1

     பகல் பதினொன்றரைக்குச் சாப்பிட்டதும் சற்றே கண்களை மூட வேண்டும் என்று அயர்ந்து வருகிறது. வயதும் அரை நூறைக் கடந்தாயிற்று. ஆனால், வீட்டுப் பெண்மணிக்கு ஓய்வு - ஓய்வுகால ஊதியம், அது இது என்ன உண்டு? வாசற்பக்கம் வந்து சற்றே நிற்கிறாள் நீலா. படுக்கப் போக வேண்டாம் என்று சொல்வது போல் ஒரு விற்பனைப் பெண், “பிஸ்கோத்து, கைமுறுக்கு, எல்லாம் இருக்கு. வாங்கிக்கிறீங்களா?”

     இரண்டு கைகளிலும் தூக்க முடியாத சுமை. தோள் பை வேறு...

     “...வேண்டாம்மா...” என்று தலையாட்டுகிறாள்.

     ஊமை வெயில் புழுக்குகிறது.

     அவள் படியில் சற்றே சுமையை வைக்கிறாள்.

     “கொஞ்சம் தண்ணீர் குடுங்களேன்?”

     செம்பில் கொண்டு வந்து தம்ளருடன் தருகிறாள். குடித்துவிட்டு, அவள் மீண்டும் சுமை ஏற்றிக் கொண்டு போகிறாள்.

     அப்போது, கிழக்கிலிருந்து மேற்காக ஒரு பன்றிக் குடும்பம் வருகிறது.

     அசிங்கம்... முன்னே கிடாப்பன்றி. வாயின் இரண்டு புறங்களிலும் துருத்திக் கொண்டு பற்கள்... வராகவதாரப் படத்தில் திருமால் பூமிப் பந்தை ஏந்தி நிற்கும் போது, இப்படித் தானே பற்கள் தெரிகின்றன! நீலா இந்த ஐம்பது வயதுக் காலத்தில் இப்படிப் பல்லுள்ள பன்றியையே பார்த்ததில்லையே?...

     கவனித்திருக்கவில்லை. பன்றியை ஆற அமரக் கவனிப்பார்களா? சனியன்! இந்தக் கிடாப்பன்றிக்கு வயதாகி விட்டது போலும்? தோளும் எலும்பும் உறவு விட்ட கோலம்... குட்டை வாலை ஆட்டி ஆட்டிக் கொண்டு, நீலா கல்லெறியப் போகிறாளேஎ என்ற உணர்வுடன் பதுங்கிச் செல்கிறது.

     குடும்பத்தலைவன்... நாலைந்தடி தள்ளி, ஒரு சின்னப் பன்றி. பிரசவ நாள் நெருங்கிவிட்டதற்கறிகுறியாக, மடி தழைந்திருக்கிறது. எத்தனாவது பிரசவமோ? பின்னால் வளர்ந்துவிட்ட பன்றிக்குட்டிகள் சில... மேலும் கூடலுக்குத் தயாரான கொழுத்த பெண் பன்றி ஒன்று...

     விர்ரென்று ஒரு கல் குறிபார்த்து, சினைப் பன்றியின் வயிற்றில் விழ, அது கர்ண கடூரமான குரலை எழுப்புகிறது. மூன்றாம் வீட்டுப் பையன் சிவமணிதான். இவன் எங்கோ கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். இப்போது எங்கும் செல்வதில்லை. விநாயக சதுர்த்தி ஊர்வலம், இந்து மகாசங்கம் ஆகியவற்றுக்காக உண்டி குலுக்கிக் கொண்டு வருகிறான்.

     “சினைப் பன்றியை அடிக்கலாமா?...”

     “இல்லங்க ஆன்ட்டி? இதுங்கதான் நோய்க்கு ஆதாரம். தரித்திரம். அடிச்சிட்டே இருங்க, வராது! அசிங்கம்!”

     இவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே, ஏதோ ஒரு தெருச்சாக்கடைக் குட்டையில் புனித நீராடி திளைத்த மகிழ்ச்சி துள்ள ஒரு குட்டிப்பன்றி ஓடிச்சென்று, அந்தக் குடும்பத்துடன் ஒன்றுகிறது.

