http://www.chennailibrary.com


சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி ...

14. மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்

நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்
அளப்பு அரியையே;
நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;
போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு 5
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப!
கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே; 10
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
நோன் புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை!
வான் உறை மகளிர், நலன், இகல் கொள்ளும்;
வயங்கு இழை கரந்த, வண்டு படு கதுப்பின்;
ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ! 15
பல் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படை ஏர் உழவ! பாடினி வேந்தே!
இலங்குமணி மிடைந்த பொலங் கலத் திகிரிக்
கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின்
முன் திணை முதல்வர் போல, நின்று நீ 20
கெடாஅ நல் இசை நிலைஇத்
தவாஅலியரோ, இவ் உலகமோடு உடனே!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சான்றோர் மெய்ம்மறை

15. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்

யாண்டு தலைப்பெயர, வேண்டு புலத்து இறுத்து,
முனை எரி பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு-
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி,
நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப- 5
கொடி விடு குரூஉப் புகை பிசிர, கால் பொர,
அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து,
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்,
வெண் பூ வேளையொடு பைஞ் சுரை கலித்து,
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறைமுதல், 10
சிவந்த காந்தள் முதல் சிதை, மூதில்,
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பின், புலம் சிதை அரம்பின்,
அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்த நின்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே: 15
கடலவும், கல்லவும், யாற்றவும், பிறவும்,
வளம் பல நிகழ்தரு நனந் தலை நல் நாட்டு,
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்,
கொடி நிலற் பட்ட பொன்னுடை நியமத்து,
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் 20
வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை!
தார் அணிந்து எழிலிய, தொடி சிதை மருப்பின்,
போர் வல் யானைச் சேரலாத!
'நீ வாழியர், இவ் உலகத்தோர்க்கு' என,
உண்டு உரை மாறிய, மழலை நாவின், 25
மென் சொற் கலப் பையர் திருந்து தொடை வாழ்த்த,
வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை,
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு,
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை, என்றும்
பதி பிழைப்பு அறியாது, துய்த்தல் எய்தி, 30
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும், பலர் புகழ் பண்பின்,
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய
யாணர் நல் நாடும் கண்டு, மதி மருண்டனென்-
மண்ணுடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது 35
ஈத்துக் கை தண்டாக் கை கடுந் துப்பின்,
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி,
ஏமம் ஆகிய, சீர் கெழு விழவின்,
நெடியோன் அன்ன நல் இசை,
ஒடியா மைந்த! நின் பண்பு பல நயந்தே. 40

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிரைய வெள்ளம்

பதிற்றுப் பத்து : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20
21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34  35  36  37  38  39  40  41  42


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ettuthogai/pathitruppathu3.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.