திருவிசைப்பா - Thiruvisaippa - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


ஒன்பதாம் திருமுறை

திருவிசைப்பா

     சைவத்திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு. அவற்றில் முதல் ஒன்பது திருமுறைகள் தோத்திரம் என்றும், பத்தாவது சாத்திரம் என்றும், பதினொன்றாவது பிரபந்தம் என்றும் பன்னிரண்டாவது புராணம் என்றும் வழங்கப்படும். ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்று பெயர் பெறும். திருவிசைப்பா மாலை என்று அழைக்கப் பெறும். இத் திருமுறையில் 29 பதிகங்கள் உள்ளன. தற்சமயம் 301 பாடல்களே கிடைத்துள்ளன. தேவாரத்தைப் போன்று இதற்கும் பண் வகுக்கப் பட்டுள்ளது. ஒன்பதாம் திருமுறையை திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலிஅமுதனார், புருடோ த்தம நம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மரால் அருளிச் செய்யப் பெற்றனவாகும். இத்திருமுறையில் உள்ள 29 பதிகங்களில் 16 தில்லையம்பதிக்கு உரியன. ஏனைய 13 பதிகங்கள் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோளேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் ஆகிய 13 தலத்துக்கு ஒரு பதிகமாக அமைந்துள்ளன.

1. திருமாளிகைத் தேவர் அருளியது

1. கோயில் - ஒளிவளர் விளக்கே
பண் - பஞ்சமம்

ஒளிவளர் விளக்கே! உவப்பிலா ஒன்றே!
      உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
      சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே!
      அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
      தொண்டனேன் விளம்புமா விளம்பே. 1

இடர்கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள்
      இருட்பிழம்பு அறஎறிந்து எழுந்த
சுடரமணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
      தூயநற்சோதியுள்சோதீ!
அடல்விடைப் பாகா! அம்பலக் கூத்தா!
      அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின்றாயைத்
      தொண்டனேன் பணியுமா பணியே. 2

தற்பரம் பொருளே! சசிகண்ட! சிகண்டா!
      சாமகண்டா! அண்ட வாணா!
நற்பெரும் பொருளாய்! உரைகலந்து உன்னை
      என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னைத்
      தந்தபொன் அம்பலத்து ஆடி,
கற்பமாய் உலகாய் அல்லையா னையைத்
      தொண்டனேன் கருதுமா கருதே. 3

பெருமையிற் சிறுமை பெண்ணோடுஆ ணாய்என்
      பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே!
கருமையின் வெளியே! கயற்கணாள் இமவான்
      மகள்உமை யவள்களை கண்ணே!
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
      அப்பனே! அம்பலத்து அமுதே!
ஒருமையிற் பலபுக்கு உருவிநின்றாயைத்
      தொண்டனேன் உரைக்குமாறு உரையே. 4

கோலமே! மேலை வானவர் கோவே!
      குணங்குறி இறந்ததோர் குணமே!
காலமே! கங்கை நாயகா! எங்கள்
      காலகா லா! காம நாசா!
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்
      கோயில்கொண்டு ஆடவல் லானே!
ஞாலமே! தமியேன் நற்றவத் தாயைத்
      தொண்டனேன் நணுகுமா நணுகே. 5

நீறணி பவளக் குன்றமே! நின்ற
      நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே!
வேறணி புவன போகமே! யோக
      வெள்ளமே! மேருவில் வீரா!
ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா!
      அம்பொன்செய் அம்பலத் தரசே!
ஏறணி கொடியெம் ஈசனே! உன்னைத்
      தொண்டனேன் இசையுமாறு இசையே. 6

தனதன்நல் தோழா! சங்கரா! சூல
      பாணியே! தாணுவே! சிவனே!
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே!
      கண்கள்மூன் றுடையதோர் கரும்பே!
அனகனே! குமர விநாயக சனக!
      அம்பலத்து அமரசே கரனே!
உன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
      தொண்டனேன் நுகருமா நுகரே. 7

