2

     நீலுவுக்குக் கடிதத்தை வாங்கத் தோன்றவில்லை. பின் பக்கம் சென்று பன்றிக் கும்பலை விரட்டுகிறாள். அந்த சினைப்பன்றி, ஓரமாக, முருங்கை மரத்துக்கும் கறிவேப்பிலைக் கன்றுக்கும் இடையே, தரையைப் பிறாண்டிக் கொண்டிருக்கிறது. அடிக்க மனம் வரவில்லை. சூ... சூ... சூ...! என்று விரட்டுகிறாள். வெளியே அவற்றை விரட்டித் தள்ளு முன் கொண்டை ஊசி கழன்று தலைக்கட்டு அவிழ்கிறது. வியர்வை துளிக்கிறது.

     “சனியன்கள்! இது யாரவுங்க இப்படிப் பன்றிப் படையை இங்கே கொண்டு வந்து விடுறாங்க!...”

     கண்ணம்மா வருகிறாள். “அம்மா! முனிசிபாலிடி ஆளுங்க தா... அவுங்க பன்னிதா. இப்பிடி வுட்டுப் போடுறானுவ. பிறகு புடிச்சிட்டுப் போறானுவ. எங்கூட்டுப் பக்கம், ஒண்ணு வைக்க முடியல! அதுக்காகவே, நானு நாய்க்கு சோறு போட்டு வளக்கிற!”

     “எங்கூட்டுக்குள்லாற இத்தனை நாள் வந்ததில்ல. இன்னிக்கு எப்பிடியோ கதவு திறந்திருக்கு, பூந்திருக்கு. ஆடு மாடு தோட்டத்தை மேயுது, அசிங்கமாயில்ல. இது கண்ட செப்டிக் டாங்க் தண்ணிலியும் புரண்டிட்டு உள்ளாற வந்தா?”

     நீலுவுக்கு யார் மீதென்று சொல்லத் தெரியாமல் ஆத்திரம் வருகிறது. இவர்கள் வீட்டை அடுத்து எட்டுக் குடியார் தோப்பு என்ற பெயர் பெற்ற ஆறு கிரவுன்ட் நிலம் காலியாக இருக்கிறது. இருபது தென்னை மரங்கள், ஜாதி மாமரங்கள் நான்கு, கொய்யா, முருங்கை என்று மிச்சம் இருக்கின்றன. பெரிய தோட்டக் கிணறு, ஓர் ஓரத்தில் கண்ணம்மாளும் பெருமாளும் வசிக்கும் சிறு குடில் இருக்கிறது. பத்தடிச் சதுரத்தில் ஓடு போட்ட அறையில் குளிக்க, துலக்க என்று இரு சார்பு. கல் உரல், அம்மி, இடம் பெற்ற இடம். சற்றுத் தள்ளி ஒரு தடுப்புக்குள் கழிப்பறை. நவீனமான கிராம அபிவிருத்தித் திட்ட சுகாதார முறைக் கழிப்பறை... அங்கே ஓட முடியாமல் கண்ணம்மாளின் பெண் சுபலட்சுமி கல்லை வீசுகிறது.

     “நிறை சூலிப்பன்றி... அலையக் குலைய... இடம் தேடி... ஓடுகிறது... அது குட்டி போட இடம் தேடி அலையிது நீலு! இங்க எங்கனையும் குட்டி போட்டு வைக்கும் தரித்திரம்! பின்ன போகாது...” என்று எதிர் வீட்டுப் பாட்டி - ஏகாம்பரத்தின் அம்மா எச்சரிக்கிறாள்.

     “ஐயோ, எங்க காம்பவுண்டில போன மூணா வருஷம் இந்தப் பன்னிப்படை பண்ண அட்டகாசம், சகிக்கல! கொஞ்ச நாள் இல்லாம இருந்திச்சி. இப்ப மறுபடி வந்திட்டுதுங்க? முனிசிபாலிடி ஒண்ணும் பண்ணுறதில்ல! ‘பன்றிகளை அண்ட விடாதீர், விஷக்காய்ச்சலைப் பரப்பும்’னு பெரிசா டி.வி.ல போடுறான்?” என்று போகிற வழியில் கோடி வீடு சரோஜா சொல்லிக் கொண்டு போகிறாள். மூன்று மணி ட்யூட்டியோ, என்னவோ? டவுனில் ஏதோ ஆஸ்பத்திரியில் ரிசப்ஷனிஸ்டாம்...

