உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 2 ... 2.11. சீகாழி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 111 நல்லானை நான்மறை யோடிய லாறங்கம் வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம் இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே. 2.11.1 112 நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை அம்மானை அந்தணர் சேரு மணிகாழி எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே. 2.11.2 113 அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால் பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள் விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே. 2.11.3 114 புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச் சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும் அற்றானை அந்தணர் காழி யமர்கோயில் பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 2.11.4 115 நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம் விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய கதியானைக் காருல வும்பொழிற் காழியாம் பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே. 2.11.5 116 செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம் ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே. 2.11.6 117 துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார் அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே. 2.11.7 118 குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும் வென்றானை மென்மல ரானொடு மால்தேட நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள் நன்றானை நம்பெரு மானை நணுகுமே. 2.11.8 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 2.11.9 119 சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர் மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின் பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக் கோவாய கொள்கையி னாணடி கூறுமே. 2.11.10 120 கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள் ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித் தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே. 2.11.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 2.12. திருவேகம்பம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 121 மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண் பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத் துறைவானை யல்லதுள் காதென துள்ளமே. 2.12.1 122 நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம் உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான் கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே. 2.12.2 123 பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி சீராலே பாடலா டல்சிதை வில்லதோர் ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச் சேராதார் இன்பமா யந்நெறி சேராரே. 2.12.3 124 குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய் மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள் மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ் சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே. 2.12.4 125 சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங் கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள் புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம் உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 2.12.5 126 மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங் கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந் தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே. 2.12.6 127 விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார் கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத் தண்ணலா ராடுகின் றவலங் காரமே. 2.12.7 128 தூயானைத் தூயவா யம்மறை யோதிய வாயானை வாளரக் கன்வலி வாட்டிய தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம் மேயானை மேவுவா ரென்றலை மேலாரே. 2.12.8 129 நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார் பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர் ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும் மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே. 2.12.9 130 போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள் ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம் நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே. 2.12.10 131 அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக் கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால் சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம் பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே. 2.12.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - ஏகாம்பரநாதர் தேவி - காமாட்சியம்மை 2.13. திருக்கோழம்பம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 132 நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர் ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர் கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பம் மேவிய ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே. 2.13.1 133 மையான கண்டனை மான்மறி யேந்திய கையானைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய செய்யானைத் தேன்நெய்பா லுந்திகழ்ந் தாடிய மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே. 2.13.2 134 ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும் வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய காதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய நாதனை யேத்துமின் நும்வினை நையவே. 2.13.3 135 சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய விடையானை வேதமும் வேள்வியு மாயநன் குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம் உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே. 2.13.4 136 காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி தாரானைத் தையலோர்பால்மகிழ்ந் தோங்கிய சீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவிய ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே. 2.13.5 137 பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவக் கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக் கொண்டானைக் கூறுமின் உள்ளங் குளிரவே. 2.13.6 138 சொல்லானைச் சுடுகணை யாற்புரம் மூன்றெய்த வில்லானை வேதமும் வேள்வியு மானானைக் கொல்லானை உரியானைக் கோழம்பம் மேவிய நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே. 2.13.7 139 விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக் குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச் செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம் பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே. 2.13.8 140 நெடியானோ டயனறி யாவகை நின்றதோர் படியானைப் பண்டரங்க வேடம்ப யின்றானைக் கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின் கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே. 2.13.9 141 புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப் பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக் கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே. 