திறம்பிய பிறவிச் சிவதெய்வ நெறிக்கே
      திகைக்கின்றேன் தனைத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
      நிகழ்வித்த நிகரிலா மணியே!
அறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய்
      ஆலின்கீழ் இருந்தஅம்பலவா!
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண்டாயைத்
      தொண்டனேன் புணருமா புணரே. 8

தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்
      தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண்டு உருள ஒண்திருப் புருவம்
      நெறித்தரு ளியவுருத் திரனே!
அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட
      ஆடப்பொன் னம்பலத்து ஆடும்
சொக்கனே! எவர்க்கும் தொடர்வரி யாயைத்
      தொண்டனேன் தொடருமா தொடரே. 9

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு
      அருள்புரி வள்ளலே! மருளார்
இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்
      ஏறிய ஏறுசே வகனே!
அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்
      அடர்த்தபொன் னம்பலத் தரசே!
விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே! உன்னைத்
      தொண்டனேன் விரும்புமா விரும்பே. 10

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது
      அயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்டு ஓர்வரி யாயை
      மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
      சிறுமையில் பொறுக்கும்அம்பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே! உன்னைத்
      தொண்டனேன் நினையுமா நினையே. 11

2. கோயில் - உயர்கொடியாடை
பண் - பஞ்சமம்
பாதாதி கேசம்

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
      ஓமதூ மப்படலத்தின்
பெயர்நெடு மாடத்து அகிற்புகைப் படலம்
      பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
      நிறைந்தசிற் றம்பலக் கூத்தா!
மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
      வடிகள்என் மனத்துவைத் தருளே. 1

கருவளர் மேகந் தகடுதோய் மகுடக்
      கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சால்
      எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம்
      திரண்டசிற் றம்பலக் கூத்தா!
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
      உன்னடிக் கீழதுஎன் னுயிரே. 2

வரம்பிரி வாளை மிளர்மிடுக் கமலம்
      கரும்பொடு மாந்துமே திகள்சேர்
பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப்
      பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்த்
சிரம்புணர் முடிவா னவர்அடி முறையால்
      இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா!
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
      நினைந்துநின்று ஒழிந்ததென் நெஞ்சே. 3

தேர்மலி விழவில் குழவொலி தெருவில்
      கூத்தொலி ஏத்தொலி ஒத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
      பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நிலவு இலயத் திருநடத் தியல்பில்
      திகழ்ந்த சிற்றம்பலக் கூத்தா!
வார்மலி முலையாள் வருடிய திருள்மா
      மணிக்குறங்கு அடைந்ததென் மதியே. 4

நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்கு
      இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதனம்
      முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீரத் தரளத் திரள்கொள்நித் திலத்த
      செம்பொற் சிற்றம்பலக் கூத்த!
பொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக்
      கச்சுநூல் புகுந்ததென் புகலே. 5

அதுமதி இதுவென்று அலந்தலை நூல்கற்று
      அழைப்பொழிந்து அருமறை அறிந்து
பிதுமதி வழிநின்று ஒழிவிலா வேள்விப்
      பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச்
      செல்வச் சிற்றம்பலக் கூத்த!
மதுமதி வெள்ளத் திருவயிற்று உந்தி
      வளைப்புண்டுஎன் னுள்மகிழ்ந் ததுவே. 6

பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்
      பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரைதிண் தோளுடன் காணப்
      பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமருவு உதரத் தார்திசை மிடைப்ப
      நடஞ்செய்சிற்றம்பலக் கூத்த!
உருமருவு உதரத் தனிவடம் தொடர்ந்து
      கிடந்தது என் உணர்வுணர்ந்து உணர்ந்தே. 7

கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க்
      கங்கணம் செங்கைமற்றபயம்
பிணிகெட இவைகண்டு அரன்பெரு நடத்திற்
      பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்துஎன் அமுதே!
      சீர்கொள்சிற் றம்பலக் கூத்த!
அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய
      சோதியுள் அடங்கிற்று என்அறிவே. 8

