![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா ... தொடர்ச்சி - 3 ... பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல் பாவமுன் பறைந்துபா லனைய புண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப் புகுந்ததோர் யோகினில் பொலிந்து நுண்ணியை எனினும் நம்ப! நின் பெருமை நுன்னிடை ஒடுங்கநீ வந்தென் கண்ணினுள் மணியிற் கலந்தனை; கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. 9 அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள் உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை உய்யக்கொண் டருளினை; மருங்கில் கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில் கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல் கங்கைகொண் டிருந்த கடவுளே! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. 10 மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை வளர்இளந் திங்களை முடிமேல் கங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானை அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர் அறைந்தசொல் மாலையால் ஆழிச் செங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து திளைப்பதும் சிவனருட் கடலே. 11 7. திருப்பூவணம்
பண் - பஞ்சமம்
திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன் சிறியனுக்(கு) இனியது காட்டிப் பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின் பெருமையிற் பெரியதொன் றுளதே? மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி வரைவளங் கவர்ந்திழி வைகைப் பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. 1 பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர் பன்னெடுங் காலம்நிற் காண்பான் ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத் தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும் பூம்பணைச் சோலை ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. 2 கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில் கையினிற் கட்டிய கயிற்றால் இருதலை ஒருநா இயங்கவந்(து) ஒருநாள் இருந்திடாய் எங்கள்கண் முகப்பே; விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்தபோது அவிழ்ந்த புரிசடை துகுக்கும் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. 3 கண்ணியல் மணியின் குழல்புக்(கு) அங்கே கலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன் நுண்ணியை எனினும் நம்ப! நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன்; மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின் வண்டினம் பாடநின் றாடும் புண்ணிய மகளிர் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. 4 கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்துன் அடியினை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன் அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்; நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க நிலைவிளக்(கு) அலகில்சா லேகம் புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப் பூவணங் கோயில் கொண் டாயே. 5 செம்மனக் கிழவோர் அன்புதா என்றுன் சேவடி பார்த்திருந்(து) அலச எம்மனம் குடிகொண் டிருப்பதற்(கு) யானார்? என்னுடை அடிமைதான் யாதே? அம்மனம் குளிர்நாட் பலிக்கெழுந் தருள அரிவையர் அவிழ்குழல் கரும்பு பொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. 6 சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச் சூழல்புக்(கு) ஒளித்தநீ இன்று கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக் கருணையிற் பெரியதொன் றுளதே? மின்னவில் கனக மாளிகை வாய்தல் விளங்கிளம் பிறைதவழ் மாடம் பொன்னவில் புரிசை ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. 7 பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட புனிதனை வனிதைபா களைவெண் கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும் குழகனை அழகெலாம் நிறைந்த தீவணன் தன்னைச் செழுமறை தெரியும் திகழ்தரு வூரனேன் உரைத்த பாவணத் தமிழ்கள் பத்தும் வல் லார்கள் பரமனது உருவமா குவரே. 8 8. திருச்சாட்டியக்குடி
பண் - பஞ்சமம்
பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து சரியுமா சுழியங் குழைமிளிர்ந்து இருபால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் கரியவா தாமும் செய்யவாய் முறுவல் காட்டுமா சாட்டியக் குடியார் இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 1 பாந்தள்பூ ணாரம் பரிகலம் கபாலம் பட்டவர்த் தனம்எரு(து) அன்பர் வார்ந்தகண் அருவி மஞ்சன சாலை மலைமகள் மகிழ்பெரும் தேவி சாந்தமும் திருநீ(று) அருமறை கீதம் சடைமுடி சாட்டியக் குடியார் ஏந்தெழில் இதயம் கோயில்மாளிகைஏழ் இருக்கையுள் இருந்தஈ சனுக்கே. 2 தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம் தொடர்வன மறைகள்நான் கெனினும் கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை கவந்திகை கரியுரி திரிந்தூண் தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு செபவடம் சாட்டியக் குடியார் இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே. 3 பதிகநான் மறைதும் புருவும்நா ரதரும் பரிவொடு பாடுகாந் தர்ப்பர் கதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடியிருள் திருநடம் புரியும் சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக் குடியார் இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 4 திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம் மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலையுடை அரையர்தம் பாவை தருமலி வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக் குடியார் இருமுகம் கழல்முன்று ஏழுகைத் தலம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 5 அனலமே! புனலே! அனிலமே! புவனி அம்பரா! அம்பரத்(து) அளிக்கும் கனகமே! வெள்ளிக் குன்றமே! என்றன் களைகணே! களைகண்மற் றில்லாத் தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும் சைவனே! சாட்டியக் குடியார்க்(கு) இனியதீங் கனியாய் ஒழிவற நிறைந்துஏழ் இருக்கையில் இருந்தவா(று) இயம்பே. 