சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : ஓசைகள் அடங்கிய பிறகு... - 2 |
3 நீலாவுக்குச் சொல்லி வைத்தாற் போல் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விடும். காலையில் இவளே கோகலே தெரு பால்பூத்தில் சென்று பால் வாங்கி வந்து விடுவதுதான் வழக்கம். கண்ணம்மாவே பிறகுதான் வாசல் தெளித்துக் கோலம் போட வருவாள். பால் வாங்கி வந்து, காபி போட்டு, தண்ணீருக்குப் பம்ப் போட்டு, தயிர் கடைந்து, காய் நறுக்கி, வேலை சங்கிலித் தொடராய் நீளும். இரவே காய்ச்சி வைத்த குடிநீரை, ட்ரம்மில் வடிகட்டி ஊற்ற வேண்டும். இப்போது வெயில் நாட்களில்லை. வெயில் நாட்களானால், பாட்டிலில் ஊற்றிக் குளிரலமாரியில் வைக்க வேண்டும். இரண்டு பள்ளிக் குழந்தைகள். அவர்களால் எவ்வளவு வேலை வளருகிறது? அல்லியும் மனோகரும் குழந்தைகளாக இருந்த போது இப்படிச் சிரமம் தெரிந்ததா? இல்லையே? அவர்களாக எழுந்திருப்பார்கள், பல் துலக்கி, காபி குடித்து விட்டுப் படிப்பார்கள்; புத்தகம் நோட்டு எடுத்து வைத்துக் கொண்டு, குளித்து, இட்லியோ தோசையோ சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் போவார்கள். அல்லி, நீலா படித்த அதே கன்னிமார் பள்ளியில் தான் படித்தாள். அடுத்த தெரு. வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவாள். மனோகருக்குச் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அவனும் ஓரெட்டுப் பகலுணவுக்கு வந்து விடுவான். இப்போது, இந்தப் புதிய பள்ளியும் அருகில் தான் இருக்கிறது. ஆனாலும் குழந்தைகள் - புத்தக நோட்டுச் சுமை - தண்ணீருடன் கொண்டு விடுவதும், சோறு எடுத்துச் செல்வதும் பிறகு கூட்டு வருவதுமே நடவடிக்கைகளாகி இருக்கின்றன. இதற்கு மேல், பிள்ளைகளுக்கு ட்யூஷன்? அல்லி ‘இங்கிலீஷ்’ - மீடியம் என்று படித்தாள். ஆனால் மனோகர், தமிழ் வழிதான் படித்தான். அவன் சிறப்பாகப் படிக்கவில்லையா? மேல்நாட்டில் தொழில் செய்யவில்லையா?... புருஷன் குடிகாரன், கண்ணம்மா, நான்கு வீடுகள் பெருக்கிக் குடும்பம் நடத்துகிறாள். தன் பையன் சரவணனுக்கு, ‘தவணை முறை டொனேஷன்’ செலுத்தி, தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்திருக்கிறாள். சுபலட்சுமிக்கும் யார் யார் சிபாரிசோ பிடித்து டொனேஷனும் கொடுத்து, கன்னிமார் பள்ளி ஆங்கில மொழி வழி வகுப்பில் இடம் பிடித்திருக்கிறாள். இந்த வித்யாரண்ய சங்கரகிரி ஆச்ரமம் ஃபௌன்டேஷன் புதிய இந்துத்துவக் கிளர்ச்சியை ஊக்குவிக்கும் அமைப்பு - ஏராளமான ‘டொனேஷன்’ ஆடம்பரம். எல்லாம், எல்லாம் ஆங்கிலம், இந்தி, வடமொழி, வேதம், உபநிடதம், இராமாயணம், கீதை