திருநெடு மால்இந்திரன் அயன் வானோர்
      திருக்கடைக் காவலின் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றில்
      பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின் முப்புரம்தீ
      விரித்தசிற் றம்பலக் கூத்த!
கருவடி குழைக்காது அமலச்செங் கமல
      மலர்முகம் கலந்ததுஎன் கருத்தே. 9

ஏர்கொள்கற் பகம்ஒத்து இருசிலைப் புருவம்
      பெருந்தடங் கண்கள் மூன்றுடையோன்
பேர்கள்ஆயிரம்நூ றாயிரம் பிதற்றும்
      பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று
      சென்னிச் சிற்றம்பலக் கூத்த!
நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம்
      நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே. 10

காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சென்
      படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறந்த தவப்பெருந் தொண்டர்
      தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண்டு ஆண்ட
      செல்வச்சிற் றம்பலக் கூத்த!
பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
      பொறுப்பர்என் புன்சொலின் பொருளே. 11

3. கோயில் - உறவாகிய யோகம்
பண் - பஞ்சமம்

உறவா கியயோ கமும்போ கமுமாய்
      உயிரொளி! என்னும்என் பொன்னொருநாள்
சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
      சிலைகொண்டு பன்றிப் பின் சென்றுநின்ற
மறவா! என்னும்; மணிநீர் அருவி
      மகேந்திர மாமலைமேல் உறையும்
குறவா! என்னும்; குணக்குன்றே; என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 1

காடாடு பல்கணம்குழக் கேழற்
      கடும்பின் நெடும்பகற் கான்நடந்த
வேடா! மகேந்திர வெற்பா! என்னும்;
      வினையேன் மடந்தைவிம் மாவெருவும்;
சேடா! என்னும்; செல்வர்மூ வாயிரம்
      செழுஞ்சொதி அந்தணர் செங்கைதொழும்
கோடா! என்னும்; குணக்குன்றே! என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 2

கானே வருமுரண் ஏனம் எய்த
      களியார் புளினநற்கா ளாய்! என்னும்
வானே தடவும் நெடுங் குடுமி
      மகேந்திர மாமலை மேலிருந்த
தேனே! என்னும்; தெய்வவாய் மொழியார்
      திருவாளர்மூ வாயிரவர் தெய்வக்
கோனே! என்னும்; குணக்குன்றே! என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 3

வெளியேறு பன்றிப் பின்சென்று ஒருநாள்
      விசயற்கு அருள்செய்த வேந்தே! என்னும்;
மறியேறு சாரல் மகேந்திரமா
      மலைமேல் இருந்தமருந் தே! என்னும்;
நெறியே! என்னும்; நெறிநின்ற வர்கள்
      நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்
குறியே! என்னும்; குணக்குன்றே! என்னும்
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 4

செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்
      திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்று என்மேல் பகையாட வாடும்
      எனைநீ நலிவதென் னே? என்னும்;
அழுந்தா மகேந்திரத்து அந்த ரப்புட்கு
      அரசுக் கரசே! அமரர்தனிக்
கொழுந்தே! என்னும்; குணக்குன்றே என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 5

வண்டார் குழலுமை நங்கை முன்னே
      மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவல வில்லாடி வேடர்
      கடிநா யுடன்கை வளைந்தாய்! என்னும்;
பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
      பகலோன் தலைபல் பசுங்கண்
கொண்டாய்! என்னும்; குணக்குன்றே! என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 6

கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும்
      கணையும் கவணும் கைக்கொண்டு
உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகை
      வராக முன்னோடி விளியுளைப்ப
நடப்பாய்! மகேந்திர நாத! நாதாந்தத்து
      அரையா என்பார்க்கு நாதாந்தபதம்
கொடுப்பாய்! என்னும்; குணக்குன்றே! என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 7