2.13.10 142 தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர் நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறை விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே. 2.13.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - கோகுலேசுவரர் தேவி - சவுந்தரியம்மை 2.14. திருவெண்ணியூர் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 143 சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும் விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 2.14.1 144 சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம் ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில் நீதியை நினையவல் லார்வினை நில்லாவே. 2.14.2 145 கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும் முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில் இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே. 2.14.3 146 மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க் காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை ஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே. 2.14.4 147 நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத் தாரானைத் தையலோர் பாகமு டையானைச் சீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே. 2.14.5 148 முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத் தொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காய வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே. 2.14.6 149 காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப் பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின் மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே. 2.14.7 150 மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச் செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப் பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே. 2.14.8 151 மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங் கண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணா விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே. 2.14.9 152 குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின் விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில் தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே. 2.14.10 153 மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன் திருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார் பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே. 2.14.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வெண்ணிநாயகர் தேவி - அழகியநாயகியம்மை 2.15. திருக்காறாயில் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 154 நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத் தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ் சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே. 2.15.1 155 மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர் விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும் நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற் பதியானே யென்பவர் பாவமி லாதாரே. 2.15.2 156 விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர் மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங் கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில் எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே. 2.15.3 157 தாயானே தந்தையு மாகிய தன்மைகள் ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில் மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே. 2.15.4 158 கலையானே கலைமலி செம்பொற் கயிலாய மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில் நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 2.15.5 159 ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும் போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில் நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 2.15.6 160 சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள் ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர் காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில் ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 2.15.7 161 கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம் எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர் கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில் அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 2.15.8 162 பிறையானே பேணிய பாடலோ டின்னிசை மறையானே மாலொடு நான்முகன் காணாத இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில் உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே. 2.15.9 163 செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும் படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில் குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே. 2.15.10 164 ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில் ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல் வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே. 2.15.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - கண்ணாயிரநாதர் தேவி - கயிலாயநாயகியம்மை 2.16. திருமணஞ்சேரி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 165 அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 2.16.1 166 விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான் மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே. 2.16.2 167 எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய இப்பாலா யெனையும் ஆள வுரியானை வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே. 2.16.3 168 விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம் உடையானை ஊழிதோ றூழி உளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே. 2.16.4 169 எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம் வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச் செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே. 2.16.5 170 மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம் பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே. 2.16.6 171 எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக் கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே. 2.16.7 172 எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள் கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே. 2.16.8 173 சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங் கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே. 2.16.9 174 சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர் சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. 2.16.10 175 கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி பண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே. 2.16.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மணவாளநாயகர் தேவி - யாழ்மொழியம்மை 2.17. திருவேணுபுரம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 176 நிலவும் புனலும் நிறைவா ளரவும் இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார் உலவும் வயலுக் கொளியார் முத்தம் விலகுங் கடலார் வேணு புரமே. 2.17.1 177 அரவார் கரவன் அமையார் திரள்தோள் குரவார் குழலா ளொருகூ றனிடங் கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு விரவா கவல்லார் வேணு புரமே. 