     நீலா பிறகுதான் கடித நினைவு வந்தவளாக உள்ளே திரும்புகிறாள். கடிதம் மேலே... கையெழுத்து பரிசயமாக இல்லை. உள்நாட்டுத் தபால்... பம்பாயில் அல்லியின் வீட்டாரிடம் இருந்து வந்தால் பார்த்தசாரதி பெயர்தான் இருக்கும். நீலா பார்த்தசாரதியும் இல்லை, வெறும் நீலா...

     உறையைக் கிழிக்கிறாள்.

     கடிதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்த மொழியில் எழுதப் பட்டிருக்கிறது.

     டியர் ஆண்ட்டீ!

     நான் சோபனா - உங்கள் மூத்த தமக்கை, மங்களாவின் மகளின் மகள் நான். சென்ற ஆண்டில் என் தாயார் நோய் வாய்ப்பட்டு இறந்து போனதை அறிந்திருப்பீர்கள். நான் தற்போது ஸ்வில் இன்ஜினியரிங் டிப்ளமா படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். உங்கள் இடத்துக்குப் பக்கத்தில், துவங்கப்பட்டிருக்கும் பாலாஜி டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் எனக்கு இன்டர்வ்யூவுக்கு வந்திருக்கிறது. அங்கு வந்தால் - வீடு அருகில் இருக்கும் என்று நிரஞ்சன் சொல்கிறான். நான் வருவதாக இருக்கிறேன். ‘அங்கிலு’க்கு என் வணக்கங்கள்!

     -சோபனா

     நீலா திகைத்தாற் போல் நிற்கிறாள்.

     “என்னங்க இது? நீங்க பாருங்க!”

     அவள் அவரிடம் கடிதத்தை நீட்டியபடி தானே பேசிக் கொள்கிறாள்.

     “இங்கே பொழியலூர் - ராமலிங்கபுரம் ரோடில கட்டியிருக்காங்களே அந்த காலேஜா?... அது யாரோ எம்.எல்.ஏ.க்கு சொந்தமாம். டயரக்டா பஸ் விடுறான்... அதுவா?”

     அவர் கடிதத்தைப் படித்து விட்டு அவளிடமே நீட்டுகிறார்.

     “ஏங்க? கேக்கிறேன் பதிலில்ல?”

     “நீ என்ன கேட்டே?”

     “இப்ப இதுக்கு என்ன செய்யிறது? இவங்கல்லாம் யாருன்னே தெரியாது. மங்களம் அக்கா, என்னை மதித்ததே இல்லை. நான் இந்த வீட்டுப் பெண்ணில்லேன்னு நினைப்பு. அல்லி கல்யாணத்தின் போது, அண்ணன் அப்பவே உடம்பு சரியில்லாம இருந்தாரு, அக்காவைப் பார்க்கணும்ணாருன்னு மனோவைக் கூட்டிட்டுப் பாந்த்ரா ஒரு கோடி போனேனே? மதிச்சாங்களா? நேத்து வரை இல்லாத உறவு என்ன வந்திச்சி இப்ப? எனக்கு ஒரு தம்பி இருக்கிறானா என்ன?”ன்னு முகத்தில அடிச்சாப்பல கேட்டுட்டுத் திருப்பிட்டா. இப்ப அவ பேத்தி... எதுக்கு வாரா?”

     “என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்? இது உங்கண்ணன் வீடு; உன் வீடு. அவங்க வரலாம்னா, எழுது; வேணாம்னா, சாக்குச் சொல்லு... உன் இஷ்டம்...”

     “எப்பப்பாரு, நீங்க இப்படித்தான். என் தலையிலே போட்டுட்டுப் பொறுப்பில்லாம நழுவிடுவீங்க!”

     “பின்ன என்னை என்ன பண்ணச் சொல்லுற? இது நான் சம்பாதித்துக் கட்டிய வீடில்லை. உங்கண்ணன் கட்டிய வீடு. உனக்கு இருக்கும் உரிமை தங்களுக்கும் இருக்குன்னு ஏன் நினைக்க மாட்டாங்க?... நீ யோசனை செய்து பாரு, நீலா?”

