அறிமுகம்

     பழைய காலம், பழைய நடைமுறைகள், பழைய வரம்புகள், பழைய நெறிகள், பழைய மதிப்பீடுகள் இன்றைய வேக வீச்சுக்களில் சரிகின்றன; தகர்கின்றன. பழைய கட்டுமானங்கள்; அவற்றுள் மானுடப் பண்புகளும் குழைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நெறிமுறைகளோடு தகர்க்கப்படும் போது, அவை வெறும் இடிபாடுகள் தாமா, அல்லது, ஒரு புதிய அழகு உதயமாகக் கூடிய அடிநிலையாகுமா என்ற குழப்பம் தோன்றுகிறது.

     மானுடப் பண்புகளின் அடித்தலத்தில் ஊறிய இதயங்களுக்கு, பொருள் சார்ந்த அடித்தலம் அச்ச மூட்டுகிறது; அவ நம்பிக்கையூட்டுகிறது.

     ஆனால்... எதுவும் எதற்காகவும் நிற்பதில்லை.

     மனிதர் குரங்குகள் போல் மரக்கிளைகளில் கூடி, பச்சையூண் புசித்து வாழ்ந்த நாளிலிருந்து, அறிவு துலங்கி மேன்மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் என்று அடி வைத்து ஓட்டமாக ஓடி வந்து கொண்டிருக்கும் இந்த எல்லாக் கால கட்டங்களிலும், தகர்ச்சியும், குழப்பமும் நேர்ந்து கொண்டு தானிருக்கின்றன. அறிவியல் சார்ந்த முன்னேற்றங்கள் - வானளாவச் சென்றிருக்கும் இதே சமயத்தில், மனித சமுதாயம், அமைதி என்ற குறிக்கோளிலிருந்து, பன்மடங்கு தாழ்ந்து கொண்டிருப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

     ஒவ்வொரு கால கட்ட இடிபாடுகளிலிருந்தும், அமைதி, மகிழ்ச்சி என்ற சமநிலைக்கான அழகுகள் இன்று வரை உதயமாகி இருக்கவில்லை. அதனாலேயே, மனித அறிவு, மேலும் மேலும் சாதனைகளை நோக்கி உயருகிறது. சாதனைகள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மாறாக, புதிய சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருப்பதையும் தவிர்க்க முடியவில்லை. இச்சிந்தனைகளின் பிரதிபலிப்பே, “இடிபாடுகள்”.

ராஜம் கிருஷ்ணன்



இடிபாடுகள் : அறிமுகம் 1