத்துக் கந்துகமு மேந்திப் - பெரிதும் 202

அழுந்து தரளத் தவைதன்னைச் சூழ
விழுந்து மெழுந்து மிடைய - எழுந்துவரி 203

சிந்த விசிறு திரையி னுரையூடு
வந்த வனச மகளேய்ப்ப - முந்திய 204

செங்காந்த ளங்கை சிவக்குஞ் சிவக்குமென்
றங்காந்து தோள்வளைக ளார்ப்பெடுப்பத் - தங்கள் 205

நுடங்குங் கொடிமருங்கு னொந்தசைந்த தென்றென்
றடங்குங் கலாப மரற்றத் - தொடங்கி 206

அரிந்த குரலினவா யஞ்சீ றடிக்குப்
பரிந்து சிலம்பு பதைப்ப - விரிந்தெழும் 207

கைக்கோ விடைக்கோ கமல மலரடிக்கோ
மைக்கோல வோதியின்மேல் வண்டிரங்க - அக்கோதை 208

பந்தாடி வென்று பருதி யகளங்கன்
சந்தாடு தோண்மாலை தாவென்று - பைந்துகிற் 209

றானை பிடித்தலைக்கும் போதிற் றனிக்குடைக்கீழ்
யானைமேல் வெண்சா மரையிரட்டச் - சேனை 210

மிடையப் பவளமு நித்திலமு மின்ன
அடையப் பணிலங்க ளார்ப்ப - புடைபெயர 211

வார்ந்து மகர வயமீன் குலமுழுதும்
போந்து மறுகு புடைபிறழச் - சேர்ந்து 212

பதலை முழங்கப் பகட்டேற்றி விட்ட
மதலைகண் முன்னர் மலிய - விதலையராய்த் 213

தாழுந் தொழிலிற் கிளைபுரக்கத் தன்னடைந்து
வாழும் பரதர் மருங்கீண்ட - வீழுந்திக் 214

கன்னியு நன்மதையுங் கங்கையுஞ் சிந்துவும்
பொன்னியுந் தோயும் புகார்விளங்க - மன்னிய 215

செங்கோற் றியாக சமுத்திர நண்ணுதலும்
தங்கோ மறுகிற் றலைப்பட்டுத் - தங்களில் 216

ஒட்டிய வொட்ட முணராதே தோள்வளையும்
கட்டிய மேகலையுங் காவாதே - கிட்டித் 217

தொழுதா ளயர்ந்தா டுளங்கினாள் சோர்ந்தாள்
அழுதா ளொருதமிய ளானாள் - பழுதிலாக் 218

காக்குந் துகிலு மிலங்கு பொலன்கலையும்
போக்கு நிதம்பம் புனைகென்று - வீக்கும் 219

மணிக்கச்சுந் தம்முடைய வான்றூசுங் கொங்கை
பணிக்கக் கடைக்கண் பாரா - அணிக்கமைந்த 220

குன்றாத நித்திலக் கோவையும் பொன்னிறத்த
பொன்றாத பட்டும் புனைகென்று - நின்று 221

கொடுத்தன கொங்கைகளுங் கொண்டன தானும்
அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் -கடுத்துக் 222

கவரு மனங்கனுடன் கைகலந்த தன்றித்
தவரு முதுகிளவித் தாய - ரவரெங்கும் 223

கூசினார் சந்தம் பனிநீர் குழைத்திழைத்து
பூசினா ராலி பொழிந்தொழிந்தார் - வீசினார் 224

இட்டார் நிலவி லிளந்தென் றலுங்கொணர்ந்து
சுட்டார் குளரி தொகுத்தெடுத்தார் - விட்டாரோ 225

பள்ள மதனிற் படரும் பெரும்புனல்போல்
உள்ள முயிரை யுடன்கொண்டு -வள்ளல்பின் 226

ஓதை மறுகி லுடன்போன போக்காலிப்
பேதை நடுவே பிழைத்தொழிந்தாள் - மாதரில் 227

அரிவை

வாரி படுமமுத மொப்பாண் மதுகரஞ்சூழ்
வேரி கமழ்கோதை வேறொருத்தி - மூரித்தேர்த் 228

தட்டுஞ் சிறுகப் பெருகி மரகதத்தாற்
கட்டுங் கனபொற் கலாபாரம் - பட்டும் 229

துகிலுங் கரப்பச் சுடர்பரப்பக் கைபோய்
அகில்கின்ற வல்கு லரிவை - இகலி 230

ஒருக்கி மருங்குகடிந் தொன்றினைவந் தொன்று
நெருக்கிய மாமை நிரம்பித் - தருக்கி 231

இடங்கொண்டு மின்னுக் கொடியொன் றிரண்டு
குடங்கொண்டு நின்றதெனக் கூறத் - தடங்கொண் 232

டிணைத்துத் ததும்பி யிளையோர்க ணெஞ்சம்
பிணைத்துத் தடமுகட்டிற் பெய்து - பணைத்துப் 233

