![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
4 சொத்தை இழந்த குமார் சிங்கம் போல் கர்ச்சனை புரியலானான். சமதர்மத்தைப் பற்றி, எந்தப் பிரசங்கத்திலும் பார்த்திபனின் பிரசங்கத்திலிருந்து மேற்கோள் எடுத்து உபயோகிக்கலானான். “என் தலைவர்” என்று பார்த்திபனைப் புகழ்ந்து பேசுவான். இன்றோ நாளையோ சமதர்மம் வந்து விடும் என்று தெரிந்தவன் போல் தீப்பொறி பறக்கப் பேசுவான் குமார். பார்த்திபனின் சொற்பொழிவிலே கூட இந்த அளவு விறுவிறுப்பு இல்லை என்று ரசிகர்கள் பேசிக் கொள்ளலாயினர். கொடைக்கானலிலே, பார்த்திபன் மறுமாதம் ஒரு தீவிரவாதிகள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்தான். பார்வதிபாய் திறப்பு விழா. பார்த்திபன் தலைமை. கொடியேற்று விழாவுக்குக் குமார். இது பார்வதியின் வற்புறுத்தலால் பார்த்திபன் அரை மனத்துடன் ஒப்புக் கொண்டது. சீசனுக்கு வந்த சீமான்களில் பலரும் மாநாட்டுக்கு வந்திருந்தனர். “இங்கே வருவாளாமே, என் பங்களாவில் தங்கப் போவதாகக் கடிதமும் எழுதி விட்டாளே. அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்?” என்று திணறினார் சீமான். பார்வதி வந்ததும், பழைய விஷயம் எதுவும் நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. “அவசியம் தாங்கள் வர வேண்டும் மாநாட்டுக்கு” என்று கேட்டுக் கொண்டாள். “வராமலிருப்பேனா” என்று வாத்சல்யத்துடன் மிராசுதாரர் சொன்னார். மூவரின் முழக்கமும், மாநாட்டை மாஸ்கோ மணம் கமழும்படி செய்தது. இத்தகைய வீரர்கள் இருக்க, இனி ஜெயமுண்டு. பயமில்லை மனமே என்று தோட்டத் தொழிலாளரும் பங்களா வேலையாட்களும் மோட்டார் டிரைவர்களும் மற்றும் மாநாட்டுக்கு வந்திருந்த தீவிர இளைஞர்களும் எண்ணி மகிழ்ந்தனர். கடைசி நிகழ்ச்சி பார்வதியின் வேண்டுகோள். “தோழர்களே நமது மாகாணத்திலே மூன்று இடங்களிலே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இப்போது. இரண்டு ஜில்லாக்களிலே பஞ்சம். ஒரு ஜில்லாவிலே வெள்ளத்தால் வீடு வாசல் இழந்து வேதனைப்படும் குடும்பம் ஆயிரத்துக்கு மேல்! ஒரு கிராமத்திலே தீ விபத்தால் முந்நூறு ஆதி திராவிடர் குடும்பம், குடிசையிழந்து கதறுகின்றனர். ஒரு தாலுக்காவிலே காலரா, மற்றோரிடத்தில் பிளேக். “இவ்வளவு வேதனையின் நடுவே மமதையோடு இந்த மலை நிற்கிறது. அதற்கு மனம் இல்லை, பரிதாபப்பட. இந்த மலையுச்சியிலே வந்துள்ள மக்களின் மனம் பாறையா? அவர்கள் இரக்கம் காட்டினார்களா? அவர்களுக்கு அடிவாரத்திலே இருக்கும் அவதி தெரியுமா? தாங்கள் உல்லாசமாக நடமாடும் உலகிலே. இவ்வளவு கோரமும் உடனிருப்பதைத் தெரிந்து கொண்டார்களா? தோழர்களே! இவ்வளவு வறுமைக் கிடையே ஒரு சிலரிடம் செல்வம் இருப்பதை நாம் காண்கிறோம். முள் குவியலுக்கு மேலே போர்த்து வைக்கப் பட்டிருக்கும் பீதாம்பரம் அது. சுழல் அடிக்கும் கடலிலே மிதக்கும் தோணி என்பேன். இவ்வளவு வறுமை இருக்கும்போது வாழ்க்கையின் ருசியைப் பருகிக் கொண்டு ஒரு சிலர் வாழ்வதை நாகரிகம் என்று நான் கூறத் துணியேன். நல்வாழ்வு என்றும் சொல்லேன். புண்ணை மூடிடப் போர்த்தப்படும் சீலை என்பேன் இந்நிலையை. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு மக்கள் மனதிலே மகத்தான மாறுதல்கள் உண்டாக வேண்டும். ஆயிரக்கணக்கிலே குமார்கள் தோன்ற வேண்டும். “இப்போது மிக அவசரமாகத் தேவை குறைந்தது 50,000 ரூபாய். நான் முன்பு கூறின ஏழைகளின் துயரைத் துடைக்க சீமான்களை நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் அலங்காரச் செலவை குறைத்து ஆடம்பரச் செலவை மட்டுப்படுத்தி, இதற்கு உதவுங்கள். திருவிழாவிற்கும் தீப தரிசனத்திற்கும் கும்பாபிஷேகத்திற்கும் கோபுரப் பூச்சு வேலைக்கும் செலவிட வேண்டுமென்று இருக்கிற தொகையை இதற்குத் தந்து உதவுங்கள். சங்கராச்சாரிகளுக்கும், ஜீயர்களுக்கும், தம்பிரானுக்கும், திருப்பதி ஜெமீன்தாருக்கும் செலுத்தும் காணிக்கையை ஏழைகட்குச் செலுத்துங்கள். மத சம்பந்தமான தர்மம் செய்தால் உங்களுக்கு மேல் உலகில்தான் மேல்நிலை கிடைக்குமாம். நான் சொல்லுவதல்ல. மதவாதிகள் சொல்லுவதுதான். நான் சொல்லும் உதவி செய்தால் இந்த உலகிலேயே நீங்கள் மட்டுமல்ல, உங்கள் உடன்பிறந்தார்களும் மேல்நிலை அடைவர். ஆகவே, இதற்கு உதவி செய்யுங்கள். தோழர் குமார், அந்த வசூலுக்கு உங்களிடம் வருவார்; முகங் கோணாது உங்களின் உதவியைத் தாருங்கள்.” மாநாட்டுச் சத்தம் மலையை அதிரச் செய்துவிட்டது. அவ்வளவு உருக்கமும் ஆவேசமும் நிரம்பிய சொற்பொழிவை அதுவரை பார்வதி செய்ததே கிடையாது. பார்த்திபன் பொறாமைப்படும் அளவு இருந்தது பார்வதியின் சொற்பொழிவு. பொறாமை மட்டுமல்ல. அடக்க முடியாத கோபம், பார்த்திபனுக்கு; குமார் பார்வதியைப் பார்த்த பார்வை, பார்த்திபனின் மனத்தை ஈட்டிபோல் குத்திற்று. குமாருக்கு அன்று அளவு கடந்த ஆனந்தம். ஆயிரம் குமார்கள் தோன்ற வேண்டும் என்று அந்த அணங்கு கூறினது அவனுக்குப் புளகாங்கிதமளித்தது. கொடைக்கானலுக்கு வர பிரயாணச் செலவுக்குப் பணம் தந்தது, இந்தக் கிரீடத்தை அளிக்கத்தானா? என்ன கருணை அந்தக் கன்னிக்கு! என்று எண்ணிக் களித்தான் அக்காளை. அவனுடைய ஆனந்தம் போதாதா பார்த்திபனுக்கு ஆத்திரமூட்ட! |