சேவேந்து வெல்கொடி யானே! என்னும்;
      சிவனே! என் சேமத் துணையே! என்னும்;
மாவேந்து சாரல் மகேந்தி ரத்தில்
      வளர்நா யகா! இங்கே வாராய் என்னும்;
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
      புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே! என்னும்; குணக்குன்றே; என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 8

தரவார் புனம்சுனை தாழ்அருவித்
      தடம்கல்லுறையும் மடங்கல் அமர்
மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும்
      மழைசூழ் மகேந்திர மாமலைமேல்
சுரவா! என்னும்; சுடர்நீள் முடிமால்அயன்
      இந்திரன் முதல்தே வர்க்கெல்லாம்
குரவா! என்னும்; குணக்குன்றே! என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 9

திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்
      திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்
பெருநீல கண்டன் திறங்கொண்டு இவள்
      பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்;
வருநீர் அருவி மகேந்திரப்பொன்
      மலையின் மலைமக ளுக்கருளும்
குருநீ என்னும்; குணக்குன்றே! என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 10

உற்றாய்! என்னும்; உன்னையன்றி மற்றொன்று
      உணரேன் என்னும்; உணர்வுகள் கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப்
      பிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்;
சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
      மனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்
குற்றாய்! என்னும்; குணக்குன்றே! என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 11

வேறாக உள்ளத்து உவகை விளைத்து
      அவனிச் சிவலோக வேதவென்றி
மாறாத மூவாயிர வரையும் எனையும்
      மகிழ்ந்தாள வல்லாய்! என்னும்;
ஆறார் சிகர மகேந்திரத்து உன்
      அடியார் பிழைபொறுப்பாய்; மாதோர்
கூறாய்; என்னும்; குணக்குன்றே! என்னும்;
      குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 12

4. கோயில் - இணங்கிலா ஈசன்
பண் - காந்தாரம்

இணங்கிலா ஈசன் நேசத்து
      இருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
      மணஅடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
      கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண்வாய்
      பேசாது அப்பேய்களோடே. 1

எட்டுரு விரவி என்னை
      ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங்கு அலங்கல் தில்லை
      வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
      தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண்வாய்
      பேசாது அப் பேய்களோடே. 2

அருள்திரள் செம்பொன் சோதி
      அம்பலத் தாடு கின்ற
இருள்திரள் கண்டத் தெம்மான்
      இன்பருக்கு அன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
      அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய்
      பேசாது அப்பேய்க ளோடே. 3

துணுக்கென அயனும் மாலும்
      தொடர்வரும் சுடராய் இப்பால்
அணுக்கருக்கு அணிய செம்பொன்
      அம்பலத் தாடிக்கு அல்லாச்
சிணுக்கரைச் செத்தற் கொத்தைச்
      சிதம்பரைத் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய்
      பேசாது அப்பேய்க ளோடே. 4

திசைக்குமி குலவு சீர்த்தித்
      தில்லைக் கூத்து உகந்து தீய
நசிக்கவெண் ணீறது ஆடும்
      நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆரியங்கள் ஓதும்
      ஆதரைப் பேத வாதப்
பிசக்கரைக் காணா கண்வாய்
      பேசாது அப்பேய்க ளோடே. 5

ஆடரவு ஆட ஆடும்
      அம்பலத்து அமிர்தே! என்னும்
சேடர்சே வடிகள் சூடத்
      திருவிலா உருவி னாரைச்
சாடரைச் சாட்கை மோடச்
      சழக்கரைப் பிழக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண்வாய்
      பேசாதுஅப் பேய்க ளோடே. 6

உருக்கிஎன் உள்ளத் துள்ளே
      ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப்பு அருளும் தில்லைச்
      செல்வன்பாற் செல்லும்செல்வில்
அருக்கரை அள்ளல் வாய
      கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய்
      பேசாது அப் பேய்களோடே. 7

செக்கர் ஒத்து இரவி நூறா
      யிரத்திரள் ஒப்பாம் தில்லை
சொக்கர்அம் பலவர் என்னும்
      சுருதியைக் கருத மாட்டா
எக்கரைக் குண்ட மிண்ட
      எத்தரைப் புத்த ராதிப்
பொக்கரைக் காணா கண்வாய்
      பேசாது அப்பேய்க ளோடே. 8

