56. வெற்றி முழக்கம் கந்தவதி நதியின் சங்கம முகத்திலிருந்து புறப்பட்ட படை தவதிசயந்த மலையின் அடிவாரத்தை அடைவதற்கு மிகுந்த நேரம் ஆகவில்லை. ஏற்கனவே வருடகாரன் மூலமாகப் படை வருகின்றது என்ற செய்தி உதயணனுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததனால் இருதரப்புப் படைகளும் சந்திப்பதற்கும் தாமதமாகவில்லை. உடனே போர் உக்கிரமாகத் தொடங்கி விட்டது. தன் படைகள் மலையை நெருங்குவதற்குள்ளேயே, எதிரிப் படைகள் தனித்தனியே எதிர் வந்து மலை இடுக்குகளில் இருந்தவாறே தாக்குதலைக் கண்டதும் ஆருணிக்கு ஒரே ஆச்சரியமாகப் போயிற்று! 'சொல்லி வைத்தாற் போல உதயணன் இவ்வளவு முன்னேற்பாடாக இருக்கிறானே! இவனுக்கு இது எவ்வாறு சாத்தியமாயிற்று?' என்பதே ஆருணியின் வியப்பிற்குக் காரணம். எவ்வளவோ சூழ்ச்சிகளைச் செய்திருந்தும் இரண்டு தரப்புப் படைகளும் அங்கங்கே கலந்து போர் செய்கின்ற அந்த நிலையில், 'முடிவு என்ன ஆகுமோ?' என்றும் சற்றே சிந்தனை செய்த உதயணன், தானே குதிரை மேல் ஆரோகணித்து வாளுடனே சமரிற் குதித்தான். அதைக் கண்ட ஆருணி அரசனும், காந்தாரகன், சாயன், சூரன், பரிசேனன் என்ற தன்னைச் சேர்ந்த அரசர்கள் நால்வரோடு தானும் போரில் இறங்கினான். இருதரப்பிலும் போரில் அழிவு சமமாகவே நிகழ்ந்து கொண்டிருந்தது. கையில் சுழற்றி வீசும் ஒளி வாளுடன் குதிரை மேல் தனி ஒருவனாகத் தன் படையைச் சூறையாடிக் கொண்டிருக்கும் உதயணனை நான்கு அரசர்களோடு தானும் சேர்ந்து கொண்டு ஐவராக எதிர்த்து வளைக்க முற்பட்டான் ஆருணி. வேறு பல வீரர்களுக்குத் தான் ஒருவனாகவே தாக்குதலுக்கு ஈடுகொடுத்துக் கொண்டிருந்த உதயணன், அதோடு இவர்கள் ஐவரும் தன்னை நெருங்குவதையும் சமாளிக்க முயன்றான். நல்லவேளையாக அந்தச் சமயத்தில் உதயணனின் தம்பியாகிய கடக பிங்கலர்கள் அவன் பக்கம் உதவிக்கு வந்து சேர்ந்தனர். கடக பிங்கலர்களின் வாள் வீச்சுக்கு ஆற்றாமல் ஆருணியைச் சேர்ந்த காந்தாரகன் என்ற அரசன் முதல் களப்பலியாகப் போரில் மாண்டு போனான். உடனே ஆருணிக்கு மிகுந்த சினம் மூண்டுவிட்டது. "ஆருணி பிறந்த நாளும் நட்சத்திரமும் அவன் பிறரை அழிக்கும் வல்லமையையே அவனுக்குக் கொடுப்பவை. பிறரால் அவன் ஒரு நாளும் அழியமாட்டான். அழிக்கவும் முடியாது!" என்று ஆருணி தன்னைப் பற்றித் தானே வஞ்சினங் கூறிவிட்டு ஆத்திரத்தோடு உதயணனை நெருங்கினான். ஆருணி வஞ்சினங் கூறிக் கொண்டே தன் பக்கம் நெருங்குவதைக் கண்டதும் அதுவரை போர் முறை மீறாமல் அமைதியாகப் போரிட்டுக் கொண்டிருந்த உதயணனுக்கு மிகுந்த கோபம் உண்டாகிவிட்டது. உதயணனின் கோபம் ஆருணியைப் போல அவனுடைய கண்களிலே புலனாகவில்லை. கைகளிலே புலனாயிற்று. விசித்திரமான வேகத்தோடு சுழன்று சுழன்று மின்னும் அவன் கை வாளிலே புலனாயிற்று. "ஆருணி! உன் தீய உயிரை