     உண்மைதான்.

     ஆனால்...?

     நீலாவுக்கு மூன்று தமக்கைகள். மங்களம், புவனேசுவரி, சாவித்திரி. புவனேசுவரி டில்லியில் பையனுடன் இருக்கிறாள். சாவித்திரி மகளுடன் நாக்பூரில் இருந்தாள். வீட்டுக்காரர் ஃபாக்டரி மானேஜராக, மகா தோரணையாக இருப்பார். அல்லி எதோ இண்டர்வ்யூ என்று சென்ற போது, முகம் கொடுத்துக் கூடப் பேசவில்லையாம் -

     “நீலா பொண்ணு...” என்றாளாம் சாவித்திரி.

     “யாரு நீலா?” என்றாராம்.

     “யாரு? எங்கம்மா செத்தப்புறம் அப்பா கொஞ்சிக் குலாவினாரே, அந்தப் பொண்ணு?” என்றாளாம். அல்லி இங்கே வந்து இதற்குப் பொருள் கேட்டாள். நீலாவுக்கும் தெரியாது. இப்படி ஒரு உறவுகாரர்களிடம் இவளை அண்ணன் காட்டிக் கொடுக்கவில்லை. அண்ணன் ஒரே பிள்ளை. குலக்கொழுந்து. அம்மாவுக்கு மூன்று பெண்களுக்குப் பிறகு, ராமேசுவரம் போய்ப் பிறந்த பையன். இவளோ, அம்மாவைப் பிறக்கும் போதே படுக்கையில் தள்ளியவள். அம்மா முகமே நீலுவுக்குத் தெரியாது. சின்னம்மா, அவள் தான் ஆயா. அவள் பால் குடித்தாளாம்... அவள் பாட்டி... அம்மா இறந்த பின், சாவித்திரி அக்கா கல்யாணம் தான் கடைசியில் நடந்ததாம். இவளைக் கரித்துக் கொட்டியதால், ஆண்டான் கோயில் ஊருக்கே சென்று சின்னம்மா இவளை ஐந்து வயது வரையிலும் வைத்திருந்தாளாம்.

     அண்ணனுக்கும் இவளுக்கும் பதினான்கு வயது வித்தியாசம். சின்ன வயசில், அண்ணன், பள்ளிக்கூடத்தில் இருந்து சைக்கிளில் இவளுக்கு, மிட்டாயும் பூவும் வாங்கி வந்து தந்ததும், சைக்கிளில் வைத்துக் கொண்டு கோவிலைச் சுற்றி ஒரு தடவை கூட்டிச் சென்றதும், நினைவில் பசுமையாக இருக்கின்றன.

     சின்னம்மா... பெரிய பொட்டு வைத்துக் கொண்டு, எட்டுக்கல் பேசரியும் தோடும் போட்டிருப்பாள்.

     இப்போதும் நிழல்போல் நினைவு வருகிறது. அப்பா காலமாகுமுன்பே அவள் காவிரியாற்றுடன் சுழலில் போய் விட்டாள்.

     “அடி பாவி! ஆத்தாளையே முழுங்கிட்டியே?” என்று கொண்டையம்மாள் - இவளைக் காட்டிக் காட்டி மாரடித்ததும், ஆற்றிலிருந்து அவளை பேட்ட வாத்தலைக்காரர் இழுத்து வந்து போட்டதும்... மங்கலான நினைவுகளே.

     சீ...!

     இதெல்லாம் இப்போது எதற்கு?

     ஊரில் அப்பா இறந்த போது, அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அண்ணன் கல்லூரிப் படிப்பு முடித்து, உள்ளூரில் நிலையில்லாமல் ஒரு வாத்தியார் வேலை செய்து கொண்டிருந்தான். அப்பாவின் மரணத்துக்கு மங்களம் அக்கா வந்திருந்தாள். வேறு யார் யார் என்று நன்றாக நினைவில்லை. ஏனெனில், அப்பாவின் காரியங்கள் காசியில் செய்ய வேண்டும் என்று சொல்லி, மறுநாளே எல்லோரும் புறப்பட்டுப் போய் விட்டார்கள். அவளை யாருமே கூட்டிச் செல்லவில்லை.