     சிவமணி தொடர்ந்து கற்களை வீசிச் சென்று தெருத் திருப்பம் வரை துரத்திவிட்டுத் திரும்புகிறான்.

     “ஆன்ட்டி? டாக்டர் வீடு வித்திட்டாங்க, தெரியுமா?”

     “ஓ...?”

     “வித்திட்டாங்க. பன்னண்டு லட்சம். ‘சிவானந்தா’தான் ஃபிளாட் கட்ட வாங்கிட்டிருக்கிறான். முப்பத்தாறு வீடு வருதாம்!”

     “ஓ... அப்பிடியா? தெரியவேயில்லையே?”

     “டாக்டர் இப்ப இல்ல?”

     “அவுருக்குத்தான் உடம்பு சரியில்ல, நடமாட்டமில்ல. கண்ணம்மாதானே கவனிச்சிக்கிது? டாக்டர் சம்சாரம், பி.பி. அதிகமாகி மகன் கூட போயிட்டாங்க. இவுரு மட்டும், இந்த வீட்டுலதான் கடைசிமட்டும் இருப்பேன்னு இருந்தாரு... இப்ப... ஓல்ட் ஏஜ் ஹோம் சத்யபாமா அம்மா தான் ஏற்பாடு. இவரை அழச்சிட்டுப் போயிட்டாங்க! எல்லாம் பேசித் தீர்மானமாயிட்டது!”

     நீலா மலைத்தாற் போல் நிற்கிறாள். மொத்தம் பதினாறு வீடுகளுக்குப் பிளாட் போட்டார்கள். இது தென்னந்தோப்பாக இருந்த இடமாம். டாக்டர் வீட்டு முன் இப்போதும் இருக்கும் நாகலிங்க மரம், நூறு நூறு வருஷங்கள் இருக்கும் என்று நீலாவின் அண்ணன் சொல்வார். இந்தத் தெருவில் முதல் வீடு கட்டியவர் அவர்... இப்போது முதல் முனை முறிகிறதா?

     மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது.

     “டாக்டர் இப்ப இங்கு இல்லையா?”

     “...இல்ல. நேத்துத்தான் சத்யபாமாம்மா காரில் வந்து அழைச்சிட்டுப் போனாங்க. மகாபலிபுரம் ரோடுல ஒரு முதியோர் இல்லம் வசதியாக வச்சிருக்காங்களாமே? அங்க கூட்டிட்டுப் போயிருக்காங்க!”

     “...ஓ... பள்ளி மணி அடித்தாகி விட்டதா? மைக்கில் பாட்டுச் சத்தம் வருகிறதே!”

     நீலா விருட்டென்று உள்ளே விரைகிறாள்.

     நல்லவேளையாகச் சாப்பாட்டை டப்பியில் தயாரித்து வைத்து விட்டாள். தடுக்குப்பாய், தண்ணீர், எல்லாம் வயர் கூடையில் இருக்கின்றன. குடையை விரித்துக் கொண்டு செல்லுமுன், வாயிற்புற அறையில், புத்தகக் காட்டின் நடுவே காட்சியளிக்கும் கணவனிடம், “வாசற்கதவு திறந்திருக்கு, வெளில வந்து பாத்துக்குங்க! ஸ்கூலுக்குச் சாப்பாடு குடுத்திட்டு வாரேன்!” என்று வெளியேறுகிறாள்.

     பள்ளிக்கூடம், அடுத்த எட்டுக்குடியார் தோட்டம் கடந்ததும், பின் தெருவில் முதலில் இருக்கிறது. ‘சங்கரகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி’ வித்யாரண்ய ஆசிரமம் ஃபௌண்டேஷன்...

     வாசலில் ஒரே நெருக்கடி. புகுந்து புறப்பட வேண்டி இருக்கிறது. பிரசாந்த், அமெரிக்காவில் இருக்கும் மகனின் மகன். சுகுமாரி, அரபு நாட்டில் பணம் தேடத் தொழில் செய்யும் மகள் - மருமகனின் வாரிசு. இரண்டு பேருக்கும் சில மாதங்களே வித்தியாசம்.