பெருமை யுவமை பிறங்கொலிநீர் ஞாலத்
தருமை படைத்ததனத் தன்னம் - கருமை 234

எறித்துக் கடைபோ யிருபுடையு மெல்லை
குறித்துக் குழையளவுங் கொண்டு -மறித்து 235

மதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள்
பதைத்து விழநிறத்திற் பட்டுத் - ததைத்த 236

கழுநீர் மலரின் கவினழித்து மானின்
விழிநீர்மை வாய்த்த விழியாள் - முழுதும் 237

நெறிந்து கடைகுழன்று நெய்த்திருண்டு நீண்டு
செறிந்து பெருமுருகு தேக்கி - நறுந்துணர் 238

வார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர்
சோர்ந்து மிசையசைந்த சோலையாய்ச் - சேர்ந்து 239

திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின்
பெருவிருந்து பேணுங் குழலாள் - பொருகளிற்றின் 240

வந்து மறுகி லொருநாண் மனுகுலத்தோன்
தந்த பெரிய தனிமைக்கண் - செந்தமிழ்க் 241

கோனே கவர்ந்தெம்மைக் கொண்டனன் வந்தெமக்குத்
தானே தரிற்றருக வென்பனபோல் - பூநேர் 242

இணைக்கையுந் தோளு மிடுதொடிக ளேந்தா
துணைக்கண் டுயிற்றத் துயிலா - மணிக்கூந்தல் 243

போது மறந்தும் புனையா பொலங்கச்சு
மீது படத்தரியா வெம்முலைகள் - சோதி 244

அடுக்குங் கனபொற் றுகில்பேணா தல்குல்
கொடுக்குங் தெருணெஞ்சு கொள்ளா - தெடுக்கும் 245

கருப்புச் சிலையனங்கன் கையம்பால் வீழும்
நெருப்புக் குருகி நிறைபோய் - இருப்புழிப் 246

பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி
ஆடிய தோகைக்கு மன்பின்றிக்- கூடிய 247

கிள்ளைக்குந் தம்மிற் கிளரு மிளவன்னப்
பிள்ளைக்குகு மாற்றான் பெயர்ந்துபோய்க் - கொள்ளை 248

பயக்கு மலர்க்குரவப் பந்தர்ப் படப்பை
நயக்கு மிளமரக்கா நண்ணி - வயக்களிற்று 249

மன்னன் குலப்பொன்னி வைகலு மாடுதிரால்
அன்னங்கா ணீரென் றழிவுற்றும் - சென்னி 250

பெருகும் புகாரடையப் பெற்றீரான் மற்றைக்
குருகுகா ளென்று குழைந்தும் - கருகிய 251

நீலக் குயிலினங்கா ணீர்போலுஞ் சோணாட்டுச்
சோலைப் பயில்வீ ரெனத்துவண்டும் - பீலிய 252

பேரியன் மஞ்ஞை பெறுதிராற் கொல்லியும்
நேரியுஞ் சேர வெனநெகிழ்ந்தும் - நேரியன் 253

தண்டுணர்ப்பே ராரம் பலகாலுந் தைவந்து
வண்டுகாள் வாழ்வீ ரெனமருண்டும் - தொண்டிக்கோன் 254

மன்றன் மலயத்து வாளருவி தோய்ந்தன்றே
தென்றல் வருவ தெனத்திகைத்தும் - நின்றயர்கால் 255

மன்னர்க்கு மன்னன் வளவ னகளங்கள்
முன்னர்ப் பணில முழங்குதலும் - மின்னிற்போய் 256

பேணுந் திருமடனு மென்றும் பிரியாத
நாணும் பெருவிருப்பா னல்கூரக் - காணுங்கால் 257

ஏய்ப்ப வெதிர்வந்து விரவி யுருவவொளி
வாய்ப்ப முகபங் கயமலர்ந்தாள் - போய்ப்பெருகும் 258

மீதா ரகலல்குல் வீழ்கின்ற மேகலையும்
போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் - சோதி 259

குழைய நடுவொடுக்குங் கொங்கையுந் தோளும்
பழைய படியே பணைத்தான் - பிழையாத 260

பொன்னித் துறைவன் பொலந்தார் பெறத்தகுவார்
தன்னிற் பிறரின்மை சாதித்தாள் - சென்னிக்குப் 261

பாராண் முலையாலும் பங்கயத்தா டோளாலும்
வாரா விருப்பு வருவித்தான் - ஓராங்கு 262

தெரிவை

கோது விரவாக் கொழும்பாகு கொய்தளிரீன்
போது புலராப் பொலங்கொம்பு - மீது 263

முயலா லழுங்கா முழுத்திங்கள் வானிற்
புயலா லழுங்காப் புதுமின் - இயல்கொண் 264

டெழுதாத வோவிய மேழிசைய வண்டு
கொழுதாத கற்பகத்தின் கொம்பு - முழுதும் 265

இருளாக் கலாபத் திளந்தோகை யென்றும்
தெருளாக் களியளிக்குந் தேறல் - பொருளால் 266

வருந்தக் கிடையாத மாணிக்கம் யார்க்கும்
அருந்தத் தெவிட்டா வமுதம் - திருந்திய 267

சோலைப் பசுந்தென்ற றூதுவர வந்தி
மாலைப் பொழுதுமணி மண்டபத்து - வேலை 268

விரிந்த நிலாமுன்றில் வீழ்மகரப் பேழ்வாய்
சொரிந்த பனிக்கற்றை தூங்கப் - பரிந்துழையோர் 269

பூசிய சாந்தங் கமழப் பொறிவண்டு
மூசிய மௌவன் முருகுயிர்ப்பத் - தேசிகப் 270

பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும்
சேர வினிதிருந்த செவ்விக்கண் - நேரியும் 271

தசாங்கம்

கோழியும் வேங்கையு முப்பணையுங் கோரமும்
பாழி யயிரா பதப்பகடும் - ஆழியான் 272

சூடிய வாரமு மாணையுஞ் சோணாடும்
காடு திரைத்தெறியுங் காவிரியும் - பாடுகென 273

கூன லியாழெடுத்தான் பாணன் கொதித்தெழுந்து
வேன லரசனுந்தன் வில்லெடுத்தான் - தேனியிர் 274

தந்திரி யாழ்ப்பாணன் றைவந்தான் றைவந்தான்
வெந்திறன் மாரனுந்தன் வில்லினாண் - முந்த 275

நிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன்
திறன்மதனு மம்பு தெரிந்தான் - விறலியொடும் 276

பாண னெருபாணி கோத்தான் பலகோத்தான்
தூணி தொலையச் சுளிந்துவேள் - மாண 277

இசைத்தன பாண னியாழ்ப்பாணி யெய்து
விசைத்தன வேனிலான் பாணி - விசைத்தெழுந்த 278

வீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ
வாணுதல் வீழா மதிமயங்காச் - சேணுலாம் 279

வாடை யனைய மலயா நிலந்தனையும்
கோடை யிதுவென்றே கூறினான் - நீடிய 280

வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி
நீரை யிதுவோ நெருப்பென்றான் - ஊரெலாம் 281

காக்குந் துடியை யழிக்குங் கணைமாரன்
தாக்கும் பறையென்றே சாற்றினாள் - சேக்கைதொறும் 282

வாழு முலகத் தெவரு மனங்களிப்ப
வீழு நிலவை வெயிலென்றாள் - கோழிக்கோன் 283

எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற
செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றான் - கங்குல் 284

புலருந் தனையும் புலம்பினா ளாங்குப்
பலரும் பணிந்து பரவக் - குலகிரிசூழ் 285

ஆழிப் புவன மடைய வுடையபிரான்
சூழிக் கடாயானை தோன்றுதலும் -யாழின் 286

யானையை நோக்கிக் கூறுதல்

இழைக்கு மிசைமுதலா மெப்பகைக்கு மாற்றா
துழைக்கு முயிர்தழைப்ப வோடிப் - பிழைத்னளாய் 287


