65. யூகியின் புறப்பாடு யாருக்கு யாரெழுதியது, நலம் விழைதல், வாழ்த்து முறை முதலிய கடிதத்தின் தொடக்கப் பகுதிகளை விரைவில் படித்துவிட்டு மேலேயுள்ள செய்தியைப் பார்க்கத் தொடங்கினான் உதயணன். 'அன்பிற் சிறந்த உதயணா! நாவலந் தீவினுள்ளே தகுதியானும் சிறப்பானும் உயர்ந்த குலம் உன்னுடையதும் என்னுடையதுமாகிய இரண்டே! இதனால் அன்று ஒரு நாள் எனக்கு ஓரெண்ணம் எழுந்தது. 'ஆரவாரம் மிக்க பெரும் போரைச் செய்யாமல், உங்கள் குலத்தை எவ்வாறேனும் என் குலத்திற்கு அடிமைப்படுமாறு தந்திரத்தினாலேயே ஏதாயினும் செய்ய வேண்டும் என்று யான் கருதத் தலைப்பட்டேன். அதன் விளைவு தான் காட்டிற்கு எந்திர யானையை அனுப்பித்து உன்னைத் தந்திரமாகச் சிறைப்பிடித்து வரச் செய்தது. இது என்றோ நடந்து கழிந்து போய்விட்டது என்றாலும் இதற்காக இன்று நான் உன்னிடம் மன்னிக்கும்படி வேண்டுகிறேன்! நீ இன்று இனிமேல் என்னை உன் தந்தை முறையுள்ளவனைப் போலக் கருதுதல் வேண்டும். சென்றதை மறந்து விடு! இனிமேல், பழம் பகையைக் கருதாதே! வாசவதத்தையின் நற்றாயும் நானும் உங்கள் இருவரையும் மணக்கோலத்தோடு ஒருங்கே காண வேண்டும் என்ற ஒரே ஆசையால் தவித்துக் கொண்டிருக்கிறோம். தத்தையோடு ஒருமுறை இங்கே வந்து நீ எங்களுடைய இந்த ஆசையைப் பூர்த்தி செய்யலாகாதா? நிற்க, மகத வேந்தன் தருசகனின் உதவியால் ஆருணியை வென்று பாஞ்சாலர் ஆதிக்கம் நீக்கிக் கோசாம்பியை நீ மீண்டும் அடைந்த நற்செய்தியைக் கேள்வியுற்று மகிழ்ந்தேன். ஆருணியை வென்று கோசாம்பி நாட்டை உனக்கு மீட்டுக் கொடுத்திருக்க வேண்டிய செயலை நானே செய்யக் கருதியிருந்தேன். நீயாகவே மகத மன்னன் உதவியினாலே அதை அடைந்துவிட்டாய். நல்லது. குழந்தையைப் பேணும் பெற்றோர்களைப் போலக் குடிமக்களை அன்போடும் பண்போடும் நீ ஆண்டு வருக. யூகி என்ற உனது அரும்பெறல் அமைச்சனைப் பற்றிக் கேள்வியுற்றேன். அவனுடைய அற்புதமான சாமர்த்தியமும் குணநலன்களும் என்னை வியப்படையச் செய்கின்றன. அந்தத் திறமை மிக்க மனிதனை நான் உடனே காண வேண்டும் போல ஆவலாயிருக்கிறது எனக்கு. இந்தத் திருமுகம் கண்டவுடனே யூகியை நீ அன்புடன் இங்கே, உஞ்சை நகரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த மாபெரும் தீரனைப் பாராட்டுவதற்காக அவந்தி நாட்டு அரசவை மனமுவந்து இப்போதே அவனை எதிர்பார்க்கிறது. இதுவரை எழுதியவை யாவும் நான் உனக்கு உள்ளன்போடு உண்மைக்குப் புறம்பின்றி எழுதியவை. தவறாக இதில் எதுவுமே எண்ணிக் கொள்ள வேண்டாம்' என்று இவ்வாறு தூது வந்த பதுமை, உதயணனிடம் அளித்த அந்தத் திருமுகத்தில் எழுதியிருந்தது. திருமுகத்தைப் படித்து முடித்த உதயணன் புன்முறுவல் பூத்தான். அவன் மனத்தில் களிப்பு நிறைந்தது. ஆயினும் கடிதத்தில் ஒரே ஒரு செய்தியைப் பற்றி, 'அது விசாரிக்கத் தக்க முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இருந்தும் கூட