     மகன் மனோஹர், கான்பூர் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துவிட்டு, பிரின்ஸ்டனுக்குப் போனான். படிப்பு முடியு முன்பே, மோகினியைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டான். அவள் கன்னடம். தாய் மணவிலக்குப் பெற்று, அமெரிக்காவில் பேராசிரியையாக இருந்தாள். பாட்டன் பாட்டி இருவரும் பங்களூரில் இருக்கிறார்கள். சென்ற ஆண்டில் அவள் தாய், நோய்வாய்ப்பட்டு, பங்களூரில் வந்து தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டாள். மருத்துவம் படித்த மோகினியும் பங்களூரில்தான் இருந்தாள். தாயும் இறந்து போன பின், அவள் மீண்டும் அமெரிக்காவுக்குக் கணவனிடம் சென்று சேருவது எளிதாக இல்லை. முன்பு இருந்த இடத்தில் இருந்து அவன் மாறி ஜார்ஜியா மாநிலத்துக்குச் சென்றிருந்தான். இவருக்கு வசதியான இடம் என்று ஊன்றும் வரையிலும், பிரசாந்தை இங்கே விட்டு வைப்பது என்று தீர்மானம் செய்தார்கள்.

     மகள் அல்லிக்கு மாமன் - மாமி பம்பாயில் இருக்கிறார்கள். அவளும் பிலானியில் படிக்கையில் சதீஷைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவளே. ஐந்து வயது வரையிலும் சுகுவைத் தங்களுடன் வைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு பம்பாயில் பாட்டன் பாட்டி வீட்டில் இருந்தாள். இந்த ஆண்டில் தான், பிரசாந்துடன் இவளும் இருக்கட்டும், நல்ல பள்ளிக்கூடம், அருகில் இருக்கிறது என்று விட்டிருக்கிறார்கள். ஆக, நீலாவுக்கு, கணவர் கல்லூரிப் பேராசிரியப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், புதிய பொறுப்புக்கள் விடவில்லை.

     அவளைக் கண்டதும் இரு குழந்தைகளும் ஓடி வருகிறார்கள். பையன் தான் சிறியவன். ஆனால் பார்ப்பதற்கு அவனே வளர்த்தியாக இருக்கிறான். மனோ நல்ல சிவப்பு. அவன் தந்தையைப் போல். ஆனால் பிரசாந்த் மோகினியைப் போல் சுருட்டை முடியும் மாநிறமுமாக இருக்கிறான். சுகுமாரி பூஞ்சை. அல்லி தாயைக் கொண்டு நீலாவைப் போல் புது நிறம் தான். ஆனால் அந்தக் கண்கள்... மிக அழகானவை... நீலாவுக்கும்...

     கண்ணைப் பாரு! முட்டைக் கண்ணு! என்று பெரியக்கா நிட்டூரமாகச் சொல்வதுண்டு.

     சுகுவுக்கும் அழகிய விசாலமான விழிகள். சதை பிடித்தால் அழகாக இருக்கும். அல்லி வாட்டசாட்டமாக எப்படி இருப்பாள்?

     கல்யாணத்தின் போது, பார்த்தவர்கள், அவனுடைய ஒல்லியான உடல்வாகையும், அவளுடைய வாளிப்பையும் கண்டு, கேலிதான் செய்தார்கள். “டேய் உன்னைத் தூக்கி அவ இடுப்பில வச்சிடப் போறா!”

     அல்லி பெருமை பொங்கச் சிரித்தது நினைவுக்கு வருகிறது.

     “அம்மாம்மா! மிஸ் என்னை டிராமவில் சேர்த்திருக்காங்க! புது டிரஸ் எல்லாம் வாங்கணும்!”

     சுகு சந்தோஷத்துடன் அவள் கையைப் பற்றிக் குதிக்கிறது.

     “ஓ...” என்று சந்தோஷம் காட்டியவாறு நீலா, பாய்களைப் போட்டு, சாப்பாட்டடுக்கைத் திறக்கிறாள்.