என்று பிள்ளைகளின் உணர்வில் இந்தியக் கலாசாரம் பாய்ச்சுவதாகச் சொல்லி, மூன்றே ஆண்டுகளில் மூவாயிரம் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வளர்ந்து விட்ட பிரசித்தமான பள்ளி. “எங்க படிக்கிது? சங்கரகிரி - ஆச்ரமம் ஃபௌன்டேஷன் தானே? அதுதாம்மா, இப்ப நல்ல ஸ்டாண்டர்ட்” என்று ஒரு பெயர். இதன் புகழ் பங்களூர் வரை பரவியதால்தான். பிரசாந்த் இங்கே வந்திருக்கிறான். மணி ஏழடிக்கப் போகிறது. “பிரசாந்த்! சுமி! எந்திரிங்க!... ஓ, மணி ஏழு!... ம்...?” திருப்பள்ளியெழுச்சி துடங்கி, இருவரும் படுக்கையில் சண்டையிடும் கட்டம் கடந்து, பல் விளக்கிய பின், இன்று, காபியா, கோகோவா, போர்ன்விடாவா என்று தீர்மானத்துக்கு வரச் சிறிது நேரமாகும். அவனுக்குக் காபியானால், அவளுக்கு போர்ன்விடா. அவனுக்கு எது கலக்கிறாளோ அல்லது அவளுக்கு எது கலக்கிறாளோ, அது அவனுக்கு வேண்டாம்! வீட்டில் இட்டிலி ஊற்றியிருந்தால் அன்று, இட்டிலி பிடிக்காமல் போய்விடும். “கார்ன்ஃப்ளேக்ஸ்!” என்பான் அவன். அவள் “பிரெட் ஜாம்” என்பாள்! இவர்களைச் சமாளிப்பதில் முதுகொடிகிறது. ஆனால் இந்த வரம்புக்குள் அவள் கணவனால் வரமுடிவதில்லை. அவன் உலகமே, அந்த வீட்டின் விசாலமான அறையும், அதில் அவன் வாங்கி அடுக்கியிருக்கும் புத்தகங்களும் தாம். பார்த்தன், தாவரஇயலில் டாக்டர் பட்டம் பெற்று, ஏ.ஜி.எம். கல்லூரியில் பேராசிரியராகப் பெயர் பண்ணி ஓய்வு பெற்றாலும், ஈடுபாடு, வரலாறு, மொழி, சமூக இயல் என்று எத்தனையோ கிளைகளில் பற்றி இருந்தது. அந்தக் காலத்தில் ஹ்யூமனிட்டீஸ் படிப்புக்கு வேலை கிடைக்காது என்று சயன்ஸ் எடுத்தேன். ஏதோ அது பிழைப்புக்கு என்றாயிற்று. மேலே அதில் ஆராய்ச்சி என்று தோன்றவில்லை” என்பான். பட்டங்கள் இல்லாமலே இந்தத் துறைகளில் ஓர் அறிஞர் என்ற பெயரைச் சம்பாதித்திருக்கிறான். பல்வேறு கருத்தரங்குகள், மாநாடுகளில் சிறப்புக் கட்டுரைகள் படித்திருக்கிறான். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என்று சென்றிருக்கிறான். இப்போதும் கூட, அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றின் அழைப்பில், ஏதோ ஒரு திட்டத்தில் கலந்து கொள்ளும் பொறுப்பேற்றுச் செல்ல சந்தர்ப்பம் இருப்பதாகப் பேச்சு. மனோ இவனை வற்புறுத்திக் கொண்டு இருக்கிறான். எனவே, நடைமுறை வாழ்வியலில் அக்கறை காட்டாத ஒரு பிரதிநிதி. கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பின், வெளியே நூலகம், ஆவணக் காப்பகம், அங்கே, இங்கே என்று போவதற்கும், கிறிஸ்து சகாப்தத்துக்கு முந்தைய ஆண்டுகளின் சிந்தனைகளில் இலயிப்பதற்குமே