6 செம்பொனே! பவளக் குன்றமே! நின்ற திசைமுகன் மால்முதற் கூட்டத்து அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே! அத்தனே! பித்தனே னுடைய சம்புவே! அணுவே! தாணுவே! சிவனே ! சங்கரா! சாட்டியக் குடியார்க்(கு) இன்பனே! எங்கும் ஒழிவற நிறைந்தேழ் இருக்கையில் இருந்தவா(று) இயம்பே. 7 செங்கணா போற்றி! திசைமுகா போற்றி! சிவபுர நகருள்வீற் றிருந்த அங்கணா போற்றி! அமரனே போற்றி! அமரர்கள் தலைவனே போற்றி! தங்கள்நான் மறைநூல் சகலமும் கற்றோர் சாட்டியக் குடியிருந் தருளும் எங்கள்நா யகனே! போற்றி! ஏழ் இருக்கை இறைவனே! போற்றியே போற்றி! 8 சித்தனே! அருளாய்! செங்கணா! அருளாய்! சிவபுர நகருள்வீற் றிருந்த அத்தனே! அருளாய்! அமரனே! அருளாய்! அமரர்கள் அதிபனே! அருளாய் தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல் சாட்டியக் குடியுள்ஏழ் இருக்கை முத்தனே! அருளாய்! முதல்வனே! அருளாய்! முன்னவா துயர்கெடுத்(து) எனக்கே. 9 தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த் தண்டலைச் சாட்டியக் குடியார் ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர்மேல் காட்டிய பொருட்கலை பயில்கரு ஊரன் கழறுசொல் மாலைஈர் ஐந்தும் மாட்டிய சிந்தை மைந்தருக்(கு) அன்றே வளரொளி விளங்குவா னுலகே. 10 9. தஞ்சை இராசராசேச்சரம்
பண் - பஞ்சமம்
உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி ஒன்றுநூ றாயிரங் கோடி அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ ! அங்ஙனே அழகிதோ, அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் திங்கள் இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத்(து) இவர்க்கே. 1 நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா; நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும் பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப் புகுந்தன; போந்தன இல்லை; மற்றெனக்(கு) உறவேன்? மறிதிரை வடவாற் றிடுபுனல் மதகில்வாழ் முதலை ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 2 சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக் குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும் குறிப்பெனோ? கோங்கிணர் அனைய குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு) இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 3 வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம் வரிசையின் விளக்கலின் அடுத்த சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச் சுடர்விடு மண்டலம் பொலியக் காழகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்வாய் அங்குலி கெழும யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 4 எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத் தவரும்மா லவனும் அறிவரும் பெருமை அடலழல் உமிழ்தழற் பிழம்பர் உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில் உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம் இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 5 அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள அடிகள்தம் அழகிய விழியும் குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற குயிலினை மயல்செய்வ(து) அழகோ? தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில் இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 6 தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால் நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும் நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னே? கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச் சூழல்மா ளிகைசுடர் வீசும் எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 7 பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்; மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார் விலங்கல்செய் நாடக சாலை இன்நடம் பயிலும் இஞ்சுசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 8 மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார்; அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல் அலர்கதிர் அனையவா ழியரோ! பொங்கெழில் திருநீறு அழிபொசி வனப்பில் புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர்; எங்களுக்(கு) இனியர்; இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 9 தனியர்ஏத் தனைஓ ராயிர வருமாம் தன்மையர் என்வயத் தினராம் கனியரத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற் கட்டியர் அட்டஆர் அமிர்தர் புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர் புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு) இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 10 சரளமந் தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவரை அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர் அறைந்தசொல் மாலைஈ ரைந்தின் பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும் பொன்நெடுங் குன்றுடை யோரே. 11 10. திருவிடைமருதூர்
பண் - பஞ்சமம்