முட்டுந் திகிரி கிரியின் முதுமுதுகிற்
கட்டுங் கடவுட் கடாயானை - யெட்டும் 288

தரிக்கு முலகந் தனிதரித்த கோனைப்
பரிக்கு மயிரா பதமே - செருக்கிப் 289

பொருந்த நினையாத போர்க்கலிங்க ரோடி
இருந்த வடவரைக ளெல்லாம் - திருந்தா 290

விதையம் பொருதழிந்த விந்தமே போலப்
புதைய நடந்த பொருப்பே - சிதையாாத 291

திங்கட் குலத்திற்குந் தெய்வப் பொதியிற்கும்
அங்கட் பழங்குமரி யாற்றிற்கும் - தங்கள் 292

படிக்கும் பொருநிருப பன்னகங்கள் வீழ
இடிக்குந் தனியசனி யேறே - கடிப்பமைந்த 293

யாம முரசா லிழந்த நிறைநினது
தாம முரசு தரப்பெற்றேன் - நாம 294

விடைமணி யோசை விளைத்தசெவிப் புண்ணின்
புடைமணி யோசைப் புலர்ந்தேன் - தடைமுலைமேல் 295

ஆறா மலயக்கா லட்டசூ டுன்செவியில்
மாறாப் பெருங்காற்றான் மாற்றினேன் - வேறாகக் 296

கூசும் பனித்திவலை கொண்டுபோ மென்னுயிர்நீ
வீசு மதத்திவலை யான்மீட்டேன் - மூசிய 297

காருலா மோதக் கடல்முழங்க வந்ததுயர்
நேரிலா நீமுழங்க நீங்கினேன் - பேரிரவில் 298

என்மே லனங்கன் பொரவந்த வின்னலெல்லாம்
நின்மே லன்கன்வர நீங்கினேன் - இன்னும் 299

கடைபோல வென்னுயிரைக் காத்தியேல் வண்டு
புடைபோகப் போதும் பொருப்பே - விடைபோய்நீ 300

ராட்டுந் தடங்கலக்கின் மாரற் கயில்வாளி
காட்டுந் தடமே கலக்குவாய் - கேட்டருளாய் 301

கார்நாணு நின்கடத்து வண்டொழியக் காமனார்
போர்நாணின் வண்டே புடைத்துதிர்ப்பாய் - பார்நாதன் 302

செங்கைக் கரும்பொழியத் தின்கைக் கனங்கனார்
வெங்கைக் கரும்பே விரும்புவாய் - எங்கட் 303

குயிரா யுடலா யுணர்வாகி யுள்ளாய்
அயிரா பதமேநீ யன்றே - பெயராது 304

நிற்கண்டா யென்றிரந்து நின்றா ணுதலாக
விற்கொண்ட பேரிளம்பெண் வேறொருத்தி - கொற்கையர்கோன் 305

பேரிளம் பெண்

மல்லற் புயத்தினகன் மால்யானைக் கைபோலக்
கொல்லத் திரண்ட குறங்கினாள் - எல்லையில் 306

கோடுங் கொலைகுயின்ற சேடன் குருமணிவேய்ந்
தாடும் படமனைய வல்குலான் - சேடியாய்த் 307

தம்மை யெடுக்கு மிடைகடிந்த தம்பழிக்குக்
கொம்மை முகஞ்சாய்த்த கொங்கையாள் - செம்மை 308

நிறையு மழகா னிகரழித்துச் செய்யாள்
உறையு மலர்பறிப்பா ளொப்பாள்ன் - நறைகமழும் 309

மாலை பலபுனைந்து மான்மதச் சாந்தெழுதி
வேலை தருமுத்த மீதணிந்து - சோலையில் 310

மானு மயிலு மனைய மடந்தையரும்
தானு மழகு தரவிருப்பத் - தேனிமிர் 311

ஊற விளம்பாளை யுச்சிப் படுகடுந்
தேறல் வழிந்திழிந்த செவ்விக்கண் - வேறாக 312

வாக்கி மடனிறைத்து வண்டு மதுநுரையும்
போக்கி யொருத்தி புகழ்ந்துகா - நோக்கி 313

வருந்திச் சிறுதுள்ளி வள்ளுகிரா வெற்றி
அருந்தித் தமர்மே லயர்ந்தாள் - பொருந்தும் 314

மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன்
நயக்கத் தகுங்கனவு நல்கும் - முயக்கத்து 315