உண்ண வேண்டுமென்ற எனது வாளின் ஆசை தணிய வேண்டும். அந்த ஆசையை நிறைவேற்றாமல் என் வாளை நான் ஏமாற்றமாட்டேன்" என்று சிரித்துக் கொண்டே கூறினான் உதயணன். உதயணன் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஆருணி, அதுவரை வேலாலும் ஈட்டியாலும் செய்து கொண்டிருந்த தன் போர் முறைகளை நிறுத்திக் கொண்டு, உதயணனைப் போல் ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் கேடயமும் தாங்கி நேருக்கு நேர் உதயணனை எதிர்ப்பதற்காகத் தன் யானையை முன்னே செலுத்தினான். உதயணனும் வாளை வீசிச் சுழற்றியவாறே ஆருணியின் யானைக்கு அருகே தன் குதிரையைச் செலுத்தினான். பேரரசர்களாகிய இருவர் வாளும் மோதலாயின. இந்தச் சந்தர்ப்பத்தில், "மாற்றரசனாகிய பெருவேந்தன் ஒருவனைக் கொல்லும் வீரப் பெருமையை அடியேனுக்குக் கொடுங்கள் பிரபு! அதை நான் செய்கிறேன்" என்று கூறிக் கொண்டே தருமதத்தன், உதயணன் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான். சிறிது நேரப் போரிலேயே ஆருணி தளர்ந்து சோர்ந்து விட்டான். அதை அவன் துரதிர்ஷ்டம் என்று தான் கூறவேண்டும்! அவன் ஏறியிருந்த யானையும் அவன் வசப்படாமல் தட்டுக் கெட்டு விலகிப் போக ஆரம்பித்து விட்டது. அந்த நேரத்தில் தருமதத்தனுடைய கூரிய வாள் ஆருணியின் மார்பைப் பிளந்தது. ஆருணி விண்ணுலகடைந்தான். வஞ்சினத்தோடு போரில் இறங்கிய அவன் நீண்ட நேர கடினமான போரைக் கூடச் செய்யவில்லை; செய்யவும் முடியவில்லை. விதி அவனை அதற்குள் அழித்துவிட்டது. ஆருணியின் மரணத்திற்குப் பின் மிகக் குறுகிய நேரத்துப் போரிலேயே வெற்றி உதயணனை வந்தடைந்துவிட்டது. வருடகாரனின் சூழ்ச்சி மிகுந்த உதவிகள் தாம் இவ்வளவிற்கும் காரணம். ஆனால் ஆருணிக்கு அவன் சாகும் வரை 'வருடகாரன் உதயணனுக்கு எதிராக நடித்துத் தன் பக்கமிருந்தது ஒரு சூழ்ச்சி நாடகம்' என்ற இரகசியம் தெரியவே தெரியாது. உதயணன் வெற்றியடைந்ததைக் கோசாம்பி நகரம் எங்கும் அறிவிப்பதற்காக யானை மேல் ஒரு வீரனைப் பெரிய முரசு ஒன்றுடனே அமர்த்தி எல்லா இடங்களிலும் அந்த மங்கலச் செய்தியை வெற்றி முழக்கம் செய்து வருமாறு அனுப்பினர் நண்பர். முரசு நகரமெங்கும் வெற்றி முழக்கம் செய்யலாயிற்று. வருடகாரன், தருமதத்தன், தாரகாரி, இடவகன், எல்லோரும் உதயணனோடு வந்து ஒன்று சேர்ந்த பின், ஆருணி தங்கள் பகைவன் ஆனாலும் அவனுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்களை முறையாகச் செய்துவிட வேண்டுமென்று அவன் கூறினான். நண்பர்களும் அதற்கு இசையவே, ஆருணியின் சடலத்தை ஈமக்கடன்கள் இயற்றி அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு முடிந்தது. ஆருணி முறைப்படி செய்யப்பட வேண்டிய ஈமக்கடன்களைச் செய்யப் பெற்றான். அழிந்தது போக எஞ்சிய ஆருணியின் படைகளைத் தன் வசத்தினவாக