பொழுது சரியாகிறது. இடையில் அவளைப் பார்க்க மாணவர், ஆய்வாளர் என்று வந்தால் நேரம் போவது தெரியாது. குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார் செய்து, அவர்களுடைய தண்ணீர் குப்பிகளைச் சுமந்து கொண்டு வெளிக்கிளம்பும் நேரத்தில், வழுக்கைத் தலையும் சிரிப்புமாக சந்தானம், மோட்டார் பைக்கை விட்டிறங்கி வருகிறார். “அவர் இருக்கிறாரா?” இது அவசியமில்லாத கேள்விதான். அவள் தலையை அசைத்து விட்டு, “ம்... நடங்க!” என்று பேரப் பிள்ளைகளை விரட்டிக் கொண்டு நடக்கிறாள். சந்தானம் சரியான அட்டை. இரண்டாண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்ற பேராசிரியர். வேறு கல்லூரி. மனைவியும் வேலை பார்க்கிறாள். வேம்பாக்கம் சாலையில் பெரிய வீடு - இருவருக்கும் தனித்தனி இரட்டைச் சக்கர வண்டிகள். இரண்டு பையன்கள்; ஒரு மகள் ஒரு பையன். அண்ணாமலை நகரில், பொறியியல் படிக்கிறான். மகள் பாண்டிச்சேரியில் மருத்துவம் படிக்கிறாள். இளையவன் ஸி.ஏ. சேர்ந்திருக்கிறான். மனைவி வங்கியில் வேலை செய்கிறாள். இவ்வளவிருந்தும் பார்த்தனிடம் புத்தகம் இரவல் வாங்க வருவார் - வரலாற்றில் ‘டாக்டர்’ பட்டம் வாங்கியவர். அதற்கே இவனுடைய புத்தக அலமாரி, பேச்சு எல்லாம் பயன்பட்டன. பள்ளி வரையிலும் பிள்ளைகளை விட்டுவிட்டு, அப்படியே கடைக்குச் சென்று காய் வாங்கிக் கொண்டு திரும்புகிறாள். பச்சைக் கொத்துமல்லி நன்றாக இருக்கிறது. அதை ஒரு துவையல் அறைத்தால், பார்த்தனுக்குப் பிடிக்கும்... கொத்துமல்லி விதைத்தால் எலியோ எதுவோ தோண்டித் தின்று விடுகிறது! அடுத்த வீட்டுப் பரிமளா, சிரித்துக் கொண்டே கோயிலுக்குச் செல்கிறாள். கணவர் காலையிலேயே கிண்டி பொறியியல் கல்லூரிக்குச் சென்று விடுவார். மாமியார் வீட்டு வேலை செய்து விடுவாள். கடைகண்ணி வெளி வேலை மாமனார்... இவள் வீட்டிலிருந்தபடியே, புடைவை வியாபாரம், ஊதுபத்தி வியாபாரம் என்று செய்கிறாள். வாணிபத்துக்கு வேண்டிய அத்தனை கவர்ச்சி தந்திர சாமர்த்தியங்கள் தெரிந்தவள். ‘கோயில்’ என்பது, பக்திக்கு மட்டும் அல்ல. வீட்டுப் பொருளாதார சம்பாத்தியத்தில் ஈடுபட்டவர்கள், இந்தப் புற நகரில், காலை ஏழு, ஏழரை என்று வெளியே சென்றால் மாலையில் தான் திரும்புவார்கள். ஆனால், இந்த வீட்டுப் பெண்கள் காலை ஒன்பது மணியில் இருந்து பதினோரு மணி வரையிலும் கூடி ஊர் - சமூக விவகாரங்கள் அனைத்தையும் அலச முடியும். நீலாவுக்கு இந்தப் பக்தியில் ஈடுபாடில்லை. அண்ணனுக்கு இது போன்ற வம்புகள் பிடிக்காது. இவளுக்கும், சிநேகிதர்கள் என்று, கோதை மாமிக்குப் பிறகு