![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
6 “ரட்சகன்” என்ற பத்திரிகை, அமோகமான விளம்பரத்துக்குப் பிறகு வெளிவந்தது. அதன் கொள்கை சகலரையும் ரட்சிப்பது! ஆசிரியர் பார்த்திபன். அழகான பதிப்பு. கண்கவரும் படங்கள், கவிதைகள், கதைகள் ரட்சகனில் நிரம்ப இருந்தன. ‘உலகம் முழுவதுமே “ரட்சகன்” பரவத்தான் போகிறான். எத்தனையோ ஆசிரியர்களின் கனவுகளை “ரட்சகன்” நினைவாக்கி விட்டான்’ என்று பார்த்திபன் கூறி வந்தான். ‘நாட்டிலே தொழிலரசு அமைக்க நான் கங்கணங்கட்டிக் கொண்டேன்’ என்று தலையங்கம் தீட்டினான். பார்வதியின் கண்களில் ‘ரட்சகனை’ப் பற்றிய விளம்பரம் தென்பட்டதும், ‘சரி! பார்த்திபன் மனக்கோட்டைக்குக் காகித அஸ்திவாரம் போட்டாகிவிட்டது’ என்று கேலியாகத்தான் நினைத்தாள். பார்த்திபனின் பிரதாபத்துகே “ரட்சகன்” பயன்படும் என்பது பார்வதிக்குத் தெரியும். தொழிலாளரிடையே ‘ரட்சகன்’ பரவுவது கண்ட பார்வதி தூண்டிலில் மீன் விழுகிறது; தடுப்பார் யார்? குமார் மட்டும் இருந்தால்... என்று எண்ணி ஏங்கினாள். எங்கும் பார்த்திபனின் பாகுமொழித் தலையங்கத்தைப் பற்றியே பேச்சு! எவரிடமும், “ரட்சகன்”! எந்தக் கடையிலும் அதன் விளம்பரத்தாள்!! “பார்! பார்வதி! என்னை மிகச் சாமான்யமானவன் என நினைத்தாயே, இதோ பார். எங்கும் நான் பிரசன்னமாக இருக்கிறேன். என் புகழ் திக்கெட்டும் பரவுகிறது! என்னால் தீ மூட்டிவிடவும் முடியும். நாள்தோறும் எத்தனை ஆயிரம் மக்கள் நான் என்ன சொல்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள் தெரியுமா? பைத்தியக்காரி! இவ்வளவு செல்வாக்குள்ள என்னை விரோதித்துக் கொண்டாய். எவனோ ஒரு உரத்த குரலோனை மதித்தாய்” என்று பார்த்திபன் பல இரவுகள் பார்வதியிடம் கூறினான் - கனவில். வண்டி போகிற போக்கைப் பார்த்தால் நம் வீட்டுப் பக்கம் கூட வராது போலிருக்கிறதே - என்று வாட்டமடைந்தார் குருக்கள் குமரகுருபரர். ஜெயத்துக்குக் கடைசியில் அபஜெயந்தானா என்று சிந்தித்துச் சோகித்தார். இந்தப் பித்தங் கொண்டவன், ஜெயத்தை ஏன் விரும்பப் போகிறான் என்று சலித்துக் கொண்டார். ஒரு நாள் பார்த்திபனைக் கண்டு பேசி அவன் மனத்தைக் கொஞ்சமாவது மாற்றுவது. அது முடியாவிட்டால் ஆலாலசுந்தரருக்கும் பார்த்திபனுக்கும் பகையை வளர்த்து விடுவது என்று குருக்கள் தீர்மானித்து விட்டார். குங்குமத்தைச் சிறுபொட்டலமாகக் கட்டிக் கொண்டார் . பத்திரிகாலயத்துக்குச் சென்றார். அரைமணி நேரத்திற்குப் பிறகே ஆசிரியனின் பேட்டி கிடைத்தது. ஆசிரியர் பார்த்திபன், தமது அரைமீசையைத் தடவிக் கொண்டு சற்று ஆயாசத்துடன் சாய்ந்த நாற்காலியிலே அமர்ந்த குருக்கள், ஒரு கனைப்புக்குப் பிறகு பேச்சைத் துவக்கினார். “அபாரமான வேலை போலிருக்கு.” “அதை ஏன் கேட்கிறீர்கள்? மலை குலைந்தாலும் மனங் குலையாத என் மனமும் மிரள்கிறது. இந்த வேலையை நினைக்கும் போது...” “சரி ஜெயம் சொன்னது சரியாகப் போச்சு. அவர் வேலையால் களைத்துப் போயிருப்பார் என்று சொன்னாள்.” “எந்த ஜெயம்?” “ஏனப்பா இது, புதுசா கேட்கறே. நம்ம ஜெயம் தெரியாதோ?” “ஒகோ மறந்து போனேன். ஜெயம் சௌக்கியந்தானே?” “சௌக்கியந்தான். அவளும் உன்னைப்போலத்தான் ஓயாத வேலை, வீண் தொல்லை, களைப்பு.” “என்ன வேலை, என்ன தொல்லை, ஏன் களைப்பு? உடம்புக்கு ஒன்றுமில்லையே.” “உடம்புக்கா? பத்தரைமாத்துத் தங்கத்தாலே அடித் தெடுத்த பதுமை போலத்தான் இருக்கா. இப்போ, புதுசா டான்சு ஆட யாரோ ஒரு ஆள் கிடைச்சான். சதா சர்வ காலமும் அதே வேலைதான் அவளுக்கு. உனக்கேண்டியம்மா இந்த உடலை வளைக்கிற வேலைன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். உமக்குத் தெரியாது அதன் கீர்த்தி, கலைஞானம் வேண்டும் என்று ஏதேதோ படித்த படிப்பைத் கொட்டுகிறாள்.” “ஜெயா சொல்வது உண்மைதான்! நடனக்கலை புராதனமானது. நமது நடராஜர் உருவமே நடனக் கலையின் தத்துவந்தானே! ஜெயத்துக்கு ஆடலிலே இவ்வளவு ஆவலிருப்பது தெரிந்தால்...” “நீயுங்கூடச் சேர்ந்துண்டு ஆடுவையோ, இந்த வெள்ளைக்காரன் மாதிரி. சிரிப்பை மூட்டாதே பார்த்திபா! டான்சும் கூத்தும், இதெல்லாம் ஏதோ பிழைப்புக்கு இருக்க வேண்டியதுதான். மிராசுதாரர் இலட்ச இலட்சமா சொத்துத் தரப்போகிறார். இவர்களுக்கு ஏன் இந்தக் கோணல் புத்தி?” “மிராசுதாரர், உயில் எழுதிவிட்டாரா என்ன?” “உயில் தயாராய்விட்டது. உனக்கும் ஏதோ கொஞ்சம் சொத்து உண்டு போலத்தான் தெரியவரது.” “எனக்கா? எனக்கு ஏன் அந்த லோபியின் சொத்து?” “இதுவும் ஜெயா சொன்னதுதான்! அவளுக்கு எப்படியோ, உன் போக்குத் தெரிகிறது. சதா உன் ஞாபகந்தானே அந்தப் பீடைக்கு!” “ஜெயம், நல்ல பெண், பார்த்துப் பல நாளாகி விட்டது. எனக்கோ நிமிஷமும் ஓய்வில்லை. நீங்கள் உள்ளே வரும்போது ஒருவர் இங்கே இருந்து வெளியே போனாரே யார் தெரியுமோ அவர்?” “நேக்கென்ன தெரியும்? ஜோஸ்யமா?” “அவர் கவர்னரின் காரியதரிசி. ‘இன்று எப்படியாவது தங்களைப் பார்க்க வேண்டுமாம், இது கவர்னரின் உத்தரவு’ என்று கூறிவிட்டுப் போனார்.” “போய்ப் பார்க்கத்தானே வேண்டும். கவர்னர் பிரபு கட்டளை யிட்டால் அதைத் தட்டலாமோ?” “கவர்னராவது, வைசிராயாவது? எனக்கு இன்று இரவு முக்கியமான ‘கான்பரன்ஸ்’ இருக்கிறது. நான் இன்று வரமுடியாதென்று கண்டிப்பாகச் சொல்லி அனுப்பிவிட்டேன். கவர்னருக்கென்ன, பொழுது போக்குக்காகத்தான் என்னை வரச் சொன்னார். என்னிடம் அவருக்கு ஒரு மோசு! நல்ல மனுஷன்.” “இது என்னப்பா, கவர்னரைப் பற்றி நீ இவ்வளவு இலேசாகப் பேசுகிறாயே?” “எனக்கென்ன? கவர்னரும் வைசிராயும் இந்தப் பேனா முனைக்குத்தானே பயப்படுகிறார்கள்.” “நேக்கு அது ஒண்ணும் புரியாது. சரி, நான் போறதா? ஜெயம் உன்னைப் பார்க்க வேண்டுமாம். ஒருமுறை உன் எதிரிலே அவள் டான்சு ஆடிக்காட்ட வேண்டுமாம். ஒரு தடவை வந்துதான் பாரேன்.” “வரலாம். ஆனால் ஒரு சங்கடம் இருக்கிறதே. அவர் அங்கு இருப்பார்.” “இருப்பார், இருட்டின பிறகு. காலையிலே வா, மாலையிலே வா. அவர் ஊரிலே இல்லாத சமயத்திலே வா. வழிதானா கிடையாது? நான் வரட்டுமா?” “ஜெயத்துக்கு என்ன, என்னிடம் அவ்வளவு சிரத்தை?” “சுத்த அசடாயிருக்கேயே! எதுக்காகடாப்பா ஒரு சிறுக்கி, ஒரு வாலிபனிடம் சிரத்தை கொள்வா?” “சரிதான்... தெரிந்தது... வருகிறேன் அடுத்த