30. மகத யாத்திரை யூகி முதலிய மூவரும் சண்பை நகரில் இவ்வாறு ஒடுங்கி இருக்கும் போது இப்பால் இலாவாண நகரில் அறிஞர்களும் நண்பர்களும் கூறிய ஆறுதலுரையாலும் அறிவுரையாலும் உதயணன் தனது மனத் துன்பத்தை மறந்திருந்தான். அந்த மறதி தான் அவனுக்குப் பகைவர்களைப் பற்றிய நினைவு தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. தன் பகைவர்களுள் வலிய பகைவனாகிய பாஞ்சால நாட்டு ஆருணியை எண்ணிக் கனன்றது அவன் உள்ளம். 'எரிந்து கொண்டிருந்த விளக்கு அணையும் நேரம் நோக்கிப் பரவக் காத்துக் கொண்டிருக்கும் இருள் போல, ஏயர் குலத்தின் பலவீனம் நோக்கிப் புகுந்த பகைவனே அந்த ஆருணி. குலப்பகைவனாக விளங்கி வரும் இவன் கோசாம்பி நகரத்தைப் பற்றிக் கொள்ளும் நீங்காத ஆசையுடையவன். என்னுடைய வன்மை மேன்மை நிலைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் சூழ்ச்சிப் புரியும் கொடிய இயல்பினன். பிரச்சோதன மன்னனின் பெரிய படைகளையும் சிறிது பொது நிலை கலங்கச் செய்தவன். இப்போது தத்தையை உடன் கொணர்ந்த செய்தியையும் பிறவற்றையும் கேள்விப்பட்டு அறிந்திருப்பான். யூகி உயிரோடு இருந்தாலும் ஆருணிக்கு என் மேல் அச்சமுண்டு. யூகி என்ற பெயரில் அவனுக்கு நடுக்கமும் தளர்ச்சியும் தோன்றும். இப்போது யூகியும் இல்லை என்ற என் தற்போதைய பலவீன நிலையை ஆருணி அறிந்தால் அவனுக்குக் கொண்டாட்டமாகப் போகும்' என்று இங்ஙனம் பலவாறு எண்ணி மனங்குமைந்து கொண்டிருந்த உதயணன் உடற் சோர்வும் உள்ளச் சோர்வும் தீர அமைதியை நாடி மலர்ச்சோலைப் பக்கமாக உலாவுவதற்குச் செல்லலானான். அளவு கடந்த துன்பப் பொறையினால் மனமானது ஆழ்த்தப்படும் போது, அதிலிருந்து மீள்வதற்காக அமைதியை நாடுவது அதனியற்கை. உதயணனின் இத்தகைய மன நிலையை அமைச்சர்களும் வரவேற்று எதிர்பார்த்தே இருந்தனர். தகுந்த ஒற்றர்கள் மூலம் பாஞ்சால அரசனான ஆருணியின் அப்போதைய உட்கருத்தையும் உணர்ந்திருந்தனர். 'யூகியோ இறந்து போனான். ஏற்கனவே உதயணன் பலவிதத் துயரங்களாலும் நலிவடைந்துள்ளான். இனி எனக்கு எந்தவிதமான பகையும் இருக்க முடியாது' என்று கருதி ஏற்பாடு செய்திருந்த கோட்டைக் காவல் முறைகளை நீக்கிவிட்டு மகிழ்ச்சியோடு இருந்தான் ஆருணியரசன். இவற்றையும் பிற சூழ்ச்சி நிலைகளையும் நன்கு அறிந்திருந்த உதயணனுடைய தோழர்களும் அமைச்சர்களும் ஏற்ற செவ்வி நோக்கி உதயணனுக்கு இவற்றை விவரித்துக் கூறக் காத்திருந்தனர். சமயமும் வாய்த்தது. "ஆருணி தன்னை எதிர்ப்பாரில்லை என்ற செருக்குடன் இருக்கிறான். இந்நிலையில் நாமே தனியாக அவனை வெற்றி கொள்வது என்பதும் இயலாத செயலே. எனவே, மகத நாட்டரசன் தொடர்பை இப்போது நாம் பெற்றுக் கொள்வது அவசியம். மகத வேந்தன் படைப்பலம் மிக்கவன். நாடுபெற வழியின்றி மறைந்து திரியும் நின் தம்பியர்களாகிய பிங்கல கடகர் துணையையும் நாம் இதற்கு எதிர்பார்க்கலாம். ஒடுங்கி நின்று, பின் வலிமை தோன்ற முன் வந்து போரிடும் ஆட்டுக்கிடாய் போல