யாரையும் அந்நியோந்நியமாகக் கருத முடியவில்லை. இன்னும் சந்தானம் இருக்கிறார். “சதுர அடி முந்நூற்று சொச்சம். டாக்டர் வீட்டுத் தண்ணீர் கரும்பாக இருக்கும். இந்தத் தெருவிலேயே உங்கள் வீட்டுத் தண்ணீர் ஃபர்ஸ்ட், பிறகு டாக்டர் வீடு... என் பையன்கள் தினம் சண்டை போடுறாங்க. தண்ணீரும் நல்லால்ல. வேம்பாக்கம் பஸ்ஸைப் புடிச்சால்தான் மெயின் ரோட் வரலாம். எங்கியோ போய் வீட்டைக் கட்டினிங்கன்னு... கேள்விப்பட்டேன். அதான், நம்ம புரொபசர் வீடு வருதுன்னா...” “ஓ அப்படீல்லாம் ஒண்ணும் யோசனை இல்ல சார்?...” “சொன்னாங்க. உங்க மகன் மகள் ரெண்டு பேரும் ஃபாரின்ல இருக்காங்க. நீங்களோ ரிடயர் ஆயாச்சி. புராஜக்ட்னு, ஸ்டேட்சுக்கு ஒரு ஆறு மாசம் போல வந்திருக்கு. அப்படியே செட்டிலாகலாமே? இங்க என்ன ஸார் இருக்கு?” நீலா கைப்பை நினைவை விட்டகல, அப்படியே நிற்கிறாள். “அப்படி ஒரு யோசனை இதுவரையிலும் எங்களுக்கு இல்ல. என் மிஸஸ், இந்த இடத்தை விட்டு நகரவே மாட்டாங்க. நான் புரோகிராமுக்காகப் போனா, அதுக்கு மட்டும் தான்... வேணா, மகனை மருமகளைப் பார்த்திட்டு வருவேன். அதுவே இன்னும் நிச்சயமாகல...” “இன்னும் என்ன ஸார், நிச்சயம் தான், நீங்க போகிறது... சாம்பு சொல்லிட்டிருந்தாப்பல... நாமெல்லாம் ஹிஸ்டரின்னு பிஎச்டி பண்ணிட்டு உட்கார்ந்திருக்கிறோம். இந்தாளு, ஏதோ பாடனி படிச்சிட்டு இன்னிக்கு இந்த ஆராய்ச்சித் துறையில் நமக்குக் கிடைக்காததை எல்லாம் தட்டிட்டுப் போறாரு!”ன்னு... இதற்கு மேல் நீலாவுக்குக் கேட்கப் பொறுமை இல்லை. கனைத்துக் கொண்டே உட்கதவை, நன்றாகச் சத்தம் செய்யும்படி திறக்கிறாள். “...நமஸ்காரம்மா! கொத்துமல்லி எங்க வாங்கினிங்க? நல்லா இருக்கே!... நம்ம வீட்டில... அவ ஆபீசுக்குப் போயிடறாளா? ரிடயர்டு... நாமதான் கிச்சன் டிபார்ட்மென்ட்! கொத்துமல்லி, பொரிச்ச குழம்பு வச்சா நல்லா இஉர்க்கும் ஃப்ரஷ்ஷா இருக்கு!” “கடையில தான் வாங்கினேன். இப்பவே போனா கிடைக்கும்!” “வந்து நேரமாயிட்டு, போகணும்னு விரட்டுறாங்க!... வரேன், பார்த்தன் ஸார்!” சிரித்துக் கொண்டே போகிறார். நீலா அவர் வண்டியிலேறித் தெருத் திரும்பும் வரை பார்த்துவிட்டு உள்ளே வருகிறாள். “ஏங்க? இவரு என்ன சொல்லிட்டிருந்தாரு?” கற்றையான டைப் தாள்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்த்தன் “என்ன?” என்று நிமிர்ந்து பார்க்கிறான். “என்னமோ வீட்டைப் பற்றிச் சொல்லிட்டிருந்தாரு?” “...