ஞாயிற்றுக் கிழமை.” இந்த உரையாடலுக்குப் பிறகு குங்குமப் பொட்டலத்தை ஆசிரியருக்கு ஆசியுடன் தந்துவிட்டுப் பரம திருப்தியுடன் குருக்கள் பத்திரிகாலயத்தை விட்டுப் புறப்பட்டார். ஆடலும், பாடலும் என்பது அன்றைய தலையங்கமாக வெளிவந்ததைக் கண்டு, “ரட்சகன்” வாசகர்கள், கலையிலும் பார்த்திபன் கைதேர்ந்தவர் என்று கூறி மகிழ்ந்தனர். “ரட்சகன்” வெளிவந்தது, மிராசுதாரர் ஆலாலசுந்தரருக்குப் பயத்தைத்தான் உண்டாக்கிற்று. காசைக் கரியாக்குவான் என்ற பயம் ஒரு புறமும், இவனை எதிர்த்தால், சர்க்காருக்கு ஏதேனும் கூறித் தொல்லை தருவானோ என்று மற்றோர்புறமும் பயம்! வெளியே பேசும்போது மட்டும், பார்த்திபனின் புத்திக் கூர்மையைப் புகழுவார்; உள்ளுக்குள் புழுங்குவார். குருக்கள், ஜெயத்தின் நடனத்தைப் பார்த்திபன் காண்பதற்காகக் குறித்திருந்த அந்த ஞாயிற்றுக்கிழமை, தந்திரமாக ஆலால சுந்தரரை ஊரைவிட்டுப் போகச் செய்திருந்தார். ஜெயத்தின் நடனத்தை விட, அவளுடைய உபசரிப்பும், சிரிப்பும் பார்த்திபனைப் பரவசமாக்கிற்று. இந்த இன்பமே என்றும் இருந்தால் ஏடும் எழுதுகோலும் ஏன் - என்று ஒரு விநாடி எண்ணினான். “என் நடனம் எப்படி இருந்தது?” என்று ஜெயா கேட்டாள். பார்த்திபன், அவளுடைய கண்களின் நடனத்தைக் கண்டு சொக்கி விட்டான். பதிலும் பேச முடியவில்லை. காரியம் பலித்த மகிழ்ச்சியிலே தாம்பூலத்தைப் போட்டு மென்றுகொண்டே, குருக்கள் தமயந்தியிடம் வெளித் தாழ்வாரத்திலே சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார். கவர்னரைப் பார்க்க நேரமில்லை என்று கண்டிப்பாகப் பேசியவன், உள்ளே ஜெயாவின் காலை வருடிக் கொண்டிருந்தான். ஆனந்தத்தால் அரைத் தூக்கங் கொண்டவள் போல அவள், மஞ்சத்திலே படுத்திருந்தாள்! மறுதினம் “காதலும் வாழ்வும்” என்ற தலையங்கம் “ரட்சக”னில் வெளிவந்தது. பார்த்திபனின் பணப்பெட்டியிலிருந்து 500 ரூபாயும் வெளியே கிளம்பிற்று! இனிப் பயமில்லை, மிராசுதாரர் காலமானாலும் மிராசு சொத்து நமது குடும்பத்துக்கே வந்து சேரும் என்ற சந்தோஷத்தால் தமயந்தி பூரித்தாள். குருக்களுக்கு மட்டும் மனக்குடைச்சல் தீரவில்லை. மிராசுதாரருக்கு விஷயம் தெரிந்து, சொத்தைப் பார்த்திபனுக்குத் தராமல், வேறு ஏதாவது தாறுமாறாகச் செய்துவிட்டால், பார்த்திபனை ஜெயத்துடன் இணைத்தால் பலன் இராதே என்ற பயம் அவருக்கு. சொத்து பார்த்திபனுக்கே சேரும்படியாக ஒரு வழி செய்துவிட்டாலும், சொத்து சேர்ந்த பிறகு பார்த்திபன், ஜெயாவை மறந்தால் என்ன செய்வது என்றும் திகில்! தமயந்தி சிரித்தாள், குருக்களின் சந்தேகத்தையும் சஞ்சலத்தையும் கேட்டு. “வீணான விசாரம் ஏன்? மிராசுதாரர் பணந்தருகிறார். பார்த்திபனும் தருகிறான். இப்போது இரட்டை வருமானம். இதோடு திருப்தி அடைவோம். மிராசுதாரர் காலத்துக்குப் பிறகு என்ன நடக்குமோ என்று இப்போது ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று கூறினாள். “போடி! முன் யோசனை இல்லாதவளே” என்று தமயந்தியைக் கண்டித்துவிட்டுக் குருக்கள் குமரகுருபரர் யோசனையில் அடிக்கடி ஈடுபட்டார். |