![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
17 லலிதகுமாரியும், பார்வதியும் வஞ்சகனை வீழ்த்தும் வகை என்னவென்பதற்காக நடத்திய மந்திராலோசனை, ஜெயாவை நேரிலே போய்க் காண்பது என்ற முடிவைத் தரவே, அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கலாயினர். பொது வாழ்க்கையிலே ஈடுபட்டு உலகைச் சீர்திருத்த வேண்டுமென்று எண்ணிய பார்வதிக்குச் சொந்த வாழ்க்கையிலேயே இவ்விதமான சுழல்கள் உண்டாகவே, தன்னிடம் பல நண்பர்கள், படித்துப் பட்டம் பெற்ற உடனே ஏதேனும் ஒரு வேலை தேடிக் கொள்ளும்படி புத்தி கூறிய சம்பவங்கள் நினைவுக்கு வரலாயின. உலகம் எவ்வளவோ கெட்டிருக்கிறது. சமுதாயத்தைச் சீரழிக்கும் கேடுகளைக் களைவதைவிட படித்தவர்களுக்கு வேறு கடமை இல்லை என்பது பார்வதியின் கருத்து. சாம்ராஜ்யத்தின் சகல சௌகரியங்களும், சுகபோகங்களும் சித்தார்த்தரைத் தழுவிக் கொண்டிருந்தன. மணிமுடி தரித்து மன்னர்களின் மன்னனாக அரியாசனத்திலே அமர்ந்து ஆனந்த வாழ்வு நடத்த அவருக்கு அன்பழைப்புக் கிடைத்தது. அவரோ அடவியிலே அலைந்து, ஆனந்தம் அநித்யம் என்று அறிந்து, அவனியிலே அவதி அழிக்கப்பட்டு, அமைதி அரசளா வேண்டும். துன்பத் தோணியிலேறி பிணி, மூப்பு, பெருங்கவலை என்னும் பாறைகளிலே மோதுண்டு, சிதறும் நிலைமை மாறி, மக்கள் மனத்திலே மாச்சரியத்தை மாய்த்துவிட்டு அன்பு, அருளுடைமை எனும் குறிக்கோள் கொண்டு வாழவேண்டும். இதற்கு ஏற்றதோர் வழியை நாம் காணவேண்டும் என்பதற்காக இன்பத்தை மதிக்க மறுத்ததுடன், போகப் படுகுழியும் இலாபச் சுழலும் தாம் செல்லும் வழியிலே காணப்பட்டகாலை அவைகளிலே இடறி விழாமல், இன்பம் - நிரந்தர இன்பம் - துன்பத்துடன் பிணைந்திருக்கும் இன்பமல்ல, இணையற்ற எல்லையற்ற இன்பம், எது, எங்கே இருக்கிறது; எங்ஙனம் பெற முடியும் என்று கண்டுபிடிப்பதிலே காலத்தைச் செலவிட்டார். அவருடைய சொந்த வாழ்க்கையைத் தத்தம் செய்து மக்கள் வாழ்க்கைக்கு ஒரு வழி காண முயன்றார். தமக்குக் கிடைத்த சுகத்தைத் துச்சமெனத் தள்ளிவிட்டு, மக்களுக்குச் சுகம் தேடித்தர முனைந்தார். சுகத்தைத் தியாகம் செய்த சித்தார்த்தர், புத்தரானார்! இன்பச் சேற்றையே வாழ்க்கையின் வசீகரத் தைலம் என்று பூசி மினுக்கிக் கொண்ட வாலிபர்கள், இளவரசர்கள், எத்தனை எத்தனை இலட்சம் இருந்தனர், இறந்தனர். உலகிலே அவரைப் பற்றிய நினைப்பேனும் இருக்கிறதோ? ஒரு புத்தரின் புகழ் மக்களின் மனத்திலே சிந்தனா சக்தி நிலைத்திருக்கும் வரையில் இருந்தே தீருமன்றோ! சொந்த வாழ்க்கையிலே