     மரத்தடி ஒன்றும் இல்லை. மழை வெயிலானால் கொட்டகை போன்ற வகுப்பறைகளில் தான் சாப்பாடு. இன்னும் மாடி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிறிது சிறிதாகச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் வேப்பங் கன்றுகள் இன்னும் உயர்ந்து வரவில்லை.

     “இவளுக்கு என்ன வேசம் தெரியுமா?” என்று பிரசாந்த் அவளைச் சீண்டி, பன்றி போல் முகம் காட்டுகிறான்.

     “பிக்... பிக்கி...” என்று பன்றி போல் முகத்தை வைத்துக் கொண்டு அவளை முட்ட, அவள் கத்த, அவள் விலக்குகிறாள்.

     “ஷ்... என்ன சண்டை!...”

     “பாருங்க அம்மாம்மா!”

     “பிக்... கட்டர்பிக்... பி...க்!”

     “ஷ்... சாப்பிட வாங்க! பிரசாந்த், ஏற்கெனவே நான் லேட். சீக்கிரம் சாப்பிடுங்க!”

     “ம், சுகு...!”

     சுகு கண்களைக் கசக்குவதில் இருக்கிறது...

     சாப்பாடு விஷயம், பிரசாத்திடம் சிரமமேயில்லை. போட்டதெல்லாம் சாப்பிடுவான். பசி என்றால் வீட்டில் குடைந்து எதையேனும் எடுத்துத் தின்பான். ஹார்லிக்ஸ், போர்ன்விடா, பொடியாகவே உள்ளே போகும். தேங்காய் மூடி, திராட்சை, முந்திரி, எதுவும் விலக்கில்லை. ஆனால், இது சரியான மாய்மாலம்...

     “சுகு...ம், சாப்பிடு!”

     “எனக்கு... இந்தக் குழம்பு புடிக்காது...”

     “ஏண்டி, கண்ணால பார்த்துட்டே புடிக்காதா? இப்ப அவன் சாப்பிடல? மாம்பழம் போட்ட மோர்க் குழம்பு. நம்ப வீட்டு மரத்துல காச்ச கடசிப் பழம். அபூர்வமா, புரட்டாசியில... சாப்பிடு. நல்லாயிருக்கும்” உருட்டி வாயில் போடப் போகிறாள். வாயில் திணித்ததும் ஒக்காளிக்கிறது...

     “கோபமாக வருகிறது. அறையலாம் போல் இருக்கிறது. ஆனால் கையை இழுத்துக் கொண்டு, “என்னடீ சுகு!...” இந்தா தண்ணீரைக் குடி! குழம்பு வேண்டாம். ஒரு வாய் தயிர் சாதம் சாப்பிடு!”

     “எனக்குப் புடிக்கல...”

     சட்டென்று நீலா உடம்பைத் தொட்டுப் பார்க்கிறாள். சூடொன்றும் இல்லை. இது இப்படித்தான்.

     ‘சரி தொலை’ என்று விட்டு விட்டு அவள் கடையைக் கட்டு முன் மணி அடித்து விடுகிறது.

     வீட்டில் வாயில் ‘கேட்’ திறந்திருக்கிறது. பன்றிக் குடும்பம் இவளுடைய சவ்வந்திப் பாத்தியை மிதித்துக் கொண்டு, பின்பக்கம் சாக்கடை குப்பைக் குழிக்குச் சென்றிருக்கிறது.

     “சீ! என்னங்க நீங்க? யார் கதவைத் திறந்து வச்சது...?” அவளுடைய குரலைக் கேட்டுவிட்டுப் பார்த்தான் - அவள் கணவர், வெளியே வருகிறார்.

     “என்னங்க கதவை யார் திறந்தது?”

     “போஸ்ட்மேன் வந்திருக்கிறான். சாத்தாம போயிருக்கிறான். இந்தா, உனக்குத்தான் லெட்டர்!” என்று அவளிடம் கொடுக்கிறார்.



இடிபாடுகள் : அறிமுகம் 1