     “அழாதே நீலு! இப்ப அங்கெல்லாம் குளிரு காலம். நீ பாட்டி, கூட இருந்துக்க! நல்ல பெண்ணாச்சே!” என்று ஆறுதல் கூறினான், அந்த அண்ணன். அவன் தான் அவளுக்குத் தாய், தந்தை எல்லாமாக இருந்தவன். அவனிடம் மற்றவர்கள் உறவு கொண்டாடக் கூடத் தகுதி இல்லாதவர்கள்...!

     எட்டுக்குடித் தோப்பை ‘எல்.ஐ.ஸி’க்காரர்கள் காலனித் தெருவாக மாற்ற வீடு கட்டியவர்களில் அண்ணன் கோவிந்தனுக்கு முக்கியமான பங்கு உண்டு.

     எல்.ஐ.ஸி.யில் வேலைக்குச் சேர்ந்து, அவளையும் கூட்டி வந்து சென்னையில் குடும்பம் தொடங்கிய போது, அவளுக்குப் பதினோரு வயசிருக்கலாம். திருவல்லிக்கேணியில் ஸி.எஸ்.ஐ. மிஷன் பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது சேர்ந்து படித்தாள். அண்ணனே அவளுக்கு எல்லாம். ஒரு பெரிய கூடமும் எதிரும் புதிருமான இரண்டு அறைகள். வீட்டில் நிறையக் குடித்தனங்கள் உண்டு.

     கோதை மாமி...! அந்த மாமியை நினைத்தால் கண்கள் பசைத்து விடும்... அண்ணன், சீர் செய்நேர்த்தி, காசு பணம், உறவு மக்கள் என்று பார்க்காமல், சொர்ணாம்பாள் என்ற பெண்ணைத் திருநீர் மலையில் வைத்துக் கல்யாணம் செய்து கொண்ட போது, உறவாக வந்தவர் அவர் தாம்.

     தாயில்லாத ஏழைப் பரிசாரகர் பெண், எனக்குப் பிடித்திருக்கிறது; நல்ல குணம். கல்யாணம் இன்ன இடத்தில் இந்தத் தேதியில் நடத்த நிச்சயம் செய்திருக்கிறோம்; நீங்கள் பெரியவர்களாக வந்திருந்து நடத்தி வைக்க வேண்டும் என்று எல்லாத் தமக்கைகளுக்கும் கடிதம் போட்டார். ஆனால் ஒருத்தி கூட வரவில்லை. மங்களம் மட்டும், “யாரை முன் வைத்து நிச்சயம் செய்தாயோ, அவர்களை வைத்தே நடத்திக் கொள்ளலாமே? எங்களுக்குத் தெரிவித்ததற்கு சந்தோஷம். எங்கள் ஆசீர்வாதம்...” என்று பத்து ரூபாய் மணியார்டர் செய்திருந்தாள். அண்ணன் காட்டிக் கொள்ளவில்லை.

     “கோதை மாமி நீங்கள் தாம் இங்கே பெரியவர்... என்று அண்ணன் அவர்களை அழைத்து வணங்கியதும், மாமி “எதுக்குக் கண் கலங்கறேப்பா? நாங்கள் இல்லையா?” என்று சொன்னதும் இப்போது போல் இருக்கிறது! கோதை மாமியின் வீட்டுக்காரர் பெயர் பாண்டுரங்கன். மைசூர் சமஸ்தானத்துக் கோயில் ஒன்றுக்கு - கோயமுத்தூரில் மணியமாக இருந்தாராம். பக்கவாதம் வந்து நா விழுந்து விட்டது. குழந்தை குட்டி கிடையாது. இங்கே முற்றம் சார்ந்த ஒரே அறையில் தான் அவர்கள் இருபது ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். முற்றத்தில் நித்யமல்லி பூக்கும்; அடிகுழாயில் தான் தண்ணீர் எடுக்க வேண்டும். தாயில்லாத அவளுக்கும், அண்ணி சொர்ணாவுக்கும் அவள் எத்தனை வண்மைகள் செய்திருக்கிறாள்! பூக்கட்டிக் கொடுப்பதுதான் மாமியின் தொழில். பூக்கடையில் இருந்து ஒரு பூக்காரி, மல்லிகை, மரு, கனகாம்பரம், என்று கொண்டு வந்து போடுவாள்.