அதுவா? நான் ‘அயோவா’ போகப் போறேங்கறது அதுக்குள்ள ஊர் முழுக்கப் பரவிப் போச்சி. வேறென்ன? மகன் மகள் வெளி நாட்டில. இவங்க எதுக்கு இங்க இருக்கப் போறாங்க? வீடு விலைக்கு வருமான்னு ஹேஷ்யம்...” “எதுன்னாலும் நெருப்பு இல்லாம புகையுமா? இப்படி ஒரு பொறியை இவுரா போட்டு புகையுதான்னு பார்க்கிறாரா? என்னமோ சதுர அடி அது இதுன்னு பேசிட்டிருந்தாப்பல?” “அதா... அங்க அதார டாக்டர் வீட்டு ஃப்ளாட்ல ஒண்ணு பாக்கலாமான்னு எங்கிட்ட யோசனை கேட்டாரு...” “ஏன் இவுருக்குத்தான் வேம்பாக்கம் ரோடில, மூணு கிரவுண்ட்ல பெரிய வீடு கட்டிருக்காரு. மேல வாடகையே ஆயிரம் ரூபா போல வருதாம். சுத்தி பத்து தென்ன மரம், ரெண்டு மா, எல்லாம் வச்சிருக்காங்க... வருசா வருசம் அவரக்கா, முருங்கைக்காய்னு எல்லாம் விக்கிறாங்க... இந்த இருட்டிக் காடில எதுக்கு ஃப்ளாட்?...” “அதெல்லாம் எங்கிட்டக் கேட்காதே நீலா!...” “நீங்க ஒண்ணும் கேட்டுக்க மாட்டீங்க. நம்மகிட்டே வந்து எல்லாம் துருவிப்பாங்க...” நீலாவுக்கு ஏனோ எரிச்சலாக இருக்கிறது. எரிச்சலுக்குக் காரணம் - அடியோட்டமான சோபனாவின் கடிதம் தான். பார்த்தன் மீது தான் கோபமாக வருகிறது. நிசமாக ஒரு சாமர்த்தியமும் அறியாதவனோ? அல்லது, அறியாததுபோல் விலகி விடுவதா? இத்தனை வருஷ தாம்பத்தியத்தில் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பதும் கூட ஓர் ஆற்றாமைதான். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, அம்மா... அம்மாதான் ‘சர்வாதிகாரி’ என்று தோன்றக்கூடும். ஆனால், சொல்லாமலே, அந்த வீட்டில் முடிவுகளை எடுப்பவன் அவன் தான் என்று தோன்றுகிறது. இவன் ‘அயோவா’ பல்கலைக்கழகம் செல்லப் போகிறான் என்பதை அவள் அறிவாள். எல்லா முன்னேற்பாடுகளையும் செய்கிறான். எப்போதென்பது தெரியாது. ஆனால் ஒரு பேச்சுக்கு ஆந்திரிகமாக, “நீலா, நீயும் வாயேன்” என்று கேட்டானா? அழைத்தானா? ஏன், மலேசியா, சிங்கப்பூர் என்று வெளிநாடு சென்றானே? கேட்டதுண்டா? அவன் புகழ், அவன் பிரசங்கம், அவன் ஆராய்ச்சி, அவன் ஆராதகர்கள், அவன் மாணவ மாணவியர்... இவள் அவனுக்குச் சமமில்லாத புரொபசரின் மனைவி. காபியோ, எதுவோ கொண்டு போய் வாயில் அறை விருந்தினருக்குக் கொடுக்க வேண்டும். இந்த வீடு... அவளுடையதாம்! என்ன வீடு? வெறும் சிமிட்டியும் செங்கல்லுமா? மகன், மகள், படிப்பு, திருமணம், வேலை எதிலுமே அவளுக்குப் பங்கு இல்லை. மனோ, அப்பா சொற்படி தான் டியூட்டோரியலில் உபரி பரீட்சைகளுக்குப் பணம் கட்டினான். ஐ.ஐ.