எச்சனைத் தலையாக் கொண்டு
      செண்டடித்து இடபம் ஏறி
அச்சங்கொண்டு அமரர் ஓட
      நின்றஅம் பலவற்கு அல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக்
      கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்வாய்
      பேசாது அப்பேய்க ளோடே. 9

விண்ணவர் மகுட கோடி
      மிடைந்தொளிர் மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
      அரசனுக்கு ஆசை இல்லாத்
தெண்ணரைத் தெருளா உள்ளத்து
      இருளரைத் திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்வாய்
      பேசாது அப்பேய்க ளோடே. 10

சிறப்புடை அடியார் தில்லைச்
      செம்பொன் அம்பலவற்கு ஆளாம்
உறைப்புடை யடியார் கீழ்க்கீழ்
      உறைப்பர்சே வடிநீறு ஆடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
      இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பாரைக் காணா கண்வாய்
      பேசாது அப்பேய்க ளோடே. 11

திருச்சிற்றம்பலம்

2. சேந்தனார் அருளியது

1. திருவீழிமிழலை
பண் - பஞ்சமம்

ஏகநா யகனை இமையவர்க்(கு) அரசை
      என்னுயிர்க்(கு) அமுதினை எதிரில்
போகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப்
      பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த
மேகநா யகனை மிகுதிரு வீழி
      மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோகநா யகனை அன்றிமற் றொன்றும்
      உண்டென உணர்கிலேன் யானே. 1

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
      கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
      மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்
      திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம்
      குளிரஎன் கண்குளிர்ந் தனவே. 2

மண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த
      மருந்தைஎன் மாறிலா மணியைப்
பண்டவர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு)
      எளியதோர் பவளமால் வரையை
விண்டவர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
      திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக்
      குருகவல் வினைகுறு காவே. 3

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
      சசிகுவா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
      எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
      மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக்(கு) அடிமை புக்கினிப் போக
      விடுவனோ? பூண்டுகொண் டேனே. 4

இத் தெய்வ நெறிநன் றென்(று) இருள் மாயப்
      பிறப்பறா இந்திர சாலப்
பொய்த் தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
      புராணசிந்தா மணி வைத்த
மெய்த் தெய்வ நெறிநான் மறையவர் வீழி
      மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா(து) அவமும்
      அறிவரோ அறிவுடை யோரே. 5

அக்கனா அனைய செல்வமே சிந்தித்து
      ஐவரோ(டு) அழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
      புனிதனை வனிதைபா கனைஎன்
திக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி
      மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
      பொடியணிந்(து) அடிமைபூண் டேனே. 6

கங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும்
      கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
      மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
      நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தை
      வருந்திநான் மறப்பனோ? இனியே. 7

ஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக்
      கண்முக கரசர ணத்தோன்
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
      படர்சடை மின்னுபொன் முடியோன்
வேயிருந் தோளி உமைமண வாளன்
      விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
      போற்றுவார் புரந்தரா திகளே. 8

எண்ணில்பல் கோடி சேவடி; முடிகள்
      எண்ணில்பல் கோடி; திண் தோள்கள்
எண்ணில்பல் கோடி; திருவுரு நாமம்
      ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி; எல்லைக்(கு)அப் பாலாய்
      நின்(று)ஐஞ்ஞூற்(று) அந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
      இவர்நம்மை ஆளுடை யாரே. 9

தக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன்
      சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன்
      மறலிவேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
      மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
      பொடியணிந்(து) அடிமைபூண் டேனே. 10

உளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல்
      அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
      மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மழலைவேந் தேயென்(று)
      ஆந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
      கைக்கொண்ட கனககற் பகமே. 11

பாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப்
      பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத்து எம்பெரு மக்கள்
      நெஞ்சினுள் நிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தின் அமுதைத்
      திருவீழி மிழலையூர் ஆளும்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்
      கெழுமுதற்(கு) எவ்விடத் தேனே. 12