அக்கறை காட்டுவது ஒரு சபலம்! அதனை நீக்காதவர்களால் பொது வாழ்க்கை என்னும் போர்க்களத்திலே உலவ முடியாது. சித்தார்த்தர் போல, நான் என்ன சிங்கார மாளிகையையா துறந்தேன்? பட்டத்தையா விட்டுவிட்டுப் பாதசாரியானேன்? இல்லையே! நானோ ஓர் அபலை! படித்தேன். சமுதாயம் பாழ் பட்டுக் கிடப்பதைக் கண்டேன். இதனைச் சீர்திருத்த என்னாலான அளவு முயலுகிறேன். இது பெரிய தியாகமாகாது. சித்தார்த்தர் போன்றோரின் வரலாறுகளைப் படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. அத்தகைய உத்தமர்களின் கால் தூசுக்கு நான் சமானமல்ல! நாம் ஏதோ பெரிய தொண்டு செய்வதாக எண்ணிக் கொள்வதே மமதை! என்று பலப்பல எண்ணியபடி பார்வதி படுத்துக் கொண்டிருந்தாள். துக்கமெனும் பெருங்காற்றால் தாக்கப்பட்ட பார்வதி எனும் இளந்தளிர், வாடி வதங்குவது தெரிந்த லேடி டாக்டருக்கு வருத்தமாக இருந்தது. நாகரிகத்திலே மிகுந்தவன் போலக் காணப்பட்ட அந்தப் பார்த்திபன், எவ்வளவு அநாகரிகமாகப் பெண்களிடம் நடந்து கொண்டான்? உல்லாசத்துக்கும் ஊராரை மயக்குவதற்கும், நாகரிகத்தை அவன் பயன்படுத்தினானேயன்றி உண்மையான நாகரிகம், அதாவது இளைத்தோரை இம்சிக்காமலிருப்பது அடுத்துக் கெடுக்காதிருப்பது போன்ற பண்புகள் துளியும் அவனிடம் இல்லை. அழகான தோற்றம், அலங்காரமான உடை, ஆளை மயக்கும் புன்சிரிப்பு, மேதாவி என்று பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக தயாரித்துக் கொண்ட பேச்சு, இவையா நாகரிகச் சின்னங்கள்? அல்லவே!! பளபளப்பு, வைரத்திலும் உண்டு, கத்தியிலும் உண்டு. ஆனால் விளைவு இரண்டுக்கும் ஒன்றாகுமா? அதுபோலத்தான் இருந்தது பார்த்திபனுடைய நடை உடை பாவனை. மனமோ படுகுழி! அந்தப் படுகுழியிலிருந்து பேராசை எனும் புகை வெளிவந்து கொண்டிருந்தது. அதன் சுடு நாற்றத்தால் தாக்கப்பட்டே சுந்தரிகள் இருவரும் தத்தளித்தனர். படித்தான், பட்டம் பெற்றான். பாவையரை அவனுடைய பாததூளியாகவன்றோ கருதினான். இந்த மடமையைத்தானா அவன் இரவு பகல் படித்துத் தெரிந்து கொண்டான்? சமுதாயத்தைச் சீராக்குகிறானாம். தன்மனத்தைச் சேறாக்கிக் கொண்ட தூர்த்தன். அவன் கெட்ட கேட்டுக்குப் பொது வாழ்க்கை வேறு வேண்டுமாம்! ஆடுகள் அயர்ந்து கிடக்கும் பட்டிக்கு நரியைக் காவலுக்கு ஏற்படுத்துவது போலிருக்கிறது, இவனை நம்பிக் கொண்டு சிலர் இருப்பது, என்றெல்லாம் லலிதா சிந்தித்தாள். பூந்தோட்டத்திலே உலவிக் கொண்டு புது மணத்தைப் பெற்று மகிழ்ந்து, ஆடும் மயிலையும் பாடும் குயிலையும், தடாகத்திலே