டி. போனான் - வெளிநாடு சென்றான். உள்ளூற இவளுக்கு அவன் வெளிநாடு செல்வதில் விருப்பமில்லை. வெளிநாடு என்று விட்டுவிட்டால், தனக்கு முதுமையில் - அல்லது தேவைப்பட்ட சமயத்தில், அந்தப் பையனை எதிர் பார்க்க முடியாது... மகள்... மகளையும் தான்... பிலானிக்கு அனுப்பிப் படிக்க வைக்க அவளுக்கு விருப்பமில்லை. படிப்புக்கு ஏகமாகச் செலவு செய்தான். ஒன்றும் அதிகமாகச் சேர்த்து வைக்கவில்லை - இவரைப் போன்ற புரொபசர்கள், உபரித்தொழில் செய்வதை அவள் அறிந்திருக்கிறாள். மனைவி பேரில் கிருஷ்ணசாமி ஒரு பள்ளி நடத்துகிறான். இந்த சந்தானமும் லேசுப்பட்டவரல்ல. ஆனால் இவருக்கோ, நோட்ஸ் போடுவதோ, வேறு வகையில் பணம் பண்ணுவதோ - எதுவும் தெரியாது. நீலா இன்னமும் மகன் மகளுடன் பேச, எஸ்தர் வீட்டுக்குத்தான் டெலிபோனுக்குக் காத்திருக்கிறாள். மனோ சென்ற முறை வந்த போது, பணம் கட்டிப் பதிவு செய்துவிட்டுப் போனான். அந்தத் தொலைபேசி பற்றிக் கேட்கவும் நீலாதான் ஆள் பிடிக்க வேண்டும். இவனுக்குப் புத்தகம் வேண்டுமானால், இல்லையேல், எங்கோ அத்திப்பட்டுக்குப் பக்கத்தில் கல்வெட்டு என்றால், ஓடுவதில்லை? வேர்க்க விருவிருக்கப் போய் வருவதில்லை?... நீலா உரலில் - கிரைண்டரில் அரிசியைப் போட்டு அறைக்க விடுகிறாள். பரபரவென்று காய் நறுக்கி, அரிசி களைந்து, சமையலில் முற்படுகையில் கண்ணம்மா, பெருக்கி, துலக்கி வேலை செய்ய வந்து விடுகிறாள். “...பன்னி வந்து என்ன பண்ணிருக்குப் பாரும்மா?...” கண்ணம்மா, கழிவு நீர் போகும் பக்கமா, வாழை மூட்டுக்கருகில் இரண்டு கரும்புக் கணுக்களை நட்டு வைத்திருந்தாள். ஆடி மாசத்தில் மஞ்சளும் போட்டு வைப்பதுதான். பொங்கலுக்குக் கரும்பு கிடைக்காது. மஞ்சள் தட்டில்லாமல் கிடைக்கும். பன்றி அதைச் சீய்த்துப் பிடுங்கிப் பிய்த்துப் போட்டிருக்கும். சனிய, சனிய... அது எங்கூட்டுப் பக்கம் மூலையில வந்து குட்டி போட்டுத் தொலச்சிருக்கும்மா! ராவு இங்க இடம் தேடத்தான் வந்து முட்டிப் புடுங்கி இருக்கு!” “அதுக்கு இப்பிடி அதையும் இதையும் பிடுங்கிப் போடணுமா?” “இல்லே நீலாம்மா! நினைச்சுப்பாத்தா, அதும் ஒரு பொம்புள போலத்தான? அதுக்கென்ன ஆசுபத்திரியா, மருத்துவமா என்ன இருக்குது? நான் பாத்திருக்கிறே. குட்டி போடுறதுக்குமுன்ன, அது பரபரன்னு புல்லு பூண்டெல்லாம் புடுங்கிச்சி. நேத்து சாயங்காலம் கூட, காலம பாத்தா... எட்டுகுட்டி இருக்குது. ஆனா, நாயிங்க, காக்கா தூக்கிட்டுப் போயிடுதுங்கம்மா! இது எத்தினி நாளக்கி பாதுகாத்துட்டுப் படுத்துக் கிடக்கும்? வவுறு ஒண்ணு இருக்குதில்ல? போயி நாலெடம் அலஞ்சாத்தா... நானே நினைச்சிப் பாத்துக் கஷ்டப்பட்டுக்குவே. நம்மகிட்ட மீதமிஞ்சியாருக்குது? நாமளே மீத மிஞ்சியத் தின்னு வவுறு பொழிக்கிறம்?”... கண்ணம்மா இப்படிப் பேசத் துவங்கினால், வாழ்க்கையில் விரக்தியின் எல்லையில் நிற்கிறாள் என்று பொருள். அந்தக் காலத்தில், புறம்போக்காக இருந்த இந்த இடங்களை, எட்டுக்குடியார் என்ற பன்னீர் - எம்.