     பாடிக் கொண்டே பூத்தொடுப்பாள்.

     கண்ணன் வந்தாண்டி! எங்கள் கண்ணன் வந்தாண்டி! மாயக்கண்ணன் வந்தாண்டி! மாயக்கண்ணன் - மதுரை மன்னன், மந்தகாசம் செய்து கொண்டு மாலை சூடினான் - ராதைக்கு மாலை சூடினான்... என்று பாடுவாள். அந்த வேலைக்கு ஒன்றோ இரண்டோ தான் கூலி.

     மாமி கூடத்தில் மாக்கோலம் போட்டால், பார்த்துக் கொண்டே இருக்கலாம், சொர்ணா முதல் தடவை கருவுற்றிருந்த போது மாமி அவளுக்கு வங்கிப் பின்னல் என்ன, பூத்தையல் என்ன என்று விதவிதமாக அலங்காரம் செய்தாள். முதல் கரு மூன்று மாதத்துக்குள் கலைந்து போயிற்று.

     மாமிதான் கோஷா ஆசுபத்திரிக்குக் கூட்டிச் சென்று தேறுதல் கூறினாள்.

     “அழாதேடா கண்ணா, அடுத்த வருஷமே ராஜாப்பயல் பிறந்து இங்கே தவழ்வான்” என்று அண்ணியின் கண்களைத் துடைத்து, பக்குவமாகச் சமைத்துப் போட்டு... ஆனால் அடுத்த தடவை அவள் கருவுற்ற போது... மாமி இல்லை... இப்போது நினைத்தாலும் அது அதிசயமாக, அற்புதமாக இருக்கிறதே?

     மாமா, படுக்கையாக - மலசலம் கூட எழுந்திருக்க முடியாதவராக ஓய்ந்து போனார். ஆனால், அந்தச் சிறு அறையில், ஒரு நோயாளி இருப்பதான ஒரு வாடை தெரியுமா? பதினோரு மணிக்கு வந்து விழும் முல்லையும் தவனமும் தான் மணக்கும். வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் படம் சந்தனப் பொட்டும் பூவுமாக, முதலில் கண்களில் படும்.

     ஒரு நாள் அதிகாலையில் மாமி அண்ணாவை வந்து எழுப்பினாள்.

     “கோவிந்தா! அப்பா கோவிந்தா?...”

     அண்ணன் அறைக்கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தார்.

     “என்ன மாமி?”

     “மாமாவை வந்து பாருடா கண்ணா, ஒரு மாதிரி மூச்சு வரது. கூப்பிடக் கூப்பிடப் பதிலே இல்லை. இப்படி இருக்க மாட்டார் கோவிந்து!”

     மன்னி, அண்ணா இருவருமே ஓடினார்கள். அண்ணா உடனே சட்டையைப் போட்டுக் கொண்டு டாக்டரைக் கூப்பிட விரைந்தான்.

     டாக்டர் வந்து பயனில்லை. மாமா போய்விட்டார்.

     “ராஜா, எனக்கு முன்னாடி போய் என்ன விடலாமா? ஹே கிருஷ்ணா! நீ இப்படி பண்ணிட்டியே! நான் என்ன பண்ணுவேண்டா! என்னைக் காட்டிக் குடுத்திட்டியேடா!” என்று கிருஷ்ணன் படத்தின் முன் நின்று கதறினாள்.

     அண்ணியும் அண்ணாவும் யாருக்கானும் சொல்லி அனுப்பணுமா என்று கேட்டதாகக் கூடத் தெரியவில்லை.

     “கோவிந்தா! கோவிந்து... நான் என்னடா பண்ணுவேன்?”

     மாமியிடம் சம்புடத்தில் இருந்த இருபது ரூபாய்தான் சொத்து. கையில் கண்ணாடி வளையல். கழுத்தில் தாலியில் மஞ்சள் கிழங்குதான் மிச்சம்.

     அண்ணன் தேற்றினார். “மாமி, நீங்கள் எனக்கு, எங்களுக்குத் தாயார். அழக்கூடாது!”

     அவர் தான் மாமாவுக்குக் கொள்ளி வைத்தார்.

     அந்த மாமிக்காக மாமா சம்பாதித்தாரா? எந்த விதத்தில் அவருக்குத் துணையாக ஆதரவாக இருந்தார்? ஒரு குழந்தை? சொத்து?