நடமாடும் அன்னத்தையும், கொஞ்சும் கிளியையும் கண்டுகளிக்கும் பூவையின் கால்களை மலைப்பாம்பு பின்னிக் கொண்டு இடையை வளைத்து இறுக்கி, அத்துடன் நில்லாமல், அவளுடைய முகத்தருகே தன் முகத்தை நிறுத்திச் சீறி, நாவை நீட்டினால் அந்த நாரீமணியின் மனம் எப்படி இருக்கும்? பார்த்திபன் எனும் பாம்பினிடம் சிக்கிக் கொண்டாள் தொண்டு எனும் மலர்த் தோட்டத்திலே மந்தகாசமாக உலவிக் கொண்டிருந்த பார்வதி எனும் மங்கை. அவளுடைய இன்பக் கவலைகள் என்னென்ன? வாழ்க்கையின் உண்மைக் காட்சிகள் எவ்வளவு கோரமாகத் தென்பட்டன! இலட்சிய வாடை வீசிடும் என்று அவள் கருதி எந்த ஆடவனைத் தோழனாகக் கொண்டாளோ, அவனுடைய கருத்து, நாகம் கக்கும் விஷம் போன்று இருக்கக் கண்டாள். நடுங்கினாள். நாவுலர்ந்து தவித்திடும் நேரத்தில் மலைச்சுனையைக் கண்டு, மகிழ்ந்து விரைந்து சென்று, நீரை மொண்டு பருகக் போகும் சமயம் காட்டானை கோரக் கூச்சலுடன் அங்கே வரக் கண்ட காரிகையின் நிலைமை எப்படி இருக்கும்? பொது வாழ்வு எனும் தூய்மையான தடாகத்திலே பார்வதி, நீரைப் பருகினாள். அங்கே மலர்ந்து கிடந்த நீலோற்பலத்தைப் பறித்து, எடுத்து அதன் அழகைக் கண்டு அகமகிழும் வேலையிலே, குளத்தைக் கலக்கி, மலரைக் கசக்கினான், மமதை கொண்ட பார்த்திபன். பார்வதி பதைத்தாள் பொது வாழ்க்கையிலே புகப் பலர் பயப்படுவதன் காரணம் அவளுக்கு அப்போது நன்றாகப் புரிந்தது. அந்த வாழ்க்கை எவ்வளவு வசீகரமான கனவுகளை உண்டாக்குகிறது. ஆனால் எவ்வளவு ஆபத்துச் சூழ்ந்திருக்கிறது அப்பாதையிலே! என்பதை எண்ணியபோது தன்னுடன் படித்த பலரும் வேறு வேறு பாதைகள் வகுத்துக் கொண்டதன் காரணம் பார்வதிக்கு விளங்கிற்று. “பார்வதி! உனக்குப் பைத்தியம்! உலகைச் சீர்திருத்துவது என்ன, உரித்து வைத்துள்ள பலாச்சுளையைத் தேனிலே தோய்த்தெடுத்துத் தின்பது என்றா எண்ணிக் கொண்டு, பொது விவகாரங்களிலே தலையிடுகிறாய்? நினைத்ததை முடிக்க முடியாமல் தலையணையை நனைத்துக் கொண்டவர்கள் எவ்வளவு? நல்லது செய்யப் போய் நிந்தனைக்கு ஆளானவர்கள் எவ்வளவு? பைத்தியக்காரி! உலகம் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களைப் போற்றுகிறது என்றா கருதுகிறாய்? ஏளனத்தோடு பார்க்கிறது! வேறு ஏதும் செய்ய இயலாதவர்களின் வாழ்க்கை வழி இது என்று கூறுகிறது. கூண்டுக்கிளிக்குக் கொவ்வைக் கனி தருவர் மக்கள், கூண்டிலே அது இருக்க வேண்டுமென்று! விடுதலையை மறந்து விடுவர்! அதுபோலத் தானடி பொது வாழ்க்கை எனும் கூண்டிலே உன்னை யாரோ தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். சிற்றரசர்களுக்கும் சீமான்களுக்கும் சாது சன்யாசிகளுக்கும், சர்வபண்டிதர்களுக்கும், உலகம் சீர்கேடாக இருப்பது தெரியாதா? நன்றாகத் தெரியும்! ஏன் அவர்கள் தமது சிறு விரலையும் அசைப்பதில்லை; இது கண்டு, அவர்களெல்லாம் சும்மா இருக்க நீ ஏதோ ஆடுகிறாய், மேடையிலே இருக்கும் பள்ளம் தெரியாமல், போதும் உன்னுடைய பொதுவாழ்க்கை, புறப்படு. எங்கேனும் போய் வேலை தேடு, கணவனை நாடு. உலகம் ஒரு புறம் இருக்கட்டுமடி, நீ உனக்கு ஒரு உலகத்தைத் தேடிக்கொள். பித்தம் பிடித்தவளே! ஊருக்கு உழைக்கச் சொல்லி யார் உன்னை அழைத்தார்கள்? பொது வாழ்க்கையிலேதான் பார்த்துவிட்டாயே. படாடோபத்தைப் பெற பரம சாதுவாக நடிப்பவனை, நயவஞ்சகத்தை மறைக்க நகை முகம் காட்டுபவனை! இன்னமும் உனக்குச் சலிப்பு உண்டாகவில்லையா? நீ கோட்டைகளைக் கட்டினாய். அவை சூறாவளியால் அழிந்தன! எலியால் முடியுமா புலியை அடக்க? போ, போ! போய், உன் வேலையைப் பாரடி, உலகம் கிடக்கட்டும்!” என்று பார்வதியின் சோர்வு அவளுக்குச் சொல்லிற்று. மறு விநாடியே பொதுத் தொண்டிலே அவளுக்கு இருந்த பற்று வெற்றி கொண்டது! “இதைவிட இடையூறு நேரிட்டபோது, பின்வாங்கி ஓடி விடாமல் ஒரு சிலராவது வேலை செய்வதால்தான் பார்வதி! உலகம் இயங்குகிறது. எரிமலை நெருப்பைக் கக்கும். சுற்று வட்டாரத்தையே அழித்துவிடும். ஆனால், அதற்குப் பயந்து அதனருகே வாழாமலா இருக்கிறார்கள்? கவிழ்ந்தால் உயிர் போகும் என்பதைத் தெரிந்து கொள்ளாமலா கடலிலே பிரயாணம் செய்கிறார்கள்? பார்வதி, பயப்படாதே! பூகம்பங்கள் எவ்வளவோ ஏற்பட்ட பிறகுதானே பூமியிலே நாம் வாசம் செய்கிறோம்!! பொது வாழ்விலே, எரிமலை, அலைகடல், பூகம்பம், தீ, எல்லாம் உண்டு. அவைகளிலே வெந்தும் சாம்பலாகாத சித்தம் இருக்க வேண்டும். அதற்கான சக்தியைப் பெற வழி தேடு. ஓடாதே! எதிர்த்துச் செல்! போராடி வெற்றி பெறு!! மலரைப் பறிக்க வேண்டுமென்றாலும், சிரமம் இருக்கிறதே. மக்களைத் திருத்துவது சுலபத்திலா முடியும்? தேனீக்களைப் பாரடி, திகைத்துக் கிடக்கும் பெண்ணே! மற்றவர்களுக்கு ஏன் இந்தத் தேனீக்கள் இப்படி அலைகின்றன? என்ன சாதிக்க முடியும் இவைகளால்? என்றுதான் தோன்றும், அந்தத் தேனீக்களால் அலைந்து அலைந்துதான் தேனை திரட்ட முடிகிறது. அதைக் காண்போரால் இதனை உணர முடிவதில்லை. தேனைப் பருகும்போது தேனீக்களின் நினைப்பே கூட மக்களுக்கு இருப்ப தில்லை. நன்றி கெட்டவர்கள் நடமாடும் இடமாயிற்றே. இங்கே நாம் ஏன் அலைந்து கிடக்க வேண்டும் என்று