ஆக்கிக் கொண்டு உதயணன் முதலியவர்களைப் பின்னால் வருமாறு கூறிவிட்டுக் கோசாம்பி நகரத்துக் கோட்டை வாசலைத் திறப்பதற்காக முன்னால் சென்றான் வருடகாரன். ஆனால், கோட்டைக்குள்ளே இருந்தவர்கள் உட்புறமாக கதவை அடைத்துத் தாழிட்டுக் கொண்டு திறக்க மறுத்து விட்டனர். "மக்களே! நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் பழைய அரசனாகிய உதயணன், ஆருணியை வென்று, கோசாம்பி நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஆகவே பழைய அரசன் மீண்டும் திரும்பி வருகிறான் என்ற மகிழ்ச்சியோடு கோட்டைக் கதவைத் திறவுங்கள்" என்று உள்ளே இருப்பவர்களுக்கு வருடகாரன் அறிவித்தான். வருடகாரன் இவ்வாறு அறிவித்த பின்பும், கோட்டைக்குள் இருந்தவர்கள் கதவைத் திறக்கவில்லை. 'உதயணன் வெற்றி அடைந்துவிட்டான்; கதவைத் திறவுங்கள் என்று கூறுபவன், உதயணனுக்குப் பகைவனாக மாறிய வருடகாரன் அல்லவா? இவனை நம்பி நாம் எவ்வாறு கதவைத் திறக்கலாம்? என்ன சூழ்ச்சி நடக்குமோ?' என்று அவர்கள் அஞ்சினர். இதற்குள் உதயணன், இடவகன் முதலியவர்களும் அங்கே கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் கதவு திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இது நிகழ்ந்தது. "உதயணன் வந்திருக்கிறான் என்பதற்கு அடையாளமாக அவனுடைய இராச முத்திரையை உள்ளே அனுப்பித்தால் கதவை நாங்கள் உடனே திறந்து விடுகிறோம்" என்று உள்ளே இருந்தவர்கள் கூறி அனுப்பினார்கள். உதயணன் இதைக் கேட்ட உடனே இடவகனைப் பார்த்து, "இடவக! கோசாம்பி நகரத்து மக்கள் உன்னை நன்கு அறிவார்கள். நீ வந்திருக்கிறதாகச் செய்தி சொல்லி அனுப்பு. கதவு உடனே திறக்கப்படலாம்" என்று கூறினான். இதைக் கேட்ட இடவகன் உதயணனின் இராச முத்திரையோடு கூடிய கொடி முதலிய சின்னங்களைக் கையில் ஏந்திக் கொண்டு கோட்டை மதிற்சுவரில் ஏறி நின்றான். இடவகனை உதயணனின் சின்னங்களோடு மதில்மேலே கண்டதும் கோசாம்பி நகரத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்து, வெற்றி ஆரவாரத்தோடு கோட்டைக் கதவைத் திறந்தனர். உதயணனையும் வீரர்களையும் கோசாம்பி நகர மக்கள் முகமலர்ச்சியோடு விரும்பி வரவேற்றுக் கொண்டிருக்கும் போது ஆருணியைச் சேர்ந்தவனாகிய கும்பன் என்னும் சூழ்ச்சிக்காரன் அங்கங்கே மக்கள் மனங்களை மாற்ற முயன்று கொண்டிருந்தான். உடனே இது தெரிந்த உதயணன் வீரர் ஓடிச் சென்று, "உன் போன்றவர்கள் வேறு யாரேனும் இந்த நகரத்தில் இருந்தால் அவர்களுக்கும் இந்தக் கதிதான்?" என்று கூறி அவனைப் பிடித்துக் கொலை செய்தனர். உதயணன் பழையபடி கோசாம்பி நகரத்து ஆட்சியை மேற்கொண்டதும் அச்செய்தி நாடெங்கும் பிரகடனம் செய்யப்பட்டது. நாடு திருப்தியுற்றது. உதயணன் வெற்றியில் தங்கள் மனத்தின் வெற்றியைக் கண்டனர் மக்கள். |