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல்யா மத்தோர் பையசெம் பாந்தள் பருமணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் ஐயசெம் பொற்றோட்(டு) அவிர்சடைமொழுப்பின் அழிவழ கியதிரு நீற்று மைய செங் கண்டத்(து) அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடை மருதே. 1 இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு) இணையடி தொழுதெழத் தாம்போய் ஐந்தலை நாகம் மேகலை அரையா அகந்தொறும் பலிதிரி அடிகள் தந்திரி வீணை கீதமும் பாடச் சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப மந்திர கீதம் தீங்குழல் எங்கும் மருவிடம் திருவிடை மருதே. 2 பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன பல்லவம் வல்லியென்(று) இங்ஙன் வினைபடு கனகம் போலயா வையுமாய் வீங்குல(கு) ஒழிவற நிறைந்து துனிபடு கலவி மலைமகள் உடனாய்த் தூக்கிருள் நடுநல்யா மத்தென் மன்னிடை அணுகி நுணிகியுள் கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே. 3 அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள்கலந்து அடியேன் பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன் படர்சடை விடம்மிடற்(று) அடிகள் துணியுமிழ் ஆடை அரையிலோர் ஆடை சுடர்உமிழ் தரஅதன் அருகே மணியுமிழ் நாகம் அணியுமிழ்ந்(து) இமைப்ப மருவிடம் திருவிடைமருதே. 4 பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல் படிவழி சென்று சென்றேறிச் சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம் எந்தையும் தாயும் யானுமென் றிங்ஙன் எண்ணில்பல் லூழிகள் உடனாய் வந்தணு காது நுணிகியுள் கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே. 5 எரிதரு கரிகாட்(டு) இடுபிணம் நிணமுண்(டு) ஏப்பமிட்(டு) இலங்ககெயிற்(று) அழல்வாய்த் துருகழல் நெடும்பேய்க் கணம்எழுந்தாடும் தூங்கிருள் நடுநல்யா மத்தே அருள்புரி முறுவல் முகில்நிலா எறிப்ப அந்திபோன்(று) ஒளிர்திரு மேனி வரியர(வு) ஆட ஆடும்எம் பெருமான் மருவிடம் திருவிடைமருதே. 6 எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின் இன்துளி படநனைந்(து) உருகி அழலையாம் புருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவித் தொழிலையாழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கிருள் நடுநல்யா மத்தோர் மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடம் திருவிடை மருதே. 7 வையவாம் பெற்றம் பெற்றம்ஏ(று) உடையார் மாதவர் காதல்வைத் தென்னை வெய்யவாம் செந்தீப் பட்டஇட் டிகைபோல் விழுமியோன் முன்புபின்(பு) என்கோ நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த நூறுநூ றாயிர கோடி மையவாங் கண்டத்(து) அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடை மருதே. 8 கலங்கலம் பொய்கைப் புனற்றெளி விடத்துக் கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு நலம் கலந்(து) அடியேன் சிந்தையுட் புகுந்த நம்பனே வம்பனே னுடைய புலங்கலந் தவனே! என்று நின்(று) உருகிப் புலம்புவார் அலம்புகார் அருவி மலங்கலங் கண்ணிற் கண்மணி அனையான் மருவிடம் திருவிடைமருதே. 9 ஒருங்கிருங் கண்ணின் எண்ணில்புன் மாக்கள் உறங்கிருள் நடுநல்யா மத்தோர் கருங்கண்நின்(று) இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம் கலந்தெனக் கலந்துணர் கருவூர் தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை தடம்பொழில் மருதயாழ் உதிப்ப வருங்கருங் கண்டத்து அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடைமருதே. 10 4. பூந்துருத்தி நம்பி காடநம்பி அருளியது
1. திருவாருர்
பண் - பஞ்சமம்
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து கழுத்திலோர் தனிவடங் கட்டி முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன் முரிவதோர் முரிவுமை அளவும் தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ? தம்மொருப் பாடுல கதன்மேல் மிக்கசீர் ஆருர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே. 1 பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோ(று) அமுதம்ஒத் தவர்க்கே தித்தியா இருக்கும் தேவர்காள்! இவர்தம் திருவுரு இருந்தவா பாரீர்; சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆருர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே. 2 2. கோயில் - முத்து வயிரமணி
பண் - சாளரபாணி
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல் தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. 1 கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன் அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே முடியாமுத் தீவேள்வி மூவாயி ரவரொடும் குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே. 2 அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச் செல்ல நெறிவகுத்த சேவகனே! தென்தில்லைக் கொல்லை விடையேறி! கூத்தா(டு) அரங்காகச் செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே. 3 எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும் சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட் கொண்டருளி அம்பந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச் செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே. 4 களையா உடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள முளையா மதிசூடி! மூவா யிரவரொடும் அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே. 5 அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப் புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்ச் சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற் றம்பலமே. 6 களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல் அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும் தெளிகொண்ட தில்லைச் சிற் றம்பலமே சேர்ந்தனையே. 7 பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச் சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில் நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாடோறும் ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே. 8 உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும் பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து) அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. 9 சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன் ஆடல் அதியசத்தை ஆங்கறித்து பூந்துருத்திக் காடன் தமிழ் மாலை பத்தும் கருத்தறிந்து பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே. 10 திருச்சிற்றம்பலம்