எல்.ஏவாக இருந்த காலத்தில் கையகப்படுத்தினார் என்று சொல்வார்கள். அந்தத் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராம். நீலா பார்த்ததில்லை. அவர் இப்போது உயிருடன் இல்லை. அவருடைய வாரிசுகள், அமெரிக்கா, லண்டன் என்று அப்போதே பெயர்த்து விட்டார்கள். அவருடைய ஏஜென்ட் போல கண்ணபிரான் அங்கு வந்து தென்னை, மா, நட்டு, கிணறு தோண்டி பெரிய தோப்பாக்கி இருந்தான். அப்போது இங்கே வேலை செய்ய வந்தவன் பெருமாள். அவனை உயர்ந்த சாதி என்று அண்ணன் சொல்வார். நல்ல சிவப்பாக, சுருட்டை முடியுடன் ஒற்றை நாமம் போட்டுக் கொண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருப்பான். அப்போதுதான் இந்தக் காலனி பிள்ளையார் கோயிலும் தொப்புக்கு எதிரே உருவாயிற்று. கன்னிமார் பள்ளியில் வேலை பார்த்த மைதிலி டீச்சரின் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாள் கண்ணம்மா. அவளுடைய பூர்வோத்தரமும் புகைபடிந்த மங்கல்தான். தாய் தகப்பன் இல்லாத அநாதையாக கான்வென்டில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாளாம். கண்ணம்மாளும் பார்க்க உயர்சாதிப் பெண்ணைப் போல் இருப்பாள். மைதிலி டீச்சர் குழந்தை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலை செய்ய என்று தன்னுடன் கொண்டு வைத்துக் கொண்டாளாம். அவளைக் கான்வென்டில் மதம் மாற்றி விட்டார்கள் என்று சிலர் சொல்வார்கள். அவள் கண்ணம்மா அல்ல, ‘காதரீன்’ என்பார்கள். மைதிலி அவளை முன்னின்று பெருமாளுக்குக் கட்டி வைத்தது நீலாவுக்குத் தெரியும். அந்தப் பிள்ளையார் கோயில் முன் தான், அண்ணன், நாகலிங்கம் மாமா, கண்ணபிரான், சுப்புரத்தினம் ஸார், எல்லாரும் முன் நின்று கல்யாணம் செய்து வைத்தார்கள். பெருமாள் நான்கு சவரன் செயின், இரண்டு வளையல்கள், அரை சவரன் தோடு, மூக்குத்தி எல்லாம் போட்டான். அடுத்த வருஷமே சுபலட்சுமி. அதற்கு அடுத்த வருஷத்தில் சரவணன். சுபலட்சுமி சுட்டை முடியும் சிவந்த நிறமுமாக அப்பனையே கொண்டிருந்தது. சரவணன் அவளைப் போல் இருந்தான். பெருமாளுக்கு எவ்வளவு பெருமை! இந்தத் தோட்டம் பராமரிப்பது, கண்ணபிரானின் ஆளாக இருப்பது தவிர, சுண்ணாம்பு அடிப்பது, வேறு மாமரங்களைக் குத்தகை எடுப்பது என்று பணம் சம்பாதிக்கலானான். தன் பெண் பிள்ளைகள் உயர்ந்த மதிப்புடையவர்களுக்குச் சமமாக, பெரிய பள்ளியில் படிக்க வேண்டும் என்று சேர்த்தான். விரலுக்கு மீறிய வீக்கமா? முதுகு தாங்காத பளுவா? உடைந்து போயிற்றா? கண்ணம்மா, வீடு துடைத்தவாறு