நாம் ஆருணியைத் தாக்க வேண்டும். புதிதாகப் பிடித்து வந்த யானையைப் பணி செய்யப் பழக்கும் பாகர் போல இந்தச் சூழ்ச்சித் திட்டத்தில் துணிவும், அச்சமும் நமக்கு ஒரு வரையறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சூழத் துயரமே கண்டு நிற்கும் நாம், மேலும் இவ்வாறே வீணாக இருப்பது தகாது. அன்றியும் இந்நிலை, பகைவர் பெருமிதத்தை மேலும் மேலும் வளர்த்து வருவதற்கு ஏதுவாகும்" என்று நண்பரும் அமைச்சரும் உதயணனுக்குக் கூறினர். படையெடுக்கவும் தூண்டினர். ஆனால், சோர்ந்த நிலையிலிருந்த உதயணன் அப்போது கூறிய விடை அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அந்த விடையால் உதயணன் மனத்தில் விரக்தியுணர்வு எவ்வளவு ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறது என்பதையே அவர்கள் அறிய முடிந்தது. வெள்ளம் ஓடிய பின் சூனிய அமைதியுடன் காணும் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாயும் காட்டாறு போல இருந்தது உதயணனுடைய அப்போதைய உள்ளத்தின் நிலை. "வெள்ளத்தில் ஆழ்ந்து அழிய இருக்கும் போது உதவும் அரும்புனை போல எனக்குத் துன்பம் வந்தபோதெல்லாம் உதவி, அதனால் தான் வருத்தமுற நேரிட்டாலும் வருந்தாத உயிர் நண்பன் யூகி இப்போது இல்லை. தாமரை மலரின் உள்ளிதழ் போலச் சிறந்தவளும் அவ்விதழ் போலச் செவ்வரி, கருவரி பரந்த நயனங்களை யுடையவளுமாகிய காதல் மனைவி வாசவதத்தையும் இப்போது இல்லை. முன் எப்பொழுதோ ஒரு முறை மனமிரங்கிச் செய்த உதவியை நினைந்து என் மேல் நன்றி மறவாமல் எனக்கு வேண்டும் போதெல்லாம் உதவிய சாங்கியத் தாயும் தத்தையோடு தீப்பட்டு இறந்து போனாள். இம்மூவரையும் இழந்த நான், அறம், பொருள், இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருள்களையுமே இழந்தவன் போல ஆகின்றேன். இனி நான் அரசாட்சி பூண்டு வாழ்தலினும் இறந்து போதலே சிறந்தது" என்று இவ்வாறு விரக்தியுணர்ச்சியில் உதயணனுடைய மறுமொழிகள் ஆக்கமின்றியும் ஆர்வமின்றியும் வெளிப்பட்டன. ஆறுதல் மொழிகளால் அடக்க முயன்றும் அடங்காத உதயணனிடம் துன்பங்கண்ட நண்பர், பழைய வரலாறு ஒன்றைக் கூறி அதனாலும் அவனைத் தேற்ற முற்பட்டனர். "பல கலைகளிலும் முற்றித் துறை போகிய 'இலாமயன்' என்னும் முனிவர் காள வனத்தில் தமது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அந்தக் காள வனத்தில் தீப்பற்றிய போது தவ ஆற்றல் மிகுந்த அவருடைய ஆசிரமம் கூட எரிந்து அழிந்து போனது. ஆதலால் எத்தகையோர்க்கும் துன்பம் நேர்தல் இயற்கையே. அதற்காக ஊக்கமிழந்து தளர்ச்சி அடைதல் கூடாது" என்று கூறி முடித்தனர் நண்பர். அந்தப் பழங்கதையினாலாவது உதயணன் மனம் ஆறாதா என்பதே அவர்கள் ஆசை! உதயணன் மனத்தில் பற்றியிருந்த விரக்தியின் பிடிப்பு இதனால் சற்றே தளர்ந்து வாழ்க்கையில் ஆசை தோன்றும் என்பது அவர்கள் நம்பிக்கை ஆகும். எந்த ஆசையை அவனிடமிருந்து அழித்தால் வீரம் பிறக்கும் என்று கருதினார்களோ, அதே