     கோயில் சொத்தை அதருமமாக விளையாடினார். அதன் தண்டனை என்று முன்பே அங்கே அக்கம் பக்கம் பேசிக் கொண்டார்கள். இந்த மாமியை நல்ல நாட்களில் வைத்துக் கொள்ளவே யில்லையாம். அவர் செய்த குற்றங்களுக்கு அபராதம் கட்டியவள், மாமி! தண்டனை பெற்றவளும் இவள்!

     இதுவா கற்பு? கற்பு?

     மாமா செத்துப் போன பத்தாம் நாளே, கோதை மாமி தூக்கத்திலேயே செத்துப் போனாள்.

     பிறகு பூத்தொடுக்கவே அங்கு யாருமில்லை. கோதை மாமிக்கும் அண்ணனே எல்லாம் செய்தார்.

     கற்பரசிகளின் தன்மைபற்றி, திலகவதி டீச்சர் விளக்குவாள்.

     கண்ணகியை விடத் தலையாய கற்புடைப் பெண்மணி - யானோ அரசன் - யானே கள்வன் என்று பாண்டிய மன்னன் தன் அரியணையில் இருந்து சாய்ந்த அக்கணமே உயிர் நீத்த கோப்பெருந்தேவிதான்...

     இன்று நினைத்துப் பார்க்கிறாள் நீலா.

     கோதை மாமியின் கற்பு எத்தகையது?

     இந்தக் கற்புக் கலாசார வேர் எங்கிருக்கிறது? இது கோதை மாமி போன்ற பெண்களை எங்கே வைக்கிறது? தன் காலால் நின்றாள்; புருஷனைத் தாங்கினாள். சுகப்பட்டாளா? ஆனால், அந்த ஒரே நாளில் அவள் அழுதாள். பத்து நாட்கள் அணைந்த திரி போல் இருந்தாள். அடங்கிப் போனாள்.

     பிறகு தான் அண்ணா... இங்கே... மின்சார வண்டியிலேறி வந்து, நடக்கவும் வேண்டிய தொலைவுக்கு, அலுவலகக் காலனி என்று வீடு கட்டிக் கொண்டு வந்தான். இரண்டு வருஷம் கழிந்த பின்... அண்ணி இந்தப் புது வீட்டில் வந்த பின் கருவுற்றாள்.

     கோதை மாமி இல்லை. பக்கத்தில், சீனிவாசனின் அம்மா, பார்வதி... அவ்வளவு ஒட்டிக் கொள்ளவில்லை. என்றாலும் கூப்பிட்ட குரலுக்கு வருவாள். மூன்றாவது வீட்டில் எஸ்தர் ராஜசேகரன். அவளுக்கே ஆறு பெண்கள் அடுக்கடுக்காய். புருஷன் இறந்த பின், அவளுக்கு - படித்திருந்ததால் அதே அலுவலகத்தில் வேலை கொடுத்திருந்தார்கள். ஜாய்... மூத்த பெண். “கோவிந்த் அங்கிள்...” என்று கூப்பிட்டுக் கொண்டு வருவாள்.

     வளையல் காப்பு, சீமந்தம் என்று சடங்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் டாக்டரிடம் காட்டி, கருத்தாகத்தான் பேணினான்.

     ஒரு நாள் இரவு வலி எடுத்தது. பார்வதி அம்மா, எஸ்தர் மாமி எல்லாரும் வந்தார்கள். அப்போது இங்கே பிரபலமாக “நர்ஸிங் ஹோம்” என்று ஒன்றும் இல்லை. சைதாப்பேட்டையில் தான் அந்த டாக்டர் அவளுடைய பிரசவமனைக்குக் கொண்டு விடச் சொன்னாள். பிரசவிக்காமலே, கொண்டு சென்ற சிறிது நேரத்தில் இறந்து போனாள்.

     இவ்வளவு பெரிய துயரத்தில் அண்ணனுக்கு ஆறுதல் சொல்ல, ஒட்டு உறவென்று, எந்த அக்கா உடனே வந்தாள்?

     கையில் இருக்கும் அந்தக் காகிதம் கசங்குகிறது...



இடிபாடுகள் : அறிமுகம் 1