2.17.2 178 ஆகம் மழகா யவள்தான் வெருவ நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம் போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள் மேகந் தவழும் வேணு புரமே. 2.17.3 179 காசக் கடலில் விடமுண் டகண்டத் தீசர்க் கிடமா வதுஇன் னறவ வாசக் கமலத் தனம்வன் றிரைகள் வீசத் துயிலும் வேணு புரமே. 2.17.4 180 அரையார் கலைசேர் அனமென் னடையை உரையா வுகந்தா னுறையும் இடமாம் நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை விரையார் பொழில்சூழ் வேணு புரமே. 2.17.5 181 ஒளிரும் பிறையும் முறுகூ விளவின் தளிருஞ் சடைமே லுடையா னிடமாம் நளிரும் புனலின் னலசெங் கயல்கள் மிளிரும் வயல்சூழ் வேணு புரமே. 2.17.6 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.17.7 182 ஏவும் படைவேந் தன்இரா வணனை ஆவென் றலற அடர்த்தா னிடமாந் தாவும் மறிமா னொடுதண் மதியம் மேவும் பொழில்சூழ் வேணு புரமே. 2.17.8 183 கண்ணன் கடிமா மலரிற் றிகழும் அண்ணல் இருவர் அறியா இறையூர் வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள் விண்ணிற் றிகழும் வேணு புரமே. 2.17.9 184 போகம் மறியார் துவர்போர்த் துழல்வார் ஆகம் மறியா அடியார் இறையூர் மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல் மீகம் மறிவார் வேணு புரமே. 2.17.10 185 கலமார் கடல்போல் வளமார் தருநற் புலமார் தருவே ணுபுரத் திறையை நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே. 2.17.11 திருச்சிற்றம்பலம் திருவேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 2.18. திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 186 சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே. 2.18.1 187 சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. 2.18.2 188 அறையார் கழலும் மழல்வா யரவும் பிறையார் சடையும் முடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. 2.18.3 189 ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே. 2.18.4 190 துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன மணிநீ லகண்ட முடையாய் மருகல் கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன் அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே. 2.18.5 191 பலரும் பரவப் படுவாய் சடைமேல் மலரும் பிறையொன் றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந் தலரும் படுமோ அடியா ளிவளே. 2.18.6 192 வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகல் பெருமான் தொழுவா ளிவளைத் துயராக் கினையே. 2.18.7 193 இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் லிவளை அலராக் கினையே. 2.18.8 194 எரியார் சடையும் மடியும் மிருவர் தெரியா ததோர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெருமான் அரியாள் இவளை அயர்வாக் கினையே. 2.18.9 195 அறிவில் சமணும் மலர்சாக் கியரும் நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார் மறியேந் துகையாய் மருகற் பெருமான் நெறியார் குழலி நிறைநீக் கினையே. 2.18.10 196 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே. 2.18.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மாணிக்கவண்ணர் தேவி - வண்டுவார்குழலி 2.19. திருநெல்லிக்கா பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 197 அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள் நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.1 198 பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல் மதிதா னதுசூ டியமைந் தனுந்தான் விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும் நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.2 199 நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக் கலந்தா னதுகொண் டகபா லியுந்தான் புலந்தான் புகழா லெரிவிண் புகழும் நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.3 200 தலைதா னதுஏந் தியதம் மடிகள் கலைதான் திரிகா டிடம்நா டிடமா மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.4 201 தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல் உவந்தான் சுறவேந் தனுரு வழியச் சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில் நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.5 202 வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான் குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும் நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.6 203 பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான் இறைதான் இறவாக் கயிலை மலையான் மறைதான் புனலொண் மதிமல் குசென்னி நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.7 204 மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக் குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.8 205 தழல்தா மரையான் வையந்தா யவனுங் கழல்தான் முடிகா ணியநா ணொளிரும் அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும் நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.9 206 கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன் மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.19.10 207 புகரே துமிலா தபுத்தே ளுலகின் நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன பகர்வா ரவர்பா வமிலா தவரே. 2.19.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - நெல்லிவனேசுவரர் தேவி - மங்களநாயகியம்மை 2.20. திருஅழுந்தூர் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 208 தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந் தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர் வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 2.20.1 209 கடலே றியநஞ் சமுதுண் டவனே உடலே உயிரே உணர்வே யெழிலே அடலே றுடையாய் அழுந்தை மறையோர் விடலே தொழமா மடம்மே வினையே. 2.20.2 210 கழிகா டலனே கனலா டலினாய் பழிபா டிலனே யவையே பயிலும் அழிபா டிலராய் அழுந்தை மறையோர் வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 2.20.3 211 வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே அழுந்தை யவரெம் மானே யெனமா மடம்மன் னினையே. 2.20.4 212 அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான் நிலையார் மறியும் நிறைவெண் மழுவும் இலையார் படையும் மிவையேந் துசெல்வ நிலையா வதுகொள் கெனநீ நினையே. 2.20.5 213 நறவார் தலையின் நயவா வுலகிற் பிறவா தவனே பிணியில் லவனே அறையார் கழலாய் அழுந்தை மறையோர் மறவா தெழமா மடம்மன் னினையே. 2.20.6 214 தடுமா றுவல்லாய் தலைவா மதியம் சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில் அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர் நெடுமா நகர்கை தொழநின் றனையே. 2.20.7 215 பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங் கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய் அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் வெரியார் தொழமா மடம்மே வினையே. 2.20.8 216 மணீநீள் முடியான் மலையை அரக்கன் தணியா தெடுத்தான் உடலந் நெரித்த அணியார் விரலாய் அழுந்தை மறையோர் மணிமா மடம்மன் னியிருந் தனையே. 2.20.9 217 முடியார் சடையாய் முனநா ளிருவர் நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள் அடிமே லறியார் அழுந்தை மறையோர் படியாற் றொழமா மடம்பற் றினையே. 2.20.10 218 அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர் பெருஞா னமுடைப் பெருமா னவனைத் திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள் உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே. 2.20.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வேதபுரீசுவரர் தேவி - சவுந்தராம்பிகையம்மை |