ஆசையோடு வீரமும் பணிந்து போனதைப் பார்த்த போது மேலும் அவர்களுக்கு வருத்தமாக இருந்தது. நம்பிக்கையை மேலும் தூண்டுவதற்காக உதயணனின் பார்ப்பனத் தோழனாகிய இசைச்சன் அவனுக்குச் சில உறுதிமொழிகளைக் கூறலானான். "மந்திர வித்தைகளால் முடியாத விழுமிய செயல்கள் என எவையுமே இல்லை. சாதாரண மக்கள் இதனை நம்புவதில்லை என்றாலும் காரியத்தை முடிக்குந் திறன் இவைகளுக்கு உண்டு. நாமும் இந்த வழிகளில் முயன்று வெற்றி எய்தலாம். சாதனைக்குரிய முயற்சியில் ஈடுபட்டு, பின் அது நிறைவேறாது என்ற நிலை வந்தாலும் அதனைச் சால்புடையோர் பழிக்க மாட்டார்கள். வாசவதத்தை இறந்து போனாள். ஆனால் அவள் எப்படியும் வேறோர் உருவில் பிறந்துதான் இருக்க வேண்டும். அந்த உருவத்திலிருந்து மாற்றி வாசவதத்தை உருவிலேயே அவளைத் தோன்றச் செய்யும் ஆற்றல் படைத்த வித்தை ஒன்று உண்டு. அதில் கற்றுத் தேர்ந்த அந்தண முனிவர் ஒருவர் மகத நாட்டின் தலைநகராகிய இராசகிரிய நகரத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கே நாம் சென்று அந்த முனிவரைச் சந்தித்து அவரை வழிபாடு செய்த பின் விச்சையினால் யூகியையும் தத்தையையும் அவர்களுடைய பழைய தோற்றத்துடனேயே அடையலாம். அதனுடன் அவ்வரிய மந்திர வித்தையையும் கற்றுக் கொண்டு விடலாம்" என்று இசைச்சன் கூறிய மொழிகளை உதயணன் முற்றிலும் விருப்பத்தோடு கேட்டான். கேட்டு முடித்தவுடன் "அத்தகைய வித்தையும் உலகில் உண்டோ? மெய்யாகவா?" என்று வியப்புத் தாங்காமல் இசைச்சனை நோக்கிக் கேட்டான் உதயணன். உடனே இசைச்சன் அவ்வித்தைக்குரிய முதனூலில் இருந்து இரண்டோர் செய்திகளை உதயணனுக்குக் கூறி அது மெய்யே என்று உறுதியாகச் சொன்னான். அதைச் செவியுற்ற அளவில், "அப்படியானால் இப்பொழுதே அங்கே புறப்படுவோம்" என்று உதயணன் கூறவும் நண்பர் மகிழ்ந்தனர். உதயணன் மகத யாத்திரை போவதற்குரிய ஏற்பாடு உறுதியாயிற்று. இசைச்சன் கூற்றில் உதயணன் கொண்ட நம்பிக்கையே இதற்குக் காரணம். வாசவதத்தையையும் யூகியையும் உதயணன் உயிரோடு காண விரும்பிய தவிப்பும் ஒரு காரணம். ஏற்பாட்டின்படி உதயணனோடு மகதநாட்டுக்குப் புறப்படுவதற்கு ஆற்றலிற் சிறந்த வீரர் நூற்றுவர் முன் வந்தனர். அவர்கள் வேற்றவர் போல அந்தணராக மாறுவேடம் பூண்டு புறப்பட வேண்டுமென்பது திட்டம். நூறு வீரரும் ஏற்ற தோற்றங்களுடன் தனித்தனியே முன்னும் பின்னுமாகத் தொடர உதயணன், நண்பர் ஆகியோர் அந்தணர்களுக்குரிய தூய உருக்கொண்டு மகதநாடு சென்றனர். இடையில், புன்னாளகம் என்னும் நாட்டையும், காள வனத்தையும் கடந்து கருப்பாசயம் என்ற காட்டாற்றையும் தெப்பங்களைக் கொண்டு கடந்து மேற்போயினர். அதற்கு அப்பால் ஆறுகளும் சாலைகளும் இடையிடையே உள்ள ஒரு நீண்ட காட்டில் அவர்கள் நடந்து சென்றனர். இவ் வழியில் உதயணன் பல காட்சிகளைக் கண்டான். அவன் கண்ட ஒவ்வோர் காட்சியும் அவனுக்குத் தத்தையின் நினைவையும் யூகியின் நினைவையும் அதையொட்டிய துயரத்தையுமே உண்டாக்கின. |