கண்ணீர் விடுகிறாள். இப்போது அவள் காதுகளில் தோடில்லை; சங்கிலி, வளையல் ஏதுமில்லை. “நீலா, நான் பத்து மணிக்கு வெளியே போக வேண்டி இருக்கு. சீக்கிரம் சமையலாகிடும் இல்ல?” அப்போதுதான் மேசையைப் பார்க்கிறாள் நீலா. இவள் மூடி வைத்த இட்டிலி அப்படியே இருக்கிறது. இந்த இட்டிலி காய்ந்து போக, பத்து மணிக்குள் சமையல்...! காய்ந்த இட்டிலியை கண்ணம்மாளிடம் கொடுக்க வேண்டும்; இல்லையேல் இவள் சாப்பிட வேண்டும். பன்றிகள்... அவை பசித்த நேரம் பார்த்தா சாப்பிட முடியும்? மிஞ்சியது, மீதம், அழுகல்... எது கிடைக்கிறதோ அது கிடைக்கும் போது, பசி, பசியில்லை என்ற உணர்வு இல்லாமல் தின்று வை! அதுதான்... “சீ! இந்த இட்டிலியை தானும் சாப்பிடக் கூடாது. கண்ணம்மாளுக்கும் கொடுக்கக் கூடாது. ஓசைப்படாமல் குப்பையில் கொட்ட வேண்டும். கடைக்குச் சென்று அரிசி, பருப்பு - புழுங்கலரிசி, உளுந்து பார்த்து வாங்கி, அரைத்து, பதமாகப் புளிக்க வைத்து, வார்த்து வைத்தால்... இத்தனை அலட்சியம்! ஏன்? இந்தச் சிரமம் அவன் பட்டிருந்தால் தோன்றுமா? சில நாட்களில், குழந்தைகளும் தொட மாட்டார்கள். பார்த்தனோ, அது சரியாக இல்லை... நீ மோர் ஊற்று!” என்பான், ஈரமேயில்லாமல். நீலா கொட்ட மனமில்லாமல் வயிற்றுக்குள் போட்டுத் தண்ணீர் அருந்துவாள்... பத்து மணிக்கு, தக்காளி சாம்பார், புடலங்காய்ப் பொறியல் என்று சாப்பாடு போட்டுக் கொண்டு, நிற்கிறாள். “நீயும் சாப்பிடேன்? இட்டிலியை என்ன செய்தாய்?” என்று கேட்க மாட்டானா? ஹும்...! “கடலூரிலிருந்து பானுமதி வந்தாலும் வரலாம். அலமாரி மூலையில் தெற்காசிய - இந்தியப் பண்பாட்டு ஒற்றுமைன்னு ஒரு புத்தகம் இருக்கிறது. வந்தால் கொடு...!” “எனக்கு யார் பானுமதின்னு தெரியாது!” “ஓஹ்! ஏன் தெரியாது? இங்கதான் - எங்க காலேஜில் எம்.ஏ. எடுத்தாள். இங்கே வந்திருக்கிறாள். ‘மா’ சிவப்பாகக் கண்ணாடி மாட்டிக் கொண்டிருப்பாள்!” “இப்படி எல்லாம் சொல்லிட்டு, வேற யாரிடமேனும் தான் கொடுத்தால் கேட்கக் கூடாது!” அவன் உறுத்துப் பார்க்கிறான். “என்ன இன்னிக்கு... போதும் போதும், நீ பாட்டில கொட்டாதே ரசத்தை!” “நான் கொட்டல. உங்க புஸ்தகம், ஃபிரன்ட்ஸ், ஸ்டூடன்ட்ஸ் சமாசாரங்களில் நான் என்னிக்கேனும் தலையிட்டிருக்கிறேனா?...” “சரி தலையிட வேண்டாம்! போ நானே பார்த்துக்கறேன்!” இது தான் பதில்... அவன் சாப்பிட்டு முடித்து, கண்ணாடியின் முன், கால்மணி தலை சீவிக் கொண்டு... ஒரு இழை நரைக்கவில்லை. பின்பக்கம் சிறிது அடர்த்தி குறைந்து, முன்பக்கம் உள்ளே சென்றிருக்கிறது. அவ்வளவே. அவனை அறுபது வயதென்று சொல்லத்தான் மாட்டார்கள்... |