பிரச்சோதன மன்னன் அதை ஏன் விசாரிக்கவில்லை' என்ற சந்தேகம் உதயணனுக்கு ஏற்பட்டது. தூதியாக வந்திருக்கும் பதுமை என்ற அந்தப் பெண்ணிடமே அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றெண்ணினான் அவன். "வாசவதத்தை இலாவாண நகரத்து அரண்மனையில் தீப்பட்டு இறந்து போனதாக ஒரு செய்தி எங்கும் பரவியதே! அந்தச் செய்தி பொய் என்றிருப்பினும் தத்தையின் தந்தையாகிய தங்கள் அரசர் அதைப்பற்றி இத்திருமுகத்தில் ஒன்றுமே விசாரிக்கவில்லையே! ஏன்?" என்று உதயணன் பதுமை என்ற தூதியை நோக்கி வினவினான். "வேந்தே! வாசவதத்தை தீயிலகப்பட்டு இறந்து போனதாகப் பரவிய செய்தி எங்கள் பிரச்சோதன மன்னருக்கும் தெரியும். அந்தச் செய்தியைக் கேள்வியுற்ற அவர் துடிதுடித்துப் போய்த் தமக்குத் தெரிந்தவரும் நெருங்கிய நண்பருமாகிய ஆற்றல் மிக்க முனிவர் ஒருவரிடம் சென்று, உண்மையைக் கூறுமாறு பிரலாபித்தார். ஞான திருஷ்டியும் தீர்க்க தரிசன உணர்ச்சியும் மிக்க அந்த முனிவர், 'அரசே! தத்தை உண்மையில் தீயிலகப்பட்டு இறக்கவில்லை. உதயணனது நன்மையின் நிமித்தம் அவள் மறைந்து வாழ்கின்றாள். குறிப்பிட்ட நாள்கள் கழித்து அவள் வெளிப்படுவாள். நீ கவலை தவிர்க்க' எனத் தொடுத்த மாலையைக் கையால் எடுத்தளித்தது போல உண்மையைத் தெளிவாகக் கூறி எம் அரசன் மனந் தேறுமாறு செய்துவிட்டார். இதனாலேயே இச் செய்தி இத் திருமுகத்தில் குறிக்கப் பெறவில்லை" என்று பதுமை மறுமொழி கூறினாள். உதயணனுக்குச் சந்தேகம் நீங்கியது. பின்பு பிரச்சோதன மன்னன் தனக்கும் வாசவதத்தைக்கும் அனுப்பியிருந்த பரிசில் பொருள்களை எல்லாம் வரிசை வரிசையாக உதயணன் உவகையோடு மனம் விரும்பிக் கண்டான். வந்திருந்த தூதுவர் குழுவைத் தன் விருந்தினராகத் தங்குமாறு ஏற்பாடு செய்து சிறப்பாக உபசரித்தான். பதுமை முதலிய பிரச்சோதன மன்னனின் தூதுவர்கள் கோசாம்பி நகரத்து அரண்மனையில் உதயணன், வாசவதத்தை இவர்களுடன் சில நாள்கள் தங்கியிருந்தனர். பின்னர், "விரைவில் நகர் செல்ல வேண்டும். விடை தருக! நாங்கள் சென்று வருகிறோம்" என்று ஒரு நாள் அவர்கள் உதயணனிடம் கூறினர். இவ்வாறு அவர்கள் கூறியவுடன் பிரச்சோதன மன்னன் 'யூகியையும் அவர்களோடு இங்கே அனுப்ப வேண்டும்' என்று தன் திருமுகத்தில் கேட்டிருந்த செய்தி உதயணனுக்கு நினனவு வந்தது. பிரச்சோதன மன்னனின் வேண்டுகோளை மறுக்காமல் யூகியை அவனிடம் அனுப்புவது தான் ஏற்றதென்று தோன்றியது உதயணனுக்கு. எனவே அவன் யூகியையும் அந்தத் தூதுவர்களோடு உஞ்சை நகரத்துக்கு அனுப்பக் கருதி அவனை அழைத்து வரச் சொல்லி ஓர் காவலனை அனுப்பினான். யூகி வந்தான். உதயணன் அவனிடம், "பிரச்சோதனன் அன்போடு வேண்டுகிறான்! எனவே, நீ போய் வருவதே நல்லதென்று எனக்கு தோன்றுகிறது. இதில் உன் விருப்பம் எப்படி?" என்று கேட்டான். தனக்கும் போய்வர வேண்டும் என்பதே கருத்து என்று உதயணனுக்கு மறுமொழி கூறினான் யூகி. "அப்படியாயின் இந்தத் தூதுவர்களுடனேயே நீயும் உஞ்சை நகர் செல்க. சில நாள் தங்கியிருந்து பிரச்சோதனனுக்கு எல்லாச் செய்திகளையும் கூறுக. பின் விரைவில் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு கால தாமதமின்றி இங்கு வந்து சேர்க" என்று யூகியிடம் கூறினான் உதயணன். யூகியும் அதற்குச் சம்மதித்தான். யூகி முதலியவர்கள் புறப்படுவதற்கு முன்பாகவே வேறு சில வீரர்கள் மூலமாக, "என் நாட்டுக்குரிய சில நாடுகள் எல்லை பிறழ்ந்து தங்கள் நாட்டுடனே சேர்ந்திருக்கின்றன. அவற்றை விரைவில் மீண்டும் என் நாட்டுடனே சேர்த்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற செய்தியை எழுதிய திருமுகம் ஒன்றைப் பிரச்சோதனனுக்கு உதயணன் அனுப்பி வைத்திருந்தான். எனவே, யூகி புறப்படும் பொழுது விவரமான திருமுகம் ஏதும் அவனிடம் எழுதிக் கொடுக்கவில்லை. எனினும் வாய்மொழியாகச் சில செய்திகளைப் பிரச்சோதனனுக்குக் கூறி அனுப்பினான். அச்செய்திகள் யாவுமே இரு நாட்டிற்கும் இடையேயுள்ள ஒற்றுமையைப் பலப்படுத்துவனவாயும் இரு அரசர்களுக்கும் இடையேயுள்ள உறவு முறையின் நெருக்கத்தை வன்மையடையச் செய்வனவாகவுமே இருந்தன. யூகியினது உஞ்சை நகரப் பிரயாணம் இரு நாட்டுக்கு இடையிலும் இத்தகையதோர் நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமென்பதே உதயணன் நோக்கம். பிரச்சோதன மன்னனுக்கும், வாசவதத்தையின் நற்றாய், செவிலித்தாய் முதலியவர்களுக்கும், அரச குமாரர்களாகிய கோபாலன், பால குமாரன் ஆகியோர்க்கும் வேண்டிய அளவு சிறப்பும் பெருமையும் பொருந்திய பரிசில்களை யூகியின் மூலம் உதயணன் கொடுத்தனுப்பினான். தன் நாட்டிலுள்ள அயிராபதம் என்ற மலையிற் கிடைக்கும் சிங்கச்சுவணம் என்னும் பெயரையுடைய தூய பொன்னாற் செய்த அணிகலன்களையும், காந்தார நாட்டிற் தோன்றிய சாதிக் குதிரைகள் நாலாயிரத்தையும், மற்றும் பலவற்றையும் பிரச்சோதனனுக்காக யூகி உஞ்சை நாட்டுக்குப் புறப்படும் பொழுது கொண்டு சென்றான். இவை தவிரத் தத்தையின் தாயார், பிரச்சோதனனின் அரசிளங்குமரர், சிவேதன் ஆகியோர்க்கென அனுப்பிய வேறு பல பரிசிற் பொருள்களும் யூகியைப் பின்பற்றிப் பிற ஊழியர்களால் கொண்டு செல்லப்பட்டன. யூகியோடு கூடப் பிரச்சோதனனுடைய தூதுவர்களாகிய பதுமை முதலியோர் சென்றாலும், தன் அரண்மனையைச் சேர்ந்த விண்ணுத்தராயன் என்ற மிகப் பெரிய வீரனை யூகிக்கு மெய்க்காப்பாளனாகச் செல்லுமாறு ஏவினான் உதயணன். கோசாம்பி நகரத்து அரண்மனையைச் சேர்ந்த தேர்களில் எல்லாம் சிறந்த தேராகிய வையக்கிரம் என்னும் தேரை யூகியின் பிரயாணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அளித்தான். இத்தகைய நிறைவான வசதிகளோடு உஞ்சை நகரப் பிரயாணத்தில் மனம் விரும்பி ஈடுபட்டுப் புறப்பட்டான் யூகி. |