2. திருவாவடுதுறை
பண் - பஞ்சமம்

பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
      புகழாளர் ஆயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
      மிகுகா விரிக்கரை மேய
ஐயா ! திருவா வடுதுறை
      அமுதே! என்றுன்னை அழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்(கு) ஒன்(று)
      அருளாது ஒழிவது மாதிமையே. 1

மாதி மணங்கம ழும்பொழில்
      மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
      சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி அமரர் புராணனாம் அணியா
      வடுதுறை நம்பிநின்ற
நீதி அறிகிலன் பொன்நெடும்
      திண்தோள் புணர நினைக்குமே. 2

நினைக்கும்; நிரந்தரனே! என்னும்;
      நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
      நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் !
மனக்கின்ப வெள்ளம் மலைமகள்
      மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்துறைத்
      தருணேந்து சேகரன் என்னுமே. 3

தருணேந்து சேகர னே!எனும்
      தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருள்நேர்ந்த சிந்தை அவர்தொழப்
      புகழ்செல்வம் மல்குபொற் கோயிலுள்
அருள்நேர்ந்(து) அமர்திரு வாவடு
      துறையாண்ட ஆண்டகை அம்மானே!
தெருள்நேர்ந்த சித்தம் வலியவா
      திலக நுதலி திறத்திலே. 4

திலக நுதல்உமை நங்கைக்கும்
      திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க்(கு) என்னையாட்
      கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அவதொன்(று) அறிகின்றி வேம்எனும்
      அணியும்வெண் ணீ(று)அஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற்(கு) என்செய்கேன்?
      வயலந்தண் சாந்தையர் வேந்தனே! 5

வேந்தன் வளைத்தது மேருவில்
      அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம்
      பொடியாட வேதப் புரவித்தேர்
சாந்தை முதல்!அயன் சாரதி
      கதியருள் என்னும் இத் தையலை
ஆந்தண் திருவா வடுதுறையான்
      செய்கை யாரறி கிற்பாரே? 6

கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்(கு)
      எழுந்தோ டிக்கெட்ட அத்தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்! என்
      சொல்லிச் சொல்லும் இத் தூமொழி
கற்போல் மனம்கனி வித்தஎங்
      கருணால யா! வந்திடாய் என்றால்
பொற்போ! பெருந்திரு வாவடு
      துறையாளி! பேசா(து) ஒழிவதே. 7

ஒழிவொன்றி லாவுண்மை வண்ணமும்
      உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
ஒழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்
      முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்
      அணிஆ வடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை எய்திநின்(று)
      இறுமாக்கும் என்னிள மானனே. 8

மானேர் கலைவளையும் கவர்ந்துளம்
      கொள்ளை கொள்ளவழக்(கு) உண்டே!
தேனே! அமுதே! என் சித்தமே!
      சிவலோக நாயகச் செல்வமே!
ஆனேஅ லம்புனற் பொன்னி
      அணியா வடுதுறை அன்பர்தம்
கோனே! நின் மெய்யடி யார்மனக்
      கருத்தை முடித்திடுங் குன்றமே! 9

குன்றேந்தி கோகன கத்(து)அயன்
      அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கி அழைக்கின்றாள்
      இளவல்லி எல்லை கடந்தனள்
அன்றேஅ லம்புபு னற்பொன்னி
      அணியா வடுதுறை ஆடினாள்
நன்றே இவள்தம் பரமல்லள்
      நவலோக நாயகன் பாலளே. 10

பாலும் அமுதமும் தேனுமாய்
      ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
      புரகால காமபு ராந்தகன்
சேலும் கயலும் திளைக்குநீர்த்
      திருவா வடுதுறை வேந்தனோ(டு)
ஆலும் அதற்கே முதலுமாம்
      அறிந்தோம் அரிவைபொய் யாததே. 11



திருவிசைப்பா : 1 2 3 4



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247