மிக்க விழைவு மிகுகளிப்பு மத்துயிலும்
ஒக்க விகல வுடனெழுந்து - பக்கத்து 316

வந்து சுடரு மொருபளிக்கு வார்சுவரில்
தந்த தனதுநிழ றானோக்கிப் - பைந்துகிர்க் 317

காசுசூ ழல்குற் கலையே கலையாகத்
தூசு புடைபெயர்ந்து தோணெகிழ்ந்து - வாசஞ்சேர் 318

சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல்
ஆடிய சாந்தி னணிசிதைந்து - கூடிய 319

செவ்வாய் விளர்ப்பக் கருங்கண் சிவப்பூர
வெவ்வா ணுதலும் வெயரரும்ப - இவ்வாறு 320

கண்டு மகிழ்ந்த கனவை நனவாகக்
கொண்டு பலர்க்குங் குலாவுதலும் - வண்டுசூழ் 321

வேரிக் கமழ்கோதை வேறாகத் தன்மனத்திற்
பூரித்த மெய்யுவகை பொய்யாகப் - பாரித்த 322

தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன்
நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் 323

கண்டதுங் கெட்டேன் கனவை நனவாகக்
கொண்டது மம்மதுச்செய் கோலமே - பண்டுலகிற் 324

செய்த தவஞ்சிறிது மில்லாத தீவினையேற்
கெய்த வருமோ விவையென்று - கைதொழுது 325

தேறி யொருகாலுந் தேறாப் பெருமையல்
ஏறி யிரண்டா வதுமயங்கி - மாறிலாத் 326

தோழியர் தோண்மே லயர்ந்தாளத் தோழியரும்
ஏழுயர் யானை யெதிரோடி - ஆழியாய் 327

மாடப் புகாருக்கும் வஞ்சிக்குங் காஞ்சிக்கும்
கூடற்குங் கோழிக்குங் கோமானே - பாடலர் 328

சாருந் திகிரி தனையுருட்டி யோரேழு
பாரும் புரக்கும் பகலவனே - சோர்வின்றிக் 329

காத்துக் குடையொன்றா லெட்டுத் திசைகவித்த
வேத்துக் குலகிரியின் மேருவே - போர்த்தொழிலால் 330

ஏனைக் கலிங்கங்க ளேழனையும் போய்க்கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே - மானப்போர் 331

இம்ப ரெழுபொழில் வட்டத் திகல்வேந்தர்
செம்பொன் மவுலிச் சிகாமணியே - நம்பநின் 332

பாரிற் படுவன பன்மணியு நின்கடல்
நீரிற் படுவன நித்திலமும் - நேரியநின் 333

வெற்பில் வயிரமும் வேந்தநின் சோணாட்டுப்
பொற்பின் மலிவன பூந்துகிலும் - நிற்பணியக் 334

கொண்டா யிவடனது கொங்கைக் கொழுஞ்சுணங்கும்
தண்டா நிறையுந் தளிர்நிறமும் - பண்டைத் 335

துயிலுங் கவர்ந்ததுநின் தொல்குலத்து வேந்தர்
பயிலுந் திருநூற் படியோ - புயல்வளவ 336

மன்னிய தொண்டை வளநாடு வாளியும்
பொன்னி வளநாடு பூஞ்சிலையும் - கன்னித் 337

திருநாடு தேருங் குறையறுப்பச் செய்தால்
திருநாண் மடமகளிர் தம்மை - ஒருநாளவ் 338

வேனற் கரசன் விடுமே யவன்சினமிப்
பானற்கண் ணல்லா ளுயிர்ப்பரமே - ஆனக்கால் 339

குன்றே யெனத்தகுநின் கோபுரத்திற் றூங்குமணி
ஒன்றே யுலகுக் கொழியுமே - என்றினைய 340

கூறி வணங்கிடு மிவ்வளவுங் கோதையர்மேற்
சீறி யனங்கன் சிலைவளைப்ப - மாறழியக் 341

குத்துங் கடாக்களிற்றுப் போந்தான் கொடைச்சென்னி
உத்துங்க துங்க னுலா. 342

வெண்பா

கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
செய்ய கரிய திருமாலே - வையம்
அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி
வளர்ந்தாய் தளர்ந்தாளிம் மான்.

விக்கிரம சோழனுலா முற்றிற்று.


மூவருலா : 1 2 3