தேனீக்கள் ஒத்துழையாமையை அனுஷ்டிப்பதில்லை. பிறருக்கு இன்பம் தேட, யார் அந்த இன்பத்தைப் பெற இருக்கிறார்களோ அவர்களே தூற்றியும் கேலி செய்து கொண்டும் இருக்கும் போதும் பணிபுரியும் பண்பினர் சிலராவது இருப்பதால்தானே, உலகிலே வாழ்க்கையின் வசதிகள் கிடைக்கின்றன. அப்படித்தான் என்ன, நீ அதிக சிரமப்பட்டு விட்டாயா? உன்னுடைய கஷ்ட நஷ்டம் கண்ணீரோடு தீர்ந்து விடும். இரத்தம் இரத்தமாகக் கக்கிக் கஷ்டப்படுபவர்கள் இருக்கிறார்கள், இந்த உலகத்திலே! அதோ! உழவனைப் பார்! தைலம் தீர்ந்துபோன கட்டை போலிருக்கும் அவன் உடலைப் கவனித்தாயா? அவன் தானே உணவு தருகிறான், உல்லாசிகளுக்கு. காலிலே பார்த்தாயா, எவ்வளவு சேறு! கஞ்சிக் கலயத்தைப் பாரடி, புளித்த கூழ் இருக்கிறது உள்ளே. அவன் மனைவி அதோ புல் சுமக்கிறாள்! பிள்ளைகள் எருமை மேய்க்கின்றனர். கோயில் பூசாரி கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்! வாழ்வின் கோணலைப் பொருட்படுத்தாமல் அவன் ஏரைச் செலுத்துகிறான். நீர் பாய்ச்சுகிறான், களை எடுக்கிறான், அதை விடவா நீ பிரமாத கஷ்டப்பட்டு விட்டாய்? வெட்கமாக இல்லையா, சலித்துக் கொள்ள? பார்வதி! சுயநலத்துக்கு நீ அடிமைப்படவில்லை. அதுதான் உனக்கும் உனது தொண்டுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம். இது பெரிதல்ல. உனக்காகவது, சலிப்பும் சோகமும், கோபமும் துக்கமும் வருகிற சமயத்திலெல்லாம், ‘சே! ஏன் நமக்கு இந்தத் தொல்லை? சௌகரியமாக வாழ நமக்கு வழியா இல்லை?’ என்று நினைக்க முடிகிறது. அந்த நினைப்புக் கொள்ளும் பாக்கியம் கூடப் பாட்டாளிக்குக் கிடையாது பார்வதி! கலப்பையைக் கீழே போட்டுவிட்டு கைகளைக் கழுவிக் கொண்டு, வயலிலே இனி நாம் வேலை செய்து விலாவை முறித்துக் கொள்வானேன்? நமக்கு வேண்டாம் இந்தச் சங்கடம் என்று உழவனால் கூற முடியுமா? அதை எண்ணிப்பார். அப்படி உழைக்காவிட்டால் உலக்கதிலே வாழ முடியாதே என்ற எண்ணம் அவனுக்குச் சவுக்காக இருக்கிறது. அந்தக் கசையடி உனக்கு இல்லை. கர்வப் படவும் உனக்கு உரிமையில்லை; கலைப் பட வேண்டிய அளவு நீ பாடுபடவுமில்லை. மோர் கடைகிறாய், வெண்ணெய் வேண்டுமென்று!” இதுபோல இடித்துக் கூறலாயிற்று, பார்வதியின் பொதுத் தொண்டின் ஆர்வம். இந்த இரு இடிகளுக்கும் இடையே, பார்வதி சிக்கிக் கொண்டு திமிறினாள். ஆனால், மத்தளத்துக்கு இருபுறம இடி கிடைத்தால் தானே மதுரமான இசை கிளம்புகிறது. அதுபோலத் தான் இந்த இதயத்திலே போர் நடைபெற்றதால் பார்வதிக்குப் புதிய உறுதியும் அறிவும் கிடைத்தன. |