5. கண்டராதித்தர் அருளியது
கோயில் - மின்னார் உருவம்
பண் - பஞ்சமம்
மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப் பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத் தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள் என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே? 1 ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர் ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார் மூவா யிரவர் தங்க ளோடு முன் அரங்(கு) ஏறிநின்ற கோவே! உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ? 2 முத்தீ யாளர் நான் மறையர் மூவா யிர வர்நின்னோ(டு) ஒத்தே வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத் தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள் அத்தா! உன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ? 3 மானைப் புரையும் மடமென் நோக்கி மாமலை யாளோடும் ஆனைஞ் சாடும் சென்னி மேலோர் அம்புலி சூடும்அரன் தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக் கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ? 4 களிவான் உலகில் கங்கை நங்கை காதலனே! அருளென்(று) ஒளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடியார்க்(கு) அருளும் தெளிவார் அமுதே! தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் ஒளிவான் சுடரே! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ? 5 பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான் வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச் சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ? 6 இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும்இற மலைதான் எடுத்த மற்ற வற்கு வாளொடு நாள்கொடுத்தான் சிலையால் புரமூன்(று) எய்த வில்லி செம்பொனின் அம்பலத்துக் கலையார் மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ? 7 வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல் செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த அங்கோல் வளையார் பாடி யாடும் அணிதில்லை அம்பலத்துள் எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே. 8 நெடுயா னோடு நான் முகனும் வானவரும் நெருங்கி முடியான் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை அடியார் அலகி னால்தி ரட்டும் அணிதில்லை அம்பலத்துக் கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ? 9 சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாடிதன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த ஆரா இன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார் பேரா வுலகிற் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே. 10 திருச்சிற்றம்பலம்
6. வேணாட்டடிகள் அருளியது
கோயில் - துச்சான
பண் - புறநீர்மை
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார்; கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார்; எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! 1 'தம்பானை சாய்ப்பற்றார்' என்னும் முதுசொல்லும் எம்போல்வார்க்(கு) இல்லாமை என்னளவே அறிந்தொழிந்தேன் வம்பானார் பணிஉகத்தி; வழியடியேன் தொழிலிறையும் நம்பாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! 2 பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத் திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும் இசையானால் என்திறத்தும் எனையுடையாள் உரையாடாள்; நசையானேன்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! 3 ஆயாத சமயங்கள் அவரவர்கள் முன்பென்னை நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே பேயாவித் தொழும்பனைத்தும் பிரான்இகழும் என்பித்தாய் நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! 4 நின்றுநினைந்(து) இருந்துகிடந்து எழுந்துதொழும் தொழும்பனேன் ஒன்றியொரு கால்நினையா(து) இருந்தாலும் இருக்கவொட்டாய் கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி; வரவுநில்லாய் நன்றிதுவோ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! 5 படுமதமும் மிடவயிறும் உடையகளி றுடையபிரான்! அடியறிய உணர்த்துவதும் அகத்தியனுக்(கு) ஒத்தன்றே; இடுவதுபுல் ஓர்எருதுக்(கு) ஒன்றினுக்கு வையிடுதல் நடுஇதுவோ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! 6 மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும் கண்ணாவாய்; கண்ணாகா(து) ஒழிதலும்நான் மிகக்கலங்கி அண்ணாவோ என்றண்ணாந்(து) அலமந்து விளித்தாலும் நண்ணாயால்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! 7 வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி வீடாஞ்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யில் கூடாமே கைவந்து குறுகுமா(று) யான்உன்னை நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! 8 வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத் தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதாலும் ஆளோநீ உடையதுவும் அடியேன்உன் தாள்சேரும் நாளேதோ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! 9 பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டனெடுத்(து) ஓவாதே அழைக்கின்றான் என்றருளின் நன்றுமிகத் தேவே! தென் திருத்தில்லைக் கூத்தாடீ! நாயடியேன் சாவாயும் நினைக்கண்டால் இனியுனக்கு தடுப்பரிதே. 10 திருச்சிற்றம்பலம்
|